எங்க ஊருக்குப் புது சரித்திரம் இருக்கு ! உண்மையில் ஊருக்கு வயசு 168 ன்னாலும்.... புது சரித்திரத்தின்படி இப்போ 13 தான், கேட்டோ !
அதெப்படி ?
2011 நிலநடுக்கம் வந்து ஊரில் பாதிக்குமேல் அழிஞ்சு போச்சு. அப்போ அழிஞ்ச பகுதியெல்லாம் வெள்ளையர் இங்கே வந்து கால் குத்தியதும் கட்டிவிட்ட கட்டடங்களே பெரும்பாலும்! 1856 இல்தான் நம்மூருக்கு நகரம் என்ற அந்தஸ்து மஹாராணி விக்டோரியா அவர்களால் தரப்பட்டது. அதுக்கும் ஆறு வருஷங்களுக்கு முன்னே இங்கிலாந்து மக்கள் நாலு கப்பல்களில் கிட்டத்தட்ட ஆறுமாசம் பயணம் செஞ்சு புது நாட்டில் குடியேறுனாங்க. கப்பல் வந்து நின்ன இடம் க்றைஸ்ட்சர்ச் என்ற ஊர். (நம்மூர்தாங்க. ) இப்ப நம்மூருக்கு வயசு 168. நாங்க 150 கொண்டாடுனது இங்கே !
https://thulasidhalam.blogspot.com/2006/07/150.html
ஒரு சர்ச்சைக் கட்டிவிட்டு, அதைச் சுத்தி நாலுபக்கங்களிலும் விஸ்தாரமா மாடவீதி அமைச்சாச்சு. ஃபோர் அவென்யூன்னு பெயர். இதுக்குள்ளே இருக்குமிடம்தான் நகரம். தேவையானவைகளுக்குக் கட்டடங்களாக் கட்டிவிட்டாங்க. எல்லாம் கல்லுக்கட்டடங்கள்தான் என்றாலும் அந்தக் காலத்துலே ஏது சிமெண்ட்டும் காங்க்ரீட்டும்? அப்போ வெறும் சுண்ணாம்புக் கலவையில் கட்டுனாங்களோ என்னவோ !
அதுலே பாருங்க...... நியூஸிலாந்து என்ற நாட்டுக்கு வெள்ளையர் வந்து குடியேறி செட்டில் ஆன சமயத்தில், இந்தப் பகுதிகள் ஃபால்ட் லைன் எனப்படும் பூமித்தட்டுகளுக்கு மேலே இருக்குன்றதெல்லாம் யாருக்குத் தெரியும் ? போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு எரிமலைகளும் ! வந்தாச்சு, ஊரை நிர்மாணிச்சாச்சு. குடியேறி வாழ்க்கை நடத்தவும் தொடங்கியாச்சு.
அதுவரை கப்சுப்னு இருந்த பூமித்தாய், தன்னுடைய இன்னொரு முகத்தைக் காட்டுனது 1855 லே ! ரிக்டர் ஸ்கேலில் 8.2 அளவு ! அந்தக் காலக்கட்டத்தில் அவ்வளவா மக்கள் இங்கே இல்லாததால் ஓரளவு தப்பிச்சாங்க.
நம்முர்லேயும் 2010 செப்டம்பர் மாசம் ஒரு நிலநடுக்கம் வந்து எட்டிப் பார்த்துட்டுப் போச்சு. ஒரு வீட்டுலே இருந்த புகைபோக்கி(சிம்னி) உடைஞ்சு விழுந்துச்சு. அம்புட்டுதான். எண்ணி அஞ்சே மாசத்தில் இன்னொரு நிலநடுக்கம் ! ஏற்கெனவே வந்து பூமியை இளக்கி வச்சுட்டுப் போனதையெல்லாம் போட்டுத்தள்ளிருச்சு. பொலபொலன்னு எல்லாம் சரிஞ்சே போச்சு ! மிச்சம் மீதி இருந்ததை அடுத்த நாலாம் மாசம் இன்னொன்னு வந்து உலுக்கினதும், சென்ட்ரல் ஸிட்டி...... நகரம் காலி :-(
இடிபாடுகளை அகற்றவே மூணு வருஷம் ஆச்சுன்னு சொன்னால் நம்பறமாதிரியா இருக்கு ? ஆனால் அதுதான் உண்மை.
அப்புறம் திட்டம் போட்டு, மெல்ல மெல்ல உருவானது, இப்போ இருக்கும் நகரம். 2011 ஃபிப்ரவரி வரை பழைய சரித்திரம் & 2014க்கு அப்புறம் புது சரித்திரம். ஓக்கேவா !
புது சரித்திரத்தில் முதலில் கட்டுனது எங்க பொது நூலகம் (Central Library)பெயருக்கு ஏத்தாப்ல சிட்டி சென்டரில் கட்டியாச்சு. பத்தாயிரம் சதுர மீட்டர்.நாலு மாடி.ஏகப்பட்ட வசதிகளோடு திறந்து வச்சது, இப்போ ஒரு ஆறு வருஷத்துக்கு முந்திதான், 2018லே.
இங்கே ஒரு சுவாரஸியமான சமாச்சாரம், 7m-long touch-sensitive Discovery Wall offering an interactive digital picture of Christchurch. வருஷத்துக்கொருமுறை Photo Hunt ன்னு நகரின் பழைய படங்களை அனுப்பச் சொல்லிக் கேட்பாங்க. பழைய சரித்திரத்தில் நகர் எப்படி இருந்ததுன்னு புது மக்களுக்கும் தெரியணுமா இல்லையா ? நான்கூட பழைய ஃபோட்டோ ஆல்பத்துலே இருந்து கொஞ்சம் படங்களை எடுத்து அனுப்பினேன். தோழி இங்கே வேலை செய்வதால் அவுங்க வந்து வாங்கிட்டுப்போனாங்க. அங்கே ஸ்கேன் செஞ்சு டிஜிட்டலா மாத்தி டிஸ்கவரி சுவத்துலே போட்டாங்க. பங்கெடுத்ததுக்கு பரிசாக ஒரு புத்தகம் அனுப்பினாங்க. இப்ப நாமே டிஜிட்டல் படங்களாக நேரடியா அனுப்பிடலாமாம். இந்த வருஷமும் கேட்டாங்க. எனக்குத்தான் பழைய ஆல்பங்களில் தேடி எடுக்க நேரமில்லாமல் போச்சு. ஏகப்பட்ட ஆல்பங்கள். அப்பெல்லாம் இந்த டிஜிட்டல் கேமெரா வரலை பாருங்க. 'ஃப்ல்ம் ரோல் வாங்கிப் படமெடுத்து, ப்ரிண்டுக்குக் கொடுத்து, ஃபோட்டோ ஆல்பங்கள் வாங்கி'ன்னே காவாசி சொத்தைக் காலி பண்ணி இருக்கேன்! பாவம்.... நம்மவர்.
சரி.... இப்பத் தென்னைமரத்தை விட்டுட்டு, அதுலே கட்டுன பசு மாட்டைப் பத்திச் சொல்லணும். ஹாஹா.....
இந்த லைப்ரரியில் இன்றைக்குத் தீபாவளிக் கொண்டாட்டம். அதுக்குத்தான் போய்க்கிட்டு இருக்கோம். நாஞ்சொல்லலை.... 'திவாலி இப்போ ரொம்பவே பிரபலமாகி வருது..... நாடு முழுக்க அங்கங்கே கொண்டாடறாங்க, எங்க பார்லிமென்டிலும் கூட'ன்னு ! அது லைப்ரரியையும் விட்டு வைக்கலை. அதான் கம்யூனிட்டி ஹால்னு இடம் வச்சுருக்காங்களே!
இது நம்ம பண்டிகை என்பதால் நம்மாட்களுக்கு அழைப்பு அனுப்பி ஏற்பாடு செய்யச் சொல்லிட்டாங்க. ரேவதி பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் என்ற நடனப்பள்ளி நடத்தும் தோழி கலை நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பேத்துக்கிட்டாங்க. வேற கிளை நூலகத்தில் வேலை செய்யும் தோழிக்கும், இன்றைக்கு இங்கே ட்யூட்டி !
நடனமும் பாட்டும், திவாலியை நம்ம பக்கங்களில் எப்படிக் கொண்டாடுவோம் என்ற பேச்சுமா நிகழ்ச்சி ஆச்சு. என்னதான் சொல்லுங்க.... நம்ம பசங்களை பரதநாட்டிய உடையில் பார்க்கும்போது செல்லம்போல இருக்காங்கதானே ?
தீவாலின்னா விளக்கு இல்லாமலா ? சைனீஸ் லேன்டர்ன் மாதிரி திவாலி லேன்டர்ன் செய்யும் ஆக்டிவிட்டி வேற பசங்களுக்கு!
ஏற்பாடு செஞ்ச தோழிகளைப் பாராட்டி நாலு வார்த்தை சொல்லிட்டுக் கிளம்பி பார்க்கிங் கட்டடத்துக்கு 'நடந்து' வந்தோம். வர்ற வழியில்தான் க்றைஸ்ட்சர்ச் நகரின் பெயருக்குக் காரணமான கதீட்ரல் இருக்கு. நிலநடுக்கத்தில் போனதுதான். நிறைய தகராறு ஆகி, இப்பத்தான் ரிப்பேர் வேலைன்னு திரும்பக் கட்டிக்கிட்டு இருக்காங்க. இதைப் பத்தியெல்லாம் நம்ம துளசிதளத்தில் புலம்பியே 13 வருஷமாச்சு.
இன்னும் நகரின் மீள் உருவாக்கம் முழுசுமா முடியாத நிலையில் அங்கங்கே இருக்கும் வெற்றிடங்கள், கண்ணைக்கடிக்காத வகையில் படங்களையும், ஓவியங்களையும் சிட்டிக்கவுன்ஸில் அங்கங்கே வச்சுருக்கு. ஆனால்..... க்ராஃபிட்டி என்ற வேண்டாத ஆர்வமுள்ள விஷமிகள் அதையும் விட்டுவைக்கலை. அலங்கோலப்படுத்துதல் அவர்களுக்கு வேடிக்கையாம்.... என்னத்தைச் சொல்ல..... எனக்கு மட்டும் ரைட்ஸ் கொடுத்தால்.... அதுகளைப் பிடிச்சு......... ஒரு வழி.... பண்ணிறமாட்டேனா....
சரி... வீட்டுக்குப்போய்க் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டுக் கிளம்பலாம்.
எங்கே ?
இன்னொரு திவாலிக்குத்தான்.....
6 comments:
எத்தனை எத்தனை திவாலிகள் !!!!!
விழாக்களும் கலை நிகழ்ச்சிகளும் என நன்றாக உள்ளது. கலை நிகழ்ச்சியில் சிறுசுகளின் அலங்காரங்கள் பார்க்கும்போதே சூப்பர். வாழ்க கலை.
பழமையும் புதுமையும். தகவல்கள் அறிந்தேன்.
அடுத்த கொண்ட்டாட்டம் - காத்திருக்கிறேன்.
மீண்டெழுந்து வரலாறு சுவாரஸ்யம். வாழ்க முயற்சி.
வாங்க மாதேவி,
குழந்தைகள் கொள்ளை அழகுப்பா !
இதுக்காகவே முடிஞ்சவரை எல்லா விழாக்களுக்கும் போயிருவேன் !
வாங்க வெங்கட் நாகராஜ்,
கண்முன்னே வீழ்ச்சியும் எழுச்சியும்னு சொல்லணும் !
வாங்க ஸ்ரீராம்,
பழமையோடு இருந்த நகர், இப்போ நவநாகரிகமா இருக்குன்னாலும், மனசுக்கு ஒட்டலை.
ப்ச்......
Post a Comment