Monday, April 13, 2015

அற்புத நாராயணர்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 39)

பறவைகளின் ஒலி கேட்டு வழக்கத்தைவிட சீக்கிரமாவே முழிப்பு வந்துருச்சு. கோவிலுக்குப்போய் வந்து  ப்ராதல் (ப்ரேக்ஃபாஸ்ட்) கழிச்சால் ஆச்சு. சட்னு குளிச்சு முடிச்சுக் கிளம்பிட்டோம்.  கூடத்தில் யாருமே இல்லை. அதனால் யாரிடமும் சொல்லிக்காமலே கிளம்பவேண்டியதாப் போச்சு.  அக்கரையில் இருந்து வந்துகொண்டு இருக்கும் பெரிய படகின் பக்கவாட்டில் ட்ரெய்லர் போல் ஒரு மிதவை அமைப்பும்  ஒட்டிக்கிட்டே வருது.  ஏகப்பட்ட சனம் அதுலே!   மக்களை இறக்க  ஏணிப்பாலங்கள் சில தயாராக் கரையிலே கிடக்கின்றன.  தனிப்பட்ட படகிலும் சிலர் வந்துக்கிட்டு இருக்காங்க.



இங்கிருந்து  கோவில் சரியா ஒரு 18.5 கிமீ இருக்கும். நேற்றைக்குப் பகல் செங்கண்ணூரில் இருந்து  மரியா வந்தோம் பாருங்க அதே ரோடில் போய்   செங்கனாச்சேரி பைபாஸ் எடுத்தால்  அங்கிருந்து  2.7 கிமீயில் திருக்கடித்தானம். குரிசடி வரை வந்து  லெஃப்ட் எடுக்கணும். காலை நேரம். ஆறரை மணிதான்.  சூரிய உதயமாகி இருந்தாலும் மேகமூட்டமிருப்பதால்   இதமான  காலநிலை. ரோட்டிலும் கார் நடமாட்டம் அத்தரைக்கு இல்லை. சுகமான  ஓட்டத்தில் அரைமணிக்கூறு.

'த்ருக்கொடித்தானம் மஹாக்ஷேத்ரம்' அலங்கார நுழைவு வாசலுக்குள்ளே போறோம். அலங்கார வாசலின் மேல்பாகத்தில் கருட வாகனத்தில் பெருமாளும் தாயாரும் நடுவில் இருக்க  வலக்கைப்பக்கம் புள்ளையார். இடக்கைப்பக்கம் யார்?  உருட்டு விழிகளும் மீசையும்  நீல உடலும்...  புரியலை. ஆனால் தலையில் இருக்கும் பிறைநிலாவைப்  பார்த்தால்.........  ஒரு வேளை...சிவனோ?  இருக்கலாம்.


அக்கம்பக்கம் ஒன்னும் பார்க்காம ச் சட்னு கோவிலுக்குள் நுழைஞ்சோம். ரெண்டடுக்கு முகப்பும் ரெண்டு பக்கமும் திண்ணைகளுமா இருக்கு.எதோ படங்கள் கூட வரைஞ்சுருக்காங்க. திரும்பி வரும்போது பார்த்துக்கலாம். கொடிமரத்துக் கிட்டே ரெண்டு கோவில் ஊழியர்கள் இருந்தாங்க.  நம்ம கோபால் இதுக்குள்ளே நல்லாவே தேறிட்டார், ஷர்ட்டை க் கழட்டிக் கையில் வச்சுக்கிட்டார்:-) வேட்டியை வண்டியிலே விட்டுருக்காரு போல!



வாசல் கடந்து முன்மண்டபத்து வலப்புறத் திண்ணையிலே  தங்கப் பாவாடை கட்டிய  க்ருஷ்ணன்கள்! குத்துவிளக்கு ஒன்னு அமைதியா எரியுது இவர்கள்முன்னால்.

 வெளியே இருந்து பார்த்தால் சின்னதாத் தெரிஞ்சதே தவிர உள்ளே போனாட்டுப் பார்த்தால் நல்ல பெரிய வளாகம்தான். தங்கக்கொடிமரம் தகதகன்னு ஜொலிக்குது. கொடிமரத்தின் அடிப்பாகத்தில் சுத்திவர கடவுளர்களின் சின்னச்சின்ன  விக்கிரகங்கள் திருவாசியோடு!




பளிச்ன்னு டைல்ஸ் போட்டு  இருக்கும் முன்மண்டபத்தில்  கேரள ஸ்டைல் வாழைப்பூ விளக்கு.தேய்ச்சு மினுக்கிப் பளபளன்னு  இருக்கு! அப்படியே தரையைக் கொஞ்சம் துடைச்சிருக்கக் கூடாதோ?  எறும்புக்கூட்டம் ஏராளம். நெய்விளக்கு காரணமோ என்னவோ?


இன்னொரு சின்ன தீபஸ்தம்பம்  சூப்பர். இதுலே மட்டும் திரிகள் போட்டு விளக்கேற்றினால்  அதி சூப்பரா இருக்கும்.  சாயரக்ஷை பூஜை சமயம்  அடுக்குவிளக்கு  தீப ஆரத்தி எடுக்கும்  அமைப்பு.  ஆனால் பெருசு. கையில் தூக்க முடியாதுன்னு நினைக்கிறேன். பழயகாலத்துப்பொருட்கள்தான் கனம் கூடியதாச்சே! இப்போ போல் தளுக்கா பண்ணிக்க அப்போ யாருக்கும் தெரிஞ்சுருக்காது:-) இந்தச் சதுர பீடத்தில் நாலுபக்கமும் நாகர்கள்!


த்ரிக்கொடித்தானம் கோவில் சங்கணாச்சேரி என்ற ஊரில்தான் இருக்கு. ஆனால் டவுன் வரை போக வேணாம். பைபாஸ் ரோடிலேயே வந்துருது. அடுத்த மாசம் நவம்பர் 27  முதல்  ஆரம்பிச்சு  டிசம்பர் 6 வரை தீபமஹோத்ஸவம் நடக்கப்போகுதுன்னு போர்டு வச்சுருக்காங்க. 10 நாள் உற்சவம்.  நவம்பர் 27 கொடியேற்றம். நாலாம் நாள்  கிழக்கு வாசலில் எழுந்தேல்ப்பு.  பெருமாள்  வந்து  தரிசனம்  கொடுப்பார். கடைசிநாள்  காலை 5 மணிக்கு தீபம் .  10 மணிக்கு ஆராட்டு.

இது என்ன  தீப உற்சவம் என்று கொஞ்சூண்டு ஆராய்ஞ்சால் கிடைத்த விவரம் ஆஹா போட வச்சது உண்மை. ஒரு சமயம் சிவன் , தீப்பிழம்பாக  இந்தப் பகுதியில் தோன்றி இருக்கார். வெப்பம் தாங்காமல்  எல்லா ஜீவராசிகளும் உட்பட  இந்தப்பகுதியே அழிஞ்சு போயிருமோன்னு பயந்த  ப்ரம்மாவும், விஷ்ணுவும்  சிவனை வழிபட்டு வேண்டி நின்னதும்,  தன்னுடைய ஆகிருதியைக் குறைச்சுக்கிட்டு சிறிய தீபமாக ஒளிவிட்டுப் பிரகாசித்தார்.  மனம் மகிழ்ந்த  ப்ரம்மாவும் விஷ்ணுவும் அந்த தீபத்தை வணங்கி ஆசி பெற்றார்கள். இந்த சம்பவம் நடந்த தினம் திருக்கார்த்திகை நாளாக  இருந்தபடியால், கார்த்திகை தீப விழாவை இங்கே இந்தக் கோவிலில் ரொம்பவும் விமரிசையாகக் கொண்டாடறாங்க.

ஒன்பதாம் நாள் உற்சவத்தில் இதுக்கு (சங்கேதம் என்று பெயர்)மாலை தீபங்களை ஏற்றி விட்டால்   மறுநாள் காலை வரை அப்படியே எரிஞ்சுக்கிட்டே இருக்குமாம். அஞ்சு மணிக்கு நடை திறந்தவுடன் பக்தர்கள்  ஏராளமாக தீப தரிசனம் காண வந்து கூடுவார்களாம். டிசம்பர் 6 தீபமுன்னு போஸ்ட்டர் இருக்கேன்னு  அப்புறம்  தினமலர் பஞ்சாங்கம் பார்த்தால்  அன்னிக்குத்தான் பௌர்ணமி. கார்த்திகை தீபம்! கணக்கு சரியாத்தான் இருக்கு:-)

பெருமாள் கோவிலில் கார்த்திகை தீப விழா நடப்பது  இங்கே மட்டும்தான் என்கிறார்கள்.

உள்பிரகாரத்துக்குள் நுழைஞ்சோம். வழக்கமான  குட்டித்தூண்களும் தாழ்வான கூரையுமா ஒரு மண்டபம்.  அதுக்கு அந்தாண்டை  அஞ்சு படிகளேறிப்போகும் உயரத்தில்  கருவறை.

 கருவறை முன் யாருமே இல்லை !  பட்டரும் உள்ளே பூஜை செஞ்சுக்கிட்டு இருந்தார்.. இங்கே காலை அஞ்சு மணிக்கே கோவில் திறப்பதால்  தினப்படி வரும் பக்தர்கள் வந்து போயிருக்கலாம். மனம் நிறைஞ்சு வழிய  தரிசனம் ஆச்சு.  அப்போதான்  உஷத் பூஜை முடிச்சு ஆரத்தியை வெளியே கொண்டுவந்து வச்சார்  பட்டர் . நாங்க ஜோதியைத் தொட்டுக் கும்பிட்டோம். எங்களை ஏறிட்டுப் பார்த்தவர் , 'அர்ச்சனை செய்யணுமா/'ன்னு கேட்டார்.  இதுவரை வேறெங்கும்  யாரும் இப்படிக்  கேக்கலையேன்னு நினைச்சாலும்  கிடைச்ச வாய்ப்பை எதுக்கு விடுவானேன்னு  தலையாட்டினேன். கோபால்  ஒரு அம்பது எடுத்து படியில் வச்சார்.  ஊஹூம்னு  தலையை ஆட்டிய பட்டர், ஆள்காட்டி விரலை  நீட்டி  அங்கே கொடுக்கணும் என்றார்.  அவர் காட்டிய திசையில்   தேவஸ்தான ஆஃபீஸ்!   அங்கே யாரையுமே காணோம். கோவில் உண்டியலில் கொண்டு போய் போட்டுட்டு வந்தார் நம்ம கோபால்.

குடும்ப நபர்களின் பெயர் ,  நாள் (நக்ஷத்திரம்)  எல்லாம்  விவரமாக் கேட்டு, சங்கல்பம் செஞ்சு  அருமையாக அர்ச்சனை செஞ்சு சந்தனம், பூ , பிரஸாதங்கள்  கொண்டுவந்து கொடுத்தார். ஏனோ தானோன்னு இல்லாமல்  கால்மணி நேரம்!  அதுவரை அங்கே வேற யாருமே வரலை!  ஏகாந்த தரிசனம்.  இப்படியும் உன் அருளான்னு பரவசம் எனக்கு. அதென்னமோ சொல்லி வச்சாப்லெ...  நாங்க  உள்ப்ரகாரம் கருவறை வலம் வர நகரும்போது  இன்னொரு குடும்பம் உள்ளே வருது!

கேரளக் கோவில்கள் வழக்கம்போல் சின்ன  உருவம்தான். கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். தாயார் பெயர்  கற்பகவல்லி நாச்சியார்.

இங்கேயும் வட்டக் கருவறைதான்.  கும்பிட்டுக்கிட்டே போனால் வட்டத்தின் நேர் பின்புறம் இன்னொரு சந்நிதி!  உள்ளே நரசிம்ஹர்!  மேற்குபார்த்த திசையில் அமர்ந்த கோலத்தில்!  இவருக்கும்  வெளிப்ரகாரத்தில்  மேற்கு வாசலில் ஒரு கொடி மரமிருக்கு. இவர்  பிற்கால வரவு. இவருடைய உக்ரம் தணிக்க, தினமும் இங்கே பால்பாயஸம்  நிவேதிக்கறாங்களாம்.   ஆஹா....  எண்டே க்ருஷ்ணா, நேத்துதான்  அங்கே பால்பாயஸம்  கொடுத்தாய். இங்கேயும் பாயஸமுன்னா என்ன கணக்கு?  தினமும் இங்கே பூஜையின்போது நாராயணீயம் சொல்வது  உண்டு. வலம் முடிச்சு மீண்டும் பெருமாள் முன்னால் வந்து நின்னோம்.

பெருமாள் இங்கே அற்புத நாராயணராக இருக்கார்!  அம்ருத நாராயணர் என்றும் இன்னொரு பெயர் உண்டு. ஆயிரத்தெட்டு பேர்கள் உள்ளவனுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?

என்ன அற்புதம் செஞ்சார்?  பாண்டவர்களில் சகாதேவன்  இந்தக் கோவிலைக் கட்டியதும், உள்ளே பிரதிஷ்டை செய்யப் பொருத்தமான சிலையைத் தேடிப்பார்த்தும் சரியா ஒன்னும் அமையலை. மனம் உடைந்த சகாதேவன்,  அக்னிப்ரவேசம் செய்ய முடிவு செய்து தீ வளர்த்தப்ப,  சுயம்பூவாக  தானே அங்கே  இந்தச் சிலை தோன்றியதாம். இந்த அற்புதத்தைச் செஞ்சவரை அற்புத நாராயணரா ஆக்கிட்டாங்க. அப்ப அம்ருதத்துக்கு என்னன்னு  கேக்கணுமா?  எதுக்கு? பெருமாளே அம்ருதம் போன்றவன் இல்லையோ!

ஒவ்வொரு அறுபது வருசம் முடியும்போதும்  மூலவருக்கு அற்புத சக்தி கூடிக்கூடி வருதுன்னு  கோவில் தகவல்கள் சொல்லுது. கலியுகம் முடியும்போது ஒளியாக மாறி  விண்ணில் கலந்துவிடுவார்  என்றும்  ஒரு தகவல்!.அதனாலும் இவர் அற்புத நாராயணராக  இருக்கார்.

ஒரு காலத்தில் இங்கே ருக்மாங்கதன் என்ற ராஜா ஆட்சி செஞ்சுருக்கார். இவர் சூரிய வம்சம். ரொம்ப பக்திமான். ஏகாதசி விரதம் தவறாமல் கடைபிடித்தவர். இவருடைய பூந்தோட்டத்தில் ரொம்பவே அரிய வகை மலர்கள் பூக்கும் செடிகளை  வச்சுருந்துருக்கார்.   நேத்து மொட்டா இருக்கும் பூக்களை மறுநாள்  பறிக்கப்போனால் அங்கே ஒன்னுமே இருக்காது!  பூக்கள் இப்படித் திருடு போவதைப் பார்த்த காவலாட்கள் மன்னனிடம் போய் சொல்லவும், கண்காணிப்பா இருந்து கள்ளர்களைப் பிடிக்க உத்தரவாச்சு.
ஒருநாள் பூப்பறிக்கும் நபர்களை வளைச்சுப் பிடிச்சு,  ராஜாவுக்கு முன் கொண்டு போய் நிறுத்திடறாங்க. விசாரிக்கும்போதுதான் தெரியுது, அவுங்க தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் சமாச்சாரம். இங்கே இருந்து பூக்களைப் பறித்துப்போய் பெருமாளுக்குச் சூட்டிக்கிட்டு  இருந்துருக்காங்க.

(அதென்ன சாமிக்குத் திருட்டுப் பூக்கள்தான் பிடிக்குமோ என்னவோ? 
நம்ம சென்னை வாழ்க்கையில்  ஆரம்பத்தில் சிலநாட்கள் அதிகாலை எழுந்து  வாக்கிங் போக ஆரம்பிச்சுருந்தோம். அப்போ கையில் பையுடன்  நடக்கும் ஆட்கள்  அங்கங்கே வீடுகளில் இருக்கும் பூக்களை ஓனருக்குத் தெரியாமல் பறிச்சுப் பையில் போட்டுக்குவாங்க. இன்னும் சிலர் ஒருபடி மேலேயே... கையில் வாக்கிங் ஸ்டிக் போல்  வச்சுருக்கும் தொறட்டிக் கோலால்  கொஞ்சம் உசரத்தில் பூத்து நிற்பவைகளை  வளைச்சுப் பிடிச்சுப் பறிச்சுப் போவார்கள்.  நம்ம வீட்டுக்குள்ளும்  கேட்டைத் திறந்து, ஒருத்தர் வந்து செம்பருத்திகளை  வேகவேகமாப் பறிச்சுக்கிட்டு இருந்ததை ஒருநாள் பார்த்துட்டு விசாரிச்சால்.... சாமிக்குப் போடப் பூப்பறிக்கிறாராம். நல்லா இருக்கே! சாமிக்குத் திருட்டுப்பூதான் பிடிக்குமான்னு கேட்டேன்.  இனிமேல் காம்பவுண்டுக்குள்  வரக்கூடாதுன்னு எச்சரிக்கை செஞ்சுட்டு, கூர்க்காவுக்கும்   கொஞ்சம் அர்ச்சனை செய்யும்படி ஆச்சு.)

சரி. போங்கன்னு ராஜா அவுங்களை  விட்டுட்டாலும்  மனிதரிடம் மாட்டிக்கிட்டதால் அவுங்களால் தேவலோகத்துக்குத் திரும்ப முடியாமப்போச்சு. திரும்பிப்போக வழி என்னன்னு பார்த்தபோது, ராஜாவின் ஏகாதசி விரத பலன்களை  இவுங்களுக்குத் தாரை வார்த்தால்  தேவலோக எண்ட்ரி கிடைச்சுரும் என்பது தெரிய வர, ராஜா இந்தக் கோவிலுக்கு வந்து , அற்புதநாராயணரின் சந்நிதி முன்னால் நின்னு  அவருடைய விரதபலன்களை, பிடிபட்ட   தேவர்களுக்குத் தாரை வார்த்துக்கொடுத்தார். அவுங்களும் தேவலோகத்துக்குத் திரும்பினாங்க. இதெல்லாம் ஒரு கடிகை (நாழிகை) நேரத்துக்குள் நடந்ததால்.... இந்த இடம் கடிகை ஸ்தானம் என்றாகி, பின்னர் காலப்போக்கில்  கடித்தானம், கொடித்தானம் ஆகிப்போய் இப்போ திரு என்னும் அடைமொழியுடன் திருக்கொடித்தானம் என்றாச்சு.  மலையாளத்தில் சொல்லும்போது இது த்ருக்கொடித்தானம்!

யம்மா....  என்னென்ன கதைகள் பாருங்களேன்!

 வெளிப்புறம் ப்ரகாரம் சுத்தலாமுன்னு வந்தால்    சின்ன காம்பவுண்ட் சுவருக்குள்   இன்னொரு தனிக்கோவிலா  குடிகொண்டிருக்கார் முருகன்!  அப்பதான் நினைவுக்கு வருது இன்னிக்கு சஷ்டி!  கந்தசஷ்டி!  காக்கக் காக்கக் கனகவேல் காக்கன்னு  ரெண்டு வரி சொல்லிக்கிட்டே உள்ளே போய்  நிம்மதியா ஸேவிச்சேன்.


அஞ்சுபடி ஏறிப்போகும் கருவறைன்னு எப்பவும்சொல்றேன் பாருங்க. அது இப்படித்தான் இருக்கும்:-)

அஞ்சாறு பேர் தொடர்ந்து இங்கே முருகனைக்கும்பிட வந்துக்கிட்டே இருக்காங்க. இன்னிக்கு அவன் டே இல்லையோ! அதிலும் பெண்கள்தான் அதிகம்!

கோவில் குளம்  பார்த்தாலே பழசுன்னு தெரியுது. ஆனால் சுத்தமா இருக்கு.

பெருமாள் கோவில் முகப்பு வாசலுக்கு முன்  ஒரு  ஆள் உசரக் கல்கம்பத்தில் ஒரு மனுஷன் நடுமுதுகுக்கு மட்டும் சப்போர்ட் வச்சு  விறைத்த நிலையில் கால்நீட்டிக் கிடக்கிறான். இது கழுவேற்றம் கூட இல்லையே.... என்ன ஆச்சோன்னு விசாரிச்சதில் ஒரு கதையும் கிடைச்சது:-)

ஒரு சமயம் நடை சார்த்தி இருந்த நேரம் ராஜா கோவிலுக்கு வர்றார். அவரிடம்(அவரிடமே!) கைக்கூலி (லஞ்சம்) வாங்கிக்கிட்டு, கோவிலைத் திறந்து விட்டானாம் காவலாளி. அதற்கான தண்டனையா அவனைக் கொன்னு கோவில் முன்னாடி வச்சுருக்காங்களாம்.

எல்லோருக்கும் சட்டம்/விதிகள் ஒன்னுபோல இருக்கணும்.  லஞ்சம் வாங்குனா இதுதான் கதி!  சூப்பர்  ஐடியா! இது இப்போதும் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும் என்று தோணுச்சு.  ஆனால்.... கோவில் முழுக்க சவக்காடாக ஆகிருமுல்லே?  

கோவில்  வெளிப்புறத் திண்ணைச்சுவர்களில்  சித்திரங்கள்  வரைஞ்சு வச்சுருக்காங்க.  சமீபத்திய சமாச்சாரம் 2012. நேத்து மாலை அம்பலப்புழாவில் பார்த்த வகை ஓவியங்கள்! எல்லாம்  ஸ்ரீ க்ருஷ்ணர் சம்பந்தம் உள்ளவைகள் என்றாலும் அதில் ஒரு சிவன் குடும்பம்  முழுசும்  இருக்கு. இந்தப்பக்கத் திண்ணையில்  நரசிம்ம அவதாரம் சூப்பர்!  பச்சைமுக ஹிரண்யகசிபுவும் ப்ரஹலாதனும்! என்ன வகை ஓவியங்கள் இவை?


கோவில் காலை அஞ்சு முதல் பதினொன்னு வரை,மாலை அஞ்சு முதல் எட்டுன்னு திறந்துருக்கும். நேத்து செங்கண்ணூரில் இருந்து மரியா வரும்வழியில் பார்த்திருக்க வேண்டியது. அந்த நேரம் ஆரண்முளா போயிட்டதால்  விட்டுப்போச்சு. அதனால் என்ன இன்றைக்கு  அர்ச்சனை செஞ்சுக்க முடிஞ்சதே அது  ஒரு பாக்கியமல்லோ!

நூற்றியெட்டு திவ்யதேசக்கோவில்களில்  இதுவும் ஒன்னு. நம்மாழ்வார் வந்து பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.

     கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை
     கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்
     கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம்
     கோயில் கொண்ட குடக் கூத்த அம்மானே.

திருக்கடித்தானம்  என்றுதான் அவர் சொல்லி இருக்கார். இங்கெ மலையாளத்தில் எழுதும்போது அது த்ருக்கொடித்தானம் !

தமிழில் கோவில் கதைகளை சுவரில் எழுதிப்போட்டுருப்பதுதான்  அதிசயம் ,அற்புதம் என்று நினைச்சுக்கிட்டேன்!

அற்புத நாராயணரின் கருணையே கருணை!  ஓம் நமோ வாசுதேவாய!

தொடரும்........:-)





14 comments:

said...

புதிய பதிய கதைகளை அறிந்தேன் அம்மா...

அந்த ஐடியா சூப்பர் தான்... ஆனால் இடம் தான் கிடைக்காது...!

said...

வழக்கம் போல அழகான வர்ணனை. அழகு நடையில் அற்புத நாராயணரின் தரிசனம் நாங்களும் கண்டோம்.....கதைகள் எல்லாமே புதியன.....
தொடர்கின்றோம்..

said...

அற்புத நாராயணரை தரிசிக்க நல்வாய்ப்பு தந்தீர்கள். தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

இது மாதிரி அமைதியா ஆண்டவனைச் சந்திக்கக் கொடுத்து வெச்சிருக்கனும். புண்ணியம் எக்கச்சக்கம் செஞ்சிருக்கீங்க. நல்ல மனசு ஒங்களுக்கு இருக்கனும். அதான் இதெல்லாம் வாய்க்குது. மாமனும் மருமகனும் போட்டி போட்டுக்கிட்டு அருள் செஞ்சிருக்காங்க. வாழ்க. வாழ்க.

திருவனந்தபுரத்துல திருவை ஒழுங்காச் சொல்லும் மலையாளிகள் திருக்கடித்தானத்துல கோட்டை விட்டுட்டாங்களே. வியப்புதான்.

ஓவியங்கள் அழகு. மலையாள பாணி ஓவியங்கள் சிறப்பா இருக்கு.

said...


அற்புத நாராயணன் பெயரே அழகா இருக்கு. சோளிங்கர் தளத்துக்கும் திருக்கடிகை என்று பெயர் உண்டு. க்ஷண நேரத்தில் சோதனைகளைப் போக்கிவிடுவார் என்று அந்தப் பெயராம். படங்களில் தங்கம் ஜொலிக்கிறது. படிக்க வரும் அனைவருக்கும் இனிய மன் மத ஆண்டுக்கான வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

said...


வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு

said...

ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் எத்தனை எத்தனை கதைகள்......

உங்கள் மூலம் நாங்களும் கோவிலுக்குச் சென்ற உணர்வு.

படங்கள் வழக்கம் போல அருமை.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஊரெல்லாம் ** காடு ஆகிரும், இல்லே!

எங்கே பார்த்தாலும் கதைகளோ கதைகள்தான்! எல்லாம் பல நூற்றாண்டுகளா புழக்கத்தில் இருக்கே!

said...

வாங்க துளசிதரன்.

தொடர்ந்து வருவது எனக்கும் மகிழ்ச்சி!

நன்றி.

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

வணக்கம். வாழ்த்துகளுக்கு நன்றி.

ரொம்ப நாளாக் காணோமே! நலமா?

said...

வாங்க ஜிரா.

திருவனந்தபுரத்தில் இருக்கும் 'திரு' வின் அளவைப் பார்த்தீங்கதானே? எத்தனை செய்திகள்! படுத்துக்கிட்டே சம்பாரிச்சுட்டார்ன்னு:-)

அதான் 'திரு'வை அங்கே விடமுடியலை:-)

அந்த மலையாளபாணி ஓவியங்களுக்கு என்ன பெயர்னு தெரியலையே:(

said...

வாங்க வல்லி.

ரொம்பச்சரி.

108 இல் மூணு இடங்கள் கடிகைன்னு வருதாம்!
திருக்கடிகை, திருக்கடித்தானம், கண்டமென்னும் கடிநகர். இதுதான் நாம் தேவப்ரயாகை என்று அறிவது!

உங்களுக்கும் எங்களன்பான வாழ்த்து(க்)கள்!

said...

வாங்க யாதவன் நம்பி.

வருகைக்கும் கவிதைக்கும் நன்றி.

உங்களுக்கும் எங்கள் இனியவாழ்த்து(க்)கள்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்மூரில் கதைகளுக்குப் பஞ்சம் ஏது? கொட்டிக்கிடக்கே! அதுலே ஒரு ரெண்டு மூணை இங்கே எழுதி வைக்கலாமேன்னுதான்......ஹிஹி:-)