Friday, December 03, 2004

சான்ட்டா பரேட் !!!!!!

கிறிஸ்மஸ் அன்றும் இன்றும்!
**********************

கிறிஸ்மஸ் வந்துகிட்டு இருக்கே! இங்கே எங்க ஊரில்,( நான் இப்ப இருக்கற ஊர்) வீடுகளில் கொண்டாட்டத்துக்கு அலங்காரம் ஆரம்பிக்குதோ
இல்லையோ, கடை, கண்ணிகளிலே மட்டும் 'ஊருக்கு முந்தி' ஆரம்பிச்சுடுது!



நாங்க இங்கே வந்த புதுசுலே நவம்பர் மாசம் கடைசியிலே அங்கெ ஒண்ணு, இங்கெ ஒண்ணுன்னு அலங்காரம் ஆரம்பிக்கும்.
இப்ப என்னன்னா, அக்டோபர் மாசம் மொத வாரமே நான், நீன்னு போட்டி போட்டுகிட்டு ஷாப்பிங் மாலுங்க, தனிக் கடைங்கன்னு
ரொம்ப ஜோரா கிறிஸ்மஸ் அமர்க்களம் ஆரம்பிக்குது!

எல்லாக் கடைக்காரங்களும் சேர்ந்து, பண்டிகை வருது, பண்டிகை வருதுன்னு நம்மையெல்லாம் உஷார்ப் படுத்தற மாதிரிதான்!

நான் சின்னப் பிள்ளையா இருந்த காலத்துலே, தமிழ்நாட்டுலே இந்தப் பண்டிகை வருதுன்னா, நம்ம கிறிஸ்த்துவ மதத்தைச் சேர்ந்த
தோழிங்க வீட்டுலேயெல்லாம், இந்துக்கள் தீபாவளிக்கு எடுக்கற முஸ்தீபுக்குக் கொஞ்சமும் குறைவில்லாம ஏற்பாடுங்க நடக்கும்.

புது உடுப்பு எடுக்கறது, பலகாரங்கள் செய்யறதுன்னு மட்டும் இருந்திராம, 'கிறிஸ்மஸ் கேரல்ஸ்'க்கும் ரொம்ப முக்கியம் கொடுப்பாங்க.

நான் அப்ப ஒரு கிறிஸ்துவப் பள்ளியிலே படிச்சுகிட்டு இருந்தேன். அதுமட்டுமில்லே, நான் விடுதியிலும் தங்கியிருந்தேன். பாட்டு வேற
சுமாராப் பாடுவேனா, பள்ளிக்கூட 'கொயர்'லே வேற சேர்த்துட்டாங்க.

டிசம்பர் மொதத் தேதிலே இருந்து, காலங்காத்தாலே எழுந்து, கையிலெ ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்திப் பிடிச்சுகிட்டு, கிறிஸ்மஸ்
பாட்டுங்களைப் பாடிகிட்டே, சின்ன ஊர்வலமா, டீச்சருங்க தங்கியிருக்கற கட்டடத்துக்கு போவோம். மொதல்லே 'ப்ரின்ஸி' ரூம் வாசல்லே!

அவுங்க எழுந்து வந்து கதவுகிட்டே நின்னு ரெண்டு பாட்டைக் கேப்பாங்க. பாடி முடிச்சதும் நல்லாப் பாடறீங்கன்னு, எங்களை மெச்சி
ஒரு வார்த்தை சொல்வாங்க. அப்புறம் ஒவ்வொரு டீச்சருங்க ரூம் வாசல்லேயும் நின்னு பாடுவோம்! இது எனக்கு எப்பவுமே நம்ம
மார்கழி மாச பஜனையைத்தான் ஞாபகத்துக்குக் கொண்டுவரும்! சுண்டலும், பொங்கலும்தான் மிஸ்ஸிங்!

கிறிஸ்மஸ் லீவு ஒரு பத்துநாள் கிடைக்கும். நாங்கள்ளாம் வீட்டுக்குப் போயிருவோம். மலேசியாவிலிருந்து வந்து படிச்சு படிச்சுகிட்டிருந்த
பலர், இந்த லீவுக்காக எங்கேயும் போகாம விடுதியிலேயே இருந்துடுவாங்க. அப்புறம், 'பெர்ஷியா'வுலே ( அப்பல்லாம் மத்தியக் கிழக்கு
நாடுகளுக்கு ஒட்டுமொத்தமான பேரு இதுதான்!) வேலைசெய்யற பெற்றோர்கள் உள்ள சிலரும் இந்த லீவுக்கெல்லாம் விடுதியிலேயே
இருந்துடுவாங்க. பெரிய லீவுக்கு மட்டும்தான் விடுதி முழுசுமா காலியாகும்!

கிறிஸ்த்துவப் பள்ளி என்றதாலே, ஞாயிற்றுக் கிழமைங்களிலே நாங்க எல்லாரும் கட்டாயம் 'சர்ச்'சுக்குப் போகணும். காலையிலே எட்டரை
மணிக்கெல்லாம், நல்ல உடுப்புங்களைப் போட்டுகிட்டுத் தயாராயிடணும். வார்டன் அம்மா வந்து, நாங்கெல்லாம் 'ஒழுங்கா ட்ரெஸ்'
செஞ்சிருக்கோமான்னு வேற பார்ப்பாங்க!

தேவாலயம் அஞ்சாறு தெரு தள்ளியிருந்தது. ரெண்டு ரெண்டுபேரா வரிசையா நடந்து போகணும்! அங்கே எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்கி
இருப்பாங்க. சிலுவை டிஸைன் லே இருக்கும் பெரிய கூடத்துலே, ஒரு 'விங்' எங்களுக்குன்னு இருந்தது. எங்க பள்ளிக்கூட 'கொயர்'தான்
சர்ச்சுக்கும் கொயரா இருந்தது! நாங்க தான் அங்கே பாடற எல்லாப் பாட்டுக்களையும் ஆர்கன் ம்யூஸிக்கோட இணைஞ்சு பாடணும்.
ஏதாவது தப்பு ( அபஸ்வரம்?)விட்டோமோ, தொலைஞ்சோம்!

எங்க 'பாட்டு' டீச்சர் இருக்காங்களே, ரொம்பக் கோவக்காரங்க! ஒரு குரல் தப்பாயிடுச்சுன்னாலும் எல்லாருக்கும் மண்டகப்படிதான்!
விடுதிக்குத் திரும்பி வர்ற வழியிலேயே ஆரம்பிச்சுருவாங்க! நடந்து வர்றப்ப அவுங்க பக்கத்துலே கூட வர்றவுங்க பாடுதான் 'ஐயோ பாவம்'ன்னு
ஆயிடும். இத்தனைக்கும் அவுங்க கொயர் மெம்பரா இருக்கணுங்கற அவசியம்கூடக் கிடையாது! நற நறன்னு பல்லைக் கடிச்சுகிட்டே கண்ணாடி வழியா
கோபப் பார்வையை வீசிகிட்டே வருவாங்க!

விடுதிக்கு வந்தவுடனே, எல்லாக் கொயர் ஆளுங்களையும் நிக்க வச்சு,சரியா 'டோஸ்' விட்டுட்டு, மறுபடி அந்தப் பாட்டைப் பாடச் சொல்வாங்க!
நாங்க இதுக்குள்ளே சமாளிச்சுகிட்டு, அருமையாப் பாடிடுவோம்! உடனே அதுக்கும் ஒரு 'டோஸ்' கிடைக்கும். இப்பப் பாடுன மாதிரி அப்ப
ஏன் பாடலேன்னு!

மீதியை அப்புறமாச் சொல்றேன்.

0 comments: