Monday, November 02, 2015

நாங்க போய் பையனுக்கு வேட்டி கட்டி விடணுமாம்!

சனிக்கிழமை  ரெண்டு தீபாவளித் திருவிழாவுக்குப் போகவேண்டியதாப் போச்சு. பக்கத்தூர்லே (வேற மாவட்டம்!)நார்த் இண்டியன் ஸ்டைலில் திவாலி மேளா! மாலை நாலரை முதல் எட்டரை வரை. தோழியும் நண்பருமா முன்னின்று நடத்தறாங்க. அதுவும் அந்த மாவட்டத்தில்  இது முதல்முறையாக் கொண்டாடுறாங்க என்பதால்  உதவிக் கரங்கள் நீட்டினோம்.

இண்டியன் க்ளப் தீவாலிக்காக மணமகன், மணமகள் அலங்காரம்னு சொன்னேன் பாருங்க. அதையே  இங்கேயும் வைக்கப்போறாங்களாம், நாங்க போய் பையனுக்கு வேட்டி கட்டி விடணுமாம்! நோ ஒர்ரீஸ்னு  நாலேகாலுக்கு அங்கே போய்ச் சேர்ந்தோம். அதுக்குள்ளே  நாலு ஜோடி தயாராகி அங்கே நின்னுக்கிட்டு இருக்காங்க.

வேட்டியை உள்ட்டாவா கட்டிக்கிட்டு இருக்கார் மாப்பிள்ளை. நாங்க ரெண்டு பேருமாச் சேர்ந்து ஒரு விதம் சரியான முறையில் கட்டி விட்டோம்.

பக்கத்துலே  பனாரஸ் புடவையில் ஒரு குஜராத்திப்  பொண்ணு. கலப்புக் கல்யாணம் போல!  அப்புறம்  விவரம் பார்த்தால்... 'மேரே பாஸ் ஏக் காஞ்சீபூரம் ஹை'ன்னது  இந்தப் புடவைதான்னு தெரிஞ்சது.


என்னதான் இப்ப நம்ம பக்கம் கல்யாணங்களில்  மெஹந்தி , காக்ரா, முந்தானை அழகு தெரியணும் என்பதற்காகக் குஜராத்தி ஸ்டைல் புடவைக் கட்டுன்னு இருந்தாலும், சம்ப்ரதாயமான கல்யாணத்தைப் பற்றி விவரிக்கும் போது  உடையும் (ஏறக்கொறைய) சம்ப்ரதாயமா இருக்கணும் இல்லையோ!
அதையே மாத்திச் சரி செஞ்சுடலாமேன்னு  முந்தானையை அவிழ்க்கும்போது, இன்னொரு தோழி வந்து சேர்ந்தாங்க. அவுங்க குஜராத்திதான். 'என்ன இப்படி எங்க பையனைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாளா உங்க பொண்ணு? எங்க வழக்கப்படி  புடவையை மாத்திக் கட்டுனால்தான் தாலி ஏற விடுவேன்'னு சம்பந்திச் சண்டையை ஆரம்பிச்சு வச்சேன். சம்ப்ரதாயமான கல்யாணத்தில் இதுவும் வேணுமில்லையோ?

ஒன்னுரெண்டு  ஊக்கு இருந்தால் சரி செஞ்சுடலாம்.  அங்கே நடனமணிகளுக்கு  ஆடை அலங்கார உதவி செஞ்சுக்கிட்டு இருந்தவுங்க ஆபத்துதவி ஆனாங்க. பொண்ணைத் தமிழச்சி ஆக்கினோம்:-)

லிங்கன் க்ரீன் என்னும் புல்வெளியில் விழா நடக்குது. சப்பாட்டுக் கடைகள் ஒரு மூணு. பலகாரக் கடை ஒன்னு. ரங்கோலி, மெஹந்திக்கு ஒன்னு,  தீபாவளி அகல்விளக்குகளுக்கு வண்ணம் தீட்டுதல்,


 ரெண்டு  அலங்காரச் செருப்புக் கடைகள். கடைன்னதும்  பெருசா நினைக்கவேணாம். ஒரு மேஜை  போட்டால் அது ஒரு கடை ! கொஞ்சூண்டு நகைநட்டு, பொட்டு, ஒரு பத்து  கம்பளி ஷால். இன்னும் பார்க்கணுமுன்னா  கடைக்கான கார்டு தர்றோம். அங்கெ வந்து பாருங்கன்னு வீட்டு விலாசம் தர்றாங்க. இன்னும் எங்கூருக்குப் பக்காவா  இந்தியன் துணிக் கடைகள் வரலை. இருக்கும் நாலைஞ்சும் வீடுகளில் தனிப்பட்ட  முறையில்தான்.


குழந்தைகளுக்கான  க்ராஃப்ட் ஸ்டாலில் உதவி செய்யப் போயிட்டார் நம்மவர். ரங்கோலி ரொம்ப நல்லாப் போடுவார்னு சொல்லி வச்சேன்:-)
செல்வின் மாவட்டம் சிட்டிக் கவுன்ஸில் தீவாலி விழா நடத்த ஆகும் முழு செலவையும் தந்துருக்கு. இடமும் இலவசம். திறந்தவெளின்னாலும் கூட்டம் கூட அனுமதி வேணும் இல்லையா?

சின்னதா அளவான மேடை அமைப்புக்கும் நிதி அவுங்கதான். புல்வெளியில் வச்சால்  தரையில் புல் பாழாகிருமேன்னு சாலையில் பார்க்கிங்  செய்ய விட்டுருக்கும் இடத்தில் புல்வெளியைப் பார்த்தாப்போல் மேடை போட்டது  ரொம்ப நீட் ஐடியா!

நம்மாட்களுக்குச் சொல்லித்தந்தாலும்..........


இந்தப் புல்வெளியே லிங்கன் பொது நூலகத்தின் பின் வாசலில் என்பதால், கழிவறை வசதிக்காக,  நூலகத்தின் பின்வாசலைத் திறந்து விட்டுருக்காங்க.(இன்றைக்கு ஞாயிறு. நூலகம் விடுமுறைநாள்.)
 விழாவுக்கான மைக் செட் அமைப்பையும் ஒரு நலம்விரும்பி இலவசமாகச் செஞ்சு கொடுத்துருக்கார். அவருக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன். அன்றைக்கு  ஹாலோவீன் விழா என்பதால் சின்னப்பசங்க சிலர்  வேஷம் போட்டு என்னைப் பயமுறுத்திட்டாங்க:-)
நான் மட்டும் லேசுப்பட்டவளா? சேலை கட்டிக்கிட்டுப்போய் எல்லோரையும் பயமுறுத்திட்டேன் :-)

நம்ம கோபால் கடையில் கூட்டம் அம்முது :-)


விழாவை ஏற்பாடு செஞ்ச தோழி அந்த ஊர்க்காரவங்கதான். மேடை நிகழ்ச்சியாப் பத்து ஐட்டங்கள். ஆறுமணிக்கு மேடை நிகழ்ச்சிகள் தொடங்கும். முதல் நடனம் நம்ம தோழி அனுராதாவோடதுன்னாங்க. அதை மட்டும் பார்த்துட்டுக் கிளம்பிடலாமுன்னு நினைச்சேன்.

மேலே படம் பகிர்ந்த தோழிக்கு நன்றி.  இதே நடனத்தை வர்ற சனிக்கிழமை தீவாலியில் பார்த்துடலாம். 

நானொன்று நினைக்க....   தோழி  வேறொன்னு நினைச்சுட்டார். மேடை ஏறி அனைவரையும் வரவேற்றுப் பேசுனபோது, நிகழ்ச்சி ஆறேகாலுக்குத் தொடங்கும். அதுவரை மேளாவை நல்லா எஞ்சாய் பண்ணுங்கன்னு தம்பதிகள்  ரெண்டு பேரும் ஆளுக்கொருவாட்டி  மைக் பிடிச்சுச் சொன்னாங்க. அநேகமா இண்டியன் டைம் ஆகவே முடியப்போகுது!

உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பதுபோல் குட்டியூண்டு இடம். இதுலே  நல்லாச் சுற்றிப்பார்த்து இன்னும் ஒருமணி நேரம் கூடுதலா  எஞ்சாய் பண்ணமுடியாதுன்னு தோணிப்போச்சு. நம்ம வீட்டுத் தோட்டத்துப் பறவைகளுக்கு மாலை ஆறு மணி டின்னர் டைம். நம்ம ரஜ்ஜுவுக்கு ஆறே கால்.


 வந்தோம் பார்த்தோம் சென்றோமுன்னு கிளம்பிட்டோம்.  வரும்வழியில் பார்த்த  வெண்பூக்களைக் கிளிக்கணும்  என்பதால் வண்டியை ஓரங்கட்டி ரெண்டு நிமிசம்  க்ளிக்கிட்டு வீட்டு வந்ததும் கடமைகளை முடிச்சு, சுடச்சுட தீபாவளின்னு  அங்கே எடுத்த படங்களை ஃபேஸ்புக்கில் போட்டு என் சமூகக் கடமையை  முடிச்சுக்கிட்டுப் போலீஸ் ஆரம்பிச்ச சங்கத்துக்கு போய்ச் சேர்ந்தோம்.


தொடரும்........:-)

PINகுறிப்பு: இன்னும் நம்ம மாப்பிள்ளை வீடு வந்து சேரலை. போறபோக்கைப் பார்த்தால்  தீபாவளிக் கொண்டாட்டங்கள் இங்கே  எப்போ முடியுமோ அப்போதான் திரும்பி வருவாருன்னு நினைக்கிறேன். தலை தீபாவளி பாருங்க. அப்படித்தான் ஊர்கோலம் இருக்கும்:-) வந்தவுடன்.....  வேட்டியை.... உருவறோம்!


11 comments:

said...

வாவ், அழகான படங்கள்.. முகநூலில் பார்க்கலையே...

said...

உங்களை பயமுறுத்த முடியுமா என்ன...?

said...

வாங்க கார்த்திக் சரவணன்.

சுட்டி ஒன்னு பதிவின் கடைசில் இருக்கு பாருங்க.

said...

அசத்தும் நடை......

said...

பதிவைப் போலவே கலர்ஃபுல் படங்களும் பேசுகின்றன. அழகோ அழகு!

said...

அருமையான பதிவு. படங்களும் அழகு.

said...

அமர்க்களமான கொண்டாட்டம். படங்கள் வழக்கம்போல சூப்பர். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பது பார்க்கவே நன்றாக இருக்கு. புடவை வெகு சீர்.

said...

தொடரும் தீபாவளிகொண்டாட்டங்கள் குறித்த பகிர்வு சூப்பர்மா!இங்கேயும் இந்த மாதிரி கொண்டாட்டங்கள் நடத்துவதாக தெரியும் ஆனால் இதுவரை எதிலும் கலந்து கொண்டதில்லை. சின்ன வயதில் வந்திட்டதால் இந்தமாதிரி கலை கலச்சார நிகழ்வுகளை காணும் ஆர்வமும் கம்மியோ என்னமோ நேரமில்லை என அதின் மேல் பழி போட்டுக்கொள்வேன்.

said...

அருமையா ஏதோ நாங்களும் உங்க கூடவே வந்து சுத்தி பார்ப்பது போல பதிவுகள்....படம் மனதை அள்ளுது. குழந்தைகள் ரொம்ப அழகா இருக்காங்க...என்ன ஜாலியா இருக்காங்க பாருங்க...

said...

அழகான படங்கள். கொண்டாட்டங்கள் தொடரட்டும்....

said...

பின்னூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

தனித்தனியாச் சொல்லாததுக்கு மன்னிச்சூ....