ஆஹா....அப்படியா? விடக்கூடாது. கட்டாயம் போகணும். அன்றைக்கு வேற வேலை எதுவும் வச்சுக்காதீங்கன்னு சேஷபயக்காரரை மிரட்டி வச்சேன்.
எங்கூர் ஹரே க்ருஷ்ணா கோவிலில் இருந்துதான் அழைப்பு வந்துருக்கு.
நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அழிவுகளில் வெறும் சர்ச்சுகளே மட்டும் இடிஞ்சு விழுந்தால் எப்படி? உலகெங்கும் கடவுள் ஒருவரே என்பதைக் காமிக்க வேணாமா? அதனால் இருந்த ஒரே ஒரு ஹிந்துக்கோவிலும் போயே போச்.
அந்தப்பக்கம் போகும்போதெல்லாம் இடிஞ்சு கிடக்கும் கோவிலைப் பார்க்கும்போது மனசுபூராவும் ஒரே வலி.
இப்ப இப்படி எழுதறேனே தவிர, கோவிலில் இருந்த தெய்வச்சிலைகள் விழுந்து நொறுங்கிய படங்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டழுதது உண்மை. இந்த நொறுங்கல்களில் இருந்து தப்பியது பிரபுபாதா சிலையும், சின்ன சைஸில் இருக்கும் Sri Sri Gaura Nitai உலோக விக்கிரகங்கள் மட்டுமே! உடனே இவர்களை அங்கிருந்து அகற்றி ஒரு பக்தர் வீட்டில் கொண்டுபோய் வச்சாங்க.
(மேலே உள்ள படங்கள் ஃபிப் 22 2011 நிலநடுக்க தினத்தில்:( இஸ்கான் பக்கத்தில் இருந்து எடுத்தவை)
இதுக்கிடையில் தாற்காலிகமா ஒரு கம்யூனிட்டி ஹாலில் ஞாயித்துக் கிழமைகளில் மாலையில் மட்டும் சின்ன விக்ரகங்களை அங்கே கொண்டுபோய் வச்சு கொஞ்சம் பஜன்ஸ் பாடி ஆரத்தி எடுப்பாங்க. சமையல் அவரவர் வீட்டில் எதாவது செஞ்சு கொண்டு போனோமுன்னா அங்கே வச்சுக் கும்பிட்டுவிட்டு ப்ரஸாதமா எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பதுதான். நாங்க ஒரு முறைதான் அங்கே போனோம். கொஞ்சம் தூரத்தில் இருக்கு என்பதால் போய்வர சௌகரியப்படலைன்னு கோபால் சொல்லிக்கிட்டு இருந்தார்.
பிரபுபாதா சிலையை வீட்டில் வச்சுருந்த இஸ்கான் பக்தர் நமக்குத் தோழி என்பதால் அங்கே எதாவது விசேஷ வழிபாடுன்னால் போய் வருவோம்.
கொஞ்சம் கொஞ்சமா இடிபாடுகளை அகற்றி நிலத்தை சமன் செஞ்சு வச்சுட்டுப் புதுக்கோவில் அதே இடத்தில் கட்ட ஏற்பாடுகளைத் தொடங்குனாங்க. என்னென்ன செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்ற தகவல் மட்டும் நமக்கு வந்துக்கிட்டே இருந்துச்சு. இன்ஷூரன்ஸ் கிடைக்கும்வரை ஒன்னும் செய்யமுடியாதுன்னாலும் புதுக்கோவிலுக்கான ப்ளான் பண்ணிக்கலாமேன்னு ஆர்க்கிடெக்ட் ஒருவரை வரையச்சொல்லி (இவரும் இஸ்கான் பக்தர்தான்) ப்ளானை சிட்டிக் கவுன்ஸிலுக்கு அனுப்பி அது ஒருவழியா அப்ரூவ் ஆச்சு. எல்லாப் படங்களும் நமக்கும் வந்து சேர்ந்தன.
நம்மூர்போல் கோபுரம் எல்லாம் வச்சுக் கட்ட முடியாது. நகர மையத்திலிருப்பதால் ( நாலு அவென்யூக்கள்) அதுக்கு ஏராளமான கட்டுதிட்டம் உண்டு. (சர்ச்சுக்கு ஸ்டீப்பிள் அனுமதிக்கும்போது குட்டியா ஒரு சின்ன கோபுரத்துக்கு அனுமதி கேட்டுருக்கலாம்! ப்ச்...)
ஜனவரி பத்தாம் தேதிக்கு பூமி பூஜைக்கு ஏற்பாடாச்சு. மார்கழி மாசம் என்பதால் நல்லதுன்னு எனக்கு மகிழ்ச்சியே! மாதங்களில் அவன் மார்கழியாமே! வந்த அழைப்பிதழில் Bhumi Puja / Vastu Puja (installation of Ananta sesa) என்று பார்த்ததும் ஆவல் அதிகரிச்சது. நியூஸியில் சேஷன்களே கிடையாது, தெரியுமோ!
ஜனவரி பத்தாம்தேதி சனிக்கிழமையாவேற அமைஞ்சுபோச்சு. புத்தாடைகள் அணிஞ்சு பரவசத்தோடு புறப்பட்டேன். சரியான நேரத்துக்குப்போய்ச் சேர்ந்தோம். குழி வெட்டி வச்சுருந்தாங்க:(
அங்கே சின்னதா ஒரு பூஜைக்கு ஏற்பாடு நடக்குது. ஹரேக்ருஷ்ணா பண்டிட் கிஷோர் (தமிழ்காரர்தான்) வாங்கம்மா, ஹேப்பி நியூ இயர் சொல்லி வரவேற்றார்.
ஆதிசேஷன் எங்கேன்னு ஆவலாக் கேட்டதுக்கு பூஜைசாமான்கள் பெட்டியில் இருக்கு என்றார். பிரதிஷ்டை பண்ணப்போகும் சிலை பெட்டிக்குள்ளா?
சின்ன காஃபி டேபிள் மாதிரி இருந்ததில் கௌரா நித்தாய் விக்கிரகங்களுடன், யோக நரசிம்ஹரின் செப்புச்சிலையும், லக்ஷ்மி ஹயக்ரீவர் படமும், சாளக்ராமம் ஒன்னும் இருந்தது. பொதுவா இப்படிப் படங்கள் வைக்கறதில்லையேன்னு இருந்தாலும் இப்பவாவது வச்சாங்களேன்னு மகிழ்ச்சிதான்.
இன்னிக்குப் பார்த்து வெய்யில் சுள்ளுன்னு சக்கைப்போடு போடுது. பக்தர்கள் குடும்பங்கள் வந்து சேந்தாங்க. ஆளுக்கொரு வேலையா பூஜை சாமான்களைப் பிரிச்சு அடுக்கி வச்சாங்க. ஹோமம் செய்யறதுக்கு செங்கல்கள் மேல் ஒரு சதுர ட்ரே வச்சு அதில் அரிசிமாவைப் பரத்தி, வண்ணப் பொடிகளால் கோலம் போட்டு, வெளியே சுற்றிலும் பழவகைகளை அடுக்கினாங்க. மூணு செப்புக் கலசம் தேங்காயுடன்.
வெயில் தாங்காமல் பக்கத்து வேலியோரம் கிடைச்ச கொஞ்சூண்டு நிழலில் எல்லோரும் போய் தஞ்சம் அடைஞ்சோம். ஒரு ஷாமியானா போட்டு வச்சுருக்கலாம்! இங்கேதான் டெண்ட் கிடைக்குதே. நமக்கு ஒரு குடை வண்டியில் இருப்பது நினைவுக்கு வர கோபால் போய் அதைக் கொண்டுவந்து கொடுத்தார். அதானே...ஃபொட்டோக்ராஃபர் ஒரு இடத்துலேயே உக்காரமுடியுமா?
மாங்கட்டைகளை அடுக்கி ஹவனுக்கு ரெடியானார் கிஷோர். ஹரேக்ருஷ்ணா பஜன்பாட, ம்ருதங்கமும் ஜால்ராவுமா சிலர். இவுங்களும் வேலிக்கருகில்தான்.
பஞ்சகச்சம் கட்டிய குட்டிப்பையனை ஃபென்ஸ்க்கும் மேல் ஏத்திவிட்டார் கோபால்:-)
ப்ரபுபாதாவும் வந்து சேர்ந்தார். ஹோமகுண்டத்துக்கு முன்னால் உக்கார்ந்தார். பாண்டுராணி அவருக்குக் குடை பிடிச்சாங்க. இங்கே தீட்சை வாங்குனவங்களுக்கு கோவில் பெயர் ஒன்னும் இருக்கு. அப்புறம் அவரை இடம் மாற்றி கொஞ்சம் பூஜை விக்ரகங்களுக்குப் பக்கத்தில் உக்காரவச்சாங்க:-)
இன்றைய சூப்பர் ஸ்டார் ஒருவழியா வந்து சேர்ந்தார். எல்லோருக்கும், முக்கியமா சின்னக்குழந்தைகளுக்கு ஒரே குஷி. இவருக்காகத்தான் இவ்ளோ நேரம் காத்திருந்தோம். இன்னும் பால்குடி மறக்கலை. பாட்டிலில் பால். சிட்டிக்குள்ளே இவருடைய ஜாதிக்கு அனுமதி இல்லை .என்பதால் , விசேஷ அனுமதி வாங்கி சிட்டிக்கு வெளியில் இருந்த பண்ணையில் (இதுவும் இஸ்கானோடதுதான்) இருந்து கொண்டு வந்தாங்க.
இவர் வரவுக்குப்பிறகு யாரும் பூஜையைக் கவனிச்சமாதிரி தெரியலை:-) நிழலுக்காக எங்க பக்கத்தில் வந்தவருக்கு ராஜ உபசாரம். கீழே இருந்து புற்களைப் பிடுங்கி ஊட்டிவிட்டுக்கிட்டு இருந்தார் நம்ம கோபால். பெயர் ராசிக்குள்ள குணம்:-) நானோ க்ளிக்குவதில் மும்முரமா இருந்தேன்.
பூஜையின் ஒரு பகுதியாக மாடுபாப்பாவை பூஜை நடக்கும் இடத்துக்குக் கூட்டிப்போனாங்க. அவருக்கு கோ பூஜை நடத்தி, அவரையே சாட்சியாக வச்சு நவதானியங்கள், நவரத்தினங்கள் , மஞ்சளும் குங்குமமும் சார்த்திய செங்கற்கள் இப்படி எல்லாம் நவநவமா குழிக்குள் வச்சாங்க. சின்ன மண்குடத்தில் சேஷன் இருந்தார் . அவரையும் குழிக்குள் இறக்கினாங்க. பக்தர் ஒருவர் மோதிரம் ஒன்னு குழியில் போட்டார். நாங்கெல்லாம் ஒரு டாலர் ரெண்டு டாலர் (தங்கக்காசுகளை ) போட்டோம். கிஷோர், 'தங்கம் போடுங்கம்மா'ன்னார் என்னிடம்:-)
தரையில் குழிச்சிட்டால் பலன் ஏது? கோவில் கட்ட ஒரு நல்லதொகை நம்ம பங்காகக் கொடுக்கப் போறோம் என்பதால் தலையை ஆட்டி வச்சேன்.
பால்,பழங்கள் மலர்கள், தூபதீபங்களால் சேஷனுக்கு உபசாரங்கள் ஆனதும் குழிக்குள் மண்ணை நிரப்பினோம். ஆளுக்கு ஒரு ஷவல் அளவு:-) ஒரு சாஸ்த்திரத்துக்குத்தான்!
அதுக்குப்பிறகு ஹோமம் ஆரம்பமாச்சு. வெயிலில் நெருப்புக்குப் பக்கம் நிற்பது ரொம்பக் கஷ்டம்:(
யோகநரசிம்மரைக் கூர்ந்து கவனிச்சால், அவர் மடியில் ப்ரஹலாதன் உட்கார்ந்துருக்கான்! இப்படி ஒரு 'விக்கிரகத்தைப் பார்ப்பது' எனக்கு புதிய அனுபவம்!
மணியும் பனிரெண்டரையாகி இருந்துச்சு. கோவில் நல்லபடியா எழும்பி வரணுமுன்னு மனமாற வேண்டிக்கிட்டு வீடு திரும்பினோம். எப்படியும் இன்னும் ஒரு வருசம் ஆகலாம்.
சேஷன்தான் பெருமாள் எங்கே போனாலும் கூடவே போவானாமே! இங்கே சேஷன் முதலில் வந்துட்டான். படுக்கை வந்தாச்சு. இனி வரவேண்டியது பெரும் ஆள்தான் இல்லையோ?
பெருமாளே பார்த்துச் செய்!
PINகுறிப்பு: அனைவருக்கும் ஈஸ்ட்டர் விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள். எங்களுக்கு நாலுநாள் லீவு. அதில் மூன்று நாட்களுக்குச் சிறு பயணம் போகின்றோம். அடுத்த வெள்ளிக்கு விவரம் சொல்றேன்:-)
12 comments:
துளசிதளம்: சேஷன்களே இல்லாத ஊருக்கு சேஷன் வர்றானாமே!- அருமை மேடம். நாங்களும் அங்கிருப்பது போல் உணர்கிறோம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal
எல்லாம் நல்லபடியாக நடக்கும்... ஒரு வருடத்திற்குள் முடிந்து விடும், அப்போ சொல்லுங்க (பதிவு...!)
பெயர் ராசிக்குள்ள குணம்... ஹா... ஹா...
விரைவில் கோவில் வரட்டும்.....
படங்கள் மூலம் நாங்களும் விழாவில் கலந்து கொண்டோம்...
Naமக்குத்தான் அழுகையும் புலம்பலுமா இருந்ததே தவிர இஸ்கான் பக்தர்கள் எல்லாம் ரொம்பவே மன உறுதியோடு , எல்லாம் கண்ணனின் விருப்பம். இப்படி ஆனதுக்கும் ஒரு காரணம் இருக்கணும் என்றெல்லாம் சொல்லும்போது , பூரண சரணாகதி தத்துவம் லேசாப் புரிஞ்சது, In other words that which can not be cured must be endured This has to be understood
வாங்க ரத்னவேல்.
பகிர்வுக்கு நன்றி.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
கோவில் வந்துட்டா விடமுடியுமா? பதிவுக்கான மேட்டர் இல்லையோ:-))))
பசு-கன்று- பால்- கோபால்:-)))
வாங்க வெங்கட் நாகராஜ்.
சேஷன் பிரதிஷ்டைன்னதும் என்னென்னவோ கற்பனையோடு போனேன். அப்புறம் பார்த்தா.... இது சேஷக்குட்டி:-)
உங்க எல்லோர் வாக்கும் பலிக்கட்டும்!
வாங்க ஜிஎம்பி ஐயா.
உண்மைதான். இதுக்கு இன்னொரு பெயரும் இருக்கே! விதி. எல்லாம் விதிப்படியே நடக்கும். நடந்தது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
படங்கள் அருமை! சேஷன் வந்னு!! அப்போள் பெருமாளும் வரும்!!
எல்லாவற்றையும் விட அந்த விஐபி சூப்பர்!!! அழகோ அழகு!
பூரண சரணாகதித் தத்துவம் !! ஆம் இதை அடைய வேண்டும் என்றால் நமக்கு அன் கண்டிஷனல் லவ் அதையும் கற்க வேண்டுமோ!!! இல்லை வைஸ் வெர்சா வா?!!!
அருமை!
இந்தக்காலையில் ததும்புகிறது கிருஷ்ண பக்தி ரசம் உங்கள் பதிவின் மூலம்... உற்பாதங்களும் அவன் விளையாட்டே !
எதையுமே ஊர் கூடிச் செய்தால் இன்பம். அப்படி ஊரைக் கூட்ட வெச்சதுக்காக இறைவன் நடத்தியதுன்னு எடுத்துக்க வேண்டியதுதான்.
நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி சென்னைல உள்ள இஸ்கான் கோயிலுக்குப் போயிருந்தேன். உங்க நினைவுதான். நீங்களும் போயிருந்ததைப் பத்தி எழுதியிருந்தீங்க.
அடுத்தவாட்டி சென்னை வரும் போது பூரி ஜெகன்னாதர் கோயிலுக்கும் போங்க. ஒரிசா மக்கள் அருமையா நடத்திக்கிட்டு வர்ராங்க. நீங்க ஏற்கனவே போயிருந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன் :)
ஏற்கெனவே படிச்சாப்பலே இருக்கேனு நினைச்சேன். பார்த்தால் போன வருஷத்துப் பதிவு! ஹிஹிஹி, கர்தூ சொல்லாட்டியும் படிச்சதை நினைவு வைச்சுப்போமாக்கும். அது சரி, அன்னமூர்த்தி சந்நிதிக் கதவைப் படம் பிடிச்சுப் போட்டிருந்தேனே, ஏன் அதைப் பார்க்க வரலை?
Post a Comment