Wednesday, June 25, 2014

சென்னைக்குள் ஒரு சிற்றூர்!

தெருக்கோலத்தைப் பார்த்து (ஐ மீன்  தெருவில் இருந்த கோலங்களைப் பார்த்து)  இதென்னடா....  சிங்காரச் சென்னைக்குள்ளேயே சிற்றூர் ஒன்னு இருக்கேன்னு வியப்புதான்.  அடுக்குமாடிக் கட்டிடங்களும்,  தெருவை அடைச்சு மால்களும்  பெரிய பெரிய நகை மாளிகைகளும்,  கடல்போல் விரிந்த  துணிக் கடைகளும்  பேட்டைக்குப் பேட்டை வந்து நிறைஞ்சு கொடிகட்டிப் பறக்கும் காலமாக இருக்கே இப்போதெல்லாம்! இதுலே வேளச்சேரி என்ன விதி விலக்கா?

சரியா எட்டரைமணிக்கு வந்து சேர்ந்துட்டோம், கடைசி மச்சினர் வீட்டுக்கு.  மெயின் ரோடுலே இருந்து  இடப்பக்கம்  திரும்பியவுடன்   வீட்டு வாசல்களை அடைச்சுப் போட்டுருக்கும் வண்ணக்கோலங்கள், இன்று  'ஹேப்பி பொங்கல்'  என்று கட்டியம் கூறி வரவேற்றன.  அங்கங்கே  பதின்ம வயது இளம் பெண்கள்  கோலம் போடுவதோடு,  வாசல்   சுவரில்  குடும்ப சாமிகளை வரைஞ்சு வச்சுக்கிட்டு இருந்தாங்க.உண்மையில் இது  ஒரு பாரம்பரிய பழக்கமே!  வாசல்நிலை மஞ்சள் பூச்சு டிசைனை வச்சே அவுங்க வீட்டு குலதெய்வம் எதுன்னு கண்டுபிடிச்சுக்கலாம்.  சிவனா, விஷ்ணுவா, சக்தியான்னு..........  இதைப்பற்றி முன்பு ஒரு முறை விரிவா எழுதுன நினைவு:-) 


பெண்களூரில் இருந்து  மச்சினர் குடும்பம் நேத்தே வந்து இறங்கிட்டாங்க.   இங்கேயே இன்னொரு பகுதியில் இருக்கும் நாத்தனார் குடும்பமும் வந்துட்டாங்க. இன்னிக்குக் குடும்பப் பொங்கல்.

கோபால் அதிகமா, தமிழ்சினிமா பார்க்கிறார்  என்பது இப்போப் புரிஞ்சுருக்குமே!  கடந்த  ரெண்டு வருசங்களுக்கு முன் பெற்றோர்களை  இழந்தபிறகு வீட்டுக்கு மூத்தவரா  இருப்பது இவர்தான்.  அதான்....  பண்டிகை சமயத்தில் எல்லோரும் ஒன்னாக் கூடிக் கொண்டாடலாமுன்னு  செஞ்ச ஏற்பாடு இது.  நான்கு பேரையும்  வரிசையா உக்காரவச்சு நான் க்ளிக்க, பாசமலர்களம்மா.......ன்னு  நாங்க மூணு  சகோதரிகளும்(!!)  கேலி செஞ்சுக்கிட்டு இருந்தோம்:-)

குடும்பப்பாட்டு ஒன்னு இல்லையேன்னு எனக்கு ஏகவருத்தம்:-)  ஆக்ச்சுவலா.....  பதக்கமா  இல்லை பாட்டா என்றுதான் விவாதம். தங்கம் விக்கற விலையில்........  ஊஹூம்.   அதுவும் இப்போதைக்குன்னா  பதினாறு பதக்கங்கள் வாங்கவேண்டி இருக்கும். பாட்டுன்னா.....  காசா பணமா? பாட்டே இருக்கட்டுமே!   இன்னும் தேடிக்கிட்டேஇருக்காங்க சோதரிகள்.  அநேகமா அடுத்த பொங்கலுக்குள் அமைஞ்சுரும்:-)

கோலங்களைப் பார்த்த  மகிழ்ச்சியில்  வாசலில் பொங்கப்பானை வைக்கப்போறாங்கன்னு  நினைச்சால் குக்கரில் பொங்கல் தயாராகிக்கிட்டு இருக்கு:(   சரி அதையும் ஏன் விட்டு வைக்கணுமுன்னு  வரிசையில் போய் கிளறிவிடச் சொல்லி என் கடமையைச் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.  க்ளிக் க்ளிக் க்ளிக் !

வடை ஒரு பக்கம், குழிப்பணியாரம் ஒரு பக்கமுன்னு  அடுப்பில் வெந்துக்கிட்டு இருக்கு. குடும்பத்து இளைஞிகளின்  கை வரிசை  அபாரம். இதில் கொஞ்சம் மூத்தவள் அடுத்த மாசம் ஜெர்மனிக்கு  மேல் படிப்புக்காகப்  போறாள்.  சின்னவள்  பட்டமேற்படிப்பு இங்கே உள்ளூரில் செய்யப் போறாளாம்.  ப்ளஸ் 2 ஒன்னு   அடுத்த வருசக் கனவில்!   மற்றபடி  சின்னதா ஒரு மூணாங்ளாஸ். கட்டக்கடைசியா  படிக்காதவள்.  பொறந்தே ஏழு மாசம்தானே ஆச்சு:-))

பிரசாதங்கள் தயார் ஆனதும் வீட்டுலே சாமி படங்களுக்கு முன் வச்சு பூஜை செய்துட்டு,  காக்காய்க்கு  கொண்டுபோய்  வச்சார் கோபால்.  காம்பவுண்டு சுவர் மேல் வச்சால் காக்காய்க்குத் தெரியும்போல. ஆனால் அதை வரவிடாமல் ஆளாளுக்கு கா...கா.....கூப்புட்டுக்கிட்டே இருந்தால் அதுக்கு  பயமா இருக்காதா?

ம்ம்ம்ம்ம்.....  சொல்லமறந்துட்டேனே........  தமிழ் கலாச்சார உடையில் ஆண்கள் இருக்கணும் என்பதால் கோபாலுக்கான  வேட்டி தயாரா இருந்துச்சு:-)
கூடத்துலே பந்தி போட்டு  சாப்பாடு விளம்பி எல்லோருமா சாப்பிட்டு முடிச்சோம். கைநீட்டம்  ஆரம்பமாச்சு. பெரியவங்களா லக்ஷணமா  ஆசிகள் வழங்கி  எல்லோருக்கும்  அன்பளிப்பும் வழங்கியாச்சு.  அப்புறமும்  ஒவ்வொரு குடும்ப மூத்தோர், இளையோருக்கு  வழங்கும் நிகழ்ச்சி நடந்துக்கிட்டே இருந்துச்சு.  குட்டிப்பாப்பாதான் யாருக்கும் காசே கொடுக்கலை. ஆனால் பயங்கர கலெக்‌ஷன் அவளுக்குத்தான்:-)))

கோபாலுக்கு மனசில் பொங்கி வழியும் மகிழ்ச்சியை இயல்பா ஏத்துக்கிட்டார். கண்களில் ஒர் பெருமிதம்!   நான் இப்படி குடும்பப்பொங்கல் கொண்டாடுனது எப்போன்னுகூட நினைவில் இல்லை:( அதெல்லாம்  பாட்டி இருந்த காலத்தில்தான்!  அப்புறம் யாருக்கு  நேரமும் மனசும் இருந்துச்சு?  கட்டி அரவணைக்க வீட்டுக்கு ஒரு பெரும் தலை இருந்தால்தான் எல்லாமே!  கோபால் சைடில்  இப்போ  பெற்றோர் போனபிறகு  அவர் தன் கடமையை நல்லா செய்யணுமுன்னு நினைக்கிறார்.  அணில் போல் என்னால் ஆன உதவி.......  முட்டுக்கட்டை போடாமல் இருப்பதுதான்:-))))


அக்கம்பக்கத்துக் கோலங்கள் பார்க்க நான் புறப்பட்டதும்  லேடீஸ் க்ரூப் என்னோடு கிளம்பினாங்க. நாங்களும் வர்றோமுன்னு  ஜெண்ட்ஸ் க்ரூப்  சேர்ந்துக்கிட்டாங்க.  இப்பதான் குடும்பப்பாட்டு இல்லையேன்னு மனசு ரொம்பவே கூவுச்சு:-))  ஜாலியாப் பாடிக்கிட்டே போயிருக்கலாம்!!

  வேடிக்கை  பார்க்கும் வேளச்சேரி மியாவ்:-)

வழியில் ஸ்ரீ சங்கடஹர கணபதி ஆலயம் குறுக்கிட்டது.  புள்ளையாரை அசையவிடாம அவரைச் சுத்தி வீடுகளைக் கட்டிப்போட்டுருக்காங்க. ஆனாலும்  தெருவோரமுன்னு  அவருக்கு ஏதாச்சும் ஆபத்து எதிர்காலத்தில் வர சான்ஸ் இருக்கு.  சங்கடத்தைத் தீர்த்துக்கோன்னு  சொல்லி கும்பிடு போட்டுட்டு ஊர்வலத்தில் சேர்ந்துக்கிட்டேன்.   புது ஃப்ளாட்ஸ் நிறைய வந்துக்கிட்டு இருக்கு. பார்க்க நல்லாவும் இருக்கே!

நமக்கு வரவேண்டியவை வர  ஆரம்பிச்சது. பெண்களூரில் இருந்து  ஒரு புள்ளையார்:-) இளைய மைத்துனர் குடும்பம் ஒரு பொடவை. அதுவும் பச்சை:-)  நல்லவேளை ப்ளவுஸ்  தைச்சுக்கும் வேலை மிச்சம்.  என்னிடம் பச்சைக்கு ஏது பஞ்சம்!


இளைய மச்சினர் கட்டிக்கொண்டு இருக்கும் புது வீட்டுக்கு ஒரு விஸிட்  போனோம்.   பாதிவேலை முடிஞ்சுருக்கு ( இந்தப் பதிவு எழுதும் சமயம் எல்லாம் முடிஞ்சு  கிரகப்பிரவேசமும்  ரெண்டுவாரத்துக்குமுன்  நடந்தாச்சு.)
எல்லோரும் நல்லா இருங்கன்னு  ஆசிகள் வழங்கிட்டுக் கிளம்பினோம்.

 நேரா அண்ணன் வீட்டுக்குத்தான்.  ஜஸ்ட் ஒரு வாய் பொங்கலும் வடைகளையும் உள்ளே தள்ளி  காஃபியையும் குடிச்சுக்கிட்டேன்.  அண்ணி வீட்டில் வேலைக்கு உதவியா இருக்கும் 'ஆயாம்மா' தான்  நான் வரலையா வரலையான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம்.  ஸ்கைப்புலே அண்ணன் அண்ணியோடு பேசும்போது   அது நான் என்று தெரிஞ்சால் ஓடி வந்து முகம் காட்டும் ஒரு அன்பு.

டாடா பைபை எல்லாம்  ஆச்சு.  மீசையை  ஒருவாட்டி பார்த்துக்கலாமான்னார்  கோபால். ஹைய்யோ!     திரை விலகி இருக்குமே! சலோ அல்லிக்கேணி! ஒருமாசம் எண்ணெய்க் காப்பு முடிச்சு பளபளன்னு ஜொலிக்கிறான்.   தை மாசப்பிறப்பு கூட்டம் இருந்தாலும்....  'சீக்ர' ன்னு ஒன்னு இருக்கே.  போயிட்டு வரேன்னேன்.  சிரிச்சாப்லெ தோணுச்சு.மெரினா வழியா அறைக்கு வந்தோம்.   கட்டக் கடைசி பேக்கிங் முடிச்சு அறையைக் காலி செஞ்சப்ப மணி சரியா எட்டு.  ஏர்ப்போர்ட்  போகுமுன்  லைட்டா  இரவு  உணவு முடிச்சுக்கலாமுன்னு பாண்டி பஸார்  போனால்....  நிறைய கடைகள் அன்றைக்கு லீவு என்பதால்  கூட்டமே இல்லை.  ரெண்டு நாளைக்கு முன் கண்ணில் பட்ட ருசிரா நினைவுக்கு வர அங்கேயே போனோம். முதல்முறை  கண்ணில் பட்டதுமே கடமையைச் செஞ்சுட்டேன்:-) ஆனால் அப்போ உள்ளே போகவிடாமல் தடுத்தது  முன்னால் ப்ளாட்ஃபாரக் குப்பையே:(
இப்ப மட்டும் எப்படி?  இருட்டில் அழுக்கு கண்ணில் படலை! முன் ஹாலில் யாருமே இல்லை.  ஒரு வேளை விடுமுறையோன்னு பார்த்தால் உள்ளே  நடமாட்டம்.

 தெருவோர முன் ஹால் சும்மாத்தான் போட்டு வச்சுருக்காங்க. நல்லதுதான். குப்பை, நாற்றம் எல்லாம்  உள்ளே  வராது:-)

நம்ம சீனிவாசன்  சட்னு  என்னமோ சாப்பிட்டுட்டு   வண்டிக்குப் போயிட்டார். சாமான்களுக்குக் காவலாம்!

இட்லி வகைகளில் ஆளுக்கு ஒன்னுன்னு ஆர்டர் செஞ்சோம். ஒரே மாவுதான். ஆனால் வெவ்வேற ஷேப் அண்ட் வெவ்வேற வகை சட்னி:-)   ருசி  பரவாயில்லை . எந்த ருசிரா ன்னு  ஆராய்ஞ்சு பார்க்க நமக்கு நேரமில்லை.  நெவர் மைண்ட். நெக்ஸ்ட் டைம்:-)

ட்ராவல்ஸ் வண்டிக்குக் கணக்கு  கொண்டு வந்திருந்த சீனிவாசனுக்கு செட்டில் செஞ்சுட்டு  செக்கின் செய்யப் போனோம்.  சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மக்கள்ஸ் எல்லோரும் பட்டு வேட்டியில் பாரம்பரிய லுக் கொடுத்ததை எல்லாம் தொடரின் ஆரம்பத்தில் எழுதியாச்சு. அப்ப பார்க்கலைன்னா இப்போ இங்கே.


மறுநாள்  மாட்டுப் பொங்கலுக்கு  சிங்கை வந்து சேர்ந்து தைப்பூச விழாவெல்லாம் பார்த்து முடிச்சு  ஜனவரி 17 மாலை  சாங்கி  ஏர்ப்போர்ட் வந்து  நியூஸி  போகும் விமானத்தில்  ஏறினோம்.  பயணம்  வழக்கம்போல்  போர் என்றாலும்  சாங்கியில்  அலங்காரம்  சூப்பரா இருந்துச்சு.  அதைப்பற்றிக் கொஞ்சமாவது சொல்லலைன்னா.... பயணக்கதை எழுதிய பலன் கிடைக்காது.
தொடரும்.........:-)
23 comments:

said...

அலங்காரத்துக்கு சிங்கையில் கேட்கவேவேண்டாம், அந்தந்த பண்டிகைக்கு ஏற்ற மாதிரி தூள் கிளப்பிடுவாங்க.

said...

படங்கள்லாம் சூப்பர். ஆமா, அடுத்த பொங்கலே வரப்போகுதே! இப்பப் போய் இந்த பதிவை போட்டிருக்கீங்களேம்மா! ஏன்!?

said...

சங்கடஹர பிள்ளையாருக்கு ஃப்யூச்சரில் சங்கடம் வராம இருக்கணும்ங்கற பஞ்ச் ரொம்ப பிடிச்சிருந்தது. :)

said...

வேடிக்கைப் பார்க்கிற பூனையை கூட வேடிக்கை பார்த்து போட்டோ எடுத்து எப்போ வீடு போய் சேர்ந்தீங்க ?

said...

Ennakum athe doubt,konjam kulampiten.

said...

முதல் பதிவு திங்கள் வந்திருக்கணுமே. ஏன் வரலைன்னு யோசனை. பரவாயில்லை இந்தப் பதிவு ஈடு செஞ்சு விட்டது. குடும்பப் பொங்கல் சூப்பர். இந்தப் பசம் என்றும் நிலைக்கணும். சந்தோஷம் வளரணும். குட்டிப் பொண்ணு அழகோ அழகு. கோபாலை நினைத்துப் பெருமையா இருக்கு. உங்க பிறந்த வீடுதான் நிறைய இடத்தில இருக்கே.சாரி மாமா, சிங்க அத்திம்பேர்,சுப்பு ஐயா மீனாட்சி மாமி எல்லோரும் உங்கள் பிறந்தவீடுதான்.நல்ல நாளும் வரும் துளசி.

said...

குடும்ப பொங்கல் அருமை.
பூனையார் படம் அருமை.
கோலங்கள் அழகு.

குடும்ப பாட்டு அடுத்த பொங்கலுக்கு கேட்டு மகிழலாம் என நினைக்கிறேன்.

said...

குடும்பச் சந்திப்புங்குறது ரொம்ப இனிமையான நிகழ்வுகள். நாங்க சின்னக் கொழந்தையா இருந்தப்போ எதோ காரணம் வெச்சி ஊர்ல அடிக்கடி சந்திச்சிருக்கோம். இப்பல்லாம் ரொம்பக் கொறஞ்சு போச்சு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மூலையில். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அவசரத்தில்.

தெருநடுவுல இருக்குற கோயில்கள் கொஞ்சம் இடைஞ்சல்தான். எல்லாருக்கும் வசதியா இருந்தா கோயில்களுக்கும் நல்லது. அங்க வர்ரவங்களுக்கும் நல்லது. நீங்க யோசிச்சது ரொம்பச் சரி.

ருசிரால மோர்க்கொழம்பு more kozhambu குடுப்பாங்க போல. ஆனா பாருங்க மோர் மெளகாய் ஒன்னுதானாம். அதான் mor melagai னு எழுதியிருக்காங்க. :)

மீசைக்காரனைப் பாத்து ரொம்ப நாளாச்சு. போகனும்.

said...

குடும்பங்கள் கூடி பொங்கல்விழா அருமை.

said...

சிறந்த பதிவு
நேரில் பார்த்தது போல இருக்கிறது.

said...

வாங்க குமார்.

உண்மைதான். இதுக்காக ரொம்பவே மெனெக்கெட்டு செஞ்சுடறாங்க!

said...

வாங்க ராஜி.

அடுத்த பொங்கலுக்கான அட்வான்ஸ் பதிவுன்னு வச்சுக்கப்டாதா:-))))

பயணம் எழுத ஆரம்பிச்சு வரிசையில் வரும்போது கடைசி நாளாப்போனதால் இப்பத்தான் எழுத முடிஞ்சது.

தொடரின் நடுவில் இடைச்செருகலா இருந்தால் குழம்பிருமே!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இப்பவே அவரைச் சுத்தி இருக்கும் தரை டைல்ஸ் எல்லாம் இளகி வர ஆரம்பிச்சுருக்கு.பாவம் புள்ளையார்:(

said...

வாங்க பகவான் ஜீ.

போறபோக்குலே க்ளிக்கிட்டு வந்ததுதான். கண்ணில் பட்டால் கை சும்மா இருக்கா என்ன? :-)

said...

வாங்க ரம்யா.

அடுத்த பொங்கலுக்கான ட்ரெய்லர் இது :-)))

said...

வாங்க வல்லி.

கொஞ்சம் உடல்நலமில்லை. எல்லாம் குளிர் படுத்தும் பாடு:(

பிறந்தவீடுகள் ஏராளமா இருப்பதும் ஒரு கொடுப்பினைதான் இல்லை!!!

என்னைச் சுற்றி அன்போ அன்பு!

குட்டிப்பொண் அடுத்த மாசம் அமெரிக்கா வருகிறாள்.

said...

வாங்க கோமதி அரசு.

இந்த வருசம் குடும்ப தீபாவளி கொண்டாடும் எண்ணத்தில் இருக்கார் கோபால்!

தங்கள் அன்புக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

பாட்டி வீட்டு காலத்தில் எப்படியும் வாரம் ஒருநாள் குடும்பக்கூடல் இருந்துரும். அந்த நாட்கள் எல்லாம் போயே போயிந்தி.

கல்யாண விசேஷங்களுக்குக் கூட குடும்ப சனம் சேர்ந்தாலே பெரிய கூட்டமாகிரும் அப்பெல்லாம்!

மீசையைப் பார்த்த கையோடு, நம்ம முண்டாசு வீட்டையும் எட்டிப் பார்த்துட்டு வாங்களேன்.

ருசிரா சாப்பாடு ஒன்னு நமக்கு வெயிட்டிங் லிஸ்ட்லே!

said...

வாங்க மாதேவி.

சரியாச் சொன்னால் எங்க கல்யாணத்துக்குப்பின் மொத்த குடும்பமும் சேர்ந்தது இந்த முறைதான்!!!

said...

வாங்க ஜீவலிங்கம்.

தொடர் வருகை உவகை அளிக்கின்றது.
நன்றி.

said...

குடும்பத்துடன் ஒரு விழாவினை கொண்டாடுவதில் இருக்கும் குதூகலம் உங்கள் பதிவினில்....

புகைப்படங்கள் அழகு.

said...

அழகிய குடும்ப சந்திப்பு . படித்த எங்களுக்கும் மனம் நிறைந்தது . கோபால் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்க்கும் எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . அணிலுக்கு special வாழ்த்து. அணில் உதவி இல்லாமல் இந்த சந்தோசம் கிடைப்பது கடினம் .ஆயாம்மா சிரிப்பு அழகு !

said...

கடைசிவரை கலகல எழுத்து, படங்கள் அருமை. தங்கள் கல கல வில்
//கட்டக்கடைசியா படிக்காதவள். பொறந்தே ஏழு மாசம்தானே ஆச்சு//
, இது ரொம்ப பிடிச்சுது..
செல்லம் அம்சமா இருக்கா!