Tuesday, November 30, 2004

கட்டு மூட்டையை!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 21
*************************


ச்சும்மா சொல்லக்கூடாது! அப்போது ஃபிஜியில் நல்ல தரமான பொருட்கள் கிடைத்துவந்தன! எலக்ட்ரிகல் ஐட்டமானாலும் சரி, நமக்கு
வேண்டிய துணிமணிகளானாலும் சரி, எல்லாமே ஜப்பான் நாட்டிலிருந்து வந்துகொண்டிருந்தன!


கட்டு மூட்டையை!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 21
*************************


ச்சும்மா சொல்லக்கூடாது! அப்போது ஃபிஜியில் நல்ல தரமான பொருட்கள் கிடைத்துவந்தன! எலக்ட்ரிகல் ஐட்டமானாலும் சரி, நமக்கு
வேண்டிய துணிமணிகளானாலும் சரி, எல்லாமே ஜப்பான் நாட்டிலிருந்து வந்துகொண்டிருந்தன!

இப்போது உலகில் எங்கே போனாலும் 'மேட் இன் சைனா' என்றுதானே எல்லாமே கிடைக்கிறது!
சீனர்கள், இப்போதுபோல உலகளாவிய வர்த்தகம் தொடங்கும் முன்பிருந்த காலக் கட்டம்.ம்ம்ம்... ஒரேடியாக அப்படியும் சொல்ல முடியாது!
ஆனால் அவர்கள் வியாபாரம் இன்னும் ஃபிஜிவரை வரவில்லை என்றும் சொல்லலாம்!

புடவைகள் எல்லாம் ஜப்பானிலிருந்து வந்துகொண்டிருந்தன. நல்ல நைலக்ஸ் புடவைகள். அப்போது புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகள்
நம் ஹிந்தி நடிகை 'ஷபானா ஆஸ்மி போன்றவர்கள் அவற்றுக்கு, 'மாடல்' ஆக இருந்தனர். 'ரூபி க்வீன்' புடவைகள்.பெரிய பெரிய
காலண்டர்கள் இவர்களின் படங்கள் + புடவைகளைத் தாங்கி வந்தன! அதே புடவைகள் கடைகளிலும் விற்பனைக்கு இருந்தது! இப்போதுள்ளது
போல ஐந்து மீட்டர் இல்லை. எல்லாமே 6 மீட்டர் நீளமுள்ளவை. அதனால் நிறைய கொசுவத்தோடும், நீஈஈஈஈளமான முந்தானையோடும்
வலம் வந்துகொண்டிருந்தோம்!

புடவைகள் வகைவகையாக இருந்தனவே தவிர அவற்றுக்கு ப்ளவுஸ் மேட்ச்சாகக் கிடைப்பது மிகவும் கஷ்டமே! அதனால் அங்கே எல்லோரும்
பாலியஸ்டர் துணியிலேயே ப்ளவுஸ் போட்டுக் கொண்டிருந்தனர்! அந்த சூட்டுக்கு அப்பப்பா..... ஐயோ என்றிருக்கும்! அதுமட்டுமின்றி அங்கே
ப்ளவுஸ் தைத்துக் கொடுப்பதற்குத் தையற்காரர்களே இல்லை! வீடுகளில்தான் பெண்கள் தைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்! தையல்கூலி
மிகவும் அதிகம். 10 டாலர்கள். ஆனால் துணியின் விலை ஒரு மீட்டர் ஒரு டாலர்தான்!

இங்கே வியாபாரம் செய்ய வந்த குஜராத்தியர்களில் அநேகர் தையற்காரர்களாம். முதலில் துணிகளையும் விற்றுக் கொண்டு அப்படியே அவற்றைத்
தைத்தும் கொடுத்துக் கொண்டிருந்தார்களாம். இப்போதெல்லாம் ஆண்கள் அனைவருமே ரெடிமேட் உடைகளையே வாங்குவதால், அந்தப் பழக்கம்
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் போய்விட்டதாம். ஆகக்கூடி தையல் கடைகள் இல்லாமல் போய்விட்டன! ஆனால் 'க்ளோத்திங் ஃபேக்டரிகள்'
வந்துவிட்டன!

இந்தியாவில் இருந்து வந்த நமக்கோ, 'டூ பை டூ'வில் ப்ளவுஸ் அணிந்து பழக்கம் ஆகிவிட்டதே. இதைப் பற்றிக் கொஞ்சம் விசாரிக்க வேண்டும்
என்று முனைந்தபோது, இந்தியாவில் இருந்தே 'டூ பை டூ' துணிகள் வருவதும் தெரிந்தது. ஆனால் கொள்வோர் இல்லை! ஆகவே விலை
மலிவு. ஆஹா அடிச்சது ச்சான்ஸ்! மெட்ராஸில் வாங்குவதுபோல 65 செ.மீ. 75 செ.மீ என்றெல்லாம் விற்கமாட்டார்கள். ஒரு மீட்டர், ஒன்னரை
மீட்டர் என்றுதான் வாங்கவேண்டும். சரி, இனிமேல் நாமே தைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஒரு தையல் மெஷின் வாங்கியாச்சு!
ஆனால் எப்படித் தைப்பது?

ஊரில், தன்னுடைய உடைகளைத் தானே தைத்துக் கொள்ளும் என் தோழிக்கு எழுதி, 'பேப்பர் கட்டிங்'வரவழைத்தாயிற்று! மீட்டர் கணக்கில்
வாங்குவதால் ரொம்பக் கவனமாக வெட்டவேண்டாம். ஒரு வழியாக என் முதல் ப்ளவுஸ் நன்றாகவே அமைந்து விட்டது! அதிர்ஷ்டம்தான்!

வீட்டு வேலைக்கும் இரண்டு உதவியாளர்கள் இருப்பதால் பகல் முழுவதும் தையல், இரவானால் ஹிந்தி சினிமா என்று நாளைப் பிரித்துக்
கொண்டேன். என் மகளுக்கும் நான்தான் டெய்லர்! வெறும் ஐம்பது சதத்துக்கு நல்ல நல்ல துணிகள் கிடைத்தன. கடைகளில் பார்வைக்கு
வைத்திருக்கும் குழந்தை உடுப்புகளின் டிஸைன்களை மனதில் பதித்துக் கொண்டு, மறுநாளே அதை அப்படியே அச்சாகக் காப்பி செய்வதில்
கில்லாடியாகிவிட்டேன். அப்புறம் என்ன? குழந்தைக்குத் தினமும் புதுசுதான். இப்படியாக இரண்டாயிரம் துணிகளைக் கெடுத்து முழு டெய்லர்
ஆகிவிட்டேன். இந்தத் தையல் என் மனம் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டது. எப்போதும், என்ன டிஸைன் செய்யலாம் என்றே எண்ணம்
வந்துகொண்டு இருந்தது! சொன்னால் வெட்கக்கேடு! ஒரு முறை ஒரு மரண வீட்டிற்குச் சென்று இருந்தபோது, என் முன்பாக அமர்ந்து இருந்த
ஒரு சிறு பெண்ணின்( மரணித்தவரின் கடைசி மகள்! அணிந்து இருந்த உடுப்பு மிகவும் நன்றாக இருந்தது) உடுப்பைப் பார்த்துவிட்டு, அதே போல்
மறுநாள் என் மகளுக்குத் தைத்துவிட்டேன். இதுவரை வாழ்வு நிம்மதியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது! ஆனால் இங்கேயிருந்து போகப் போகிறோமே,
அந்த நாட்டில் வீட்டு வேலைக்கு எல்லாம் உதவியாளர்கள் இல்லையாமே! எல்லாமும் நாமேதான் செய்துகொள்ள வேண்டுமாம்! இதுவே
ஒரு கவலையாகப் போனது, எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று!

இந்த நிலையில்தான் தமிழ்க்காரர்கள் பற்றிய விவரம் தினத்தாளில் வந்திருந்தது! அரசாங்கமே அவர்களை ஒரு வீட்டில் தாற்காலிகமாகத் தங்க
வைத்துள்ளது என்றும், பல இந்தியர்கள் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டுபோய்க் கொடுத்து வருகின்றனர்
என்றும் அறிந்தோம். நாங்களும் அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றோம். மொத்தம் 32 பேர். எல்லோருமே இளவயதுக்காரர்கள்தான்!
ஆண்களே கூடுதல். கிடைத்த உணவுப் பொருட்களைக் கொண்டு அவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்! அகதிகள் என்று
பதிந்துகொண்டு கனடா நாட்டுக்குப் போய்விடலாம் என்று 'ட்ராவல் ஏஜண்டு' சொன்னபடி, கைக்காசை நிறைய செலவழித்துக்
கிளம்பினவர்களாம்! சரியான 'டாக்குமெண்ட்ஸ்' இல்லாத காரணத்தால் இங்கே இறக்கிவிடப்பட்டவர்களாம்! மேற்கொண்டு தகவல் ஒன்றும்
தெரியவில்லை. எங்களால் ஆன உதவியைச் செய்துவிட்டு, மறுமுறை வருவதாகச் சொல்லி வந்தோம்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற பழமொழி சரிவருமா அல்லது பட்ட காலிலெ படும் என்பது சரியாகுமா என்று தெரியவில்லை!

நம் ஃபேக்டரிக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த காரில் ஒரு 'ட்ரக்' வந்து மோதிவிட்டது! இங்கேதான் எப்போதும்(கிட்டத்தட்ட ஆறு வருடங்கள்)
வண்டியை நிறுத்தி வருகிறோம். நல்ல அடி! சரிப்படுத்த நாள் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள்! தினமும் வேலைக்குப் போக, வர, குழந்தையைக்
'கிண்டர்கார்டன்' கொண்டுபோய்க் கொண்டுவர என்று எல்லா வேலைகளும் கம்பெனி வண்டி மூலம் நடந்து கொண்டுதான் இருந்தது! ஆனால்
வார இறுதிகளில் வேறு எங்காவது போய்வரத்தான் கஷ்டமாகிவிட்டது!

இந்த அழகில், நியூஸிலாந்து எம்பசியில் இருந்து, ஒரு கடிதம் வந்தது! 'எங்கள் விண்ணப்பங்கள் பரிசீலணையில் இருப்பதால், அவர்களாக
எங்களைத் தொடர்பு கொள்ளும்வரை, நாங்கள் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது!'

காத்திருப்பு என்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்பது அப்போதுதான் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது! ச்சும்மாவே இருப்பதால் நேரம் போவது
கடினமாகிவிட்டது! வெயிட்டிங்.............

இதற்கிடையில், தமிழ் ஆட்களை, அரசாங்கம் திருப்பி அனுப்பப்போவதாகவும் தெரியவந்தது. மூன்று மாதமாகப்போகிறது அவர்கள் இங்கே வந்து!
நம் இந்தியத் தூதரகம் மூடப்பட்டுவிட்டதால், உதவிக்கு யாரைக் கேட்பது என்று எங்களுக்கும் குழப்பமாக இருந்தது.

விமான நிலையம் இருக்கும் ஊரில் வசிக்கும் எங்கள் நண்பர்கள் மூலம் பல விவரங்கள் தொடந்து கிடைத்த வண்ணம் இருந்தன.
இனி அவர்கள் இங்கே தொடர்ந்து தங்க முடியாது என்று அரசாங்க அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். ஆனால் அவர்களில் யாரையாவது
இங்குள்ளவர்கள் திருமணம் புரிந்து கொண்டு விட்டால், வாழ்க்கைத்துணை என்ற நிலையில் அந்த நபர் இங்கே தங்கி விடலாமாம்!

இங்குள்ள இளஞர்கள் சிலர் இதில் ஆர்வம் காட்டினார்கள். தமிழ்க்காரப் பெண்கள் மூவருக்கு வரன் கிடைத்தது. பெண்கள் சம்மதம் கிடைத்ததால்
அவர்களுக்கு பதிவுத் திருமணமும் நடந்தது! இப்படியாக மூவரைத் தவிர மற்றவர்கள் திருப்பி அனுப்பப் பட்டார்கள்.சரி. எப்படியோ மூன்று
பேருக்காவது நல் வாழ்வு அமைந்ததே என்று நாங்கள் மகிழ்ந்தோம்!

இலங்கையில் இருந்துவரும் உள்நாட்டு விவகாரம் எங்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திராத காலம். ஏதோ நடக்கிறது, ஆட்கள் நாட்டை விட்டு
வெளியேறுகின்றனர் என்ற அளவில் மட்டுமே விவரம் கிடைத்துவந்தது! நாங்கள் தமிழ் நாட்டை விட்டு வந்தே 14 ஆண்டுகள் ஆகியிருந்தன!

பத்திரிக்கைகளிலும் அவ்வளவாக செய்திகள் இல்லை! எங்களுக்கு நண்பராக ஆன ஒரு இலங்கைத் தமிழ்க்காரர்தான் அவ்வப்போது இதைப்
பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரும் 'லட்டெளகா' என்னும் இடத்தில் வசித்ததால் அடிக்கடி சந்திப்பதும் குறைவே!

அவர்களும் இவையெல்லாம் சம்பவிக்கும் முன்பே வெளிநாட்டுப் பணிக்காக, இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள். இரண்டு வருடங்கள் இங்கே
ஃபிஜியில் இருந்து விட்டு, இங்கிலாந்து நாட்டுக்குப் போய்விட்டார்கள். கலவரம் நடப்பதால் மீண்டும் இலங்கைக்குப் போவது கஷ்டம் என்றும்
அங்கே உற்றார் உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போக முடியாத நிலை இருப்பதால், ஊரில் நடக்கும் திருமணங்கள் எல்லாம் வீடியோவில்
பதிவு செய்யப்பட்டு இவர்களுக்கு வந்துவிடும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எங்களுக்கும் அந்தக் கல்யாணக் கேஸட்டுகள் தருவார்கள். அதில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள் கொஞ்சம் வேறு பட்டிருந்தாலும்,
எனக்குப் பிடித்தமானது அவைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள திரைப் படப் பாடல்கள்!

எல்லா நிகழ்ச்சிக்கும் பொருத்தமான புது திரைப் படப்பாடல்கள்! தமிழ் நாட்டில் கல்யாண வீடு என்றால், 'மணமகளே மணமகளே வா வா,
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா' என்ற பாடலை மட்டுமே கேட்டுக் கேட்டுக் காது புளித்திருந்த எங்களுக்கு, இந்தப் புதிய பாடல்கள்
கேட்பதற்கு நன்றாக இருந்ததால், அவர்கள் வீட்டுக் கல்யாணக் கேஸட்டுகளுக்கு 'ஃபேன்' ஆகிவிட்டோம்!

கல்யாண ஜோடிகள் வேறு வேறாக இருந்தாலும், மாப்பிள்ளைத் தோழனாகத் தலைப்பாகையுடன் வரும் ஒரு சிறுவன் மட்டும் மாறவேயில்லை!
இது பற்றிக் கேட்டபோது, 'அவர் எங்கட தமையனாரின் மகன். மாப்பிள்ளைத் தோழருக்கு மோதிரம் போடுவது எங்கட பழக்கம். அவருக்கு
பதினோரு மோதிரம் கிடைச்சிருக்குன்னா பாருங்கள். சில சமயம் அய்யருக்கே மறந்துபோன விவரங்களைச் சொல்லித் தருவார். அவ்வளவு
அனுபவப்பட்டவர்' என்றார்கள். மணமக்களைவிட அந்தச் சிறுவனின் முகம் எங்கள் மனதில் பதிந்துவிட்டது! அதற்கப்புறம் கலியாணக் கேஸட்டில்
முதலில் நாங்கள் தேடுவது இந்தச் சிறுவனைத்தான்!

ஒருவழியாக எங்கள் காரும் செப்பனிடப்பட்டுவந்து சேர்ந்தது. அதே சமயம் எங்களது விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் கடிதம்
வந்தது! ஒரு சிறிய நேர்முகத் தேர்வுக்கும் வரச்சொல்லியிருந்தார்கள். நாங்கள் போனோம். எங்கள் 'பாஸ்போர்ட்டில்' நியூஸிலாந்து
பெர்மனண்ட் ரெஸிடன்ஸ் விஸா'வுக்கான முத்திரைக் குத்தப்பட்டது!

இதற்குள் இந்தியாவிலிருந்து ஒரு 'இஞ்சினீயர்'நம் இடத்துக்கு வந்து விட்டார். தனி மனிதர்.

'கட்டு மூட்டையை'என்று சொல்லிக் கொண்டு, நம் நண்பர்கள் அனைவரிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு ஒரு நல்ல நாளில் கிளம்பி
நியூஸிலாந்து வந்து சேர்ந்தோம்!

நேடிவ் ஃபிஜி நண்பர்களின் அன்பளிப்பானத் 'திமிங்கிலப் பல் மாலையும், புல்ப் பாயும்' எங்கள் வீட்டு வரவேற்பறையில் இடம்பெற்று
விட்டன!


பின்னுரை:
*******

இந்தக் கட்டுரைத் தொடருக்கு முன்னுரை என்று ஏதும் எழுதவில்லையென்றாலும், பின்னுரை எழுதுவது அவசியம் என்று
கருதியதால் என் பின்னுரை இதோ!

ஃபிஜியில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களே (1982-1988) இருந்தாலும், ஏதோ யுகம் யுகமாக அங்கேயே இருந்தது போல ஒரு நினைவு!
அருமையான தீவுகளும், அருமையான மக்களுமாக ஒரு நல்ல இடமாகவே அமைந்துவிட்டது.

'குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை' என்பார்களே, அதைப் போல அரசியல்வாதிகளின் கையில் அகப்பட்டுக் கொண்டது இந்த நாடு!

இந்த 'கூ' நடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 12,000 ஃபிஜி இந்தியர்கள் வெளியேறிவிட்டனர்! இதனால், அங்கே இப்போது
நேடிவ் ஃபிஜி மக்கள் தொகை 60% ஆக உயர்ந்துவிட்டது! ஆனால் நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்குதான் அதிகம்!

எங்கள் நண்பர்கள் பலரைப் பார்க்கவேண்டுமானால், எனக்கு ஆக்லாந்து( நியூஸி) போனாலே போதும்!

நமது ராணுவத்தலைவர் 1993-ல் ஃபிஜியின் பிரதமராகவே ஆகிவிட்டார். ( உள்துறை இலாகா போரடித்து விட்டதோ?)

1997-ல் காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் மறுபடியும் ஃபிஜி இணைக்கப்பட்டுவிட்டது!

1999 தேர்தலில் மறுபடியும் 'லேபர் கட்சி' வென்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஹேந்திர சவுத்தரி பிரதமரானார்.
அடுத்த வருடமே(2000) 'ஜார்ஜ் ஸ்பைட்' என்பவரால் மந்திரிசபை முழுவதும் துப்பாக்கி முனையால் மிரட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

2000, ராணுவம் அரசாங்கத்தை எடுத்துக் கொண்டது. ( ஃபிஜி மக்கள் 'கூ'வுக்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டனர்!)

அரசியல் சட்டம் பலமுறை திருத்தி அமைக்கப்பட்டது!

ஃபிஜியில் உள்ள கம்பெனி, இப்போது வேலை செய்துவரும் கம்பெனியெல்லாம் ஒரே தலைமையின் கீழ் உள்ளதால், என் கணவர்
அடிக்கடி கம்பெனி விஷயமாகப் போய்வந்து கொண்டுதான் இருக்கின்றார்.( அப்படியே வீட்டுக்கு சாமான்களும் கொண்டுவந்துவிடலாம்!)

ஃபிஜி இந்தியர்கள் இங்கே நியூஸிலாந்திலும் தங்கள் பழக்க வழக்கங்களை, ராமாயண் மண்டலி போன்றவைகளை விட்டுவிடாமல்
நடத்திக் கொண்டு வருகின்றனர். ( நாங்களும் எல்லாவற்றிலும் பங்கு பெற்று வருகின்றோம்)

எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. இதுவரை எழுதினது முழுதும் என் நினைவில் இருந்துதான். ஏதாவது குறிப்புகள் தவறாக இருப்பதாக
நீங்கள் கருதினால் அது என் ஞாபகக் குறைவின் காரணமாக இருக்கலாம்!

இந்தத் தொடருக்கு பின்னூட்டங்கள் எழுதி, என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


மீண்டும் அடுத்த தொடரோடு வருவேன் உங்களை மீண்டும் அறுக்க!

நன்றி. வணக்கம்!
*************************************************************************************2 comments:

said...

அன்புள்ள துளசி!

அருமையான தொடர். சுவாரஸ்யமான, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள். பாராட்டுக்கள்!

அடுத்தத் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

அன்புடன்,
கிறிஸ்டோபர்

said...

ஃபிஜி அனுபவங்களை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. படித்தவரை சுவாரஸ்யமாக இருக்கிறது. அடுத்த தொடரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதுவும் பயண கட்டுரை தானா? ஏதாவது க்ளூ? :-)