Monday, November 08, 2004

நிழலும் நிஜமும்!!!!!!

அனுபவம் பகுதி 15
**********************

"இந்தியாவில் 'டாய்லெட்' இருக்கிறதா?"


"இந்தியாவில் 'டாய்லெட்' இருக்கிறதா?"

உதவியாளர் கேட்ட கேள்வி இது! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது!

"ஏன் அப்படிக் கேட்கின்றாய்?"

"ச்சும்மாதான். தெரிந்து கொள்ளுவதற்காக!"

சரி. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் என்றெண்ணி, அங்கு 'டாய்லெட்' இல்லையே என்றேன்.

இப்போது, அதிர்ச்சி அந்தப் பெண்ணுக்கு!

"உண்மையாகவா? அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?"

" எங்களுக்குப் போகவேண்டுமென்றால் இங்கே ஃபிஜிக்கு வந்துவிடுவோம்"

அதன்பின் நான் தெரிந்து கொண்ட விவரம் இது.

இங்குள்ளவர்களுக்கு ( குஜ்ஜுக்கள் நீங்கலாக) இந்தியாவைப் பற்றித் தெரிந்த விவரங்கள் எல்லாமே திரைப்படங்களின் மூலம்தான்
அதிலும் ஹிந்தி சினிமாக்கள் மட்டுமே பார்த்து அதிலுள்ளதுதான் இந்தியா என்ற முடிவுக்கு வந்திருந்தனர்!
அப்போதெல்லாம் ( அந்தக் காலக் கட்டங்களில் வந்த)சில/பல ஹிந்திப் படங்களில் ('ஜக்தீப்' என்ற தமாசு நடிகர் வரும் காட்சிகளில்)
கிராமத்து ஆட்கள் 'லோட்டா ( செம்பு) எடுத்துக் கொண்டு, வெளியே 'கடன்' கழிக்கப் போவதான காட்சிகள் நிறைய இடம்
பெற்றிருந்தன. அவைகளையெல்லாம் கவனமாகப் பார்த்து, இந்த விபரீத முடிவுக்கு வந்துவிட்டிருந்தனர் இங்குள்ள சாதாரண மக்கள்.

இவர்களுக்குத்தான் இந்தியத் தொடர்பே விட்டுப் போய்விட்டதல்லவா? இந்தக் கேள்வியை குஜராத்திகள் வீட்டில் ( அங்கும் இவர்கள் தானே
வேலைக்குப் போகிறார்கள்!) கேட்டிருக்கலாம். ஆனால் பயம்! அவர்கள் வியாபார சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பணக்காரர்கள். அங்கே
வாய் திறக்காமல் சொன்ன வேலையைச் செய்யவேண்டும் என்ற எழுதப்படாத நியதிகள்!

ஏனோ, பணக்காரர்களைப் பார்த்தால் சாதாரண நிலையில் உள்ள ஜனங்களுக்கு உள்ளூர ஒரு பயம்! முன்பு, ஒரு ஹிந்திப் படத்தில்கூட
'பணம் என்ற சுவரால் கட்டப்பட்டக் கோட்டை' என்றொரு வசனம் வந்ததாக ஞாபகம்!

நம் நாட்டிலும் சிலர், வேறு ஒருவரைக் குறிப்பிடும்போது 'அவர்க்ள் பணக்காரர்கள்' என்ற அடைமொழியோடு சேர்த்துச் சொல்வார்கள்.
பணம் என்பது ஒரு 'க்வாலிஃபிகேஷன்' என்பது போல. அவர்களிடம் உள்ள பணம் அவர்களுக்கு. நமக்கா தரப்போகின்றார்கள்?
(ஆனா என் கணவர் இப்போது சொல்வது," பணம் ஒரு 'க்வாலிஃபிகேஷன்'தான். அது இருந்தால் வேற எதுவும் தேவையில்லை"
மனுஷர் எப்படி மாறிட்டார் பாருங்க!)

அதுவேதான் இனிமேல் 'ஜாதியோ' என்றும் சிலவேளைகளில் நினைப்பேன்.

அது போகட்டும். இங்கே நம் இந்தியவம்சாவளியினர் இப்போது ஒரு ஐந்தாறு தலைமுறைகளாக வசிக்கின்றனர். அவர்களில் முதல் மூன்று
தலைமுறையினர் இங்கே பிரிட்டிஷ்காரர்களின் ஒப்பந்தத்தில் இருந்தனர். அவர்களுக்குப் பின்னே வந்தவர்கள் (பிறந்தவர்கள்) கொஞ்சம்
தலையெடுத்ததும் வேறு எங்காவது போய் வசிக்க வாய்ப்புள்ளதா என்று தேடியிருக்கின்றனர்.

இங்கிலாந்து அரசின் நேரடிப் பார்வையில் இருந்த தேசங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது. ஒரே தலைமையின் கீழ் உள்ள மற்ற நாடுகளுக்கு
'விஸா' அனுமதியில்லாமல் போய்வரக்கூடிய உரிமை இருந்த காரணத்தினால், சிலர் இங்கிலாந்து, கனடா( ப்ரிட்டிஷ்) என்று போய் அங்கேயே
நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அவர்கள் யாருமே திரும்ப இந்தியாவுக்கு வரவில்லை. அப்படி ஒரு எண்ணமே
அவர்களுக்குத் தோன்றவில்லை போலுள்ளது!

அப்போது ஆஸ்தராலியாவுக்கும் ஒரு சிலர் போயிருக்கின்றனர். நியூஸிலாந்தில் வெள்ளைக்காரர்களுக்கு 'மட்டுமே' குடியுரிமை தரப்பட்டது!
அப்படிப் போனவர்கள் தங்கள் தாய்நாடாக நினைத்தது ஃபிஜியைத்தான்!

இந்தப் பணம் காசு என்று குறிப்பிட்டேனே, இதுதான் இங்கே ராணுவ ஆட்சி வருவதற்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது!

இந்தியர்கள் வியாபாரம், விவசாயம் என்று நிறைய விஷயங்களில் ஈடுபட்டு நல்ல நிலையை வெகு சீக்கிரமே அடைந்துவிட்டனர். எல்லாம்
குறைவறக் கிடைத்தபின்னும் 'தேடல்' என்பது மனித சுபாவம் அல்லவா?

கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்கள். இந்தியர்கள் ஜனத்தொகை நாட்டின் 55% ஆயிருந்தது! நேடிவ் ஃபிஜி மக்கள்
44% இருந்தனர்! பாக்கி 1% என்ன என்று நினைக்கிறீர்களா? சீனர்கள்தான்!

இங்குள்ள 'தங்கச் சுரங்கங்களில்' வேலை செய்வதற்கு வந்தவர்களாம்! இந்தச் சுரங்கங்களை ஆஸ்தராலிய நிறுவனக்கள் மிகவும் குறைந்த
விலையில் ஒப்பந்தம் செய்து வைத்திருந்தன! இப்போதும்தான்!

அரசியல் 'பலம்' மண்ணின் மைந்தர்களுக்கும், பணத்தின் 'பலம்' இந்தியர்களுக்குமான ஒரு சூழ்நிலை உருவாகத் தொடங்கியது!
'ராத்தூ' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட 'பாரமவுண்ட் சீஃப்'கள் ஏறக்குறைய சிற்றரசர்கள் போல நடந்து கொள்ளும் முறைகளால்
மற்ற சில 'கோரோ' தலைவர்களுக்கு ஒரு அதிருப்தி உண்டாகத் தொடங்கி அது வேர் விட்டு வளர ஆரம்பித்திருந்த காலம்.

அவர்கள் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியவுடன், ஏராளமான இந்தியர்கள் அதில் பங்கேற்றார்கள். இது வரையில் ஒரே மாதிரியான
அரசாங்கமே நடந்து கொண்டிருந்தது. இப்போது மாற்றுக் கட்சி உருவானவுடன், 1987 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த மாற்றுக் கட்சி
மகத்தான வெற்றியைப் பெற்றது! புது மந்திரி சபையில் அநேக இந்தியர்கள் இடம் பெற்றனர்! நம் நண்பராகிய அடுத்த வீட்டுக்காரரும் மந்திரிப்
பதவி கிடைக்கப்பெற்றார். பிரதமர் ஒரு ஃபிஜியன் என்றாலும் அவர் 'ராத்தூ' பரம்பரையைச் சேர்ந்தவர் அல்ல!

இந்தியர்கள் எல்லாம் ஒரே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தனர்!


இன்னும் வரும்!
**************


1 comments:

said...

ஃபிஜி அனுபவம் சூப்பரா போகுது... உங்கள் நினைவிலிருந்து எழுதுகின்றீர்களா? புத்தகமெல்லாம் புரட்டி சிரமப்படுகின்றீர்களா?

அப்புறம் முன்னாள் பிரதமர் சவுத்ரி - இப்போது உள்ளேயே? வெளியேயா?