Monday, November 15, 2004

'க்காவோ பீவோ மஜாக் கரோ!!!!!!'

ஃபிஜி அனுபவம் பகுதி 16
*****************************

இங்கிருக்கும் இந்தியர்களின் முக்கிய 'ஸ்லோகன்' இதுதான்!!!! சாப்பிடு, குடி, சந்தோஷமா இரு!!!!!!!!
இங்கிருக்கும் இந்தியர்களின் முக்கிய 'ஸ்லோகன்' இதுதான்!!!! சாப்பிடு, குடி, சந்தோஷமா இரு!!!!!!!!

பிறந்த நாட்டிலிருந்தே அந்நியப்பட்டுப் போனதால் வந்த விரக்தியில் எழுந்ததா இந்த வாசகம் என்றுகூடத் தோணலாம்!
அல்லது ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தால் அவர்களுக்கு அடங்கிக் கிடந்து, அவர்களின் வாழ்க்கையை அருகே இருந்து
கண்டதால் ஏற்பட்ட அனுபவமாகவும் இருக்கலாம்! எப்படியோ இதே எண்ணம் 'நம் நாட்டிலும்' இப்போதெல்லாம் பரவி
வருவதை இல்லையென்று நாமும் மறுக்க முடியாதல்லவா?

இங்குள்ள இந்தியர்களுக்கு, வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து ஒரு சிறு மாற்றம் வேண்டுமானால் எங்கே போவது?
இந்தியா என்ன அருகிலா இருக்கிறது? அப்படி இருந்திருந்தால் அவர்கள் எண்ணப் போக்கில் மாறுதல்கள் ஏற்பட்ட விதம்
வேறாயிருந்திருக்குமோ?

இதுவோ மிகச் சிறிய தீவு. முன்பே சொன்னதுபோல ஒரு எட்டுமணி நேரம் போதும் இதை ஒரு முறை வலம் வர!
ஒரு சில நாட்களுக்கு எங்கேயாவது போகவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் அவர்கள் நாடுவது இங்கேயுள்ள
'ரிஸார்ட்'களைத்தான்!

இது இங்கே சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து வளர்ந்துவரும் மிகப்பெரிய தொழில்! எல்லா இடங்களிலும் கடற்கரைகளை ஒட்டி,
பல ரிஸார்ட்டுகள் பெருகிவிட்டன. உள்ளூர் ஆட்கள் போய் அனுபவிப்பதற்கு சுமாரான வகையில் உள்ள கடற்கரைகள்கூட அபூர்வமாகி
விட்டன! எல்லாவற்றையும் 'காசுக்கு' விற்றாகிவிட்டது அரசாங்கம்! பல வெளிநாட்டு 'ஹோட்டல்' நிறுவனங்கள் பல இடங்களிலும்
அருமையான 'ரிஸார்ட்டு'களைக் கட்டியிருக்கின்றன! இங்குள்ள பழங்குடி மக்களின் குடிலைப் போன்றே தோற்றம் தரும், நவீன வசதிகள்
படைத்த குடில்கள்! பர்ணசாலையைப் போன்ற அமைதியான இடங்கள். கூட்டம் இருந்தால் அல்லவா சத்தமும், இரைச்சலும் இருக்கும்?

அவர்களும் இந்நாட்டில் முதலீடு செய்கிறோம் என்ற பெயரில் நல்ல கொழுத்த லாபம் அடைந்து வருகின்றனர். ஃபிஜியர்களுக்கு வேலை வாய்ப்பு
கிடைப்பதென்னவோ நிஜம்தான்! ஃபிஜியின் தனிச் சிறப்பைக் காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு, சுற்றுலா சம்பந்தமுள்ள இடங்களில் எல்லாம்
நேடிவ் ஃபிஜியர்களுக்கு மட்டுமே வேலைதரும் நிறுவனங்களும் உண்டு! ஆனாலும் 'பிஹைண்ட் த ஸீன்' என்று கணக்கு வழக்கு பார்க்கும்
சம்பந்தமுள்ள ஆஃபீஸ் நிர்வாகம், இன்னும் இந்தியர்களுக்குத்தான்!

இந்த ரிஸார்ட்டுகள் சுற்றுலா வரும் ஆட்களிடம் வாடகை நிறைய வசூலித்தாலும், உள்ளூர் ஆட்களுக்கு மட்டும் எப்போதும் 50% தள்ளுபடி!
அதனால், உள்ளூர் மக்களும் குறிப்பாக இந்தியர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அழகான 'காட்டேஜ் ஸ்டைல்' இருப்பிடங்கள், ஒவ்வொன்றிற்கும் தனியாக நீச்சல் குளங்கள் என்று அட்டகாசமாக ரம்யமான சூழலில்
சில நாட்கள் தங்கி, அந்த 'க்காவோ பீவோ மஜா கரோ'வை நடத்துகின்றனர்!

உள்ளூர் 'பீர்' இங்கே 'ஃபிஜி பிட்டர்'என்னும் பெயரில் ஒரு நியூஸிலாந்து நிறுவனத்தால் தயாரிக்கப் படுகின்றது! இதற்குப் போட்டி
நிறுவனம் இதுவரை இல்லை!

ஃபிஜியில் ஏராளமான சிறிய தீவுகள் இருக்கின்றன என்று முன்பே குறிப்பிட்டிருந்தேனல்லவா? அவைகளிலும் பல ரிஸார்ட்கள் இருக்கின்றன.

ஒரு தீவில் ஒன்று என்று இருப்பதால், அமைதி வேண்டிவரும் வெள்ளைக்காரர்கள் நிம்மதியாக ஓய்வு எடுக்க இவற்றைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அங்கே வேறு கடைகண்ணிகள் இருக்காது. எல்லாமே அந்த ரிஸார்ட்டில் இருப்பதுதான்! முக்கியமாக டி.வி. கிடையாது! பொழுது போக்கு
என்ற வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்!

இது போன்ற தீவுகளுக்கு ச்சும்மா ஒரு நாள் போய் திரும்பி வரவும் 'டே எக்ஸ்கர்ஷன்' உண்டு. சிலர் வேறு தீவுகளில் தங்கிக் கொண்டு
மற்ற தீவுகள் எப்படி இருக்கின்றன என்று பார்க்கவும் வருவார்கள். இது போன்ற ஒரு நாள் சுற்றுலாக்களுக்கும் உள்ளூர் ஆட்களுக்கு
50% தள்ளுபடி உண்டு.

நாங்கள் ஒருமுறை 'பீச் கோம்பர் ஐலண்ட்' என்ற தீவுக்கு இப்படிப் போனோம். 'லட்டெளகா' என்னும் ஊரில் இருந்து ( இதுதான்
இத்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு துறைமுகம். மற்றொன்று தலைநகரான 'சுவா'வில் உள்ளது) பாய்மரக் கப்பலில் பயணம்
செய்தோம். சுமார் 2 மணிநேரப் பயணம். பேருக்குத்தான் பாய்மரக்கப்பலே தவிர, அவசியம் ஏற்பட்டால் அதை எஞ்சின் மூலமும் இயக்க
முடியுமாம்! பாய்மரம் எல்லாம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு த்ரில்லான அனுபவமாக இருக்கட்டும் என்ற 'பாவ்லா'தான்! இதன் பெயர்
'தூயித்தாய்'. பாயையெல்லாம் விரித்துக் கொண்டு காலையில் 8.30 கிளம்பி இது 'பீச் கோம்பர்' தீவை நோக்கிப் போகும். அப்போது
சில தூண்டில்களை படகின் பின்னால் கட்டிவிடுவார்கள். போகும் வழியிலேயே மீன்களைப் பிடித்துவிடுவார்கள். பத்தரை மணிக்கு நாம்
அந்தத் தீவை அடைந்துவிடுவோம். அந்த மீன்கள் எல்லாம் சமையலறைக்குப் போய்விடும்!

நாமும் ஓய்வு எடுத்துக்கொண்டு அந்தத் தீவைச் சுற்றிப்பார்க்கப்(!) போவோம். ஒரு சுற்று சுற்றிவர அதிகபட்சமாக 30 நிமிடங்கள்!

முன்னால் கூரை வேயப்பட்ட ஹோட்டல் கட்டிடம், அதன் பின்பக்கம் சிறிய காட்டேஜ்கள்! சுற்றிவர வெள்ளைமணலும்,
அதிலே படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கும் சுற்றுலாப் பயணிகளும்! அவ்வளவுதான்.

சில விளையாட்டுகள் முக்கியமாக ஃபுட்பால் போல ஒன்று அந்த மணல்வெளியில் நடந்துகொண்டிருக்கும். அனைவரும் கலந்து கொள்ளலாம்.
பகலுணவுக்கு மணி அடித்தவுடன், அனைவரும் போய் அவற்றை எடுத்துக் கொண்டு, திரும்ப மணல்வெளியிலே அமர்ந்து சுற்றிலும் உள்ள
கடலை ரசித்தபடி உண்ணலாம். கட்டிடத்தின் உள்ளேயும் அமரலாம். ஆனால் எல்லோரும் வெளியிலே இருக்கவே விரும்புவார்கள்.

ஆழம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால் கரையை ஒட்டி இருக்கும் தண்ணீரில் குழந்தைகளைப் பயமின்றி விளையாடவும் விடலாம்!
ஒரு பெயருக்குக் கூட அலை என்ற சமாச்சாரம் இருக்காது! அமைதியான ஒரு குளம் போன்றே இருக்கும் இந்தக் கடல்பகுதி! 'ஸ்நோர்கேல்'
செய்யவும் உபகரணங்கள் வழங்கப்படுமாதலால் தண்ணீரில் குப்புற மிதந்தபடி, தெளிவான கடலின் அடியில் இருக்கும் காட்சிகளையும்
கண்டு மகிழலாம்!

பகல் உணவுக்குப் பின் அடித்தளம் கண்ணாடியால் உருவாக்கியிருக்கும் சின்னப் படகுகளில் பவளப்பாறைகளைப் பார்க்கச் செல்லலாம்!
இந்தப்படகுகளில் ஒரு பத்துப் பேர்தான் போக இடம் இருக்கும் என்பதால் பல 'ட்ரிப்'கள் அடித்துக் கொண்டிருப்பார்கள். பார்ப்பதற்கே
மிகவும் ரம்மியமான காட்சிகள்தான் கடலின் மடியில்!

நாலுமணிக்கு 'லட்டெளகா'வுக்குப் போக கப்பல்( கப்பல் என்ன பெரிய கப்பல்! ஒரு பெரிய படகுதான்)தன் பாயையெல்லாம் சுருட்டிக்
கொண்டுத் தயாராக இருக்கும். இந்தமுறை எஞ்சின் உதவியோடு ஒரு மணிநேரத்தில் துறைமுகத்தை அடைந்துவிடும்! எல்லாம் ஒரு வியாபாரத்
தந்திரம்தான்!

இந்த 'லட்டெளகா'விலிருந்து 30 நிமிடம் 'ட்ரைவ்' செய்தால் நம்வீடு உள்ள 'ம்பா' வந்துவிடும்! சாலைவசதிகள் ஓரளவுக்கு நன்றாகவே
இருக்கும்! சாலையின் இரு புறங்களிலும் கரும்புக்காடுகள்! வந்துகொண்டிருக்குபோதே, 'விருட்'டென்று சாலையின் குறுக்கே ஓடும்
கீரிகள்! இங்கே கீரிகள் ஏராளம். அதனால் பாம்பு என்ற ஜீவராசி இல்லவே இல்லை! இன்னும் சொல்லப் போனால் இங்கே வகை
வகையான மிருகங்களும் கிடையாது! பசு, காளை,குதிரை, நாய், பூனை இவ்வளவுதான். எருமை மாடுகூட இல்லை!

வெள்ளையர்கள் வந்த புதிதில் அவர்கள்தான் மாடுகளை இங்கே கொண்டு வந்தார்களாம். அப்போது ஃபிஜியர்கள் அதைக் கண்டு வியந்து
அது என்ன என்று கேட்டபோது இது 'புல்', இது 'கெள'(bull & cow) என்று சொன்னார்களாம். ஃபிஜியர்கள் மாடுகளை இப்போதும்
அவர்கள் பாஷையில் 'புல்மகெள' என்றே சொல்கிறார்கள்!

இப்படி எல்லோரும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்குபோது இடிபோல வந்தது ஒரு செய்தி!


இன்னும் வரும்
************


3 comments:

said...

பிஜி சின்னத் தீவுகள், மாலத்தீவு அட்டொல்ஸ் மாதிரிண்ணு நினைக்கிறேன். ஒரு தீவுல, ஒரேயொரு ரிசார்ட்தான் இருக்கும்ணா, ராத்திரி தங்கறதுக்கு பயமாயில்ல இருக்கும்; அதுவும், புயல் சீசன்னா அவ்வளவுதான், தனுஷ்கோடி தான் நினைவுக்கு வருது.

அப்புறம், பிஜி மக்கள் யானை, சிங்கம், புலியெல்லாம் பாக்கறதுக்கு, என்ன செய்வாங்க...மிருக காட்சி சாலையிருக்கா?

said...

இன்று குஷியான பதிவு...
இங்கு சிங்கப்பூருக்கு அருகிலும் ஓரிரு தீவுகள் (Kuasu, புலாவ் டெகாங்...) போல சில இருக்கும். காலையில் போய் மாலை திரும்பவேண்டும். அதைவிட்டா இந்தோனிசியா, தாய்லாந்தின் தீவுக்கு குரூஸ்-தான்.

நான் முதலில்
"க்காவோ பீவோ மஜாக் கரோ"ன்னு பார்த்தவுடன்
...பூலா லாக்கமாய்...கேம்ச்சோ? ரைட்ச்சே... வேல்வேல் வெற்றிவேல்...

அப்படின்னு ஏதேதோ எழுதுவீங்கள்ள அதுபோல ஃபிஜி மொழின்னு நெனச்சுட்டேன். அப்புறம் "சாப்பிடு, குடி, சந்தோஷமா இரு" பார்த்தவுடனதான் ஓ... நமக்கு தெரிஞ்ச அரைகுறை ஹிந்தி (சாரி நமக்கு அரைகுறையா தெரிஞ்ச ஹிந்தி)ன்னு தோணுச்சு.

said...

அன்புள்ள கிறிஸ் & அன்பு,

வேற மிருகத்தைப் படத்துலேதான் பார்க்கணும். மிருகக் காட்சி சாலையெல்லாம் கிடையாது!

வேற நாடுகளிலும் இந்த மாதிரி சின்னச் சின்ன எக்ஸ்கர்ஷன் இருக்குமே. எல்லாம் மனுஷனுக்குப் பொழுதுபோக்கவும், நடத்துறவங்களுக்கு வருமானமும்தன்!