Friday, July 13, 2012

கருப்பில் வெளுப்பா? இல்லை, வெளுப்பில் கருப்பா? (ப்ரிஸ்பேன் பயணம் 14)

மைக்கேல், ஸ்டீவ், ஸாக்ன்னு மூணு பையனுங்க அங்கே சுத்திக்கிட்டு இருந்தானுங்க. எல்லாம் இங்கே போனவருசம் வந்தவனுங்கதான். வயசு ஆறு ஆகப்போகுது. பொறந்ததே ஆஸியில்தான். (Werribie Open Range Zoo Victoria ) பெற்றோர்கள் வேற கண்டத்தில் இருந்து வந்துருப்பாங்க போல.
பையனுங்க ரொம்ப ஒத்துமையா ஒன்னாவே போறானுங்க வாரானுங்க. குதிரைபோலவே நின்னபடியே தான் தூக்கம். ஏறக்கொறைய குதிரை இனம்தானே! .அதுவும் காடுகளில் இருக்கும்போது தூக்கம் வந்தாலும் தனியா நின்னு தூங்கிறமாட்டானுங்க. கூட்டமா இருக்கும்போது மற்றவங்க யாராவது காவலுக்கு இருக்கணும். திடீர்ன்னு ஆபத்து வந்துட்டால் எச்சரிக்கை செய்ய ஒருத்தனாவது விழிப்புடன் இருக்கணுமாம்! நான் முந்தி தப்பா நினைச்சுக்கிட்டது போல வெள்ளை உடம்பில் கருப்புக் கோடுகள் இல்லையாம். கருப்பு உடம்பில்தான் வெள்ளைக்கோடுகளாம்.

 அடராமா...... வெள்ளை நிறம் கூடுதலான்னா இருக்கு! அப்போ பெயிண்ட் பண்ண அதிக நேரம் ஆகுமே! என்னிடம் இருக்கும் கருப்புக்குதிரையை வரிக்குதிரையா மாத்தப்போறேன்:-) 

 ஆசியப்புலிகளைப் பார்த்த கையோடு ஒரு பத்து நிமிச நடையில் ஆஃப்ரிகா போயிட்டோம். 24 ஏக்கர் ஒதுக்கி இருக்காங்க. ஒரு ரெண்டு வருசம் தான் ஆச்சு இந்தக் கண்டம் உருவாகி:-))))     கூடியவரை தாய்நாட்டு சூழலை உருவாக்கி இதுகளை வளர்க்கணும் என்பது ஸ்டீவின் திட்டமா இருந்துருக்கு. ஒரு மினி கலஹாரிக் காடு:-)

அங்கங்கே நீர்நிலைகள், தாமரை, அல்லி மலர்களோடு அமைதியா இருக்கு.

நமக்கு நிதானமா நடந்துபோய் ரசிக்க ஒரு பாதை போட்டு வச்சுருக்காங்க. 700 மீட்டர் நீளமான பாதை. நடந்து களைச்சுப்போனால் கொஞ்சம் உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கிட்டே காஃபி, டீ, ஐஸ்க்ரீம் இப்படி எதாவது சாப்பிட்டுக்க அங்கே ஒரு கூடாரம் அடிச்சு வச்சுருக்காங்க.

காண்டாமிருகங்கள் ஒரு அஞ்சு ப்ளஸ் ஒன்னு. Southern White Rhino காபர்லீ, இன்யெட்டி, ஜபரி, டிஜேன்னு பெயர்கள். முதலிரண்டும் பெண்கள். அதுலேயும் காபர்லீ எங்க சொந்தக்காரி. இப்போ வயசு 18 ஆகுது. தென்னாப்பிரிகாவில் பொறந்து அஞ்சு வயசுக்குழந்தையா இருக்குபோது புலம் பெயரல். நியூஸிலாந்து ஹேமில்ட்டன் ஜூவிற்கு வந்து 11 வருசம் வாழ்ந்து மூணு புள்ளைகளும் பெத்தாள்.

 ரெண்டு வருசத்துக்கு முன்னேதான் ஆஸிக்குப் பயணம். புள்ளைத்தாய்ச்சி வேற. 18 மாசம் புள்ளையை வயித்துலே சுமக்கணும் இவளோட இனம். அங்கே போய் போன வருசம் ஏப்ரல் மாசம் (12/4/2011)நல்லபடியா 55 கிலோ எடையில் ஒரு பொண் குழந்தையைப் பெத்தெடுத்தாள். சவான்னா என்ற பெயர் வச்சு குழந்தை வளர்ந்துக்கிட்டு இருக்கு. இப்போ வயசு 14 மாசம். பால்குடியெல்லாம் மறந்து புல்லுத்திங்க ஆரம்பிச்சாச்சு. அம்மா காபர்லீயும் லேசுப்பட்டவள் இல்லை. வெறும் 1680 கிலோதானாம்.

 பொறக்கும்போதே கொம்புகள் இருப்பதில்லை. ரெண்டு மூணு வயசானதும் முகத்துக்கு நடுவில் ஒன்னுக்குப்பின்னே ஒன்னுன்னு ரெண்டு கொம்புகள் வளருது. இந்தக் கொம்புலே எலும்பு இல்லையாம். நம்ம நகம் மாதிரிதானாம். Keratin. மருத்துவ சக்தி இருக்குன்னு மனுசன் விட்டுவைக்கறதில்லை:(
காட்டில் தன்னிச்சையா வளர்பவை ஆபத்தில் இருந்து தப்பிச்சுப் பூரண ஆயுசு போட்டால் அம்பது வருசம். பிடிச்சுக்கிட்டு வந்து வளர்த்தால் 45 வருசம் இருக்குதாம்.

 ஒட்டச்சிவிங்கிகள் ஒரு பையனும் மூணு பொண்ணுமா நாலுபேர். ஃபாரஸ்ட்ன்னு பெயர் இருக்கும் பையன் ஒரு கிவி! எங்க ஆக்லாந்து ஜூவில் இருந்து அஸ்ட்ராலியா ஜூ போய் வருசம் மூணு ஆகுது. பென்னிக்கு இப்போ வயசு நாலரை. வரும் கிறிஸ்மஸ் தினம் அவளுக்கு அஞ்சாவது பொறந்த நாள். ஆஸியின் பெர்த் ஜூவில் பிறந்தவள். ஒன்னரை வயசுக் குழந்தையா இங்கே வந்தாள்.

 ரோஸியும் ஸாலியும் சதர்ன் ஆஸி மொனார்ட்டோ ஜூவில் இருந்து இங்கே வந்தவங்க. ரோஸி வந்து ரெண்டரை வருசமாகுது. இப்போ அவளுக்கு வயசு நாலு. ஸாலிக்கும் வயசு நாலுதான். ஆனால் அவள்தான் இங்கே புதுவரவு இப்போதைக்கு, போன ஆகஸ்ட்டுலேதான் இங்கே காலடி எடுத்து வச்சுருக்கா. அவள் வந்த கண்டெயினர் இன்னும் ஜூ கார்ப்பார்க்கிலே கிடக்கு:-)))

 பிறக்கும்போதே ஆறடி உசரக் குழந்தைகள்தான் இவுங்கெல்லாம். முழு வளர்த்தி ஆனதும் ஒட்டகச்சிவிங்கி மாதிரி பதினெட்டே அடிதான் உயரம்:-))))) இவுங்களைக் காலையில் சஃபாரி ஷட்டிலில் இங்கே வந்தப்பப் பார்த்ததோட சரி. இப்போ வேறெங்கோ காலார நடந்து போயிருக்கணும். கண்ணுலே படலை.

அதான் 24 ஏக்கரில் மரங்களும் செடிகளினால் ஆன ஹெட்ஜ் சுவர்களுமா கிடக்கே! நடையா நடந்து கால்கள் கெஞ்ச ஆரம்பிச்சுருக்கு எனக்கு. எப்படியும் ஷட்டில் இங்கேதானே வருது. அதுலேயே ஏறிப்போயிடலாமுன்னு இருக்குன்னேன். ஒரு ஐஸ்க்ரீம் வண்டி கண்ணில் பட்டுச்சு. ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் / ஐஸ்ப்ளாக் வாங்கிக்கிட்டோம்.
எதிர்ப்பக்கம் மாந்தோப்பின் கரையில் ஒரு சிறுத்தையார் ரெண்டு நண்பர்களோடு வாக்கிங் வந்துக்கிட்டு இருக்கார். அதுக்குள்ளே ஷட்டில் வந்து நின்னுருச்சு. அந்தப்பக்கம்தானே திரும்பிப்போகப்போகுதுன்னு கெமெராவைத் தயாரா வச்சுக்கன்னு மகளுக்குச் சொன்னேன்:-) ஒரு கூண்டு வண்டியில் கொண்டு வந்து இறக்கிக்கழுத்தில் லீஷ் போட்டு கூட்டியாந்து அதோ அங்கே பார் ஆஃப்ரிகான்னு காமிச்சுக்கிட்டு இருக்காங்க. நல்ல வெய்யில், சூடா இருக்கேன்னு அவனுக்கு ஐஸ்ப்ளாக் ஒன்னு நீட்டிக்கிட்டு இருக்கார் ஒருத்தர். அவனும் ரசிச்சு நக்கித் தின்கிறான். டூனா மீன் குச்சி ஐஸ்!

 வாட்? வாட் டூ யூ மீன்? டூனா மீன்களை நசுக்கிக் குழைச்சு நடுவில் குச்சி வச்சு உறைய வச்சு குச்சி ஐஸ் பண்ணிருவாங்களாம். ஷட்டில் ஓட்டும் ட்ரைவர் கைடு சொல்றார்.

 சிறுத்தைகளும் அஞ்சு பேர் இங்கே இருக்காங்க. வயசில் மூத்தவர்கள் எக்கோ அண்ட் ஃபாக்ஸ்ட்ரொட் அண்ணன்தம்பிகள். எட்டு வயசு ஆணழகன்கள். தென்னாஃப்ரிகாவில் ஜனனம்.
ஷீபான்னு ஒரு ஏழுவயசுக்காரியும் இருக்காள். மொனார்ட்டோ ஜூவில் பிறந்தாளாம். இவுங்க மூணு பேரைத்தவிர ரெண்டு குழந்தைகள் இருக்காங்க.


வந்த புதிதில்  ஸ்டீவின் மகன் பாப் இர்வினுடன்  எட்டுமாச வில்லியம்.


 ஜோஷ்ன்னு ஒருத்தன். இப்போ  ஒருவயசு ஒரு மாசம். இவனோட நெருங்கிய நண்பன் வில்லியம். இவனுக்கு நாளைன்னைக்கு (6/6/2012) ஹேப்பி பர்த்டே! ஒரு வயசு! இவன்தான் இப்போ குச்சி ஐஸ் தின்னுக்கிட்டு உக்கார்ந்துருக்கான். 


இவுங்க ரெண்டு பேரும் ஒரு தாய் வயித்துப்பிள்ளைங்க இல்லை. ஆனால் பிறந்ததுலே இருந்தே ஒன்னாவே வளர்க்கப்பட்டவங்க. நாலு மாசத்துக்கு முன்னால் ரெண்டு பேருமாச் சேர்ந்தே, தென்னாஃப்ரிகாவில் இருந்து வந்துருக்காங்க. பிறந்த நிமிஷம் முதல் தூக்கி வச்சு வளர்த்த ஹேண்டிலர்ஸ் இங்கே இருந்து இதுக்காகவே சவுத் ஆஃப்ரிகா, ஆன் வான் டைக் சீட்டா செண்டருக்குப் போனவங்க. 


சும்மா சொல்லக்கூடாது............ குழந்தைப் பையன் படு அழகு!!!!


 தொடரும்..............:-)

16 comments:

said...

நகம் மாதிரிதானா கொம்பு?சுவாரஸ்யமான தகவல்கள்.

என்ன அழகான சூழல்!

/நாளைன்னைக்கு/

முன்னரே எழுதி ட்ராஃப்ட் செய்த பதிவென எண்ணுகிறேன். தாமதமா ஹேப்பி பர்த் டே சொல்லிக்கறேன். ஐஸ் சாப்பிடும் அழகே அழகு:)!

said...

குச்சி ஐஸை ரொம்ப அனுபவிச்சு ரசிச்சுச் சாப்பிடுது குழந்தை :-)

கடவுளின் படைப்பில் எத்தனை அற்புதங்கள்.. அழகுகள். பிறக்கும்போதே டாட்டூவோட பிறக்குதுகள் இந்த வரிக்குதிரைகள், ஒட்டகச்சிவிங்கிகள், சிறுத்தைகள் இத்யாதி...

said...

அருமை, அருமை, அருமை.

said...

கருப்புல வெள்ளக்கோடா, வெள்ளைல கருப்புக் கோடான்னு எனக்கும் ஐயந்தான்.

ஆனா கருப்புல வெள்ளைக் கோடுன்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்கன்னு தெரியலையே. ஒரே கொழப்பமா இருக்கே.

இதுவுல ஒவ்வொரு வரிக்குதிரைக்கும் ஒவ்வொரு டிசைன்னு நெனைக்கிறேன். கடவுளுக்கு ரொம்பவே வேலை.

வாரியார் சொன்ன மாதிரி, எல்லாப் பழத்துக்கும் கொட்டைய உள்ள வெச்சான். ஒரேயொரு பழத்துக்கு வெளிய வெச்சான். கடவுள் ரூம் போட்டு யோசிக்கிறார்னு நெனைக்கிறேன்.

said...

மிக அழகான இயற்கை காட்சிகள் அதிலும் இது போன்ற அதிசய பிறவிகள் .... அனைத்து படங்களும் அருமை... அதை விட உங்களின் எழுத்து வடிவமும் அற்புதம்....

குச்சி ஐஸ் சாப்பிடும் பையனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

said...

அப்பப்பா, ஒவ்வொருத்தனும் என்னா அழகு! :)

ரசிச்சு எழுதியிருக்கீங்க! நானும் கண்கொட்டாம படிச்சு, பார்த்து முடித்தேன்....

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நாம் அங்கே போனது ஜூன் 4. அதுதான் நாளைன்னக்குன்னு ஆறாம்தேதியைக் குறிப்பிட்டேன்:-)

நன்றி சொல்லச் சொன்னான் வில்லியம் என்றால் நம்பணும் ஆமா:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

அற்புதங்களைச் சொல்லி மாளாதுப்பா!!!!

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றி நன்றி நன்றி!

said...

வாங்க ஜீரா.

கண்ணுக்குப் பக்கத்தில் இருக்கும் தோலை வச்சுக் கண்டுபிடிச்சுருப்பாங்களோ???

உண்மைதான் இவனுங்க ஒவ்வொருத்தருக்கும் வரிகள் ஒன்னுபோல இல்லை!

அதுவும் சில இடங்களில் குறுக்கு சில இடங்களில் நெடுக்குன்னு வரிகள்!

கடவுள் படா டிஸைனர்!!!!

பனித்துகள் விழுதே அந்த ஸ்நோ ஃப்ளேக்ஸ் கூட ஒன்னுபோல ஒன்னு இல்லையாம்!!!!! என்னத்தைச் சொல்ல!!!!!!!

said...

வாங்க விஜிபார்த்திபன்.

ரசிச்சு வாசிச்சு இருக்கீங்க! இனிய நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இன்னும்கூட நல்லா எழுதி இருக்கலாம். மனம் நினைச்சது சொற்களில் வெளி வர்றது இல்லை:(

ரசிப்புக்கு நன்றி.

said...

பல தகவல்கள் சுவாரசியமானவை. புதியவை கூட. கருப்பில் வெளுப்பா? வெளுப்பில் கருப்பா? கண்டுபிடித்து சொன்னதற்கு மிகவும் நன்றி மேடம். குச்சி ஐஸ் சாப்பிடும் குழந்தை அழகு. மிகப்பெரிய அளவில் தகவல்களைத் திரட்டி வெளியிட்டிருக்கீங்க. பாராட்டுகள் மேடம்.

said...

வாங்க கீதமஞ்சரி.

நிறையச் சொல்லலாம்தான் இவைகளைப் பற்றி.

ஆனால் வாசிக்க போரடிச்சுருமோன்னு அடக்கி )'வாசி'க்கிறேன்:-)

உங்க வாசிப்பில் ஒரு ரசிப்பு இருக்கு!

நன்றிப்பா.

said...

'ஜஸ்' என்றால் எல்லோருக்குமே ஆசை வந்துவிடுகின்றது.பையனும் விதிவிலக்கல்ல.

படங்கள் தொகுப்பு ரசிக்கவைக்கின்றன.

said...

ஜோஷ்ன்னு ஒருத்தன். இப்போ ஒருவயசு ஒரு மாசம். இவனோட நெருங்கிய நண்பன் வில்லியம். இவனுக்கு நாளைன்னைக்கு (6/6/2012) ஹேப்பி பர்த்டே! ஒரு வயசு! //

வில்லியத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சந்தோஷமாய் என்றும் இருக்க வேண்டும்.