Thursday, March 21, 2024

கடைசிக்கு முந்தினது...... ஹிஹி.....

சனிக்கிழமைக்குன்னு சில கடமைகள் எப்பவும் உண்டு. அதுலே ரொம்ப முக்கியம்...... நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குப் போய்க் கும்பிட்டு வர்றது ! 
பொதுவா சனிக்கிழமை சாயந்திரம் ஆரத்திக்குத்தான் போவோம் என்றாலும், எல்லா விழாக்களையும் இங்கே சனிக்கிழமைக்கு நேர்ந்து விடறதான்  வழக்கமாச்சே !   விழாக்களுக்குப் போக வேண்டியதா இருந்தால், காலையிலேயே கோவிலுக்குப் போயிட்டு வந்துருவோம். கல்யாணம் உட்பட....... எல்லாமே சனிதான் ! ஞாயித்துக்கிழமை ஒரு விழாவையும் வைக்கறதில்லை.  ஓய்வு நாள் !
இன்னும் தாமோதரமாசம்  முடியலை என்பதால் நெய்விளக்கேத்தி சாமி கும்பிட்டுட்டு வந்தோம். காலை நேரத்தில்  நாலரை முதல் பகல் ஒன்னுவரை கோவில் திறந்து இருப்பது நமக்கும் வசதியாகத்தான் இருக்கு !
Aotearoa Tamil  என்ற பெயரில் ஒரு தமிழ் நூலகம் வச்சுருக்கோமுன்னு முந்தி சொல்லியிருந்தேனில்லையா ? அதுலே  ஏராளமான புத்தகங்கள் சேர்ந்துருக்கு.  இந்த Aotearoa  என்பது,நியூஸிலாந்தின்  மவொரிப் பெயர். புத்தகங்களை  எடுக்கவும்,  திரும்பிக்கொடுக்கவும் சரியான ஏற்பாடுகள் ஒன்னும் செய்ய முடியாமல் தவிச்சுக்கிட்டு இருந்தோம். பொது நூலகத்தில் இடம் கேட்டுப்பார்த்தோம். இப்போதைக்கு இல்லைன்னுட்டாங்க. நாம்தான் கொஞ்சம் பின்தங்கிட்டோம்.... சீனர்கள் சில வருஷங்களுக்கு முன்னேயே அவர்களுக்கான தேவைகளையெல்லாம் நடத்திக்கிட்டாங்க. அங்கே ஒரு ஷெல்ஃபில் ஹிந்திப்புத்தகங்கள் கூட இருந்ததைப் பார்த்துருக்கேன். 

யாராவது பொறுப்பேத்துக்கிட்டு அவுங்க வீட்டில் வச்சுக்கறோமுன்னு சொன்னாலும்,  அதுக்கான நேரம் இருதரப்பிலும் ஒதுக்கிப் போய் வர்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.  பொது இடமா இருந்தால் நல்லதுன்னு  தேடினோம். கடைசியில்   இன்னொரு பேட்டையில் (பக்கத்து மாவட்டம்)தனியார் கூடத்தில்  கொஞ்சம் இடம் தர்றோமுன்னு சொன்னாங்க.  அங்கே  ஒரு சின்ன அறையில் புத்தகங்கள் வச்சுக்க அலமாரிகளும் இருக்கு.  மாசத்தில் மூணாவது சனிக்கிழமைகளில்  பகல் 11 முதல்  மூணுவரை  லைப்ரரி நடத்திக்க ஏற்பாடு.  

 ஏற்கெனவே கடன் வாங்கிய புத்தகங்களைத் திருப்பிக்கொடுத்துட்டுப் புதுப்புத்தகங்களை வாங்கிக்கணும்னு  கோவிலில் இருந்து நேரா அந்த ஹாலுக்குப் போனோம். சுமார் 14 கிமீ தூரம். அங்கிருந்து நம்ம வீடு ஏழரை கிமீதான்.  
அங்கே போனால் அப்பதான்   அன்றைய நாளுக்கான நூலகப் பொறுப்பில் இருக்கும் நண்பர் கதவைத் திறந்து உள்ளே போறார். கூடவே அவர் குடும்பமும் !  புத்தகங்களைக் கொண்டுவந்து ஹாலின் ஒருபக்கம் காட்சிக்கு வைக்க நம்மவர் உதவினார்.  இன்னொரு நண்பர் குடும்பமும் வந்தாங்க,  ஊரில் இருந்து வந்துருக்கும் பெற்றோர்களுடன் !  கொஞ்ச நேரத்தில்  இன்னொரு நண்பரும்  குழந்தைகளுடன் வந்தார். அட! பத்துப்பேருக்கு மேலே  சேர்ந்தாச்சு !  எல்லோருமாச் சேர்ந்து  சட்னு வேலை முடிச்சோம் !









போனமாசம் யாருமே வரலையாம்.  பகல் 11, அதுவும் ஞாயிறன்று என்றால்  பொதுவா வீட்டில் பெண்களுக்குக் கஷ்டம்தான். லீவுநாள்! சிறப்புச் சமையல், வீக்கெண்டுக்கு ஒத்திப்போட்ட வீட்டுவேலைகள்னு  இருக்கும்தானே ? 
நேரப்பிரச்சனையைச் சொல்லி, பகல் ரெண்டு முதல் நாலரை/ அஞ்சு மணிவரைன்னா கொஞ்சம் சுலபமா இருக்கும் என்ற என் யோசனையைச் சொல்லி வச்சேன். பகல் உணவு முடிச்சுட்டுக் கொஞ்சநேரம் வந்துபோவது பிரச்சனையா இருக்காதுன்னு தோணுது.

நம்ம நண்பர்கள் எழுதிய புத்தகங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கு என்பது உண்மை !

நமக்கு வேண்டிய புத்தகங்களைக் கடன்  வாங்கிக்கிட்டு வீட்டு வந்து சிம்பிளா ஒரு  லஞ்ச் ஆச்சு. எல்லாம் இது போதும். ராத்ரிக்கு விருந்துக்குப் போறோம். என்ன விசேஷமாம் ? வேறென்ன.... தீபாவளிதான்!

சிடாவின் தீபாவளி !  இந்தியத் தமிழர்களின் சங்கம் ! விழா,  மாலை அஞ்சரைக்குன்னு  சொல்லி இருந்தாலும்,  அஞ்சரைக்கு ஆரம்பிக்காது.  இது இந்தியர்கள் விழா இல்லையோ.....  தேசிய குணத்தை விடமுடியுமா சொல்லுங்க !  நாங்களும்  பல இந்திய விழாக்களுக்குச் சரியான நேரத்தில் போய் தேவுடு காத்து நின்னதெல்லாம்  சோகக்கதைகள் இல்லையோ !  இனி  நீரோட்டத்தில் கலக்க, இந்திய /தமிழ் விழாக்களுக்கெல்லாம்  நிதானமாக் கிளம்பிப்போகணுமுன்னு  முடிவு செஞ்சுருந்தோம். 
நேத்து விட்டுவச்சக் கொலுப்படி  வேலையை ஆரம்பிச்சோம். நேத்து கொஞ்சம் விவரம் கடைசியில் பிடிபட்டுப்போனதால்.... ரெண்டரை மணி நேரத்தில்  படிகள் ஸ்டேண்ட் முடிஞ்சது.  இனி பலகைகள் அடுக்கணும்.  அதை நாளைக்குப் பார்க்கலாம்!

மகளும் ஊரில் இருந்து திரும்பிட்டதால், அவள் குடும்பமும் விழாவுக்கு  வர்றதாச் சொல்லியிருந்தாங்க. நாங்கதான்  விழா ஆரம்பிக்கும்போது தகவல் அனுப்புவோம். அப்போ கிளம்பி வந்தால் போதுமுன்னு சொல்லிவச்சுருந்தோம்.
நாங்க அஞ்சரைக்குக் கிளம்பி  பக்கத்துமாவட்ட 'தலைடவுன்' லே கட்டி விட்டுருக்கும்  ஈவண்ட் சென்டருக்குப் போக அரைமணி ஆச்சு.  செல்வின் திவாலி பதிவில் சொல்லியிருந்த இடம்தான். மிகப்பெரிய ஹால் இது ! 
அழைப்பிதழில் மெனு போட்டுருந்தாங்க.  அசைவ சாப்பாடு !   ரொம்பவே மலிவு என்பதால், அங்கத்தினர் இல்லாத  நம் மக்கள் ஏராளமா வந்துருந்தாங்க.  முதலிலேயே டிக்கெட் வாங்கிக்கணும்.  எத்தனை பேருக்கு,  சமையல் செய்யணும் என்ற எண்ணிக்கை வேணுமில்லையா ? 


வெளியே கூடாரம் போட்டு சமையல் நடந்துக்கிட்டு இருக்கு.  ஆக்லாந்து நகரில் இருந்து வந்திருக்கும் சமையல் கலைஞர்கள் !  டீயும் வெங்காயப்பக்கோடாவும்  உள்ளே தீரத்தீர அனுப்பிக்கிட்டு இருந்தாங்க. 
விழா ஆரம்பிக்க ஆறரை ஆச்சு.  மூத்த குடிமகளா, குத்துவிளக்கேத்தி விழாவை ஆரம்பிச்சு வைக்கும் வாய்ப்பு நமக்கு ! நீராரும் கடலுடுத்த நிலமடந்தை...... தமிழ்த்தாய் வாழ்த்து பாடினோம்.  ஏழுமணிக்கு மகள் குடும்பம் வந்தாங்க.





தலைவர் பேச்சு, நடனங்கள், தமிழ்ப்பள்ளிக்கூட ஆசிரியரின் அறிக்கை இப்படி எல்லாம்  நடக்குபோதே  எட்டுமணிக்கு டின்னருக்கு ஹால் ரெடியாச்சு. நம்மவர் வழக்கம்போல்  சாப்பாடு விளம்பப் போயிட்டார்.  நான் குழந்தையைப் பார்த்துக்கிட்டேன். மகள் குடும்பம் போய் சாப்பிட்டு வந்தாங்க. மேடை நிகழ்ச்சி ஒருபக்கம் போய்க்கிட்டே இருக்கு !  சரியா நம்மூர் கல்யாண ரிஸப்ஷன் போலதான் :-)இண்டியன்  டா  !!!!



85 % கூட்டம் அசைவத்துப் போயிட்டதால்  நம்ம சைவப்பகுதி காத்தாடிக்கிட்டு இருந்தது. 

எல்லாம் முடிய மணி ஒன்பதரை.  நாங்க கிளம்பிட்டோம்.  சங்க நிர்வாகிகள்  ஹாலைச் சுத்தப்படுத்திட்டு வர பதினொன்னு ஆச்சுன்னு அப்புறம் கேள்விப்பட்டேன் !

உங்களுக்கொரு நற்செய்தி............

இனி ஒரே ஒரு தீபாவளிதான் பாக்கி !!!!



4 comments:

said...

கடைசிக்கு முந்தினது... :)

தீபாவளி கொண்டாட்டங்கள் நன்று.

கொலுப் படி நன்றாக இருக்கிறது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

கொலுப்படி இடத்தை ரொம்பவே எடுத்துருச்சு ..............

said...

கிருஷ்ணா தரிசனம், விழா, லைப்ரரி, விழாக்கொண்டாட்டம் என நல்ல நிகழ்வுகள்.

தீபாவளி தொடர் விழா.....வருகிறோம்.

said...

வாங்க மாதேவி,

நீங்க தொடர்விழா என்றது ரொம்பச் சரி. போறபோக்கைப் பார்த்தால் அடுத்த தீபாவளிவரை தொடரவும் சான்ஸ் இருக்கு :-)