Friday, November 26, 2004

'பல்லும் பாயும்!!!!!!!'

ஃபிஜி அனுபவம் பகுதி 20
************************

ஃபிஜியின் பழங்குடி மக்களுக்கு அவசரத்தேவைக்கு பணம் வேண்டுமானால், அடகுக் கடைக்குப்
போவார்கள்! இதென்ன அதிசயம்?ஃபிஜியின் பழங்குடி மக்களுக்கு அவசரத்தேவைக்கு பணம் வேண்டுமானால், அடகுக் கடைக்குப்
போவார்கள்! இதென்ன அதிசயம்?

அதிசயம்தான்! அது இவர்கள் அடகு வைக்கும் பொருள்! இந்தியர்களுக்கு நகை, நட்டு எவ்வளவு
மதிப்பு வாய்ந்ததோ அதே மதிப்பு இவர்களுக்கு இருப்பது இன்னொரு பொருள் மீது!

அது பல்! சாதாரணப் பல் அல்ல. 'திமிங்கிலப் பல்!'

இதன் அளவைப் பொறுத்து இதன் மதிப்பு கூடும்! ஒரு 'பல்'லைக் கயிற்றில் கோர்த்து மாலையாகக்
கழுத்தில் அணிவார்கள்! சிறிய பல் என்பது ஒரு ஆறு அங்குல அளவில்(!) இருக்கும்!

இதன் உருவம் ஃப்ஜி நாணயத்திலும் பதிக்கப் பட்டுள்ளது!

மதிப்புக்கு உரியவர் என்று இவர்கள் நினைக்கும் நபர்களுக்கோ அல்லது மிகவும் மரியாதைக்குட்பட்ட
விருந்தினருக்கோ, இந்த 'பல் மாலை' அணிவிப்பார்கள்.

இது இந்நாட்டின் மதிப்பு மிகுந்த பொருள் என்பதால், இப்போதெல்லாம் அதை வெளிநாடுகளுக்குக்
கொண்டுபோகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது! நம் 'யானைத் தந்தம்'போல என்று வைத்துக் கொள்ளலாம்!

நான் எப்போதும் நினைப்பது, 'இவர்களுக்குத் திமிங்கிலம் எங்கிருந்து கிடைக்கிறது ?' இவர்கள் திமிங்கில
வேட்டைக்கும் போவதில்லையே!

(நியூஸிலாந்தில் சிலசமயம், திமிங்கிலங்கள் தற்கொலை செய்துகொள்ளக் கடற்கரையில் ஒதுங்குகின்றன!
அவைகளைக் காப்பாற்ற முயன்று, தோல்வி ஏற்பட்டால் அவைகளைப் புதைத்து விடுகின்றனரே தவிர
பற்களையெல்லாம் எடுப்பதில்லை!)

ஓலைப்பாயும் இவர்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததே! திருமணச் சீர்வரிசையில் இது அவசியம் இருக்கவேண்டும்!
நம் ஊரில் சுருட்டுவது போலில்லாமல், இந்த வகைப் பாய்களை 'ஜமக்காளம்'போல மடிக்கலாம்! மிகவும் மிருதுவான
ஒருவகைப் புல் போன்ற ஓலைகளையே இதற்குப் பயன் படுத்துகிறார்கள். இந்த ஓலையுமே வேறு எங்கோ இருந்துதான்
வருகிறதாம்! ( ஆகக்கூடி, இங்கில்லாத சமாச்சாரம் என்பதால்தான் இந்த மதிப்போ?)

இது இருக்கட்டும். நம் கதையை விட்ட இடத்திலிருந்து தொடரலாம்!

இரண்டாவது முறை நாணயத்தின் மதிப்பைக் குறைத்துவிட்டார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா?
அப்போது இருந்த இடைக்கால அரசாங்கத்தை, இரண்டாம் தடவை ராணுவம் பிடித்தெடுத்துக் கொண்டது.
நாலு மாத இடைவெளியில் இரண்டுமுறை 'கூ'

மக்களுக்கு,'கூ' மீதிருந்த பயம் தெளிய ஆரம்பித்ததோ, என்னவோ?

அரசியல் சட்டங்களை மாற்றுவதில் மும்மரமாக இருந்தார் நம் ராணுவத்தலைவர். அவருக்கு வேண்டியவர்களாகவும்,
அதே சமயம் 'ராத்தூ'க்களாகவும் இருப்பவர்களை மட்டுமே அரசாங்கத்தை நிர்வகிக்க ஏற்பாடு செய்துவந்தார்!

மேலும் இப்போதுதான் ஃபிஜி குடியரசு நாடாகிவிட்டதே! இதை மற்ற நாடுகள் ( இங்கிலாந்து, ஆஸ்தராலியா, நியூஸிலாந்து)
அங்கீகாரம் செய்யவில்லைதான்! ஆனாலும் 'ஹூ கேர்ஸ்?'

முதல் ஜனாதிபதியாக 'ராத்தூ பெனைய கனிலாவ்' நியமிக்கப் பட்டார்!

பிரதமர் பதவி, பழைய ஊழல் பெருச்சாளி என்று கருதப்பட்டவருக்கே கிடைத்தது!

நம் ராணுவத்தலைவர், ராணுவத் தலைமையை உதறிவிட்டு ( தூசி போல உதறிவிட்டு என்று சொல்லலாமா?) உள்துறை
மந்திரியாக உட்கார்ந்துகொண்டு,அனைத்து அரசாங்கத்தையும் 'தன் பிடிக்குள்ளேயே' வைத்திருந்தார்!

'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா'

இந்தியர்களின் வெளியேற்றத்தால் ஜனத்தொகை குறைய ஆரம்பித்தது! நல்ல பதவியிலும், வேலைகளிலும் இருந்தவர்கள்
போயாச்சு! டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது! நோயாளிகளைக் கவனிக்க முடியாமல், மருத்துவ மனைகளில் ஒரு
தேக்கம் ஏற்பட்டது! இப்படியே மற்ற துறைகளிலும்! 'பட் ஹூ கேர்ஸ்?'

அப்போது நியூஸிலாந்து அரசாங்கம், தன் கொள்கைகளை ( வெள்ளையர் மட்டும் குடியேறுதல்)சற்றுத் தளர்த்தி, காசு இருந்தால்
குடியேறலாம் என்றது! 'பிஸினஸ் மைக்கிரேஷனாம்!' $250,000 இருந்தால் போதும்! அதை நியூஸிலாந்து வங்கிகளில் போட்டு
வைத்துவிட்டு, அதைக் காட்டினால் பி. ஆர். கிடைத்துவிடுமாம்!

குஜ்ஜுக்கள் பலர் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன் படுத்திக் கொண்டனர்! இங்கே குடும்பத்துடன் வந்து, பாஸ்போர்ட்டில்
ஸ்டாம்ப் செய்து கொண்டு, 'ரீ எண்ட்ரி விசா' வாங்கிகொண்டு ஃபிஜிக்கே திரும்பிவந்து வியாபாரத்தைக் கவனித்து வந்தார்கள்.
இந்த 'ரீ எண்ட்ரி விசா' ஒரு 4 வருடத்திற்குச் செல்லும்! இன்னும் ஏதாவது குழப்பம் உண்டானால் வெளியேறலாம் என்ற எண்ணம்தான்!

நியூஸிலாந்து அரசாங்கம், இந்தக் கொள்கை மாற்றங்களுக்குப் பழக்கப் பட்டிருக்கவில்லை. நாட்டில் வரவு வைக்கப்பட்ட பணம் என்ன
ஆகிறதென்ற கவனமும் இல்லாமல் இருந்தது. அதற்கான சட்ட திட்டங்களும் ஒன்றுமேயில்லை! சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன் படுத்த
நம் மக்களுக்குச் சொல்லித்தர வேண்டுமா என்ன?

பலர், இங்கே வங்கி கணக்கில் காண்பித்த பணத்தை, அவர்கள் காரியம் முடிந்து ஃபிஜிக்குத் திரும்பி வந்தவுடனே மறுபடி ஃப்ஜியில்
உள்ள வங்கிக்கே மாற்றி எடுத்துக் கொண்டார்கள்!

இதனிடையில் ஃபிஜி நாளிதழில் மற்றுமோர் செய்தி! இலங்கைத் தமிழர்கள் பலர் (கனடாவுக்குப் போக வேண்டியர்கள்) சரியான 'விசா'
பேப்பர்கள் இல்லாததால் எப்படியோ 'நான்டி ஏர்போர்ட்'டில் ( இதுதான் இந்நாட்டின் பன்னாட்டு விமானநிலையம்) இறக்கிவிடப்
பட்டிருக்கின்றனராம்!

ஐய்யய்யோ.... தமிழ்க்காரர்களா? அடப்பாவமே... என்றெல்லாம் இருந்தது!

இங்கே ஜனங்கள் எல்லாம் ரொம்ப நல்லமாதிரி என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன் அல்லவா? அப்படி ஒட்டுமொத்தமாக எல்லோரும்
நல்லவர்களாகவே அமையமுடியுமா? பெரும்பாலோர் நல்லவர்களே! ஒரு சிலர் வேறு மாதிரியும் இருப்பார்களல்லவா?

இதுபோன்ற சில நிகழ்வுகளும் ( நல்ல மனிதர் அல்லாதவரால்) அவ்வப்போது நடக்கும். அப்போது எங்களால் ஆன உதவி ஏதாவது
செய்வோம். மாதிரிக்கு ஒன்று!

சென்னையிலிருந்து ஒருவர் இங்கே வேலைக்காக வந்திருந்தார். அவருடைய துரதிஷ்டம் இது போன்ற ஒரு இடத்தில் அவர் வேலை அமைந்து
விட்டது. அந்த நிறுவனத்தினர் என்றாலே இங்கே பலருக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது!

வந்த மறுநாளே எங்களை வந்து பார்த்தார். ஒரு வாரம்தான் போனது, அதற்குள் அங்கே முதலாளிக்கும், இவருக்கும் ஏதோ 'லடாய்!'
அப்புறமும் அடுத்துவந்த நாட்களில் என்னென்னவோ நடந்துவிட்டதாம்! அவருக்கு உணவும் சரியாகத் தரப்படவில்லை என்று சொல்லிக்
கொண்டிருந்தார். நம் வீட்டிலே அவருக்கு உணவு அளித்துக் கொண்டிருந்த்தோம். அவர் என்ன மாதிரி ஒப்பந்தத்தில் வந்திருக்கிறார் என்று
எங்களுக்கு விவரமாகத் தெரியாது! அவருடைய முதலாளி ஏதோ இழிசொற்கள் சொன்னதாக நம்மிடம் வந்து புலம்பினார். எல்லாம் படபட
வென நடந்துவிட்டது ஒரே மாதத்தில்!

ஒரு நாள் மாலை 4 மணி அளவில் நம்மைத் தொலைபேசியில் அழைத்து, 'என்னை உடனே போகச் சொல்லிவிட்டனர். எனக்கு டிக்கெட்
தரவேண்டியது அவர்கள் கடமை என்று சொன்னேன். அவர்கள் ஒரு இடம் சொல்லி அங்கே உன் டிக்கெட் இருக்கிறது. அதை எடுத்துக்
கொண்டு உடனே கிளம்பவேண்டும். ஒரு நிமிடம் கூட இருந்தாலும், போலீஸ் 'ஓவர் ஸ்டே'என்று பிடித்துவிடும்' என்று
பயத்தோடு சொன்னார்.

டிக்கெட் உள்ள இடம் நம் வீட்டிலிருந்து 22 மைல் தூரத்திலுள்ள 'லட்டெளகா' என்னும் ஊர். அங்கே டிக்கெட்டை அந்த 'ட்ராவல் ஏஜண்ட்'
மூலம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து இன்னும் 22 மை தூரத்தில் உள்ள விமான நிலையம் செல்லவேண்டும்! டிக்கெட்டைப் பெற்றுகொண்டு
விமான நிலையம் போகவும் அவருக்கு வாகன வசதி ஏதும் செய்துதரவில்லையாம்! சொல்லும்போதே அவரது குரல் 'கம்மி' அழுதுவிடுவார்
போலிருந்தது!

நாங்களே அவரை அழைத்துச் சென்று டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளச் செய்து அவரை நம் வீட்டிற்குக் கொண்டுவந்தோம்.
அப்போதே மாலை 6 மணியாகிவிட்டது. ஊருக்கு வெறும் கையாகப் போகின்றோமே என்றும் புலம்பிக் கொண்டிருந்தார். அங்கேதான் மாலை
6 மணிக்கு எல்லா கடைகளும் அடைபட்டிருக்குமே. அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை ஊரில் இருக்கிறதென்று சொல்லியிருந்தார்.


எங்கள் அக்காவுக்கு இந்த விவரத்தைத் தெரிவித்தோம். அங்கே எனக்கு ஏது அக்கா? சொல்கிறேன்! அக்கா நமக்கு அக்கா ஆனதே ஒரு
தனிக் கதைதான்!

அங்கே எல்லோரும் நமக்கு உறவினர்கள்தான்! ஏதாவது முறைவைத்துதான் அனைவரையும் அழைப்பார்கள். அந்தப்
பழக்கம் எங்களையும் பற்றிக் கொண்டது! ஆனால் நல்ல பழக்கம்தானே! இந்த அக்கா நமது மூன்றாம் வீட்டு ஆட்கள். அக்கா பெங்களூரைச்
சேர்ந்தவர். நாங்கள் வந்த புதிதில், வந்து 1 வாரம் ஆனபின்புதான் நமக்கு என்று கம்பெனி தெரிவு செய்த வீட்டிற்குக் குடி புகுந்தோம்.நாள்
நன்றாக இல்லையென்று நம் கம்பெனி உரிமையாளரின் தாய், நம்மை அவர்கள் வீட்டிலேயே அதுவரை தங்கியிக்கச் சொல்லிவிட்டார்கள்.
ச்சும்மா சொல்லக்கூடாது, எங்களை வேற்று மனிதர்களாக எண்ணாமல் அவர்கள் குடும்பத்தில் ஒருவரைப் போலவே நடத்தினார்கள். எங்களுக்கும்
தாய் போலவே இருந்தார்கள். நம் அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தனி வீட்டிற்கு வந்த மறுநாள், ச்சும்மா மொட்டை மாடியில் போய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுப்
பெண்மணி என்னைப் பார்த்துவிட்டு, அவருடைய பக்கத்து வீட்டு பெண்மணி ( யாரு? நம்ம அக்காதான்!)யிடம் சொல்லியிருக்கிறார்கள்.
உடனே அவர்கள் இருவரும் நம் வீட்டிற்கு வந்தனர். நானும் அவர்களை வரவேற்று உட்காரச் சொன்னேன். அப்போது எல்லா சம்பாஷணை
களும் ஹிந்தியில் நடந்து கொண்டிருந்தன. அப்போது அக்கா கேட்டார்கள்,

"நீங்கள் இந்தியாவில் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள்?"

" பூனாவிலிருந்து வந்துள்ளோம். ஆனால் மெட்ராஸ்தான் சொந்த(!) ஊர்"

" ஓ, தமிழ் பேசுவீர்களா?"

இதைத் தமிழில் கேட்டவுடன், தாவி வந்தது என் பேச்சு, 'ஆமாங்கா, நாங்க தமிழ்தான் பேசுவோம்'

அப்போது என்னை அறியாமலேயே 'அக்கா' என்ற வார்த்தை வந்து விட்டிருந்தது! அப்போது என் கணவரும் மதிய உணவுக்காக
வீட்டிற்கு வந்தார். அவரிடம்,'இந்த அக்கா தமிழ் பேசறாங்க' என்று மிக மகிழ்ச்சியுடன் சொன்னேன்.

'ஆமாம் தம்பி, தமிழ்காரங்கதான். ஆனா பெங்களூரு!' அவர்களும் 'தம்பி' என்று உரிமையோடு சொன்னதில் இவருக்கும் மகிழ்ச்சி!

அந்த நிமிடம் முதல் அவர்கள் எங்களுக்கு அக்காவும் அவர்கள் கணவர் எங்கள் மாமாவுமாக ஆகிவிட்டனர். எங்கள் நட்பு இன்னமும் இந்த
23 ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது!

அந்த அக்காவிடம் விஷயத்தைச் சொன்னவுடன், அவர்கள் சில புதுப் புடவைகளைக் கொண்டுவந்தார்கள். என்னிடமும் சில புடவைகள்
புதிதாக இருந்தன. அவ்வப்போது 'சேல்' வரும்போது வாங்கிவைக்கும் பழக்கம் இருந்தது. ஊருக்குப் போகும்போது கொண்டுபோகத்தான்!
அப்படியே, ஊரில் உறவினரின் மக்களுக்கு என்று சில ஆடைகளைத் தைத்து வைத்திருந்தேன். (அப்போது, நான் 'ஆயிரம் துணியைக்
கெடுத்து அரை டெய்லர்' ஆக மாறியிருந்த காலம்!) இது போன்ற சிலவற்றைக் கொடுத்து, அவருக்கு ஆறுதல் சொல்லி மறுநாள் அதிகாலை
5 மணிக்குப் போகும் விமானத்தில் ( இரவு 1 மணிக்குக் கிளம்பினோம். 44 மைல் இரவில் பயணிக்க வேண்டும் அல்லவா?)
அவரை அனுப்பி வைத்தோம்.


இன்னும் வரும்!
**********

1 comments:

said...

ஒன்னும் கமண்ட் செய்யரதில்லைன்னு இங்கே வரதைல்லையின்னு நினைகாதீங்க துளசி ! தினமும் வந்து போவேன்...ஜோரா எழுதுரீங்க...