Friday, July 20, 2012

சுத்திச்சுத்தி வந்தோங்க.....(ப்ரிஸ்பேன் பயணம் 17)

இடப்பெயர்ச்சி இருக்கு இன்னிக்கு. காலை பத்து மணிக்கு செக்கவுட் செய்யறோம். இன்னொரு ஹொட்டேலுக்கு இடம் மாறிக்கணும். அங்கே அறை ரெடியாகலைன்னா இங்கே கொஞ்சம் லேட் செக்கவுட் கேக்கணும். எதுக்கும் இருக்கட்டுமுன்னு வரவேற்பு வழியில் வரும்போது சொல்லிட்டு வந்தோம்.

 மகளும் அதுக்குள்ளே குளிச்சு முடிச்சு ரெடியாகிக்கிட்டு இருந்தாள். பொட்டிகளை எல்லாம் ஒழுங்கா அடுக்கி முடிச்சோம். காலை உணவுக்காக நேத்து வாங்கிவந்தவைகளை சாப்பிட்டு முடிச்சுட்டு அறை ரெடியான்னு கேட்டதுக்கு ரெடின்னாங்க.

 ஒரு ட்ரிக்கான இடத்தில் இருக்கும் ஹொட்டேலைத் தேடி ஒன்வேயில் மாட்டிக்கிட்டு நாலு சுத்துச் சுத்தி அதே இடத்துக்கே வந்து ஒரு வழியா வந்து சேர்ந்தோம். பெருசு சின்னதுன்னு வித்தியாசம் ஒன்னுமில்லாமல் ஊர் முழுசும் பார்க்கிங் பிரச்சனைதான். மகளை லாபியில் இறக்கி விட்டுட்டு அறைக்குப் போகச் சொல்லிட்டு நாங்க ஹொட்டேல் பார்க்கிங் தேடி இன்னும் சில ரவுண்டுகள் சுத்தினோம். அதே கட்டிடத்தின் நிலவறையில்தான் பார்க்கிங் ஆனாலும் நிலவறைக்குப் போகும் வழி படா பேஜார். அடுக்கடுக்கா மூணு மாடி பூமிக்குள்ளே போகணும். நல்லவேளை கார்பார்கில் இருந்து ஹொட்டேல் லாபிக்கு லிஃப்ட் இருக்கு. பெரிய ஹொட்டேல் என்பதால் பார்க்கிங் சார்ஜும் கூடுதல். நாளுக்கு 29.. ஒன்னுமேலே ஒன்னுன்னு அடுக்கவேணாம்.
நல்ல வசதியான அறைதான். ஜன்னலுக்கு எதிரில் அமைதியா நிற்கும் சர்ச் தரிசனம் கிடைச்சது. கோபுர தரிசனம் கோடி புண்ணீயம். பெட்டிகளைப் போட்டுட்டுக் கிளம்பி க்வீன்தெரு மாலுக்கு கால் வீசி நடந்தோம். மகளுக்கு லாஸ்ட் மினிட் ஷாப்பிங் செஞ்சுக்கணுமாம். இன்னிக்கு மாலை இங்கிருந்து கிளம்பி நியூஸி போகிறாள். நடுராத்திரிக்கு வீடுபோய்ச் சேர்ந்து ,நாளைக் காலை வேலைக்குப் போகணும். கிழக்கு நோக்கிய பயணம் என்றால் கூடுதல் நேரத்தை விழுங்கிருதே!

 ஆறு மணி ஃப்ளைட். நாலரைக்காவது ஏர்ப்போர்ட்டில் இருக்கணும். மூணரைக்குக் கிளம்பினால் சரியா இருக்கும். நம்ம கணக்குப்படி நாலு மணி நேரம் இடையில் இருக்கு. பகல் லஞ்சுக்கு எங்கே போகலாமுன்னு பார்க்கணும். நேத்து இரவுச் சாப்பாட்டுக்கு சிங்கப்பூர் உணவகம் போயிருந்தோம். நல்ல இளநீர் எனக்குக் கிடைச்சது. அதுக்காகவாவது மீண்டும் அங்கே போகலாமான்னு கேட்டதுக்கு வேணாமுன்னு சொன்ன மகளின் சாய்ஸ் ஜோஜோ ரெஸ்ட்டாரண்ட். நல்லதாப் போச்சு. இதே மாலில் இருக்கும் இடம். ஒன்னேகால் மணி நேரம் அவரவர் சுதந்திரமா ஷாப்பிங் செஞ்சுட்டு பனிரெண்டரைக்கு ஜோஜோவில் சந்திக்க முடிவு.

 நான் விண்டோ ஷாப்பிங்தான் செய்யப்போறேன். சொன்னதும் கோபாலின் முகத்தில் ஒரு ஒளி:-) தைரியமா என்னோடு காஃபி கடைக்குள்ளே நுழைஞ்சார். நம்ம பக்கங்களில் அதுவும் தென்னிந்தியாவில் ஃபில்டர் காஃபின்னு ஒன்னு தயாரிக்கிறோம் பாருங்க.... அதுதான் இந்த காஃபி மேக்கிங்லே சீப்பஸ்ட் சமாச்சாரமுன்னு புரிஞ்சு போச்சு. (இதையே மேட்டுக்குடி விஷயம், செலவு கூடுதலான சமாச்சாரமுன்னு நொறுக்கி நொங்கெடுப்பவர்களும் உண்டு! )
புதுப்புது ஃப்ளேவர்களில் 16 வகை வச்சு விக்கறாங்க. சின்னச்சின்ன காப்ஸ்யூல்ஸ்! அழகா இருக்கேன்னு வாங்கினால் தொலைஞ்சோம். இதைப் பயன்படுத்தன்னு தனி வகை காஃபி மெஷீன்கள் வாங்கிக்கணும். வாயில் நுழையாத இதாலியப் பெயர்களில் பலவகை! அதுலே ஒன்னு நாலாயிரம் டாலரில் இருக்கு. அதை நான் வாங்க விரும்பலைன்னு சொல்லி கோபால் மனசில் பால் வார்த்தேன்:-)
இந்தப் பதினாறு வகைகளில் இந்த்ரியான்னு கூட ஒன்னு இருக்கு! தென்னிந்தியாவில் விளைஞ்ச காஃபிக் கொட்டைகளாம். காஃபிச் செடிகள் மர நிழலில் வளர்ந்ததோடு குறுமிளகு, கிராம்புன்னு மசாலாச் செடி வகைகளும் செடிக்குப் பக்கத்துலேயே சேர்ந்து வளர்வதால் விசேஷ குணம் இருக்கு(மாம்!!!) மெய்யாலுமா?
ஃப்ளேவர் வாரியா கேப்ஸ்யூல்ஸ் அடுக்கி வச்சுருப்பதே  வானவில் வந்திறங்கியதைப்போல்  ஒரு அழகாத்தான் இருக்கு.


இவ்வளவு நல்ல காஃபியைக் குடிக்க அதுக்கேத்த கப், டம்ப்ளர் எல்லாம் வேணும்தானே? என்னைப்போல எவர்ஸில்வர் ப்ரேமிகள் நிறையப்பேர் உலகில் இருக்காங்க போல!
இந்தக் காஃபி பிஸினஸ் பெரிய சமாச்சாரமால்லே இருக்கு! அதான் போல எங்கியாவது ஒரு காஃபி குடிக்கலாமுன்னு ஸ்பெஷாலிட்டிக் கடைக்குள்ளே நுழைஞ்சால் மயக்கம் வந்துருது. சில சமயம் ஒரு காஃபி 13 டாலர். சில வருசங்களுக்கு முந்துன இந்தியப் பயணத்தில் சரவணபவனில் ஆறு ரூபாய்க்கு காஃபி கிடைப்பதைப் பார்த்து மகள் அது நம்ம காசில் எத்தனை டாலருன்னு கேட்க, நான் இருவது செண்ட்ன்னு சொன்னதும் கண்ணே விரிஞ்சு போச்சு! இங்கே நியூஸிக்குத் திரும்புனதும் அவளுடைய நண்பர்களிடமெல்லாம் சொன்ன முதல் சேதியே இதுதான்.

 "கெஸ் வாட்? த பெஸ்ட் காஃபி இன் இண்டியா இஸ் ஒன்லி ட்வென்டி செண்ட்ஸ்!!!! "

 "ரியலி? "

 20 டாலருக்கும் கிடைக்குது காஃபி மேக்கர் என்றாலும் அதுலே காஃபித் தூளைப்போட்டு சேம்பரில் பச்சத்தண்ணீரை நிரப்பி ஸ்விட்ச் போட்டுட்டால் வடிஞ்சு வரும் கருப்புக் காபி கொஞ்சம் சுமார் ரகம்தான். அவசர ஆத்திரத்துக்கு அட்ஜஸ்ட் செஞ்சுக்கலாமே தவிர பித்தளை ஃபில்ட்டரில் பொடியை அமுக்கி, கொதிக்கும் நீரை ஊத்திவச்சு சொட்டுச் சொட்டா மணிக்கணக்கில் இறங்கும் கெட்டி டிக்காஷனை சூடான பாலில் கலந்து, அரைச் சக்கரையோடு குடிச்சுப் பாருங்க..... அது சொர்க்கம்!

 காலத்துக்கேற்றபடி இப்பெல்லாம் எவர்ஸில்வர் ஃபில்ட்டர் என்றாலும் பித்தளை ஃபில்ட்டர் டேஸ்ட் வர்றtதில்லைப்பா:(

 சும்மாச் சுத்துனதில் ஒரு ஆண்ட்டீக் ஜுவல்லரி விற்கும் கடை கண்ணில் பட்டுச்சு. வெளியே இருக்கும் விண்டோ அமைப்பில் ஷோகேஸ்ஸா கொஞ்சம் நகைகளை வச்சுக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பெண்கள். வெள்ளி யானை மோதிரம் கண்ணில் விழுந்தது. மாடியில் கடை இருக்கு. அங்கே இன்னும் அநேக டிஸைன்ஸ் இருக்குன்னதும் மாடிக்குப் போனோம். நகைகள் எல்லாம் ரொம்ப சுமார். எஸ்ட்டேட் ஜுவல்லரின்னு இருந்தவைகள் எல்லாம் மொக்கை. இங்கே எங்கூரில் ஆன்டீக் நகைக்கடை ஒன்னு அட்டகாசமா இருந்துச்சு. இருந்துச்சுன்னா..... நிலநடுக்கத்திற்கு முன்புவரை இருந்துச்சு. பூகம்ப இடிபாடுகளில் மாட்டிக்கிட்டக் கடைகளில் அதுவும் ஒன்னு:( அதனால் ரொம்பநாளா ஆண்டீக் நகை பார்க்காமல் ஏங்குன கண்களுக்கு இங்கேயும் விருந்து கிடைக்கலை:(

 அதுக்காக........? விடமுடியுதா? ஒரு சின்ன பெண்டெண்ட் கண்டுபிடிச்சேன். சதுரமா இருக்கு. நடுவில்Princess Cut,   நாலு மூலையிலும் brilliant cut ,  இடையில் Baguette cut ன்னு 9 கற்கள். திருமணநாளுக்கான பரிசா இருக்கட்டும் வாங்கிக்கோ வாங்கிக்கோன்னு கோபால் சொல்லிக்கிட்டே இருந்தார். அழகா யுனீக்கா இருக்குன்னாலும் விலை கூடுதல். ஆனால் அவர் ஆசையைக் கெடுக்கலாமா? பேரம் பேசி மூணில் ரெண்டு பங்குக்குக் கேட்டேன். உள்ளே போய் கேட்டுட்டு வரேன்னு சொன்ன விற்பனைப்பெண், இல்லைங்க. நீங்க கேட்ட விலைக்குக் கட்டிவராது. 20 சதம் குறைக்கலாமாம் என்றார். வேணாமுன்னு சொல்லிட்டுக் கிளம்பினதும் கோபாலுக்கு மனசுள்ளே ஆர்க்கெஸ்ட்ரா பாடித்தான் இருக்கணும். கண்ணு சொல்லுச்சே:-)))))

 இதுக்குள்ளே மகளுக்குச் சொன்ன நேரம் வந்துருச்சேன்னு ஜோஜோவுக்குப் போனோம். லஞ்சு டைம் கூட்டம் குறைவுதான். உடனே இடம் கிடைச்சுருச்சு. சாப்பாடு ஆனதும் ஆன் தெரு அன்ஸாக் நினைவுச்சின்னம் வழியாக அறைக்கு வந்தோம். நினைவுச்சின்னத்தில் அணையாத் தீ (சுடர்? ) எரிஞ்சுக்கிட்டே இருக்கு. அஞ்சு வாரத்துக்கு முன்பு வச்ச மலர்கள், வளையங்கள் எல்லாம் இன்னும் இருக்கு. ஆனால் கட்டிட வளைவுகளில் பராமரிப்பு வேலை நடந்துக்கிட்டு இருக்கு.

இந்தப் பக்கங்களில் எனக்குப்பிடிச்ச ஒரு விஷயம் இதுதான். எதையாவது கட்டி முடிச்சதும் கடமை தீர்ந்ததுன்னு விட்டுடாமல் அப்பப்ப பழுதுபார்த்து மராமத்து வேலைகளை நடத்திக்கிட்டே இருப்பாங்க. இதெல்லாம் அரசாங்கம் மட்டும்தான் செய்யுதுன்னில்லை. தனிமனிதர்களின் வீடுகளும் இப்படித்தான் பராமரிக்கப்படுது. கோடை வந்துட்டால் பெயிண்ட் அடிக்கக் கிளம்பிரும் சனம்.

 மூணு மணிக்கு ஏர்ப்போர்ட்டுக்குக் கிளம்பினோம். வழக்கம்போல் பாதையைத் தவறவிட்டு கூஸ் சேஸ். இத்தனைக்கும் பட்டப்பகல். நேரத்துப் போய்ச்சேர முடியலைன்னா வேற என்ன ஆப்ஷன் இருக்குன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். சாலைகளில் சரியான தகவல்கள் இல்லைன்னுதான் தோணுது. இதுலே மட்டும் நியூஸியை அடிச்சுக்கவே முடியாது. ஒருவழியா அடிச்சுப்பிடிச்சு மகளை இறக்கி விட்டுட்டு நாங்க போய் வண்டியைப் பார்க் பண்ணிட்டு வந்தோம். (அது இன்னொரு தலைவலி)
எங்கூரே மேல்!  இங்கே அந்த நாலு பேரைக்கூடக் காணோம்!


போர்டிங் பாஸோடு காத்திருந்த மகளுடன் காஃபி ஷாப் போய் ஆளுக்கொரு காஃபியோடு கொஞ்சம் வேடிக்கை பார்த்துட்டு வீட்டுக்குப்போனவுடன் என்ன நேரமானாலும் டெக்ஸ்ட் பண்ணுன்னு சொல்லிட்டு அவள் உள்ளே போனதும் நாங்கள் சரியான வழியைப்பிடிச்சு (!) அறைக்கு வந்து சேர்ந்தோம்.
கீழே ஒரு இடத்தில் நாலைஞ்சு கணினி வச்சு, ஹொட்டேல் கெஸ்ட்ஸ் இலவசமா வலை மேய்ஞ்சுக்க ஒரு ஏற்பாடு இருக்கு. ஒரு முறைக்கு 15 நிமிசம் வரை. அறையில் வலைத் தொடர்புக்கு நாளுக்கு 29. (அடப்பாவிகளா! அங்கே ஒன்பதுன்னா இங்கே இருபத்தியொன்பதா? நல்லா கொள்ளை அடிக்கறாங்க)

 கீழே இருக்கும் ரெஸ்ட்டாரண்டுலேயே 'வெட்டிங் டே டின்னர்' ஆச்சு:-))))) தொடரும்......:-)) ===============================================================================

19 comments:

said...

எங்கே போனாலும் இந்த பார்க்கிங்தான் பெரிய பிரச்சினை. இடம் கண்டுபிடிக்கறதுக்குள்ளே போதும் போதும்ன்னு ஆகிருது.

ஆளரவமில்லாத ஏர்போர்ட் பேய்பங்களா எஃபெக்ட் கொடுக்குது. உங்களுக்குப் பயமாயில்லையா :-)))

said...

வெட்டப்பட்ட ஆடுதே வெட்டிங் டே டின்னர் பில் குடுத்துச்சு?

வாழ்த்துகள்!!

said...

ஹாய்.............

said...

எங்கு போனாலும் காப்பி விஷயம் கண்ண கட்டத்தான் செய்யுது.
படமும் பகிர்வும் அருமை.

said...

அந்த காலத்தில் பித்தளை ஃபில்டர்தான். எவர்சில்வரும் போய் இப்போ காஃபி டேயில் விதம் விதமா கண்ணாடி+ அலுமினியம் (போல ஏதோ) கோட்டட் ஃபில்டர்கள் விற்கிறார்கள்.

பெண்டட் வாங்கியிருந்தா கண்கள் இன்னும் பிரகாசமா, ஆர்கெஸ்ட்ரா பலமா இருந்திருக்கக் கூடும். நீங்கள்தான் மிஸ் பண்ணி விட்டீர்கள்:)!

said...

அவுஸ்திரேலியாவுலயும் பார்க்கிங் பிரச்சனையா? ஊருக்கு இதான் பிரச்சனை. வீட்டுக்கு ரெண்டு கார் இருந்தா இப்படித்தான் ஆகும்.

காப்பியில் இத்தனை வகையா? என்னதான் இருந்தாலும் நமக்குப் பிடிச்சது ஒரேயொரு வகைதான். நம்மூர் ஃபில்டர் காப்பிதான்.

முந்தி தூத்துக்குடியில் இருந்தப்போ வீட்டுல ஒரு சின்ன அரவைமெஷின் இருந்தது. கையால சுத்துனா உள்ள போடுற பொருளெல்லாம் பொடியா வரும். அதுல வறுத்த காப்பிக்கொட்டையைப் போட்டு அரைச்ச பொடியை ஃபில்டர்ல போட்டு, அந்த டிகாஷன் எடுத்து காப்பி குடிச்சா.. அடடா!

சில மாதங்களா காப்பி குடிக்கிறதில்லை. வீட்டுலயும் குடுக்குறதில்லை. நானும் கேக்குறதில்லை. டீயும் ஹார்லிக்சும்தான். ஆனாலும் காப்பிக்கு மனசுல தனி எடம் உண்டு. காப்பி வாழ்க.

said...

தாய்லாந்து போகலாம்னு இருக்கேன். அதைப்பத்தி பதிவுகள் லிங்க் கொடுத்தீங்கன்னா தாய்லாந்து ஏர்போர்ட்ல உங்க பேரை சுவத்தில பதிச்சிட்டு வாரேன்.

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

அங்கே ஏர்ப்போர்ட்டில் பாற்கடல் கடையும் ஸீன் இருக்கும் பாருங்க அதுலே அந்த அமிர்தகலசத்தில் பெயர் பொறிச்சுட்டு வாங்க.

இந்தச் சுட்டில் இருந்து நூல் பிடித்து மேலேறிப்போகணும். வெறும் 13 இடுகைகள்தான் போன வருசப் பயணத்துக்கு.

http://thulasidhalam.blogspot.co.nz/2011/01/blog-post_26.html

said...

காப்பி குடித்து, டின்னரும் சாப்பிட்டோம். :))

அடுத்து....

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆஸியில் செண்ட்டர் சிடியில் மட்டும் தான் பார்க்கிங் பிரச்சனை.

எங்க நியூஸியில் அதுவும் எங்கூரில் சிட்டிக்கு ஆட்கல் வரணும் என்பதற்காகவே சிட்டிக் கவுன்ஸிலே பார்க்கிங் கட்டிவிட்டு முதல் ஒரு மணி நேரத்துக்கு இனாமுன்னு வேற சொல்லுது.

இருக்கும் ஒன்னு ரெண்டு பேயும் என்னைக் கண்டதும் ஓடி ஒளிஞ்சுக்காதா:-)))))

said...

வாங்க கொத்ஸ்.

இல்லையா பின்னே?

கஷ்டத்திலும் துக்கத்திலும் சோகத்திலும் துன்பத்திலும் கூடவே வந்து எல்லா பில்லையும் செட்டில் பண்ணுவேன் என்ற வாக்கு கொடுத்துத்தானே கழுத்தை அப்போ நீட்டி இருக்கு அந்த 'ஆடு'!

said...

வாங்க ' நான்'.

ஹாய் ஹாய்!

said...

வாங்க சசி கலா.

காஃபிச் சனியனை விட்டுத்தொலைக்கலாமுன்னு நான் முடிவு எடுக்கவேண்டிய தருணம் நெருங்குது போல!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கண்ணாடிச் சமாச்சாரங்கள் அலங்காரமா இருக்குன்னு வாங்கினாலும் எப்போ அதுக்கு இருக்கோன்னு பயப்படவேண்டி இருக்கே!

பெண்டண்ட் உண்மையில் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருந்துச்சு. வெறும் 9 கேரட்தானே... போகட்டுமுன்னு மனசில் அப்போ சொல்லிக்கிட்டேன்.

said...

வாங்க ஜீரா.

வத்தலகுண்டுலே நரசூஸ் வருமுன் மதுரையில் இருந்து உருண்டைக் காஃபிக் கொட்டை வாங்கியாந்து வீட்டில் வறுத்து நீங்க சொல்லும் சின்ன மெஷீனில் கைப்பிடி சுத்திக் கரகரன்னு அரைச்சுத்தான். காஃபி பில்ட்டரில் போடுவாங்க. கொட்டை வறுப்பு மட்டும் வாரத்துக்கு ஒரு நாள்.

சிலவருசமுன்னே பாண்டி பஸாரில் நரசூஸ் கடையில் கடைக்காரர் உபதேசித்தபடி 10 சதமானம் சிக்கரி சேர்த்து வாங்கினோம். சிக்கரி மட்டும் 50 கிராம் தனியா வாங்கி வந்து வீட்டில் கலந்து வச்சேன்.பரவாயில்லாம இருந்துச்சு.

உடம்புக்கு அவ்வளோ நல்லதில்லைன்னு கொஞ்சம் நெர்வஸாத்தான் இருந்துச்சு.

ஆனால்.... இப்போ கிறைஸ்ட்சர்ச்சுலே இந்தியன் கடையில் ப்ரூ காஃபிப்பொடி கிடைக்குது. ரெண்டாம் டிகாஷனே முதல் டிகாஷனைப்போலவேன்னு விளம்பரம் வருது பாருங்க.

நாக்கு பழகிப்போனாலும்......... அதுலே இருக்கும் சிக்கரி அளவைப் பார்த்தால்..... விஷத்தைத் தின்னுறோமோன்னு..... கவலை.

47% சிக்கரி!

அநியாயமா இருக்கே:(

வாங்கி வச்சதைத் தீர்த்துட்டுக் காஃபிக்கு குட்பை சொல்லணும்.

said...

வாங்க மாதேவி.

ஆஹா.... ரசிச்சு சாப்பிட்டீங்கதானே?

டாங்கீஸ்ப்பா!

said...

எங்க போனாலும் நம்ம காபி இல்லாம முடியல இல்லையா? :)

நல்ல விளக்கங்கள். வாழ்த்துகள்.....

said...

வாழ்த்துகள்.
துபாயிலும் சில சமயம் ஆளில்லாத கடைகளை பார்த்து “எப்படி சமாளிக்கிறார்கள்?” என்ற யோஜனை தோனும்.

said...

// நாக்கு பழகிப்போனாலும்......... அதுலே இருக்கும் சிக்கரி அளவைப் பார்த்தால்..... விஷத்தைத் தின்னுறோமோன்னு..... கவலை.

47% சிக்கரி!

அநியாயமா இருக்கே:( //

என்னது? 47% சிக்கரியா? கொடுமை. :( காப்பிய நம்ம குடிக்குறோமா, காப்பி நம்மளக் குடிக்குதான்னே தெரியலையே. முருகா, மக்களைக் காப்பாத்தப்பா.