Tuesday, August 06, 2024

ஊர்ப்பெயரை எப்படிச் சொல்லணுமாம் ? (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 24 )

தலைநகர் உலா :-) அலாஸ்கா மாநிலத்தின் தலைநகருக்கு வந்துருக்கோம்.  ஜூ....... நௌ என்ற நகரம்.   Juneau  City. காலை ஏழரை மணிக்கு வந்துருக்கணுமாம். காமணி பிந்திப்போச்சு.  
தலைநகர் என்றபடியால்  துறைமுக அதிகாரிகளின் கெடுபிடி கொஞ்சம் அதிகம்தானாம்.  முதலில்  அவர்கள்  கப்பலுக்குள் வந்து சிலபல சோதனைகள், சம்ப்ரதாயங்கள் எல்லாம் முடிச்சுக் க்ளியரன்ஸ் கொடுத்தபிறகுதான்  நாம் வெளியே போக முடியும். அதற்கு எப்படியும்  ஒரு மணிநேரமாவது ஆகும் என்றபடியால்  ஒன்பதுக்குக்  கிளம்பலாம்னு நாம் தயார் ஆனோம். 
ப்ரேக்ஃபாஸ்ட் பொதுவா ஏழரைக்கு என்றாலும்,  காலை ப்ரம்ம முஹூர்த்த மக்களுக்காக  ஆறுமணிக்கே  டைனிங்  ஹால் திறந்துடறாங்க.  எப்படியும் காஃபி, டீ கடை இருபத்திநாலு மணிநேரமும் திறந்துதானே கிடக்கு,  இல்லையோ !

நேத்து ஆரம்பிச்ச மழை வேற இன்னும் ஓயலை.  என் கஞ்சி எனக்குன்னு போய் எடுத்துக்கிட்டேன்.  அப்புறம் க்ராய்சென்டுகளும். எல்லாம் முடிச்சுட்டு, ஜன்னலில் பார்த்தால் ....  சனம் டெக்லே நடந்து போய்க்கிட்டு இருக்கு !  வெளியே விட்டுட்டாங்க போல ! 
அறைக்குப்போய்  பாஸ்போர்ட், இன்னபிற டாக்குமென்ட்ஸ்களை எடுத்துக்கிட்டு ரெண்டாவது மாடிக்குப் போகணும்.   முந்தாநாள் ஐஸி  ஸ்ட்ரெய்ட் பாய்ன்ட் (Icy Strait Point )லே இறங்கிப்போனோமே அதே போல செட் அப்.  அறை அட்டையைக் கொடுத்தவுடன் ஸ்கேன் எல்லாம் ஆச்சு. அப்புறம் கூடுதலா ஒரு செக்கப்.  குடிதண்ணீர் பாட்டிலைத்தவிர வேறெந்தத் தீனியும், காஃபி ஜூஸ் உட்படக் கொண்டுபோகக்கூடாது !  கைக்குழந்தைகள் பால் பாட்டில்கள் மட்டும் ஓக்கே !  பொழுதன்னிக்கும் காஃபியைக் கையில் வச்சுக்கிட்டே இருக்கும் சனம்தான், கொஞ்சம் ஏமாற்றம் காண்பிச்சது.

சாயங்காலம் 6 மணிக்குள் திரும்பி வந்துறணும்.  இல்லேன்னா விட்டுட்டுப்போயிருவாங்க.

துறைமுகத்தில் நல்ல விசாலமான டெக் போட்டுருக்காங்க.  தண்ணீர்ப்பக்கம்  அங்கங்கே  Aquileans என்ற நவீன சிற்பங்கள் !  ஸ்டீல்கம்பிகளில் செஞ்சுருக்காங்க.  கருடனும் திமிங்கிலமும் சேர்ந்த கலவை ! 


சுற்றுலாப் பயணிகளை, சுவாரஸ்யமான இடங்களுக்குச் சிற்றுலாக்  கொண்டுபோய்க் காண்பிக்கும் வகையில்    வியாபாரங்கள் !  
உலகத்துலே எத்தனையெத்தனையோ சமாச்சாரங்கள் இருக்கு, பெருமைபேச..... இங்கே இந்த ஊரில் அது கலங்கரை விளக்குகளுக்காமே ! 
ஒரு பக்கம் முக்கியமான லைட் ஹௌஸ் படங்களோடு விளக்கங்களும் !  எல்லாம் சுவாரஸ்யமான சம்பவங்கள் ! ஒரு இடத்தில் நூறு பேரோடு போன கப்பல், புயலில் மாட்டிக்கிட்டு, தண்ணீரில் மூழ்கியே போச்சு.  காலநிலை சரியானபிறகு ஒரே ஒருவரின் பிணம் மட்டுமே கிடைத்ததாம்.  சம்பவம் நடந்து பத்து வருஷங்களுப்பிறகு, இன்னொரு பெரும் புயல்  அடிச்சுருக்கு.  புயல் ஓய்ந்த பின்,  கலங்கரை விளக்கக் காவலர்,  கொஞ்சதூரம் சேதாரங்களைப் பார்க்க நடந்து போயிருக்கார்.  ஒரு இடத்தில்  மூழ்கிப்போன கப்பலும்,  அதில் பயணம் செய்த மக்களும் (!)  கண்ணில் பட்டாங்களாம் !  பத்து வருஷ ஜலசமாதி !
ஒரு செல்லத்தோட சிலையைப் பார்த்ததும் அங்கே போனேன்.  பேட்ஸி ஆன் !  பேட்ஸிதான் கப்பல் பயணிகளை  ஊருக்குள் வரவேற்கும் அதிகாரியாக 13 வருஷம் சேவை செஞ்சுருக்கு ! 1929 அக்டோபர் 12 ஆம் தேதி  போர்ட்லேண்டில் பிறந்த  இங்லிஷ் புல் டெர்ரியர் நாய்க்குட்டியை, ஜூநௌ  பல் டாக்டர்  ஒருவர் தூக்கி வந்து  வளர்த்துருக்கார்.  அப்போ முதல் ஊருக்கே செல்லமாக இருந்துருக்கு !  கப்பல் வந்து நிக்கறதுக்கு, அரை மணிக்கு  முன்னாலேயே  மோப்பம் புடிச்சு ஓடிவந்து  தயாரா இருக்குமாம், பயணிகளை வரவேற்க ! இத்தனைக்கும்  பிறக்கும்போதே செவிப்புலனை இழந்தவள் வேற ! ப்ச்..... அப்பெல்லாம்  நீராவிக்கப்பல்கள்தானே ? குறித்த நேரத்துக்கு வருகை என்பதெல்லாம் இல்லைதானே !


1942 மார்ச் 30 ஆம் தேதி சாமிக்கிட்டே போன பேட்ஸிக்கு , அம்பது வருஷம் கடந்தபின் 1992 இல்  சிலை வச்சுருக்காங்க ! நன்றியை மறவாதது நாய் மட்டுமா ?  இங்கத்து மக்களும்தான் !

குலச் சின்ன கம்பங்கள்  ரெண்டு  ரொம்பவே அழகு !  ஆதிகாலத்தில் (ப்ராச்சீன்) இங்கே குடியேறிய குலத்தின் சின்னங்கள். 

அலாஸ்காவின் பாதி சரித்திரத்தை இந்த டெக்லே நின்னே தெரிஞ்சுக்கலாம் போல ! சரித்திரமுன்னதும்  நினைவுக்கு வருது,  இந்த  மாநிலத்தை  அமெரிகா, ரஷ்யாவிடமிருந்து  விலைக்கு வாங்கியிருக்குப்பா !  மொத்தம் ஆறு லக்ஷம் சதுர மைல்.  1867 மார்ச் 30 ஆம் தேதி பேரம் படிஞ்சு, (அமெரிக்கக் காசு  எழுபத்திரெண்டு லக்ஷம்  டாலர் ) கையெழுத்துப்போட்டாச்சு.   என்னமோ.... நம்ம பக்கங்களில் தவிட்டுக்கு வாங்குனாங்கன்னு சொல்றதைப்போல ஏக்கருக்கு ரெண்டு சென்ட்தானாம் ! ஹா..........

மழை இன்னும் வலுக்கும் போல.... ஊரைச்சுத்தி மலைகளும், நீருண்ட மேகங்களுமாய்......
இந்த நசநச மழையிலும்  துறைமுகப்பகுதியைச் சுத்தம் செய்யும்  பணியாளர்!  
துறைமுகப்பகுதியைக் கடந்து சாலைக்குப் போறோம்.  உலகத்தின் முதல் பெரிய லோட் மைனிங் வகைத் தங்கச்சுரங்கம்  இங்கேதானாம்!  தங்கத்தைத் தேடித்தான் பலரும் அக்காலத்தில் பயணம் செஞ்சுருக்காங்க போல !  அதெப்படி.... பலவிதமான உலோகங்கள் மண்ணில் புதைஞ்சுருக்க, இந்தத் தங்கத்துக்கு ஏன் இத்தனை மவுசு ?  ஆதி காலத்துலே தங்கத்தை எப்படிக் கண்டுபிடிச்சுருப்பாங்க ? ஙே.....
கண்ணெதிரே ஸிட்டிஹால் ! 

அடுத்தாப்லே படிப்புக்கு முக்கியத்வமா ஒன்னு ! Southeast Regional Resource Center.
அலாஸ்கா மாநிலத்தின் ஜனத்தொகையே  2022 வது வருஷ கணக்குப்படி 733583.  அதுலே இந்த ஊர்  ஜூநௌவில் 31337 !  தலைநகர் இல்லையோ ? அதான் கூட்டம் அதிகம். ஊர்னு சொன்னாலும் , நம்மூர்ப் பக்கத்துலே  பேட்டைன்னு இருக்கே அந்த   அளவுதான்.  வீதிகளில் சுத்திவரும்போது எங்கிருந்து பார்த்தாலும் நம்ம கப்பல் தெரியுது ! 
கடைத்தெருதான் ஊர் போல !  கப்பல் வரும் நாட்களில் மட்டும் வியாபாரம் கூடுதலா நடக்கும். இப்படித்தான் நாம் ஃபிஜியில் இருந்தப்ப, பக்கத்து ஊரான  துறைமுக நகரில் , கப்பல் வந்தால், அது ஞாயிறாகவே இருந்தாலும்கூட  எல்லாக் கடைகளையும் திறந்து வச்சுருவாங்க.
வேடிக்கை பார்த்துக்கிட்டே கடைகளில் புகுந்து வர்றோம்.  ஒரு தையல் கடையில் கைவேலைப்பாடு செய்த  அலங்கார விரிப்புகளும், சுவரில் தொங்கவிடும் Wall Hangers வகைகளும் கண்ணைக் கவர்ந்தன ! நார்தர்ன் லைட்ஸ்  அருமை. 

கப்பலுக்குள் வந்த முதல்நாள் சஞ்சயா கிட்டே பேசிக்கிட்டு இருந்தப்ப , நார்தர்ன் லைட்ஸ் பார்க்கமுடியும்னு சொன்னார். அப்போலே இருந்து என் எதிர்பார்ப்பு கூடி இருக்கு. நாங்க ஊரைவிட்டுப் பயணம் கிளம்புமுன்தான்  எங்கூரில் சதர்ன் லைட்ஸ் என்னும்  Aurora  தெரியுதுன்னு ஒரே அமர்க்களமா இருந்துச்சு.  முதலிலேயே சரியான விவரம் கிடைக்காததால்  நம்மால் போய்ப் பார்க்க முடியலை. சூரிய அஸ்தமனம் ஆகி மூணு, இல்லே மூணரைமணி ஆனபிறகுதான் தெரியுமாம்.  நமக்கு ராத்ரி பத்து முதல் மூணுவரைன்னு சொன்னதும், நமக்கில்லைன்னு இருந்தேன்.  நம்மூரில் இருந்து  சுமார் ஒன்னேகால் மணி நேரம் பயணிக்கணும்.  நம்மவருக்குக் கண் பிரச்சினை வந்ததுமுதல் கூடியவரை இரவுப் பயணம் வேணாமுன்னு முடிவு.

வலைவீசியதில் இந்தமாதம் 25 ஆம் தேதி அநேகமாக நார்தர்ன் லைட்ஸ் தெரியும் என்ற விவரம் பார்த்துட்டுக் காத்திருக்கேன்.  இன்னைக்குத் தேதி மே 23. இன்னும் ரெண்டுநாள்தான்...... ஒருவேளை டேட்லைன் குழப்பம் வந்தாலோ......  
 
அங்கே துணிகளும் விற்பனைக்கு வச்சுருக்காங்க.  அலாஸ்காவிற்கேயான  ப்ரிண்ட் வகைகள். (அநேகமா ச்சீனத் தயாரிப்பாத்தான் இருக்கும். உலகத்துலே யாருக்கு வேணுமுன்னாலும்  தனிப்பட்ட வகைகள் தயாரிச்சுக் கொடுக்கறது அவுங்கதானே ? ) விலை விசாரித்தால் மயக்கம்தான். பேரனுக்காக  ஒரே ஒரு மீட்டர் துணி வாங்கினோம்.  'அம்மம்மா அலாஸ்காவில் வாங்கியது'ன்னு இருக்கட்டுமே ! (இன்னும் தைக்கலை. குளிர் காலம் முடியட்டும்! )
கழுவி விட்டதுபோல் சுத்தமா பளிச்ன்னு   இருக்கு தெருக்கள்.  மழை  இல்லையோ !
கடைகளில் முக்கால்வாசியும்  கைவினைப்பொருட்கள்தான். பார்க்க அழகா இருந்தாலும்..... நமக்கு  வாங்கிக்கணும் என்று தோணவே இல்லை!!!

 கடைப்பொருட்கள் படங்களை மட்டுமே ஒரு படப்பதிவாகப் போடலாம்தானே ? 



புத்தகக்கடையில் சிறுவர்களுக்கான புத்தகங்களில் நம்ம பேட்ஸி ஆன் புத்தகமும் இருக்கு.  பேட்ஸி பெயரில்  ஒரு Educational & Scholarship Fund கூட இருக்கு !  எல்லாமே நல்லமுறையில் செயல்படுதாம் ! 

ஊருக்குள் அங்கங்கே சின்ன அளவில் குலச் சின்னங்கள்..... எல்லாம் சமீபத்து சமாச்சாரங்கள்.
மயக்கம் வேணுமானால் அதுக்கும் ஒரு கடை. இருபத்தியொரு வயசானால்தான் உள்ளே போகமுடியும் :-)
அங்கே குளிர்காலம் முடிஞ்சு வசந்தகாலம் நடப்பதால் குளிர்கால உடைகள்  ஸேலில் இருந்தன. நமக்குக் குளிர்காலம் ஜூன் முதல்தேதி ஆரம்பம் என்பதால் நம்மவருக்கு ஒரு ஜாக்கெட் ஆச்சு.

நின்னு நிதானமா நடந்து, கடைகளுக்குள் நுழைஞ்சு வந்தாலும் கூட ரெண்டே மணி நேரத்தில் எல்லாம் முடிஞ்சது போல்......



உள்ளூர் நூலகம் போனோம். அருமை !  குழந்தைகளுக்கான பகுதி சூப்பர் !  குழந்தைகளுக்கான  (பழைய )புத்தகங்கள் விலைக்கு வச்சுருந்தாங்க. ஒன்னு நம்மவனுக்கு வாங்கினோம். எல்லாம் நினைவுப்பொருள் போலத்தான்.

நூலக ஜன்னல் வழியா வெளியே பார்த்தால் ஏராளமான அறைகளுடன் பக்கத்துலே ஒரு கட்டடம்.  அது நம்ம கப்பல் :-) இன்னொரு ஜன்னலில் பார்த்தால்  மொத்தம் மூணு கப்பல்கள் வருகை புரிந்த விவரம் கிடைச்சது !

இனி வேறெங்கும் போகவேணாமேன்னு கிளம்பி வந்தோம்.  துறைமுகப்பகுதியின் இந்தப் பக்கக் கடைகள் முழுசும் தங்கத்துக்கு நேர்ந்து விட்டுருக்காங்க.   முக்கால் வாசிக் கடைகளையும் நடத்துவது இந்தியர்களே ! 
ச்சும்மா உள்ளே வந்து பார்க்கச் சொல்லி அழைப்பு.  போனதுக்காக ஒரு பரிசும்  கிடைக்கும். அதெல்லாம் நஷ்டம் வருமேன்னு யோசிக்க வேணாம். விற்பனைக்கு வச்சுருக்கும் நகை ஒன்னு வாங்கிக்கணுமுன்னா..... வீட்டை வித்துட்டு வந்துருக்கணும் .   



ஒரு கடையில் Del Sol சமாச்சாரங்கள் விற்பனையில்.  மருமகனுக்கும் குழந்தைக்கும் ஒன்னொன்னு வாங்கியதோடு நம்ம ஷாப்பிங் முடிஞ்சது.
ஒன்னரை மணிக்குக் கப்பலுக்கு வந்தாச்சு. மசாலா டீ தயாரா வச்சுருந்தாங்க.

 
தொடரும்......... :-)






6 comments:

said...

மழை பொழியும் நாட்களில் இப்படி விஸ்ராந்தியாக உலா வருவதும் மனதுக்கு இதம் தரும் விஷயம். படங்கள் அனைத்தும் அழகு.

said...

அருமை நன்றி

said...

கடைத்தெருவும் ஊரும் . புத்தகங்களும் என நன்றாக இருக்கிறது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

மனதுக்குத்தான் இதமே தவிர உடலுக்கு இல்லை.... ப்ச்.... குளிர் காற்று எதையும் ரசிக்கவிடாது....

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

ரசித்தமைக்கு நன்றிப்பா !