Monday, November 01, 2004

ஆராரோ ஆரிரரோ !!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 13
*********************

தத்துப் பிள்ளை வேணுமா? தடங்கல் இல்லாமக் கிடைக்கும்! தமிழ் நாட்டில் பரவலாகக் கேள்விப்படும்
விஷயம் ஒன்று உண்டல்லவா?

தத்துப் பிள்ளை வேணுமா? தடங்கல் இல்லாமக் கிடைக்கும்! தமிழ் நாட்டில் பரவலாகக் கேள்விப்படும்
விஷயம் ஒன்று உண்டல்லவா? சில இடங்களில் பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அதற்கு முடிவு
கட்டிவிடுகிறார்கள் என்று!

இங்கே அதுபோல இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. குழந்தை ஆணோ, பெண்ணோ(!) வேண்டாம் என்றால்
அரசாங்கமே அக்குழந்தைக்கு வேண்டியதைச் செய்துவிடுகிறது!

மணம் ஆகாத சில இளம்பெண்கள், தாய்மை அடைந்துவிட்டால் சமூகம் அதை மிகப்பெரிய விஷயமாகக் கருதுவதில்லை!
மகப்பேறு நடக்கும்போதே, அந்தக் குழந்தை அவர்களுக்கு வேண்டாமென்று சொல்லும் உரிமையும் அளிக்கப்படுகிறது!
அந்தக் குழந்தை பிறந்தவுடனே அதைத் தனியாகக் கொண்டுபோய் குழந்தைகள் பிரிவில் வைத்து நல்ல முறையில்
கவனிக்கின்றார்கள். அதை உடனே அரசாங்க அலுவலகத்திலும் தெரிவிக்கின்றனர்.

வெல்ஃபேர் டிபார்ட்மெண்ட் மூலம் இந்த விவரம் தத்துக்குழந்தைக்காக பதிவு செய்துள்ளவர்களுக்குப் போய்ச் சேருகிறது.
அவர்கள் ஆசுபத்திரிக்குப் போய் அந்தக் குழந்தையைப் பார்த்து, வேண்டுமா, வேண்டாமா என்றும் முடிவு செய்யலாம்!

சில தம்பதிகள், சாவகாசமாக நேரம் எடுத்துக் கொண்டு முடிவு செய்கின்றனர். சிலர் உடனே! எப்படியானாலும்
வீடுகள் கிடைக்காமல் இருப்பதில்லை. நிறையக் குழந்தைகள் உள்ளவர்கள் கூட, இதுபோல மருத்துவ மனையில்
குழந்தை இருக்கிறதென்று கேள்விப்பட்டால் தயக்கம் இன்றி தத்து எடுத்துக் கொள்கின்றனர்.

ஆஸ்தரேலியா, நியூஸிலாந்து நாடுகளுக்குக் கூட தத்துக் கொடுத்துவிடுகின்றனர். ஃபிஜி அரசாங்கத்திடம் மனு கொடுத்தால்
அவர்களே ஏற்பாடு செய்து விடுகின்றனர்.

நாலு பேர் பேசுவார்கள் என்ற சமூக நிலை இல்லாததாலும் இதை யாரும் பெரிதாகக் கருதுவது இல்லை.

பொதுவாக மிகவும் ஏழ்மை நிலையிலும், கல்வி அறிவு மிகவும் குறைந்துள்ள மக்களிடம்தான் இந்த (கல்யாணத்துக்கு
முன் கர்ப்பமாகிவிடும்) நிலை உள்ளது.

இங்கே சமூக அந்தஸ்த்து அவ்வளவாகப் பார்க்கப் படுவதில்லை. முதலில் நாங்கள் இங்கு வந்தபோது, வீட்டுவேலைகளுக்கு
உதவி செய்ய ஒரு 15 வயதுப் பெண்ணை அழைத்து வந்தார்கள், நம் பக்கத்து வீட்டு அக்கா. உள்ளே வந்தவுடன் அந்தப் பெண்
சோஃபாவில் நம் எதிரில் உட்கார்ந்து கொண்டு என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் விவரம் கேட்டுக்
கொண்டிருந்தாள்.

இந்தியாவைவிட்டு அப்போதுதான் வெளிநாட்டுக்கு வந்திருந்த எனக்குக் கொஞ்சம் விசித்திரமாக ( அதிர்ச்சியாகவா?) இருந்தது.
இந்தியாவில் வேலைக்காரர்கள், எஜமானர்கள் உறவு வேறுமுறையில் இருந்ததும், அதிலேயே பழக்கப் பட்டுவிட்டதும்தான் காரணம்!

மறுநாளிலிருந்து, அந்தப் பெண் வேலைக்கு வர ஆரம்பித்தாள். வந்தவுடன் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு ஒரு 'சாய்' போட்டுக்
கொடுக்கும்படி கேட்டாள். என்னவென்று புரியாத நிலையில் நான் 'டீ'தயாரித்துக் கொடுத்தேன். அதைக் குடித்துவிட்டுத்தான் வேலைகளை
ஆரம்பித்துச் செவ்வனே செய்து முடித்தாள். அன்று முதல், வந்தவுடன்,'பஹனி, ஏக் ச்சாய் பனாவ்' என்பது வாடிக்கையாகிவிட்டது.
நானும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருக்கவும் கற்றுக் கொண்டேன்.

சில மாதங்களுக்குப் பின் இந்தப் பெண்ணின் தோழி, இவளுக்குப் பதிலாக வேலைக்கு வர ஆரம்பித்தாள். காரணம் என்னவென்று
அறிந்ததும் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை. கர்ப்பமாக இருக்கின்றாளாம்! அப்புறம் ஒரு நாள் நம் வீட்டுக்கு வந்திருந்தாள்.
குழந்தையைப் பற்றி விசாரித்தேன். ஆண் குழந்தையாம். அரசாங்கம் மூலம் அக்குழந்தை 'தத்து' எடுத்துக்கொள்ளப்பட்டதாம். விவரம்
அறிந்தபோது, எனக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது.

நான் ரொம்பப் பெரிய மனுஷி மாதிரி, அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறினேன். 'நடந்தது பற்றிப் பேசி என்ன பயன்? இனிமேல் நீ
கவனமாக இருந்துகொள். அந்தக் குழந்தை ஒரு நல்ல இடத்தில் வளருவது மிகவும் நல்ல விஷயமல்லவா?, ஆண்களை நம்பி ஏமாந்து
விடாதே. உனக்கு இன்னும் 16 வயதுகூட நிரம்பவில்லை. நல்ல பையனாகப் பார்த்து திருமணம் செய்துகொள்...... இப்படி
என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தப் பெண்ணும் சரி சரி என்று தலையை ஆட்டிக் கொண்டிருந்தது.

சில மாதங்களுக்குப் பின் அவளை மார்க்கெட்டில் சந்திக்க நேர்ந்தபோது எட்டு மாதக் கர்ப்பிணியாக இருந்தாள். இந்தக் குழந்தையும்
'அடாப்ஷன்' போகிறதென்று தெரிவித்தாள்.

எப்படியோ இந்தக் குழந்தைகளுக்கு வளர்ப்புப் பெற்றோர் கிடைடத்து விடுகின்றனர்.

இன்னொன்று, இங்கே 'ஜாதி' என்பது ஒரு பிரச்சனை இல்லை. ஒரு குடும்பத்தில் தாயும் தந்தையும் வேறு வேறு ஜாதி.
அவர்கள் மருமகனோ, மருமகளோ வேறு வேறு ஜாதி என்பதெல்லாம் சர்வ சாதாரணம்.

பெண்குழந்தைகளோ, ஆண் குழந்தைகளோ வளர்ப்பு, திருமணச் செலவு எல்லாமே ஒரே மாதிரிதான். வரதட்சிணை என்ற
அரக்கன் இன்னும் இங்கே வரவில்லை. சீர் செனத்தி இன்ன மாதிரி செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமே இல்லை.
இந்தியாவில் வரன்களுக்கு என்றுள்ள'மார்க்கெட் ரேட்' ஒன்றும் கிடையாது!

பெண் வீட்டில்தான் திருமணம். ஆடம்பரம் வேண்டுமென்ற அவசியமும் இல்லை. மங்கல காரியங்கள் நடத்த ஒரு 'பண்டிட்'
இருந்தால் போதும். இந்தப் புரோகிதர்களும் ஒரு குறிப்பிட்ட 'ஜாதி' என்று இல்லை! புரோகிதம் செய்யக் கற்றுக் கொண்டாலே
போதும்! அவர்கள் சைவ உணவுக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது! எல்லாத் தொழிலையும் போலவே
இதையும் அங்கீகாரம் செய்திருக்கின்றனர்.

வட இந்தியர்களுடைய திருமணம் என்றால் இன்னும் விசேஷம். மணமகனின் தாய், அந்த மணவிழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
( நல்ல காரியம்! மாமியார் மருமகள் சண்டை ஒரு நாள் தள்ளிப் போடப்படும்!)
மணமகனும், அவருடைய தந்தையும் மற்ற உற்றார் உறவினர் மட்டுமே, மணமகளின் வீட்டில் நடக்கும் சடங்குகளில் கலந்து கொண்டு,
புது மணப்பெண்ணோடு, மணமகனின் வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். மாமியார் வீட்டில், மணமகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பதே
அந்த மாமியார்தான்!

சினிமாவில் காண்பிப்பது போன்ற 'தஹேஜ்' சண்டையெல்லாம் இல்லை.

மருமகள்களும் புகுந்தவீட்டில் சண்டை சச்சரவில்லாமல்தான் வாழ்கின்றனர். ஒன்று சொல்ல வேண்டும், வீட்டை நல்ல முறையில்
பராமரிப்பதில் இங்குள்ள பெண்களுக்கு இணையே இல்லை. சோம்பலின்றி உழைப்பார்கள். காலை 11 மணி அளவில் எல்லா
வேலைகளும் நறுவிசாக முடித்துவிட்டு, மற்ற வீட்டு விசேஷங்களுக்கு உதவியும் செய்வார்கள். ஒன்றும் இல்லையெனில் அழகாக
உடுத்திக் கொண்டு 'டவுனில்' உள்ள கடைகண்ணிகளுக்கோ, நண்பர்கள் வீடுகளுக்கோ விஜயம் செய்வார்கள்.

ஒருநாள் உதவியாளர் வரவில்லை என்றால் கூட எல்லா வேலைகளும் நேர்த்தியாகச் செய்யப்பட்டுவிடும்! இதற்கு நேர் மாறாக நான்.
உதவியாளர் வரவில்லை என்றால் மிகவும் அத்தியாவசியமானவைகளை மட்டுமே செய்வேன்.

பாக்கியெல்லாம் நாளைக்கு என்றுதான்!

இன்னும் வரும்

3 comments:

said...

நானே எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தேன். உங்கள் புலம் பெயர்ந்த வாழ்க்கை குறிப்புகள் கிடைக்குமா என்று?

ஒரு மணி நேரம் இந்த பிஜீ தீவு அனுபவம்.

நீங்கள் சொன்ன நகைச்சுவை தாக்கம் இப்போது தான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

டாய்லெட் போகவேண்டுமென்றால் பிஜி வந்து விடுவோம்.

என்னவொரு லாவக நடை.

நேற்றும் இன்றும் உங்கள் பழைய இடுகைகள் படித்துக்கொண்டே வரும் போது உள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை இயல்பாக வந்து

மகனே நீ இன்னும் தேறணும் என்று சொல்லிக்கொண்டு இருப்பது உங்கள் காதில் விழுகின்றதா?

said...

வாங்க ஜோதிஜி.

இது நம்ம 'ஆரம்ப கால' எழுத்துக்கள். விதவிதமா 'நடை'யை மாத்தி யோசிச்சு இப்ப ஒருவித 'நடை'க்கு வந்து சேர்ந்துருக்கேன்.

said...

//மகனே நீ இன்னும் தேறணும் என்று சொல்லிக்கொண்டு இருப்பது உங்கள் காதில் விழுகின்றதா?//

ஆஹா..... இது:-)))))))