Friday, October 16, 2020

I love Taupo....... (ரோட்டோருஆ பயணம் . பகுதி 12 )

வழக்கம்போல் ஏரி வேடிக்கையுடன் லஞ்ச் முடிஞ்சது.  கொஞ்சநேரம் ஓய்வுன்னு சொல்லிக்கிட்டே நான்  வலையில் மூழ்க, 'நம்மவர்' தெர்மல் குளியலுக்குத் தயாரானார்.  அதுக்கான குழாயில் ரொம்ப மெல்லிசாத்தான் தண்ணி வருது.   ஊரெல்லாம் 'ஜியோ தெர்மல் ஆக்டிவ்வா' இருக்கும்போது  இவ்ளோ மெதுவாத் தண்ணீர் வரும் மர்மம் என்னவோ ?  க்யா மாலும்.....
சொன்னாப்படிக்கு ஒன்னரை மணி நேரம் எடுத்தது தொட்டியில் முக்கால் பாகம் நிரம்ப. தண்ணீரில் முட்டை நாத்தம் வருதான்னு  கேட்டேன். இல்லையாம்.  மரமூக்கா இருக்குமோ ?  ஒரு அரை மணி நேரம்  தெர்மல் குளியல் ஆச்சு. என்ன பெரிய குளியல்....   தண்ணீரில் ஊறிக்கிடக்கறதுதான். அப்புறம் சட்னு ஒரு ஷவர்.  நான் வேடிக்கைதான் பார்த்தேன். எனக்கு இப்போ வேணாம்.  ராத்ரி கிடக்குமுன் பார்க்கலாம்.  திரும்ப ஒன்னரை மணி நேரம் காத்திருக்க முடியாது....  இப்பவே மணி அஞ்சரை ஆச்சு.  

ஒரு டீ போட்டுக்குடிச்சுட்டு, இருட்டுமுன்  கொஞ்சம் டவுனாண்டை போய்ச் சுத்திப் பார்க்கணும்... ..   டீ குடிச்சுக்கிட்டே ஏரியைப் பார்த்தால் நம்ம கெம்ப் போலவே ஒரு படகு இந்தாண்டை போகுது. கிட்டவரவச்சுப்  பார்த்தால்  இது அது இல்லை.  
மூணே நிமிட்லே டவுனுக்குப் போயிட்டோம். மூணு கிமீ கூட இல்லையே...  ஏரியிலும் வெளியிலும் கூட்டமே இல்லை...  தண்ணீரில் ஒரு சதுர மேடை போல ஒன்னு மிதக்குது.  'ஹோல் இன் ஒன்' என்ற  கரை விளையாட்டு ! மேடையும்  கொஞ்சம் பெருசுதான். எட்டுக்கு பனிரெண்டு  மீட்டர்! 
கரையில் இருந்து கோல்ஃப் பந்தை, அந்த மேடையில் இருக்கும் குழிக்கு அனுப்பணும். இடையில் தூரம் 102 மீட்டர். பொதுவா கோல்ஃப் விளையாடத் தெரிஞ்சவங்களுக்கு இந்த தூரம் எல்லாம் ஜூஜுபி. ஆனால் இங்கே  ? காத்து வேற!  புல்தரையா இருந்தால் உருண்டோடிப் போகும்.  அதெல்லாம் இல்லை பாருங்க.  
1993வது வருஷம்,  ஒரு 'பார்'லே உக்கார்ந்து தீர்த்தமாடிக்கிட்டு இருந்த நண்பர்கள் சிலர் பேச்சு வாக்குலே சொன்ன ஐடியா நல்லாவே ஒர்க்கவுட் ஆகியிருக்கு!  சின்ன அளவில் ஆரம்பிச்சு இப்ப வளர்ந்து போயிருக்கு.  பந்தைப் போட்டுட்டா ? பரிசு உண்டு. உள்ளூர் வியாபாரிகள் எல்லாம் சேர்ந்து கொஞ்சம் தொகையைக் கொடுக்கறாங்க.

இந்த வருஷம் (நாம் போன 2018 ) வெள்ளிவிழா ! பரிசுத்தொகை பத்தாயிரம் டாலர்! 

பார்க்கறதுக்கு ரொம்பவே ஈஸியா இருக்கும்தான்.  பழக்கம் இல்லாததால் நமக்கு அந்த கோல்ஃப் க்ளப்பே கனமாத்தான் இருக்கு. இரும்புக் கம்பி இல்லையோ !  அடுக்களையில்  கரண்டிகளை  அடுக்கி வச்சுருப்பதைப்போல  கோல்ஃப் க்ளப்புகள்  அங்கங்கே தொட்டிகளில் போட்டு வச்சுருக்காங்க. வெவ்வேற கனமும், வெவ்வேற தொலைவுக்குமானவைகளாம்.  அதுஞ்சரி.... அததுக்கு வேண்டித்தானே இருக்கு!   ஸ்டேண்டர்ட் செட்டுலே 14  க்ளப்ஸ் இருக்காம். இதுலே மரத்துலே செஞ்சதும் சேர்த்தி!   ஜல்லிக்கரண்டி, குழம்புக்கரண்டி, அன்னக்கரண்டி, நான் ஸ்டிக் பாத்திரத்துக்கு மரக்கரண்டின்னு.....    (தெரிஞ்ச உதாரணம்தான் சொல்ல முடியும், கேட்டோ ! )
பந்தும் கல்மாதிரிதான். கனக்குண்டு. சின்னது :-)

அந்த மேடைக்கும்  ஏரிக்கரையின் மேல்பகுதிக்கும் இடையில்  சரிஞ்சு போகும் மணற்பகுதி, அப்புறம் தண்ணீர், அதுக்கந்தாண்டைதான் மேடை.  நாலைஞ்சு பந்துகளை  வச்சுக்கிட்டு ஒவ்வொன்னா அனுப்பிக்கிட்டு இருந்தார் 'கடையை'ப் பார்த்துக்கறவர்.  இதுவும் வியாபாரம்தானே ?  20 $க்கு 25 பந்து. ஒரு சின்ன பக்கெட்டுலே போட்டுக் கொடுத்துருவாங்க.  இவ்ளோ வேணாமுன்னா 15$ க்கு 18.  நான் கில்லாடின்னா.... ஒரு டாலருக்கு ஒரே பந்து :-)
அவர் போட்ட பந்துகள் ஒன்னுகூட மேடைக்குப் பக்கம் போகலை. கீழே மணலிலும், தண்ணீரிலுமா விழுந்துக்கிட்டு இருக்கு.  பந்துகளைப் பொறுக்கி வந்து தர சிலர். (இப்படி ஒரு வேலை கிடைக்குதுல்லே ! ) தண்ணீரில் விழும் பந்துகளை Snorkel முறையில்  தண்ணீருக்கடியில் பார்த்து எடுத்துடறாங்க.
இந்த வழியாப் போற பயணிகள்,  ஒரு காமணி, அரைமணி நின்னு ஆடிட்டுப் போறாங்களாம். Fun ! 
அப்ப யாருமே ஜெயிச்சதில்லையான்னா........   ஏன் ஜெயிக்காம?  அநேகமா ரெண்டு வாரத்துக்கு ஒருவர்னு ஜெயிச்சுக்கிட்டேதானே இருக்காங்க.    இந்த 27 வருஷத்துலே 1063 வின்னர்ஸ்  இருக்காங்களே! 

 நெசமாவா ? 

அது என்னன்னா..... மேடையில்  மூணு இடத்துலே  குழிகள் இருக்கு. ஒன்னு  நீலம், ஒன்னு வெள்ளை, மூணாவது சிகப்பு. இதுலே வெள்ளைக் கொடி  வச்சுருக்கும் குழிக்குள்ளே போறமாதிரி பந்தை அடிப்பதுதான்  சுலபமாம்.  இதுலே ஜெயிப்புன்னா,  பரிசுத்தொகை அம்பது டாலர்!

ஓ... அப்ப அந்த பத்தாயிரம் ?  அதுலே ஜெயிச்சவங்க யாருமே இல்லைதானே ? 
இல்லையே    மூணு வருஷத்துக்கு முந்தி ஒருத்தர் ஜெயிச்சுருக்காரே ! 
அதுக்கப்புறம் ?  14 மார்ச், 2018லே ஒருத்தர் ஜெயிச்சுட்டார்!  (ஆஹா..... நாம் போனது 4 மார்ச். சரியாப் பத்துநாளுக்குப்பிறகு பத்தாயிரம் ஜெயிச்சுட்டார்  ஒருவர் !) எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம்னு ஒன்னு இருக்கு இல்லையோ ?   ஜெயிச்சது நிச்சயதார்த்தம் முடிச்ச, ஜோடி ஒன்னு!  கல்யாணச் செலவுக்காச்சுன்னு சொன்னாங்களாம் !  நல்லா இருக்கட்டும் !
இந்தப் பகுதி டவுனையொட்டியே இருப்பதால்  பயணிகள் நடமாட்டம் அதிகம்.  அதனால், உற்சாகத்துக்குன்னே சிலபல அலங்காரங்கள் !   Glass Brick  (கண்ணாடிச் செங்கல்  ? )வச்சு ஒரு அலங்காரம். (எனக்கு இந்தக் கண்ணாடிக்கல் ரொம்பப்பிடிக்கும். நம்ம வீடு கட்டும்போது இதுக்கும்  திட்டம் போட்டுருந்தோம்.  கடைசியில்  ஃப்ரேம் அடிச்சபிறகு பார்த்தால்  தடியான(அளவு கூடிய ) மரக்கட்டை காரணம்,  இடம் கொஞ்சம் குறைஞ்சு போச்சு :-( தியாகம் பண்ணிட்டாள், இந்த தியாகி )   
அலையில் ஒரு கல்லைக் காணோம்.... டிஸைனே இப்படியா இல்லே  கல்லைக் களவாண்டுட்டாங்களா ?  
  தனியாகவும், குழுவாகவும் சனம் படகோட்டிக்கிட்டுப் போகுது !  எஞ்சாய் !

I Love Taupo   
  ஹாலிடே  ஹாலிடே.....   பொதுவா, எங்க தெற்குத்தீவை விட,  வடக்குத்தீவுலே குளிர் கொஞ்சம் குறைவுதான். அதிலும் டாப்போ மாதிரியான  சுற்றுலாப்பயணிகள் நிறைய வரும் ஊரில் சராசரி காலநிலை பதினேழு!  ஓய்வா நடக்க இது போதாதா ? நாம் ஹவாய் செருப்புன்றது இங்கே ஜாண்டல்ஸ் !
நடக்க முடியலைன்னா....  சைக்கிளில் போகலாமே.....  

தொட்டடுத்துதான்  படகுத்துறைக்குப் போகும் வழி !  இந்தாண்டை கரையில் ஒரு மவொரி சிற்பம் !  அலங்கார நுழைவு வாசல், இல்லே ?  






அரை நிமிச நடையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துருந்தோம்.  ரயில் நின்னுருந்தால்  தண்டவாளத்தில் தலை வைக்கலாமுன்னு பார்த்தால்.... தண்டவாளமே இல்லைப்பா !  மோனோ ரயில்!  வீக் எண்டுகளில்  கடைசி வண்டி மத்யானம் மூணு மணியோட  முடிஞ்சுருது ! அடடா..... இன்றைக்கு ஞாயிறாப் போச்சே..... 


எதுத்தாப்லெ தோட்டம். அழகுப்பூக்கள், அங்கங்கே கற்பாறைகளில் கலை!  நடந்து நடந்து அந்தாண்டை வந்தால் டாப்போ டவுன்.  அட! இங்கெதான் இவ்ளோ நேரம் சுத்திக்கிட்டு இருந்தமா ? 





 

பள்ளிக்கூடம்..... 

ஏர்லி செட்லர்ஸ்   & மிலிடரி மக்கள்ஸ் கல்லறைகள் ரொம்ப நீட்டா இருக்கு!  பார்ட் ஆஃப் த ஹிஸ்டரி இல்லையோ ! 

பொழுது சாயுதேன்னு  தெருவுக்கு அந்தாண்டை கடந்து போனால்..... கடைகளோ கடைகள், ரெஸ்ட்டாரண்டுகள் இத்யாதி. ஒரு இந்தியக் கலைப்பொருட்கள் கடை ஒன்னு சூப்பர்!   வாங்கும் வகையில் விலை இல்லை. வேடிக்கை பார்த்தோடு சரி ! 
நானும் தோழியும் ஏறக்கொறைய இதைப்போல ஒரு கடை ஒன்னு நடத்தினோம். அதனால் விலை இப்படித்தான் இருக்குமுன்னு புரியுதுதான்.... ஆச்சு 17 வருஷம். ஆறுமாசம் சமாளிச்சுட்டு அப்புறம் ஏறக்கட்டியாச்சு.  போகட்டும்... நல்ல புத்தி கொள்முதல் இல்லையோ !
 
கொஞ்சம் சுத்தலுக்குப்பிறகு, ஒரு இண்டியன் ரெஸ்ட்டாரண்டில் 'டேக் அவே' வாங்கிக்கிட்டு அறைக்கு வந்தாச்.

நாளைக்கு இந்த ஊரைவிட்டுக் கிளம்பறோம் !

I Love Taupo   

தொடரும்........:-)


8 comments:

said...

அழகான இடமாகத் தெரிகிறது. படங்கள் அனைத்துமே அழகு.

தொடரட்டும் பயணம் - தொடரட்டும் பதிவுகள்.

said...

/ திரும்ப ஒன்னரை மணி நேரம் காத்திருக்க முடியாது.... / ஐயோ ரீச்சர்... அந்த ஒன்றரை மணி நேரம் இருவருக்கும் பொதுவானது.. இதை எல்லாம் நான் சொல்ல வேண்டியதா இருக்கு. விட்டா வரலாற்று வகுப்பு மாணவர் தலைவனை பயாலஜி ரீச்சர் ஆக்கிவீங்க போல!

said...

/இதுலே மரத்துலே செஞ்சதும் சேர்த்தி! /

அப்ஜெக்ஷன் யுவரானர்.

முதலில் கால்ப் விளையாட்டு மட்டைகள் மரத்தாலும் இரும்பாலும் செய்யப்பட்டவையாக இருந்தன. நீளமும் கனமும் கணக்கில் கொண்டு 1,2 என இலக்கமிடப்பட்டன. பந்தை அடிக்க வேண்டிய தூரத்தைக் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ற மட்டையை தேர்தெடுப்பர்.

ஆனால் இன்று இவை எல்லாமே ஹைப்ரிட் என்னும் வகையில் உலோகக்கலப்பினால் செய்யப்பட்டவையே. ஆனால் பாரம்பரியமாக 1 Wood, 8 Iron என வைத்த பெயர்கள் மட்டும் மாறாமல் இருக்கின்றன. எனவே மரத்தினால் செய்தவையும் சேர்த்தி என்றது உண்மையல்ல.

இந்த வாதத்தை மன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டு விளக்கம் சொல்லும் மாணவர் தலைவனுக்கு உபரி மதிப்பெண்கள் வழங்க உத்தரவு இட வேண்டும்.


said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் நாடு, மக்கள் தொகையும் ரொம்பவே குறைவு. அழகாகவும் சுத்தமாவும் இடங்களை வச்சுருக்காங்க. இதெல்லாமே அழகைக் கூட்டிக் காமிக்குதே!

said...

வாங்க கொத்ஸ்,

உலோகக்கலப்பா ? இதிலும் கலப்படமா? ஹைய்யோ ! அப்ப அவ்வளவா கனம் இருக்காதா ? ரொம்பப்பூந்து பார்க்கலையே....

உபரி மதிப்பெண் எல்லாம் எதுக்கு? நூத்துக்கு நூறே போட்டுட்டேன் :-)

மட்டையை என்னால் தூக்க முடியலையே....... :-(

போகட்டும்.......... அப்புறம்... அந்த ஒன்னரை மணி...?

வானப்ரஸ்தத்தில் அடங்கலை :-)

said...

பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

said...

Madam aduththa pathivu eppoluthu ?

said...

தொடரும் போட்டு ஒரு மாதமாகப்போகுதே... என்னாச்சு?

தீபாவளி நல்வாழ்த்துகள்