Saturday, December 18, 2004

முட்டைக் கோஸ்........!!!!!

இன்னைக்கு இங்கே ஒரு 'கிறிஸ்மஸ் பார்ட்டி!' பார்ட்டின்னு சொல்றதைவிட விழான்னு சொன்னா
பொருத்தமா இருக்கும்.



அதான் டிசம்பர் மாசம் பொறந்ததிலிருந்து நடந்துகிட்டே இருக்கே. இதிலே என்ன அப்படி விசேஷம்?

இருக்கே! மத்ததெல்லாம் பார்ட்டிங்க! ஆஃபீஸ்லே மேலதிகாரிங்களுக்கும், அவுங்க 'பார்ட்னர்'களுக்கும்
சி.இ.ஓ. கொடுக்கறது, நமக்குக் கீழே வேலை செய்யறவங்களுக்கு நாம கொடுக்கறது, பெண்களுக்கு,
ஆம்பிளைகளுக்குன்னு தனித்தனியா, அப்புறம் நாம 'வாலண்டியரா'வேலை செய்யற இடத்துலேன்னு
வித விதமானதுங்க!

பிடிக்குதோ பிடிக்கலையோ அநேகமா எல்லாத்துக்கும் போகணும். அது மட்டுமா? ஒரு பொய் முகம்வேற
போட்டுக்க வேண்டியிருக்கும். எல்லோரும் 'தீர்த்தமாடிண்டிருப்பா!' நாம எதிலும் பட்டுக்காம 'சிரிச்ச முகமா'
ஒரு ஆரஞ்சு ஜூஸையோ, மினரல் தண்ணியையோ வச்சிக்கிட்டு, எப்படா 'மெயின்' வரும். தின்னதா பேர்
பண்ணிட்டு வீட்டுக்கு ஓடலாம்ன்னு இருக்கும்.

இதுலே இன்னும் சுதி ஏற ஏற, ஸ்மால் டாக்(அபத்தமான)கேள்விங்கெல்லாம் புறப்படும். அசட்டுத்தனமா சில
பேச்சுப் பரிவர்த்தனைகள்!

'மெயின் கோர்ஸ்' வந்தாலும், மத்தவுங்க என்னென்னமோ சாப்பிடறப்ப, நம்ம 'வெஜிடேரியன் ஐட்டம்'தான்
எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்! அது நல்லா இருக்கா? நல்லா இருக்கா? அப்படின்னு ஆளு மாத்தி
ஆளு கேட்டுக்கிட்டே இருக்கும். 'ரொம்ப நல்லா இருக்கு'ன்னு ( வயிறெரிய) சொல்லணும். இதுலே பரிமாறின
ஆளு வேற, ரொம்ப அக்கறையோட, தானே சமைச்ச மாதிரி, நம்மகிட்டே வந்து 'ஸ்பெஷலா' ரெண்டுமூணு தடவை
நல்லா இருக்கான்னு கேட்டுகிட்டே இருப்பார். இதெல்லாம் இப்பப் பழகிப் போச்சுன்னு வச்சிக்குங்க.

இப்பல்லாம் ரொம்ப இயல்பா மூஞ்சியை வச்சிகிட்டு, ரொம்பவே இந்தப் பார்ட்டிங்களையெல்லாம் அனுபவிக்கறமாதிரி
இருக்க முடியுது! ரெஸ்டாரெண்ட்டிலே நுழையறப்பவே 'ஜிம் கேரி'க்கு மாஸ்க் ஒட்டிகிட்ட மாதிரி நமக்கும் வந்து ஒட்டிக்கிது!

அது போட்டும்! இப்பப் போன விழா, நம்ம கேரள சமாஜம் ஏற்பாடு செய்தது! இதுலே சமையல் எல்லாம் நம்ம 'நாடன் ஸ்டைல்'
புள்ளைகுட்டிங்கெல்லாம் கலந்து இருக்கறதாலெ 'தண்ணி' கிடையாது!

வழக்கமா ஒரு மாசத்துக்கு முந்தியே ஒரு மீட்டிங் வைச்சிருவாங்க. அப்ப என்ன 'மெனு' ன்னு தீர்மானமாகும். ஒண்ணும் விட்டுறக்
கூடாது! எல்லா வகைக்கும் சமைச்சுக்கொண்டு வரப்போற ஆளுங்களையும் முடிவு செஞ்சிருவாங்க. மொத்த செலவையும் கடைசியிலே
பங்கு போட்டுக்குவோம்.

இந்த முறை எனக்குக் கிடைச்சது'தோரன்'

பிரதம விருந்தாளியா வர்றவுங்க ஒண்ணும் கொண்டு வரவேணாம்!!!!

இந்த முறை நமது பிரதம விருந்தாளி, இங்கத்து உதவி பிரதமரே! இங்கெல்லாம் 'பந்தா'வெல்லாம் கிடையாது. எந்த விழாவுக்கும்
அரசியல்வாதிங்களை, அமைச்சர்களை,அரசாங்க அதிகாரிகளைன்னு தாராளமாக் கூப்பிடலாம். அவுங்களும் நேரம் அமைஞ்சதுன்னா
வந்துருவாங்க!

இன்னும் சொல்லப்போனா, உதவிப் பிரதமர் எங்க ஊர் எம்.பி.தான். நாமெல்லாம் இங்கே 'எத்னிக்' கூட்டங்கறதாலே, நம்ம
அழைப்புங்களுக்கு விசேஷ மரியாதையும் இருக்கு!

'டாண்'ன்னு சொன்ன நேரத்துக்கு உதவிப் பிரதமர் தானே காரை ஓட்டிக்கிட்டு வந்து சேர்ந்தார்! கறுப்பு, வெளுப்பு, சிகப்பு, பச்சைன்னு
ஏதாவது பூனைங்க படை வரும்ன்னு பார்த்தா ஒண்ணையும் காணாம்!

ச்செண்டை வாத்தியம் முழங்க ( எல்லாம் டேப் தான்!)'தாலப்பொலி'யோடு வரவேற்பு!

ஆரம்ப நிகழ்ச்சிகள் ஆனபிறகு, 'சீஃப் கெஸ்ட்' பேசினார். வழக்கமான 'அரசியல்வாதி'களின் பேச்சு. என்ன வித்தியாசம்ன்னா
இவர் பேச்சு இங்கிலீஷ்லே! அப்புறம் கலை நிகழ்ச்சிகள்! உணவு இடைவேளை!

நாமே இங்கெ, எப்பப் பார்த்தாலும் முட்டைகோஸைத் தின்னுக்கிட்டு இருக்கமே. அலுத்துப் போச்சுன்னு சொல்றவிதமா அவருக்கும்'முட்டைக்கோசு'
கொடுக்கலாம்ன்னு நானு 'முட்டைக் கோஸ் தோரன்' ஆசைஆசையா(!)கொண்டுபோயிருந்தேன்.

சாப்பிடறதுக்கு ஆசைதான், ஆனா வேற (!) ஒரு நிகழ்ச்சிக்குப் போகணும்ன்னு சொல்லி எங்க சாப்பாட்டிலிருந்து தப்பிச்சுக்கிட்டுப்
போயிட்டார்! அவருக்குக் கொடுத்துவைக்கலே!

சரின்னு உங்களுக்கு இந்த 'ரெஸிபி'யைப் போடுறேன்! 60 பேருக்கு பண்ண அளவைச் சொல்லாம, இது கொஞ்சமான அளவு.

முட்டைக்கோஸ் தோரன்
*******************

முட்டைகோஸ் பொடிப்பொடியா நறுக்கினது 2 கப்

பச்சைப் பட்டாணி (ஃப்ரோஸந்தான்) கால் கப்

காரட் மூணு இஞ்சு நீளம் ( எல்லாம் இது போதும். ச்சும்மாஒரு கலருக்குத்தான்)துருவி வச்சுக்கணும்.

மிளகாய்ப் பொடி அரைத் தேக்கரண்டி ( காஞ்ச மிளகாயைக் கிள்ளிப் போடலாம். அதை எடுத்து எறியலென்னா சின்னப்
புள்ளைங்க தப்பாக் கடிச்சிறப்போது! கவனமா இருக்கணுமில்லை. கூட்டத்துலே இது முடியுமா?)

உப்பு இதுவும் அரைத் தேக்கரண்டி போதும். வேணுமுன்னா இன்னும் சேத்துக்கலாம் கடைசியில்!

கடுகு, கருவேப்பிலை

பயத்தம் பருப்பு ( பாசிப்பருப்புதாங்க) ரெண்டு டேபிள் ஸ்பூன். மொதல்லேயே ( இன்னைக்குத் தோரன்ன்னு முடிவு செய்வீங்கல்ல,
அப்பவே) ஊறவச்சிடுங்க.

கொஞ்சம் தேங்காய் துருவல். ( எல்லாம் டெஸிகேட்டட் போதும்) ஒரு டேபிள் ஸ்பூன்.

எண்ணெய் ரெண்டு டேபிள் ஸ்பூன். மீனாட்சி அம்மா புஸ்தகத்துலெ இருக்கறது போல ரெண்டு 'முட்டை'க்கரண்டி!

செய்முறை
**********

மைக்ரோவேவ்லே ( வந்துட்டாடா, மைக்ரோவேவ்காரின்னு யாரோ அங்கெ முணங்கற சத்தம் கேக்குது!) இந்தப் பருப்பை ஒரு 3 நிமிஷம்
வேகவச்சு எடுத்துகிட்டு, தண்ணியை வடிச்சிருங்க! என்னாத்துக்கு இவ்வளோ கஷ்டம்ன்னு இருந்தா வேணாம். அப்படியே ஊற வச்சப்
பருப்பை, தண்ணியை வடிகட்டி வச்சிக்குங்க.

ஒரு வாணலியிலே, எண்ணெய் ஊத்திக் காஞ்சதும் கடுகு போட்டு, வெடிக்கவிட்டு,மிளகாய்ப் பொடி கருவேப்பிலையையும் போட்டு,ஊற வச்ச பருப்பையும்
போட்டு, ஒரு கரண்டியாலெக் கிளறுங்க.அந்த சூட்டுலேயே பாதி வெந்துரும். அப்புறம் மு.கோஸைப் போடுங்க.உப்பையும் சேர்த்துடுங்க.
இங்கெல்லாம் வேகணுமேன்னு முட்டைக்கோஸுக்குத் தண்ணியே விடவேணாம். அதுலெயே எக்கச்சக்கத் தண்ணி. பொதபொதன்னு இருக்கும்.
அதுக்குள்ளெ மைக்ரோவேவ்லே( முணுமுணுக்காதீங்க) பச்சைப் பட்டாணியை வச்சு ச்சும்மா ஒரு நிமிஷம்வேகவிடுங்க. அதுலெயே 'டீஃப்ராஸ்ட்டு'
ஆகி, வெந்தும் போகும். கால் கப்புக்கென்ன சவரட்சணை?

அதையும், துருவிவச்சக் காரட்டையும் இப்ப சேர்த்திருங்க. இன்னும் ரெண்டு நிமிஷம் வேகட்டும்.கடைசியா நம்ம தேங்காய்த்துருவல்.
அவ்வளவுதான். ரொம்பக் கொசகொசன்னு வேகாம திட்டமா இருக்கும்!

என்ஜாய் யுவர் முட்டைக் கோஸு!

பி.கு: இதை எழுதறதுக்கு எடுத்த நேரத்துலெ, செஞ்சு சாப்பிட்டே முடிச்சிரலாம்!

*************************************************************************************


1 comments:

said...

நிறைய எழுதுங்க துளசி. ரொம்ப சுவாரசியமா இருக்கு. முட்டைக்கோசு ரெசிப்பியை செய்யுறேனோ இல்லையோ, சும்மா படிக்க்க்வாவது செஞ்சேன். :D