Monday, November 16, 2015

250 சீர்வரிசைகளுடன் எங்க கோவிலில் அன்னக்கூட் விழா!

பழைய வருசம் முடிஞ்சு புது வருசம் ஆரம்பிச்சாச்சு.  கடந்து போன வருசம் முழுசும் நம்மைக் காப்பாத்துன கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை ஒன்னு இருக்கு. இதுக்கேத்தாப்போல் இப்பதான் அறுவடை வேற முடிஞ்சுருக்கு. புது தானியங்களை வச்சு நல்லதா சமையல் செஞ்சு  சாமிக்குப் படைக்க வேணுமா இல்லையா? நீங்களே சொல்லுங்க....
இப்படித்தான் ஆரம்பிச்சது உணவு மலை விழா....   அன்னக்கூட் என்றாலே  உணவு மலை என்றுதான் பொருளாம்!


இவுங்களுக்கு  நம்மூர் தீபாவளி (நரக சதுர்த்தசி) முடிஞ்சு மறுநாள்  அமாவாசை வருது  பாருங்க, அன்றைக்குத்தான் திவாலி! அதுக்கடுத்த நாள் புது வருசப்பிறப்பு.  அதுக்கு அடுத்த நாள் அன்னக்கூட் விழா.
வகைவகையான உணவுகளை சமைச்சு சாமிக்குப் படைக்கணும். எல்லாம்  மரக்கறி வகைகளா இருக்கணும் என்பதைத் தவிர வேறு நிபந்தனைகள் ஏதும் இல்லை. பொதுவாகவே சாமிக்குப் படைக்கும் நைவேத்தியங்களில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்தானே?


மொத்தம் ஏழுபடிகள்.  இதுலே  ஏற்றவும் முதல்படி (மேலே இருந்து)இனிப்பு வகைகளுக்காக மட்டும். (அப்புறமும் இனிப்பு வகைகள் இருந்தால் மற்ற படிகளிலும் வச்சுக்கலாம். நோ ஒர்ரீஸ். ) சாமி கையை நீட்டுனா, அவருக்கு சட்னு எட்டும் விதமா ரொம்பப் பக்கத்துலே இருக்கணும் இனிப்பு:-)

அடுத்து வரும் படிகளில்  என்ன வேணுமானாலும் எத்தனை வகைகள் வேண்டுமானாலும் வச்சுக்கலாம்.  ஏழு படி முடிஞ்சாட்டு , கடைசியில் நடுமையத்தில் அன்னம் ஒரு பெரிய பாத்திரத்தில் நடுநாயகமா வச்சுடணும். இது கோவர்தனகிரியைக் குறிப்பிடும் ஐட்டம். திரு அன்ன மலை!

பஜனைப் பாடல்கள் பாடி முடிச்சு தீபாராதனை காமிச்சதும், மேற்படி தீனிக் கொலுவை அப்படியே உள்ளே எடுத்துக்கிட்டுப் போய் பக்தர்களுக்கு விளம்ப வேண்டியதுதான்.

கோவிலுக்குப் பிரஸாத  வகைகளா அவரவர் தங்கள் வீடுகளில்  செஞ்சு கொண்டு போய் படைப்பது என்பதால்  சுமாரான அளவில்தான் எல்லோரும்  கொண்டு வர்றாங்க. கோவிலில் விவரம் கேட்டால்  என்ன அளவுன்னு  சொல்வாங்க. பொதுவா  ஒரு மீடியம் சைஸ் கிண்ணக் கொள்ளளவு.

இதனால் படைச்ச அத்தனை வகைகளும் எல்லோருக்கும் கிடைக்காது. வரிசையில் போய் சாப்பாடு வாங்கிக்கும்போது நமக்கு எது கிடைக்குமோ அது மஹாப்ரஸாதம்! எப்படியும் ஒரு பத்து வகைகளுக்குக் குறைவில்லை.
எல்லா விழாக்களையும் நாங்க  வீக் எண்டுக்கே நேர்ந்து விடுவோம் என்றபடியால்  நேற்று எங்கூர் ஸ்வாமிநாராயண் கோவிலில் அன்னக்கூட் விழா கொண்டாட்டம்.

தீபாவளிக்கு சாமி எங்களுக்கு  தீபாவளி & புதுவருட வாழ்த்து அட்டை அனுப்பினார்!   அதுக்குள்ளேயே நடக்கவிருக்கும் நிகழ்வுகளின் விவரங்களும் இருந்துச்சு.

காலை 11 முதல்  5 மணி வரை அன்னக்கூட் தரிசனம்.  ஆறு மணிக்கு  அன்னக்கூட் சபா (சத்சங்கம்) ஏழுமணிக்கு வழக்கம்போல் ஆரத்தி. அதன் பின் சாப்பாடு!

நண்பரின்  மகன் இங்கே படிக்கிறார். ஸ்ரீதர். சென்னை வாசி. அவரை தீபாவளிக்குச் சாப்பிடக் கூப்புட்டு இருந்தோம். அப்பப் பேச்சு வாக்கில் அன்னகூட் பற்றிச் சொல்லி, ஞாயிறு நாங்க போவோம். நீங்களும் வாங்கன்னு  அழைப்பு விட்டதும் சரின்னார்.

முந்தாநாள்   (நமக்கு எப்பவும்) சனிக்கிழமை கோவில் என்ற வழக்கப்படி கோவிலுக்குப்போனால் சாமி அட்டகாசமா ஜொலிக்கிறார். பச்சையும் மஞ்சளும்,  முட்டாய்க் கலருமா ஜோர்!  வழக்கபடி கோவில் விஸிட் என்பதால் கேமெரா கொண்டு போகலை :-( நம்மவரும் செல்லை வீட்டுலேயே விட்டுட்டு வந்துருந்தார் :-(

பண்டிட்டின் மனைவியிடம்,  இது மறுநாளைக்கான அலங்காரமான்னால்...   இல்லையாம். வேறொன்னு இந்தியாவில் இருந்து வந்துருக்குன்னார். எல்லா ஸ்வாமிநாராயண் கோவில்களிலும் ஒரே மாதிரி அலங்காரம்தானாம்.  தினப்படி அலங்காரங்களும்  ஒரே போலத்தானாம்.  800 கோவில்கள் கட்டி வுட்டுருக்காங்க உலகெங்கும். இத்துனூண்டு நாடான நியூஸியிலேயே  நம்ம கோவில்  மூணாவது!

இவுங்களுக்குன்னு சாமி அலங்கார  உடைகள், நகை நட்டுக்கள் எல்லாம் இந்தியாவில் ஹெட் ஆஃபீஸில் தயாராகி வந்துருது.  சாமி சிலைகளும் கூட ஒரே மாதிரிதான் என்பதால் எண்ணூறு செட் உடைகளை  (மூணு ஆண் + ஒரு பெண் ) தைச்சு அனுப்பிடறாங்க!!!!   எல்லாமே ரொம்பச் சரியான அளவுகளுடன்!  ஒருநாளைக்கு  விதவிதமான உடைகளுடன் ஒரு ஆல்பம் போட்டு வைக்கப்போறேன்!

(நாந்தான் நம்மூட்டுத் தாயாருக்குப் பாவாடை தைக்கும்போது  வளர்ந்துருவாளோன்னு கொஞ்சம் நீளமாத் தைச்சுட்டு, உள்ளே டக் பிடிச்சுக்கிட்டு இருக்கேன். அடுத்த முறை தைக்கும்போது இனி வளரவே மாட்டாள் என்பதை நினைவில் வச்சுக்கணும்!)

மறுநாளுக்கான ஏற்பாடுகள், கொலுப்படிகள் தயாராகிக்கிட்டு இருக்கு ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பிஸ்கெட் வீடு!  இளைஞர் குழு (யுவக் மண்டல்) அட்டகாசமா செஞ்சுக்கிட்டு இருக்காங்க. யாரோட ஐடியான்னா....   எல்லோருமாச் சேர்ந்துதான்னு பெருந்தன்மையாச் சொன்னார் ஒருவர். நல்லா இருங்க!

உணவுத் திருவிழா என்பதால் சாப்பாட்டு ஐட்டங்களில் அலங்காரம் பொருத்தம்தான்.  ஆனால்  அவைகளை விழா முடிஞ்சபின் பயன்படுத்த முடியாது.  க்ளூ கன் வச்சுல்லே வேலை நடக்குது!

பூஜை முடிஞ்சு வெளிவருமுன் மறுநாளைக்கான விழாவுக்கு செலவுக்கு இருக்கட்டுமுன்னு  ஒரு தொகை கொடுத்தார் நம்மவர். நாம்தான்  எந்தப் பலகாரமும் செஞ்சு கொண்டு போறதில்லையே.  ரெண்டொரு முறை  உலர்ந்த பழங்களும்,  முந்திரி, பாதாம்  போன்றவைகளும்  கொண்டு போயிருந்தோம். அதுக்குப்பிறகு  பணமாகவே கொடுத்துடறதுதான் வழக்கமாப் போச்சு.

ரசீது எழுதிக் கொடுத்த கோவில் நிர்வாகிகளில் ஒருவர்,  நீங்க சௌத் இண்டியன் தானே?  அடுத்த முறை  இட்லி, சாம்பார், மசால்தோசை இப்படி செஞ்சு கொண்டு வாங்க. உங்க வகையா இருக்கட்டும்னு சொன்னார்.

 எனக்கோ மயக்கம் வராத குறை :-(  சாம்பார், மஸாலா இதுக்கெல்லாம் வெங்காயம் போடலைன்னா நல்லாவே இருக்காதே. அதுவுமில்லாமல்  இட்லி, தோசை எல்லாம் சுடச்சுடத் தின்னால்தானே ருசி?  ஆறி அவலாகப்போனால் நல்லாவா இருக்கும்? வறக் வறக்குன்னு ஆகிடாது? என்னத்தைச் செஞ்சு கொண்டு வர்றதுன்னு பேய்முழி முழிச்சுக்கிட்டே தலையாட்டி வச்சேன்.

 கொஞ்சம் யோசிக்கணும்.  பேசாம முறுக்கோ, தேன்குழலோ செஞ்சு கொண்டு போகலாமுன்னு இப்போதைக்கு ஒரு தோணல். இல்லைன்னா சக்கரைப்பொங்கல்?  நமக்கு எது நல்லா வருதோ அதைத்தானே கொண்டு போகணும், இல்லையா?

மூணு மணிக்கு தர்ஸனத்துக்குப் போகலாமுன்னு முடிவாகி,  கடைசியில் ரெண்டெ முக்காலுக்கே போய்ச் சேர்ந்தோம். மேடையில் சின்ன இசைக்குழுவுடன் பஜனை பாடிக்கிட்டு இருக்கார்  நம்ம பட்டர். சாமிகளுக்கு முன் ஏழு படிகளில் தீனிக்கொலு!

கடவுளர்களின் முழு உருவம் தெரியாதபடி மார்பு உயரத்துக்கு இருக்கு கொலுப்படிகள். கைக்கு எட்டணுமுன்னு சொன்னா... இப்படி வாய்க்கு எட்டும்படி அடுக்கிட்டாங்களே!!

பிஸ்கெட் வீட்டைக் கட்டி முடிச்சு உள்ளே கன்ஷ்யாம் என்ற நீல்கண்ட்  நிக்கறார்.  பழங்கள் காய்கறிகள் வரிசைகளுடன்   அவருக்கு முன்னால் தாமரைக்குளம் வேற!  லட்டு அன்னபூரணி போல பிஸ்கட் நீல்கண்ட் மஹராஜ்!

படங்களை க்ளிக்கிக்கிட்டு,  தரிசனம் முடிச்சுக்கிட்ட மூணு பேருமாத் திரும்பி வரும்போது  மேற்படி இட்லி தோசை சமாச்சாரத்தை நம்ம ஸ்ரீதரிடம் சொல்லிக்கிட்டே வந்தால்....   அங்கே இட்லி இருந்துச்சுன்னு சொல்லி அவர் செல்லில் எடுத்த படத்தைக் காமிக்கிறார்!  அட!  ஆமாம்..... நான் வெறுமன க்ளிக்கும்போது, அம்பி எல்லாத்தையும் நல்லாவே நோட்டம் விட்டு க்ளிக்கி இருக்கார்:-)

'சாயங்காலம் கட்டாயம் பூஜைக்கு  வாங்க' ன்னு எங்களிடம்  சொல்லிக்கிட்டே, புது வருசக் காலண்டர்  ஒன்னு அம்பிக்குக் கொடுத்த 'அந்த ' நிர்வாகி,  'நீங்களும் வாங்க'ன்னு சொல்றார்.  பேச்சு மொழி நம்மிடம் ஹிந்தி என்பதால் ஸ்ரீதருக்குப் பதில் சொல்லக் கொஞ்சம்.......   'எங்க பையன்தான். கூட்டிட்டு வர்றோமு'ன்னு சொன்னேன்.

உடனே  வீட்டுக்குப் போகணுமா, இல்லை ஃப்ரீயான்னு கேட்டதுக்கு  ஃப்ரீன்னு சொன்னார். அப்புறம் கொஞ்சம் சுவாரசியமான இடத்துக்குப்போனோம். அதை இன்னொருநாள் சொல்றேன் :-)

அஞ்சு வரை சுத்திட்டு வீட்டுக்கு வந்து நம்ம ரஜ்ஜு, பறவைகள் எல்லோரும் சாப்பாடு கொடுத்துட்டு, நாங்களும் டீ, ரோஸ்மில்க் இப்படி அவரவருக்கு விருப்பமானதை  லைட்டா எடுத்துக்கிட்டு  (அங்கெ போய் சாப்பிட வயிற்றைத் தயார் படுத்திக்கிட்டு)  ஆறரைக்குக் கோவிலுக்குப்போய்ச் சேர்ந்தோம். பயங்கரக்கூட்டம்!

சபை நடந்துக்கிட்டு இருக்கு.  அப்புறம் ஒரு வீடியோ ஷோ!  இந்தியாவில் ஸ்வாமி நாராயண் கோவில்களின் தலைமைப்பீடமான சாரங்பூர், குஜராத்(Sarangpur) மாநிலத்தில்  நடந்த அன்னக்கூட் வைபவம் காமிச்சாங்க. அங்கே நவம்பர் 12 ஆம் தேதி நடந்துருக்கு. (இந்தியாவில் எல்லா பண்டிகைகளும் அந்தந்த  குறிப்பிட்ட நாட்களில் (மட்டுமே) நடக்குது.  வெளிநாடுகளில்தான் வீக்கெண்டுன்னு  வச்சுக்கிட்டோம்.

ஸ்வாமிநாராயண் Baps (Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha)குழு ஆரம்பிச்சு இப்போ 108 வருசங்கள் ஆகுது!   இந்தக் குழுவின் தற்போதைய குரு ஸ்ரீ ப்ரமுக் ஸ்வாமி மஹராஜ் அவர்களுக்கு(இவர் குருபரம்பரையில் நாலாவது குரு)   வர்ற மாசம் (டிசம்பர் 7) 94 வயசாகப்போகுது.  ரொம்பத் தள்ளாமை. சக்கரநாற்காலியில்  வந்துதான்  மக்களுக்கு ஆசிகளை வழங்கறார். இவருடைய  'ஆட்சி'யில்தான் உலக நாடுகளில் பல ஸ்வாமி நாராயணன் கோவில்கள் உருவாகிக்கிட்டு வருது என்பது உண்மை. எப்படியோ கோவில் இல்லாத ஊரில் வாழ்ந்துக்கிட்டு இருந்த எங்களுக்கும் விமோசனம் கிடைச்சுதுன்னு சொல்லலாம். இருந்த ஒரே கோவிலான இஸ்கான் ஹரே க்ருஷ்ணா கோவிலும் நிலநடுக்கத்தில் போயிருச்சே  :-(

ஆரத்தி ஆரம்பிச்சு நடந்ததும், எங்களுக்கெல்லாம்  தொட்டுக் கும்பிட ஆரத்தி தட்டு வருது. ஒரு பக்கம் மேடையில்  இளைஞர்களின் பஜனை.


இன்னொருபக்கம் இளைஞர்கள் பலர் கைகளில் வெள்ளை கையுறையோடு  ஆஜர்.  கொலுவில் அடுக்கி  இருந்த  உணவுத்தட்டுகள் எல்லாம் பரபரன்னு வரிசையா கைகள் மாறி  உள்ளே டைனிங்  ஏரியாவுக்குப் போகுது.
வெறும் பதினைஞ்சே நிமிட்.  படிகள்  எல்லாம் காலி!

கொலு வைக்க எடுக்கும் நேரத்துலே நூத்துலே ஒரு பாக நேரம்! (சரியான்னு கணக்குப் போடாதீங்க.ஒரு இதுக்குச் சொல்றதுதான்!)
இப்பதான் சாமிகள் போட்டுருக்கும்  உடைகள் முழுசுமா பளிச்!இவர்தான் நம்ம கோவில் பண்டிட். க்ளிக்கி முடிக்கும்வரை அசையாமல் நின்னுக்கிட்டு இருந்தார்!

கொலுப் படிக்கட்டுகளைப் பிரிச்செடுத்து வெளியே கொண்டுபோய் அடுக்குதல்,  மொத்த ஹாலையும் பெருக்கி சுத்தம் செய்தல் இப்படி பரபரன்னு எல்லா வேலைகளையும் செஞ்சு தர்றாங்க யுவக் மண்டலி இளைஞர்கள்!   உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள் இவர்களே!
இன்றைக்கு நல்ல கூட்டம் என்பதால் ஆண்களையெல்லாம் வெளியே விரட்டிட்டாங்க:-)  பின்பக்கத் தோட்டத்தில் போட்டுருக்கும் பெரிய கூடாரங்களில் அவுங்களுக்கான  சாப்பாடு.   நாங்க லேடீஸ் எல்லாம்  இங்கத்து டைனிங் ஹாலில்.வரிசையில் போய் உள்ளே சாப்பிட்டு முடிச்சு  டைனிங் ஹாலை விட்டு வெளியே வரும்போது  சந்நிதி மண்டபத்தில் ஒரு மாபெரும் அன்னக்கூட் விழா நடந்த அடையாளமே இல்லை!!!!!

இன்னும் கொஞ்சம் க்ளிக்கி முடிச்சு (??!!) நண்பர்களுடன் கொஞ்சநேரம் குசலம் விசாரிச்சுட்டுக் கிளம்பி  கோவிலை விட்டு  வரும்போது ஆளுக்கொரு பாக்ஸ் இனிப்பு & உப்பு  பக்ஷணங்கள் வேற!


சாப்பாடும் போட்டு, கையில் இனிப்பு வகைகளும் கொடுத்து (கூடவே புது வருசக் காலண்டர் வேற) அனுப்பி வச்சார்  ஸ்வாமி!

நல்லா இருக்கட்டும்!

 அனைவருக்கும்  விழாக்கால வாழ்த்து(க்)கள்!

PINகுறிப்பு:  இந்த அன்னக்கூட் விழாக்கள் சிலமுறைகள், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிச்சது. லண்டனில் இருக்கும் ஸ்வாமி நாராயண் கோவிலில் 85 அடி நீளம், 7 படிகள், 1250 வகை உணவுகள்  வச்சுருந்தாங்களாம் !!!!   இதுதான் இப்போதைக்கு   வொர்ல்ட் ரெக்கார்ட்!


18 comments:

said...

இந்த வருடம் சாமி கையை நீட்டிட்டார்னா அடுத்த வருடம் அன்னக்கூட் ஹோகயா !

said...

ஓ ! அழகான அருமையான அன்னக்கூட் திருவிழா. படங்கள் சூப்பர்.

said...

அன்னக்கூட் திருவிழா பற்றி அறியாத தகவல் அம்மா... நன்றி...

said...


அருமையான படங்களுடன் ஸ்வாமிதரிசனம் அருமை. மனம் நிறைந்த நன்றி துளசிமா

said...

உங்கள் படங்களின் ரசிகன் நான்...தொடரட்டும்

said...

சூப்பருக்கா.. அருமையான படங்கள் புதுமையான விளக்கங்கள்.. தமிழ்நாட்லே கூட இதுமாதிரி தீபாவளிக்கு தீபாவளி ஆரம்பிச்சா நல்லாருக்கும்ன்னு தோனுது...சிவபார்க்கவி

said...

அடேங்கப்பா... எண்ணூறு கோயில்களுக்கும் ஒரே அளவுல சிலை. ஒரே அளவுல உடைகள். அதுவும் நாளுக்கு நாள் மாறுது. பெரிய விஷயந்தான். பாத்துப் பாத்துப் பண்ணுவாங்க போல.

அன்னக்கூட்னா என்னன்னு யோசிச்சேன். அப்புறம் படிக்கும் போதுதான் புரிஞ்சது. சாம்பார்சாதம், தயிர்சாதம், வெண்பொங்கல் கொடுத்திருந்தா நானெல்லாம் நல்லாவே சாப்டிருப்பேன். இனிப்பா வெச்சுருக்காங்களே.

நீங்க சொன்ன மாதிரி இட்லி தோசையெல்லாம் காஞ்சுட்டா நல்லாருக்காது. வெண்பொங்கல் மாதிரி கொண்டு போனா நல்லாருக்கும்.

said...

விதவிதமாய்.. வித்யாசமாய் எவ்ளோ அயிட்டங்கள்!!said...

அன்னக்கூட் பஞ்ச் துவாரகா கோவில்களிலும் உண்டு. மிகவும் சிறப்பாக இருக்கும். தில்லியில் உள்ள ஸ்வாமி நாராயண் மந்திரிலும் உண்டு என்றாலும் இதுவரை சென்றதில்லை.

படங்கள் அனைத்தும் அழகு.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.


கை நீட்டிடுவாரா? அவ்ளோ தைரியமா அவருக்கு? ஆனாலும் ஒரு தனி தட்டில் அவருக்குன்னு பிரசாதங்கள் எடுத்து வச்சு வழக்கம்போல் காமிச்சாச்சு.

said...

வாங்க கோமதி அரசு.

முதல்முறை பார்த்தபோது (ஒரு பத்து வருசம் இருக்கும்!)அசந்துதான் போனேன்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஏற்கெனவே சிலமுறை நம்ம துளசிதளத்தில் எழுதி இருக்கேன்.

said...

வாங்க வல்லி.


சந்தர்ப்பம் வாய்த்தால் லண்டன் கோவிலுக்குப் போயிட்டு வாங்க. இன்னும் அருமைதான் அங்கே!

said...

வாங்க, நான் ஒன்று சொல்வேன்.

தொடர்வது மகிழ்ச்சி அளிக்கின்றது! நன்றீஸ்.

said...

வாங்க சிவபார்க்கவி.

தமிழ்நாட்டுலே இது ஒர்க்கவுட் ஆகுமுன்னு தோணலைப்பா.

said...

வாங்க ஜிரா.

நானும் வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல்தான் யோசிச்சு வச்சுருக்கேன்.

பக்தர்கள் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யறாங்க. இந்த ஒழுங்கு, பிரமிப்பு தருது!

said...

வாங்க சாந்தி.

உண்மையில் கண்களுக்கு ஒரு விருந்து!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பஞ்ச் த்வார்க்காவிலுமா? ஆஹா.... த்வார்க்கா கோவிலில் தினமும் பலமுறை 'போக்' கண்ணனுக்குப் படைச்சாலும், துளி கூட நம்ம கண்ணில் காட்டலை :-( பிரசாத விநியோகம் எங்கேன்ற விவரமும் கிடைக்கலை. நம்ம கீதாதான் ரொம்ப ருசியா இருக்குன்னு சொல்லி இருந்தாங்க. போகட்டும், நமக்குக் கொடுக்க அவனுக்குக் கொடுப்பனை இல்லைன்னு நினைச்சுக்கிட்டேன்.