Friday, October 06, 2017

அட! நம்ம ஜாம்பவதி! (இந்திய மண்ணில் பயணம் 59)

முன்மண்டபத்துலே இருந்து ஒரு அஞ்சு படி ஏறி உள்ளே போறோம்.  பெரிய முற்றம் போல் இருக்கேன்னு  வலப்பக்கம் திரும்பி உள்ளே போனால்... அது மடப்பள்ளியோ என்னவோ.... யாரும் இல்லை!  திரும்ப முற்றத்துக்கு வந்தால், இந்தாண்டை ஒரு சந்நிதி!  உள்ளே ஸ்ரீ! செங்கமலத் தாயார்!
சந்நிதிக்குள் போனோம். நல்ல பெரிய திருவுருவம்!  ஆறடிக்கு மேலேன்னு  சொன்ன  பட்டர்ஸ்வாமிகள், தீபாராதனை காமிச்சுக் குங்குமப்ரஸாதம் கொடுத்தார்! தொட்டடுத்து மாடிப்படி!  மலையைக் குடைந்து  செய்த குடவரைக்கோவில் என்பதால்  எல்லாம் நல்ல கற்களே!

ஏறிப்போறோம்.  மேலே விசாலமான இன்னொரு மண்டபம்.   சுத்திவர  சுவத்துலே வண்ணச்சித்திரங்களில் பெருமாளின் பல்வேறு அவதாரங்கள்!
பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள்  எழுதிப்போட்டுருக்காங்க.  இன்னொரு இடத்தில் பளிங்குக் கல்வெட்டிலும்  பாசுரங்கள் செதுக்கி இருக்கு! ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் கைங்கர்யம் போல!


இந்தப்பக்கம்  பெரியதிருவடி  சந்நிதி வாசலைப் பார்த்தபடி இருக்கார். க்ரில்கேட் மூடிக்கிடந்தாலும்  அவரை தரிசிக்க முடியும்!   சதுர்புஜம்! அம்ருதகலசம் ஒரு கையில்! மற்றொரு கையில் ....  பா...ம்...பு.... முன்கைகள் ரெண்டும் பெருமாள் சந்நிதியைப் பார்த்துக் கைகூப்பிய நிலையில்!
மூலவர் சந்நிதிக்கு  வெளியே ஜயவிஜயர்கள். ஒரு பக்கம்  மாமன்னர் திருமலை நாயகர் சிலை!  சந்நிதி வாசலுக்கு ரெண்டு புறமும் பெரிய சிறிய திருவடிகள் சுவரில் அழகான சித்திரமாய்!
சந்நிதி நோக்கிப் போறோம். அப்படியே கண்ணைக் கட்டி நிறுத்தறார் நின்ற நாராயணர்!   கூடவே பக்கத்து ரெண்டு தேவியரா மொத்தம் நாலு மனைவிகள் !ஆளுயரச் சிலைகள். பெருமாள் முகம் பளிச்ன்னு பச்சை நிறத்தில் மின்னுது!  வச்ச கண்ணை எடுக்க முடியலை என்னால்!

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி...... கூடவே ஜாம்பவதி!  கிருஷ்ணனுக்கு எட்டு அஃபீஸியல் மனைவீஸ் தெரியுமோ?  ஜாம்பவதி, ராமாயணத்துலே வர்ற ஜாம்பவானின் மகள்!  ராமாவதார காலத்துலே இருந்து கிருஷ்ணாவதாரம் வரை இவர் ஜீவிச்சு இருந்துருக்கார் போல!

ஜாம்பவதி  சிலையாக  இருக்கும் கோவில் இது மட்டும்தான்னு நினைக்கிறேன். வேறெங்கும் பார்த்த நினைவில்லை. ஆனால் த்வாரகை கோவிலின் உள்ளே அந்தப்புரத்தில் ஏழு மனைவியருக்குத் தனித்தனி அறைகளும் அதில் கட்டில்களும் கூட இருந்தன. எட்டுப்பேரில் மூத்த மனைவிதான் அங்கில்லை.....   தனியாக தவம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க கொஞ்சம் தொலைவில்.....  துர்வாசரின் சாபம்தான்...  கதை  இங்கே... 

த்வாரகையை  விட்டு இப்போ எதுக்கு இங்கே நாலுபேருடன் காட்சி கொடுக்கறாராம்? கல்யாணத்துக்கு பந்துமித்திரருடன் வருகை தரவேணுமுன்னு அந்தக் காலத்துலே  கூப்பிடுவாங்க. அதுவும் பேரன் கல்யாணமுன்னா சும்மாவா?

உஷைன்னு ஒரு அழகான இளவரசி இருந்தாள். அசுரகுலம்.  ஒருநாள் கனவில்  அழகான ராஜகுமாரன் ஒருவனைப் பார்த்தாள்.  கனவுதானேன்னு விட்டொழிக்க முடியாமல்,  மனசு அவனையே சுத்திக்கிட்டு இருக்கு.  தன்னுடைய அந்தரங்கத் தோழி சித்ரலேகையிடம் கனவைப் பத்திச் சொல்லி, இப்படி ஒருவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணுமுன்னு  தன் ஆசையை சொல்றாள்.

சித்ரலேகைக்கு ஓவியம் வரையும் திறமை இருக்கு.  கனவில் வந்தவனைப் பற்றிச் சொன்னால் வரைஞ்சு காமிக்கறேன்னதும், மனசை விட்டகலா இளைஞனை, அங்கம் அங்கமா வர்ணிக்கிறாள் உஷை!  அவள் சொல்லச் சொல்ல இவள் வரையறாள்.  கண்ணு இப்படியா , மூக்கு இப்படியான்னு  கேட்டுக்கேட்டு வரைஞ்சுக்கிட்டு இருக்காள்.

( இப்பக் கூட காவல்துறையில் பெரிய , முக்கியமான கேஸ்களில்  குற்றவாளி எப்படி இருப்பான்னு அவனைப் பார்த்த ஆளிடம் கேட்டுக்கேட்டு வரைஞ்சுடறாங்கதானே? )

சித்ரலேகை வரைஞ்சு முடிச்சதும்,  அவன் இவனேன்னு  அடிச்சுச் சொல்றாள் உஷை.  அரசகுமாரிக்கு ஒற்றர்களா இல்லை....   படத்தில் இருப்பவரைக்  கண்டுபிடிக்கச் சொன்னதும்.... பல இடங்களில் போய் விசாரிச்சவங்க  சரியான தகவலுடன் வந்து சேர்ந்தாங்க.  த்வாரகை மன்னன் கிருஷ்ணனின் பேரன் அநிருத்தன் இவன்!

பெயர், இடம் எல்லாம் தெரிஞ்சதும் அடுத்த கட்ட நடவடிக்கையா,  ஒருநாள் சித்ரலேகையே த்வாரகைக்குப் போறாள். நட்ட நடுநிசியில் அரண்மனைக்குப் போனவள், கட்டிலில் அயர்ந்து தூங்கிக்கிட்டு இருந்த அநிருத்தனைக் கட்டிலோடு சேர்த்து அலேக்கா தூக்கிக்கிட்டு உஷையின் அந்தப்புரத்துக்குக் கொண்டு வந்துட்டாள்.

அசுரகுல மக்களுக்கு  சிலபல மந்திரம், தந்திரம் எல்லாம் தெரிஞ்சுருக்கும்தானே?

தந்திரக் காட்சிகள் நிறைந்த விட்டலாச்சார்யா திரைப்படங்களைப் பார்த்த தலைமுறைக்கு  கட்டிலோடு பறந்து  வந்தது எல்லாம் ஜூஜுபிதான் :-)

புதியதலைமுறை மக்கள்  யூ ட்யூபில் தேடிப்பாருங்க. எக்கச்சக்கமா இருக்கு.  அநேகமா எல்லாமே தெலுகுப் படங்கள்தான்.  மொழி மாற்றம் செஞ்ச தமிழ்ப்படங்களும் இருக்குதான்!       தந்திரக் காட்சிகளுக்கு மொழி தேவையா என்ன? 

பொழுது விடிஞ்சதும் கண்ணைத் திறந்த அநிருத்தன்,  வேறெதோ இடத்துலே இருக்கேனேன்னு  சுத்தும்முத்தும் பார்த்தால் பக்கத்துலே ஒரு அழகான அரசகுமாரி! கண்டதும் காதல் அதையடுத்து காந்தர்வ விவாகம், குடித்தனம் இப்படி அங்கேயே அந்தப்புரத்தில்  தங்கிட்டான். ரகசியமாத்தான்.... ஆனாலும் எப்படியோ தகவல் கசிந்து போய்  பொண்ணோட தகப்பனுக்கு தெரிஞ்சுபோச்சு.

பாணாசுரன்/வாணாசுரன், (அரசகுமாரியின் தந்தை) கோபாவேசத்தோடு  மகளைத் தேடி  அந்தப்புரத்துக்குள்  வந்து,  தகவல் முற்றிலும் உண்மைதான். வதந்தி இல்லைன்னு  கண்டுபிடிச்சு, அநிருத்தனை சிறையில் போட்டுட்டான்.

சேதி தெரிஞ்ச கிருஷ்ணன் ச்சும்மா இருப்பாரோ?   த்வாரகையில் இருந்து கிளம்பி வந்து பா(வா)ணாசுரனுடன் போர் புரிந்து அவனைத் தோல்வி அடையச் செய்து பேரன் அநிருத்தனை சிறையில் இருந்து மீட்டார்.

உடனே தன் காலடியில் வீழ்ந்து வணங்கிய பேரனையும், அவன் மனம் கவர்ந்த  மனைவியையும்  'ஊரறியக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க. உங்களுக்கு நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன். கிளம்புங்கோ துவாரகைக்கு'ன்னதும்,  அங்கிருந்தவர்கள் எல்லாரும்,  'கல்யாணத்தை இங்கேயே பண்ணி வையுங்க. நாங்களும் கண்ணாரக் காண்போமே'ன்னு  சொல்லவும்  ஆகட்டும்னு சம்மதிச்சவர், பேரன் கல்யாணத்தைப் பார்க்கப் பாட்டிகளுக்கு ஆசை இருக்காதான்னு மனைவிகளை வரச்சொல்லி த்வாரகைக்கு ஓலை அனுப்பறார்.

என்னதான்  சகலமும் பார்த்துக்க ஆள் அம்புன்னு  இருந்தாலும்   போட்டது போட்டபடி சட்னு கிளம்ப முடியுதா?  எட்டு மனைவியருள் நாலுபேர் புறப்பட்டு வந்து இங்கேயே  பெருமாளுடன்  நின்னு கல்யாணத்தை நடத்திக் கொடுத்துட்டு, பிருகு மகரிஷி போன்ற  முனிவர்கள், புரூவர மன்னர் போன்ற பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இங்கேயே தங்கி  இங்கே வரும் பக்தர்கள் அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்கள்!  பெருமாளும் நின்ற நாராயணர் என்ற பெயரை சூட்டிக்கிட்டார்!

கல்யாணப்பொண்ணு மாப்பிள்ளை,  பிருகு மகரிஷி, மார்கண்டேயர், விஷ்வக்கேனர், கருடாழ்வார்னு சகலரும் கருவறையில் பெருமாளுக்கு ரெண்டுபக்கமும்  கூட்டமா இருக்காங்க!
எல்லோரும் சுதைச் சிற்பங்களாம். அதனால் அபிஷேகம் எல்லாம் கிடையாது! தீபாராதனை காமிச்சு, சடாரி, தீர்த்தம் எல்லாம்  பிரஸாதமாகக் கிடைச்சது. நம்மவருக்கு ஒரு துளசிச்சரம் கழுத்தில்!  துளசி எப்பவும் கூடவே இருப்பது  தெரிஞ்சுருக்குமோ :-)

நாமும் பிரகாரம் வலம் வர்றதுக்குப் போனோம்.  சக்கரத்தாழ்வார் தனிச்சந்நிதியில்!  அடுத்த பக்கம் ஆண்டாள்! தூமணி பாடி ஸேவிச்சுக்கிட்டேன்.
ஆண்டாள் சந்நிதிக்கு இந்தாண்டை சொர்கவாசல்!  இவ்ளோ அழகான பெரிய கோவிலுக்கு ஏத்தாப்போல் இல்லாமல்..... வீட்டுப் புழக்கடைக் கதவு போல் இருக்கு :-(


படிகள் இறங்கி கீழே போனால் ஸ்ரீ ரங்கநாதர் சந்நிதி! போறவழியிலேயே  மேலே ஜன்னலில் இருந்து பார்த்தால் கீழே புஷ்கரணி! பாஸ்கர தீர்த்தமாம்!  சூரியன் வந்து தவம் செய்த இடம்!
ஸ்ரீதேவி, பூதேவியருடன்   ஆதிசேஷன் மேல்  பள்ளி கொண்ட பரந்தாமன்!  இவருக்கும் முகத்தில் பச்சிலை மூலிகைகளால் பச்சை வண்ணம் பூசி இருக்காங்க. இவர்  கற்சிலைதான்னாலும், மேலே சுதை பூசி  வண்ணமும் தடவி இருக்காங்க!  எல்லா பெருமாளும் ஒரே நிறமா இருக்கட்டுமேன்னு போல!
சந்நிதிக்கு முன்னால் இருக்கும் மண்டபத்தூண்களில் புரூவர சக்ரவர்த்தியும், அவர் மனையாளும் எதிரும் புதிருமா இருக்காங்க. அரசருக்கு வேஷ்டியும், அரசியாருக்குப் புடவையும்  சுத்தியாச்சு!
பெருமாளை ஸேவிச்ச கையோடு  இங்கேயே இன்னொருபக்கம் கருநெல்லிநாதர் என்ற பெயருடன் குடிகொண்டு இருக்கும் சிவனையும் தரிசனம் செஞ்சுக்கலாம்.  மலையின் இன்னொருபக்கம் இருக்கும் தனிக்கோவில். போற வழியில்  கிரிகுஜாம்பாள் பிறைசூடி அம்மன் சமேத நாகநாத ஸ்வாமி சந்நிதி ரெண்டு பகுதிகளையும் இணைக்கறது போல !
அரசமரத்தடி மேடைக்கு முன்னால் எளிமையான வாசல். உள்ளே போனால்...  இன்னொரு பிரகாரம்.  கோவிலுக்குள் கருங்கல் தூண்களோடு  பெரிய மண்டபம்.

கருநெல்லிநாதர், மீனாக்ஷி அம்மன் ,   புள்ளையார் (ஆதிமூல கணபதி) பைரவர், நவகிரகங்கள்னு  தனித்தனி சந்நிதிகளில் போய் கும்பிட்டோம். மலை மேலே  இன்னும் கொஞ்சம்  படிகள் ஏறிப் போனால்  தண்டாயுதபாணியா முருகன் இருக்காராம்.  உச்சிப்பிள்ளையார்  போல உச்சி முருகன்!  (அண்ணனுக்கும் தம்பிக்கும் இதுலேயும் போட்டி போல!)

உண்மையிலேயே இந்தக் குடவரைக் கோவிலுக்குள் நுழைஞ்சதுமே திருச்சி  தாயுமானவர் நினைவுதான் வந்தது.  மலையைக் குடைஞ்சே  எப்படிப் பெரிய பெரிய  மண்டபங்களும் சந்நிதிகளுமா கோவில்கட்டி இருக்காங்கன்னு  வியப்பு தான் எப்பவும் வரும். அது இப்பவும் வந்துச்சு.

ஒரு பெரிய பாறைப்பகுதியில் சின்னதா குட்டியா ஒரு வாசல்.  சுரங்கப்பாதை   ஒன்னு இதுக்குள் போகுதாம்! எட்டிப் பார்த்தால் ஏதோ சந்நிதிபோல இருக்கு.  சுரங்கத்தை மூடி இருப்பாங்க போல!
சிவன் கோவிலுக்குத் தனி முகப்பு மலையின் இன்னொரு பக்கத்தில் இருக்கு. இதைத்தான் நாம் வர்றவழியில் பார்த்தோம். இங்கே முதலில் வந்துட்டால்   பெருமாள் கோவிலுக்குபோக உள்ளேயே வழி இருக்கு.
சைவ, வைணவ ஒத்துமைக்கு  இந்தக் கோவில் எடுத்துக்காட்டுன்னும் சொல்லலாம்! இங்கிருந்து அங்கே... அங்கிருந்து இங்கே !

நாம் போக வேண்டிய கோவில்கள் நாலில் ஒன்னு இப்போ தரிசனம் ஆச்சு. இன்னும் மூணே கோவில்கள்தான்!  ரொம்பத் திருப்தியோடு கிளம்பினோம்.

நீட்டி முழக்கி  ரெண்டு பதிவா எழுதி இருக்கேனே....   ஆகமொத்தம் கோவில் தரிசனத்துக்கு ஒன்னேகால் மணி நேரம்தான்  ஆகி இருக்கு.

இங்கே  இன்னும்  கோவில், தீர்த்தங்கள் வந்த விதம் இப்படி ஏராளமான கதைகள் இருக்குன்னாலும்.... இப்ப வேணாம். இன்னொருக்காப் பார்க்கலாம்.

  இப்போதைக்குப் போற போக்கில்  ஏற்கெனவே சில முறைகள் வந்த கோவிலுக்குப் போயிட்டுப் போகலாமேன்னு.....

ஆசை அடங்கறதில்லைப்பா.....

தொடரும்......  :-)

PINகுறிப்பு :  திருத்தங்கல் கோவில் படங்களை  ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டு வைக்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் பார்க்கலாம் :-)


6 comments:

said...

நாகப்பட்டினம் அல்லது திருவாரூர் மாவட்டத்தில் இதுபோல சிவன் கோயிலிலிருந்து பெருமாள் கோயிலுக்கும், பெருமாள் கோயிலிலிருந்து சிவன் கோயிலுக்கும் செல்லும் வகையில் ஒரு கோயிலைப் பார்த்த நினைவு.

said...

பெருமாளுக்கு பச்சை வண்ணம் என்பதால் பாஸ்கர தீர்த்தத்தையும் பாசி பிடித்து பச்சையாய் வைத்திருக்கிறார்கள் போல!

படங்கள் அழகு. அடுத்த முறை மதுரை செல்லும் சமயம் இந்தக் கோவிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்கிற உணர்வைத் தருகிறது. பக்கத்திலேயே இருக்கே...

said...

அருமை நன்றி

said...

படம்லாம் செம அழகு. புரட்டாசி மாதத்தில் பெருமாளின் தரிசன்ம். பகிர்வுக்கு நன்றிம்மா

said...

இந்தப் படங்களைப் பாத்ததும் டக்குன்னு எனக்கு மதுரைல கூடல் அழகர் கோயில் நினைவுக்கு வந்துருச்சு. மேல ரெண்டு நிலைகள் ஏறிப் போய்ப் பாக்கலாம். அங்க சுதைச் சிற்பங்கள் இருக்குன்னு நினைக்கிறேன். இதே மாதிரியான வண்ணப்பூச்சுகள்.

said...

அழகான படங்கள். மலைக்கோவில் அழகு. தொடர்கிறேன்.