Wednesday, April 08, 2015

அம்பலப்புழா ஸ்ரீ க்ருஷ்ணன் ( ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 37)

ஆலப்புழாவில் இருந்து அம்பலப்புழா வந்து சேர,  சரியா   அரைமணி நேரம் ஆச்சு. தெக்கோட்டு ஒரு பதினாறு கிமீ பயணிக்கணும்.  ரொம்பவே பிஸியான ட்ராஃபிக். பள்ளிக்கூடம் விட்ட நேரம் என்பதால் கடந்து வந்த சிற்றூர்களில் எல்லாம்  பள்ளிக்கூடச் சீருடைகளுடன்  பிள்ளைகளின் கூட்டம்.
ஸ்ரீ க்ருஷ்ணன் கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.


இங்கேயும்  பள்ளிக்கூடப் பசங்கள்தான். மணி இப்போ நாலரை. அஞ்சு மணிக்குத்தான் கோவில் திறக்கறாங்க.  கோவிலுக்கு ஒரு  அலங்காரவாசல் போல் இருக்குமிடத்தில் உள்ளே போனால் ரெண்டு பக்கங்களிலும் ஏகப்பட்ட கோவில் கடைகள்.


இந்தப்பக்கம்  வெளியேயும்  கடைகளோ கடைகள், கலகலன்னு இருக்கு. இன்னும் அரைமணி நேரம் இருக்கேன்னு பார்த்தால்.... அங்கே ஒரு டீக்கடை. நாயர் கடை டீயும்  பருப்பு வடையும் நமக்கு இங்கேதான் போலன்னு  ஒரு கடைக்குப்போனோம். வெளியே நின்னுதான்  டீ குடிக்கணும்.  பெட்டிக் கடையாட்டம்தான் இருக்கு:-)

பளபளக்கும்   செம்பு பாய்லர் காலம் எல்லாம் போச்சு. காஸ் அடுப்பு வச்சு வேலை நடக்குது. வடையைக் காணோம்.மூணுபேரும் ஆளுக்கொரு டீ வாங்கிக்கிட்டோம். குடிச்சு முடிச்சுட்டு கோவில்கடைகளை ஒரு பார்வை பார்க்கலாமுன்னு போனால்.... ஏகப்பட்ட க்ருஷ்ணன்கள்.

 ஆவலோடு ஓடிய என்னைத் தொடரும் மிரட்டும் குரல்.

 "ஏற்கெனவே வெயிட்  அதிகமா இருக்கு!"

ஹாஹா...


அதுக்குள்ளே  கோவில் திறந்து மக்கள்ஸ் உள்ளே போறாங்க. நாலே முக்கால்தான். அஞ்சு மணிக்கு நடை திறப்பாங்களாம். சரி.பார்க்கலாமுன்னு  கோவிலுக்குள்ளே போறேன். லக்ஷார்ச்சனை  தொடங்குச்சு
." நீபாட்டுக்கு ஏகப்பட்ட சாமான்களை வாங்கிக் குவிச்சுக்கிட்டே போறே. (?!) ஏற்கெனவே மீனாக்ஷி வாங்கிட்டு ஏகப்பட்ட கனம். உனக்கு புத்தகங்கள் வேற வாங்கிக்கணும் என்றால்...இப்ப ஒன்னும்  வாங்காமல் இருந்தால்தான் நல்லது..........."

"ஏன் உங்க முப்பது கிலோ சும்மாத்தானே கிடக்கு?  அதுலே...."

"தைக்கக் கொடுத்த துணிகளை  எப்படிக் கொண்டு போவே?  அந்த முப்பதெல்லாம் எப்பவோ  முடிஞ்சாச்சு. சரி, எதாவது ஒன்னு மட்டும் வாங்கிக்கணும். இதுதான் கடைசிப் பர்ச்சேஸ். "

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....(இந்தக் கோவிலுக்குக் கடைசின்னு மனசில் சொல்லிக்கிட்டேன்)



கூடாதுகள் எழுதிப் போட்டுருக்காங்க. நிறைய தமிழர்கள் வர்றாங்க போல! தமிழிலும்  கையால் எழுதிப்போட்டுருக்கே:-)

ஓலை வேய்ந்த ஒரு மண்டபம் கடந்து போறோம். இடதுபக்கம் கம்பீரமா ஒரு யானை! ஸ்ரீ க்ருஷ்ணனுக்குச் சேவை செய்து, கடைசியில் வைகுண்டம் போனவன்.




ஒரு பெரிய வெண்சங்கு!   பாஞ்சஜன்யம்!




வெளிப்பிரகாரத்தில்  ஒரு சுத்து நமக்கு. இடப்பக்கமெல்லாம்  ஓடுகள் போட்ட தனித்தனி கட்டிடங்களும் அதில் சின்னச்சின்ன வாசல்களுமா இருக்கு.






கோவிலுக்குப் பின்பக்கம் அட்டகாசமான குளம். அதுக்கு அந்தாண்டை யானைக்கொட்டில்.  இளவயசுக்காரன்  ஒருவன் அங்கே!  கிட்டப்போய்ப் பார்க்கலாமுன்னா, கோவில் மணி முழங்க ஆரம்பிச்சது. நடை திறந்துட்டாங்கன்னு ஜனங்க பாயறாங்க.
  கெமராவில் Zoom செய்து அவனைக் கிட்டக்கக் கொண்டு வந்து பார்த்தேன். மிடுக்கன். ஒரு 25 வயசு இருக்கும்!



சரி,  தரிசனம் முடிச்சுட்டு வந்துடலாமுன்னு போறோம். வலப்பக்கமாவே போறோம். தேவஸ்தான கவுண்ட்டரும், தொட்டடுத்து  அடைச்சுப்பூட்டி இருக்கும் பால்பாயாஸம் கவுண்ட்டரும்.  ஏற்கெனவே  சொல்லி வச்சால்தான் கிடைக்கும். அதுவும் அதிர்ஷ்டம்  இருந்தால்தான் என்று கேட்டுட்டுண்டு.


பாயஸம் கழிச்ச  ஆயாஸமாணோ  ஈ  பூச்சைக்கு?

தேவஸ்தான கவுண்ட்டர் திறந்து இருக்கு. அங்கே இருந்த கோவில் ஊழியரிடம், 'பாயஸம் கிட்டுமோ'ன்னால்  'நூறு ருப்யா 'என்ற பதில். 'ஆஹா......தராம்.  பாயஸம் உண்டோ?'ன்னு  திரும்பவும்  கேட்டதும் உவ்வு ன்னு ஒரு தலயாட்டல். காசை வாங்கியவர்  உள்ளே போன சிலநொடிகளில்,

எங்க அதிர்ஷ்டத்தைச் சொல்லிச்சொல்லி மாய்ஞ்சு போய் நிக்கறேன். துளிப் பாயஸம்தான் வரும். சட்னு கை நீட்டி வாங்கி குடிச்சுட்டு(!) அப்புறம் க்ருஷ்ணனை தரிசிக்கலாமுன்னு சொல்லி வாய் மூடலை.... ஒரு  பெரிய ப்ளாஸ்டிக் கண்டெய்னரில் பாயஸம் வருது! ஒரு லிட்டர் இருக்கும்!
உடம்பெல்லாம் பதற  கைநீட்டி வாங்கிக்கிட்டேன். சின்ன தொன்னையில் வருமுன்னு பார்த்தால்.....

எப்ப உண்டாக்கியதுன்னு கேட்டதுக்கு 'உச்சைக்கு' என்றார். அதுதான் கடைசி பாட்டிலாம். எண்டே க்ருஷ்ணா....   என்ன மனசுடா உனக்கு!   வீட்டுக்கு எடுத்துப் போகலாமுன்னதும் சீனிவாசன் ஓடிப்போய் காரில் வச்சுட்டு வந்தார்.

பால்பாயஸத்துக்கு  இங்கே  கதை(யும்) உண்டு. இதுலேயும் பல வகைகள் உண்டு, கேட்டோ!   இப்ப ஒரு ரெண்டண்ணம் காணாம்.

அதுக்கு முன்னே ஸ்ரீ க்ருஷ்ணன் இங்கே வந்த விவரம் சொல்லணுமே!

வில்வமங்களம் ஸ்வாமிகள் ன்னு ஒரு  பக்தர் இருந்துருக்கார். அவருக்குக் குருவாயூரப்பன்  'கண்கண்ட' தெய்வம். நினைச்சப்பல்லாம்  இவருக்குப் பிரத்யக்ஷமாவானாம்! ஒரு சமயம் இவரும், இந்தப் பகுதியை அரசாண்ட  செம்பகஸேரி ராஜாவும் ஒரு ஆற்றிலே படகில் போய்க்கிட்டு இருக்காங்க.  கரைக்குப் பக்கமா  தண்ணீரில் இருக்கும் ஒரு ஆலமரத்தைக் கடக்கும் சமயம் காதுக்கு இனிய புல்லாங்குழல்  இசை  கேக்குது அப்போ!  என்ன ஏதுன்னு சுத்தும்முத்தும் பார்க்கும்போது ஆலமரத்தின் ஒரு கிளையில் க்ருஷ்ணன்  உக்கார்ந்து  குழலூதிக்கிட்டு இருக்கான். இந்தக்  காட்சி வில்வமங்கலம் ஸ்வாமிகளுக்கு மட்டும் தெரியுது. 'அதோ க்ருஷ்ணன்'னு சொல்றார். ராஜாவுக்கு  ஒன்னுமே புலப்படலை. தனக்கும்  காட்சி கொடுக்கணுமுன்னு வேண்டியதும்  அவருக்கும் தரிசனம்  கிடைச்சது.

உடனே அங்கே  க்ருஷ்ணனுக்கு ஒரு கோவில் கட்டலாமுன்னு  அந்தப் பகுதி நிலத்துக்குச் சொந்தக்காரரிடம் ஒரு தொகை கொடுத்து நிலத்தை வாங்கி அங்கே கோவில் ஒன்னு கட்டிட்டார். புழைக்குப் பக்கம் அம்பலம்!  அம்பலப்புழா!  (புழை = ஆறு.அம்பலம் = கோவில்)  இந்த ஆலமரம் இன்னும் கோவிலுக்குப் பின்புறம் 'கணபதி ஆல்' என்ற பெயருடன் இருக்கு.

சம்பவம் நடந்தது பதினேழாம் நூற்றாண்டில். மாடு மேய்க்கும்  கண்ணன்  சிலையை உள்ளே ஸ்தாபிக்கலாமுன்னு  சிலை செய்யறாங்க.  சிலை செஞ்சு முடிஞ்சபிறகு  ஒரு நம்பூதிரி வந்து பார்த்து, சிலையில் குறைபாடு இருக்குன்னு சொல்றார்.  "என்ன குற்றம் கண்டீர்?  நிரூபியும்!"   இதோன்னு  ஒரு கைப் பக்கம் லேசா விரலால் தட்டியதும், அந்தச் சிலையின் கை உடைஞ்சு விழுந்துருது:(

இன்னொரு புதுச்சிலை இப்போ வேணுமே! குறிச்சி என்னும் பகுதியில் சிலை கிடைக்கும் என்று தகவல். அங்கத்து ராஜாவுக்கும்  செம்பகஸேரி ராஜாவுக்கும் எதோ விரோதம். பேச்சு வார்த்தை கிடையாது. பணிக்கர் ஒருவர்  அங்கிருந்து  சிலையைக் கடத்திக்   கொண்டு வந்துடறார். ஆனால் மாடு மேய்க்கும் கண்ணனா இல்லாமல் பார்த்தஸாரதியா இருந்துருக்கு ! பகல் நேரத்தில் சிலையை யாருக்கும் தெரியாமல்  எங்கேயாவது  ஒளிச்சு வச்சுக்கணுமேன்னு பார்த்தால் 'இட்டித் தோமன்' என்ற கிறிஸ்தியானி வீட்டில்  இடம் கிடைச்சுருக்கு. இப்பவும்  அந்த வீட்டில் க்ருஷ்ணன் ஒளிஞ்சுருந்த அறையைப் புனிதமாகக் கருதி தினமும்  அங்கே  தீபம் ஏற்றி வைக்கிறாங்க(ளாம்)

பணிக்கர் குடும்பத்துக்கு கோவிலில் தனிப்பட்ட  மரியாதையும் கோவிலுக்குத் தலைமைப் பொறுப்பான கொய்மா என்னும் பதவியும்  கிடைச்சு, அவர் வாரிசுகளுக்கு  இப்பவும்  தொடர்ந்தே வருதுன்னு கேள்வி.

கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த செம்பகஸேரி ராஜா, வில்வமங்கலம் ஸ்வாமிகளிடம் 'க்ருஷ்ணனை தனக்கும் காமிக்கணும்' என்று விண்ணப்பிக்க, 'என் கையைப் பிடிச்சுக்கோ'ன்னாராம். கையைப் பிடிச்சதும் கண்ணன் தெரிஞ்சானாம். உடனே தன் அரசு முழுவதும்  ஸ்ரீ கிருஷ்ணனுக்கே  சொந்தமுன்னு அறிவிச்சு, அவன் பிரதிநிதியா 'தேவ நாராயணன்' என்ற பெயரைத் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கிட்டு ஆட்சி செய்யறார்.  இப்பவும் அவர் வாரிசுகளில் முதல் மகன்கள்,  தேவநாராயணன் என்ற பெயரோடுதான் இருக்காங்க. (திருவனந்தபுரம்  அரச வம்சமும் பத்மநாப தாஸர் என்னும் பெயரோடு இருப்பது நினைவுக்கு வருது)

சிலையை பீடத்தில் வைக்கும்போது  சமநிலை இல்லாமல் ஒரு பக்கம் சாயுது. அப்போ அங்கே வந்த  முனிவர் ஒருவர்  ஒரு வெத்திலையை அடிப்பாகத்தில் வச்சதும்  சிலை ஆடாமல் அசையாமல் பொருந்தி நின்னுருக்கு. அதனால்  இந்தக் கோயிலுக்குத் தாம்பூலப்புழான்னு பெயர்  ஏற்பட்டு அது மரூவி  அம்பலப்புழான்னு  வந்துருச்சுன்னும் ஒரு கதை உண்டு.

சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணனே, அர்ஜுனனுக்குக் கொடுத்த மூணு சிலைகளில்  இதுவும் ஒன்னு என்றும் கேள்வி. கோவில்களில் கதைக்குப் பஞ்சமா என்ன?

சரி.இப்போ பால்பாயஸத்தைப்  பார்க்கலாம். தினமும் 100 லிட்டர் பாயஸம் செஞ்சு  ஸ்ரீகிருஷ்ணனுக்கு நிவேதனமாப்  படைச்சுட்டு, அப்புறம் பிரஸாதமா பக்தர்களுக்கு விநியோகம் செய்யறாங்க. ஆதிகாலத்தில் ரொம்ப முக்கியப்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைச்சுக்கிட்டு இருந்த  இந்தப் பால்பாயஸத்தை 1959 ஆம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு ஒரு சிறிய தொகைக்கு விற்பனை செய்ய ஆரம்பிச்சுருக்கு தேவஸ்தானம். ஆரம்பத்தில் 32  ரூபாய்க்குக் கிடைச்சுக்கிட்டு இருந்தது இப்போ  விலைவாசி காரணம் 100க்கு வந்துருக்கு.

பால்பாயஸத்தினு காத்திரிக்கும்  மனுஷ்யர்!  இப்படி இல்லாமல் நாம் போன நேரம் கவுண்ட்டர்  காலி!  இது சுட்டபடம்.

இந்தப் பாயஸத்தின் சுவைக்காகவே ஸ்ரீ குருவாயூரப்பனும், திருவார்பு  ஸ்ரீ க்ருஷ்ணனும்  தினமும்  உச்சி பூஜை சமயம் இங்கே வந்து போறாங்கன்னு ஒரு ஐதீகம்!

தினமும் காலையில் குளிச்சு முடிச்சு வெண்ணிற ஆடைகள் அணிஞ்ச  பெண்கள் , கோகுலத்தின் கோபிகைகள் போல பால்குடங்களை ஏந்தி  கோவிலுக்குக் கொண்டுவந்து தர்றாங்க.

கோவிலுக்குள் மணிக்கிணறு ஒன்னு ப்ரகாரத்தில் இருக்கு.பாயஸத்துக்குத் தண்ணீர் இதுலே இருந்துதான். பாலின் அளவைப்போல் நாலு மடங்குத் தண்ணீரைச் சேர்த்து , ஒரு பிரமாண்டமான வெங்கல உருளியில் வச்சு விறகடுப்பு மூட்டி  காய்ச்சறாங்க. அஞ்சு மணி நேரத்தில் எல்லாத் தண்ணீரும் வத்திப்போய் பால்மட்டும் மீந்துருக்கும் சமயம் நல்லாக் கழுவி வச்சுருக்கும் அரிசியைப்போட்டு வேகவைக்கணும். முக்கால் மணிக்கூறு ஆனதும்  'வாசுதேவா' ன்னு  பெருமாளைக் கூப்பிட்டபடி கண்டசாரி சக்கரையை (இது ஒருவிதக் கல்கண்டுன்னு நினைக்கிறேன்) சேர்த்து  பாயஸம் செஞ்சு முடிக்கறாங்க.  மொத்தம்  6 மணி நேரமாகுதாம்.

 சமீப காலமா விறகடுப்புக்குப் பதில் கேஸ் அடுப்பில்  பாயஸம் செய்யறாங்கன்னு சொன்னாங்க.

PIN குறிப்பு: பதிவின் நீளம் கருதி  நம்ம க்ருஷ்ணனை ரெண்டாப் பிரிச்சுட்டேன்.  அடுத்த பகுதியை நாளைக்கே  போட்டால் ஆச்சு. ஸ்பெஷல் க்ளாஸ்:-)

தொடரும்...........:-)




21 comments:

said...

அழகான படங்கள் அம்மா...

உங்களுக்கு அதிர்ஷ்டம் கூடவே பிறந்தது...

பாடத்தை தொடர்கிறேன்...

said...

உங்களுடன் பயணிக்கும் உணர்வு உங்களது பதிவுகளைப் படிக்கும்போது ஏற்படுகிறது. புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன.

said...

சென்ற வருடம் சபரி மலி சென்ற போது சரியாக உச்சிக்காலத்தில் அம்பல்ப்புழையில் இருந்தோம், பால் பாயசமும் கிட்டியது. அது போலவே உங்கள் பதிவும் இனிக்கின்றது.

said...

அழகான படங்கள் மூலமும் அமர்களமான நடையாலும் நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணித்து விட்டோம்.

said...

மிகவும் ரசித்தேன்!

said...

ஆலப்புழாவில் படகு ட்ரான்ஸ்போர்டில் பயணிக்க ஆசை. பல இடங்களைப் பார்த்திருந்தாலும் உங்கள் பதிவைப் படிக்குமோது பார்க்காத இடங்களே அதிகம் என்று தெரிகிறது.

said...

அருமையான படங்கள். அம்புலப்புழா பாயாசம் வளர ஃபேமஸ் ஆணு....அப்போ கிட்டியில்லே. அம்பலப்புழை என்ற தலைப்பு பார்த்ததும் சரி நிச்சயமாகப் பாயஸம் பர்றி எழுதியிருப்பீர்கள் என்று...நினைத்தோம் அதே! கண்டசாரி சர்க்கரை என்பது பழுப்பு நிற நாட்டுச் சர்க்கரை. தமிழ் நாட்டில் மாவிளக்கு ஏற்றுவதற்கு கூட சிலர் உபயோகிப்பார்களே! அந்தச்சர்க்கரை தான்...

said...

பாயசம் குடிப்பதற்காகவே இங்கே போக வேண்டும்.....

படங்களும் தகவல்களும் நன்று.

said...

அம்பலப்புழா பால்பாயாசம்னு ஒரு மலையாள சினிமா பாட்டு கேட்ட நினைவு இருக்கு. நாயகன் நாயகியைப் பாத்து அம்பலப்புழா பால்பாயாசமேன்னு பாடுறாரு. பதிவோட தலைப்பைப் பாத்ததும் அதான் தோணுச்சு.

படிச்சுப் பாத்தா அந்தக் கண்ணன் ஒரு பால்பாயாசத் திருவிளையாடலயே உங்கள வெச்சி நடத்தியிருக்கான். வாழ்க. வாழ்க.

கோயிலும் கோயில் சார்ந்த குளமும் மிக மிக அழகு.

said...

இந்தமாதிரி இடங்களில் பெருமாள் பிரசாதம் கிடைப்பதே நமக்கு சிலிர்க்கும் அனுபவம். எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

said...

இந்தமாதிரி இடங்களில் பெருமாள் பிரசாதம் கிடைப்பதே நமக்கு சிலிர்க்கும் அனுபவம். எல்லோருக்கும் கிடைப்பதில்லை. பதிவர்களை மட்டுமல்லாது, வாசகர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள் டீச்சர்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கூடவே பிறந்தது என்பதைவிட, அதிர்ஷ்டத்தைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்பது சரியா இருக்கும்:-)))

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நம்ம பதிவுகள் ஆர்ம்சேர் ட்ராவலர்ஸ் வகை:-)

கூட வருவது மகிழ்ச்சி.

said...

வாங்க கைலாஷி.


பலமுறை கயிலை சென்று வந்தவருக்குப் பால்பாயஸம் தராமல் இருப்பானோ அந்தக் கள்ளன்?

said...

வாங்க செந்தில் குமார்.

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க எல்லே இளங்கிளியே!

உங்களை இங்கே பார்த்ததில் வியப்பு & மகிழ்ச்சி:-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

வேறெங்கும் போகாமல் ஜஸ்ட் ரிலாக்ஸா ரெண்டொருநாள் இருக்கலாமுன்னா.... படகுப்பயணம் நல்லா இருக்கும். எனக்குத்தான் காலில் சுடுகஞ்சி. நிக்க நேரமில்லை:-)

said...

வாங்க துளசிதரன்.

ஆஹா.... இது சர்க்கரையா! பஞ்சஸார நினைப்பில்தான் கல்கண்டோன்னு ஒரு தோணல்.

தகவலுக்கு நன்றி.

கொஞ்சூண்டு சேர்ப்பதால்.... நிறம் காமிச்சுக் கொடுக்கலை போல:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வடக்கு இனிப்புகளை எல்லாம் ஒரு கை பார்த்துட்டு தென்னாட்டுக்கு வந்தால் ஆச்சு:-)

said...

வாங்க ஜிரா.

சுத்தம் = அழகு. இது ஏன் நம்மாட்களுக்குத் தெரியலை என்பது விசனம்:(

கண்ணனுக்கு எல்லாமே தீராத விளையாட்டுதான்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பதிவர்களே வாசகர்களும் என்பதால் பதிவர் குடும்பம் என்று சொல்லிட்டேன். இனி வலை வாசகர்களையும் சேர்த்துட்டேன். நோ ஒர்ரீஸ்:-)

கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது. எல்லாம் அவன் செயல்!