Friday, October 27, 2017

துள்ஸி, உன் ஆசைக்காக......(இந்திய மண்ணில் பயணம் 68)

கண்ணுக்கு முன்னால் தெரியும் ராஜகோபுரம் வழியா நேராப்போய் கோவிலுக்குள் நுழையலாம்தான்....  இவ்ளோ போக்குவரத்து இல்லாமல் இருந்தால்.......  காலைத் தெருவுலே வைக்க இடமில்லையே.....  கோவிலையே வலம் வந்து  அங்கே இங்கேன்னு  போய் ரங்கா கோபுரத்தாண்டை இருக்கும் பார்க்கிங் பகுதியில் வண்டியைக் கொண்டுபோய் நிறுத்தியதும்,சகுனம் ரொம்பவே சரியா அமைஞ்சு போச்சு!
ஆனால் இவள், அவள் இல்லையாக்கும்...... !!!

புதுசா  காலணி பாதுகாப்புக்கு ஒரு கட்டடம்  கோபுரத்துக்கு அந்தாண்டைப்பக்கம்  கட்டியிருக்காங்க.   ரொம்ப நல்லது.  நிதானமா, நிம்மதியா  சாமி தரிசனம்  செஞ்சுக்கலாம் :-)
ரங்கா கோபுரவாசலுக்குள் போய்  ரெங்கவிலாஸ் மண்டபத்துக்குள் போறோம்.  நல்ல  கூட்டம் இருக்கேன்னு பார்த்தால்.... நம்ம ராமானுஜரின் ஆயிரம்  ஆண்டு விழாவின் அங்கமா சிறப்பு சொற்பொழிவு நடக்கறது.  தினமும் நடக்குதாமே!  இன்றைக்கு  சென்னை திரு வேங்கட கிருஷ்ணன்!  மாலை அஞ்சு முதல் ஆறுவரை. நாம் சரியா  அஞ்சு நாப்பத்தியெட்டுக்குப் போயிருக்கோம்.....  :-(  ப்ச்...
பத்து நிமிட் கேட்டுட்டு, கவுன்ட்டரில் போய் கெமெரா டிக்கெட் ஒன்னு வாங்கினேன். செல்ஃபோன் கேமெராதான் கையில் இருக்கு.  போகட்டும்....
ஆர்யபடாள் வாசலுக்குள் போய்  பெரிய திருவடியைக் கும்பிட்டுத் திரும்பினா ஊஞ்சல் மண்டபத்தாண்டை கூட்டம். என்னன்னு போய்ப் பார்த்தா....  ஹைய்யோ!!!!
பலமுறை ஸ்ரீரங்கம் போயிருந்தாலும், நம்பெருமாளை  இங்கே ஊஞ்சலில் பார்ப்பது இது முதல்முறை! ரொம்ப வருசத்துக்கு முந்தி,  கருவறையில் இருந்து நடையழகைக் காமிச்சுக்கிட்டே வெளிவரும் நம்பெருமாளை தரிசனம் செஞ்சோம்.  பயங்கர கூட்ட நெரிசல், நாங்க வேற  கைடு  காளிமுத்து கூட  வாசலுக்கு  நேரெதிரா  திண்ணையில்   மன்னர் விஜயரங்க சொக்கநாதர் குடும்பத்தோடு நிக்கறாரே  அவர் பக்கத்துலே நின்னுருந்தோம். நின்ன இடத்துலேயே நின்னு பார்த்ததுதான்.
இந்த நம்பெருமாள் இருக்காரே...  ஊர் சுத்தணுமுன்னா முதல் ஆளா ரெடியா நிப்பார்.  எப்போ கிளம்பச் சொன்னாலும் ரெடின்னு காமிக்கக் காலில் இருக்கும் செருப்பைக்கூடக் கழட்டறதில்லை!  கருவறைக்குள் போய் நிக்கும்போதும் காலில் செருப்பு!   பார்த்தீங்களா... அநியாயத்தை.... தங்கச் செருப்புன்னு பரவாயில்லையாக்கும்.....
வருசம் முன்னூத்தி அறுபத்தியஞ்சு நாளில்  கிட்டத்தட்ட முன்னூறுநாட்கள்  புறப்பாடுன்னு கிளம்பிடறார்.

வீதி உலா மட்டும்தான் போறாரோன்னு பார்த்தால் அதுவும் இல்லை.  ச்சும்மாவாச்சும்  கோவிலுக்குள்ளேயே இந்த மண்டபம், அந்த மண்டபமுன்னு போய்  ஸேவை சாதிச்சுட்டுச் சாயங்காலமா  கிடப்பில் இருக்கும் பெரியவரோடு போய் சேர்ந்துக்கறார்.

இதுலே பாருங்க..... எப்படித்தான் நாம் போற தினங்கள் தெரியுதோ.... அன்றைக்கு மட்டும் ரொம்ப நல்ல பிள்ளை வேஷம் போட்டுக்கிட்டு  வெளியே தலை காமிக்கிறதில்லை :-)

உள்ளூர்க்காரர்கள் எப்பவும்  'அங்கெ பார்த்தோம், இங்கே  பார்த்தோமு'ன்னு  சொல்றதைக் கேக்கும்போது....  ஐய்யோடா..... நாம் எப்போ பார்ப்போமுன்னு ஏக்கம் வந்துரும் எனக்கு.

அதனால்தான் ஒரு வருஷம் ஸ்ரீரங்கத்தில் தங்கி எல்லா ஸேவைகளையும் பார்த்து ரசிக்கணுமுன்னு  நம்மவரை நச்சரிச்சுக்கிட்டே இருப்பேன்.

அதெல்லாம் நடக்கற காரியமா?  ஒரு ஆறு, இல்லே மூணு.... ?  சரி யாருக்கும் வேணாம் ஒரே ஒரு மாசம்?

ஹூம்... ஒரு வாரம் சேர்ந்தாப்போல தங்குனாப்போதும் என்று ரொம்பவே இறங்கி வந்துருந்தேன்.....

இப்போ.... 'பார்க்கலைன்னு  குறை சொல்லிக்கிட்டே இருந்தியே...  இப்ப நல்லாப் பார்த்துக்கோ'ன்னு  ஊஞ்சல் ஸேவையில் மெள்ள ஆடிக்கிட்டே  சொல்றானோ!


டோலோத்ஸவம் நடக்கறது இப்போ. இன்றைக்கு நாலாம் நாளாம். மொத்தம் ஒன்பதுநாள் உற்சவம், ஏகாதசிக்கு முடியுமாம்.  1489 வது வருஷம், ஸ்ரீ கந்தாடை ராமானுஜரால் ஆரம்பிச்சு வைக்கப்பட்ட விழா! ஐப்பசி மாசம்   தீபாவளிப் பண்டிகைக்கு முன்னே இதெல்லாம். விழா முடிஞ்ச  மூணாம்/நாலாம் நாள்  தீபாவளி வந்தே வந்துரும் :-)

இந்த ஒன்பதுநாளும்   வந்தவுடனே  திருமஞ்சனம், அலங்காரம், ஆரத்தி, அரையர் ஸேவைன்னு கொண்டாட்டம்தான். முதல்நாளும் ஏழாம்நாளும் கூடவே தாயார் வந்து சேர்ந்துப்பாங்க.  மற்ற நாட்களில்  தனிக்கோவில் ராஜா!


படங்களை எடுக்கலாமுன்னா  கூட்டத்தில்  தலைகளாத்தான் தெரியறது....  சுத்தும் முத்தும் பார்த்தப்ப.... வாசக் கதவோரம் இருந்த படிக்கட்டு வாகா இருக்குமோன்னு அதுலே ஏறிப்போனா  தூண்கள் இடையில்  மறைக்கிறது. மெள்ள மேலே மண்டபத்துக்குப் போனால், இந்தாண்டை ஊஞ்சல் வியூ அட்டகாசம்.    பால்கனி ரெய்லிங் போலத்  தடுப்பு வேற!  சட்னு அங்கேயே உக்கார்ந்துட்டோம்.

கொஞ்ச நேரத்தில்  திரை போட்டாச்சு.   அரைமணி போல ஆகுமாம். கூட்டம் எல்லாம் இங்கே இருக்கு. நாம் போய் பெருமாளைப் பார்த்துட்டு வரலாமான்னார் நம்மவர்.  சரின்னு கீழே இறங்கிப் போனோம்.  அம்பது ரூ  டிக்கெட் இல்லையாம்.  விழாக்காலம்  வரவுக்கு என்ன  குறைச்சல்?  இருநூத்தியம்பது கிடைச்சது. 

பெரிய திருவடிக்கான நகை(நாக)நட்டு லிஸ்ட் இப்பதான் பார்த்தேன்!  ஓ....
அதெல்லாம் கூட்டம் இல்லாமல் இல்லை.  வரிசையில் முணுமுணுக்காமல் நின்னேன்.  பாத தரிசனமும்,  முகமண்டல தரிசனமும் ஆச்சு! தூண்களைப் பார்க்கணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்து இந்தமுறையும் கோட்டை விட்டேன். மறக்கடிச்சுடறான்.......

தரிசனம் முடிஞ்சதும் அந்தாண்டை  போகும் வழியில் போய் திரும்பக் கொடிமரத்தாண்டை வந்து சேரும்போது....   பிரஸாதங்களை ஒரு கூடையில் வச்சு பட்டர் ஒருத்தர் கொடுக்கறார்.  காசுக்குத்தான்.  நம்ம கீதாவும் ஒரு முறை சொல்லி இருந்தாங்க....    பிரஸாத ஸ்டாலில் விற்பது உண்மையில் அரங்கன் பிரஸாதமே கிடையாது. ஒப்பந்தக்காரர் செஞ்சு விற்கறது.  உண்மையில் அரங்கனுக்கு நைவேத்யமா  காண்பிப்பதை   சிலசமயம் பட்டர்கள், அவர்களுக்கான பங்கை   வெளியே  கொண்டுவந்து விற்பது உண்டுன்னு!

ஆஹா.....ன்னு பாய்ஞ்சு போய்  மூணு தோசைகளும், ரெண்டு  வடையுமா வாங்கிக்கிட்டேன்.  அப்புறம் சாப்பிட்டுக்கலாமுன்னு ஒரு பையில் போட்டு வச்சோம்.
'எதுக்கும்மா இவ்ளோ வாங்கிட்டே'ன்னார் இவர்.  'இருக்கட்டும்....    கிடைச்ச சான்ஸை விடமுடியலை'ன்னேன்.  சீனிவாசனும் இருக்காரே....

இதுக்குத்தான் அன்னமூர்த்திப்பெருமாளை அடிக்கடி  போய்த்  தொந்திரவு பண்ணப்டாதுங்கறது!  ஒரு முறை கும்பிட்டாலே  இந்த  உயிர் உள்ளவரை சாப்பாட்டுக்குக் கேரண்டியா இருப்பவரை...   போறப்பெல்லாம் போய்க் கும்பிட்டா? இந்தா இந்தான்னு கொடுத்துக்கிட்டே இருக்கார். தின்னத்தான் இன்னொரு வாயும் வயிறும் நமக்கில்லை....

திரும்ப 'நம்ம இடத்துக்கே' போய்  நம்பெருமாளைப் பார்த்துக்கிட்டே  உக்காந்தாச்சு.
நாதஸ்வரமும் தவிலுமா  முழங்கறது!  நல்லாவே வாசிக்கிறாங்க!
வாத்யம், ப்ரபந்தம், சாமரமுன்னு  எல்லாமே   அட்டகாசம் போங்க!


தொரக்குனா.... இட்டுவன்ட்டி ஸேவா........


எட்டே முக்கால் போல திரும்பத்   திரை போட்டுட்டாங்க.  ஐயா டான்னு ஒன்பதுக்குக் கிளம்பிப் போயிருவாராம்!  (அதானே  ஆத்தா  வையுமுல்லே! )
  அவர் அப்படிப்போனதும்  நாங்களும் கிளம்பி இப்படி வெளியே வந்து  காலணி பாதுகாப்பகம் போனால்....

அங்கே நீளமா இருக்கும் படிக்கட்டில் உக்கார்ந்துருந்த  வயசான அம்மா, கை நீட்டுனாங்க. பசியாம்!  நம்மவர் சொல்றார், 'பிரஸாதம் வச்சுருக்கேயே, கொஞ்சம் கொடேன். '

சாமி ப்ரஸாதம்  வேணுமான்னு கேட்டேன்.  வேணாமாம். காசுதான் வேணுமாம்!

தானே  தானே பர் லிக்கா ஹை.... கானே வாலாக்கா நாம்!

ரூம் சர்வீஸில் பால் வரவழைச்சு, பிரஸாத டின்னர் ஆச்சு !

தொடரும்........  :-)


14 comments:

said...

கீதாக்காவைப் பார்க்கவில்லையா?

said...

உங்களுடன் நாங்களும் பெருமாளைக் கண்டோம்.

said...

நன்றி அருமை தொடர்கிறேன்

said...

எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தான் ரங்கனின்
அற்புத தரிசனம் கிடைக்கும். ஸ்டால்களில் விற்பதில் பழசும் இருக்கும்.

said...

முதல் படத்துல இருக்கும் யானை பாகன் ஆரூர் மூனா போலவே இருக்கும்மா...

எனக்கு அரங்கன் தரிசனம் கொடுக்க நாலு தடவை மறுத்திட்டாரும்மா.

said...

மிகவும் ரசித்துப் படித்தேன். உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

அடுத்தமுறை, ஹயக்ரீவா, கோவில் பிரசாதம் - இரண்டையும் மனதில் குறித்துக்கொண்டேன்.

said...

எல்லா சாதமும் பிறசாதம்னு நினைக்கத் தேவையில்லாத பிரசாதம் தான். ஆண்டவன் அருட்பார்வை இல்லாம ஒரு நெல் முளைக்கத்தான் முடியுமா? விளையத்தான் முடியுமா? அடுப்பில் வேகத்தான் முடியுமா? நமக்குக் கிடைக்கத்தான் முடியுமா? அதுனாலதான் அவனை நாம படியளக்குறவன்னு பாராட்டுறோம்.

பட்டர்கள் இந்த மாதிரி பிரசாதம் விக்க முன்னாடி தனி இடம் இருந்தது. அந்த மண்டபம் இப்ப சும்மாத்தான் இருக்கு. அனேகமா அந்த வழியில்தான் நீங்க வாங்கீருப்பீங்கன்னு நெனைக்கிறேன். பிரசாதம் எப்படியிருந்தது?

said...

Good narration!

said...

வாங்க ஸ்ரீராம்.

பின்னே? அந்த சந்நிதியை தரிசனம் செய்யாமல் வரலாமோ? கயிலை ரிட்டர்ன்ஸ் ஆச்சே!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பெருமாளுக்கும் மகிழ்ச்சிதான்!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி!

said...

வாங்க ரோஷ்ணியம்மா!

ரங்கன் பெரிய ஆளுப்பா ! இப்படித்தான் இன்ப அதிர்ச்சி கொடுத்துருவான் சில சமயம்!

அந்த ஸ்டாலுக்கு பக்கத்தில் ஒரு பெரிய கண்ணாடிப்பெட்டிக்குள் பாத்திரங்களில் சக்கரைப்பொங்கல், புளியோதரை, ததியன்னம் பெரிய உருளிகளில் வச்சு விற்பது பழசா இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன். ஸ்டாலில் உள்ள இனிப்புகள், முறுக்கு வகைகள் கட்டாயம் கொஞ்சம் பழசா இருக்கலாம்தான். வச்சுருக்கும் லட்டும் அதிரசமும் முறுக்கும் ஒரே நாளில் வித்துப்போயிடுமா என்ன?

said...

வாங்க ராஜி.

அரங்கனிடம் பேசும் சக்தி பக்திக்கு இல்லையாம். பணத்துக்குத்தான் இருக்கு!

அடுத்தமுறை தரிசனம் கட்டாயம் கிடைச்சுரும். ரூ 250 !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஹயக்ரீவா எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. கொஞ்சம் ஹோம்லியாகவும் இருக்கு!

முந்தியெல்லாம் திருச்சி சங்கம் ஹொட்டேல்தான். தினமும் கிளம்பி வர்றதுக்குள்ளே விடிஞ்சு போயிடும் போங்க!