Monday, October 16, 2017

வடுக நம்பிக்குக் காதுலே பூ !!! !!(இந்திய மண்ணில் பயணம் 63)

கீழே சந்நிதித் தெருவில்    ராமானுஜருடைய வீடு. வீட்டுக்கு நம்மைக் கூட்டிக்கிட்டுப் போனவர்,  உள்ளே போய்  பகல் சாப்பாட்டுக்குச் சொல்லிட்டு நம்மோடு வந்து சேர்ந்துகிட்டார்.  'கார் இருக்கா இல்லை ஆட்டோக்கு சொல்லவா'ன்னு  விசாரிச்சதும் 'கார் இருக்கு'ன்னோம்.  அப்பதான் வீட்டின் முன்னால் இருக்கும் பெயரைக் கவனிச்சேன்.  இவர் ராமானுஜம் !
முன் ஸீட்டில் அவருக்கான இடம்.  நாலைஞ்சு தெருக்கள் தாண்டி  எங்கெயோ போறோம். ஒரு  ஆறு குறுக்கே ஓட வண்டியை நிறுத்திட்டு இறங்கி சின்ன பாலத்தைக் கடந்து  போறோம்.
அந்தாண்டை ஒரு கோவில். எம்பெருமானார் சந்நிதின்னு ஒரு போர்டு.
பளிச்ன்னு சுத்தமான வளாகம், நிறைய பூச்செடிகளுடன் ஒரு நந்தவனம். வளாகத்தின்  ஆரம்பத்துலேயே  சின்னதா கட்டைச்சுவர் எழுப்பி, கீழே போகும்விதமா படிக்கட்டுகள். சின்னதா  ஒரு கேட்!  பூட்டைத் திறந்தவர்,  நம்ம ராமானுஜர் , வைஷ்ணவ வடுக நம்பிக்குத் திருமண் சார்த்திய இடம்னு சொன்னார். நாங்க கீழே இறங்கிப்போனோம்.

படிகள் முடியும் இடத்தில் குட்டியா ஒரு சந்நிதி.  திருக்கண்ணமுது ஒரு சின்னக் கிண்ணத்தில் நைவேத்யமா....




நம்ம ராமானுஜர், தன் 'சீடனுக்குத் திருமண்' இட்ட இடம் இது!  சந்நிதியில்  சதுரக்கல்லில்  ராமானுஜர் குருவாக அமர்ந்திருக்க, பக்கத்தில் சீடன்  பவ்யமாகக் கைகூப்பி நிற்கிறாப்போலெ சிற்பம்.  காலப்போக்கிலோ என்னவோ அவ்ளோ தெளிவா இல்லை.

நாங்கள் வணங்கிட்டு மேலே வந்து அடுத்துள்ள  கோவிலுக்குப் போறோம். இதுக்குள்ளே நம்ம ராமானுஜம், கோவில் கதவுகளைத் திறந்து  வச்சுருந்தார்.  பெரிய பிரமாண்டமான ஹால். எதிரில்  ஒரு சின்ன சந்நிதி!    கம்பிக்கதவுக்குள் திரை போட்டு மூடி  இருந்தது.



நம்மை இங்கே கூட்டிவந்த ராமானுஜம், தரையில் அமர்ந்ததும், நாங்களும் அவரைச் சுத்தி உக்கார்ந்தோம்.  தலவரலாறு சொல்ல ஆரம்பிச்சார். நான் அதை என் செல்லில் வீடியோவா எடுத்துக்கிட்டேன். 7.19 நிமிஷப்படம்.



நேரம் இருந்தால் அவர் சொல்வதை நீங்களும் கேக்கலாம்.  இல்லையா.... நோ ஒர்ரீஸ்.... நம்ம கைங்கர்யமா அதே கதையை நம்ம ஸ்டைலில் கீழே எழுதி இருக்கேன்!  (தப்பும் தவறும் இருந்தால்  அது என் குற்றமே!)

நம்ம ராமானுஜர், ஒரு சமயம் தன்னுடைய அணுக்கத்தொண்டன்  வடுகனோடு சேரநாட்டுப்பக்கம் போய் இருக்கார். அநந்தபதுமனை ஸேவிக்கும் யாத்திரை!  இவர்தான் ஏற்கெனவே வைணவத்தில் புரட்சி செய்தவராச்சே!  உண்மையான வைணவனுக்கு குலத்தில், சாதியில்  ஏற்றத்தாழ்வே இல்லை என்றதுதானே முக்கியம்!   அங்கேயும் நம்பூதிரிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் கோவில் நடைமுறைகளைக் கொஞ்சம் மாற்றிஅமைக்கலாமுன்னு நினைச்சவர் அதைப் பத்தி லேசாக் கோடி காமிச்சுருக்கார்!

நம்பூதிரிகளுக்கு  பயம் வந்துருக்கு. இது ஏதடா.... இவர் வந்து  சும்மா  சாமி கும்பிட்டுட்டுப் போகாம இங்கே வழிவழியா நடக்கும் கிரமங்களை  மாற்றுவதா?  இதென்ன அக்ரமம்?    பெருமாளே காப்பாத்துன்னு வேண்டி நிக்கறாங்க.

அன்றைக்கு ராத்ரி தூங்கும் போது, பெரியதிருவடி  வந்து , ராமானுஜரை அப்படியே அலேக்காத் தூக்கிக்கிட்டுப்போய்  இங்கே ஆற்றுக்கு நடுவில் நிற்கும் பெரிய பாறையில் வச்சுடறார். இந்தப் பாறைக்கு இப்போ திருப்பரிவட்டப் பாறைன்னு பெயர்!

காலையில் கண் திறந்து பார்த்த ராமானுஜர்,  'நாம் தூங்கின  மண்டபம் எங்கே போச்சு? இப்படிப் பாறையில் வந்து கிடக்கிறேனே'ன்னு  நினைச்சவர்,  எல்லாம் பெருமாள் செயல்.  இங்கேயே கோவில் கொண்டுள்ள  நம்பியைப் போய் ஸேவிக்கலாம் என்று , தன் அணுக்கத் தொண்டனை எழுப்ப வடுகா வடுகான்னு  கூப்பிடறார்.

எங்கே வடுகந்தான் திரு அநந்தபுரத்தில்  சத்திரத்தில் இருக்கானே?  அது இவருக்குத் தெரியாது பாருங்க.... ப்ச்...

குரல் கேட்டதும் வடுகன் ஓடோடி வந்து, குருவுக்கு தினப்படி செய்யும் சேவைகளைச் செய்யறான். குரு  ஆற்றில் முங்கிக் குளிச்சானதும், அவருடைய  வஸ்த்திரங்களையெல்லாம் துவைச்சுப் பாறையின் மேல்  காயவச்சுட்டு, அவனும் முங்கிக் குளிச்சுட்டு,  பெரியவர் பூஜைக்கு வேண்டிய மலர்களையெல்லாம்  கொய்து,   கூடையில் வச்சுட்டு, திருமண் பெட்டியைத் தூக்கிட்டு வந்தான்.

ராமானுஜர்  திருமண் இட்டுக்கிட்டு,  மீதி இருக்கும் திருமண்ணை  வழக்கம் போல் சீடனுக்கு இட்டுவிட்டார்.  அப்போ பார்த்தால் சீடனுடைய முகம் வழக்கத்தில் இல்லாதவிதமா  ஜொலிப்போடு இருக்கு.  'அடடா.... இன்றைக்கு நீ ரொம்பவே அழகாய் இருக்கிறாய் வடுகா!  என் கண்ணே பட்டுவிடும்போல் இருக்கு'ன்னு  உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னதோடு, கூடையில் இருந்த  பூக்களில் ஒரு பூவை எடுத்து வடுகனின் காதில் வச்சுவிட்டார்!  அழகு இன்னும் மெருகேறி இருக்கு! 

மனத்திருப்தியுடன், வா... நாம் போய் குறுங்குடி நம்பியை ஸேவிக்கலாமுன்னு சொல்லி குருவும் சிஷ்யனுமா நடந்து கோவிலுக்குப் போறாங்க.  கொடிமரத்துக்குப் பக்கம் வந்தவுடன், பின்னாலே வந்துக்கிட்டு இருந்த வடுகன், கையில் இருக்கும் திருமண் பெட்டியையும், கூடைப் பூக்களையும்  அங்கேயே கொடிமரத்தாண்டை வச்சுட்டு  சரேல்னு  மறைஞ்சுட்டான்.

இதுவும் ராமானுஜருக்குத் தெரியாது.... பின்னால் திரும்பிப் பார்க்கலை, கேட்டோ!

சந்நிதிக்குள் போய்  நம்பியை ஸேவிக்கணுமேன்னு அவசர அவசரமா உள்ளே போறார்.... கண் எதிரில் அழகன் காதுலே பூவோடு! 

'இதென்ன, நாம் வடுகனுக்கு வச்சுவிட்ட  பூ இல்லையோ'ன்னு உத்துப் பார்க்க,  நெற்றியில் இட்டுவிட்ட திருமண் இன்னும் உலராமல் ஈரத்தோடு இருக்கு! அப்பதான் புரியுது இதுவரை  வடுகனாக  நம்மோடு இருந்து  நமக்கு சேவை செஞ்சது  இந்த நம்பியேதான்னு!    உள்ளம் விம்ம,  'பெருமாளே.... இப்படி ஒரு பாக்கியமா எனக்கு'ன்னு  ராமானுஜர் கண்ணில்  ஆறு போல நீர் பெருகியது!

நானும்    மனசுக்குள் பெருமாளின் பணிவை நினைச்சு மனக்கண்ணால்   அழகனின் திருப்பாதம்  கண்டு பணிந்தேன். 

சந்நிதிக் கதவைத் திறந்து திரையை விலக்கி, பெருமாளையும் பெருமானாரையும்  தரிசனம் பண்ணி  வச்சார்!  ரொம்பவே அழகான குருவும் சீடனும் !


எல்லோருமாக் கிளம்பி வெளியே வந்ததும்  சந்நிதியைப் பூட்டிட்டு, நந்தவனத்தைச் சுத்திக் காமிச்சார்!  எல்லாம் இவரோட பொறுப்பே!  ரொம்பவே நறுவிசாக   பூச்செடிகள் எல்லாம் பராமரிக்கப்பட்டு வருது!  கீழே இருக்கும் ஆற்றில் இருந்து சின்னதா ஒரு மோட்டர்பம்ப் வச்சு நீரிறைச்சு ஊற்றி வளர்க்கிறார். நல்ல கைங்கரியம். பெருமாளுக்கு தினப்படி பூக்கள் இங்கிருந்துதான் போறது.



நாங்க எல்லோரும்  அங்கிருந்து கிளம்பி  கொஞ்ச தூரத்தில் திருப்பாற்கடல் நம்பி கோவிலுக்குப் போனோம். திருப்பாற்கடல்  என்ற பெயருடன் இங்கே ஒரு ஓடை. அதன் கரையில்தான் இந்தக்கோவில்.
கோவில்னு சொன்னாலும்  உள்ளே சின்னதா ஒரு சந்நிதியில் பெருமாள் !  மத்தபடி நீண்டு போகும்  வெராந்தா போல ஹால்!  எனெக்கென்னவோ  பத்மநாபபுரம் அரண்மனையின் ஊட்டுப்பொறை ஞாபகம்  வந்தது.  (டைனிங் ஹால்)




ஒருவேளை  உத்ஸவக் காலங்களில் பயன்படுத்தப்படுதோ என்னவோ....   நல்லா பராமரிக்கிறாங்க. வெள்ளையடிச்சு பளிச்ன்னு இருக்கு உள்ளேயும் வெளியேயும்.  கோவில்னு சொன்னால் எப்படி இருக்கணுமுன்னு மனசுக்குள் ஒரு  அடையாளம்  வச்சுக்கிட்டு இருக்கோமே....  இது அப்படி இல்லை :-(

நம்பிராயர் கோவிலைப் பத்தி விசாரிச்சுக்கிட்டே இருந்துட்டு இதைக்    கேட்க மறந்து   கோட்டை விட்டுருக்கேன். எல்லாம் அந்தக் கொடி மர சமாச்சாரம்தான்.

ஒரு காலத்துலே நம்படுவான் என்ற பெயரில் ஒரு பாணர் இருந்துருக்கார். கோவிலுக்குள் வர அவர்கள் குலத்திற்கு அனுமதி இல்லைன்னு வெளியே நின்னே பெருமாளை ஸேவிச்சுட்டு (மனக்கண்ணால்?) பாடிட்டுப் போவாராம். ஒருநாள் வழக்கம்போல் கோவிலுக்கு வந்துக்கிட்டு இருக்கும்போது, ஒரு ப்ரம்ம ராக்ஷஸன் அவரை விழுங்க வந்துருக்கான். அவனுக்கு பயங்கரப் பசி. முழு மனுஷனை முழுங்கினால்தான் தீரும்.

நம்பாடுவான் சொல்றார்....  'இன்றைக்கு ஏகாதசி.  பெருமாளை ஸேவிக்கப்போறேன். திரும்பி வரும்போது என்னை முழுங்கிக்கோ. இப்ப என்னை விட்டுடு. '

"நம்பலாமா? "

"தாராளமா நம்பலாம்.  "

கோவிலுக்குப்போன நம்படுவானுக்குத் துக்கம்  அதிகமா வருது. 'பெருமாளே....  இவ்வளவு காலமும் உன்னை எப்பவாவது  தரிசிக்க முடியும்னு நம்பிக்கையோடு இருந்தேன். இனி அதுவும் இல்லை. இதுதான்   என் கடைசி நாள்'னு  புலம்பிட்டு, எப்பவும் பாடும் பாட்டை ரொம்பவே உருக்கமாப் பாடிக்கிட்டு இருக்கார்.

பெருமாளுக்கே மனசு தாங்கலை. ' உன் பார்வைக்குத் தடங்கலா இந்தக் கொடி மரம் நடுவுலே நிக்குது. அதைத் தள்ளி நிக்கச் சொல்றேன்'னதும் கொடிமரம் நகர்ந்து நிக்குது. பாணரும் பெருமாளை தரிசனம் செஞ்சுடறார்!

சற்றே விலகி இரும் பிள்ளாய் தானே?  சாமிக்கு ஏன்  இந்த வேண்டிய, வேண்டாத குலம் எல்லாம்? எல்லாம் அவன் படைப்பு இல்லையோ? இதுலே என்ன ஏற்றத்தாழ்வு?  இப்படித்தான் உடுபி க்ருஷ்ணனும் கனகதாஸாவுக்கு திரும்பிநின்னு முகம் காண்பிச்சானாம்.  உண்மையான வைஷ்ணவனுக்கு ஏது ஜாதி? எல்லோரும் சமம் தானே?   நான் மட்டும் பெருமாளா இருந்தால்,  தரிசனம் செய்ய ஆசைஆசையா வரும் பக்தனின்  குலம் இனம் பார்க்கமாட்டேன்.   நீ கோவிலுக்குள் வரப்டாதா?  ஓக்கே  இப்போ என்னப் பார்னு கோவிலுக்கு வெளியே வந்து பக்தன் முன்னால் நின்னு  காட்சி கொடுப்பேன்.  கடவுள் பெயரால் நடக்கும் அக்ரமங்கள் பார்க்கும்போது கோவம்தான் வருது .... நானும் புலம்பிக்கிறேன்.

திரும்பிப்போகும் வழியில்  காத்திருக்கும் ப்ரம்ம ராக்ஷஸனாண்டை போய் நின்னு, 'என்னை விழுங்கிக்கோ'ன்னு சொல்றார். ப்ரம்ம ராக்ஷஸன் அவர் முகத்தைப் பார்க்கிறான். தேஜஸோடு ஜொலிக்கிறார்.  அவனுடைய பசி பறந்தே போயிருச்சு.

ரெண்டு பேருக்கும்  வாக்கு வாதம்தான் இப்போ!

 "என் சொல்லைக் காப்பாத்தனும். நீ என்னை சாப்பிட்டே ஆகணும்..."

"முடியவே முடியாது. எனக்குத் துளி கூடப் பசி இல்லை. பசித்தால் மட்டுமே என்னால் புசிக்க முடியும்..."

பெருமாளுக்கே தாங்கலை  கேட்டோ!  ரெண்டு பேருக்கும் மோக்ஷத்தைக் கொடுத்து கரையேத்திட்டார்.  கொடிமரத்தை மட்டும்  அப்படியே விட்டுட்டார்.

நம்ம ராமானுஜம்  சொன்னதைத்தான்  துளி  மசாலோவோட சொன்னேன் :-)


திரும்ப சந்நிதித் தெருவுக்கே வந்து சேர்ந்தோம்.  'கோவிலாண்டை  மலைக்குப் போகும் வண்டி இருக்கு.  நீங்க மலைக்குப் போய்  தரிசனம் முடிச்சுட்டு  வந்துருங்கோ. அதுக்குள்ளே சமையல் ரெடி ஆகிரும்' னு  ராமானுஜம் சொல்ல அப்படியே ஆச்சு!

தொடரும்....  :-)


8 comments:

said...

அழகிய சுவாரஸ்யமான கதை. தரிசனம் ஆச்சு எங்களுக்கும்!

said...

திருக்குறுங்குடி உலா வந்தோம் இன்று உங்களோடு. நன்றி.

said...

அருமையான சேவை இன்று. ப்ரவசனம் ரொம்ப நல்லா இருந்தது. உங்களுக்கு நல்வினையால் அமைந்த தரிசனம். தொடர்கிறேன்.

said...

புரட்டாசி முடிவில் அருமையான தரிசனம்.

said...


"வடுக நம்பிக்குக் காதுலே பூ !!! ..

சமீபத்தில் தான் அப்பா சொல்லி கேட்டன்...

நீங்க இன்னும் சுவாரஸ்யமா சொல்லி இருக்கீங்க....

said...

தரிசனம்செய்வித்து உணவும் பறிமாறிய ராமானுஜன் பாராட்டுக்குரியவர்

said...

எப்படியோ எனக்கு எங்க ஊரு தரிசனம் ஆச்சு. ராமானுஜர் வீட்டுக்கோலம்
மிக அழகு. எல்லாமே பாந்தம். அவர் குரலும் க்ளிப்தமான உச்சரிப்போடு ஜோர். நன்றி துளசி.

said...

துளசி டீச்சர்... உங்கள் இடுகையை ஒன்றுக்கு இரண்டுமுறை மீண்டும் படித்துவிட்டு இந்த முறை திருக்குறுங்குடி, வானமாமலை கோவில்களுக்குச் சென்றிருந்தேன். திருக்குறுங்குடியில் உணவைப் பற்றி நீங்கள் எழுதிக் கடந்துசென்றுவிட்டீர்கள். நாங்கள் திருப்பாற்கடல் நம்பியைத் தவிர எல்லாவற்றையும் நன்றாக தரிசனம் செய்தோம், திருமங்கை ஆழ்வார் திருவரசு உள்பட. உணவுப் பிரச்சனை இல்லாமல் (எங்கே ஹோட்டல் என்று தேடி, அதற்கு நேரம் செலவழிக்காமல்) ராமானுஜர் வீட்டில் சாப்பிட முடிந்தது சவுகரியமாகத்தான் இருந்தது (ருசி, சூடு இவற்றை மனதில் வைத்துக்கொள்ளவில்லை என்றால்). ஜீயர் தரிசனம் கிடைக்க வேளை வரவில்லை (ஆனால் வானமாமலை ஜீயரை சேவிக்கமுடிந்தது)

உங்கள் இடுகை, கோவில் தரிசனங்களுக்கு மிகவும் உபயோகமானது.