Monday, April 27, 2015

ஓணம் ஆரம்பிச்சது இங்கே இருந்துதானாக்கும், கேட்டோ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 44)

எளிய மனிதர்களுக்குள் எத்தனை அன்புன்னு  மாய்ஞ்சு மாய்ஞ்சு பேசிக்கிட்டே  திரும்பி  ஆலுவா  ஹொட்டேலுக்கு வர்றோம். 31 கிலோ மீட்டர் கடந்ததும் தெரியலை. அறைக்குப்போய்  கொஞ்சம் ஃப்ரெஷப் செஞ்சுக்கிட்டு  இதோ காக்கரையப்பனைக் காணான்  புறப்பட்டு. காலையில் வரும்போது பார்த்து வச்சுக்கிட்ட இடம்தானேன்னு கொஞ்சம் மெத்தனம். குள்ளர் ஒரு போடு போட்டார் நம்ம அகம்பாவத்தில்!

வழியைத் தவறவிட்டு ஒரு சுத்து சுத்தினதும்  அட  இந்தக் கட்டிடத்தைப் பார்த்த நினைவு இருக்கேன்னு  சீனிவாசனைக் கொஞ்சம் மெதுவாப் போகச் சொன்னேன். ஆ.....  கிடைச்சுடுத்து! இதையொட்டியே இருக்கு கோவில் வளாகம். கொஞ்ச தூரம் போய் இடது பக்கம் திரும்பிக்கணும்.
திருவோணம் ஓடிட்டோரியத்தைத் தொட்டடுத்தா ஈ க்ஷேத்ரம்!

தெருவுக்கு ரொம்பவே கீழே இருக்கு. அதான் நேர்ப்பார்வையில்  கண்களில் படலை!  படிகளிறங்கிப் போறோம். வளாகம் ரொம்பவே பெரூசு. கீழே கோவில் வாசலுக்கருகில் வண்டி ஒன்னு நிக்குது.  அப்ப  கார் உள்ளே வர ஒரு பாதை இருக்கணும்தான்.  சீனிவாசன் கண்டுபிடிச்சு நிறுத்திட்டு வருவார்தானே?



திட்டிவாசல் போல் ஒரு சின்னக் கதவு.  கொடிமரத்தின் உச்சி கண்ணில் பட்டது. கடந்தால்  காம்பவுண்டு சுவருக்குள் அங்கங்கே  சந்நிதிகள்.  முதலில் அப்பனை தரிசிக்கலாமுன்னு போனோம். கோவில் முகப்பிலேயே  உள்ளே இருப்பது யார்ன்னு தெரிஞ்சு போகுது!  கையில் கிண்டி ஏந்தி நிற்கும்  வாமனர்!  கொடிமரம் கடந்து  முன்னே இருக்கும்  உம்மரத்தினுள்ளில் தகதகன்னு பிரகாசத்தோடு பலிபீடம்(!)



கேரளப் பாரம்பர்யம் அனுசரிச்சு  உள்பிரகாரம் போகும் வழியில்  ரெண்டு பக்கங்களும் திண்ணை வச்ச  நடை.  இங்கேயும் வட்டமா இருக்கும் கருவறைதான். ஆனால் சின்ன  சைஸ்.  வாமனரின் அளவுக்கேத்தபடி வச்சுருக்கார்,  கோவிலைக் கட்டிய  பரசுராமர்.

வாமன அவதாரம் நடந்த இடமே இதுதான் என்கிறார்கள்.  உங்களுக்கு மாவேலியைத்தெரியுமோ?

சுருக் என்று சொல்லிப்போகவா....

அந்தக் காலத்துலே மகாபலி ன்னு ஒரு அசுர ராஜா நாட்டை ஆண்டுக்கிட்டு இருந்தார். ரொம்பவே நல்லவர்.அசுரனா இருந்தாக் கெட்டவனாத்தான் இருக்கணுமா என்ன? நாட்டுமக்களைக் கண்போல காத்துவந்தார்.வாரி வழங்குறதுலே அவர் கர்ணனைப் போலவே இருந்தார்.

( அட, இது என்ன? அப்போ கர்ணன் பிறந்திருக்க வழியே இல்லையே? இது நடந்தது கிருஷ்ணாவதாரம் நடக்கறதுக்குக் கனகாலம் முந்தியாச்சே. கொடைன்னதும் கர்ணன்தான் நினைவுக்கு வர்றான். புரிஞ்சுக்கிட்டீங்கெல்லெ) 

அவருடைய பெருமையையும் புகழையும் பார்த்த தேவர்களுக்குப் பொறுக்கலே. மஹா விஷ்ணுகிட்டே போய் போட்டுக் குடுத்தாங்க. 'இப்படி இவர் புகழும், பெருமையும்கூடிக்கிட்டே போகுது. நாளைக்கு அவரே நம்மையெல்லாம் தள்ளிட்டு மூணு லோகத்துக்கும் அதிபதியா வந்துட்டாருன்னா நமக்கெல்லாம் கஷ்டம்'னு! ( சரியான பொறாமை பிடிச்ச கூட்டம்?)

மஹாவிஷ்ணு பார்த்தார், என்ன செய்யலாமுன்னு. அப்ப மகாபலி ஒரு யாகம் செய்யத் தீர்மானிச்சு அதை நடத்திக்கிட்டு இருந்தார். பொதுவா ஒரு யாகம் செஞ்சு முடிச்சவுடனே, அதுலே பங்கேத்து அதை நடத்திவச்ச அந்தணர்களுக்கும்,மற்றபடி யாசகம் பெறவந்தவங்களுக்கும் செல்வங்களை வழங்கறது பதிவு. அதிலும் இவர் வாரிவாரி வழங்கறதுலே மன்னராச்சே! எப்பவும் இல்லை என்ற சொல்லே இவர் வாயிலே இருந்து வராது. இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட மஹாவிஷ்ணு, ஒரு ச்சின்ன அந்தணச் சிறுவனா உருமாறி அங்கே யாகம் நடக்குற இடத்துக்குப் போனார்.

அப்ப கேட்டவங்களுக்கெல்லாம், கேட்டது கேட்டபடி தானம் நடந்துக்கிட்டு இருக்கு. ச்சின்னப்பையன் தானம் வாங்கவந்ததைப் பார்த்த மகாபலிச் சக்ரவர்த்திக்கு சந்தோஷம் தாங்கலே. குழந்தைப் பையன் முகத்துலே ஒரு வசீகரம் இருக்கு.இருக்காதா பின்னே? வந்திருக்கறது யாரு? ஈரேழு பதினான்கு லோகத்துலேயும் செல்வத்துக்கு அதிபதியான மஹாலக்ஷ்மியோட கணவனாகிய மஹாவிஷ்ணுவாச்சே!

என்ன வேணுமுன்னு பவ்யமாக் கேட்டாரு ராஜா. ச்சின்ன உருவமான 'வாமனர்' சொன்னார், பெரூசா ஒண்ணும் வேணாம். என் காலடிஅளவுலே ஒரு மூணடி மண் தானம் வேணுமுன்னு. ஆஹா..அப்படியே தந்தேன்னு சந்தோஷமாச் சொன்னார் மகாபலி. அப்ப அவருடைய ஆச்சாரியனான சுக்ராச்சாரியாருக்கு வந்திருக்கறது சாதாரணச் சிறுவன் இல்லேன்னு தெரிஞ்சு போச்சு. 'இது நல்லதுக்கில்லே. வேணாம்'னுராஜாகிட்டேத் தனியாப் பேசித் தடுக்கப் பார்த்தார். ராஜா சொல்லிட்டார், கொடுத்தவாக்கு கொடுத்ததுதான். வந்தவர் விஷ்ணுன்னா எனக்கு இன்னும் சந்தோஷம்தான். எங்க தாத்தாவோட இஷ்ட தெய்வமாச்சே மஹாவிஷ்ணு. அவரே வந்து என்கிட்டே தானம்கேக்கறாருன்னா அதைவிட எனக்கு வேற பாக்கியம் வேணுமா'ன்னு சொல்லிட்டார்.

 ராஜாவோட தாத்தா யாரு தெரியுமா?ஹிரண்யகசிபுவோட மகன் பிரஹலாதன். 'நாராயணா நமஹ' ன்னு எப்பவும் சொல்லிக்கிட்டு இருந்தாரே, அவர். அப்பதான்அவருடைய அப்பாவான ஹிரண்யனைக் கொல்ல மஹாவிஷ்ணு நரசிம்ஹ அவதாரம் எடுத்தது! இப்படி ஒவ்வொண்ணாச் சொல்லிக்கிட்டே போகலாம். இருக்கட்டும், இப்ப நடக்குற விஷயத்துக்கு வாரேன்.

அந்தக் கால வழக்கப்படி தண்ணி ஊத்தக்  கெண்டியைக் கொண்டுவரச் சொன்னார். தானம் வாங்கறவங்க கையிலே, கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு நீங்க கேட்டதைக் கொடுத்தேன்னு சொல்லணும்.  சுக்ராச்சாரியாருக்குப் பொறுக்கலை. அரசனுக்குஆபத்து வருதேன்ற பதைப்புலே என்ன செய்யலாம் இதைத்தடுக்கன்னு யோசிச்சு, ஒரு வண்டு ரூபம் எடுத்து,அந்தக் கெண்டியிலே இருக்கற மூக்கு ஓட்டையை அடைச்சுக்கிட்டு உக்காந்துட்டார்.

ராஜா தண்ணி ஊத்தக் கெண்டியைச் சரிக்கிறார். வாமனர் கையை நீட்டிக்கிட்டு இருக்கார். தண்ணி வரலை. அதான் அடைபட்டுப் போச்சே! அப்ப ஏதோஅடைச்சுக்கிட்டு இருக்குன்னுட்டு, அங்கே யாகம் செஞ்ச இடத்துலே இருந்த தர்ப்பைப்புல் ஒண்ணு எடுத்து அந்த வளைஞ்ச கெண்டிமூக்கு ஓட்டையிலே குத்துறார் ராஜா. அது ஆச்சாரியருடைய கண்ணுலே குத்தி ரத்தமா வருது. திடுக்கிட்டுப் போய் உள்ளெ என்னன்னு பரிசோதிக்கிறாங்க. வெளியே தொப்புன்னு விழுந்த வண்டு பழையபடிஆச்சாரியனா உருமாறிடுது. ஒரு கண்ணுலே ரத்தம் வழியுது.

( அதுக்குத்தான் பெரியவுங்க சொல்றது, யாருக்காவது எதாவது தானம் கொடுக்கறப்ப அதைத் தடை செய்யக்கூடாதுன்னு! நீ கொடுக்கலேன்னாப் போ. அடுத்தவன் கொடுக்குறதை ஏன் தடுக்கறே?)

அப்புறம் வேற கெண்டி கொண்டுவந்து தண்ணி ஊத்தி தானத்தை வழங்கிடறார் மகாபலி. மூணே மூணு அடி!  இதோ தந்தேன்!

வாமனர் உருவம் விஸ்வரூபம் எடுக்குது. வளர்ந்து வளர்ந்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் நிக்கறார். முதல் அடி இந்த பூமி முழுசும். ரெண்டாவது அடி அந்த ஆகாயம் முழுசும் ஆச்சு. இப்ப மூணாவது அடி எங்கே வைக்கறது?மஹாவிஷ்ணுவோட விஸ்வரூப தரிசனம் லேசுலே கிடைக்கிற சமாச்சாரமா? ஆனா அன்னிக்கு அங்கே இருந்த எல்லாருக்கும் லபிச்சது. 'ஆ'ன்னு வாயைப் பொளந்துக்கிட்டு எல்லோரும் மெய்மறந்து நிக்கறாங்க. அப்ப ராஜா மகாபலி , மூணாவது அடி என் தலையிலே (சிரசில்)வையுங்கன்னு பணிவாச் சொல்றார்.

( வீடுங்களிலே எப்பவாவது  கைவேலையா இருக்கறப்ப  , சில சாமான்களை எங்கே வைக்கறதுன்னு, நாம  யாராவது கேட்டாங்கன்னா,'ஏன், என் தலையிலெ வையேன்'ன்னு சொல்றோமே இதுகூட இந்த சம்பவத்தாலே வந்ததுதானோ?)

அப்ப மஹாவிஷ்ணு கேக்கறார், 'உன்னுடைய கடைசி ஆசை என்ன?'ன்னு.ஒரு உயிரைப் பறிக்கிறதுக்கு முன்னே கேக்கவேண்டிய நியாயமான கேள்வி. அப்ப ராஜா வேண்டுறார்,'நான் என் நாட்டு மக்களை ரொம்ப நேசிக்கிறேன்.அதனாலே வருசத்துக்கு ஒருமுறை இந்த நாளில்              ( அன்னைக்கு நட்சத்திரம் திருவோணமா இருந்தது) ஜனங்களை வந்து பார்த்துட்டுப் போறதுக்குஅனுமதி தரணும்'ன்னு. அப்படியே ஆகட்டும்னு சொல்லிட்டு அவர் தலைமேலே மூணாவது அடியை வச்சு அப்படியே அவரை பாதாள லோகத்துக்கு அனுப்பிட்டார் மஹாவிஷ்ணு.

அதுக்கு அடுத்த வருசத்துலே இருந்து சம்பவம் நடந்த சிங்கமாசம் ( நம்ம தமிழ்மாசம் ஆவணி), திருவோண நட்சத்திர நாளிலே மகாபலி பூலோகம் வந்து தன்னுடைய ஜனங்களைப் பார்த்துட்டுப் போறாருன்னு ஒரு ஐதீகம்.  ஓணம் பண்டிகையின் ஆரம்பம் இங்கே இதே இடத்தில் இருந்துதான்!

 அவரை வரவேற்கறதுக்காக ஒவ்வொருத்தரும்அவுங்கவுங்க வீட்டு வாசலிலே கோலம் போட்டு, அதை பூக்களாலேயே அலங்கரிக்குறாங்க. அதுதான் பூக்களம்னு சொல்றது.எல்லோரும் நல்ல புது ஆடைஆபரணங்கள் எல்லாம் அணிஞ்சு, அருமையான விருந்து சாப்பாடு தயாரிச்சு வச்சுஅவுங்களோட இஷ்ட ராஜாவான மகாபலிச் சக்ரவர்த்திக்கு அர்ப்பணிக்கிறாங்க. திருவோணத்தன்னிக்கு இது நடந்ததாலே இந்தப் பண்டிகைக்குப் பேரே 'ஓணம்'னு ஆகிருச்சு.

இந்தக்கோவிலில்  ஓணம் பண்டிகையை விசேஷமாக்  கொண்டாடுறாங்க. ஆதி காலத்தில் 28 நாட்கள் நடந்த விழா இப்போ பத்து நாள் பண்டிகையா ஆகி இருக்கு. இப்பெல்லாம் வீடுகளில்  மூணுநாள் பண்டிகையா சுருங்கிட்டாலும்  இங்கே கோவிலில் பத்து நாட்களுமே கொண்டாட்டம்தான். வீடுகளிலும் பூக்களத்தில் மரத்தினால் செஞ்ச த்ருக்காக்கரையப்பன் சிற்பத்தை வச்சுக்கும்பிடுவது வழக்கம்தான்.

இது நம்ம கேரளா க்ளப்பில் ஓணசமயத்து  வச்சுருந்த ஓணத்தப்பன்,  த்ருக்காக்கரையப்பன்

வட்டக் கருவறைக்குள்ளே   சங்கு சக்கரம், தாமரை, கதாயுதம்  ஏந்திய நாலு கைகளுடன்  தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார்  வாமன மூர்த்தி,  திருக்காட்கரை அப்பன். (த்ருக்காக்கரையப்பன் என்று கேரள மக்கள்ஸ்க்கு)
கருவறையை வலம் வர்றோம். முக்கால் வாசி சுத்தி கிழக்கு வாசலுக்கு வரும்போது,  நடுவிலே சின்ன சங்கிலியில் ஒரு தடை! திரும்ப வந்த வழியே இடம் வந்து  மீண்டும்  பெருமாள் சந்நிதியில்  முடிக்கணுமாம்.!   ஆகட்டும் அப்படியே!


சந்நிதிதான் சிறுசே  தவிர  கோவில் ரொம்பவே பெருசுதான். வெளிப்ரகாரத்தில் சட்டத்தில் பிடிப்பிச்சுருக்கும் பித்தளை அகல்களில் விளக்கேற்றினால்   எவ்ளோ ஜ்வலிப்பாக இருக்குன்னு  தோணுச்சு. வலம் வர்றதுக்கு எளிதாக நல்ல காங்க்ரீட் பாதை போடு வச்சுருக்காங்க. கல்லிலும் மண்ணிலும் நடக்க வேணாம்!  மற்ற சந்நிதிகளுக்குப் போகவும் பாதை போட்டு வச்சுருப்பது விசேஷம்.

தாயாருக்குத் தனி சந்நிதி.  வாத்ஸல்யவல்லி  என்னும் பெருஞ்செல்வ நாயகி.
நம்மாழ்வார் வந்து பெருமாளை ஸேவித்து, பாடல்கள் பாடி மங்களசாஸனம் செய்த  108 திவ்யதேசக் கோவில்களில் இதுவும்  ஒன்னு.   நடை திறந்திருக்கும் சமயம்  எல்லாம் பதிவுபோல! காலை 5  முதல் 11, மாலை 5 முதல் எட்டு.




 வாமனமூர்த்தியின் திருக்கோவிலுக்குப் பக்கத்திலேயே  ஒரு சிவன் சந்நிதி!   மகாபலி சக்ரவர்த்தி வழிபட்ட  லிங்க ரூப சிவன் இவர்.  பிறை நிலா ஏழு ஒன்றின் கீழ் ஒன்றாய்  சிவலிங்கத்தின்  இருக்கும் அலங்காரம். இங்கேயும் போய் ஸேவிச்சுக்கிட்டோம்.


கோவில் தீர்த்தம் என்ற போர்டு போட்ட சின்னக்குளம் கபில தீர்த்தம்.  கபில மகரிஷிக்கு  இங்கே காட்சி கொடுத்தாராம் வாமனர்.கோவிலில் பூஜை செய்பவர்களைத்தவிர வேற யாரும் இறங்கக்கூடாதுன்னு  எழுதிப் போட்டுருக்காங்க. இந்தத் தீர்த்தத்தைக் கெண்டியில்  முகர்ந்து அதைக் கொண்டுதான்  நீர் கேட்ட மூன்றடி நிலம் தந்தேன்னு மாவேலி  தாரை வார்த்ததாக ஐதீகம்!



திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, போர்டு வைப்பதில் மட்டும்  எவ்ளோ கெட்டிக்காரத்தனம்   காமிக்குது பாருங்க. தேவையான ஒரு வரி மட்டும் தமிழில்!

ப்ரம்ம ராக்ஷஸனுக்கு ஒரு சந்நிதி ! கோவிலுக்குள் ராக்ஷஸன் எப்படி வந்தான்?  கதை இருக்கான்னு  கேட்டால்   இருக்கு!



இந்தப் பகுதியில்  ஒருத்தர் வாழைத்தோட்டம் வச்சுருந்தார். இலைகள் பெருசாவும் செழிப்பான மரங்களுமா இருந்துச்சே தவிர  எதுவும் குலை தள்ளவே இல்லை. மனம் உடைஞ்சு போனவர்,  பெருமாள் சந்நிதியிலே வந்து  பிரார்த்திச்சு வேண்டிக்கறார்.  பெருமாள் கருணைக்கண்களை  (நேத்ரம்) அவர்மீது  திருப்பினார். அவர் பார்வை பட்ட தோட்டம்  இன்னும் செழிப்பா வளர்ந்து பெரிய  பெரிய காய்களோடுள்ள குலைகளைத் தள்ளுச்சு.
பெருமாளின் நேத்திரம்  அருளிச்செய்ததால்   இதுக்கு நேத்திரவாழைன்னு பெயர்!  காலப்போக்கில் நேந்த்ரம்  என்றாச்சு:-)

 நன்றிக்கடனா  பெருமாளுக்கு  தங்கத்திலே ஒரு வாழைக்குலை செஞ்சு கொண்டு வந்து சமர்ப்பிக்கிறார்.

மேலே:  கோவிலில் அன்னதானம் நடக்கும் ஹால்  

கொஞ்சகாலத்துக்குக்கப்புறம்,  யோகி ஒருவர்  வந்து கோவிலில்  தங்கி பெருமாளை  வணங்கி வர்றார்.  நாட்கள்  கடந்து போகுது. ஒருநாள் தங்கப்பழக்குலை  காணாமப்போச்சு. அரசருக்கு சேதி  போனதும்,  அவர் வந்து பார்த்துட்டு,  தீர விசாரிக்காமல்  யோகிதான் திருடி இருக்கணுமுன்னு தண்டனையா சிறையில் அடைச்சுச்  சித்திரவதைகள்  செய்யச் சொல்லிட்டார்.
சிலநாட்களில் வாழைக்குலை சந்நிதியிலேயே  ஒருபக்கம்  இருக்குன்னு தெரியவருது. இதுக்குள்ளே  அவமானம் தாங்காத யோகி ,  சாபம் கொடுத்துட்டுத் தற்கொலை செஞ்சுக்கிட்டார். செத்துப்போனதும் ப்ரம்மராக்ஷஸனாக  ஊருக்குள்ளே  உலவறார்.  மனம் கலங்கிய அரசனும் ஊர்மக்களும்  சேர்ந்து சாபம் நீங்கறதுக்காகக் கோவிலுக்குள்ளேயே அவருக்கு ஒரு தனிச்சந்நிதி கட்டி தினமும் விளக்கேற்றி, நைவேத்யம் செஞ்சு பூஜிக்கறாங்க.



கோவிலில்  நேந்திரப்பழக்குலையை  சமர்ப்பிக்கறது  இப்ப வழிபாட்டில் ஒன்னு. அதுவும் ப்ரத்யேகிச்சுப் பத்து நாள் கொண்டாடும்  ஓணப்பண்டிகையில் திருவோண நக்ஷத்திர திவஸம்  வாழைக்குலை சமர்ப்பணம் செய்ய  மக்கள் கூட்டம் முண்டியடிக்குமாம். கோவில்  கூரையில்  கட்டித் தொங்க விடுவாங்களாம்! ஹைய்யோ!!!



ஒருமணி நேரத்தில் நல்லாச் சுத்தி தரிசனம்  ஆச்சு.  ஆறரை கூட ஆகலை அதுக்குள்ளே  இருட்டு வந்தாச்சு.  கிளம்பலாமுன்னு  வெளியே வந்தால் நம்ம சீனிவாஸன் வண்டியைக் கொண்டுவந்து  பரம்பிலேயே இடம் பார்த்து நிறுத்தி இருந்தார். திருவோணம் ஓடிட்டோரியத்தை அடுத்தே  பள்ளமா கீழே இறங்கும் வழி இருந்துருக்கு. நாம்தான்  கவனிக்கலை.




மேலே போகும் ரோடில் எதுத்தாப்லெ ஒரு  டீக்கடை இருக்கேன்னு  போனோம். இப்ப டீக்கடைகளின்  ஒப்பனைகள் மாறிப்போயிருக்கே!  பேக்கரி கம் டீக்கடை.  மூணு சாய்!  சூடாக் குடிச்சுட்டு  ஆலுவா அறைக்குத் திரும்பிட்டோம்.

இன்னிக்கு ரொம்பவெ சுத்தியாச்சு. ராச்சாப்பாட்டுக்கு ரூம் சர்வீஸ்தான். ஃப்ரைடு ரைஸ்.

தொடரும்...........:-)



22 comments:

said...

"ஓணம் ஆரம்பிச்சது இங்கே இருந்துதானாக்கும், கேட்டோ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 44)" = துளசிதளம் = அருமையான படங்களுடன் தகவல்கள் அடங்கிய அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal.

said...

வணக்கம் டீச்சர். அழகான கோயில்.

கேரளாவில் ஓணம் மிகப்பிரபலம் என்று தெரியும். தமிழ்நாட்டில் ஓணம் பற்றித் தெரியுமா?
https://4varinote.wordpress.com/2013/02/19/080/

முன்பு நான் எழுதிய பதிவு. :)

said...

அதர்மம் தழைக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட உகந்தோறும் அவதாரம் செய்பவன் ஒரு நல்ல அரசனை அழிக்க வாமன அவதாரம் பூண்டது சரியா.? நான் எழுதிய வாமன அவதாரக் கவதை சுட்டி இதோ
http://gmbat1649.blogspot.in/2011/06/5.html

said...

வாங்க ரத்னவேல்.

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

பெருமாளின் திரு நக்ஷத்திரம் திருவோணம்தான். நம்ம அடையார் அனந்த பத்மநாபன், ஒவ்வொரு மாசத் திருவோண தினத்திலும் வீதி உலா வருவார். ரொம்பவே அழகா இருக்கும். அதிலும் பெருமாள் வலம் முடிச்சுக் கோவிலுக்கு வந்திறங்கினதும் உள்ளே போகுமுன் பார்க்கணுமே! என்ன விதவிதமான நடை!

உங்க பதிவை பார்த்த நினைவு. ஆனால் என் பின்னூட்டம் ஒன்னும் இல்லையே. ஒருவேளை பார்க்கலையோ? சுட்டிக்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சுட்டிக்கு நன்றி.

அப்போது விட்டுப்போனதை இப்போது பார்த்தேன்.

உறவுச்சிக்கல்........ ஹூம்....

said...

அன்பு துளசிமா. தெரிந்த கதையாயிருந்தாலும் உங்க நடையிலே வாமனனைத் தரிசனம் செய்வது திவ்யமாய் இருக்கு. எவ்வளவு பெரிய கோவில் சிமெண்ட் தளம் நம்ம ரங்கநாதர் கோவிலிலும் இருந்தால் நன்றாக இருக்கும்ம்ம்ம்ம் தான். நேந்திரன்காய்க்கு இப்படி ஒரு வரலாறா. குளத்துக்குக் கரையே இல்லையே .மலையாளப்படங்களைப் பார்க்கும் நினைவுவந்தது. தண்ணீர்லிம்மால் அவர்களால் இருக்கவே முடியாதே.

said...

கிண்டியில இருந்த சுக்கிராச்சாரி வண்டைக் குத்தினது வாமனர்னு எங்கியோ கேட்ட ஞாபகம்?

said...

நேத்திரன் (நேந்திரம்பழம் ) பெயர் வந்த கதை அறிந்தேன் .
நல்லது செஞ்சாக்கூட தப்பென்றால் எப்படி ......தேவர்கள் சொன்னங்கன்னு அவரை சீண்டி அருள் செஞ்சு இருக்காரு நம்ம விஷ்ணு . சீண்டாம அருளக்கூடாதா !!

said...

வாங்க வல்லி.

ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்க முடியாதவர்களுக்கு வண்டி எல்லாம் இருக்கேப்பா. அங்கே பாதை போட்டால் வண்டி ஓட முடியாதுல்லையா?

எனக்கு என்னதோணுதுன்னா அந்த ஸோலார்பெயிண்ட் தரைக்கு அடிச்சு வச்சா, சூடு தெரியாமல் நடந்து போகலாம்.

குளத்துக்கு ஒரு பக்கம் மட்டும் படிகள் இருக்குப்பா.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.


வாமனர் தானம் வாங்க வந்தவர். அவர் கையேந்தி நிற்கணுமே தவிர, அவசரக் குடுக்கையா தானே தர்பையை எடுத்து கண்ணைக் குத்தியிருப்பாரா? குழப்பமா இருக்கே:(

said...

வாங்க சசி கலா.

எதிரியைக் கொல்லாம பாதாள லோகத்துக்கு அனுப்பிட்டார். அப்பதானே வருசம் ஒருக்கா வரமுடியும்?

'மாவேலி வருந்ந திவஸம் மனுஷ்யரெல்லாம் ஒன்னுபோலே' ன்னு ஒரு பழஞ்சொல்லு இருக்கு!

ஆனால் ஒன்னு, இந்த தேவர்கள் மாதிரி பொறாமை பிடிச்சவர்கள் உலக மக்களுக்கு என்ன சொல்ல வர்றாங்க?

said...

படு சுவாரசியம். பிரமாத படங்கள்.
பிரம்ம ராட்சசன் கதையைக் காணோமே? அப்புறம் சொல்வீங்களா?

said...

வாங்க துரை.

ரொம்பநாளுக்கப்புறம் வந்துருக்கீங்க! நலம்தானே?

ப்ரம்மராக்ஷஸன் கதை இதுலேயே இருக்கே, பார்க்கலையா?
அந்த யோகி- தற்கொலை...ப்ரம்மராக்ஷஸன்.... கோவில்....

said...


விளக்கவுரைகளுடன், படங்கள் அனைத்தும் என்னைப்போலவே அழகாக இருக்கிறது மேடம் நன்றி.

said...

வாங்க கில்லர்ஜி.

வருகைக்கும் 'கருத்துக்கும்' நன்றீஸ்.

said...

ஓணம் ஆரம்பித்த இடம்.....

நெய்வேலியில் அடுத்த வீட்டிலே கேரளத்துக் குடும்பம். ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகைக்கும் பத்து நாளும் வாசலில் பூக்களம்... நாங்களும் சென்று அவர்களுக்கு உதவி செய்வோம். ஓணச் சத்யா எங்களுக்கு உண்டு! :)

கோவில் பற்றிய தகவல்களும் கதைகளும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

said...

அழகான படங்களும் அருமையான தகவலும். உங்களைப் பதிவர் சந்திப்பில் சந்தித்தது மகிழ்ச்சியம்மா. அன்புடன் ஊக்கப்படுத்தியதை மறக்கமுடியாது, நன்றியம்மா.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.
http://blogintamil.blogspot.com/2015/06/blog-post_18.html

said...

வாங்க க்ரேஸ்.

உங்களை நேரில் சந்திச்சது எனக்கும் ரொம்ப மகிழ்ச்சிதான். உங்க புத்தகவெளியீடு அருமையாக நடந்தது மாநாட்டில். மறக்க இயலாத நிகழ்வு.

முடிந்தால் அப்பப்ப நம்ம 'வீட்டுக்கு' வந்து போங்க. எதிர்பாராத தகவல்கள் இருக்கலாம்:-)

வருகைக்கு நன்றி.

said...

உங்களின் சில படங்களை நான் சுட்டுக்கொண்டேன். இனை சில படங்களையும் சுட அனுமதி வேம்டுகிறேன்.

said...

வாங்க கைலாஷி.

நோ ஒர்ரீஸ்
எல்லாம் உமக்கே !

said...

வாங்க கைலாஷி.

நோ ஒர்ரீஸ்
எல்லாம் உமக்கே !