Monday, March 18, 2024

வீட்டுக்கு வாங்க, டீ குடிக்கலாமுன்னு கூப்பிடலாமா ?

மகள் ரெண்டு செல்லங்களை வளர்க்கிறாள்.  அவுங்க ஊரில் இல்லாதப்ப நாங்க காலையில்  போய்  பசங்களுக்குச் 'சோறு ' போட்டுட்டு வருவோம். சாயந்திரம், ஒரு  பெண் போய், சாப்பாடு கொடுத்துட்டு,  லிட்டர் ட்ரே எல்லாம் சுத்தப்படுத்திட்டுப் போவாங்க. அதுக்குத் தனியா கட்டணம் அடைக்கணும். 
 
சரிய்யா........... தீபாவளி முடிஞ்ச மறுநாள் நம்ம  சரா ஃபேஷன்ஸ் அனுப்பி வச்ச பார்ஸல் வந்துச்சு. அதுலேதான்  நமக்கான தீபாவளிப் புதுத்துணிமணிகள் இருக்கு.  உடனே பிரிச்சுப் பார்த்துட்டேன்.  ஜன்னுவுக்கு  வழக்கமா அனுப்புவதோடு நம்ம குட்டனுக்கும்  புதுசு அனுப்பி இருந்தாங்க. அதான் புள்ளி ஊரில் இல்லையே..... வந்தாட்டு தீபாவளி கொண்டாடிக்கணும்.

இந்தியப் பஞ்சாங்கம் பார்த்துத்தான்  நியூஸியில் நம்ம வீட்டிலும் கோவிலிலும்   எல்லாப் பண்டிகையும் கொண்டாடறோம். ஆனால் ஃபிஜி மக்களுக்குத் தனிப்பஞ்சாங்கம் இருக்கு. ஃபிஜியும் நியூஸியைப்போலவே  டேட் லைனில் இருப்பதால் ,  ஒரே நேரம்தான்.  ஆனால் இந்தியாவுக்கும் ஃபிஜி & நியூஸிக்கும் நேர வித்தியாசம் அதிகம். காலை 6 மணி நல்ல நேரமுன்னு இந்தியப் பஞ்சாங்கம் சொன்னால்..... அப்போ எங்களுக்கு  டேலைட் ஸேவிங் இல்லாத காலத்தில் பகல் பனிரெண்டரை மணியும், டே லைட் ஸேவிங் இருக்கும்போது  மத்யானம் ஒன்னரைமணியுமாக இருக்கும். அதனால் ஃபிஜி பஞ்சாங்கப்படி நம்ம இந்திய தீபாவளி  முடிஞ்ச மறுநாள்தான் திவாலி.  திவாலி மட்டுமில்லை....  எல்லாப்பண்டிகைகளும் இப்படித்தான் !


நம்ம பக்கத்துத் தெருவில் இருக்கும் ஃபிஜித்தோழி, இந்த வருஷமாவது கட்டாயம் தீபாவளிக்கு வீட்டு விஸிட் செய்யணுமுன்னு  வற்புறுத்திச் சொல்லிட்டாங்க.  'டின்னருக்கெல்லாம் வர நேரமில்லை. சாயங்காலம் டீ குடிக்க வர்றோமு'ன்னு சொல்லியிருந்தேன்.  இதில்கூடப் பாருங்க நியூஸியில் டீ டைம் னு சொன்னால் அது டின்னர் டைம்.  நம்ம இந்தியத்தோழி ஒருத்தர்  அவுங்க நண்பர்களை  மாலை 4 மணிக்கு   டீ குடிக்கக் கூப்பிட்டு இருந்தாங்க. இண்டியன் டீ ன்னு தோழி நினைக்க, வந்துருந்த வெள்ளைக்கார நட்புகள், நாலு  மணிக்கு வந்து ஸ்நாக்ஸ், டீ எல்லாம் முடிச்சுட்டு உக்கார்ந்து பேசிக்கிட்டே இருந்துருக்காங்க.  பொதுவா இங்கே மாலை 6 மணிக்கே டின்னர் (கிவிக்களின் டீ )எடுத்துப்பாங்க என்றதால்....  அவுங்க டீக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்துருக்காங்க. நம்ம தோழியும் கணவரும்...... 'என்னடா.... டீ எல்லாம் குடிச்சு முடிச்சு இவ்ளோ நேரமாச்சு. இன்னும்  எழுந்து போகாம உக்கார்ந்துருக்காங்களே' ன்னு  முழிச்சுக்கிட்டு இருந்துருக்காங்க. 
அப்புறம் விருந்தினரில் ஒருவர், டைனிங் டேபிள் செட் பண்ண ஹெல்ப் செய்யவான்னு கேட்டதும்தாம் விஷயம் புரிஞ்சுருக்கு !  இதோ கொஞ்ச நேரத்தில் ரெடியாகிருமுன்னு சொல்லி சமாளிச்சுட்டு, ஓடிப்போய்   இண்டியன் சாப்பாட்டுக் கடையில் டேக் அவேன்னு பார்ஸல் வாங்கி வந்து ஒப்பேத்திட்டாங்க.  நம்ம இண்டியன் ஸ்டைலில் டீ பார்ட்டிக்கு வாங்கன்னு  கூப்பிட என்ன சொல்லணும், தெரியுமா ?  Please come at 4 PM for a cuppaa !


 ஃபிஜித்தோழி வீட்டில் திவாலி மிட்டாய் என்ற பெயரில் ஏகப்பட்ட நொறுக்ஸ் பண்ணி வச்சுருந்தாங்க.

நாம் ஃபிஜியில் இருந்தபோதும், இப்படித்தான்  ஊர்வழக்கப்படி ஒரு வாரத்துக்கு முன்னாலேயே  மிட்டாய் செய்ய ஆரம்பிப்போம். அக்கம்பக்கத்து வீட்டு மக்கள் உதவிக்கு வருவாங்க. ஒரு நாள் ஒரு வீடுன்னு எல்லோருமாப்போய் செஞ்சு கொடுப்பாங்க. அப்புறம் திவாலியன்னிக்கு தட்டுகளில் விளம்பி அக்கம்பக்கம் போய்க் கொடுக்கணும். எல்லா வீடுகளிலும் ஒரே மாதிரி வகைகள்தான். ஏறக்கொறைய ஒரே ருசிதான். ஆனாலும் தட்டுகள் உலா வருவதையும் போவதையும் தடுக்க  முடியாது :-) 

இது இந்த இடும்பிக்குப் போரடிச்சுப்போய், ஒரு வருஷம் மெனுவை மாத்திட்டேன். இந்தியாவிலிருந்து ஒரு  சமையல் ஸ்பெஷலிஸ்ட் ஃபிஜிக்கு  விஸிட் வந்துருந்தார். அவரிடம் நம்மூர் ஜாங்கிரி, மிக்ஸர், பக்கோடான்னு செஞ்சு வாங்கிக்கிட்டோம்.  அவருக்கும் ஊர் சுத்திப்பார்க்கும் செலவுக்கு ஆச்சு !  நம்ம விஜயா அக்காவும், டாக்டர் தங்கவேலுவும், நாங்களுமா (மூவரும் இந்தியா இந்தியர்கள் ) கூட்டு சேர்ந்துக்கிட்டோம்.
கொஞ்சநேரம் தோழி வீட்டில் உக்கார்ந்து பேசிட்டு, நொறுக்ஸும் டீயுமா  உள்ளே தள்ளிட்டு வந்தாச். அப்போ எங்களுக்கு வசந்தகாலம் முடிஞ்சு கோடை வர்றதுக்கு ரெண்டரை வாரம்தான் இருக்கு. பகல் பொழுதுகள் அதிகம். சூரியன் மறையவே ராத்ரி  எட்டுக்கு மேல் ஆகும். அப்புறமும்  ஒரு ,ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலா ட்வைலைட்!  வானம் தினமும் ஒரு கோலம் காண்பிக்கும். கோடை வந்தால்  அஸ்தமனம் ஒன்பதரைக்கும், அடுத்த ஒன்னரை மணி நேரம்  ட்வைலைட்ன்னு  ராத்ரி பதினோன்னுவரை  வெளிச்சம்தான்.      
வீட்டுத்தோட்டத்திலும் பூச்செடிகள் கடமை தவறாமல் இருந்தன.  பதிமூணு வருஷமா  வளர்த்துவரும்   கள்ளிச்செடி ஒன்னு, முதல் முறையா மொட்டு விட்டுருக்கு. என்ன நிறமுன்னு தெரியலை. மொட்டைப் பார்த்தால் வெள்ளைப்பூன்னு தோணுது.




எப்பவும் போல வீக்கெண்ட்தான் ரொம்ப பிஸியா இருக்கு.  இன்னும் கொலுப்படிப் பெட்டிகளைத் திறந்து  பார்க்கலை. எப்படிப் படிவரிசைகள் வருமோன்னு தெரியலைன்னு பேசிக்கிட்டு இருந்தோம். நம்மவன் வேற அந்தப்பொட்டிகளைப் போய்ப்போய் பார்த்துக்கிட்டு இருந்தான். சரி எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாமுன்னு பொட்டிகளைத் திறந்தார்.  சின்னச் சின்ன அளவில்  ஏகப்பட்ட  ப்ளாஸ்டிக் தண்டுகள். அவைகளை இணைக்கும் விதம், செய்முறை எல்லாம்  வச்சுருக்காங்க. ஆனால் நல்ல ப்ரிண்ட் இல்லாமல்,  ஃபோட்டோகாப்பி எடுத்தவைதான். எழுத்தெல்லாம் ஒரே மங்கல்.




ஒரே ஒரு படி வச்சுப் பார்க்கலாமுன்னு எடுத்தது நம்ம தப்பு ..... அப்படி செய்ய முடியாதுன்னு அப்புறம் தெரிஞ்சது.  மொத்தமாத்தான்  உருவாக்கணும்.  மொதல்லே அவுங்க கொடுத்த  குறிப்புகளைப் புரிஞ்சுக்கவே ரொம்ப நேரமாச்சு.   இங்கே சீனாவிலிருந்து வரும் DIY (Assembly required )  பொருட்களுக்கெல்லாம்  குறிப்புகள் பக்காவா இருக்கும். நான் குறிப்பைப் படிச்சுச் சொல்லச்சொல்ல நம்மவர் பொருத்திருவார்.   காலையில் பத்தரைக்கு ஆரம்பிச்சது....  பாதிவேலை முடியவே ராத்ரி பதினொன்னரை ஆச்சு. நம்மவனுக்கு  போரடிச்சாலும் கூடவே இருந்தான்.   
இனி முடியாதுன்னு அப்படியே விட்டுட்டோம்.  இன்னொருநாள்  தொடரணும்.....  


4 comments:

said...

தீபாவளி பலகாரங்கள் மேஜையில் அடுக்கி வைத்திருப்பது பார்க்கவே ஈர்ப்பு.

மற்ற தகவல்களும் நன்று.

தொடரட்டும் பதிவுகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இத்தனையும் செஞ்சு வச்ச தோழி சொல்றாங்க..... 'நேரம் கிடைக்கலை.... இன்னும் சிலவகைகள் செய்ய நினைச்சுருந்தேன்'னு !

முழுநேர வேலை செய்யும் தோழி இவுங்க. ஆஃபீஸ் போய் வந்து வீட்டுவேலைகளையும் பார்த்துக்கிட்டு............. ஐயோ......

said...

இவ்வளவு பட்சணங்கள்! மிகவும் சிறப்பான தீபாவளிக் கொண்டாட்டம்.

said...

வாங்க மாதேவி,


வருஷத்துக்கொரு முறைதானேன்னு ரொம்பவே மெனெக்கெடறாங்கப்பா இந்த மக்கள் !