Monday, July 16, 2012

நலந்தானா.... நலந்தானா...... ? (ப்ரிஸ்பேன் பயணம் 15)

ஆஸ்பத்திரிக்குப் போகணும். ஐயோ கையில் ஒன்னும் கொண்டு வரலையே:( நோயாளிகளைப் பார்க்கப்போகும்போது வெறுங்கையாவா போவது? எப்படி இருப்பாங்க? தனித்தனி வார்டு கட்டில் எல்லாம் இருக்குமா? பெரியாளுகளுக்கு தனி அறையோ? இப்படியெல்லாம் எண்ணம் ஒரு பக்கம் ஓடிக்கிட்டே இருக்கு.

 முதல்லே நோயாளிகளைப் பார்த்துட்டு வந்துடலாம். விஸிட்டர்ஸ் டைம் கூட எப்போன்னு தெரியலையே......

 எதுக்கு இப்படி அலைபாயுறே? இதோ இன்னும் பத்து நிமிசத்தில் ஒரு ஷோ இருக்கு அதை மட்டும் பார்த்துட்டுப் போகலாமுன்னு சொல்லுது குடும்பம்.

 முகப்புக் கட்டிடத்தின் அருகில் ஷட்டிலை விட்டு இறங்கி, காலையில் ஆமையாரைப் பார்த்தோமே அந்தப்பக்கம் ஓடினோம். மூணுபக்கமும் கட்டச்சுவரும் அதுக்குமேல் வச்ச கண்ணாடிச்சுவருமா இருக்கும் இடத்தில் மூவர். ஆல் கேர்ள்ஸ்! நாய்க்கு இருக்கும் அத்தனை சுபாவங்களும் இருக்கு ஒன்னே ஒன்னைத்தவிர. நாய் போல நம்மைப் பார்த்ததும் வால் வீசிவீசி ஆடாது. தமிழிலும் இதுக்கு நீர்நாய் என்றே பெயர்! ஒட்டர்ஸ் (Otters)
பொதுவா இவ்வகைகள் அவர்களின் இயற்கைச் சூழலில் பத்துவயசு வரை வாழ்ந்தாலே அதிகம். ஆனால் இங்கே அஞ்சு நட்சத்திர ஹொட்டேல் வசதியும் அட்டகாசமான கவனிப்பும் இருப்பதால் காலத்தை மீறி கவலையில்லாத வாழ்க்கையில் நல்ல ஆயுசு போட்டு இருக்குதுகள். நல்லா இருக்கட்டும். நூறாண்டு காலம் வாழ்கன்னு வாழ்த்தினேன்.

 மரியாவும் Bபோனீயும் சகோதரிகள். 1998 மார்ச் 4 ஆம்தேதி பிறந்து ஒரு வயசா இருக்கும்போது இங்கே அஸ்ட்ராலியா ஜூ வந்து சேர்ந்தாங்க. இப்போ 14 வயசு பூர்த்தியாகிருச்சு. மூணாவதா இருக்கும் ரோஸி போனவருசம்தான் வந்தாள் . வரும்போதே அஞ்சு வயசுக்காரி. இப்போ வயசு ஆறு. இளமைக்குரிய தன்னம்பிக்கை, வீரம் எல்லாம் சேர்ந்து வந்தவுடன் பெருசுகளை ஓரங்கட்டிட்டாள். போன தலைமுறையைவிட இந்தத் தலைமுறை கொஞ்சம் உசரமாவும் திடகாத்திரமாவும் வளர்வது மனுசனுக்கு மட்டும்மேன்னா சொல்றீங்க? ஊஹூம்....:-)

 இப்ப அவள்தான் லீடர்! அவள் சொன்னபேச்சைக் கேக்குதுங்க அந்த மூத்த சிஸ்ட்டர்ஸ்:-)

 இந்த மூவருக்கும் விசிறிகள் ஏராளம். ஒரு நாளைக்கு மூன்று முறை ஷோ! காலை 10, பகல் 1 பிற்பகல் 3.30. இப்போ நாம் இந்தநாளின் கடைசி ஷோவுக்கு வந்துருக்கோம். இயற்கையா இருப்பது போல் ஒரு செயற்கை நீரூற்றும் செடிகள் நிறைஞ்ச இடமுமா குட்டிக் குளம்! தண்ணீரில் குதிப்பதும் ஒன்னையொன்னு துரத்துவதுமா ஆட்டம் காமிக்கும் இவை, தங்கள் கீப்பர்ஸ் வந்தவுடன் பார்க்கணுமே!

 எஜமானைக் கண்ட நாய்! மற்ற யாரும் ஒரு பொருட்டில்லை. கீப்பர் போகும் வழியே கண்ணும் மனமும் போகுது. இந்தப் பக்கமுன்னா இந்தப் பக்கம் அந்தப் பக்கமுன்னா அந்தப்பக்கம். அந்த கீப்பரும் எதையோ எடுப்பது போல போறதும் வாரதுமா இருந்தாங்க. இதுகள் சின்னக்குரலில் கூப்பிட்டுக்கொண்டே இங்கேயும் அங்கேயும் குதிச்சுப் பாய்ஞ்சு தவித்த தவிப்பு இருக்கே......... இன்னும் சுருக்கமாச் சொன்னால்..... திருவிழாவில் தொலைஞ்சு போன தாயை தூரக்கே இருந்து கண்டு பிடிச்சுட்ட குழந்தையின் தவிப்பு! நாம் கொடுத்த நுழைவுக் கட்டணம் இதுக்கே சரியாப்போச்சு! இதுவரை பார்த்தது எல்லாமே போனஸ்!

 கடைசியா கீப்பர் உள்ளே வர இருக்கும் வாசலை அந்தப் பக்கம் நெருங்குனதும் இதுகளுக்கு எப்படி தெரிஞ்சதுன்னு எனக்குத் தெரியலை.  'தாழ் திறவாய் மணிக் கதவே.... 'ன்னு பாடாத குறை! கதவைப் பார்த்தபடி கண்கள் நட்டுக் காத்திருந்தன. கதவுலே இருக்கும் ஒரு சின்ன ஜன்னல்போல இருக்கும் குட்டிக்கதவை (திட்டிவாசல்?)த் திறந்து எங்கே இருக்காங்க பார்க்க ஒரு தலை நீண்டதும் சரேல் ன்னு வழிவிட்டு பக்கத்துக் கட்டைசுவர் மேல் ஒரே தாவு, மூணுபேரும் ஒரே சமயத்தில். அடடா.... என்னமா ஒரு டைமிங்!!!!!

இங்கிருக்கும் மூவரும் ஆசியர்!  சின்ன நகமும் கையுமா இருக்கும் வகைகளாம். பின்னங்கால் பாதங்கள் மட்டும் வாத்துக்கு இருப்பதுபோல் விரல்களுக்கிடையில் இணைப்புகள் (Webbed feet) துடுப்புப்போல இருக்கு. கைவிரல்கள் கொஞ்சூண்டு இணைஞ்ச நிலையில் தனித்தனியா இருப்பதால் உணவைக் கையில் பிடிச்சுத்தின்ன முடியுது. சின்ன மீன்களை இங்கே மூணு வேளைக்கும் தின்னக்கொடுக்கறாங்க.   சில சமயம் இறைச்சித் துண்டுகள்.

 குண்டு உடம்பு இல்லவே இல்லை. ஒரு விநாடி கூட நிக்காம ஓடும் ஓட்டத்துக்கு வெயிட் வைக்க ச்சான்ஸே இல்லை. மிஞ்சிப்போனால் மூணு கிலோதான் மொத்த எடையே! நல்ல உயரமா ஐ மீன் நீளமா இருக்காங்க. அதிகப்பட்சம் அரைமீட்டருக்கும் கூடுதல். சிலசமயம் 64 செமீ! இதுலே வாலின் நீளம் சேர்த்தி இல்லை கேட்டோ:-) அது தனி! ஒரு முப்பது , முப்பத்தியஞ்சு செ மீ வரும்!

 எப்பவும் தண்ணீரில் குதிச்சு நீந்துவதால்.... ரோமம் எல்லாம் சாட்டின்போல மின்னுது. ஒரு வயசாகும்போதே பருவ வயசு வந்துட்டாலும் மூணு வயசு ஆனால்தான் புள்ளை பெத்துக்கணுமுன்னு பயங்கர ப்ளானிங். ஒரு பிரசவத்தில் ரெட்டைப் பிள்ளைகள்.

 டாஸ்மானியன் டெவில், டிங்கோ, போஸ்ஸம், லெமூர்ன்னு இன்னும் கொஞ்சம் விலங்குகள் இருந்தாலும் போய்ப் பார்க்க நேரம் இல்லை. ஏற்கெனவே வேற இடங்களில் பார்த்திருக்கோமேன்னு சமாதானம் சொல்லிக்கிட்டு வெளியேறும் வாசலுக்கருகில் இருக்கும் பெரிய நினைவுப்பொருட்கள் கடைக்குள் நுழைஞ்சோம். மகள்தான் லெமூர், கூக்கபுரான்னு வாங்கினாள். அவளை ஷாப்பிங் செய்ய விட்டுட்டு நாங்கள் முகப்பில் வந்து உட்கார்ந்தால், வொம்பாட் ஒருத்தர் லீஷோடு வாக்கிங் வந்தார். திடமான சின்ன குட்டிக் கால்களை எடுத்து வச்சு நடக்கும்போது ஒரு வகை நாயாட்டம்தான் இருக்கு! எல்லா விதமான வாசனைகளையும் முகர்ந்து மனசில் ஸ்டோர் பண்ணிக்கிட்டே போகுது.

 ஆஸ்பத்திரிக்கு வழி கார்ப்பார்க் வழியா வெளியிலேதான் இருக்கு. ஜூவின் உள்ளே வராமல் நோயாளிகளைப் பார்த்துட்டுக்கூடப் போகலாம். எப்படியும் இதுக்குத் தனி டிக்கெட் தானே? ஒரு நபருக்கு ரெண்டு டாலர். வாசலில் ஆம்புலன்ஸ் ஒன்னு தயாரா நிக்குது.


 ஹாஸ்பிடல் உள்ளே அப்பழுக்கு இல்லை. எல்லாம் படு சுத்தம் மின்னும் தரைகள். சர்ஜரி ரூம்ஸ், ரெக்கவரி ரூம்ஸ், போஸ்ட் ஆபரேடிவ் ரூம்ஸ் எல்லாத்துக்கும் முழுக்க முழுக்கக் கண்ணாடிச்சுவர்கள். உள்ளே நடக்கும் சிகிச்சையை நாம் வெளியே யாரையும் தொந்திரவு செய்யாமல் பார்க்கலாம். 

கங்காரு, கொஆலாக்கள்தான் பெரும்பாலும் சிகிச்சைக்கு வர்றாங்க. ஜூவில் இருப்பவர்களுக்கும் ரெகுலர் செக்கப் நடக்குது. மற்ற பெரிய விலங்குகளுக்கு அவைகள் இருக்கும் இடத்துலேயே வச்சுப் பார்க்கிறார்களாம். அறுவை சிகிச்சைன்னாதான் இங்கே கொண்டு வருவாங்களாம். ஃபுல் தியேட்டர் வசதி இருக்கு.

 எதோ விபத்தில் மாட்டிக்கிட்டு வந்து மாவுக்கட்டுப்போட்ட கையோடு ஒரு கொஆலா,  என்னடான்னு கேட்டால் கையை நீட்டிக் காமிச்சது!இவைகளுக்காக அங்கங்கே யூகலிப்டஸ் இலைக்கொத்துக்களை மரக்கிளைத்தண்டில் கட்டி வச்சுருக்காங்க.நம்ம பக்கங்களில் ஒரு பழக்கம் டாக்டரிடம் மருந்துச்சீட்டு எழுதி வாங்குன கையோடு டயட் என்னன்னு கேப்போம் இல்லை? அவரும் கஞ்சி, ப்ரெட், பாலுன்னு எதாவது சொல்வார். பூனாவில் இருக்கும் டாக்டர்ஸ் எல்லாம் சொல்லி வச்ச மாதிரி கிச்சடின்னுவாங்க:-) இங்கே கொஆலாக்களுக்கு இந்தக் கேள்வியெல்லாம் இல்லை. எங்கேயும் எப்போதும் அதே யூகலிப்டஸ் இலைதான். 

 காட்டுத்தீயில் மாட்டிக்கிட்டோ இல்லை வாகனங்களில் அடைபட்டோ கிடக்கும் விலங்குகளை இங்கே கொண்டுவந்து சிகிச்சை செய்து காப்பாத்தித் திரும்பவும் வனப்பகுதிக்கே கொண்டு போய் விட்டுடறாங்க. அப்படியெல்லாம் இல்லை அதுகளை இங்கே ஜூவில் வச்சுக்கறாங்கன்னு புகார் சிலசமயம் வந்துருக்கு. அப்படி எல்லாரையும் வச்சுக்க இடம் வேணமா?

 அக்கவுண்ட்ஸ்லே ஆரம்பிச்சு வெப்ஸைட் டிசைன் உட்பட 39 பிரிவுகளில் 250 பேருக்குமேலே இங்கே வேலை செய்யறாங்க. இது இல்லாம வாலண்டியர்ஸ் என்று அனிமல் லவ்வர்ஸ் பலரும் தொண்டு ஊழியம் செய்யறாங்க. பள்ளிக்கூடங்களுக்கான விசேஷ வகுப்புகளும், வேலை செய்ய ஆர்வம் இருப்பவர்களுக்கு பயிற்சியும் கொடுக்கறாங்க. இப்படி இது ஒரு தனி உலகமாவே இயங்குது.

 மணி நாலரை ஆச்சு. இப்பக் கிளம்புனாத்தான் இருட்டுமுன்னே ஊர்போய்ச்சேரலாமுன்னு கிள்ம்பிட்டோம். ஒன்னரை மணி நேர ட்ரைவ் இருக்கே!  பவுர்ணமி நிலா எட்டிப் பார்த்தது.

 தொடரும்........:-)

13 comments:

said...

இந்த மூவருக்கும் விசிறிகள் ஏராளம். ஒரு நாளைக்கு மூன்று முறை ஷோ! காலை 10, பகல் 1 பிற்பகல் 3.30. இப்போ நாம் இந்தநாளின் கடைசி ஷோவுக்கு வந்துருக்கோம். இயற்கையா இருப்பது போல் ஒரு செயற்கை நீரூற்றும் செடிகள் நிறைஞ்ச இடமுமா குட்டிக் குளம்! தண்ணீரில் குதிப்பதும் ஒன்னையொன்னு துரத்துவதுமா ஆட்டம் காமிக்கும் இவை, தங்கள் கீப்பர்ஸ் வந்தவுடன் பார்க்கணுமே!//
எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்து பல்லாண்டு வாழ்ட்டும்.
படங்கள், விவரங்கள் எல்லாம் நேரே பார்த்தது போல் அனுபவத்தை கொடுத்து விட்டது.

said...

கையில் கட்டுப்போட்டிருப்பவர் பாவமா இருக்கார்.

டிஸ்கவரி சேனலில் இந்த ஓட்டர்களை சில சமயம் காமிப்பாங்க. அற்புதமான ஜீவன்கள் இவை. எதிரிகளைக் கண்காணிக்கறதுக்காக பின்னங்கால்களில் எழுந்து நிற்கும் அழகே அழகு.

said...

பொதுவாவே ஓட்டர்சுக்கும் பீவர்சுக்கும் எனக்குக் கொழம்பீரும்.

வாலப் பாத்தாதான் யாருன்னு தெரியவரும். மத்தபடி தலைல இருந்து கால் வரைக்கும் ஒத்துமை நெறைய.

இந்தக் கால்நடை மருத்துவமனையப் பாத்ததும் ஒரு கொசுவத்தி.

தூத்துக்குடியில நாங்க இருந்த வீட்டுப் பக்கத்துல மாட்டாஸ்பித்திரி ஒன்னு இருந்தது. பள்ளிக்கூடம் இல்லைன்னா பொழுது போக்குன எடங்கள்ள அதுவும் ஒன்னு.

அங்க வர்ர மாடுகளும், அதுக்குச் சிகிச்சை கொடுக்குறதப் பாக்குறதும், அங்கயே சுத்துறதும்னு பொழுது சர்ருன்னு போயிரும். பேருதான் மாட்டாஸ்பித்திரி. அங்க நாய், கோழி, வான்கோழி, ஆடு எல்லாமே கொண்டருவாங்க. அதுக்கு அரசு கால்நடை மருத்துவமனைன்னு பேரு. ஆனா மாட்டாஸ்பித்திரிங்குற பேர் நின்னு நிலைச்சிருச்சு.

அங்க மாட்டுச் சாணியெல்லாம் போட்டு பயோகேஸ் தயாரிப்பாங்க.

நாங்க வீட்டுல இருந்து வாளியக் கொண்டு போயி, பயோகேஸ் தயாரிச்ச சாணிக்கூழை வாங்கீட்டு வருவோம். அதைச் செடிகளுக்கு ஊத்துனா நல்லா வளரும். நல்லாத்தான் வளந்துச்சு. அப்ப பூச்சி மருந்து ஒரங்கள் பத்தியெல்லாம் தெரியலை. ஆனாலும் மஞ்சக் கனகாம்பரம் அப்படிப் பூக்கும். பறிக்க முடியாம செடியில நெறையப் பூக்களை அப்படியே விட்டிருக்கோம். செம்பருத்தியும் அப்படியே.

முருங்கையெல்லாம் காய்ச்சு காய்ச்சு திங்க ஆளில்லாமக் கெடந்தது. பொன்னாங்கன்னிக் கீரையெல்லாம் பறிச்சு பறிச்சு சமைச்சாலும் சருசருன்னு வளந்திரும்.

இப்பவும் செய்ய ஆசைதான். அப்பார்ட்மெண்ட்ல எப்படிச் செய்றது! :)

said...

ரசித்தேன்.

said...

சுவையோ சுவை... பயணக் களைப்பு எங்களுக்கில்லையே... ஆசைதீர படித்தோம்.. ரசித்தோம்...

said...

கருணையோடு அவற்றுக்கு சிகிச்சை அளித்து காட்டிலே விடும் முறை போற்றுதலுக்குரியது.

படங்களுடம் பகிர்வும் மிக அருமை.

said...

வாங்க கோமதி அரசு.

உங்கள் ரசிப்புக்கு என் நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அழகை ஆராதிக்கும் பண்புக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜீரா.

சட்னு பார்க்க ஒன்னு போல இருந்தாலும் ரெண்டும் வேற வேற இனம்தான். ஓட்டர்ஸ்க்கு இருக்கும் இணைஞ்ச விரல்கள் பீவருக்கு இல்லை.

பீவர் ஒரு எஞ்சிநீயர். அதுவும் சிவில்.

டேம் கட்டுறதில் எக்ஸ்பர்ட். ஒரு பெரிய மரத்தை அடிப்பாகம் கடிச்சுச் சுரண்டி கடைசியில் கொஞ்சம் பாக்கி வச்சுட்டு நகர்ந்துருது. காற்றில் மரம் அப்படியே சாய்ஞ்சதும் திரும்ப வந்து துண்டங்கள் போட்டு உருட்டிக்கிட்டுப் போய் தண்ணிரில் தள்ளி இழுத்துக்கிட்டே போய் அணை கட்டும் விதத்தை ஒரு சமயம் தொலைக்காட்சியில் பார்த்து அசந்து போயிட்டேன்.

அமேஸிங்!!!!!!!!!!

கொசுவத்தி சூப்பர்! நாகரிகம், விஞ்ஞான வளர்ச்சி, தொழில்வகைகள் என்று போகும் உலகில் நாம் இழந்தவைதான் கடைசியில் ஏராளமா இருக்கப்போகுது:(

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எனக்கும் பயணக்கதைகள் ஃபார் ஆர்ம்சேர் ட்ரவலர்ஸ் வாசிக்கும்போது
களைப்பே தெரிவதில்லை:-)))))

உங்கள் ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கருணை இல்லைன்னா மனித வாழ்வில் என்ன பயன்?

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

ஆஸ்பத்திரி டிஸ்கவரியில்தான் பார்த்திருக்கின்றேன். இப்போது உங்க கூடவந்து பார்த்து விட்டோம்.

அந்த நிலாவைத்தான் கையிலே பிடித்தேன்....:) வாவ்.