Thursday, August 15, 2024

முழம்போட்டு நகை வாங்கலாமாம் .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 28 )

காலையில் கண் முழிக்கும்போதே....   இன்னும் 26 மணி நேரம்தான்  இருக்குன்னுன்ற நினைப்பு வந்தது.  நேத்து ராத்ரி எட்டுமணிக்குக் கேட்சிக்கனில் இருந்து கிளம்பின பிறகு வேறெங்கேயும் கப்பலை நிறுத்தப்போவதில்லை.  முப்பத்தியேழு மணி நேரப்பயணம் மட்டுமே பாக்கின்னு மனம் கணக்கு போட்டது !
நிகழ்ச்சி நிரலைப்பார்த்தால் வழக்கம் போல் இருப்பவற்றைத்தவிர......  விசேஷ சமாச்சாரங்கள் நிறைய !  கப்பலும் மிதமான வேகத்தில்தான் போய்க்கிட்டு இருக்கு ! 
குளிச்சுத் தயாராகி ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம்.  என் கஞ்சி எனக்கு ! 
திரும்ப அறைக்கு வந்து கொஞ்சநேரம் பால்கனியில் உக்கார்ந்து கடலைப்பார்த்துக்கிட்டு இருந்தேன். அதுவும் அமைதியாகத்தான் இருக்கு !

பத்துமணி போலப் புறப்பட்டு லெக்சர் ஹால்,  அதாங்க நம்ம ஸோல்டைஸ் தியேட்டருக்குப் போறோம்.  வழியில்  என் ஃபேவ் நடன ஜோடியைப் பார்த்ததும் கொஞ்சம் சின்னப்பேச்சு.  எந்த நாடுன்னு விசாரிச்சதில் வன்கூவர்தானாம்.  வழக்கமான வாழ்க்கையிலிருந்து ஒரு ப்ரேக் ! நம்மை விசாரிச்சப்ப, நியூஸின்னு சொன்னோம்.  ஹா....  from South Pole to North Pole !!! ஒரு முறை நியூஸி வரணும் என்ற ஆசை இருக்காம்!  வாங்க வாங்கன்னு வரவேற்பு அறிக்கை விட்டேன்.  சிலபல க்ளிக்ஸ் ஆச்சுன்னு தனியாச் சொல்ல வேண்டியதில்லைதானே ?  அவுங்க பெயர் க்றிஸ்டீன்!  இதே பெயரில் எனக்கு ஒரு தோழி நியூஸியில் இருக்காங்கன்னேன். க்றிஸ்டீனைப்பார்த்தால்  என் இளவயது நினைவுக்கு வந்தது உண்மை. வெறும் முப்பத்தியேழு கிலோ! 

'I envy your body'   ன்னேன்.  உடனே ' I envy your beauty' ன்னு சொன்னாங்க:-) கொஞ்சம் வயசானவங்கதான்....ஆனால் உடம்பை ச்சிக்னு வச்சுருக்காங்க !அப்படி என்னால் வச்சுக்கமுடியலையேன்னு இப்பப் புலம்பிப் பயன் என்ன ? ஹூம்....

நம்ம  Milos Radakovich  நடத்தும் Beyond the Podium Documentry Series வரிசையில் இன்று காலமாற்றம் ! Weather, Climate & Climate Change ! 
 



இன்னிக்கு என்னமோ தியேட்டரில் கூட்டம் ரொம்பவே குறைவு... ப்ச்.... 
எதாவது செய்யணும் பாஸ் என்ற நினைப்போட தியேட்டரை விட்டு வெளியில் வந்தால்  நகைக்கடையில் நுழையறதுக்கு பெரிய க்யூ.  ச்சார்ம் வாங்க இத்தனைகூட்டமான்னு பார்த்தால்.... இல்லை..... ஸேல்  நடக்குது.  அம்பது சதம் கழிவு !  (மனசை அடக்கி வைக்கணும் ) 

வைர நகைகள் பற்றிய விளக்கங்களும்,  கண்காட்சியுமா  இதில் இன்னொரு பகுதி ! இருக்கட்டும்.  நமக்குச் சார்ம் போதும்.  நம்ம முறை வந்தப்ப.... அங்கே ஒரு பத்துப்பனிரெண்டு வைர மோதிரங்களைக் காமிச்சு இதில் அசல் வைரம் ஒன்னுதான் இருக்கு. எதுன்னு காமிங்கன்னு கேட்டாங்க. எல்லாமே ஒரே ஜொலிப்பு !  எது?  எது ?

கொஞ்சநேரம் உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேனா.... நம்மவர் கடைக்கு வெளியே போயிட்டார். பயந்துட்டாரா இருக்கும் !  கடைசியில் ஒரு மோதிரத்தைக் காண்பித்தேன்.  கடைக்காரருக்கும், நம்மைச் சுற்றி இருந்த  பயணிகளுக்கும் ஒரே ஆச்சரியம் ! 

எப்படிக் கண்டுபிடிச்சே? எப்படிக்கண்டுபிடிச்சே? ன்னு கேள்விகள் ! காதில் போட்டுருக்கும் தோட்டைத் தொட்டுக் காமிச்சேன்.  நாம் பார்க்காத வைரமா ? யார் கிட்டே ?   ஹா......

சரியான பதிலைச் சொன்னதுக்காக, இன்னொரு ச்சார்ம் எடுத்துக் கொடுத்தார் கடைக்காரர்:-)

அந்த மாடிதான் கடைவீதி என்பதால் எல்லாக் கடைகளிலும் ஸேலோ ஸேல் !  இன்றே இப்படம் கடைசி!!!!
இன்னொரு கடையில் சங்கிலிகளை இன்ச்சுக் கணக்கில் விக்கறாங்க. டேப் மெஷர் வச்சு அளந்து பார்த்துட்டு அத்தனை இன்ச்சுன்னு வாங்கிக்கலாம் !  இன்ச்சுக்கு அஞ்சுன்னு விலை.  கவரிங் நகைதான். பதினெட்டுக் கேரட்.  வேணாமுன்னு முடிவெடுத்தேன். ஆனால் நல்லா இருந்தது.  ரெண்டு முழம் வாங்கியிருக்கலாமோ ?  கடைக்காரப்பெண், வந்து பேசுனாங்க.  சவுத் ஆஃப்ரிக்கா. தமிழர். தாத்தா பாட்டிதான் தமிழ் பேசுவாங்களாம்.  (எங்க பேரனும் அப்படித்தான் சொல்லப்போறான் !!! )
கடைவீதியைச் சுத்தியடிச்சுட்டு  அறைக்குப்போனோம்.  கடலை நம்ம பால்கனியில் இருந்து பார்த்தால் ஆச்சு. கொஞ்சம் வெயிலும் வந்துருக்கே !

சுற்றறிக்கையின் படி, இன்னிக்கு நம்ம பொட்டிகளுக்கு எல்லாம் பழசை எடுத்துட்டுப் புதிய  Tag போட்டுடணும். எல்லாத்தையும்  நாம் ஊரில் இருந்து கிளம்பு முன்பே நம்ம ட்ராவல் ஏஜண்ட் அனுப்பிட்டாங்க.  கனடியன் கஸ்டம்ஸ் டெக்ளரேஷன் ஃபார்ம்  ஃபில்லப் செஞ்சுக்கணும். வரும்போது செக்கின் செஞ்ச பெட்டிகளை எல்லாம் பூட்டி, இன்றைக்கு ராத்ரி பத்து மணிக்குள்ளே  அறை வாசலில்  வச்சுறணும்.  

பொட்டி அடுக்குவது ரொம்பவே பிடிக்கும் என்பதால் நம்மவர் இந்த வேலையில்   பிஸியானார். கேபின் பேக் சமாச்சாரங்களைத் தவிர மற்ற துணிமணிகளை எல்லாம்  ஒழுங்கா மடிச்சு வச்சுட்டு, லஞ்சுக்குப் போனோம். 

டைனிங் ஹாலைத்தான் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன். தினம் பொழுது விடிஞ்சா என்னத்தை ஆக்கணும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பதுதான் வாழ்க்கையில் முக்கியம் இல்லையோ !
பழக்கடையில்  பல்லைக்காட்டும்  தர்பூசணி முகம்! கூடவே 10 !  அட ! அது என்ன பத்து ?   பத்துவருசமாச்சாம்  ஷெஃப்  இங்கே வேலையில் சேர்ந்து ! ஃப்ரூட் கார்விங்  அவர் ஹாபியாம் !  

கப்பலில்  செலவு செஞ்சதுக்குக் கணக்குத் தீர்க்கணும். கூட்டம் இல்லாத நேரத்தில்  போனால் நல்லது.  ஏதாவது இன்னும் (!) வாங்கணுமான்னு கேட்டார்.  மனசில் ஒன்னை நினைச்சுக்கிட்டு, இல்லைன்னு சொன்னேன்.  நாலாம் மாடிக்குப் போனோம்.  இதுவரை வாங்கினதுன்னு பார்த்தால்  முதல்நாள்  மகளுக்கு வாங்கின ஸ்டெர்லிங் ஸில்வர் ப்ரேஸ்லெட்தான். ஆனால் பில் தொகை நிறைய இருந்தது.  அப்புறம் பார்த்தால் நம்ம அறையில் வச்சுட்டுப்போகும்  தண்ணீர் பாட்டில்கள், காசை முழுங்கியிருக்கு ! ஏவியான் தண்ணீர் பார்த்தபோதே  பாராட்டுனேனே தவிர,  அதுக்குத் தனி விலை உண்டான்னு விசாரிக்கலை. ப்ச்....
டீக்கடை ஜன்னலில் பார்த்தால்.... ஒரு கப்பல் நம்மைத் துரத்திக்கிட்டு வருது ! 

அலாஸ்கா Time Zone இல் இருந்து  வன்கூவர் நேரத்துக்கு  மாறியாச்.  பால்கனியில் இருந்து பார்க்கும்போது  இன்னொரு க்ரூய்ஸ் கப்பலும்  கண்ணில் பட்டது.  எல்லோரும் நம்ம கூடப் புறப்பட்டவங்கதான் போல !  181020
இன்னிக்கு நம்ம தியேட்டரில்  ப்ராட்வே கேபரே !  கப்பல் பயணத்தின் கடைசி ஷோ !  நல்ல கூட்டம் ! 




ஷோ முடிஞ்சு வெளியில் வந்தால் Fond Farewell with Your Officers னு கடலோடிகள் எல்லாம் வரிசையில் ரெண்டு பக்கமும் நிக்கறாங்க. இத்தனை பேரான்னு முதலில் தோணுச்சு. ஆனாலும் இன்னும் பலர் ட்யூட்டியில் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். சில காலங்களுக்கு முன், இப்படித்தான்  கேப்டனோட பர்த்டே கொண்டாட்டத்தில்  மொத்த க்ரூவும் கலந்துக்கிட்டு இருந்துருக்காங்க... கப்பல் போய் பாறையில் இடிச்சு ரொம்ப சேதாரம் ஆச்சுன்னு சேதி வாசிச்சமே !

கேப்டன் தியோவுடனும், மற்றவர்களுடனும் சிலபல க்ளிக்ஸ் ஆச்சு !


பாரில் ஒரே கூட்டம் ! பார்டென்டருக்கு ஊத்திக்கொடுப்பதுமட்டுமே வேலை இல்லையாம் ! வித்தைகள் காட்டி  மதுப்ரியர்களை மகிழ்விக்கவும் வேணும்!
ஒன்பது மணிக்கு டின்னர். லாஸ்ட் சப்பர்னு வச்சுக்கலாம் :-)  அதே தால், அதே  பப்படம் ! டிஸ்ஸர்ட் மட்டும் வெவ்வேற :-)

ஒரு கப்பல் ஆஃபீஸர் வந்து கண்டுக்கிட்டார்.  நியூஸி வரை  வந்துருக்காராம்.  ஆக்லேண்ட் தான்.  இவுங்க கம்பெனி கப்பல்கள்தான்  உலகம்பூராச் சுத்துதே.... 
அறைக்கு வந்து நம்ம பொட்டிகளையும்  வாசலில் வச்சோம். 


தொடரும்....:-)














6 comments:

said...

பயண விரும்பிகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டீர்கள்..  மற்ற விவரங்களும் சுவாரஸ்யம்.

said...

விவரங்கள் அனைத்தும் ஸ்வாரஸ்யம். முழம்போட்டு நகை - :)

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்,

பயணங்களில்தான் எத்தனைவகை மனிதர்களை சந்திக்கிறோம் !!! சிலர் நம் நட்புப் பட்டியலிலும் சேர்ந்துவிடுகிறார்கள், இல்லையோ !!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இந்த ஊருக்கு வந்த புதிதில் இப்படி முழம்போட்டு வாங்கும் சங்கிலிகள் பார்த்து மகளுக்கு ஒன்னு வாங்கினோம். பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கும் சமயம் என்பதால், கழுத்தில் ஏற்கெனவே போட்டுருக்கும் தங்கச் சங்கிலியைக் கழட்டிடலாமேன்னு.

ஒரு சில மாசத்தில் அதன் பளபளப்பு, நிறம் எல்லாம் போச்சு. அதே கடையில் போய்ச் சொல்லலாமேன்னு போனால் அந்தக் கடையே காணோம். லைஃப் டைம் கேரண்டின்னு சொன்னது கடைக்குத்தான் !!!

அதான் இங்கே வாங்கிக்கலை.

said...

வாங்க விஸ்வச்நாத்,

நன்றி !