Saturday, August 31, 2024

அறிவிப்பு : காலவரையற்ற விடுமுறை




நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும்  ஒரு செய்தி....

இன்னொரு பயணம் ஆரம்பிக்கும்  சமயம்,  திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணம்  உங்கள் துளசிதளம் காலவரையற்ற விடுமுறை எடுத்துக்கொள்கிறது.

உடல்நிலை சரியானால் மீண்டும் சந்திப்பேன் ! 

எல்லோரும் நல்லா இருங்க!

இப்படிக்கு ,
என்றும் அன்புடன்,
உங்கள் துல்ஸி டீச்சர்.

Friday, August 23, 2024

நடுவிலே ஒரு நாளைக்காணோம் ! .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 32. நிறைவுப் பகுதி )

அஞ்சு இருவதுக்கே வன்கூவர்  ஏர்ப்போர்ட் வந்துட்டோம்.  வரும் வழியில் பறவைகள், லைன்கட்டி நின்னு போயிட்டுவான்னு சொன்னது :-)
எடைப்பிரச்சனை ஒன்னுமே இல்லை. செக்கின் பண்ணிய  எங்க ரெண்டு பெட்டிகளும் சேர்ந்தே முப்பத்தியிரண்டரைக் கிலோதான்.  மீதிப் பதிமூணரைக்கு மாம்பழம் மட்டும் இருந்தால்........... ஆஹா.....
ஒரு டீக்கடையில் இந்தியப்பெண்,  ட்யூட்டியில் ! 'நல்ல மசாலாச் சாய் போட்டுத்தரேன்'னாங்க.  உண்மையிலேயே  அருமையான ருசியில்  கொடுத்தாங்க. ஆற அமர நிதானமா ரசிச்சுக்குடிச்சோம்.  இதெல்லாமே நாம் வந்திறங்கிய நாற்பதே நிமிட்டில் நடந்துமுடிஞ்சது. இனி  ஏறக்கொறைய மூணு மணி நேரத்தைத் தள்ளணும். ச்சும்மாச் சுத்திப் பார்க்கக் கிளம்பினோம்.

Jade Canoe என்ற பெயரில் ஒரு ப்ரமாண்டமான சிற்பம்.  படகில் கூட்டமா இடம்பிடிச்சுப் போறாங்க.  இருபதடி நீளம், பதினொன்னரை அடி அகலம் & பதிமூணடி  உயரத்தில் வெங்கலவார்ப்பு !  ப்ரிட்டிஷ் கொலம்பியாவின்  அஃபீஸியல் ஜெம் ஸ்டோன்   பச்சை நிறக்கல் என்பதால்  பச்சை வண்ணம் பூசியிருக்காங்க.  இங்கே நியூஸி மவொரிகளுக்கும்  புனிதமான கல் என்பது  ஜேடு என்னும்  பச்சைதான். 
யாரோ கிளப்பிவிட்டுருக்காங்க.... இந்த சிற்பத்தைத் தொட்டுட்டு, ஃப்ளைட் ஏறினால், பாதுகாப்பான பயணமாக அமையும்னு..... சனம் விடுமோ ?  அதுவும் பத்திரமான பயணம் வேற !

கைக்கெட்டிய இடத்தில் எல்லாம் கலர் போச்சு. எலிப்பெண் மூக்கும்  காக்கைச் சிறகும் இதில் அடங்கும்! ஒரு 28 வருஷமாத்தான் சிற்பம் இங்கிருக்கு.  அதுக்கு முன்னே போன  பயணிகள் எல்லாம் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்துருக்கணுமேன்னு எனக்குப் புதுக்கவலை.  இங்கே வர்றதுக்கு முன்னே ரெண்டு வருஷம் QUEBEC, Canadian Museum of History இருந்துச்சாம்.  அஞ்சு டன் எடை ! பத்திரமாக் கொண்டுவந்துட்டாங்க  ! 

ஆண்கள், பெண்கள், பறவைகள், மிருகங்கள்னு மொத்தம் பதிமூணு பேர் அந்தப்படகில் ! இதுலே புராண, பழங்கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களும் உண்டு !  தந்திரகுணமுள்ள காக்கை, நரி, பருந்து,  தவளை, கரடிக்குடும்பம், பீவர், டாக்ஃபிஷ் மதர், மௌஸ் உமன் இப்படி எல்லோரும் கிளம்பி எங்கே போறாங்கன்னு தெரியலை.  சிற்பத்தின் அடுத்தபக்கம்  பார்க்க அந்தாண்டை போகலாமுன்னா....  படம் எடுக்க முடியாதபடி ரொம்பப்பக்கத்தில் போய் நிற்கும் இடம்தான்....ப்ச்.....  வாஷிங்டனில் இருக்கும் கனடா நாட்டுத் தூதரகத்தில் இதே போல் இன்னுமொரு சிற்பம் வச்சுருக்காங்களாம். அது கருப்பு நிறம் என்பதால் ப்ளாக் கனூன்னு பெயராம். பச்சைக்குக் கருப்பு மூணு வயசு மூத்ததாமே !

இன்னொரு இடத்தில் ஸ்பிரிட் ஆஃப் த ஸீ (Spirit of the sea)னு  ரெட் ஸீடார் மரச் சிற்பங்கள். Fog Woman & Raven.  Tlingit  இன மக்கள், இங்கே வர்றதுக்கு முன்னால் ஸால்மன் மீன்களே இங்கே இல்லையாம்.  ஃபோக் பெண்மணி வந்து,  அவுங்க இனத்தின் உணவுக்காக ஏற்பாடு செஞ்சதும்தான் இப்போ  வருசாவருசம்  ஸால்மன் மீன்கள் இங்கே வந்து  முட்டையிட்டு வம்சவிருத்தியைச் செஞ்சுட்டு இருக்குன்னும்,   காக்கை, உணவுண்ட திருப்தியில் எதுத்தாப்லே உக்கார்ந்துருக்குன்னு  ஒரு பழங்கதை !
நமக்கு மட்டும்தான் இத்தனை புராணக்கதைகள் இருக்குன்னால்.... இல்லை ! உலகெங்கிலும் இப்படிக் கதைகள் ஏராளம் !  மனுஷன்..... எங்கிருந்தாலும் மனுஷனே.... !!          கற்பனைக்கு என்ன பஞ்சம் ? 
YVR ஐச் சுத்திக்கிட்டு இருக்கோம். இது  இந்த விமானநிலையத்தின் International Code.  முதலில் புரியலை. அப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன். மார்கெட் ப்ளேஸ், மார்கெட் இப்படிப் பெயருடன் பல கடைகள். எல்லாக் கடைகளில்  மிட்டாய் சாக்லெட் விற்பனையுடன்,  ஸால்மன் டின்களும் விற்கறாங்க. இவுங்களின் அடையாளமே  சிகப்பு ஸீடாரும் ஸால்மனும்தான் போல ! 

ச்சும்மாச் சொல்லக்கூடாது.... ரொம்பவே விஸ்தாரமான  அழகான விமானநிலையம் இது.  உள்நாட்டுக் கலை & கலாச்சாரம் சொல்லும்  சிற்பக்கூட்டங்கள் ! எல்லாமே பளிச் ! சின்னக்குளத்தில் சனம் காசு தூவிட்டுப்போகுது ! விஷிங் வெல் போல விஷிங் குளம். 


நாங்களும்  நம்ம கேட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம்.  நமக்கான விமானம் வந்து காத்திருக்கு.  
இது மனக்குழப்பத்தைக் காட்டும் ஓவியம்னு நினைக்கிறேன். இருக்கும்தானே ? 
வெள்ளைக்கரடி, ஆத்துலே நின்னு  மீன்  தின்னுக்கிட்டு இருந்தது.............. லேஸர் ஷோ ?
எட்டே முக்காலுக்கு அழைப்பு வர, விமானத்துக்குள் போனோம்.  வரும்போது இருந்ததைப்போலவே Sky Couch Seats தான். காமணி தாமதமா விமானம் கிளம்புச்சு.  ஒரு பதிநாலு மணி நேரம் போனாட்டுதான் நியூஸி.  கொஞ்சநேரத்தில்   பாடாவதியா ஒரு டின்னர்.  அப்புறம்  தூக்கம்................     

படம். மேலே டின்னர். கீழே  ப்ரேக்ஃபாஸ்ட்
ப்ரேக்ஃபாஸ்டுக்கு எழுப்புனாங்க.  சோறு !  அப்படியே திருப்பி அனுப்பவேண்டியதாப் போச்சு.  ஒரு ப்ரெட் & காஃபி கொடுத்துருக்கலாம்..... ஸ்பெஷல் மீல்ஸ்ன்னாவே  அக்கிரமம்தான். இது நம்ம  ஏர்நியூஸீலேண்டில் மட்டுமில்லை.... எல்லா விமானக் கம்பெனிகளும் ஒத்துமையா இப்படியே செஞ்சுக்கிட்டு இருக்காங்க. எத்தனையோ முறை குற்றம் சாட்டியும் கண்டுக்கறதே இல்லை.... பேசாம இனி ஸ்பெஷல் மீல்ஸை நாம்தான் விட்டுத்தொலைக்கணும்.
நியூஸி ஆக்லேண்ட் வந்து இறங்கும் போது காலை அஞ்சே முக்கால். ஆனால்....புதன்கிழமை !

செவ்வாய்க்கிழமை எங்கே போச்சு ? காக்கா ஊஷ்........... டேட் லைனைத் தாண்டி வந்துருக்கோம்!
ஏர்ப்போர்ட் சாங்கியங்கள் ஆனதும்  ஷட்டில் பிடிச்சு உள்நாட்டு விமானநிலையம் வந்தோம். பெட்டிகளை செக்கின் செஞ்சுட்டு, 065744 ப்ரேக்ஃபாஸ்ட் ஏதாவது கிடைக்குமான்னு தேடுனதில்  காஃபி & டோநட் ஆப்ட்டது. அட ! நீங்களா, நீங்களான்னு நம்மூர் மக்கள் சிலரைச் சந்திச்சோம். 
நம்ம ஃப்ளைட் எட்டரைக்குத்தான். இன்ஃப்ளைட் என்டர்டெய்ன்மென்ட்னு  மக்களுக்குப் பொது அறிவை ஊட்டிக்கிட்டு இருக்கு உள்நாட்டு ஸேவை. கேள்வியும் பதிலுமாகத் திரையில் !  நம்மூர் நெருங்கும்போது சதர்ன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில்  பனி ! இன்னும் மூணுநாளில் அஃபிஸியல் வின்ட்டர் ( ஜூன் 1)    ஆரம்பிக்குதே ! 
பொட்டிக்கள் வந்து சேர்ந்தப்பப் பத்தேகால். டாக்ஸி எடுத்தால் இங்கேயும் சிங்கு !  வீட்டுக்கு வந்தப்பப் பத்தரை.  இனி கிளம்பிக் கேட்டரிக்குப் போய்ப் பயனில்லை.  விஸிட்டிங் டைம் ஓவர். 
குளிச்சு  சாமி கும்பிட்டு, சமையலும் செஞ்சு சாப்பாடானதும், கொஞ்சம் ஓய்வுக்குப்பின்  நாலுமணிக்கு நம்ம ரஜ்ஜுவைக் கூப்பிட்டு வந்தோம். வழக்கம் போல் வீட்டு இன்ஸ்பெக்‌ஷன் ஆச்சு ! நம்ம அலாஸ்காப்  பயணமும் நிறைவு & பயணப்பதிவும் முடிவு.
முக்கிய PIN குறிப்பு :-)    இந்த க்ரூயிஸ் பயணத்தைப் பொறுத்தவரைக் கொஞ்சம் இளமையும் உடம்பில் வலுவும், நல்ல ஆரோக்கியமும் இருந்திருந்தால்  இன்னும் நன்றாக அனுபவித்து இருக்கலாம். நம்மை மகிழ்விக்கவும்,  உடற்பயிற்சி மூலம் நம்மைப் பலப்படுத்தவும் ஏராளமான சமாச்சாரங்களைக் கப்பலில் ஏற்பாடு செஞ்சுருக்காங்க.  சாப்பாடு வகைகள் சொல்லவே வேணாம்.  எல்லாம் ஒரு வாழ்க்கை அனுபவம்தான். சந்தர்ப்பம்  கிடைச்சால் தவறவிடாதீங்க !

பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.  

ஆதலினால் பயணம் செய்வீர் !






Thursday, August 22, 2024

வன்கூவரைப் பார்த்து முடிச்சாச்சா ? .......(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 31 )

கண் முழிக்கும்போது ஏழேகால் !  மாலை ஏழேகால் ! சூரிய அஸ்தமனம். இதுதான்  கடைசி என்னும்போது மனசுக்குள் ஒரு மென்மை உணர்வு வந்துருதுல்லே ?  ஒரு காஃபி குடிச்சுட்டுக் கிளம்பி டேவீஸ் தெருவுக்குப் பொடிநடையில் போனோம். நல்லவேளையா மழை இல்லை.  கொஞ்ச நேரம் வேடிக்கை. 
பெரிய Dட்ரக் ஸ்டோர் ஒன்னு இருபத்திநாலு மணி நேரமும் திறந்திருக்குமாம். Icy Hot னு  ஒன்னு, நம்ம நெருங்கிய தோழியின் (மருத்துவர்)பரிந்துரைப்படி ஒரு அமெரிக்கப்பயணத்தில்  நம்மவர் வாங்கி வந்தது,  அருமையான வலிநிவாரணி ! அது நியூஸியில் கிடைப்பதில்லை.  இங்கே மருந்துக்கடையில் கிடைக்குமான்னு பார்க்கணும்.
உள்ளே போனால்  சூப்பர் மார்கெட் போல ப்ரெட், பழங்கள் இத்தியாதிகள் நிறைஞ்சுருக்கு !  நாம் தேடியதும் கிடைச்சது. ஒரு வாக்கிங் ஸ்டிக் நல்லா இருக்கேன்னு அதைவச்சு நடந்து பார்த்தேன், அப்போ நிஜமாவே அப்படி ஒன்னு வாங்கவேண்டிவரும் என்று தெரியாது, கேட்டோ  !
ஐஸ்க்ரீம் கடையில் ........ வெறும் க்ளிக் மட்டும். எங்கியாவது போய் ராச்சாப்பாட்டை முடிச்சுக்கணும்.  மலேஷியன்  ரெஸ்ட்டாரண்டுக்குள் போனோம். உள் அலங்காரம் நல்லாவே இருக்கு ! பல்லாங்குழி வச்சுருக்காங்க. ! Roti Canai சாப்பிட்டு ரொம்ப வருஷங்களாச்சுல்லெ ? அதுவே இருக்கட்டும். 



நெருங்கிய தோழி, 'சின்னமன் பன்' சாப்பிடலையான்னு  நேத்து கேட்டாங்க. அவுங்களுக்காக ரெண்டு பன் வாங்கிக்கிட்டு  அறைக்கு வந்தப்ப மணி ஒன்பதரை.

கட்டக்கடைசியாப் பொட்டி அடுக்கும் வேலையை ஆரம்பிச்சார் நம்மவர். தடா போட்டேன். நேத்துதானே பொட்டியைக் கப்பலில்  அடுக்கினோம். அதைத் திறக்கக்கூட இல்லை. எதுக்குச் சும்மாச்சும்மா.......

மறுநாள் கிளம்பறோமே.... லேட் செக்கவுட் கேட்டதுக்குப் பகல் ஒரு மணிவரை கொடுத்தாங்க.   கொஞ்சம் நல்லாத்தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கணும்னு நினைச்சுத் தூங்கப்போனால்.....  ராத்ரி மூணே முக்காலுக்குத் தூக்கம் போச்சு.   ராத்ரி நேரத்து வன்கூவர் வீதிகளில் ஒரு அமைதி.  அந்த நேரத்திலும்  அப்பப்ப ஒன்னுரெண்டு வண்டிகள் போய்க்கிட்டுத்தான் இருக்கு. இப்பவும் ஹாஸ்பிடலுக்கு எதுத்த அறைன்னாலும் ஆம்புலன்ஸ்  ஒன்னும்  வரலை..... 
ஒரு காஃபியைக் குடிச்சுட்டு வலைமேய்ஞ்சதும் அப்படியே கண்ணை இழுத்துக்கிட்டுப்போய் தூக்கம்..... எப்பவும் ரெண்டாவது குட்டித்தூக்கம்தான் சுகமான சுகம் ! 
ஏழரைக்கு எழுந்து நிதானமாக் குளியல் வேலைகளை முடிச்சுட்டு ஒன்பதுக்கு  ப்ரேக்ஃபாஸ்ட்.  தோழியை நினைவில் வச்சுக்கிட்டோம்.  படமெடுத்துத் தோழிக்கும் அனுப்பினேன் :-)
ஒருமணிக்குச் செக்கவுட் செஞ்சுட்டுப் பெட்டிகளையெல்லாம்  கீழே கொடுத்துட்டு மெதுநடையில் பக்கத்துக் கடைக்குப் போனோம். நம்மவருக்கு இருநூறு கிராம் :-) எனக்குப் பசி இல்லை.  ஒன்னும் வேண்டியிருக்கலை. 
 
நம்மூருக்கும் வன்கூவருக்கும் விலைவாசி எப்படின்னு நோட்டம் பார்த்தேன். ப்ச்.... ஏறக்கொறைய எல்லாமே டபுள் விலை. பொதுவா நியூஸிதான் எக்ஸ்பென்ஸிவ் னு சொல்வாங்க. இங்கே  எல்லாமே டபுள் டபுள் !
போதும் வயித்தெரிச்சல்னு  கொஞ்ச தூரத்தில் இருக்கும்  ஆர்ட் கேலரிக்குப் போனால்  மூடிக்கிடக்கு.......    போகட்டுமுன்னு  அந்தச் சதுக்கத்தில் கொஞ்சம்  சுத்துனோம். ராவ், மசாலா பூனை விக்கறாராம் !  சோம்பேறிச் சிங்கம் கூட இருக்காம் !   பிழைப்புக்கு என்னெல்லாம் செய்யவேண்டி இருக்கு பாருங்க.... 

நம்மூர்லெ இல்லாத ஒன்னு அங்கே தாராளமாக்கிடைக்குது !
நியூஸியில் சமீபத்துலேதான்  (ஏப்ரல் ஒன்னு, 2020. ) இது சின்ன அளவில் இருக்கும் மருந்து வகைகளுக்கு அனுமதி கொடுத்துருக்காங்க. இதுக்கே  நாங்க , மக்களை முட்டாளாக்கிட்டாங்கன்னு மூஞ்சைத்தூக்கி வச்சுக்கிட்டு இருக்கோம்......

பஸிஃபிக் சென்டர்னு  அடுத்தப்லெ இருக்கும் ஷாப்பிங் சென்டருக்குப் போனோம்.  கையில் இருக்கும் நேரத்தைக்கொல்லணுமே !  நமக்கு ஃப்ளைட் ராத்ரிதான். ஏழு மணிக்கு ஏர்ப்போர்ட்டில் இருந்தால் போதும். 
துணிகள்  நிறமும் டிசைனும் ஒன்னும் நமக்குச் சரிப்படலை.  குழந்தைக்கு ஏதாவது தேறுமான்னு பார்த்தால் நல்ல ப்ரிண்ட் போட்டதுலே சைஸ் சரியாக் கிடைக்கலை.  அவனுடைய சைஸில் இருந்தது ரொம்பவே சுமார்..... ப்ச்...வரவர காசுக்கு மதிப்பில்லாமப்போகுதுன்னு தோணும் வகையில் ஒரு உடுப்பு. $798 . இதுக்கா இவ்வளவு? என்னமோ போங்க.........


ஒரு கடையில் ஸேல்ஸ் அசிஸ்டன்ட்டாக இருக்கும்  ஸ்ரீலங்கன் பெண்ணுடன் கொஞ்சம்  பேச்சு. தமிழ்ச்சங்கங்கள் எல்லாம் ரொம்ப நல்லாவே இயங்குதாம். பிள்ளைகள் பெரும்பாலும் வீட்டில் தமிழ் கதைக்கின்றனராம். கேக்கும்போதே மனசுக்கு நிறைவாக இருந்தது உண்மை. பொண்ணோட பெயர் அத்தினி ! எனக்குத் தெனாலி ஞாபகம் வந்தது !

நாலே முக்கால்தான் ஆச்சு. ஆனால் எனக்குத்தான் பொறுமை இல்லை. போதும் விண்டோ ஷாப்பிங். 
ஷெராட்டன் வந்து பொட்டிகளை எடுத்துக்கிட்டு டாக்ஸி பிடிச்சோம் ஏர்போர்ட்டுக்கு !

வன்கூவரைப் பார்த்தது போதும்...........

தொடரும்........... :-)