Wednesday, October 11, 2017

கோமதி தந்த இன்ப அதிர்ச்சி! !!(இந்திய மண்ணில் பயணம் 61)

நமக்குப் பயணத்துலே அடுத்துப்போக வேண்டிய  ஊர் இன்னும் ரெண்டு இந்தப் பக்கம்தான். ஆனால்  ஒரேடியா இப்போ அங்கே போகமுடியாது.  இரவு நேரத்தில்  பயணம் பொதுவா விருப்பமில்லை. மேலும் ட்ரைவருக்கும் ஓய்வு கட்டாயம்  கொடுக்க வேணாமா?  அதனால்  இன்றைக்கு  நைட் ஹால்ட் திருநெல்வேலின்னு முடிவு செஞ்சுட்டு, ஜானகிராமில்   அறைக்கு ஏற்பாடு ஆச்சு. 

போன  நெல்லைப் பயணத்தில் தங்குன இடம்தான். நம்ம  நெல்லைத்தோழி   (நைன்வெஸ்ட்  நானானி )  கல்யாணி சங்கர்   அப்போ  அறைக்கு  ஏற்பாடு செஞ்சுருந்தாங்க.  இந்தமுறையும் அதே இடம் இருக்கட்டுமே!
போறவழியில்தான் சின்னதா ஒரு மாற்றம் செஞ்சுக்கிட்டோம்.
சங்கரன்கோவில் வழியாப் போகணும், கோமதியைப் பார்க்கணும்.  ரொம்பநாள் ஆசை!

ராஜையில்  இருந்து  ஒரு முப்பத்தியாறு கிமீ தூரம்தான்.  போய்ச்சேர ஒரு மணி நேரம் ஆச்சு. கரிவலம் வந்த நல்லூர் வழியாப் போறோம். ஊர்ப்பெயரைப் பார்த்ததும்... அடடான்னு இருந்துச்சு. கரிகள் ரொம்பவே அறிவு ஜீவிகள் இல்லே !!!

சங்கரன்கோவில் ஊருக்குள் நுழைஞ்சதும் பார்க்கிங் தேடி சின்னதா ஒரு அலைச்சல்.  வடக்கு ரதவீதியாண்டை வண்டியை நிறுத்த இடம் கிடைச்சது.  கோவிலுக்கான அலங்கார வாசல்  பார்த்து நிம்மதி ஆச்சு. ஒரு நாலைஞ்சு நிமிசநடைதான்.

போறவழியிலேயே  ராஜகோபுரத்தை மறைக்கறது மாதிரி  ஒருமண்டபம் கட்டி விட்டுருக்காங்க.   காந்தி மண்டபமாம்.  காந்தியடிகள் விரும்பியவைன்னு  'மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு,  வன்முறை விலக்கு'ன்னு போட்டுருக்காங்க...  ரொம்பச்சரி. ஆனால்... கொஞ்சம் தள்ளி கட்டி வுட்டுருக்கப்டாதோ? 

கோவிலுக்கான நுழைவு வாசலுக்கும் இந்த  மண்டபத்துக்கும் இடையில்  சின்ன விமானத்தோடு புள்ளையார் சந்நிதி ஒன்னு!   கும்பிடு போட்டுட்டுக் கடந்து போறோம். (புள்ளையார் சந்நிதிதானே? இப்போ   எழுதும்போது சந்தேகமா இருக்கே...)

ஒன்பது நிலை  ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே போனால்... வழக்கமான கோவில் பிரகாரம் போல இல்லாமல்  நீண்டு போகும் மண்டமும் கோவில் கடைகளுமா கடை வீதிக்குள் வந்துட்டாப்லெ இருக்கே... 


பூமாலை,   அர்ச்சனைக்கான தேங்காய்  பழத்தட்டு, சாமிப் படங்கள் விக்கற கடைகளில் எல்லாம்  பாம்பு உருவங்களும் விற்பனைக்கு வச்சுருக்காங்க.  இந்தக் கோவிலில் நாக தோஷத்துக்கும்,  ராகு தசை கஷ்டங்களுக்கும் பரிகாரமா  பாம்புகளை வாங்கி படைக்கிறாங்களாம்! விசாரிச்சுக்கிட்டேன்.

பாம்பு....ன்னதும் கொஞ்சம் நம்மவரைத் திரும்பிப் பார்த்தேன்....  :-) எதையும் கண்டுக்காம தன் வழக்கப்படி விடுவிடுன்னு முன்னாலே போய்க்கிட்டு இருக்கார்!
சங்கன், பதுமன்னு ரெண்டு நாகர்குல அரசர்கள்  நண்பர்களா இருக்காங்க. ஒரே இனம்தான் என்றாலும் கூட வெவ்வேற இஷ்ட தெய்வங்கள். சங்கரன் சிவ பக்தன். பதுமன்  வீர வைஷ்ணவன்.  அப்பப்ப ரெண்டு பேருக்கும்  அவுங்கவுங்க சாமியிலே யார் பெரியவர்னு  வாக்குவாதம் வந்துரும்.  நல்லா வாய்ச்சண்டை போட்டுக்குவாங்க.

ஒருநாள் இதுக்கு ஒரு பஞ்சாயத்து பண்ணிக்கலாமுன்னு  பார்வதி அம்மன் கிட்டே போய்  நின்னு,  'ஆத்தா.... நீயே சொல்லு....  சிவன், விஷ்ணு  இந்த ரெண்டுபேரில் யார் பெரியவங்க?  நீ சொல்றதை  நாங்க அப்படியே  ஏத்துக்கறோம்' னு முறையிட்டாங்க.

தர்மசங்கடம்னு சொல்வாங்க பாருங்க.... அப்படி ஆகிப்போச்சு பார்வதிக்கு!  பிறந்த வீடும் புகுந்த வீடும் பெண்களுக்கு ரெண்டு கண்கள் மாதிரி. எதை விட்டுக்கொடுப்பது?  ஒரு பக்கம் புருஷன், இன்னொரு பக்கம் உடன்பிறந்தான்.

ரெண்டு பேரும் சரி சமம். அரியும் சிவனும் ஒன்னுன்னு சொல்லிப் பார்த்தாங்க....  சங்கனும் பதுமனும்   அதெப்படி ஒன்னாக முடியுமுன்னு பாம்பு மாதிரி சீறுனாங்க....

என்ன செய்யறதுன்னு  தெரியாம,  பார்வதி  தவம் பண்ண ஆரம்பிச்சாங்க.  ஹரியும் சிவனும் சரிசமமா ஒன்னா காட்சி கொடுக்கணுமுன்னு......

ஆத்துக்காரர் கேக்கறார், 'ஏற்கெனவே ஒரு பாதி உனக்குக் கொடுத்தாச்சே.... இப்ப  ஒன் பை த்ரீயாகணுமா? '

"அச்சச்சோ...அதெல்லாம் இல்லை. என் இடத்தை என் அண்ணனுக்குக் கொடுத்துருங்க. "

"பெர்மனென்ட்டாவா?"

"ஹேய்.... அதொக்க இல்லையாக்கும். இப்போ இந்த  ரெண்டு பாம்புகளுக்கும்  காமிக்கணும். அவுங்க பார்த்துட்டு,  ஹரியும் சிவனும் ஒன்னுன்னு  நம்பணும்.  அவ்ளோதான். அப்புறமா  நான் என் இடத்தை  அண்ணனிடம் இருந்து வாங்கிப்பேன்.... "

"ஓக்கே டன்!  இப்பவே ஏற்பாடு பண்ணிடறேன்"

மச்சானைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னதும், கரும்பு தின்னக் கூலியான்ன நாராயணன்,  சட்னு  சிவனின் இடப்பக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக்கிட்டார்.

சங்கரநாராயணரா உடனே  தரிசனம் கொடுத்தது இதே கோவிலில் நம்ம கோமதி அம்மனுக்குத்தான்!   இங்கே கோவிலில் அம்மன் பெயர் கோமதி!

ஆடி மாசம் தவம் செஞ்சுக்கிட்டு இருந்த  கோமதிக்கு  சங்கரநாராயணரா, சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து தரிசனம் கொடுத்த நாள்தான் ஆடித் தபசுன்னு பெரிய அளவில், பெரிய   விழாவா இந்தக் கோவிலில் கொண்டாடுறாங்க!

சங்கனுக்கும் பதுமனக்கும் சேதி போச்சு. சரசரன்னு ஓடி வந்து பார்த்தாங்க!  அட! ஆமாம்.... !!  ரெண்டு பேரும் சரிசமமா காட்சி கொடுக்கறதைப் பார்த்ததும்  'ஹரியும் சிவனும் ஒன்னு, அதை அறியாத நம்ம வாயிலே மண்ணு'ன்ற தெளிவு வந்துருச்சு!

பல வருசங்களுக்கு முன்னே ஒரு குடும்பக் காரியமா ஹரிஹர் னு சொல்லும் ஊருக்கு (கர்நாடாகா) போயிருக்கேன். துங்கபத்ரா நதிக்கரையில் ஊரின் பெயருக்குக் காரணமான கோவில் இருக்கு. உள்ளே பெருமாளும் சிவனுமா பப்பாதி உடம்போடு சேர்ந்து தரிசனம் கொடுக்கறாங்க.  இதே கோவிலின் முன்பக்கம்  ரெண்டு நிமிசநடையில்  108 ஷிவலிங்கேஸ்வரா கோவிலையும் பார்த்த நினைவு.  

இன்னும் கூகுளாரைக் கேட்டால், இந்தியாவின் பல பாகங்களிலும் இப்படி ஹரிஹரனாகக் கோவில் கொண்டு சைவ வைணவ ஒற்றுமையை காமிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்கன்னு  தெரிஞ்சது!


நேராக் கோவிலுக்குள் போய்  சங்கரலிங்கஸ்வாமியை முதலில் தரிசனம் செஞ்சோம்.  ஸ்படிகலிங்கமா இருக்கும் இவருக்குத்தான் அபிஷேகம். 

திருப்பாற்கடலில் எப்பவும் தாய்ச்சுக்கிட்டு இருக்கும் பெருமாள் ஏற்கெனவே ஜில்லுன்னு இருப்பதால், கூடவே நிக்கும் சிவன் தனக்கு அபிஷேகம் வேண்டாமுன்னு  சொல்லிட்டாராம். அதனால்  அலங்காரங்கள் மட்டுமே!

வலப்பகுதி முழுசும் சிவ அலங்காரம், இடப்பகுதி முழுசும் விஷ்ணு அலங்காரமுன்னு  அட்டகாசமா இருக்காங்க ரெண்டு பேரும் ஓர் உருவமா!
ம்ம கோமதி அம்மனுக்குத் தனிச் சந்நிதி!  சட்னு பார்க்கும்போது  நம்ம மயிலை கற்பகாம்பாள், நெல்லை காந்திமதி,  மாயூரம் அபிராமி மனசுக்குள் வந்து போனாங்க.  அழகான அம்மன்! அதே உயரம்தானோ?
உட்பிரகாரம் சுத்தும்போது  பெருசா ஒரு புத்துக்கோவில்!  வான்மிகநாதர் சந்நிதின்னு .....  (இந்தக் கோவிலில் படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் கேமெராவைச் சுருட்டிக் கைப்பையில் வச்சுருந்தேன்.  ஆனால்.... வித்தியாசமான வான்மிகரைப் பார்த்ததும்..... அங்கிருந்த குருக்களிடம்  'இதை மாத்திரம்  வெளிப்பக்கம்  மட்டும் க்ளிக்கலாமா'ன்னு கேட்டு அனுமதி வாங்கி  ஒரு  நாலு க்ளிக்ஸ் ஆச்சு ! செல்ஃபோனில்தான்)வெளி மண்டபத்தில்  இருக்கும் ஸ்ரீ கீதா வீரமணி பிராமணாள் ஹோட்டலில் ஆளுக்கொரு டீ வாங்கிக் குடிச்சோம்.
இப்பவே மணி ஆறு ஆச்சு. இருட்டுமுன் நெல்லைக்குப்போய்ச் சேரணும்.  ஒரு ஒன்னரை மணி நேரப்பயணம்  இருக்கே!

சிவன் கோவிலுன்னு உள்ளே போய் பெருமாளையும் சேர்த்துப் பார்த்தது மனசுக்கு ரொம்பவே நிறைவா இருந்துச்சு என்பதும் உண்மை. இந்த ஹரியும் சிவனும் ஒன்னுன்றது   என் மூளைக்குள் இன்னும் நல்லாப் பதியலை போல!)

இப்ப இதை எழுதும்போது.... கோவிலை இன்னும் சரியாப் பார்க்கலையோன்னு  சம்ஸயம் வருது. பார்க்கலாம் இன்னொரு முறை லபிக்குதான்னு.....

தொடரும்.........:-)

13 comments:

said...

சங்கரன் கோவில் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். அங்கு பெரிதாக எடுத்துப் போட்டிருக்கும் ஹரிஹரன் சிலை கர்நாடகாவில் இருப்பது இல்லையா? இந்தக் கோவில் பார்த்ததில்லை. பார்க்கும் ஆவல் வருகிறது.

said...

// (ஸ்ரீ கீதா) வீரமணி பிராமணாள் ஹோட்டலில்//

என்ன ஒரு முரண்!

:)))

said...

கரிவலம் வந்த நல்லூரில் பெருமாள் கோவில் இருக்குமே.

கோமதி அம்மனைப் பார்க்கும்போது, கிளி இல்லாத்தனால் மீனாட்சி ஞாபகம் வரவில்லையா?

சங்கரநாராயணர் தரிசனம் செய்துகொண்டு தொடர்கிறேன்.

said...

இக்கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளோம். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

said...

படங்கள் அத்தனையும் அருமைம்மா

said...

வன்மிகநாதர் ன்னு மண்டபத்துல எழுதியிருக்கு. நீங்க வான்மிகநாதர் ன்னு எழுதியிருக்கீங்க. நீங்க சரியாத்தான் எழுதியிருப்பீங்க ன்னு எனக்குத் தெரியும்.

said...

வாங்க ஸ்ரீராம்.

சுட்டபடம். கர்நாடகாதான்! ஹரிஹரில் புதுசா வச்சுருக்காங்க போல!

நல்ல பெரிய கோவில்தான். இன்னும் கொஞ்ச நேரம் சுத்திப் பார்க்காம வந்துட்டேனேன்னு இருக்கு இப்போ :-(

said...

@ ஸ்ரீராம்.

:-) கடவுள் போட்ட கணக்கு :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எங்கேயும் நிக்காம ஒரே நோக்காப் போயிருக்கோம்.... நின்னு பார்த்திருக்கலாம்..... ப்ச்.

மீனாக்ஷி ஞாபகம் வரவே இல்லை. நம்ம மீனா சைஸ் ரொம்பக் கம்மி இல்லையோ?

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க ராஜி.

ரசித்தமைக்கு நன்றிப்பா!

said...

வாங்க விஸ்வநாத்.

டீச்சர் மேலே ஒரேடியா நம்பிக்கை வச்சுட்டீங்களே..... அபிமானத்துக்கு நன்றி. ஆனால் நாந்தான் பிழையா எழுதி இருக்கேன்! வன்மிகநாதர்னு இருக்கணும்.

இப்ப திருத்தணுமா இல்லே நீங்க கவனமாக் கண்டு பிடிச்சதை மற்றவர்கள் தெரிஞ்சுக்கட்டுமான்னு ஒரு யோசனை :-)

said...

எல்லாம் அவர் செயல். அப்படியே இருக்கட்டும்.