Friday, June 27, 2014

அட ராமா.... ஆறு மாசமா !!!!!


செக்கவுட் டைம்  பகல்  ஒரு மணி.   நேத்து ராத்திரியில் இருந்தே தைப்பூசம் விழா ஆரம்பிச்சு  நடந்துக்கிட்டே இருக்கு.  காலையில்  வேடிக்கை பார்த்தபடியே சிங்கைச் சீனுவை தரிசனம் செஞ்சுட்டு  திருவிழா கொண்டாட்டத்தையெல்லாம் அனுபவிச்சுக்கிட்டே  கை வலிக்க வலிக்க க்ளிக்கிக்கிட்டே இருந்தேன்.   மெதுநடையில் கிளம்பி  ஊர்வலத்தோடு வந்து  வீரமாகாளியம்மன் கோவிலுக்குப்போய்  டாடா பைபை சொல்லிட்டு வரலாமுன்னா.....  அம்மன் நேத்து முதலே தூக்கத்தை விட்டுத் தொலைச்சு  ஆசிகள் வழங்கும் மும்முரத்தில்.

கடந்த நாலுநாளா செரங்கூன் சாலை உணவகங்கள் எல்லாம்  நஷ்டத்துலே இருக்குன்னு நினைக்கிறேன்.  எல்லாக் கோவில்களிலும் சாப்பாடே சாப்பாடு. கூப்புட்டுக் கூப்புட்டு  விருந்து வைக்கிறாங்க.  பகல் 12 ஆகுதே. பேசாம இங்கேயே சாப்பிடலாமுன்னு  கோபால் சொன்னார். அதானே...  கை நனைக்காமப்போய்.... சந்தனக்காப்பில் ஜொலிக்கும் ஆத்தாவுக்குக் கோபம் வந்துருச்சுன்னா?

அதுவும் வடை பாயஸத்தோடு!  சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் கறி, பழப்பச்சடி, சக்கரைப்பொங்கல்னு அமர்க்களம்!
நல்ல கூட்டம் கோவிலில்.  எல்லோரும் கைக்கும் வாய்க்குமா இருந்தோம்:-)



எல்லா சந்நிதிகளிலும் அலங்காரமோ அலங்காரம்!   வயிறும் மனசும் கண்ணும் நிறைஞ்சே போச்சு.  கோவில்களைப் பொறுத்தமட்டில்  அழகும் சுத்தமும்  ஒன்றையொன்று  போட்டி போடுதே!  பேசாம இந்த கோவில்களுக்காகவே சிங்கையில் ஒரு ஆறுமாசம் தங்கிடலாமான்னு  ஆசைதான்.  இப்படிச் சொல்றேனே தவிர,  இது உண்மையில் நடந்தால்  இல்லாத குறைகளையெல்லாம்  கூட மனசும் கண்ணும் கண்டுபிடிக்கும்,இல்லே?

கோவிலுக்குப் பின்பக்கம்தான் நாம்தங்கி இருக்கும் ஹொட்டேல் என்பதால் அவசரப்படாமல்  நிம்மதியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். .




ஒரு மணி ஆனதும்  போய் செக்கவுட் செஞ்சு  பொட்டிகளை எல்லாம் கீழே ஒப்படைச்சுட்டு  காலார இன்னும்  கொஞ்சம் நடை. குடை கேண்டீன் வரை போனோம். எங்கே பார்த்தாலும்  மக்கள்ஸ் மக்கள்ஸ்.   வெய்யில்வேற சக்கைப்போடு போடுது. மூணு மணி ஆச்சு, 'போதும் சுத்துனது. ஷாப்பிங் ஒன்னும் இல்லைன்னா  ஏர்ப்போர்ட் போய் ரெஸ்ட் எடுக்கலாமு'ன்னார் இவர். (அதிக நேரம் சுத்துனாலும்...ஆபத்து எப்பவோன்னு  மனசுக்குள்ளே திக் திக் ன்னு இருந்துருக்கும்,பாவம்!)  சரின்னு கட்டக்கடைசியா  ஆளுக்கொரு இளநீரை  'தாகசாந்தி' யா  குடிச்சுட்டு ஹொட்டேலுக்குத் திரும்பி  டாக்ஸிக்குச் சொல்லி கிளம்பிட்டோம்.  (ஏர்ப்போர்ட்டில் இப்ப  'அந்தக் கடை '  வந்துருக்கும் சமாச்சாரத்தை இவர் எப்படி மறந்தார்? )  

எங்களுக்கு நியூஸி ஃப்ளைட்  மாலை ஏழே முக்காலுக்குத்தான்.  செக்கின் செஞ்சு  முடிக்கும்வரை லேசா ஒரு  ...... நியூஸி  போகும் ஃப்ளைட்டில் பொதுவா  ஒன்னுரெண்டு கிலோ  அதிகம் ஆனாலும்  அவ்வளவாக் கண்டுக்கமாட்டாங்க என்றாலும்......   ரீடிங் மெட்டீயலா நாலு புத்தகங்களைக் கையில் பிடிச்சுருந்தேன்:-)

கனேடியன் லாக்  கேபின்  ஒன்னு  பனிமூடிய கூரையுடன்  இருந்துச்சு.  வெரி நீட் அண்ட் டைடி!  பக்கத்துலேயே வரப்போகும் சீனப் புது வருசத்துக்கான ராசி பலன்கள். வரப்போவது  குதிரை என்றபடியால் எங்கெங்கும் குதிரைகளே! அதுவும் மரக்குதிரையாமே!



இமிகிரேஷன்  முடிச்சு  உள்ளெ போனால்   இடாலி தேசம்.  Leaning Tower of pisa. பச்சைச் செடிகளால்  பார்க்கவே படு ஜோர்.   அதிர்ஷ்டக் காசுகளும்  பூச்செடிகளும் குதிரைகளுமா  வச்சு அலங்கரிச்சது மட்டுமில்லாமல்  அலங்காரம் பிடிச்சுருக்கான்னு நம்மிடம் கேட்கவும் செய்யறாங்க.  அதெல்லாம் வெரி குட்ன்னு சொன்னேன்:-)))



சும்மாச் சொல்லக்கூடாது....  சாங்கியின் அலங்காரங்கள்   அருமையே! அதுவும்  ஒரு மூணு நாலு வாரங்களில்  சட் சட்ன்னு சீஸனுக்குத் தகுந்தாப்போல் மாறி விடுவதால் ஒவ்வொரு  முறை அங்கு போகும்போதும்  இந்த முறை புதுசா என்ன இருக்குமுன்ற எதிர்பார்ப்பு  இருக்கத்தான் செய்யுது. அவுங்களும் நம்மை ஏமாற்றுவதே இல்லை!   நல்லாத்தான் உக்கார்ந்து யோசிக்கிறாங்க.

நிறைய நேரம் இருக்கேன்னு ஸ்கை ட்ரெய்ன் பிடிச்சு  வெவ்வேற டெர்மினல்களுக்குப் போய் வந்தேன்.   MAC  கடை இருக்கான்னு தேடறேனாம்! பாவம் கோபால்.   புளியமரத்துலே ஏறி வருசம் நாப்பதாகப் போகுதே:-)

சின்ன மனிதர்களுக்கான பொழுதுபோக்கா  படம் வரைஞ்சுக்கும்  ஏற்பாடு  எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. பயணங்களில் ரொம்ப போரடிச்சுக்கிடப்பது பசங்கதான்,இல்லையா?

கடையை 'வேடிக்கை மட்டும்' பார்த்துட்டு  கொஞ்சநேரம் வலை மேய்ஞ்சுட்டு  நம்ம விமானம் புறப்படும் கேட்டுக்குப் போயிட்டோம்.


 விமானத்துக்குள்ளே போய் உக்கார்ந்ததும்  வழக்கம்போல் முதல் வேலையா என்ன சினிமா இருக்குன்னு பார்த்தார் இவர். எக்கச்சக்கமா இருக்குதான்.  உலக சினிமாக்கள்.  தமிழ்ப்படங்கள் புதுசுன்னு பார்த்தால்.....   ப்ச்.  அதிலும் ஒன்லைன் ஸ்டோரி போட்டு வச்சிருக்காங்க பாருங்க இப்படி!  போதுண்டா சாமி.  எனக்கு 'ஃப்ளைட் பாத்' மட்டும்போதும்.


பத்துமணி நேரத்தைக் கடத்திட்டு  வெற்றிகரமா  எங்கூரில் வந்திறங்கினோம்.  விஷ் லிஸ்ட்டில்  காசி அயோத்யாவை  டிக் செஞ்சுட்டு  அடுத்து என்னன்னு   பார்க்கணும்:-)

PIN குறிப்பு:  சரியாச் சொன்னால் க்றிஸ்மஸ் தொடங்கி  இன்றுவரை  24 நாட்கள்தான்  இந்தப் பயணம் என்றாலும்  நடந்தவைகளை எழுதி முடிக்கும்போது   ஆறு மாசங்களும்  அறுவது  பதிவுகளாகவும்  ஆகிப்போச்சு.  பேசாம ஆறும் அறுபதுமுன்னு தலைப்பு வச்சுருக்கலாம்!  கூடவே தொடர்ந்து வந்த நட்புகளுக்கு  என் இனிய நன்றிகளை மனமாரத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  


பயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!




18 comments:

said...

கோவில்களைப் பொறுத்தமட்டில் அழகும் சுத்தமும் ஒன்றையொன்று போட்டி போடுதே! பேசாம இந்த கோவில்களுக்காகவே சிங்கையில் ஒரு ஆறுமாசம் தங்கிடலாமான்னு ஆசைதான். இப்படிச் சொல்றேனே தவிர, இது உண்மையில் நடந்தால் இல்லாத குறைகளையெல்லாம் கூட மனசும் கண்ணும் கண்டுபிடிக்கும்,இல்லே? //

உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள் துளசி. இந்த மனம் இருக்கே!

ஆறுமாசமா அருமையான பயணதொடர் ஒன்றையும் விடாமல் கை வலிக்க வலிக்க எடுத்த படங்களுடன் கொடுப்பது பெரிய விஷயம்.
பயணம் மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் அளிப்பது உண்மைதான்.

said...

படங்களும் பதிவும் அழகு டீச்சர்.

இந்த பயணத்தில் தொடர்ந்து உங்களோடு வர இயலவில்லை என்பதில் வருத்தமே....:) முடியும் போது வாசிக்கிறேன்.

said...

ஆறும் அறுபதும் அர்ப்பணிப்புடன் செய்தவை. இங்கும் ஃபீட்லியிலுமாகத் தொடர்ந்ததில் படங்களைக் குறிப்பாகப் பாராட்டியாக வேண்டும்.

said...

உங்க புண்ணியத்துல சாமி தரிசனம் கிடைச்சது... சாம்பார் சாதத்தைப் பார்த்ததும் வாயில் எச்சி ஊறுது....

said...

ஆறுமாச உழைப்பு இந்தப் பதிவுகளுக்குப் போயிருக்கு. உழைப்புக்கு அஞ்சும் ஆளில்லை. நீங்கள். அருமையான படங்கள் அற்புதமான கோவில் தரிசனங்கள் எல்லாம் எங்களுக்கும் வாய்த்தன. நீங்களும் கோபாலும் இன்னும் நிறைய இடங்களுக்குப் போய் வந்து எழுத வேண்டும்.

said...

வாங்க கோமதி அரசு.

சிரமம் பார்க்காமல் கூடவே வந்ததுக்கும் ரசித்துப் பாராட்டியதற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

வலையில் இருக்கும் சுகம்..... எப்ப வேணுமுன்னாலும் வந்து சேர்ந்துக்கலாம் என்பதுதானே?

நேரம் கிடைக்கும்போது வாசித்தால் ஆச்சு.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உங்கள் சொற்கள் உற்சாகம் தருகின்றன.

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க ஸ்கூல் பையன்.

நல்லா சாப்பிடுங்க. காசா பணமா? சாமி கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுக்குதே!

said...

வாங்க வல்லி.

ஏனோ இந்தமுறை வழக்கத்தைவிடக் கூடுதலா நேரம் எடுத்துக்கிட்டேன்:(

மனமும் உடலும் ஒத்துழைச்சால்தான் நல்லது, இல்லை?

said...

இனிமையானதோர் பயணம். உங்களுடன் கூடவே பயணித்தோம் என்பதில் மகிழ்ச்சி.

பலாச்சுளையில் தேன் போல, பயணக்கட்டுரையில் நீங்கள் பகிர்ந்த படங்கள்...

தொடர்ந்து பயணிப்போம்......

said...

அருமையான பயணம் கூடவே கூட்டிட்டு போய்ட்டு என்னை சென்னைல drop பண்ணிட்டு போனது மாதிரி ஒரு feel . மிகவும் நன்றி துளசி .

said...

அருமையான பயணம் கூடவே கூட்டிட்டு போய்ட்டு என்னை சென்னைல drop பண்ணிட்டு போனது மாதிரி ஒரு feel . மிகவும் நன்றி துளசி .

said...

சிங்கப்பூர் கோயில்கள் எல்லாத்துலயும் பராமரிப்பு அருமை. நம்மூரோட ஒப்பிட்டா எவ்வளவோ தாவலை. அதே போல அங்க படம் பிடிக்கலாங்குறதும் நல்ல திட்டம். நம்மூர்லயும் அதக் கொண்டுவந்தா சாமியோடயே மக்கள் Selfie எடுத்துக்குவாங்க. :)

சாப்பாட்டு அண்டாவைப் பாத்தாலே நாக்கூறுது.

பச்சை மூங்கில்களால் ஆன பிசா கோபுரம் அழகு. இத்தாலியில் எனக்குப் பிடித்த ஊர்களில் பிசாவும் ஒன்று. சிறிய ஊர்தான். ஆனால் அழகு + தூய்மை + பழமை.

said...

ரொம்ப நன்றிங்க; தொடர்ந்து ஒங்களோட வந்துகிட்டே இருந்தே;

said...

மகிழ்ச்சியான பயணம். நன்றி.

said...

அருமையான பயணக்கதை... நுணுக்கமாக அலங்காரங்களையும் உணர்வுகளையும் உங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு சொல்வதை மிகவும் ரசித்தேன்... நன்றி...

said...

அப்பப்ப சிங்கையை மறக்கவிடாம பண்ணிடுரீங்க,நன்றி.