Friday, August 09, 2024

பூதங்களில் பெருசு......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 26 )

பஞ்சபூதங்களில் நம்மால்,  அணுகவே முடியாத ஒன்னு இந்த ஆகாயம்தான், இல்லே !  கண்ணால் பார்ப்பதோடு சரி. கிட்டே போய்ப் பார்க்கலாமுன்னா.... நாம் போகப்போக அதுவும் போய்க்கிட்டேல்லெ இருக்கு !  இதுவரை யாருமே முழுசாப் பார்க்காத ஒரு பெரிய  பூதம் !
தெரியாத சமாச்சாரங்களில்தான்  மனுஷ்யருக்கு  ஆர்வம் அதிகம். பேய் பிசாசு,  மேலோகம், சொர்கம், நரகம், கடவுள் வரிசைகளில் ஆகாயமும் உண்டு.  கண்டவர் விண்டிலர் என்பதும்  உண்மையே !
நாங்க இங்கே வந்த ஆரம்பகாலத்தில்  ஒரு பெரிய டெலஸ்கோப்புடன்  விமானம் ஒன்னு  வருகை தந்த அறிவிப்பைப் பார்த்துட்டு ஊர்சனத்தில் பாதி, ஆர்வமுடன்  ஏர்ப்போர்ட்டில் வரிசையில் மணிக்கணக்காக நின்னு உள்ளே போய்ப் பார்த்தது நினைவில் இருக்கு. Hubble Telescopeனு ஞாபகம்.
வானம் பார்க்கப்போக இப்பவும் ஆசைதான். நம்மூரில்  குளிர்காலத்தில் மட்டும் ஒரு சில வெள்ளிக்கிழமை இரவுகளில் நகரில் இருந்த (! )டௌன்ஸ் எண்ட் அப்ஸர்வேட்டரியில் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. எப்போ எப்போன்னு காத்திருந்து ஓடுவோம்.  2011 நிலநடுக்கத்தில்  ஊரில் பாதி அழிஞ்சுபோனதில்  இதுவும் போச்சு. 

இப்போ ரெண்டு வருஷத்துக்கு முன்னே  கடைசிப்பயணமாக SOFIA வந்துருந்தப்ப, இந்தக் கோவிட் சனியனால் யாருக்குமே அனுமதி கிடைக்கலை.   ப்ச்..... 
ஆனால்  ஆர்வம் நமக்கு இன்னும் இருக்கே ! அதான்  தியேட்டருக்குக் கிளம்பிப்போனோம்..  Milos Radakovich . Science Educator & Coastal Biologist for more than 50 yrs. On-board Naturalist for Celebrity Cruises நடத்தும் நிகழ்ச்சி இது.  Beyond the Podium Documentry Series.  ஏகப்பட்ட எபிஸோட்களைத் தயாரிச்சு வச்சுருக்கார் போல ! அப்பப்ப ஒன்னை எடுத்துவிட்டால் ஆச்சு !  ஆனாலும் சும்மாச் சொல்லக்கூடாது, சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்தான் ! 
நம்ம சுப்ரமண்யம் சந்திரசேகர் அவர்கள் பெயரைப் பார்த்துக் கொஞ்சம் பெருமையாக உணர்ந்தது உண்மை.  இவருடைய சித்தப்பாதான்   ஸர் சி வி ராமன் என்பதும் ஒரு சுவாரஸ்யமான தகவல்தான் !

இந்த Orion's Belt  என்னும் மூணு நக்ஷத்திரங்களுக்கு இந்தாண்டை கொஞ்சம் தூரத்தில் Southern Cross என்னும் நக்ஷத்திர அமைப்பு ஒன்னு இருக்கு. இதுதான் நம்ம நியூஸிக்கானது.  இதைத் தேடித்தான்  வெள்ளையர் வந்து நியூஸியைக் கண்டார்கள்னு  சரித்திரம் சொல்லுது. நம்ம நியூஸிக்கொடியிலும் இந்த நாலு நக்ஷத்திரங்கள் அமைப்புதான் இருக்கு ! 

ஒரு மணி நேரம் போனதே தெரியலை. ஆனால் தியேட்டரில் கூட்டம் அவ்வளவா இல்லை..... தியேட்டரை விட்டு வெளிவரும் பகுதியில் நம்ம கெஸீனோ.  ரொம்பக் கொஞ்சநேரம்தான் அங்கே   இருந்தேன் :-)

சார்ம் கலெக்ஷனுக்குப் பெரிய வரிசை ! விடப்டாது..... இல்லே ? கடிகாரக் கடை மஹேஷோடு ஒரு க்ளிக்;  மும்பைக்காரர் ! 
மழை இல்லைன்னு மொட்டை மாடிக்குப்போனோம். வாக்கிங் ட்ராக்லே நடக்கவேணாமா ? 
யார்கிட்டேயாவது கெமெராவைக்கொடுத்து ஒரு படம் எடுக்கச் சொல்லிக்கேட்டால் உடனே  எப்படிப் போஸ் கொடுக்கணுமுன்னு  சொல்லித்தர ஆரம்பிக்கிறாங்க !  கட்டிப்புடி கட்டிப்புடின்னு....
அப்படியே  ஸ்கைலவுஞ்ச்.

பைன் மரக்காடுகள்......

தண்ணீரில் என்னமோ மிதந்துவருதேன்னு பார்த்தால்.....   மரங்களைக் கட்டுக்கட்டாக  அனுப்பிக்கிட்டு இருக்காங்க. பொதுவா ஆற்றின் வழியாக அனுப்புவாங்கன்னுதான் கேள்விப்பட்டுருக்கேன்.  கடல் வழியாகவுமா ?  வேறெங்காவது போயிட்டால் .... ? ஙே....
ஊர் சமீபிக்குது போல......  ரெண்டு மணிக்குத்தான்  அங்கே போய்ச் சேருவோம்னு சொல்லியிருக்காங்க. இப்ப மணி பனிரெண்டே முக்கால்தான் !




 கரைக் காட்சிகளைக் கவனிச்சுப்பார்த்தால் ஏர்ப்போர்ட் !  ஆஹா....
Logging இங்கே பெரிய பிஸினஸ்னு தெரிஞ்சது !

நாமும் போய் பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுக் கீழே இறங்கத் தயாராகணும்தான். ச்சலோ .............  ஓஷன்வ்யூ......... டைனிங் ஹால் ஜன்னலில் பார்த்தால்....ஏற்கெனவே மூணு கப்பல்கள்  நமக்கு முன்னால் வந்து  டாக் பண்ணக் காத்திருக்கு !      
இன்னிக்கு ஜவ்வரிசிப் பாயஸம் போல ஒன்னு...... கிஷ்மு  சொன்னதைப்போல் முழுசு முழுசா முந்திரிப்பருப்பு ? ஊஹூம்.... ஸாகோ புட்டிங்.



சரியா ஒன்னே முக்காலுக்கு  கெட்சிகன் வந்துருந்தோம்.  க்ளியரன்ஸ் முடிக்க  வெறும் பத்தே நிமிட்தான் ! 
ரெண்டு அஞ்சுக்கே நாம் வெளியே வந்துட்டோம் ! எட்டாயிரத்து அறுபத்தியெட்டு சனம்தான் இங்கே வசிக்குதாம் ! நாம் அஞ்சாயிரம்  மக்கள்தொகை இருக்கும் ஊரில் குப்பைகொட்டி இருந்தோம் என்ற கணக்குப்படிப் பார்த்தால் இது பெரிய ஊர்தான் , இல்லே ?

தொடரும்........ :-)


6 comments:

said...

படங்களும் தகவல்களும் சிறப்பு.

ஜவ்வரிசி இனிப்பு - மேலே ஏதோ பிரவுன் கலர் அலங்காரம்! :)

மற்ற விஷயங்களும் ரசிக்க முடிந்தது. தொடரட்டும் பயணம்.

சார் நடைபாதையில் கடைசியில் ஒரு ஃபேஷன் ஷோ நடை நடந்திருக்கிறாரே - ஹாஹா.... ரசித்தேன்.

said...

உண்மையில் சித்தப்பா சமாச்சாரக்ம் இன்றுதான் தெரிந்து கொண்டேன்.  படங்களையும் காணொளிகளை ரசித்தேன்.  வீரப்பன் புத்தகம் படித்தபோது சந்தனக் கட்டைகளை இப்படி கட்டி, ஆற்றில் போட்டு அனுப்புவார்கள் என்று படித்திருக்கிறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

சாக்லெட் சாஸை ஜவ்வரிசி புட்டிங் மேல் அலங்காரத்துக்குப் போட்டுருக்காங்க.
சாருக்கென்ன ? கவலை இல்லாமல் வச்சுக்கும் மனைவி கிடைச்ச பாக்யசாலி இல்லையோ !!! அதான் எப்பவும் குஷியா இருப்பார் !

said...

வாங்க ஸ்ரீராம்,

எனக்கும் சித்தப்பா சமாச்சாரம் அப்பதான் தெரிஞ்சது !
ஆற்றின் வழியாக்க மரங்கள் அனுப்புவதைப்பற்றி ஏற்கெனவே கொஞ்சம் விவரம் தெரிந்ததுதான். ஆறு போகும் வழிதான் தெரியுமே ! ஆனால் கடலில் தூக்கிப்போட்டு அனுப்புவதுதான் வியப்பாக இருந்தது....

said...

ஊர் பார்க்க அழகாகவே இருக்கிறது. தொடர்வோம்.....

said...

வாங்க மாதேவி,

தொடர்வருகைக்கு நன்றிப்பா !