Monday, October 23, 2017

திருப்பதி சாரம் என்னும் திருவண் பரிசாரம் (இந்திய மண்ணில் பயணம் 66)

சின்னதாத் திறந்த கோவில் கதவுக்குள் நுழைஞ்சால் நேரெதிரே கொடிமரம்!  இடதுவலதுபக்க மண்டபத்துத் தூண்களில் பாவைகள் கையில் விளக்கோடு!

ஆஹா.... திருவட்டார் கோவிலில் இருக்கற  மாதிரியே !!  என்ன ஒன்னு இங்கே போதுமான வெளிச்சம் இல்லை. மசமசன்னு....

சாவிக்காரர் சொன்னபடி வலம் போறோம். நம்மாழ்வார் பாசுரம் !

வண் பரிசாரத்திருந்த  திருவாழ்மார்பனை.... பாடறார்!  ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் மார்புக்கு உடையவன்!  நெஞ்சாங்கூட்டில்   வச்சுருக்கான்னு சொன்னது ரொம்பச் சரி! புராணப்பெயர் வண்பரிசாரம்.  மரியாதைக்குரிய திரு சேர்த்து திருவண் பரிசாரம் ஆச்சு.  காலப்போக்கிலோ என்னவோ....   திருப்பதிசாரம் ஆகிப்போச்சே!
ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடி    மங்களாசாஸனம் செய்த நூத்தியெட்டு   திவ்ய தேசக் கோவில்களில்  இந்தக் கோவிலும் ஒன்னு!

பெருமாளே   'இவர் நம்ம ஆழ்வார்'னு  சொன்னதால்  சடகோபருக்கு நம்மாழ்வார் என்ற பெயர் நிலைச்சுப் போச்சு.  நாம் பெருமாளின் திருப்பாதங்களைத் தாங்கி இருக்கும்   சடாரி சேவிக்கிறோமே.....  அது  இவரே தான். பொதுவாப் பெருமாள் கோவில்களில்  திருவிளக்கொளியில் தரிசனம் ஆனதும்  துளசி ப்ரஸாதம் கிடைச்சாலும், சடாரி நம் தலையில்  வாங்கினால்தான் பூரண திருப்தி  கிடைக்குது.   சடாரி தலைக்கு வரும் அந்த நொடி, நாம் ரெண்டு கைகளையும் கூப்பி கண்மூடி அதை வாங்கிக்கணும்னு எங்க அம்மம்மா சொல்வாங்க.  அதைமட்டும் விடாமல் நினைவு  வச்சுக்குவேன்!
நம்மாழ்வார் அவதார ஸ்தலமுன்னும்  சொல்றாங்க.  இந்தப்பகுதியைச் சேர்ந்த உடையநங்கை (நம்மாழ்வாரின் தாய்)குழந்தையை அந்தக் கால வழக்கப்படி,     தன் தாய் வீட்டில் பெற்றெடுத்துருப்பாங்கன்றதால் சொல்றாங்க போல! ஆனால் இவுங்க கல்யாணம் கட்டிப்போனது  திருக்குறுகூர்  ஆச்சே!அங்கே   கோவிலில் இருக்கும் புளியமரத்தடிக்கு(லக்ஷ்மண அவதாரம்)பனிரெண்டு நாள் குழந்தையா இருந்தப்பயே தவழ்ந்துபோய் (!) உக்கார்ந்துட்டார்னு கோவில் புராணம் சொல்லுது.  அப்போ குழந்தை அங்கே திருக்குறுகூரில் பிறந்துருக்குமோ?  இவர்காரணம்தான் திருக்குறுகூர், ஆழ்வார் திருநகரியா பெயர்  மாத்திக்கிட்டு இருக்கு!

என்னவோ போங்க....   இப்படித்தான்  குண்டக்க மண்டக்கன்னு  மனசு லாஜிக் பார்த்துக்கிட்டு இருக்கு....... ப்ச்....  


இதையெல்லாம் ஒரு பக்கம் தள்ளிட்டு, யோசிச்சால் நம்மாழ்வாரின் தாய் அவதரித்த தலமுன்னு சொல்லலாம்.  எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு விஷயம் என்னன்னா....  நம்ம ஆழ்வார் திரு  நக்ஷத்திரம் 'விசாகம்'  !!!

இந்தப்பகுதி எல்லாம் முந்தி சேரநாட்டைச் சேர்ந்துருந்தது என்பதால் கேரள வழக்கப்படி  ஆண்கள் மேல்சட்டையோடு கோவிலுக்குள் வரப்டாது, கேட்டோ!
உள்ப்ரகாரம் சுத்தமாத்தான் இருக்கு. நந்தவனத்துக்குத் தனியா இடம் விடலை போல.... இங்கேயே  அங்கங்கே பூச்செடிகளை வச்சுருக்காங்க.  பெரும்பாலும் அரளிச்செடிகள் தான்.  மண்டபங்களில் எல்லாம்   வெளிப்புற சுவத்துலே  பாவைவிளக்கு சிற்பங்கள்தான்.  அந்தக் காலத்துலே கோவிலுக்குள் தீபம் ஏற்ற இதுதானே முறை, இல்லையோ!
இங்கேயே மண்டபத்தையொட்டியே உள்ளடங்கியவிதமா கோவில் கிணறு.  ஜகடையும் கயிறும் பார்த்தவுடன், ஒரு வாளி தண்ணீர் இறைச்சார் நம்மவர்.

சுண்ணாம்பு அடிக்கிறேன்னு சிற்பங்களுக்கெல்லாம் வெள்ளையடிச்சு வச்சுருக்காங்க.   பழமை மாறாமல் புதுப்பிக்கும் கலையை நம்மவங்க இன்னும் கத்துக்கலை....
சொர்க்கவாசல்  இப்படி.......  ப்ச்.... புழக்கடை கதவாட்டம் கிடக்கு!

கருடர்  வந்து காட்சி கொடுத்தார் !


வலம் வந்து கருவறை மண்டபத்துக்குள் போறோம்.  வளைவு  வாசலில் ஜயவிஜயர்களுக்குப் பதிலா ரெண்டு பக்கங்களிலும்  சங்கபாணி, சக்கரபாணி!


பெரியதிருவடி... பெருமாளைப் பார்த்தபடி!

கொஞ்சம் இருட்டாத்தான் இருக்கு இந்த அர்த்தமண்டபமும். அதோ அங்கே  கொஞ்சம் தள்ளி உள்ளில்  திருவாழ்மார்பன் !   இருந்த நிலையில் நல்ல உசரம்தான்!  ஒன்பதடியாம்!
பட்டர்ஸ்வாமிகள் உள்ளே இருந்தவர்,  திருவிளக்கொளியில் தரிசனம் பண்ணி வச்சுட்டு வெளியே வந்து நமக்கு தீபாரத்தி தொட்டுக் கும்பிட நீட்டறார்!  அவரைப்  பார்த்து நாம் அம்பரந்துபோனேன்!   நாம் வெளியே தேவுடு காத்த சமயம் உக்கார்ந்துருந்த  பெரியவர்!

கோவில் திறந்ததும் நாம் உள்ளே வந்துட்டோமில்லையா.....  அவர் போய் குளத்தில் குளிச்சுட்டு ஈர உடையோடு பெருமாள் சந்நிதியில் சாயரக்ஷைக்குண்டான ஏற்பாடுகள் செஞ்சுக்கிட்டு இருக்கார்!   ஐயோ.... இவரைப்போய் நம்மோடு டீ குடிக்கக் கூப்பிட்டேனேன்னு எனக்கு பேஜாராப் போச்சு.

இங்கே தாயாருக்குன்னு தனி சந்நிதி இல்லை. அதான் திரு மார்பிலேயே இருக்காளே!  மூலவரும் கடுசர்க்கரைப் படிமம் என்பதால் அபிஷேகம் எல்லாம் இல்லையாம்!  வெறும் அலங்காரம் மட்டும்தான் :-)

பக்கத்தூரான சுசீந்த்ரத்துக்கு  ஞானாரண்யம்  என்ற பெயர் இருக்காம். சிவன் இங்கே முனிவர்களுக்கு தரிசனம் கொடுத்துருக்கார், தாணுமால்யனாக!  அப்ப அந்த முனிவர்கள், திருமாலாகக் காட்சி கொடுக்கச் சொல்லி வேண்டிக்கிட்டு, கொஞ்ச தூரத்தில் இருக்கும் சோமதீர்த்தத்துக்கு  அருகில் தவம் செஞ்சுருக்காங்க.  அவுங்களுக்காக  அங்கே காட்சி கொடுத்து, 'என்ன வரம் வேணுமு'ன்னு தெய்வ வழக்கபடிக் கேட்க,  முனிவர்கள், சாதுக்கள் வழக்கபடி அவுங்களும் 'இங்கே இப்படியே இருந்து  அனைவருக்கும் அருள் செய்யணுமு'ன்னு வேண்ட.... அப்படியே ஆச்சு!

அந்தக்காலத்தில் சாமியாண்டை எனக்கு இதைக்கொடு, எனக்கு மட்டும் அதைக்கொடுன்னு  கேக்கறதில்லை. எது கேட்டாலும் அது பொதுவா உலகமக்களுக்கும் உலக நன்மைக்கும்தான்!
சோமதீர்த்தம்தான் இங்கிருக்கும் புஷ்கரணி. சோமலக்ஷ்மி தீர்த்தமுன்னு அங்கே  எழுதுனது ரொம்பச் சரி!காத்துருந்து காத்துருந்து கிடைச்ச தரிசனம் இது!  ஒரு அரைமணி நேரம்தான் கோவிலில் இருந்தோம்.  அப்படி ஒன்னும் பெரிய கோவிலா இல்லை.  எனக்குக் கொஞ்சம் ஏமாத்தம்தான்!
கருவறை விமானம் பளிச்ன்னு  இருக்கு.  புது பெயின்ட்!

மத்தபடி கோவிலை  இன்னும் கொஞ்சம் நல்லா வச்சுருக்கலாமோன்னு  தோணியது உண்மை....

காலையில் 6 மணி முதல் 11 வரையிலும் மாலை 5 மணி முதல் 8 வரையிலும் கோவில் திறந்துருக்கும்.  மாலை மணி அஞ்சு என்பதைக் கவனமா நினைவில் வச்சுக்குங்க :-)

 நல்ல தரிசனம், அதுவும் ஏகாந்த தரிசனம் இல்லையோ!    நம்ம நூத்தியெட்டு யாத்திரையில் இன்னும் ஒரு கோவில்தான் பாக்கி என்ற எண்ணம் வந்தது உண்மை. பெருமாளே.... அதையும் நீரே நடத்திக்கொடுக்கணுமுன்னு  மனசார வேண்டிக்கிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.....

சலோ,  கன்யாகுமரி!


தொடரும்.......  :-)


16 comments:

said...

எங்களுக்கும் தரிசனம் ஆனது.

said...

திருவாழ்மார்பன் ! இருந்த நிலையில் நல்ல உசரம்தான்! ஒன்பதடியாம்!
\\


....நாங்களும் மனசால தரிசனம் செஞ்சாச்சு...

said...

நன்றி அருமை தொடர்கிறேன்

said...

திருவண்பரிசாரம் கோவிலும் சிற்பங்களும் மிக அருமை. நான் சென்றிருந்தபோது (காலையில்) ஒருவர் கர்நாடக பக்திப் பாடலை உருக்கும்படி பாடினார். டூர் மாதிரி செல்லும்போது ரொம்ப மெகானிகலாக தரிசனம் அமைந்துவிடுகிறது. உங்களைப்போல் தனியாக வண்டியில் செல்லும்போது, ஆற அமர தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.

"பெருமாளின் திருப்பாதங்களைத் தாங்கி இருக்கும் சடாரி சேவிக்கிறோமே..... அது இவரே தான்" - சில விதிவிலக்குள்ள கோவில்கள் உண்டு. மதுரகவி மற்றும் இன்னொன்று.

said...

How to reach the temple?

said...

உங்க புண்ணியத்தில் நாங்களும் தரிசனம் செய்தோம்.

said...

108 திவ்ய தேசங்களில் வைகுண்டமும் உண்டு இல்லையா

said...

ஜி.எம்.பி சார்... பொதுவா சொல்லும்போது 108 திவ்ய தேசங்கள் என்றுதான் சொல்வாங்க. 106 ஐ நில உலகில் பார்க்கமுடியும். மீதி இரண்டும், நம் இறப்புக்குப் பின்பு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

உங்களுக்குத் தெரிந்திருக்கும், வைணவ ஆழ்வார்கள் பாடிய கோவில்கள் மொத்தம் 108. அதில் பல கோவில்களுக்கு ஒரு பாடலோ அல்லது ஒரு பாட்டிலேயே மூன்று கோவில்களையுமோ refer செய்திருக்கலாம். திவ்யப் ப்ரபந்தத்தில் reference இருந்தால் அது 108ல் ஒன்று என்று சொல்வார்கள். இதில் சில கோவில்களில் பிரதான கடவுள் விஷ்ணு இல்லை. அதற்குக் காரணம், அந்தக் கோவில்கள் பழுதுபட்டு, அல்லது அழிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்ட விக்ரஹம் இன்னொரு கோவிலில் கொண்டுவைக்கப்பட்டிருக்கலாம். பல முக்கியக் கோவில்கள், பாடல் பெறாததால் திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்காது, ஆனால் அபிமான தலங்கள் என்று போற்றப்படுகின்றன.

said...

வாங்க ஸ்ரீராம்.

தரிசனம் நல்லது !

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ரொம்ப மகிழ்ச்சி!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஆஹா.... கூடுதல் தகவல்களுக்கு நன்றி!

said...

வாங்க மலரன்பன்.

நாகர்கோவிலுக்கு சமீபம். நெல்லையிலிருந்து போகலாம். கன்யாகுமரியில் இருந்தும் போகலாம்.

said...

வாங்க ராஜி.

நீங்களே அருமையா எழுதி இருந்தீங்களே! அதுவும் படங்கள் எல்லாமே தெளிவா இருந்தது உங்க பதிவில்.

நாங்கதான் ச்சும்மா கோவில் முன்னால் உக்கார்ந்துருந்ததுக்கு, நம்மாழ்வாரின் தாய் வீடுவரை போய் பார்த்துருக்கலாம். விட்டுப்போச்சு....

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நெ. த உங்களுக்கான பதிலை எழுதி இருக்கார். அவருக்கு என் நன்றி.

என்னுடைய எண்ணப்படி, பூவுலக மக்கள் நூற்றியெட்டு சேவிக்க முடிவு செய்து முதல் கோவிலுக்குக் கிளம்பும்போதே, மேலுலகில் இருக்கும் ரெண்டு திவ்ய தேசங்களை நம் கணக்கில் வரவு வச்சுருவார் பெருமாள் !

said...

//இவுங்க கல்யாணம் கட்டிப்போனது திருக்குறுகூர் ஆச்சே!// குறுங்குடி பெருமாள் வழி காட்ட குருகூர் சென்றாங்க குழந்தையை எடுத்து கொண்டு தானே ??