Monday, June 02, 2014

வீணாகிப்போன ஒரு நாள்:(

பம்ரௌலி (Bamrauli ) இந்திய விமானப்படைக்கான விமானதளம். போனாப்போகுதுன்னு அதுலே இக்கினியூண்டு இடம் சிவில் பயணிகளுக்கான விமானம் வந்து போகக் கொடுத்துருக்காங்க. அங்கெதான் இப்போப் போய்க்கிட்டு இருக்கோம். அலஹாபாத் நகரில் இருந்து 12 கிமீ தூரத்தில் இருக்கு.

 நேத்து அயோத்யாவில் இருந்து திரும்புனது முதல் தில்லி விமானநிலையச் செய்திகளை நிமிட்டுக்கு நிமிட் கவனிச்சுக்கிட்டு இருக்கார் நம்ம கோபால். தொலைக் காட்சியிலும் பெரிய செய்தியாத்தான் ஓடிக்கிட்டு இருக்கு. நேத்து மட்டும் தொன்னூறு ஃப்ளைட் கேன்ஸலாகி இருக்கு. இது ஒரு பெரிய தொல்லை. ரொம்ப foggy யாக இருக்கும் கால நிலை.குளிர்காலம் பாருங்க:(

 தில்லி ஏர்ப்போர்டில் தேவுடு காத்தே பலநாட்கள் கடந்து போயிருக்கு நம்ம சண்டிகர் வாசத்தில். இப்போ இப்போ, இன்னும் கொஞ்சநேரத்தில் க்ளியர் ஆகுமுன்னு சொல்லியே ஏழெட்டுமணி நேரம் காக்க வச்சுருவாங்க. அப்பெல்லாம் தில்லி வந்து இறங்கியவுடன், நிலைமையைப் பார்த்ததும் ஃப்ளைட்டை கேன்ஸல் செஞ்சுட்டு, சண்டிகருக்குக் காரில் போயிருவோம். அஞ்சு மணி நேரம்தான் ஆகும். 

இன்னிக்கு நாம் போகவேண்டிய இடம் சிங்காரச் சென்னை என்பதால்.... கண்ணை டிவியில் நட்டு வச்சுருந்தார் கோபால். காலை ஒன்பதரைக்கு தில்லி ஃப்ளைட். ஆனால் அது நேரம் மாத்திட்டாங்கன்னும் மதியம் 1.55க்குதான் ஃப்ளைட்ன்னும் இமெயில் அனுப்பிட்டாங்க ஸ்பைஸ்ஜெட் மக்கள். வெய்யில் வரட்டுமுன்னு இருக்காங்க போல! அதுக்கேத்தமாதிரி சென்னை ஃப்ளைட்டையும் மாலை ஆறுமணிக்குப் போட்டுட்டாங்க.

பரிசோதனை முறையில் ஆரம்பிச்ச இந்த தில்லி -அலஹாபாத் - தில்லி சர்வீஸ் இப்போ இல்லையாம். தூக்கிட்டாங்க:(   தொகுதிக்குப்போய் மக்களைப் பார்க்க ஃப்ளைட் இல்லைன்னு இனி சாக்கு சொல்லிக்கலாம். அமேதிAmethi, ரே பரேலி Rae Bareli    எல்லாம் இங்கே பக்கத்தில்தான் இருக்கு, கேட்டோ! நேத்து அயோத்யா போகும் வழியில் பார்த்தோம் அதற்கான சாலைகள் பிரிவதை!) 

 பொழுது விடிஞ்சு பார்த்தால் சூரியன் இருக்கான்:-) தில்லி நியூஸில், விமானங்கள் பறக்கின்றன. அப்பாடா........... இன்னிக்குப் போய்ச் சேர்ந்துறலாம். சாலையின் ஓரமாவே வண்டியை நிறுத்திட்டு எதிர்ப்பக்கம் கை காமிச்சு ஏர்ப்போர்ட் வந்துருச்சுன்னார் ட்ரைவர்! எதிரே இருக்கும் காம்பவுண்ட் சுவரில் இருக்கும் பெரியகேட் பக்கம்,ரெண்டு ஆர்மிக்காரர் துப்பாக்கியோடு நாற்காலி போட்டு உக்கார்ந்துருக்க, ஒரு ஏழெட்டு ட்ராலி இன்னொரு பக்கம். விமானப்படைக்கான தாவளம் என்பதால் செக்யூரிட்டி கூடுதல். வாசலிலேயே நோ ஃபோட்டோன்னு படிச்சுப்படிச்சுச் சொல்றார் நம்ம கோபால். மனசில்லா மனசோடு கேமராவைக் கைப்பைக்குள் வச்சேன்:(

 கேட்டு வாசலிலேயே நம்ம டிக்கெட்டைப் பரிசோதிச்சிட்டு(?) பயணிகளை மட்டுமே உள்ளே அனுப்பறாங்க. டாட்டா, பைபை சொல்றவங்க எல்லாம் தெருவோடு நின்னுறணும். ஒரு முக்கால் கிலோமீட்டர் நடந்து உள்ளே போறோம். சின்னதா ஒரு வீட்டு வாசல் போல முகப்புக் கட்டிடம். பயணிகளை விட செக்யூரிட்டி ஸ்டாஃப் அதிகம். நம்மிடம் ஒரு பெட்டியும் கேபின் பேகும்தான். பெட்டியைச் செக்கின் செஞ்சாச்சு. காத்திருக்கும் சமயம்தான் கவனிக்கிறேன், நம்ம ஒருலிட்டர் கேன் கங்கைத்தண்ணீரைக் காணோமேன்னு! அந்தக் கேன் ஒருவேளை செக்கின் பெட்டிக்குள்ளே போயிருச்சோன்னு இவரைக் கேட்டால், இதோன்னு ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலைக் காமிக்கிறார். அவரிடம் ரெண்டு ஒரு லிட்டர் பாட்டில்கள் இருக்கேன்னு பார்த்தால், ஒன்னு நமக்குக் குடிக்கும் தண்ணீராம். இன்னொண்ணு கங்கை! அந்தக் கேன் மூடி, சரியில்லைன்னு சாதாரண பாட்டிலிலே தண்ணீரை மாத்திட்டாராம். எப்போ? அறையிலேயே! நான் அப்போ எங்கிருந்தேன்? ஒரு வார்த்தை சொல்லலையே! போகட்டும்....... இனி என்ன செய்வது?

காசியில் ரெண்டு கங்கைச்சொம்பு வாங்குனமே அதாவது இருக்கான்னால்.... அதை செக்கின் பெட்டியில் போட்டு வச்சுருக்காராம். அது வாங்கும்போதே ஒரு சின்ன நெருடல். கங்கையைச் சொம்பில் அடைச்சு ஸீல் செஞ்சு விப்பாங்கன்னு பார்த்தால் சொம்பின் மூடிக்கு ஜஸ்ட் ஒரு ஸ்டிக்கி டேப் போட்டு வச்சுருக்காங்க.சொம்புலே தண்ணி இருக்கான்னு கொஞ்சம் குலுக்கிப் பார்த்தேன். தண்ணீரின் கலகல சப்தம் வராம தட் தட்னு வருதேன்னு கடைக்காரரைக் கேட்டால் ஒரு சொம்பைத் திறந்து காமிச்சார். உள்ளே ஒரு பாலித்லீன் பையிலே தண்ணீரை ஊத்தி இறுக்கமாக்கயிறு கட்டி வச்சுருக்கு! வீட்டுக்குக் கொண்டு போய்தண்ணீரைச் சொம்பில் ஊத்தி ஈயத்தால் ஸீல் பண்ணிக்கணுமாம். அதுக்கொரு வேலையா பத்த வைக்கும் நபரைத் தேடி ஓடணுமா? நல்லா இருக்கு காலமுன்னேற்றம்!!!

 வேற வழி இல்லாமல் அதில்தான் மச்சினர்கள் வீட்டுக்கு ரெண்டு வாங்கினோம். ஏற்கெனவே ஒரு லிட்டர் கேன் கங்கை நீர் நாமே கங்கையில் இருந்து டைரக்ட்டா எடுத்ததும் இருக்கே. அதுக்குத்தான் மேற்படி கதி:(

நாம் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருப்பமா? இவர் போய் தண்ணி பாட்டில் ப்ளேனுக்குள்ளே கொண்டு போகலாமான்னு 'அதிகாரி'யைக் கேட்டார். நோ நோ நோ நோ...... கூடவே கூடாதுன்னு பதில். அப்ப கங்கை பாட்டிலை எப்படிக் கொண்டு போவது?

 திரும்ப செக்கின் கவுண்ட்டருக்குப்போய் பொட்டியை மீண்டும் எடுத்து அதுக்குள்ளே போடலாமுன்னு போனால், கவுண்ட்டர் இளைஞர், தனியா பாட்டிலை அப்படியே கொடுங்க. உள்ளே அனுப்பிட்டால் போச்சுன்னார்.

முன் ஜாக்கிரதை முத்தண்ணியா நான் முந்திக்கிட்டேன். இன்னொரு குடிதண்ணீர் பாட்டிலில் இருக்கும் தண்ணீரை வெளியில் நட்டுருந்த செடிகளுக்கு ஊத்திட்டு, அதில் பாதித் தண்ணீரை மாற்றினோம். ரெண்டு பாட்டிலா உள்ளெ போகட்டும். ஒன்னு உடைஞ்சு போனாலும் ஒன்னாவது மிஞ்சுமே! ரெண்டு பாட்டில்களையும் பை இருந்தால் அதுலே போட்டுக்கொடுங்களேன்னு கவுண்ட்டர் இளைஞர் சொன்னாரேன்னு, லேப்டாப் வச்சுருந்த சின்னப் பையில் பாட்டில்களைப் போட்டுட்டு, மடிக்கணினியை மடியிலே வச்சுக்கிட்டோம்:-)

 Fragile ஸ்டிக்கர்ஸ் ஒட்டி பையோடு பாட்டில் உள்ளே போச்சு. பத்திரமா உங்களுக்கு மீண்டும் கிடைச்சுடும். கவலைப்படாதீங்கன்னும் சொன்னார். பெருமாளே இனிஉன் பொறுப்பு!

 செக்யூரிட்டி செக் அப் கடந்து அடுத்த அறைக்குப்போனோம். நல்ல கூட்டம். இவ்ளோ பேரா இன்னிக்கு நம்கூட தில்லி வர்றாங்க!! எல்லோர் கையிலும் சொல்லி வச்சதுபோல் தண்ணீர் பாட்டில். தண்ணீரோடு வர்றவங்களை அப்படியே உள்ளெ விட்டுக்கிட்டு இருக்காங்க. நாம்தான் முந்திரிக்கொட்டைகள்:(
(மேலே: சுட்டது) 

விமானம் ஏறப்போனோம். பஸ் கிடையாது. ஒரு பத்து மீட்டர் நடக்கணும்.அம்புட்டுதான். நமக்கு நாலாவது வரிசையில் இடம். முதல் மூணு வரிசைகளிலும் நேத்து பார்த்த பார்லிமெண்ட் அங்கங்கள்!

 ஒன்னரை மணி நேரப் பயணம் முழுசும், ஒருவர் மாத்தி ஒருவர் எழுந்து முன்னால் வந்து நின்னுக்கிட்டு லெக்ச்சர் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. எல்லாம் அந்த மூணு வரிசைக்குத்தான் என்றாலும் நாலாம் வரிசையின் காதுகளிலும் வந்து விழுதே:( வரப்போகும் தேர்தல் பேச்சுத்தான் எல்லாமே! தேர்தல் மீட்டிங் எதுவும் இந்தியாவுலே நாம் கேக்கலையே என்ற மனக்குறை நிவர்த்தியாச்சு.

தில்லி வந்து இறங்கும்போது பசி மயக்கம்.  ஆனாலும் முதல் வேலையா கைப்பையில் இருந்து கேமெராவை எடுத்து  பாத்திரத்தை ஒரு க்ளிக்:-)))அடுத்த டெர்மினல் போகணும் சென்னை விமானம் பிடிக்க. கீழ்தளத்துலேயே ஒரு ஃபுட்ஸ்ட்ரீட். அதுலே 'வாங்கோ' இருக்கு. மசால் தோசை & ஃபில்ட்டர் காஃபி காம்போ! முடிச்சுட்டு, நம்ம வெங்கட் நாகராஜுடன் செல்லில் கொஞ்சம் கதையடிப்பு. அப்படியே நம்ம கயல்விழி முத்துலட்சுமி நம்பரையும் வாங்கிக்கிட்டேன். அவுங்களோடும் கதைச்சு முடிச்சுட்டு, உள்ளே போயிட்டோம்.




 பாருங்க, ஆந்திரா டூரிஸம் ஸ்டால் வச்சு விவரம் சொல்லுது. தமிழ்நாடு? ஙே...:(

இனி மாலை 6 வரை தேவுடு காக்கணும். கயித்து கட்டிலில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தேன்:-))))

ஆறே முக்காலுக்குக் கிளம்பி சென்னை வந்து சேரும்போது இரவு பத்தேகால் ! ஒரு முழுநாள் தொலைஞ்சு போயிருக்கு. என்ன நாள் பாருங்கன்னால்.... அதுவரை எதுவும் கேன்ஸலாகாம வந்து சேர்ந்தமே அதைப்பாருன்றார்
கோபால்:-)









 சென்னை விமான நிலையம் பளிச்ன்னு இருக்கு! (புதுசுல்லே!) கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு வச்ச அலங்காரங்கள் எல்லாம் இன்னும் அப்படியே ஜொலிக்குது!


 வெளியே வந்து ஃபாஸ்ட் ஃபுட் சங்கீதாவில் சாப்பிட்டு முடிச்சு நம்ம கெஸ்ட் ஹவுஸ் போய்ச் சேர்ந்தோம். மணி பதினொன்னரை!

சொல்ல மறந்துட்டேனே........... கங்கைத் தண்ணீர் பாட்டில்கள் பத்திரமா வந்துருச்சு! க்ரேட்!

 தொடரும்..........:-)

9 comments:

said...

நீண்டஇடைவெளிக்குப்பின் கங்கைஜலம்தான் என்னைஇங்கு வரவளைத்திருக்கிறது. மகிழ்கின்றேன்.

வீடுபட்டவற்றை தொடர்வேன்.

said...

கங்கை ஜலம் வந்தது க்ரேட்.

said...

சென்னை வந்தாச்சா. நான் இருந்திருந்தால் எனக்கும் கங்கை கிடைத்திருப்பாள். போற வழிக்குப் புண்ணியம். நடு நடுவில இதுபோல ரெஸ்ட் கிடைக்கட்டும் துளசிமா. அப்பதானெ கூடுதல் படங்கள் கிடைக்கும். அந்தப் பாத்திரம் வெகு அழகும். குதிரையும் தான். சென்னை ஏஏற்போர்ட் இவ்வளவு அழகா இருக்கே.

said...

வாங்க மாதேவி.

விட்டதைப் பிடிச்சுட்டீங்க:-)

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

உண்மைதான். உடையாமல் ஒழுங்கா வந்துருச்சு. ஸ்பைஸ்ஜெட் சேவை நல்லாவே இருக்கு!

said...

வாங்க வல்லி.

நாமே கங்கைக்கு ஒன்றாகப் போனாலாச்சு.

பாத்திரம் இருப்பது தில்லி. குதிரை நம்ம சென்னை. இதேபோல் ஒரு குதிரை, க்ராண்ட் சோழாவிலும் இருக்குப்பா. கொஞ்சம் சின்ன சைஸ்.

சென்னை ஏர்ப்போர்ட் உண்மையிலேயே அருமையா இருக்கு இப்போ! மனம் நிறைந்து பாராட்டினேன்!

said...

படங்கள் அருமை.

said...

அப்பாடி.. கங்கைநீர் நல்லபடி வந்துருச்சு. இந்தியாவுக்குன்னு ரூல்ஸ் இருக்கு. அதுக்குத் தக்கதான் செஞ்சுக்கனும்.

இதுதான் டில்லி புது ஏர்ப்போர்ட்டா.. நல்லாருக்கு. பழைய ஏர்ப்போர்ட்டுக்குப் போயிருக்கேன். புதுசு போனதில்ல.

ஆந்திரபிரதேசம் இப்ப ரெண்டாச்சே. அதுனால இனிமே ரெண்டு கவுண்ட்டர்கள் இருந்தாலும் இருக்கலாம். சீமாந்திராவுக்கு ஒன்னு. தெலுங்கானாவுக்கு ஒன்னுன்னு. ஆனாலும் சீமாந்திராக்காரங்க சுறுசுறுப்பு தெலுங்கானாக்காரங்களுக்கு வருமான்னு சொல்ல முடியாது. பாப்போம்.

said...

உங்களுடன் அன்று பேசியதில் மகிழ்ச்சி. அலுவலக நேரமென்பதால் நேரில் சந்திக்க இயலவில்லை!

ஒரு முறை அலஹாபாத் பயணத்தின் போது இருபது லிட்டர் கேன்களில் மூன்றோ நான்கோ ரயிலில் எடுத்து வந்தோம் - அத்தனை டிமாண்ட்! :)