Friday, October 02, 2020

ஒரு ஊரே காணாமப்போயிருச்சு...... (ரோட்டோருஆ பயணம் . பகுதி 6 )

Tarawera ன்னு ஒரு மலை, அதன் அடிவாரத்துலே அதே பெயரில் ஒரு ஏரி. அதைப் பார்க்கத்தான் இப்போ நாம் போய்க்கிட்டு இருக்கோம். 
ஏரின்னு சொல்றாங்களே....  இது சின்னக்கடல்னு தோணுது  எனக்கு. பரப்பளவு 41 சதுர கிலோ மீட்டர் !     நீளம் 11.4 கிமீ. ஆழம் அதிகம்(!) இல்லை.... 87.5 m (287 ft) ஹம்மா.......
பல கோடி  வருஷங்களுக்கு முன்னே....  மொத்த உலகமே ஒன்னா  ஒரே நிலமா  இருந்துச்சு.  அதுலே கோண்டுவானாப் பகுதின்னு ஒன்னு.  எங்கேன்னு பார்த்தால் இப்ப நாம் கன்யாகுமரின்னு கொண்டாடும் நிலத்தையொட்டிதானாம் ! காலப்போக்கில்  அந்த நிலப்பகுதி பிரிஞ்சு, கடலில் மிதந்துக்கிட்டே போய் வேறெங்கோ செட்டில் ஆகிருச்சுன்னு ஒரு தியரி இருக்கு. அப்படிப் பெருசா ஒரு துண்டுதான்  எங்க அண்டைநாடான அஸ்ட்ராலியா.  சின்னத்துண்டுகள் எல்லாம் கடலில் அங்கங்கே  கிடக்குன்னும்  அப்படி வந்ததுதான் நியூஸின்னும் ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறாங்க.  மொத்த உலகமே இப்படி ஒன்னோடொன்னா ஒட்டிக்கிட்டு இருந்து பிரிஞ்சு போனதுதானாம். 
எங்கூர் ம்யூஸியத்துலே  Continental drift display ஒன்னு இருக்கு.  அந்தக் கண்ணாடிப்பொட்டியில் இருக்கும் பட்டனை அமர்த்தினால் ஒரே நிலம் எப்படித் துண்டுகளாப் பிரிஞ்சு எதோடு எது போய் ஒட்டிக்கிட்டு, இப்போ  அட்லஸில் நாம் பார்க்கும்  உலகமா இருக்குன்னு காமிக்கும். எனக்கு ரொம்பப்பிடிச்ச விஷயம். எப்போப் போனாலும் அந்தப் பொட்டியாண்டைக் கொஞ்சம் நின்னு பார்த்துட்டுத்தான் வருவேன். ரொம்ப நாளாச்சு ம்யூஸியம் போய்.....  ஒருநாள் போய்ப் பார்க்கணும்.

இப்படி  வந்த கோண்டுவானாப் பகுதிகளில் ஏராளமான எரிமலைகள் இருந்துருக்கு போல....  துண்டுதுண்டா நிலம் பிரிஞ்சப்ப அங்கிருந்த எரிமலைகளும் அங்கங்கே நின்னுபோயிருக்கும் இல்லே ? 
இப்படி இருக்கும் எரிமலைகளில் ஒன்னு இந்த டரவெரா மலையில் இருக்கு.  இது எப்போ வெடிச்சதோ என்னவோ.... அந்த அதிர்வில் பூமியே  பிளந்துபோய் அந்தப் பள்ளத்துலே உருவானதுதான் இந்த டரவெரா ஏரியே ! இதெல்லாம்  அப்போ யாருக்குத் தெரியும் ? 

மவொரிகள் இங்கே வந்து குடியேறியபின்  நல்ல நீர்நிலைகளைச் சுத்தியே  கிராமங்களை அமைச்சுக்கிட்டாங்க.  இவ்ளோ பெரிய ஏரிக்கரையில்  அங்கங்கே  ஒவ்வொரு குழுவும்  வீடுகளைக் கட்டிக்கிட்டு வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்காங்க. எல்லாம் ஒரு ஆயிரத்துச் சொச்சம் வருஷங்களுக்கு முன்னாலேதான்  மவொரிகள் இங்கே குடியேறியது கேட்டோ !

அப்பவே இங்கே ஏரி இருந்துருக்குன்னா..... பாருங்க    !!!  

போன பதிவில்  குறிப்பிட்ட Sir George Grey  இந்த இடத்தைப் பார்க்கத்தான் போயிருக்கார். போற போக்கில் வழியில் பார்த்ததுதான்    பதிவில் சொன்ன அந்த ஒகரேகா ஏரி.

இங்கே  அந்த மலையையொட்டியே    ஒயிட் டெர்ரஸ், பிங் டெர்ரஸ்ன்னு ஏற்கெனவே ஒன்னு உருவாகி இருக்கு. அதுவும்  எரிமலை வெடிச்சாட்டு வந்த போனஸ்.  எத்தனையோ  தாதுக்கள் பூமிக்கடியில் இருக்கே......   எரிமலை வெடிக்கும்போது அந்த சூட்டில் தாதுக்கள் எல்லாம் உருகி  எரிமலைக் குழம்பில் சேர்ந்து வெளியே பொங்கி வர்றதுதானே !  (என்னாண்டை கூட  எரிமலைக்குழம்பில் உருவான  ஒர்  கல் வச்சுருக்கேன்! )

இந்த டெர்ரஸ்கள் எல்லாம் 'சிலிகா' வாம் !  இதுலே ஒயிட் டெர்ரஸ் சுமார் 30  மீட்டர் உயரத்திலிருந்து சரிஞ்சு அப்படியே  240 மீட்டர் அகலத்துக்கு இருந்துருக்கு. பரப்பளவு மட்டும்  சுமார் ஏழரை ஏக்கராம் !  இயற்கையின் அதிசயம்னு  1840 இல் வந்த வெள்ளையர் பாராட்டிக்கிட்டு இருந்துருக்காங்க.   1841இன் நியூஸிலாந்து கம்பெனிக்காக (இந்தப் பெயரில்தான்  ஆரம்பம், நம்ம ஈஸ்ட் இண்டியா கம்பெனி மாதிரி ! ) சர்வே பண்ண  இதை வந்து பார்த்து  படம் வரைஞ்சுக்கிட்டும் படம் எடுத்துக்கிட்டும் போயிருக்காங்க.  அப்ப ஏது கலர் ஃப்ல்ம் ?  புகைப்படம் எல்லாம் கருப்பு வெள்ளைதானே ?  அதான்  கலரில் வரைஞ்சுருக்காங்க போல !  

மேலே படங்கள்:  நியூஸி அரசின் வலைப்பக்கத்தில் இருப்பவை. துளசிதளத்தின் நன்றி !

நியூஸிக்குக் குடியேறிய மக்களும்,  நியூஸியைப் பார்க்க வந்துட்டுப்போன மக்களுமா அந்தக் காலத்துலே  சுற்றுலாப்பயணிகள் வந்து பார்க்கும் இடமாகப் பெயர் வாங்கிருச்சு  ஒயிட்டும் பிங்கும்! நிலத்தடியில் ஜியோதெர்மல் ஆக்டிவிட்டி இருப்பதால்  டெர்ரஸ்களில் இளஞ்சூட்டுத்தண்ணீர் வேற !  கேக்கணுமா ? குளிருக்கு இதமா இருந்துருக்காதோ ? அப்ப இந்த எரிமலை சமாச்சாரம் யாருக்கும் தெரியாதுல்லையா.....  டெர்ரஸுக்கு  500 வயசுன்னும், சிலிகா கலந்த தண்ணி பூமிக்குள் இருந்து வர்றதால் இது உருவாச்சுன்னும்  அப்போதைய ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்காங்க.

இந்த மலையடிவாரங்களில் அங்கங்கே கிராமங்கள் உருவாச்சு பாருங்க.... அதுலே ஒரு கிராமம் ஒருநாள் அப்படியே மண்ணுக்குள்ளே புதைஞ்சே போயிருச்சு, அதுலே இருந்த சுமார் 150 மக்களோடு   :-(        1886 ஆம்  வருஷம் ஜூன்  பத்து , அன்றைக்குப்  பொழுது  விடியறதுக்கு முந்தி,  சம்பவம் நடந்து போச்சு. டரவெரா மலைக்குள்ளில் இருந்த எரிமலை தன்னுடைய புத்தியைக் காமிச்சுருச்சு!

கிராமம் மட்டுமா போச்சு.... கூடவே அங்கிருந்த டெர்ரஸ்களையும் காணோம் !  எல்லாம் எரிமலை செஞ்ச வேலை..... இப்பவும் நியூஸியில் 12 பெரிய எரிமலைகள் உயிரோடத்தான் இருக்கு.  இதுகள் அப்பப்ப  நான் இருக்கேன்னு  வெளியே வந்து சொல்லிட்டுப் போகும். ஆனா எப்போன்னு சொல்லாதில்லையா ? .....    

இந்த எரிமலைகள் அப்பப்ப சின்னச் சின்னதா செயல்பட்டுக்கிட்டுத்தான் இருக்கு. நாங்க இங்கே வந்த பிறகுகூட  (1988) பலமுறை டிவி செய்தியில் பார்த்துருக்கோம். அதான் எதாவது சம்பவமுன்னா மீடியா அங்கே போய் மொய்ச்சுறாது ?   ச்சும்மா இருக்கே, போய்ப் பார்க்கலாமுன்னு வர்ற பயணிகளுக்கு ஆயுசு கெட்டியா இருக்கணும். இப்பதான் ஒரு  பத்து மாசத்துக்கு முன்னால்  (   9 டிசம்பர் 2019 ) ஒயிட் ஐலண்ட்டில் இருக்கும் எரிமலை வெடிச்சுருச்சு.  அதுக்கு என்ன கோவமோ ?  அப்போ 47 பேர் அங்கே  அந்தத் தீவில் இருந்துருக்காங்க. அவர்களில் 21 பேர் சாமிகிட்டே போயிட்டாங்க. மீதி இருந்த 26 பேருக்குத் தீக்காயம். ஒரு ஆள் கூட நெருப்பிலே இருந்து தப்ப முடியலை. எல்லோரும் சுற்றுலாப்பயணிகள்தான். மத்தபடி அங்கே யாரும் வசிக்கறதில்லை.

ஆக்லாந்து நகரம் (நியூஸி ஜனத்தொகையில் முதலிடம்) கூட  இப்படி ஏராளமான எரிமலைகள் உண்டாக்கின   volcanic fieldலே  கட்டுனதுதான். அப்ப எங்கூரு ? ஃபால்ட் லைன்னு சொல்றாங்க பாருங்க... அதுக்கு மேலே  உருவாக்கியது. அப்பெல்லாம்  இந்த சமாச்சாரங்கள் எல்லாம் என்னன்னு கண்டுபிடிக்கப்படவே இல்லை பாருங்க. நாங்களும் எது வந்தாலும் சரி,விதி முடிஞ்சா போயிடலாம்னு  இருக்கோம். பஞ்ச பூதத்துலே எந்த பூதம் கொண்டு போகப்போகுதோ ?

கடலுக்குப் பக்கம், கடலுக்குள்ளே, தரையில், மலையில், காடுகளில் இப்படி ஏராளமான எரிமலைகள் உயிரை விட்டுட்டு, குளிர்ந்தும் போயிருக்கு தான்!  
 கீழே படம்,  ஒரு முறை ஆக்லாந்தில் இருந்து நம்மூருக்கு வந்தப்ப எடுத்த எரிமலை.  பனி மூடி இருக்குன்னாலும், உள்ளே உயிரோடு இருக்கும் வகையில் சேர்த்தி. அப்ப இன்னும்கூட  சில எரிமலைகளைப் பார்த்தேன் . விவரம் இங்கே இந்தப் பதிவில் இருக்கு. விருப்பமானவர்கள்  க்ளிக்கலாம் :-)
இப்ப ஓரளவுக்கு இந்த ஏரி சமாச்சாரம் சொல்லிட்டேன். மலையும் சுத்துப்புறமும் மவொரிகளுக்குச் சொந்தம் என்பதால்  மலையேறிப் பார்க்கப்போறேன்னு யாரும் தனிப்பட்ட முறையில் போக அனுமதி இல்லை. மவொரிகளே, வழிகாட்டியுடன்   மலையேறிச் சுத்திப் பார்த்துட்டு வரும் வகையில் ஒரு சுற்றுலா நடத்தறாங்க.  இதுலே போய் வர்றாங்க  சில பயணிகள். காணாமப்போன டெர்ரஸ்கள்,  தண்ணீருக்கடியில்  அதலபாதாளத்தில் இருப்பதாக சேதி.  நீர்மூழ்கிப்போய்,  இருக்குமிடத்தைக் கண்டு பிடிச்சுட்டாங்களாம். பார்க்கலாம்.... இன்னும் சில வருஷத்தில் நீர்மூழ்கிப் படகுகளில் கூட்டிப்போய் காமிச்சாங்கன்னா, நனையாமப் போய் பார்த்துட்டு வரலாம்.

 புதைஞ்சு போன கிராமத்தைக்கூட இப்ப ஒருவழியாக் கொஞ்சம்  சரியாக்கி அதைப் பார்க்கும் டூர் கூட வச்சுருக்காங்க. நாம்  அங்கே போகலை. எனக்குத் தோணலை....  இத்தாலியில்    இப்படி எரிமலை ஒன்னு வெடிச்சு அழிஞ்சு போன  பொம்பெய்( Pompeii  ) என்ற ஊருக்குப் போயிருக்கோம். சுமார் இருபதாயிரம்பேர் வசிச்ச ஓரளவு பெரிய ஊர் அது. எரிமலையில் இருந்து வந்த சாம்பல், 19 அடி உயரத்துக்கு   ஊரையே  மூடிருச்சு. யார் பிழைக்க முடியும் ? 

ஒகரெகாவில் இருந்து டரவெரா ஏரிக்கு 12. 5  கிமீ தூரம். காமணியில் வந்து சேர்ந்தோம். ரெண்டு பக்கமும் பச்சைப்பசேர்னு  செழிப்பா  இருக்கும்  அருமையான சாலை.... 

சனம் அதிகம் வந்து போகும் பீச் என்பதால்  ஒரு கேஃபே  இருக்கு!  ஏரிக்குள் போய் சுத்திவரச் சுற்றுலாப்பயணிகளுக்கான  படகும் இருக்கு! தவிர சனம் தான் சொந்தப் படகுகளை வச்சுக்கிட்டு அலையுதே....  அவுங்களுக்கான அறிவிப்பு !   











கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்துட்டு, அஞ்சு நிமிஷ ட்ரைவில் (நாலு கிமீ ) எரிமலை வெடிச்ச சம்பவத்துக்கான  நினைவுப் பகுதிக்குப் போனோம்.  டைம் கேப்ஸ்யூல் ஒன்னு  2006 இல் புதைச்சு வச்சுருக்காங்க.  2086 ஆம் வருஷம்தான்   வெளியே எடுத்துப் பார்க்கணுமாம். அப்போ இருநூறு வருஷம் ஆகி இருக்கும் ! 






கிளம்பித் திரும்பி வரும் வழியில் போட் ஷோ &   ஸேல்னு பார்த்துட்டு அங்கே போனோம்.  ஆட்கள் ,  அவுங்க படகுகளை விற்கறதுக்குப் போட்டுருக்காங்க.  கார் வாங்கும்போது டெஸ்ட் ட்ரைவ் போறமாதிரிதான்.  அதான் வாங்க நினைக்கும் சனம் ஓட்டிப் பார்க்க வசதியா இங்கே கொண்டுவந்து நிறுத்தி இருக்காங்க. இந்த ஏரிக்குப் பெயர் ப்ளூ லேக்!   Lake Tikitapu.  இது அவ்ளோ பெரிய ஏரி இல்லை. 
க்ரேன்கள்,  ஆட்களோடு படகைத் தூக்கி அப்படியே தண்ணிமேலே வச்சுருது. ஓட்டிப் பார்த்துட்டு வந்தவுடன், திரும்ப அலேக்னு தூக்கிக் கரையில் வைக்குது.  ஸ்போர்ட்ஸ் கார் மாதிரி ஸ்போர்ட்ஸ் படகுகளோ ?  வாட்டர் பைக் ? 



ம்ம்ம்ம்ம்ம்.....  நடக்கட்டும் நீர் விளையாட்டு!  வேடிக்கை பார்க்கக் கசக்குதா நமக்கு ?  ஒரு அரைமணி நேரம் போச்சுன்னதும் கிளம்பி அறைக்கு வந்துட்டோம்.

இத்தனை ஏரிகளைப் பார்த்தோமே.... இப்ப நம்ம அறைக்குப் பக்கம் இருக்கும் ஏரியைச் சரியாப் பார்க்கலையேன்னு  ஒரு வாக் போயிட்டு வந்தோம். லேக் ரோட்டோருஆ   அளவில் பெரிய ஏரிதான். கிட்டத்தட்ட 80 சதுர கிமீ பரப்பளவு.  இப்பப் பார்த்துட்டு வந்த டெரவேரா மாதிரி ரெண்டு மடங்கு !  ஆழம் வெறும் பத்து மீட்டர்தான் என்பதால்  தண்ணீர் கொள்ளளவு  குறைவு.

ஒரு சின்னப்பையன் தண்ணீரில் குதிச்சு விளையாடிக்கிட்டு இருந்தான். லோக்கல் பையனா இருக்கணும்.





கொஞ்ச நேரம் சுத்திட்டு அறைக்குப்போய் ஒரு டீ போட்டுக் குடிச்சுட்டு,  மோட்டலையும் சுத்திப் பார்த்தாச். வசதியாத்தான் இருக்கு! பொதுவா தங்குமிடத்தைச் சுத்திப்பார்க்க நேரமே கிடைக்கறதில்லை.  

ராச்சாப்பாட்டை ஒரு இண்டியன் 'டேக்அவே' லே  வாங்கி வந்தோம். ஆச்சு.
நாளைக்குக் கதையை நாளைக்குப் பார்க்கலாம்.....  ஓக்கே ?

தொடரும்.......... :-)


5 comments:

said...

சிறப்பான தகவல்கள். எத்தனை எத்தனை அழகு - இயற்கை அன்னை! கூடவே எரிமலைகளும் இருக்கிறதே!

படங்கள் - குறிப்பாக ஏரி படங்கள் வெகு அழகு.

தொடரட்டும் பயணங்கள்.

said...

dont feel like taking eyes. beautiful place. you get indian food there also.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நாடு முழுக்க எரிமலை மேலேயே கட்டப்பட்டுருக்கு. போதாததுக்கு ஃபால்ட் லைன் வேற ! என்னமோ கடவுள் கருணையால் பிழைச்சுருக்கு இந்த பகுதிகள் எல்லாமே!

said...

வாங்க ஸ்ரீகாந்த்,

முதல் வருகையோ ? வணக்கம்.

இப்பெல்லாம் அநேகமா எல்லா முக்கிய ஊர்களிலும் இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் அண்ட் டேக் அவேக்களுக்குப் பஞ்சமே இல்லை. எங்க ஊரில் (க்றைஸ்ட்சர்ச் மாநகர்') மட்டுமே 43 இருக்குன்னா பாருங்க !

said...

நீங்கள் கூறியது போல இத்தனை எரிமலைகளுக்கு இடையே நாடு பிழைத்திருப்பது ஆச்சரியம்தான்.