விருந்தும் மருந்தும் மூணுநாளாமே.... இங்கே வந்து மூணுநாளாச்சு.... இன்றைக்குக் கிளம்பி இன்னொரு ஊருக்குப் போறோம். காலையில் கடமைகளை முடிச்சுட்டு, ஏரியாண்டை குட்பை சொல்லப் போனா.... இன்னும் ஸீகல் கூட்டம் வரலை. அவுங்க டைமிங் எனக்குத் தெரியலையேப்பா..... தனியா நான் நிக்கறதைப் பார்த்துப் பொறுக்காம என்னம்மான்னு வந்து கேட்டது ஒன்னே ஒன்னு!
ஒன்பதுக்குச் செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பினோம். இன்றைக்குச் சனிக்கிழமை. போற வழியில் நம்ம கோவிலுக்குப் போயிட்டுப்போகலாமே! இந்த ரோட்டோருஆவின் சனத்தொகை 75,100தான். இதுலே எத்தனை ஹிந்து மதத்தாட்கள்னு தெரியலை. ஆனாலும் ஹிந்துக்கோவில் கட்டி இருக்காங்கன்னா பாருங்க ! சுற்றுலான்னு வந்துபோகும் சனம் இதைப்போல மூணு மடங்கு வரும்னு நினைக்கிறேன்.
கோவிலுக்குப் போனப்ப பண்டிட், ஹவன் செஞ்சு முடிக்கிறார். சனிக்கிழமை தோறும் இப்படியாம். காலை எட்டரைக்காமே. ஆஹா.... தெரியாமப்போச்சே..... கொஞ்சம் சீக்கிரமா செக்கவுட் செஞ்சுருக்கலாம், இல்லே ? ப்ச்.... அந்தவரை சனிக்கிழமை சாமி தரிஸனம் முடங்காமல் கிடைச்சதேன்னு கும்பிட்டுக் கிளம்பிட்டோம்.
போகும்போதுதான் இரும்பு ஆர்ச்செல்லாம் இருக்கும் கேட் தெரிஞ்சது. என்ன ஏதுன்னு பார்க்கலாமுன்னு போனால்..... இது நாம் இங்கே வந்தன்னைக்குப் பார்த்த கவர்மென்ட் கார்டன்தானாம். ஆனால் இந்த வழியாப் போகாம ஏரிப்பகுதி வழியா போயிருக்கோம். நுழைவு வாசலில் மவொரி ஆர்ட் வரைஞ்ச ஃபென்ஸ். நல்லாவே இருக்கு! சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வர்ற இடத்தை நல்லா வச்சுக்கணும் இல்லையோ !
உள்ளே போய் சுத்திப் பார்த்துக்கிட்டே ஒரு பக்கம் திரும்பினால் ஏரியில் நல்ல கூட்டம். பொழுதுபோக்கு சமாச்சாரம் எல்லாம் காலையிலேயே ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருக்கு. தண்ணியில் வந்து இறங்கும் குட்டி விமானம், ச்சும்மாத் தண்ணீரில் போய் சுத்திப்பார்க்கும் படகுகள், சொந்தப் படகுகள், தவிர Lakeland Queen Cruiseனு சாப்பாட்டை முழுங்கிக்கிட்டே, ஏரியைச் சுத்தி வந்து ரஸிக்கும் ரெஸ்ட்டாரண்ட் வகைப் படகுன்னு கோலாகலம்.
கரைப்பகுதியில் எக்கச் சக்கப் பறவைகள். அன்னங்களும் கடற்புறாக்களுமா ஜேஜேன்னு....
நேத்து சாப்பாடு வாங்கினோமே 'நானும் கறியுமா'... அதுலே கறியோடு அவுங்க கொடுத்த சாதம், அப்படியே இருக்கு. காலையில் பறவைகளுக்குப் போடணுமுன்னு நினைச்சுட்டு மறந்துட்டேன். போற வழியிலே எங்கெயாவது பறவைகளுக்குப் போடணும்தான் .
இங்கே எங்கூர்லே ஹேக்ளி பார்க் போகும்போது அங்கே பார்க் வழியா ஓடும் ஏவான் ஆத்துப் பறவைகளுக்கு (முக்கியமா க்வாக் க்வாக்தான் ) ரொட்டி கொண்டு போய் பிய்ச்சுப்போடும் வழக்கம் ரொம்ப வருஷங்களாவே இருக்கு. சின்னப்பிள்ளைகளோடு வரும் குடும்பங்கள் கட்டாயம் 'டக் ஃபீடிங்' செஞ்சுட்டுத்தான் போகும். நாமும் அப்படியே பழகிட்டோம். ஆனால் போன வருஷத்தில் ஒரு அறிவிப்பு விட்டாங்க. 'ப்ரெட் தின்னறதால் பறவைகள் உடம்பு சரியில்லாமப் போகுது. அதனால் சோறாக்கிப் போடுங்க'. நல்ல வேளை குழம்பு, கூட்டு எல்லாம் செஞ்சு போடுங்கன்னு சொல்லலை.
ஏற்கெனவே நம்ம வீட்டில் தினம் ரெண்டுவேளை பறவைகளுக்கு சாப்பாடு உண்டு. காலையில் வெஸ்ட்டர்ன் ஸ்டைலில் ப்ரெட், சாயங்காலம் ஏஷியன் ஸ்டைலில் வெறுஞ்சோறு. நாம் ஊரில் இல்லைன்னா... அதுகள் வேற வழி பார்த்துக்கணும். எனக்கு ஐயோன்னுதான் இருக்கும். ரஜ்ஜு மாதிரி இதுகளுக்கு ஹாஸ்டல் ஏது ? திரும்பிப்போனவுடன் சாப்பாடு போட்டதும், 'என்ன, ஏது , இவ்ளோநாள் எங்கே போனே'ன்னு ஒரு வார்த்தை கேக்காமல் உடனே வந்து சாப்பிட்டுப்போகும். இப்படி ஒரு பந்தம் நமக்கும் பறவைகளுக்கும்:-)
இந்த நினைவில்தான் கையில் இருக்கும் வெறுஞ்சோறை வீணாக்காமல் இந்தப் பறவைகளுக்குப் போடலாமேன்னார் 'நம்மவர்'.'அன்னதாதா' வேஷங்கட்டுனவரைப் பறவைகளுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ப்ரெட் தின்னுக்கிட்டு இருந்த அன்னம் ஒன்னு ஆடி அசைஞ்சு அங்கே போறதுக்குள் எல்லாம் காலி ! ரோட்டோருஆவுக்கு டாட்டா சொல்லிட்டுக் கிளம்பி அடுத்த ஒரு மணிப் பயணத்தில் Aratiatia என்ற இடத்துக்கு வந்துருந்தோம். மணி இப்போ 11.22 தான். இங்கே பனிரெண்டு மணிக்கு ஒரு வேடிக்கை இருக்கு! அதைப் பார்த்துட்டுப் போகணும்.
நியூஸியின் நீளமான நதின்னு பெயர் வாங்கி இருக்கும் வைகாட்டோ (Waikato River )நதி, 425 கிமீ தூரம் ஓடி டாஸ்மன் கடலில் கலக்குது. போற வழியில் ஏராளமான ஏரிகளை நிரப்பிக்கிட்டே போகுது ! எரிமலைப் பகுதிகளில் இருந்து வர்ற சாம்பலையும் கரைச்சுச் சுமந்துக்கிட்டே போய் அங்கங்கே தானம் பண்ணிக்கிட்டுப் போறதால் நதிவழியில் திட்டுத் திட்டா இருக்கும் தீவுகளில் எல்லாம் மரங்களும் செடிகளுமா எல்லாமே படுசெழிப்பாக வளர்ந்து நிக்குதுகள்.
இந்த நதியில் மட்டும் ஹைட்ரோபவர் எடுக்க எட்டு அணைகள் இருக்குன்னா பாருங்க. இதைத்தவிர நூத்துக்கும் அதிகமான பவர் ஸ்டேஷன்கள் வழி நெடுக...... செயற்கை ஏரிகளை உண்டாக்கி வச்சுருக்கு ! இதெல்லாம் நியூஸியின் வடக்குத்தீவுன்னா......... தெற்குத்தீவில் இன்னும் பெரிய அளவில் இருப்பதால் எங்களுக்குப் பவர்கட் என்ற சமாச்சாரமே இல்லை கேட்டோ !
எல்லா பவர்சமாச்சாரமும் பவர் கம்பெனிகள் வசம்தான். பொதுமக்களும் பங்குதாரர்களே!
இப்ப நாம் வந்து நிக்கிற இடம் Aratiatia Dam Spill Gate க்கு முன்னால் இருக்கும் பாலம். இங்கத்துப் பவர் ஸ்டேஷன் 1964 இல் தான் ஆரம்பிச்சது. இதுக்கு முன்னால் இந்த Aratiatia Lake எப்பவும் நிரம்பி வழிஞ்சு பாறைகள் நிறைஞ்ச சரிவான பாதையில் ஓடிக்கிட்டுதான் இருந்துக்கு. அணை கட்டுனதும் தண்ணீர் வரத்து குறைஞ்சு போச்சுதானே.... ஆனால் அணையும் எவ்ளோ தண்ணீரைத்தான் தாங்கும்? உடைப்பெடுத்துறாது ? அதனால் அப்பப்பத் தண்ணீரைத் திறந்து விட்டுருவாங்க.
இப்படித் திறந்து விடுறதை ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷன் ஆக்கிட்டாங்க. கோடைகாலமுன்னா நாலு முறையும் குளிர்காலமுன்னா மூணு முறையுமா ஷோ நடக்குது :-) அதை சனம் போய் வேடிக்கை பார்க்க அங்கங்கே லுக் அவுட்ன்னு பாதுகாப்பான இடங்கள். அதுக்கான பாதைகள் எல்லாம் செஞ்சுட்டாங்க. இப்ப கோடை என்பதால் காலை 10 முதல் மாலை 4 வரை ஒவ்வொரு ரெண்டு மணி நேரத்துக்கும் இடையில் 'ஸ்பில் கேட்'டைத் திறக்கறாங்க. 12 மணி ஷோவுக்குத்தான் நாம் வந்துருக்கோம்.
இந்த நேரங்கள் தவிர எப்பெல்லாம் அணையில் தண்ணீர் அளவுக்கதிகமாத் தேங்குதோ அப்பெல்லாம் கூட திறந்து விடுவாங்க என்றதால் இந்தப் பகுதியில் கீழே ஆத்துப் பாதைப் பாறைப்பகுதியில் மக்கள் யாரும் இறங்க அனுமதி கிடையாது. மலைச்சரிவில் நின்னு பார்க்கறதோட சரி. அங்கங்கே எச்சரிக்கை !
பாதுகாப்புக் கருதி, ஷோ டைமில் ஒவ்வொரு முறையும் நாலு முறை எச்சரிக்கை சங்கு ஊதுவாங்க. ஷோ ஆரம்பிக்க எட்டு நிமிட் இருக்கும்போது ஒரு முறை, அப்புறம் அஞ்சு நிமிட் இருக்கும்போது ஒன்னு, ரெண்டு நிமிட் இருக்கும்போது மூணாவது முறை, கடைசியா கேட் திறக்கும்போதே ஒன்னு !
ஊதிட்டானா....ஊதிட்டானான்னு காதை அந்தப் பக்கம் வச்சுக்கிட்டே நடந்து போனேன் :-) கரடு முரடான பாதைதான். காட்டு மரங்களும் பூக்களுமா இருக்கு!
எனக்கென்னவோ நம்ம 'திருக்குறுங்குடி மலைமேல் நம்பி' தரிசனத்துக்குப் போன பாதை ஞாபகம்தான் வந்தது.
இந்த மலைப்பகுதிகள் எல்லாமே மவொரிகளுக்கு மட்டும் சொந்தம் என்பதால் நாமும் இடத்தைப் பாழாக்காமல் கவனமாப் போகணும்.
பள்ளமான இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் பார்க்கவே ரொம்ப சாதுவா அசையாமல் நிக்குது !
லுக் அவுட் நோக்கிப் போனோம். ரொம்ப உயரத்துக்குப் போகலை. கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்துருச்சு. அதோ அங்கே பாலத்தாண்டேயும் நல்ல கூட்டம் ! முதல் சங்கு ஊதிட்டான். மனசுக்குள் பரபரப்பு... அடுத்த ரெண்டு நிமிட் என்னமோ ரொம்ப நேரம் போல ஒரு தோணல். மூணாவது முழங்குனதும் 'நம்மவர்' வீடியோ க்ளிப் எடுக்கறேன்னு என் செல்லை வாங்கிக்கிட்டார். நான் இன்றைக்குக் காலையில் இருந்து என் நோட்பேடில் படங்களை எடுத்துக்கிட்டு இருந்தேன். பெரிய ஸ்க்ரீன் (10.1)இல்லையோ....
நாலாவது சங்கு சப்தம் ரொம்ப லேசாத்தான் கேட்டது. இங்கே சனம் கப்சுப்னு மௌனம். பாறைகளையே உத்துப் பார்த்துக்கிட்டு இருக்கோம். ரொம்ப தூரத்துலே பாலத்தாண்டை கொஞ்சூண்டு வெள்ளை நிறம் தெரிஞ்சது..... பாறை இடுக்குகளில் மெதுவாத் தண்ணீர் வழிய ஆரம்பிச்சு, அப்புறம் போகப்போக..... ஹைய்யோ !! ஷட்டர் திறந்துட்டாங்க.....
ஒரு விநாடிக்கு 65000 லிட்டர் தண்ணீர் ..... 12 நிமிட் நேரத்துக்குப் பாயுது.... பாதிப் பாறைகளைக் காணவே காணோம்.... இவ்ளோ உயரத்துக்காத் தண்ணீர் மட்டம்....? பள்ளத்தாக்கே ரொம்பிருச்சு !
அங்கே ஷட்டர் மூடறாங்க போல..... ஓடற தண்ணி ஓட.... நிக்கற தண்ணி நிக்க...... ஆட்டங்க்ளோஸ்... எல்லாம் பழையபடியே..... பரபரன்னு மேலே வந்த தண்ணீர் அதே பரபரப்புடன் அடங்கிப்போச்.
தப்பித்தவறிக்கூட கீழே மக்கள் யாராவது இறங்கிட்டால் என்ன செய்யறதுன்னு பாதைக்கு ரெண்டு பக்கமும் வேலி போட்டு வச்சுருக்காங்க. இதெல்லாம் போன வருஷம் (2017) ஒரு பொண்ணு, தன் தோழியருடன் கீழே இறங்கி நீந்தப்போய், வெள்ளம் வந்து மரணம் சம்பவிச்சபின்னால் , எங்கே பார்த்தாலும் எச்சரிக்கைத் தகவலுக்கு போர்டு வச்சுருக்காங்க.
திரும்ப நிதானமா நடந்து பாலத்தாண்டை பார்த்தால் ஒரு ஈ காக்கா இருக்கணுமே ! காமணியிலே எல்லாம் காலி !
இந்தப் பாலத்துக்கு மேலேயே நின்னும் கூடப் பார்க்கலாம். ஆனாலும் வெள்ளம் பொங்கி வர்றதைப் பார்க்கணுமா இல்லையா ? வேற லெவல் அனுபவம் இல்லையோ !
கார்பார்க் வந்துட்டுப் பார்த்தால் எதிர்வாடையில் வாக்கிங் ட்ராக் இருக்கு.....ரெண்டு மணி நேரம் நடக்கறவங்க நடக்கட்டும்.... என்னாலே ஆகாது.....
தொடரும்........ :-)
7 comments:
அருமை சிறப்பு நன்றி
சிறப்பான தகவல்கள். படங்களும் அழகு. காணொளி கண்டேன் - ரசித்தேன்.
இப்படி மடை திறந்து பாயும் நதியலையைக் காண்பதில் ஆனந்தம் இருக்கத் தான் செய்கிறது!
தகவல்கள் அருமை. தண்ணீர் திறப்பதையே அட்ராக்ஷனாக வைத்துள்ளார்களே
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க வெங்கட் நாகராஜ்,
உண்மைதான். அதுவும் பாறைகளுள்ள கேன்யன் (அளவில் சின்னது ) இடையில் பாய்ந்து வரும் தண்ணீர் பயங்கரமான அழகே!
வாங்க நெல்லைத்தமிழன்,
நல்லவேளை.... இதுக்கு டிக்கெட் ஒன்னும் கிடையாது. இலவசம்தான் :-)
படங்கள் அழகு. தண்ணீர் பாய்ந்து வருவது சூப்பர்.
Post a Comment