Wednesday, July 04, 2012

பெத்தவளுக்கும் கூடத் தெரியாது பொறந்தது ஆணா பொண்ணான்னு!!!!! ( ப்ரிஸ்பேன் பயணம் 10)

ஜ_பிரு ஜ_பிரு......... இங்கெ வா.

 நீ ஆணா பொண்ணா?

 கண்ணைப் பார்த்துக் கண்டுபிடி

 ஆஹா....... சூட்சுமம் இப்படியா?

 பொறந்து வளர்ந்து மூணு வயசுவரை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. நீண்ட மூக்கும் கழுத்தாண்டை மின்னும் கருப்புக்கலருமாத்தான் இருப்போம்.

 அப்புறம்?

 மினுமினுன்னு அந்தக் கருப்பு நிறத்திலூடே மயில்கழுத்து வர்ணமும் கலந்தடிச்சு அழகு கூடிப்போகும். ஏற்கெனவே மண் நிறத்தில் இருந்த வெளிப்புற இறகுகள் விழுந்து பால் நிறமா ஆவோம்.

 பெண்ணா பையனான்னு எப்போத் தெரியும்?

 அவசரப்படாதே..... மூணு வருசம் பொறுமை காத்த நீ இப்படி கேள்விமேல் கேள்வி கேட்டு மடக்கலாமா? கண்ணு நிறம் மாற ஆரம்பிக்கும் இப்போ! வட்டக்கரிய விழி இருந்தால்....... பையன். பொண்ணுக்கு மஞ்சள் விழி. தங்கமா மின்னும்:-)
இந்த ஜ_பிரு என்னும் பறவை நாரை இனம். நம்ம நாராய் நாரய் செங்கால் நாராய்..... சிகப்பும் ஆரஞ்சுமா ஒல்லியாக் குச்சிக் கால்கள். வளர்ந்த பறவை நிக்கும்போது சுமார் முக்கால் மீட்டர் உசரம் வரும்.

(உச்சரிப்புதான் எழுதும்போது பாடாய்ப் படுத்துது. நம்ம தருமி கூட ஒரு சமயம் புலம்பி இருந்தார், சாம் என்ற பெயரை எப்படி உச்சரிப்பதுபோல் எழுதுவதுன்னு. இந்த ஜ_பிரும் இப்படித்தான். ஜ வை லேசா இழுக்கணும். உக்கார்ந்து யோசிச்சு இப்படி இழுபடும் எழுத்துக்குப் பக்கத்துலே ஒரு அண்டர்ஸ்கோரை சேர்த்துருக்கேன். முந்தி ஒருக்கா.... ப, ட இதுக்கெல்லாம் சரியான உச்சரிப்புக்காக ஆங்கில P B T D களை சொற்களுக்கு முன் சேர்த்தேன். இப்போ இது. இவைகளுக்கு காப்பிரைட் எனக்கே:-)


வெட்லேண்ட்ஸ்ன்னு ஒரு பகுதிக்குள்ளே இருக்கோம் இப்போ. அங்கங்கே நீர்நிலை, ஓடைகள், சதுப்பு நிலம்போல ஒரு ஈரம் காக்கும் இடம். பனைவகைகள் ஏராளமா குத்துக்குத்தா நிக்குது.
காட்டுச்செடி ஒன்னு மக்காச்சோளக் கதிர் போல பூத்துருக்கு! பெயர்தான் என்னென்னு தெரியலை:( சோளக்கதிர் பூன்னு வச்சுக்கவேண்டியதுதான். ஈமு பறவைகளும் ஐபிஸ்களும், வாத்துகளும், காட்டுக்கோழி என்னும் புஷ் டர்க்கிகளுமா அங்கே உலாத்திக்கிட்டு இருக்கு. ச்சும்மா ஒரு பார்வை பார்த்துக்கிட்டே வேலி கடந்து கங்காருகள் இருக்கும் இடத்துக்குப்போய்ச் சேர்ந்தோம். போற வழியில் மூணு ஒட்டகங்களை வாக்கிங் கூட்டிக்கிட்டுப்போய்க்கிட்டு இருந்தாங்க. இது அஸ்ட்ராலியா வகை. உயரம் அதிகம் இல்லை. ரோமம் நல்ல சுருள் சுருளா மெத்துன்னு இருக்கு. வாக் போறவங்க கூடவே வாரிப்போட ஒருத்தரும் துடைப்பமும் கையுமா கூடவே போனார். வாலைத் தூக்கினதும் சட்ன்னு தகரமுறத்தை வச்சது சூப்பர்:-)))))
கங்காருகள் ஓய்வா அங்கங்கே கிடந்தும், இருந்துமா போஸ் கொடுக்குதுங்க. அதுக்குக் கை நீளமுன்னு சொல்வோம் பாருங்க........ அதேபோல் இதுக்குக் கால் நீளம். நல்ல வளர்த்தியான வகை, எழுந்து நின்னால் ஏழடி உசரம்! ஒரு எம்பு எம்பித் தாவிக்குதிக்க நல்ல நீளமான பாதங்கள். சிலவகைகளுக்கு தாவிக்குதிச்சுப்போகும் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர்!!!! சாதாரண வகைகளுக்கு மணிக்கு 25 கிலோமீட்டர்வரை! இதோட வால் இருக்கே....... நல்ல பருமனா, உறுதியா இன்னொரு கால் போலவே இருக்கு. குதிச்சுப்பாய்ஞ்சு நிலத்தில் இறங்கும்போது கீழே விழாமல் உடலை பேலன்ஸ் பண்ணிக்க உதவும் வால். ரெண்டு காலால் எழுந்து நிக்கும்போதும் முக்காலியில் உசரமா உக்கார்ந்துருக்கறதைப் போலவே!
ஆடுமாடு போலவே விழுங்குன உணவை மீண்டும் அசைபோடும் குணம். பெண் க(சி)ங்காரிகளுக்கு அடிவயித்தில் ஒரு பை. அதுக்குள்ளே நாலு முலைக் காம்புகள். கருத்தரிச்ச 35 இல்லே 36 நாளில் வெளிவரும் ஜோயி மெள்ள நகர்ந்து ஒரு மூணு நிமிசத்துக்குள்ளில் பைக்குள் போய் பால் குடிக்க ஆரம்பிச்சுரும். கொஆலாவைப்போல் இல்லாமல் இந்தப் பைகள் மேல்பார்த்த வகை. சில செண்டி மீட்டர் நீளமுள்ள பாப்பா.... ஒரு புழுவைப்போலத்தான் இருக்கு. கல்யாணம் ஆகி இத்தனை வருசமாச்சு வயித்துலே ஒரு புழுப் பூச்சி பொறக்கலைன்னு யாரும் சொல்ல முடியாது!
ஆறுமாசம்வரை பைக்குள்ளில் இருந்தபடியே வளர்ந்து முழு உருவமும் அடைஞ்சபிறகுதான் அப்பப்ப வெளியில் குதிச்சுவந்து கொஞ்சம் விளையாடிட்டு திரும்பப் பைக்குள் போய் உக்கார்ந்துக்கும். அப்படியே கழுத்துவரை வெளியே நீட்டி வேடிக்கைதான். ஒரு ஒன்பது மாசம் வரை உள்ளே வெளியேன்னு இருந்துட்டு அப்புறம் வெளியேவே வாழப் பழகிக்கிதுங்க.
ஆச்சரியம் என்னன்னா......... ஜோயி பொறந்து பைக்குள் இடம்புடிச்ச உடனே கூட அம்மா மீண்டும் கர்ப்பம் ஆகத் தயாராகிருமாம். அப்படி ஏற்பட்ட கர்ப்பம், ஏற்கெனவே பைக்குள் இருக்கும் பாப்பா வெளியேறித் தனி வாழ்க்கை வாழும்வரை தாற்காலிகமா நிறுத்திவைக்கப்படுமாம். இது வெளியேறியபின் அது. ஆஹா.... ஒன் அட் அ டைம்!

இங்கேயும் பைப்புள்ளைக்காரி ஒருத்திகூட கண்ணுலே படலை:(


சிலசமயம் தாயை இழந்து அநாதை ஆன ஜோயிகளை காப்பகங்களில் மனிதர்கள் ஏப்ரன்போல் ஒரு பையை இடுப்பிலே கட்டிக்கிட்டு வளர்த்து எடுப்பது உண்டு.

 ஜேம்ஸ் குக் ஆதிகாலத்தில்(1770) இங்கே இந்தப்பக்கம் வந்தபோது கப்பலில் ஏற்பட்ட பழுதைச் சரி செய்ய ஓரமா நிறுத்தி இருக்கார். கிட்டத்தட்ட 7 வாரம் கப்பல் அதே இடத்தில் நின்னுருக்கு. கரை ஓரமாக் குதிச்சுக் குதிச்சு ஓடும் இந்த விலங்கைப் பார்த்து இதோட பெயரை உள்ளுர்வாசிகளிடம் கேட்க, நீ என்ன கேக்குறேன்னு புரியலை.ன்னு அவுங்க மொழியில் பதில் சொல்லி இருக்காங்க. கங்காரூ (நீ சொல்வது எனக்குப் புரியலை)

 ஓ அப்படியா? கங்காரூ!!!! அதுக்கு அப்போ ஒரு ஸ்பெல்லிங் போட்டு குறிப்பு எழுதி வச்சுட்டார்.
ஆயுசு மட்டும் கொஞ்சம் கம்மிதான்:( காட்டுப்பகுதியில் வசிக்கும்போது ஆறு. காப்பகத்தில் இருக்கும்போது அதிகபட்சம் ஒரு இருவது.
இங்கே அஸ்ட்ராலியா ஜூவில் இருப்பவைகளுக்கு மனுசக் கைகளின் வருடல் பிடிச்சுப்போச்சு. நல்லா முதுகை வளைச்சுக் காமிக்குதுங்க:-))))மணி பனிரெண்டாகப்போகுதுன்னு இன்னொரு ஷோ பார்க்க ஓடும் வழியில் எகிட்னா என்ற எறும்புத்தின்னி. விநாடி நேரம் நிக்காம சுத்திச்சுத்தி ஒரு நடை. எறும்புத்தின்னிகளில் இது ஒரு வகைன்னு சொல்லணும். முள்ளம்பன்றி, ஹெட்ஜ் ஹாக் போல மேலெல்லாம் ஒரு வகை முள் உள்ள பெருச்சாளி:-) மூக்கு நல்ல நீளம். உண்மையில் இது அலகு. மெலிசாக் கயிறு போல நீளமான நாக்கு உள்ளெ இருக்கு. எறும்பு கரையான் கூட்டத்தைக் கண்டவுடன் நாக்கால் ஒரு சுழற்று. உறிஞ்சி எடுத்து ஸ்வாஹா!

தொடரும்...............:-)

20 comments:

said...

ஆஹா, எத்தனை எத்தனை வகை உயிரினங்கள்....

பார்க்கப் பார்க்க ஆனந்தம் தான்.... :)

said...

அய்ய்ய்ய் நம்ம ஊர்ர் :)))

said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

said...

டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி இருக்கு.. அத்தனையும் ஜூப்பர்.

இதுகளைப்பார்த்துத்தான் மனுஷனும் இப்பல்லாம் வெளியே வாசல்ல போறச்சே குழந்தைகளைப் பையில் சுமக்கக் கத்துக்கிட்டானோ :-))

said...

எத்தனை விதம் எத்தனை புதுசா இருக்கு, ந்மக்கு!

அவ்வளவையும் விருவிருப்பா , எழுதி இருக்கறது, மிக ஜோர்!

வணக்கம்!

said...

அழகிய படங்கள்..அமைதிச் சாரல் சொன்னது போல் டிஸ்கவரி சேனல்தான்!
(சென்னை பதிவர் சந்திப்புக்கு வருகை தர இருப்பதாக அறிந்தேன்.மகிழ்ச்சி)

said...

படங்களும் பகிர்வும் அருமை.

கால் போல் வால்...

/இதோட வால் இருக்கே....... நல்ல பருமனா, உறுதியா இன்னொரு கால் போலவே இருக்கு. குதிச்சுப்பாய்ஞ்சு நிலத்தில் இறங்கும்போது கீழே விழாமல் உடலை பேலன்ஸ் பண்ணிக்க உதவும் வால். ரெண்டு காலால் எழுந்து நிக்கும்போதும் முக்காலியில் உசரமா உக்கார்ந்துருக்கறதைப் போலவே! /

சுவாரஸ்யமான தகவல்!

said...

படங்கள் அருமை.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கோடிக்கணக்கான உயிரினங்களில் மனுசனும் ஒன்னு. ஆனால்..... உலகமே நமக்குன்னுல்லே ஆட்டம் போடுறோம்!

said...

வாங்க தூயா.

ஆஹா.... ஊர்ப்பாசம்;-)))))

said...

வாங்க வலைஞன்.

ஓட்டுப்பட்டையை இணைக்காமல் இருக்க வகை உண்டா?

அப்புறம் மெயில் ஐடி கொடுக்கலாம். பிரச்சனை இல்லை. ஆனால் பாஸ்வேர்டு கேக்குதே!

said...

வாங்க அமைதிச்சாரல்.

நம்ம பக்கங்களில் நரிக்குறவர் இனம் குழந்தைகளை சேலைத்துண்டில் வச்சுத் தோள்பட்டையில் மார்புக்குக் குறுக்காத் தொங்க விட்டு நடப்பாங்க பாருங்க..... அது இப்போ இங்கே ஃபேஷன்!!!!!

சேலைத்துண்டுக்குப் பதிலா இங்கே பக்கிள் வச்ச ஒரு பட்டை!!!!

said...

வாங்க வெற்றிமகள்.

ரசிச்சு வாசிச்சதுக்கு நன்றிகள்.

மீண்டும் வருக முதலைக் கண்ணீர் காண:-))))

said...

வாங்க சென்னைப்பித்தன்.

மீண்டும் நிகழ்ச்சி நிரல் பார்த்தபோதுதான் மனசு ஒடிஞ்சு போச்சு.

எட்டாம் மாச சந்திப்பை நான் ஒன்பதுன்னு நினைச்சுருக்கேன்:(

இப்படி எட்டாமப்போச்சே......

said...

வாங்க ராமலக்ஷ்மி.

ஆமாங்க காலைவிட வால் கனம்!

நல்லா சுருட்டி பெரிய சிம்மாசனம் பண்ணிக்கலாம்:-)))

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

நாராய் தொடங்கி எகிட்னா வரை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தோம்.

said...

வாங்க மாதேவி.

கூடவே வருவதற்கு நன்றிகள்.

said...

That flower is called "Yellow bottle brush". there are more colurs in Sydney.

said...

வாங்க பராசக்தி.

முதல் வருகைக்கு நன்றி. தகவலுக்கு நன்றிகள். வேற என்னென்ன நிறங்களில் இருக்கு?

பாட்டில் ப்ரஷ் என்னும் பெயரில் இங்கே நம்மூரில் செடிகள் இருக்கு. நம்ம பக்கத்து வீட்டில்கூட ஒன்னு உண்டு. ஆனால் எல்லாமே சிகப்பு நிறப்பூக்கள்.

இந்த மஞ்சள் பூ போல அவ்வளவு அடர்த்தியாகவும் இருக்காது.