Wednesday, October 07, 2020

துள்ளித்துள்ளிப் பாயும் அருவி........(ரோட்டோருஆ பயணம் . பகுதி 8 )

என்னடா 'தண்ணி பார்த்தேன், தண்ணி பார்த்தேன்'னு சொல்லிக்கிட்டே போறாளேன்னு இருக்கா ? பேசாமத் 'தண்ணி டூர்' னே தலைப்பு வச்சுருக்கலாமோ ?   அடுத்துப்போனதும் தண்ணி இடம்தான்.  ஒரு விநாடிக்கு  ஒரு லக்ஷத்து இருபதாயிரம் லிட்டர் தண்ணீர், பதினொரு மீட்டர் உசரத்துலே இருந்து விழுந்துக்கிட்டே இருக்கு ! Huka Falls.......
இங்கிருந்து  ஒரு அஞ்சு கிமீ தூரத்துலே இருக்கும் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர்தான் இப்படி...... Aratiatia Dam பக்கத்துலே இருந்து ரெண்டு மணிநேரம், காடு, மலைப் பாதையிலே   ஏழு கிமீ  நடந்தா இங்கே வந்துடலாம்தான்.  எனக்கு ரெண்டுலே முடியாது ஒரு நாலு ?  ப்ச்...  சரியான ஷூஸ்  கொண்டு வரலைப்பா.....  போகட்டும், மௌன்ட்டென் பைக்லே  முக்காமணியில் போயிடலாமுன்னா....   முதல்லே வெறும் சைக்கிளே ஓட்டத்தெரிஞ்சாதானே.....  மௌண்ட்டென், கிவுண்ட்டன் எல்லாம் அதுக்கப்புறம் இல்லையோ....   போகட்டும், நாம்  ஒரு எட்டு கிமீ காரில்  பயணம் போனால் போதாதா?  காமணிக்குள்ளே போயிடலாமே  :-)
Aratiatia Rapids  வரை வந்தவங்க ,  Huka Falls  River Cruise  போக விரும்பினால், சட்னு இங்கே  இருந்தே பிடிச்சுக்கிட்டுப் போகறதுக்கு  ஷட்டில் வேன் நிக்குது. கூட்டிப்போய் திரும்ப  இங்கே இட்டாந்துருவாங்க.  80 நிமிட் படகுப்பயணம்.  நீர்வீழ்ச்சியாண்டைக் கிட்டக்கப்போய் பார்க்கலாம்.  படகுக்குப்பெயர் கூட Maid of the Falls.   அட!   நியாக்ராவில்   Maid of the Mist  பார்த்த நினைவு வருதுல்லே ? 
போறவங்க போகட்டும்னு.... நாம் கிளம்பிப் போற வழியில் ஒரு கண்ணாடிக் கலைப்பொருட்கள்  செய்யும் இடம். எட்டிப் பார்த்தால் ஆச்சு. ச்சும்மா...... பெருசா ஒன்னும்  வாங்கற எண்ணமெல்லாம் இல்லை..... வெனிஸ்லே முதல்முதலா இப்படி Glass Blowing  பார்த்துருக்கோம்.  அப்புறம் நிறைய இடங்களில் பார்த்தாச்சு. இங்கே லாவா க்ளாஸ்னு பெயர் பார்த்ததும் குட்டியா எதாவது கிடைச்சால் கொள்ளாம் என்ற ஆசைதான்.  



அடுத்து இன்னும்  கொஞ்சதூரத்துலே Volcanic Centre  Helipad & Cafe இருக்கு. பசங்க விளையாட  ஒரு  ஹெலிகாப்டர் வச்சுருக்காங்க. விளம்பரம்தான். (இன்னும்  ஹெலிகாப்டரில் பயணிக்கலை என்பதை ஞாபகப்படுத்திக்கிட்டேன். நல்ல சான்ஸ் ஒன்னு  ருத்ரப்ரயாகாண்டை கிடைச்சது.  போய் இறங்கினாலும் நிறைய நடக்கணும்னு சொன்னதால் ஜகா வாங்கிட்டேன்.ப்ச்... ) 

இங்கே  Scenic Flights னு  எங்கேயும் இறங்காம  ஒரு சுத்து சுத்திட்டு வரலாம்தான். என்னமோ வேளை வரலை.... போங்க...



ஹுகா ஃபால்ஸ் வந்துட்டோம்.  பயணிகளுக்கான விஸிட்டர்ஸ் சென்டர், தீனிக்கடை, டாய்லெட்ஸ் க்ளீனிங் எல்லாம்  வாலன்டியர்ஸ் நடத்தறாங்க.  லாப நோக்கமில்லாத, தன்னலமற்ற சேவை.  விரும்பினால் கொஞ்சம் காசு உண்டியலில் போடலாம். 
ரெண்டு பக்கங்களிலும்  தண்ணீரையொட்டிய மலைப்பகுதியில் கொஞ்சம் கரையோடவே நடந்து போனால்.... ஒரு  குறுகலான இடத்தில் போட்டு வச்சுருக்கும் பாலத்தில் இருந்து  நீர்வீழ்ச்சிகளைப் பார்க்கலாம்.  
நடக்க சோம்பல் பட்டுட்டேன். சரிவான நீர்வீழ்ச்சி என்பதால்  நெட்டுக்குத்தலாத் தண்ணி விழாது....  சின்னச் சின்ன உயரத்துலே இருந்து  துள்ளித்துள்ளித் தாவித் தாவி சரிஞ்சு வந்தாட்டுக் கரைபுரண்டு ஓடுறவகை.  அதை  இன்னொரு  பாலத்துலே இருந்தே பார்த்தால் ஆச்சுன்ற மெத்தனம்தான். 


இங்கேயும் நல்ல கூட்டம்.  Aratiatia Rapids  பார்க்க வர்றவங்க, 'காலோடு' இங்கேயும் வந்துட்டுத்தான் போறாங்க.  அருவியை இன்னும் கிட்டக்கப் பார்க்க



வந்த வேலை முடிஞ்சதுன்னு கிளம்பி அடுத்த இடத்துக்குப் போனோம். ஒரு அஞ்சு கிமீ தொலைவுதான். இங்கேதான் ரெண்டுநாள் தங்கப்போறோம். 
இங்கே என்ன விசேஷம்?  அதே தண்ணிதான் :-) 

இப்பெல்லாம் எல்லா ஹொட்டேல்/ மொட்டேல்களிலும் செக்கின் டைம் பகல் ரெண்டு மணிக்கு மேலேதான். நாமும்  நகருக்குள்  நுழைஞ்சதுமே போறபோக்கில் லஞ்சு  முடிச்சுக்கலாமேன்னு  ஷாப்பிங் ஏரியாவில்  ஒரு ஸ்நாக் பாரில் ச்சங்கி ஃப்ரைஸ், ஸாலட், வாங்கி சாப்டுட்டு,  பக்கத்தில் இருந்த  இன்னொரு கடையில் வாழைப்பழம்,  மாம்பழ ஐஸ்க்ரீம் வாங்கிக்கிட்டு, அடுத்த ரெண்டுநாட்கள் தங்கப்போகும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.  

Cedarwood    to  Chelmswood...... வுட் லே இருந்து  வுட்..... !

தொடரும்.......  :-)


3 comments:

said...

ஆஹா.... ப்ரவாகமாக ஓடும் தண்ணீர் பார்க்கும்போதே மனதில் எவ்வளவு மகிழ்ச்சி.

தொடரட்டும் பயணம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பெரிய அளவில் பொங்கும் புனல்! இன்னும் கிட்டக்கப்போய் பார்த்திருக்கலாம்.... கோட்டை விட்டுட்டேன்....

said...

வெளிர் நீல நிறத்தில் அழகு.