ஏறக்கொறைய சிங்கப்பூர் சைஸூன்னு ஒரு கணக்கு. சிங்கை 721.5 சதுர கிமீ பரப்பு. இங்கே ஊரும் நட்டநடுக்கா ஏரியும் சேர்ந்தால் 748.6 சதுர கிமீ அளவு. இதுலே அந்த ஏரி இருக்கு பாருங்க.... அது மட்டும் 616 சதுர கிமீ. அப்ப ஊரு ?
அதான் ஏரியைச் சுத்தி அங்கங்கே பரவிக்கிடக்கே.... 132.6 சதுர கிமீ. இது போதாது ? தாராளம்..... இந்த ஊர் சனத்தொகை இருபத்தி அஞ்சாயிரத்துக்கு நூறு கம்மி. இது போனவருஷக்கணக்கு. இப்ப வேணுமுன்னா ஒரு நூறைக் கூட்டிக்கலாம். கால் லக்ஷம் !
(ஐயோ..... ஏன் இப்படி நம்ம விஜயகாந்த் மாதிரி புள்ளிவிவரம் சொல்லிக்கிட்டு இருக்கேன் !!!!! )
நியூஸியிலேயே மிகப்பெரிய ஏரி இது. பெயர் Lake Taupo. லேக் டாப்போ. நம்பர் ஒன் என்று டாப் மோஸ்டா இருக்குன்னு சொல்றாங்களோ !
இம்மாம் பெரிய ஏரி, நிலாவில் இருந்து பார்த்தால் தெரியுதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதானே ... 'சந்தேகமா இருந்தா, நீயே நேரில் போய்ப் பார்த்துக்கோ' ஆமாம். நிலாவுக்குப்போன ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் கிட்டே கேட்டுருக்கலாம் இல்லே ?
கடைசியில் நாஸா சொல்லிருச்சு, 'விண்கலம் பூமியைச் சுத்தி வரும்போது ஃபோட்டோ புடிச்சுருக்கு, அத்தைப்பாரு'... சரி... நிலாவுக்குப்போன விண்கலம் சொன்னா, அது நிலாவே சொன்னாப்லெதானே :-)
மூணு லக்ஷத்து வருஷங்களா கொதிச்சுக்கிட்டே இருந்த பெரிய எரிமலை ஒன்னு சமீபத்துலே ஒரு 26,500 வருஷங்களுக்கு முன்னே வெடிச்சுப் பொங்கிருச்சு. அதுலே ஏற்பட்ட குழியில் ( Crater ) தண்ணி ரொம்பித்தான், இப்ப டாப்போ ஏரி ! இனிமே வெடிக்குமான்னு ஒரு கேள்வியும், அதுக்கு ஆமாம் என்ற பதிலும் உண்டு. ஆனால் எப்போ என்றது யாருக்கும் தெரியாது...
இங்கத்து ஹீரோ இந்த ஏரிதான் என்பதால், மற்ற எல்லாமே இதைச் சுத்தியே. கடைகண்ணி, ஹோட்டல் பிஸினஸ், மத்த யாவாரம், பொழுதுபோக்கு அம்சம், போக்குவரத்து இப்படி எல்லாம் ஏரியை வச்சுத்தான். மக்கள் வாழ்க்கைக்கு ஏரியே ஆதாரம். எல்லோருக்கும் சோறு போடுதுன்னு சொல்லலாம்.
நாம் தங்கும் இந்த மோட்டலும் கூட ஏரியாண்டைதான். லேக் டெர்ரஸ்னு அட்ரஸ். அறை வேணுமுன்னு புக் பண்ணும்போதே ஏரி வியூதான் வேணுமுன்னு கறாராச் சொல்லியிருந்தோம். அதே போலத்தான் கிடைச்சது. இதுக்குக் கொஞ்சம் வாடகை கூடுதல். என்ன ஒன்னு..... கண்பார்வையைக் கொஞ்சம் விரட்டுனால்தான் ஏரி தெரியும். நமக்கும் ஏரிக்கும் இடையில் பார்வையை மறைக்க ஒன்னுமே இல்லைன்னாலும், மோட்டலுக்கு முன்பக்கம் ரொம்பவே விஸ்தாரமா இடம் விட்டுட்டுக் கட்டடத்தைக் கொஞ்சம் உள்ளே தள்ளிக் கட்டி இருக்காங்க.
உள்பக்கம் பெரிய முற்றத்தில் ஒரு பக்கம் நீச்சல் குளம், இந்தாண்டை சுத்திவர அறைகள். அறைக்குள் போய் எதிர்ப்புறம் இருக்கும் திரைச்சீலையைத் தள்ளினால்..... ஏரி!
வாசலில் பறக்கும் கொடிகளில் இந்தியக்கொடியைப் பார்த்ததும் கொஞ்சம் சந்தோஷப்பட்டேன் !
சிம்பிளான அலங்காரங்களுடன் அறை நல்லாவே இருக்கு! பாத்ரூமில் வழக்கமான ஷவர் தவிர்த்துத் தனியாக ஒரு Thermal water Pool. Geo Thermal activities அதிகம் உள்ள பூமி என்பதால்..... நாம் அதைத்தேடி ஓடவேணாம். நம்மைத்தேடி அதுவே வந்துருது. இயற்கை வெந்நீரூற்று என்பதால், நம்ம குழாய்த்தண்ணியைப்போல் சட்னு நிரம்பாது. நம்ம அறைத்தொட்டி நிரம்ப ஒன்னரை மணி நேரம் எடுக்குமாம்.
கொஞ்சநேரம் ஓய்வெடுத்துட்டு ஏரியாண்டைப் போய்ப் பார்க்கணும். நல்ல வெயிலாக இருக்கே... விடக்கூடாதுன்னு வாங்கி வந்த மேங்கோ ஐஸ்க்ரீமை நம்ம அறைக்கு வெளியே போட்டுருக்கும் இருக்கைகளில் உக்கார்ந்து உள்ளே தள்ளிக்கிட்டே ஏரியையும் ரசித்தோம். நமக்கும் ஏரிக்கும் நடுவில் லேக் டெர்ரஸ் சாலை.
சாலையில் நல்ல பரபரப்பு. ஏகப்பட்ட ஆட்கள் ட்ராஃபிக் கோன்களை அடுக்கி வச்சுட்டு நடுச்சாலையில் இங்கேயும் அங்கேயுமாப் போறாங்க. குழந்தையும் குட்டியுமா குடும்பங்கள் வேற...
இன்றைக்கு நியூஸி Ironman போட்டி இங்கே நடந்துக்கிட்டு இருக்குது. 3.8 கிமீ நல்ல தண்ணியில் நீச்சல், 180 கிமீ சைக்கிள் ஓட்டம், அப்புறம் 42.2 கிமீ ஓட்டம் முடிக்கணும். காலையில் ஆரம்பிச்சு முதலிரண்டும் முடிச்சு இப்பக் கடைசி ஓட்டம் ஓடிக்கிட்டு இருக்காங்க.
வயசு லிமிட் ஒன்னும் கிடையாது போல.... என் கண்ணுக்கு முதியவர்கள் ஓடிக்கிட்டு இருக்காங்க. 'நம்மவர்' சொல்றார் வயசு ஒரு அம்பது அம்பத்தியஞ்சுதான் இருக்குமுன்னு !
போட்டியில் பங்கெடுப்பவர் குடும்பங்கள் அங்கங்கே..... அப்பனுக்கு வாழ்த்து சொல்லி ஊக்கப்படுத்தும் பிள்ளைகள் கையில் வாழ்த்து போஸ்டர்களுடன்.....
அங்கங்கே தண்ணீர், ஜூஸ் விநியோகத்துக்கான ஏற்பாடுகள் இப்படி ஒரே கலகல..... இதுலே அவரவர் வீட்டுச் செல்லங்களும்......
நாமும் கொஞ்ச நேரம் ஓடும் மக்களுக்குக் கைதட்டி உற்சாகப்படுத்தினோம். உண்மையில் முதல் மூன்று இடங்களுக்கானவை எப்பவோ முடிஞ்சு இருக்கும். இப்போ ஓடும் மக்கள் எல்லாம் கலந்துக்கிட்ட நிகழ்ச்சியைக் கட்டாயம் முடிக்கணும் என்ற நிலையில் இருப்பவர்கள்தான். வெற்றின்னு சொல்றது இதுதான் இல்லையோ.... மனம் தளராமை.... எடுத்த காரியம் நிறைவேற்றல்.... நல்லா இருங்க மக்களே!
குண்டுசட்டிக்குள்ளே குதிரை ஓட்டுறாப்லெதான் நாம் நம்ம மோட்டலுக்கு முன்னாலேயே நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம். சரி ஒரு காஃபி குடிக்கலாமுன்னு அறைக்குப் போகுமுன் வேற முக்கியமானவை இங்கே என்னன்னு பார்க்கணும். ஆஃபீஸில் ஏகப்பட்டத் தகவல்கள் அடங்கிய ப்ரோஷர்ஸ் கொட்டிக்கிடக்கு.
வேண்டியவைகளை எடுத்துக்கிட்டு, காஃபி போட்டுக் குடிச்சுட்டுக் கொஞ்சம் ஊரைச் சுத்திப் பார்க்கலாமுன்னு கிளம்பிட்டோம். பொதுவா எல்லா ஊர்களுக்கும் ஒரு லுக் அவுட் இருக்குமே.... அங்கே போனால் ஊரையே பார்த்தாப்லெ இல்லை ?
திரும்பி வரும்போது பார்த்தால் போட்டியாளர்கள் கூட்டம் குறைஞ்சே போயிருக்கு. ஒன்னு ரெண்டு பேர்தான். கடைசி நபர் முடிவு எல்லைக்குப் போகும்வரை எல்லாம் அப்படிக்கப்படியே...... போட்டி அமைப்பாளர்கள், வாலண்டியர்ஸ் எல்லாம் நின்னுக்கிட்டு இருக்காங்க.
இருட்டவும் ஆரம்பிச்சுருச்சு. நாமும் நகரத்துக்குள் போய்ச் சின்னதா ஒரு சுத்து. ஏகப்பட்ட இண்டியன் கடைகள்! அதுலே ஒன்னில் ராச்சாப்பாடு வாங்கிக்கிட்டு அறைக்கு வந்துட்டோம். பொதுவா நியூஸியில் ராச்சாப்பாடு ஆறரை ஏழுக்கு முடிஞ்சுரும். அதையும் டின்னர்னு சொல்லமாட்டாங்க. 'டீ' யாம் ! நம்ம வீட்டில்தான் எட்டரை. இதுவே பலருக்கு வியப்பு :-)
இப்பெல்லாம் நியூஸியில் எந்த ஊருக்குப் போனாலும் இண்டியன் சாப்பாடு கிடைக்குது. எத்தனை கடைகள் இருந்தாலும் , நாடெங்கும் ஒரே மெனு..... யார் இப்படி செஞ்சு வச்சாங்கன்னு தெரியலை..... நமக்கு ஒரே போர்தான். ஆனால் போற இடங்களில் மோட்டல்களில் சமையல் செஞ்சுக்க எல்லா வசதிகளும் இருந்தாலும்..... என்னால் முடியாது. அடுப்பை விட்டு வெளியே வரணுமுன்னுதானே டூர் போறோம். போன இடத்திலுமா ? நோ நோ......
அறைக்கு வெளியே போட்டுருக்கும் அமைப்பில் உக்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டே ஏரியைப் பார்க்கிறோம். கடைசிப் போட்டியாளர் வந்து சேர்ந்துட்டார் போல.... மணி ஏழே முக்கால் ஆச்சே..... சாலையை க்ளியர் பண்ணிக்கிட்டு இருக்காங்க.....நல்ல நாளில் வந்துருக்கோம் பாருங்கன்னுக்கிட்டே வலை மேய்ஞ்சு, மெயில் பாக்ஸ் பார்த்துக் கடமைகளை முடிச்சுக்கிட்டுச் சின்னதா ஒரு ஷவர் எடுத்துக்கிட்டுத் தூங்கப்போயாச்சு.
தெர்மல் வாட்டர் குளியல் நாளைக்கு :-)
தொடரும்........ :-)
6 comments:
செக்கின் பண்ணின அன்றைக்கே தெர்மல் வாட்டர் குளியல் கிடையாதா
தகவல்கள் ஒவ்வொன்றும் சிறப்பு.
அறைக்குள்ளேயே வெந்நீர் ஊற்று குளியல்! ஆஹா... எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.
படங்களும் அழகு. மாலை நேரம் எடுத்த படம் சிறப்பு.
வாங்க நெல்லைத்தமிழன்,
ஒன்னரை மணி நேரம் காத்திருக்கணுமேன்னுதான்..... ப்ச்....
வாங்க வெங்கட் நாகராஜ்,
பயணிகளைக் கவர்ந்து இழுத்தாகணுமே... அதான் இப்படியெல்லாம்.....
அருமை நன்றி
sorry for the very late attendance
நாங்களும் சுற்றி வந்தோம்.
Post a Comment