Friday, November 20, 2015

'ஜெ' வீட்டில் நமக்கு விருந்து ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 96)

முதல் வேலை முதலில்னு நட்புகளுக்கு (ஓசி) ஃபோனில் தகவல் சொல்லிட்டு அம்பாஸடர் லவுஞ்சுக்குப் போனோம்.  குளியல் அங்கேதான். வழக்கம்போல்  பகலில் மாலை 5 வரை தங்க,  டே ரூம் எடுக்கலாமுன்னா செராங்கூன் ஏரியாவில்  நல்ல இடம் கிடைக்கலை. எல்லா ஹொட்டேல்களிலும்  செக்கின் டைம் பகல் மூணு மணியாம். விடிஞ்சது போ...சரி குளிச்சு முடிச்சுக் கோவிலுக்குப் போயிட்டு, நட்புகளை சந்திச்சுட்டு வந்துடலாமேன்னுதான்...

ஒரு பகல் தூக்கம் இல்லாமப் போனால் சமாளிக்க முடியாதா என்ன?  வைகுண்ட ஏகாதசிக்குக் கண் முழிச்சுட்டு, மறுநாள் துவாதசியன்னிக்குப் பகலில் தூங்கக்கூடாதுன்னு அன்றைக்கு முழுசும் பிக்னிக் போல எங்கேயாவது கூட்டிப்போவாங்க  அம்மம்மா.  அன்று மாலை விளக்கு வச்சதும் சாமி கும்பிட்டு, சாப்பிட்டு முடிச்சதும் தூங்கலாமாம்.
அந்தமாதிரின்னு நினைச்சுக்கலாமுன்னேன். நினைப்புதான் பொழப்பைக் கெடுக்கப் போகுதுன்னு அப்போ தெரியலை!

என்னுடைய திட்டத்தின்படி காலையில் கோவிலுக்குப்போயிட்டு, நம்ம 'ஜெ' வை (சிங்கையின் பிரபல எழுத்தாளர் தோழி ஜெயந்தி சங்கரை) சந்திக்கிறோம்.  கொஞ்சம்  சுத்தியடிச்சுட்டுப் பகல் சாப்பாட்டை அவுங்களோடு சேர்ந்து சாப்பிடறோம். மதியம் சித்ரா ரமேஷ் சந்திப்பு. மாலை 5 மணிக்குக் கிளம்பி ஏர்போர்ட்.

அதிகாலையில் ஃபோன் போட்டபோதே.... சிங்கை எழுத்தாளர் தோழி சித்ரா ரமேஷ், மதியம்   பள்ளிக்கூட விழாவுக்கான ரிகர்ஸலுக்குப் போறாங்கன்னு தெரியவந்துச்சு. நோ ஒர்ரீஸ்.  அடுத்தமுறை சந்திச்சால் ஆச்சு.

ஸ்கை ட்ரெயின் இருப்பதால் பிரச்சனை இல்லை. கேபின் பேக்ஸை,  மூணாவது டெர்மினலில் இருக்கும் லக்கேஜ் ஸ்டோரேஜில் கொண்டுபோய் வச்சுட்டு, ரயில் பிடிச்சு  ஃபேரர் பார்க் போகணும்.  இங்கிருந்துதான் நியூஸி ஃப்ளைட் கிளம்பும் என்பதால்  எவ்ளோ முன் ஜாக்கிரதை பாருங்க.

இன்னும் ரெண்டு வருசத்துலே ( 2017) நாலாவது டெர்மினல் வரப்போகுது. வேலை நடந்துக்கிட்டு இருக்கு இப்போ! வர்ற கூட்டத்துக்கும், விமானங்களின் எண்ணிக்கைகளுக்கும் இடம் வேண்டித்தானே இருக்கு!

வழக்கம்போல் சிங்கை விமானநிலைய அலங்காரங்கள் கொஞ்சநேரம் இருந்து பார்க்க வைக்குது. போனமாசம் சென்னை வந்தபோது தீபாவளி அலங்காரங்களா ஜொலிச்சது, இப்போ வேற மாதிரி. இன்னும் 40 நாட்களில் கிறிஸ்மஸ் பண்டிகை வரப்போகுது பாருங்க!


ஜான் உக்கார்ந்துருக்கார்.  புல்டாக் வகை. வெண்கலச் சிற்பம். மேலே  வண்ண அரக்குப்பூச்சு. ஜூலியன் மாரினெட்டி  என்ற ப்ரெஞ்சு  கலைஞர் செஞ்சுருக்கார். எதுன்னாலும் வெண்கலத்துலே செஞ்சு  அரக்கைப் பூசி விட்டுருவாராம்!


அடுத்து ஒரு  குந்துமணி குந்தி இருக்கு!  மலேசியக் கலைஞர் குமாரி நாஹப்பன் செஞ்சு வச்சுருக்கார்.  அங்கே மலேயாவில்  இந்த  குந்துமணி மரங்களுக்கு Saga என்ற பெயராம்.  இந்தப்பெயருக்கே... பொற்கொல்லர் என்றுதான் பொருளாம்!   மரத்தில் வரும் காய் நம்ம கொடுக்காப்புளி போல வளைஞ்சு விளையுது. பழுத்துக்  காய்ஞ்சுட்டால் உள்ளே  வரிசையா குன்றிமணி விதைகள். இந்த குந்துமணி விதைகளில் ஒரு விசேஷம் என்னன்னா...  எல்லாமே ஒரே அச்சில் வச்சு வார்த்ததைப்போல்  ஒரே எடையில் இருக்குமாம்.  நாலு குந்துமணி எடை ஒரு கிராம். அதனால் ஆதி காலத்துலே இருந்தே  குந்துமணிகளைத்தான் தங்கத்தை எடைபோடப் பயன்படுத்தி இருக்காங்க!  அட!  ஆமாம் ஒரு குந்துமணித் தங்கம்  வாங்கித்தரலைன்னு சொல்றோம், இல்லே? இந்த சிங்கப்பூரில் மட்டும் ரெண்டாயிரம் மரங்களுக்குமேலே இருக்காமே!நம்ம சிங்கைச்சீனு கோவிலுக்கு நேரெதிரா எதிர்வாடையில் எம் டி ஆர் கிளை ஒன்னு திறந்துருக்காங்க. அங்கே காலை உணவு சாப்டுட்டுக் கோவிலுக்குப் போனால்,  நிதானமா கொஞ்சநேரம் உக்காரலாமேன்னார் கோபால்.
சரின்னு அங்கே போனால் ஏழைக் கையில் கொடுத்து உக்காரவச்சுட்டாங்க.

என்ன வேணுமுன்னு முதலிலேயே ஆர்டர் கொடுத்துட்டுக் காசைக் கட்டிடணும். அவ்ளோ நம்பிக்கை மக்கள்ஸ் மேல்!   உக்கார்ந்துக்கிட்டு இருக்கோம். நம்ம மேஜை  கல்லாவுக்கு முன்னால் இருக்கு. ஒவ்வொருமுறை  கல்லா மனிதரைக் கண்கள் சந்திக்கும்போதும், 'இதோ வந்துக்கிட்டு இருக்கு'ன்றாரே தவிர வர்றபாட்டைக் காணோம். இதுக்குத்தான் காசை முன்னாலேயே வாங்கிடறாங்க போல.  சும்மா இருந்த நேரத்துக்கு கையில் இருந்த  பில்லை நோட்டம் விட்டதும் உடம்பு அப்படியே ஆடிப்போச்சு.

 சொன்னது எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்தே  ரெண்டு  ரவா இட்லியும், ரெண்டு வடையும் ரெண்டு காஃபியும்தான். ரவா இட்லி ஒன்னு நாலு டாலர். வடை ஒன்னு நாலு டாலர், காஃபிதான் மலிவு. ஒன்னு ரெண்டு டாலர். பகல் கொள்ளையா இல்லே?  பேசாம நம்ம கோமளாஸ் போயிருக்கலாம்.

சொன்னதுக்கு  அவ்ளோதூரம் நடக்கணுமான்னார். பேசாம  லிட்டில் இண்டியா ஸ்டேஷனில் இறங்கி இருக்கலாம். இப்படி இருவது டாலரை அனாவஸியமா தண்டம் பண்ணிட்டாரேன்னு  எரிச்சல் எனக்கு:-(


அடுத்த ஐ கான்டாக்ட்லே கோப மூஞ்சைக்(!) காமிச்சேன். எழுந்து உள்ளே போயிட்டு வந்தவர் பின்னாலேயே நம்ம  ஆர்டர் வருது. ருசி ஒன்னும் அப்படி அபாரமா இல்லை. பெங்களூரில் மாவேலியில் சாப்பிட்டது நினைவுக்கு வந்து தொலைச்சது. எப்போ? அது 1982!  அதுக்குப்பிறகு தரம் குறைஞ்சுக்கிட்டே வந்துருக்கு போல :-(
சாலையைக் கடந்து  எதிர்சாரிக்கு (உண்மையாவே) ஓடினேன். கோவில் காம்பவுண்டைத் தாண்டும்போதே குதிரைக்குக் கண்பட்டி போட்டாச்சு:-) கண்ணெதிரே நேரா நம்ம சீனு!  "ஹை ச்சீனு!   எப்படிடா இருக்கே?" சனிக்கிழமை தரிசனம் சூப்பர்!  பிரகாரம் சுத்திட்டுத்தான்  மூலவர் என்ற சம்ப்ரதாயமெல்லாம் எனக்கில்லை!
முன்மண்டபத்தில் அலங்கார  பூஷிதனா உற்சவர்! பசேல்னு துளசியும் மல்லியுமா.....    ஹைய்யோ!!!  உடனுறையும்  தேவியர்களின் புடவைக் கொசுவம் சூப்பர்! முழம் ஜரிகை வேற!
அந்த ஒரு நிமிட் ஏகாந்த ஸேவையாகவும் அமைஞ்சது!
மனம் நிறையும்வரை  பார்த்துக் கிளிக்கிட்டு  வலம் போக ஆரம்பிச்சால்.... பக்தர்களுக்கான பிரஸாதம்  பெஞ்சுமேல் ரெடியா வந்து  உக்கார்ந்துருக்கு!

மஹாலக்ஷ்மித் தாயார் சந்நிதிக்குப்போய்  கும்பிட்டுக்கிட்டு வலத்தைத் தொடர்ந்தேன்.  நம்மவர், தூண் பிடிச்சு உக்கார்ந்துக்கிட்டார். அவருடைய ரெகுலர் தூண்கூட அவருக்காகக் காத்து நின்னது!  
இந்தப் பக்கம் கோவிலுக்கான ஃபண்ட் ரெய்ஸிங்(!) லட்டு விற்பனை! ஒன்னு ஒரு டாலர்தான். ரெண்டு வாங்கி  வச்சேன்.  அப்போ திமுதிமுன்னு  ஒரு கூட்டம் பக்தர்கள் வந்து சேர்ந்தாங்க. 'போங்க, போய்க்கும்பிடுங்க.  சாமி ஃப்ரீயாத்தான் இருக்கார்......'
ரெண்டாவது ரவுண்டு போகும்போதே பிரஸாத விநியோகம் ஆரம்பம் ஆச்சு.  கோவில் பிரகாரமெல்லாம் அங்கங்கே  பக்தர்கள் பிஸியா இருந்தாங்க.  நானும் போய் எட்டிப் பார்த்துட்டுக் கொஞ்சூண்டு புளியோதரையும், கேஸரியும் மட்டும் வாங்கி வந்து கோபாலுக்குக் கொடுத்தேன். சுண்டல், கல்யாணப் பொங்கல்கூட இருந்தது.
'எதுக்கு இது'ன்னார்? 'சுப். பிரஸாதம். அப்புறமா சாப்பிடுங்கோ'ன்னுட்டு,  நம்ம ஆண்டாளம்மா சந்நிதிக்குப்போனேன். தூமணி மாடத்து பாடணுமே :-)  கள்ளக்குரலில் பாடிமுடிச்சுட்டுத் தலையைத் திருப்பினால், நம்ம தோழி  'ஜெ' வந்து நிக்கறாங்க.

இந்தப்பக்கம் கூட்டமா இருக்கேன்னு   கருவறைக்கு வெளிப்புற வெராந்தாவில் போய் உக்கார்ந்து கச்சேரியை ஆரம்பிச்சேன்.  இடையிடையே லட்டு, கேஸரி பிரஸாதங்களை முடிச்சோம்.
 ஒரு ஒன்பதே காலுக்கு எழுந்து,  வேறெங்காவது போகலாமான்னு கோவிலை விட்டு வெளியே செராங்கூன் சாலைக்கு  வந்தால்.... ஒரே அலங்காரம்!
 பொதுவா, தீபாவளிக்கு  போட்டுவைக்கும் அலங்காரங்கள் எல்லாம்  சீனப் புத்தாண்டு வரும்வரை அப்படியே தான்  இருக்கும் என்பதைக் கடந்த  சில பயணங்களில் தெரிஞ்சுக்கிட்டேன்.
இடமா வலமான்னு, எங்கே போகலாமுன்னு  கேக்கும்போதே....  நம்மவர் முகம் சோர்ந்து, கொட்டாவிமேல் கொட்டாவியா விடறார். இதைக் கவனிச்ச நம்ம ஜெயந்தி, நம்ம வீட்டுக்குப்போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாமான்னு கேட்டதும் சட்னு தலையை  எஸ்ஸுன்னு ஆட்டறார் மனிதர். தள்ளலை போல!


ஒரு சமயம் எனக்கும் இப்படி ஆகி இருக்கு. நானும் ஒரு மலேசியத் தோழியுமா சென்னைக்குப்போய் மூணு வாரம் நல்லா சுத்தியடிச்சுட்டு  நியூஸி திரும்பறோம். இதேபோல் அதிகாலையில்  சிங்கை வந்து சேர்ந்தாச்சு. தோழியின் உறவினர்கள் ரெண்டு பேர் சிங்கையில் என்பதால்  அவர்கள் வீடுகளுக்குப் போய்ப் பார்த்துப் பேசிட்டு, செராங்கூன் சாலைக்கு வர்றோம். இங்கே சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுக் கொஞ்சம் ஷாப்பிங், சுத்திப் பார்ப்பதை வச்சுக்கணும். மாலை ஏழரைக்கு ஏர்ப்போர்ட்டில் இருந்தால் போதும்.  அப்பெல்லாம்  9 மணிக்குத்தான் நியூஸி ஃப்ளைட்.


கோமளாஸில் சாப்பிடும்போதே... கண்ணைச் சுத்திக்கிட்டு வருது. வெளியே வந்தால்  கால்கள் அப்படியே பின்னுது. அப்படி ஒரு  களைப்பு. தோழி என்னவோ ஸ்டெடியாத்தான் இருக்காங்க. 'இன்னும் சில நண்பர்கள் இருக்காங்க. போய்ப் பார்க்கலாமா'ன்னு கேட்டுக்கிட்டே கூட வர்றாங்க.  வேணாமுன்னு தலையை ஆட்டிக்கிட்டே நடக்கிறேன். ஆனாலும் மெள்ள அடியெடுத்து வச்சு முஸ்தஃபா வரை வந்துருக்கோம். இதுக்கு மேலே முடியாதுன்னு  முஸ்தஃபா ஹொட்டேலுக்குள் நுழைஞ்சேன் . இப்ப இந்த ஹொட்டேல் இல்லை :-(   பகலுக்கு மட்டும் ஒரு டே ரூம் வேணுமுன்னதும் முதலில்  காலி இல்லைன்னு சொன்னவர்,  என் தள்ளாட்டம் பார்த்தோ என்னவோ அறை(!) கொடுத்தார்!

போய் படுக்கையில் விழுந்தவள்தான். கண்ணை முழிச்சுப் பார்த்தால் மணி ஆறு! ஸ்டெடியா இருந்த தோழி  பயங்கர உறக்கம்!  பரபரன்னு  எழுந்து , அவுங்களையும் எழுப்பி விட்டு சட்னு ஒரு ஷவர் எடுத்துக்கிட்டு, அரக்கப்பரக்கக் கிளம்பி கீழே வந்தால் டாக்ஸி கிடைக்கலை.  ஒவ்வொரு நிமிட்டும்.... மனசு திக்  திக். ஒருவழியா டாக்ஸி  கிடைச்சு ஏழே முக்காலுக்கு  ஏர்ப்போர்ட் போய்ச் சேர்ந்து டெர்மினல் நோக்கி ஓடுனதெல்லாம் ஞாபகம் வருது இப்போ :-)

டாக்ஸி எடுத்து 'ஜெ' வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். படுக்கையைக் காமிச்சதும் பொத் னு விழுந்து தூங்கியே போயிட்டார் நம்மவர். நாங்கதான் பேசிக்கிட்டிருந்தோம். 'நீங்களும் கொஞ்ச நேரம் தூங்கிடுங்க துளஸி'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க 'ஜெ'!
அடுத்து வெளிவரும் புத்தகங்களைப் பற்றியும், ஏற்கெனவே  வாசிச்சவைகளைப் பற்றியும், நியூஸி, கோவில்கள் இப்படி பேசவா விஷயம் இல்லை?

மத்யானம் லஞ்சுக்கு சிம்பிளா எதாவது செய்யறேன்னு சொல்லி  பேசிக்கிட்டே ஒரு மினி விருந்து தயார் செஞ்சுட்டாங்க ஜெ!  அன்றைக்கு  அவுங்களுக்கு  ஆஃப் ட்யூட்டி என்பதால் நல்லாதாப் போச்சு  நமக்கு:-)  பாவம்...  ஜெ! எங்களால் கூடுதல் வேலைதான்!

மூணு மணி நேரத் தூக்கம் முடிச்சு,  எழுந்து வந்த கோபால் நம்ம பேச்சிலும், விருந்திலும் உற்சாகமாக் கலந்துக்கிட்டார் :-)  என் நண்பர்கள் எல்லோரும் கோபாலுக்கும் நண்பர்களே என்பதால் எப்பவும் உற்சாகமாத்தான் பொழுது போகும்!  சாப்பாடு  ஆனதும்,  இன்னும் கொஞ்சநேரம் பேச்சு!உடல் மீண்டும் ஓய்வு கேட்கப்போதேன்னு  கிளம்பி நேரா ஏர்ப்போர்ட் வந்துட்டோம்.

தொடரும்............ :-)
19 comments:

said...

ரசித்தேன். "ஜெ" ன்னதும் எனக்கு "எங்க" ஜெயாம்மா ஞாபகம்தான் வந்தது.

said...

ஒவ்வொரு நிகழ்வையும் சொன்ன விதம் வழக்கம் போல் இனிமை அம்மா...

said...

விருந்தைப்பார்த்ததுமே மனம் நிறைந்து விட்டது. அதென்ன கல்யாணப்பொங்கல்?

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

எனக்கும் ஜெயான்னால் எங்க அம்மம்மாவின் நினைவு வந்துரும். அவுங்களை வீட்டில் எல்லோரும் பங்காரக்கான்னு கூப்பிட்டாலும் அவுங்க அஃபிஸியல் பெயர் ஜெயம்மாதான்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.


இனிமையா?

பேஷ் பேஷ் ! நன்றீஸ் !

said...

வாங்க சாந்தி.

அது..... வழக்கமான வெண்பொங்கலில் மஞ்சள் பொடி சேர்த்து, கடைசியில் கடுகு, முழு மிளகு ரெண்டையும் நெய்யில் வறுத்து சேர்ப்பாங்க. வெண்பொங்கல் போல் அத்தனை குழைவாகவும் இருக்காது. மஞ்சள் சேர்ப்பதால் கல்யாணப்பொங்கல்னு பெயர் வச்சுருப்பாங்களோ?

said...

நூல் பிடித்துக் கொண்டு ஒண்ணோண்ணா படித்துக் கொண்டு வருகிறேன் பா. . ஒரு வருஷத்துல எத்தனையோ மனமாற்றம். ஜயந்தி முகமெல்லாம் மாறி இருக்கு. எத்தனை
புத்தகங்கள் பா. சிங்கை சீனு,ஆண்டாள் அற்புதம். ஏர்போர்ட்டில இருந்து நேரே கோவிலுக்கு வந்து சாப்பிட்டு இருக்கலாம் பா. கோபால் முகத்துல அப்பட்டமா அலுப்பு தெரிகிறது..
இந்தத் தடவை உங்களைப் பார்க்க முடியாதேன்னு ஏக்கமா இருக்கு. பத்திரம்.

said...

Adhu manjaL pongal maa.sumangalip piraarththanaikku kooda seyvaanga. ithukku oru kuzhambum thottukka undu.

said...

ஹப்பா...என்ன சுறுசுறுப்பு! நல்ல ரசனை. இந்த உலகம் சுற்றும் வாலிபிக்கு உலகம் முழுதும் நண்பர்கள்! நாங்கள் பாக்காத கோவில்களையெல்லாம் பாக்க வைத்த புண்ணியம் உங்களுக்கும் கோபாலுக்கும்.
கல்யாணி சங்கர்

said...

தோழிகளின் படம் அருமை !! கொஞ்சம் வேலை இருந்ததால் நடுவில் வர முடியலை . சிங்கை கோவில் அற்புதம் . நீங்கள் எத்தனை முறை எழுதினாலும் படிக்க அலுக்கவில்லை .படங்கள் அருமை .!!!

said...

டீச்சர், இந்தப் பயணத்திலும் உங்க கூடவே வந்துட்டேன். :)
பயணம் நல்லபடியா அமைந்ததில் வாழ்த்துக்கள் டீச்சர்..கூட்டிட்டுப் போன கோபால் அண்ணாவுக்கும். :)

சகோதரி எழுத்தாளர் ஜெயந்தி சங்கரை சந்திச்சது ரொம்ப சந்தோஷம் டீச்சர். நானும் ஒருநாள் அங்கே போகும்போது சந்திக்க வேண்டும். அருமையான எழுத்தாளர்.

அடுத்த பயணம் எங்கே எப்போது டீச்சர்? :)

said...

சிங்கையிலும் சந்திப்பு......

தொடர்கிறேன்.

said...

குன்றிமணிய ஏன் அந்தக்காலத்துல தங்கத்தை அளக்கப் பயன்படுத்தினாங்கன்னு இப்பப் புரியுது. என்ன டெக்னிக்கலான மரம். எல்லா மரமும் ஒரே எடையில் காய் கொடுக்குதே. மத்த மரங்கள்ளாம் இதுகிட்ட கத்துக்கனும். குன்றிமணி மரம் மட்டும் மனுசனா இருந்திருந்தா எல்லா மக்களும் ஒரே ஒயரம் ஒரே எடை ஒரே நெறமாயிருப்பாங்களோ?!?

எம்.டி.ஆர் பெங்களூர்ல மட்டுந்தான் நல்லாருக்கும். அதுவும் அந்த லால்பாக் பக்கத்துல இருக்கும் கடை மட்டுந்தான். மத்ததெல்லாம் பிராஞ்சைஸ். சட்டி சாம்பாரெல்லாம் ஒவ்வொரு ஐட்டம்னு கணக்குக் காட்டுனவங்கல என்னன்னு சொல்றது... கொடுமை.

said...

வாங்க வல்லி.

ரொம்பத் தாமதமான பதிலுக்கு மன்னிச்சூ.....
உங்களை வரும் பயணத்தில் பார்க்க முடியாதேன்னு எனக்கும் ஏக்கம்தான் :-(

said...

வாங்க நானானி.

உங்க ஊர்க்கோவில் என்னை இழுக்குதேப்பா! பதுமன் நலமா?

said...

வாங்க சசிகலா.

நிம்மதியா சாமி கும்பிடணுமுன்னா வெளிநாட்டுக் கோவில்கள்தாம்ப்பா பெஸ்ட்!

said...

வாங்க ரிஷான்.


கொஞ்சம்கூடத் தலைக்கனம் இல்லாதவங்க என் தோழி ஜெயந்தி சங்கர்.

ஆனா எனக்கு 'அவுங்க என் தோழி 'என்ற தலைக்கனம் உண்டு :-)

அடுத்த பயணம் இன்னும் ரெண்டு மாசத்தில்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வது மகிழ்ச்சி!

said...

வாங்க ஜிரா.

மனுசங்க குன்றிமணியைப்போல எல்லோரும் ஒரே மாதிரி உருவத்தில் வேணுமானால் இருக்கலாம். குணத்தில் அல்ல!


நாங்களும் அந்த லால்பாக் பக்கத்து எம் டி ஆர்லேதான் ஒருமுறை சாப்புட்ருக்கோம்.