Showing posts with label ஓணம். Show all posts
Showing posts with label ஓணம். Show all posts

Wednesday, September 02, 2009

மாவேலியை இங்கோட்டு வரான் பறயூ............

என்னைத்தேடிக்கிட்டு அங்கே போயிட்டாருன்னா? இந்த வாரம் முழுசுமே ஓணம் விழாவுக்கான ஏற்பாடுகள்தான். ரெண்டு மாசமா ப்ரின்ஸ் ஜூவல்லரி, 'புடவை தரேன்'னுக் கூவிக்கிட்டு இருக்கு. 'சரிக்கும் பறஞ்ஞால் ஈ புடவை தருன்னதுக்கு வேற ஒரு அர்த்தம் உண்டு கேட்டோ'!!! ( சிறுப்பக்காரிகள் கிட்டே கேட்டுறாதீங்க. விழும் அடிக்கு நான் பொறுப்பில்லை)

வள்ளுவர் கோட்டத்தில் ஓணம் ஷாப்பிங் திருவிழா. வாசலில் பூக்களம் பிரமாதம்.புட்டும், அப்பமும், பழம்பொரியும், ச்சாயயும், கோப்பியும் கூடி விற்பனைக்கு வச்சுருந்தாங்க.
'கேரளாவில் வீடு வாங்கிக்கோ, ஃப்ளாட் வாங்கிக்கோ, ஜாலியாப் படகு வீட்டில் போயிட்டு வா'ன்னு ஆனமட்டும் கூப்பிட்டு பார்த்தாங்க.....நாங்க அசரலை. மசாலாப்பொடிகள், தலைவலி போகும் அக்கு ப்ரெஷர், தண்ணிக்குழாயில் செருகிவச்சால் குழாயைத்திறந்து தண்ணீர் கொட்டும்போது கூடவே சுழன்றாடும் சாதனமுன்னு வழக்கமான எக்ஸிபிஷன் சமாச்சாரங்கள்தான் அதிகம். கேரளான்னு சொல்லிட்டதால் ஆயுர்வேத மருந்து, எண்ணெய், லேகிய வகைகள் சில ஸ்டால்களில்.


இன்ஸ்டண்ட் ரங்கோலின்னு சல்லடைத் தட்டு இருக்கு பாருங்க, அதுலே பலவித டிசைன். வேண்டாத இடத்தை அடைச்சுட்டா, வேண்டும் இடத்தில் கோலப்பொடி புகுந்து புறப்படுது. வெவ்வேற வர்ணம் போட்டால் ரங்.....கோ...லி.
பழம்பொரி
புட்டு


தேங்காய் நாரில் நம்ம ஆளு.நல்லாத்தான் இருந்தார். ஆனால் நான் வாங்கிக்கலை.
வெறிச்சோடிக்கிடக்கும் புத்தக ஸ்டால். அடிச்சு வெளியே துரத்திட்டாங்களோ? வெராந்தாவில் அம்போன்னு நின்னது.
கோட்டத்தில் கம்பீரமான தேர். அழகா நிக்கும் ரெண்டு யானைகள். பார்வையில்லாத மூவர் வந்து , உள்ளே போய்த் தொட்டுப் பார்க்கமுடியுமான்னு கேட்டப்ப...மனசுக்குச் சங்கடமாப் போச்சு. கிட்டே போகமுடியாதபடி தடுப்பு இருந்துச்சு. யானையைத் தொட்டுப் பார்க்க முடியலை(-:


வீட்டுலே ஆக்கித் தின்ன காலம்போய் இப்பெல்லாம் ஓணவிருந்து ஓட்டலில்தானாம். நியூஸியில் இருந்தால் இந்தச் சான்ஸ் கிடைச்சுருக்காது. எங்க கேரளா அசோஸியேஷனில் நாங்களே 21 வகைகள் சமைச்சுருவோம்.
எங்கே போகலாமுன்னு தேடுனதில் நாலைஞ்சு இடம் இருக்குன்னு தெரிஞ்சது. சஞ்ஜீவனம் போகலாம். ஆனால் ஆக்கிப்போடுவாங்களா இல்லை ஆக்காமலா? தொலைபேசி எதுக்கு இருக்கு? ஆக்கித்தானாம்.
உங்க உடம்புக்கு என்ன? எந்தெந்த உணவு சாப்பிடலாம், எப்படி ஆரோக்கியமான வாழ்வு வாழலாமுன்னு சொல்ல அங்கேயே மருத்துவர்கள் வர்றாய்ங்களாம். இந்த டிகிரியெல்லாம் என்னன்னே எனக்குத் தெரியலை. அதைப் பத்திக் கொஞ்சம் விசாரிச்சுப் பார்க்கணும்.


ரொம்பச் சாதாரணமான கட்டிடம். ஆரோக்கிய உணவு (தான்) கிடைக்குமாம்.


மூங்கில்தட்டிகள் வச்சு அலங்கரிச்ச உள் அலங்காரம். சுவரில் யானைக்கு ஒரு முகபடாம். (சீஸனல்?) சின்ன ஹால்தான். ஆனால் கூட்டம் இருந்தது. சம்பிரதாயமான ஓண சத்யா. ரெண்டு வகைப் பாயசம். சாப்பாடு ருசியும் பரவாயில்லை. ஆனால் ....சர்வீஸ்.....கூட்டம் அதிகமாயிருக்குன்னு குழம்பிட்டாங்க போல. ஒருவேளை, விருந்து 'நான் ஹெல்த் ஃபுட்' ஆனதால்.... (சீச்சீ... இருக்காது)
குடிக்கான் கிட்டிய ஜீரகவெள்ளத்தோடு கூடி 26 ஐட்டம். ஆரோக்கிய உணவுன்றதால் பருப்புக்கு நெய் கிடையாது!!!!

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஓணம் ஆசம்ஸகள்.