Wednesday, November 17, 2004

வந்ததே 'கூ'

ஃபிஜி அனுபவம் பகுதி 17
***********************

அரசாங்கத்தை ராணுவம் கைப்பற்றிவிட்டது!!! ரேடியோவில் கேட்ட செய்தி இதுதான்! புது மந்திரிசபையினர் காவலில் இருக்கின்றனர்!அரசாங்கத்தை ராணுவம் கைப்பற்றிவிட்டது!!! ரேடியோவில் கேட்ட செய்தி இதுதான்! புது மந்திரிசபையினர் காவலில் இருக்கின்றனர்!

என்ன நடந்ததென்ற தெளிவு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கொருமுறை அரசாங்கத்தை ராணுவம் எடுத்துக் கொண்டதைப்
பற்றிய செய்தி மட்டுமே வந்து கொண்டிருந்தது!

நேரம் போகப் போகச் செய்திகள் வேறுமாதிரி உருவெடுக்கத் தொடங்கின! தலைநகருக்கும் எங்களுக்கும் இருந்த இடைவெளி வெறும்
5 மணி நேரக் கார் பயணம்தான்!

'ஃபிஜி டைம்ஸ்' என்ற நாளிதழ் ( இது ஒன்றுதான் இங்கே டெய்லி பேப்பர்! ) நடந்த விஷயத்தை முக்கியத் தலைப்புச் செய்தியாக
வெளியிட்டிருந்தது!

'கர்னல் ரம்புக்கா' என்பவர் பிரதமரையும் மற்ற மந்திரிசபை அங்கத்தினரையும் காவலில் வைத்துவிட்டு, 'நாட்டின் பொறுப்பை ராணுவம்
ஏற்றது' என்று அறிவித்திருந்தார்!

காரணம் ஒன்றும் விவரிக்கப்படவில்லை! அவ்வளவுதான். இரண்டுநாட்கள் வழக்கம்போல் கழிந்தன!

அதன்பின் எங்களுக்குக் கிடைத்த செய்திகள் வேறு மாதிரி இருந்தன. தலைநகரில், இந்தியர்களின் கடைகள் சூறையாடப் படுகின்றன.
இந்தியர்களைத் தாக்குகின்றனர். எல்லாக் கடைகளும் அடைக்கப் பட்டிருக்கின்றன என்றெல்லாம் சேதிகள் வந்தன. ஆனால் இது எதுவுமே
அதிகாரப் பூர்வமாகவோ, ரேடியோவிலோ வரவில்லை. ஆட்கள் மூலமாகவே வந்தன!

எல்லாவற்றுக்கும் ரேடியோதான்! தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்காத காலகட்டம்! அதுவுமே நல்லதாகிவிட்டது. பரபரப்பான செய்தி
என்ற முறையில், எங்கோ ஒரு இடத்தில் நடந்த அசம்பாவிதத்தை, விடாது திரும்பத்திரும்பக் காண்பித்து, சும்மா இருக்கும் மற்றவர்களையும்
உசுப்பி விட்டிருக்கக்கூடிய சாத்தியம் இருந்ததல்லவா?

இதற்குமுன், மற்ற சில நாடுகளில் ராணுவம், ஆட்சியைக் கைப்பற்றியிருந்த விவரங்களையெல்லாம் படித்தறிந்திருந்த நாங்கள் என்ன ஆகுமோ
என்று கவலைப் பட்டோம். உள்ளூர் ஆட்களுக்கு இருந்த அறியாமையின் காரணம் யாருமே இதை ஒரு பொருட்டாகவும் கருதவில்லை.

உடனே நாங்கள் தலைநகருக்கு, நம் இந்திய ஹைகமிஷனரைத் தொடர்பு கொண்டோம். அவர்களும் 'ஆபத்து ஒன்றுமில்லை. பொறுத்திருந்து
பார்க்கவேண்டும். எதற்கும் நீங்கள் கவனமாக இருங்கள்' என்று கூறினர். எங்களுக்குக் கவலையாக இருந்தது!

நம் நண்பரின் ( புது மந்திரி சபையில் இடம் பெற்றவர்) குடும்பத்தினர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றனர். விபரீதமாக
ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம் இந்தியர்களுக்கு வர ஆரம்பித்திருந்தது!

நமக்கு ( இந்தியர்களுக்கு) கொஞ்சம் கற்பனைவளம் அதிகமோ என்றுகூட சிலசமயங்களில் நான் நினைப்பதுண்டு! ஒரு 200 மைல் தொலை
விலிருந்து வரும் செய்தி, எங்களை வந்தடைந்துவிடுவதற்குள் அதற்குக் கண்ணும், காதுமட்டுமல்ல, கை கால்கள்கூட முளைத்து விடும்!!!!!
அது உண்மைதானா என்று தெரியாவிட்டாலும் கூட, ஏதோ ஒரு பதற்றம் நம்மைத் தொத்திக்கொள்ளும்!

'ஃபிஜியன்கள் எல்லாம் இந்தியர்களின் வீடு புகுந்து அடிக்கிறார்கள். நகை நட்டையெல்லாம் பிடுங்கிக்கொண்டு ஓடுகிறார்கள்' என்றெல்லாம்
புரளி கிளம்ப ஆரம்பித்துவிட்டது!

நாங்கள் இருக்கும் ஊர் எப்போதும்போல அமைதியாக இருந்தாலும், ஃபிஜியன்களைக் காணும்போது, நெஞ்சுக்குள் 'சுரீர்' என்று ஒரு
உணர்வு, அதனால் சற்று பதற்றம்! 'அகத்தின் அழகு முகத்தில் தெரிந்துவிடாதா?' நமக்குப் பழக்கமான ஃபிஜியன்களுக்கும் ஒருவிதமான
'அனீஸினஸ்' வேற்றுமுகம் பார்க்கும் குழந்தையின் உணர்வு! ஆனால் இதையெல்லாம் வெளியில் காண்பிக்காமல் சாமர்த்தியமாக
மறைக்கவேண்டும். விரோத மனப்பான்மை வரவோ, வளரவோ இடம் தரக்கூடாது என்று இரண்டு பிரிவுமே முயற்சி செய்தோம்!

அநேக இந்தியர்கள், (குடும்பத்தில் ஒரு சிலர்) கனடா, இங்கிலாந்து என்று சொந்தத்தை நோக்கிப் போக ஆரம்பித்தனர்!
'ட்ராவல் பிஸினஸ்' செய்து கொண்டிருந்த ஒரு சிலர், 'எரியும் வீட்டில் பிடுங்கினவரை ஆதாயம்' என்பது போல இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக் கொண்டனர்.

'கனடா போயிருங்க. அங்கே 'ஏர்போர்ட்டிலே என்ட்ரி விஸா ஸ்டாம்ப்' செய்யும் போதே உங்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை அந்த கவர்மெண்ட்
கொடுத்துருவாங்க. அங்கே பயிர் வச்சுப் பிழைச்சுக்கலாம். அப்பாலெ கொஞ்ச நாள் ஆனதும், இங்கே இருக்கற குடும்பத்தைக் கூட்டிட்டுப்
போயிரலாம். இங்கெ இந்த 'கைவித்தி' ஆளுங்களோட இனிமே இருக்க முடியாது!'

நேடிவ் ஃபிஜியர்களைக் குறிக்கும் வார்த்தைதான் இந்தக் 'கைவித்தி' என்பது!

இதையெல்லாம் நம்பிக்கொண்டு பலர் நாட்டைவிட்டுப் போக முயன்றார்கள். இருந்த சேமிப்பையெல்லாம் டிக்கெட்டு, மற்ற செலவுகளுக்கு
என்று செலவழித்தும், கடன் பட்டும் பல ஆட்கள் போனார்கள். போனவர்கள் எல்லாம் மூன்று மாதங்களில் திரும்பிவரவும் செய்தார்கள்!
இப்படியெல்லாம் போனவர்களில் குஜ்ஜுக்கள் யாரும் இல்லை! வியாபாரம் குறைவான நிலையிலும், பொறுத்திருந்து பார்க்கலாம் என்று
அமைதிகாத்து வந்தார்கள் அவர்கள்!

அரசாங்கத்தின் தரப்பிலிருந்து அறிக்கைகள் வந்துகொண்டிருந்தன,' இந்தியர்கள் கலங்க வேண்டாம். உங்கள் உடலுக்கோ, உடமைகளுக்கோ
ஆபத்து ஏதும் ஃபிஜியர்களால் வராது!'என்றெல்லாம்.

இந்த அமளியைப் பார்த்ததும் அண்டைநாடுகளான 'நியூஸிலாந்து, ஆஸ்தராலியா' இரண்டும் அவர்களின் தூதரகத்தைப் பாதுகாக்கவென்று
அவர்களின் கடற்படையைச் சேர்ந்த கப்பலை ஃபிஜிக்கு அனுப்பியிருந்தன!

இந்தியத் தூதரகத்தைத் தொலைபேசியில் அணுகுவதும்கூட இயலாமல் போய்விட்டது! ஒரே குழப்பம்தான்! ஆனால் நம் ஹைகமிஷனர், நம்மோடு
தொடர்புகொண்டு, 'பயப்படவேண்டாம். நீங்கள் மூவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்ட நிலையிலெ இருக்கவேண்டும். அப்போதுதான்
அவசியம் என்றால் உங்களுக்கு ( NRI) ஏதாவது உதவி செய்யமுடியும்' என்றார்!

நானும் 'இங்கே எல்லாம் வழக்கம்போல்தான் உள்ளது. தலைநகரில்தான் குழப்பம் என்று தகவல் வந்துகொண்டிருக்கிறது. ஆகவே நீங்கள்
பத்திரமாகவும் கவனமாகவும் இருங்கள்' என்று சொன்னேன்.

நாங்கள் இருந்த ஊரில் மொத்தமே 3 குடும்பம்தான் NRI பிரிவில் உள்ளவர்கள். அதில் ஒருவர் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்.
இன்னொரு குடும்பம் பேங்க் ஆஃப் பரோடாவின் மேனேஜரும், மனைவியும் இரண்டு மகன்களும். மற்றது நாங்கள்& மூணரை வயதுள்ள
என் மகள். மகள் அங்கே பிறந்ததினால் அவளுக்கு ஃபிஜி பாஸ்போர்ட் எடுத்திருந்தோம். அது ஏதாவது பிரச்சனையாகுமோ என்று பயமாக
இருந்தது!

நாங்கள் மூவரும் தினமும் எங்கள் வீட்டிலே சந்தித்து, கிடைக்கும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வோம். இதில் 'பேங்க் மேனேஜர் சொல்வது,
' எங்கள் வீட்டில் வந்து எல்லோரும் தங்கிவிடுங்கள்'என்று.

நான் சொல்வேன், ' இங்கே தான் உங்களுக்குப் பாதுகாப்பு. நம் வீட்டில் மேல்மாடியில் குடியிருப்பது ஃபிஜியன் குடும்பம்தானே. அவர்
பெயர் 'பென்னி ரம்புக்கா' என்று உங்களுக்குத் தெரியாதா? 'ரம்புக்கா' என்றால் யாரும் தொல்லை தர மாட்டார்கள்.ராணுவத் தலைவர்
'ஜெனரல் ரம்புக்கா'வின் உறவினர் என்று விட்டுவிடுவார்கள்'

இந்த கலாட்டாக்களுக்கு நடுவில், 'கர்னல் ரம்புக்கா', தனக்குத்தானே பதவி உயர்வு அளித்துக் கொண்டு 'ஆர்மி ஜெனரல் ரம்புக்கா'வாக
ஆகி இருந்தார்!

நாட்டின் நன்மையைக் கருதி அவர் செய்த முதல் வேலை, நாட்டின் நாணய மதிப்பை 20% குறைத்ததுதான்! போச்சு, எங்கள் சேமிப்பெல்லாம்
தடாலென்று இருபது சதம் மதிப்பிழந்து போனது!

தினம் தினம் கூடிப் பேசிகொண்டிருந்தோம். மற்ற வெளிநாட்டினருக்கெல்லாம் அந்தந்த அரசாங்கம் பாதுகாப்பைக் கருதி பலதும் செய்து
கொண்டிருந்த சமயத்தில், 'ஏர் இந்தியா' எங்களைக் கொண்டுபோக வரும் என்றெண்ணிக் காத்திருந்தோம்!

*************************************************************************************


2 comments:

said...

லைவ் கமெண்ட்ரி மாதிரி விறுவிறுண்ணு எழுதியிருக்கீங்க. ஒரு ரகசியம்... இங்க நாங்களும் கொஞ்சம் பயந்தபடிதான் இருக்கோம். சீனா எப்போ, என்ன செய்யபோவுதுண்ணு தெரியமாட்டேங்குது. இப்ப, அமெரிக்கா வேற அவங்களுக்குதான் சப்போர்ட் பண்ணுது.

said...

வாவ்... கிரிஸ்டோபர் சொன்னமாதிரி உண்மையிலேயே, பயங்கர பரபரப்பா - அதே அதிர்ச்சி மாறாமல் எழுதியிருக்கீறீங்க. அருமை, தொடர்ந்து எழுதுங்கள்.