ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்ட கோவில் இது. பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் இதை மேலும் விரிவுபடுத்திக் கட்டுனாங்க. அதுக்குப்பிறகு நாலைஞ்சு நூற்றாண்டுகளுக்குப்பிறகு விஜயநகரப் பேரரசு இன்னும் விஸ்தரிச்சுக் கட்டிட்டாங்க. குறிப்பாக் கிருஷ்ண தேவராயர் காலத்தில் பொன்னும் பொருளுமா வாரி வாரிக்கொடுத்துருக்கார். ( அதுலே இருந்த பல வைர நகைகளையும் மற்ற ஆபரணங்களையும் யாரோ ஆட்டையைப் போட்டுட்டாங்களாமே! கோவில் சொத்தைத் திருடறவன் அந்தக் காலத்துலேயே இருந்துருக்கானா????)
நூற்றியெட்டு திருத்தலங்களில் இதுவும் ஒன்னு. குலசேகர ஆழ்வார் பாடி இருக்கார். பெருமாளின் திவ்ய அழகையும் முகவிலாசத்தையும் கண்டு அப்படியே சொக்கிப்போய் எனக்கு எதுவுமே வேணாம். உன்னைப் பார்த்துக்கிட்டுக் கிடந்தாலே போதுமுன்னுட்டார்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசலிலே
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே.
அந்தக் காலத்துலே கூட்டமே இருந்துருக்காது. இப்ப மட்டும் அவர் வந்துருந்தாருன்னா..... அவருக்கும் நமக்குக் கிடைச்ச ட்ரீட்மெண்ட்தான் கிடைச்சுருக்கும். கையைப் பிடிச்சிழுத்துக் கடாசி இருப்பாங்க:(
விஜயநகர வீழ்ச்சிக்குப்பின் மராட்டா தளபதி ராகோஜி போ(ன்)ஸ்லே, கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தவர், வேங்கடமுடையானுக்கு பச்சைக்கல் மரகதப் பதக்கம் உட்பட செல்வங்களை வழங்கி இருக்கார்.
அதன்பிறகு முகலாயர்கள் காலம் ப்ரிட்டிஷார் காலம் என்று வந்து போச்சு. இந்தப் பெருமாளே(உற்சவர்) .... ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்தவர்தான். முகலாயர்கள் படையெடுப்பில் இவரை அழியவிடாமல் காப்பாத்தி ஒளிச்சுவச்சு இங்கே கொண்டுவந்துட்டாங்க.
வெள்ளைக்காரர்களுக்கும் இந்தக் கோவிலின் செல்வச்சிறப்புக் கண்ணை உறுத்தித்தான் இருக்கு. கோவில் நகையிலே கைவச்சால் மக்கள் கொதிச்சுப்போய் ஆட்சிக்கு ஆபத்துன்னு அடக்கி வாசிச்சு இருந்துருப்பாங்க போல! ஷாஜஹானின் மயிலாசனம், கோஹினூர் வைரம், மராட்டா வைர வாள் எல்லாம் என்ன ஆச்சுன்னு உங்களுக்கும் தெரியும்தானே?
1933 வது வருசம் சென்னை ராஜதானி சட்டசபையில் கோவிலை நிர்வகிக்கத் தனியா ஒரு ஸ்தாபனம் நிறுவணுமுன்னு பில் பாஸ் பண்ணியதும்தான் இந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு உருவாச்சு. இதுக்கான கமிஷனரை அரசாங்கமே நியமிச்சது. 1951 வது வருசம் தனியா நிர்வாகத்துக்குன்னே ட்ரஸ்டிகளை வச்சுக்கலாம் என்று திருத்தம் செஞ்சாங்க. அந்த சமயத்துலே ஆந்திர மாநிலம் உருவாகி கையில் இருந்த வற்றாத பொக்கிஷம் அந்தப் பக்கம் போயிருச்சு:( திருத்தணியும் அந்தப் பக்கம் போயிருச்சுதான். அதுக்கு பெரிய போராட்டம் எல்லாம் நடத்தினாரு தமிழரசுக் கழக மா.பொ.சியார். ட்ரஸ்டிகள் வந்தாங்க. இவுங்க பண்ணும் அட்டகாசம் தாங்க முடியலைப்பா. இப்ப தொலைதூர தரிசனம் ஒன்னு ஆரம்பிச்சு இருக்காங்களாம். எப்படி? எவ்வளவு தொலைவு? கட்டணம் கட்டிட்டு நம்ம வீட்டில் இருந்தே பார்த்துக்கணுமா?
நாலு ஆள் போகும் இடத்தில் எட்டுபத்து ஆட்கள் இடிச்சுக்கிட்டு வந்தா நல்லவா இருக்கு? ஆணாவது பெண்ணாவது? நாலும் விட்டால்தான் நாராயணன்! பலசாலியா இடிக்கத் தெரிஞ்சவர் வெல்வர்! பட்டுடுத்து....பட்டுடுத்து.....மேலே பட்டுடுத்து......தமிழ்க்கலாச்சாரக் காவலர்கள் என்ன சொல்வாங்களோ? பஸ்லே பக்கத்துக் காலி இருக்கையில் வேற ஒரு ஆண் உக்கார்ந்தாலே விருட்ன்னு எந்திரிக்கணும் என்பது இங்கே பெண்களுக்குப் போதிக்கப்பட்டு இருக்கே!
தரிசனத்துக்குக் குவியும் மக்கள் இவுங்களைப் பொறுத்தவரை காசு கொண்டு வந்து போடும் ஆடுமாடுகள். கள்ளப்பணத்தை கோடியா கோடியாக் கொண்டுவந்து கொட்டிக்கொடுக்கும் மக்களுக்கு இருக்கும் மரியாதை, கால்வயிறு கஞ்சிக்கும் வழி இல்லாம கிடைச்சதில் பைஸா பைஸாவாச் சேர்த்து உண்மையான உள்ளன்போடு கொண்டுவந்து உண்டியலில் போடும் ஏழைக்கு இல்லவே இல்லை:(
காசேதான் கடவுளடா...... அந்தக் காசு(ம்) இருந்தால்தான் கடவுளடான்னு ஆகிக்கிடக்கு. ஹூம்..........
கோவிலைப் பற்றிப் பக்தி பூர்வமா இன்னும் கூடவே தெரிஞ்சுக்கணுமுன்னா 'பதிவர் கண்ணபிரான் ரவிஷங்கர் ஆழ்வார்' தன்னுடைய மாதவிப் பந்தலில் நன்னாவே விஸ்தரிச்சு உபந்நியாஸம் செஞ்சுருக்கார். அங்கே ஒரு எட்டுப் போயிட்டு வாங்க. மறக்காம நூல் பிடிச்சுப்போங்க:-)
நாம் உக்கார்ந்த மண்டபத்தில் இருந்து தங்க விமானம் தெரியுதுன்னு சொன்னேன் பாருங்க. அதில் மேற்கு திசைப் பக்கம் பார்த்தால் சின்னதா பெருமாள் நின்ன கோலத்தில் இருக்கார். பொதுவா திருப்பதி வெங்கடேசன் படங்களில் இருக்கும் பாருங்க. அந்த மாதிரி அலங்காரத்தில். இவரை விமான வெங்கடேஸ்வரர்ன்னு சொல்றாங்க. நமக்கு அடையாளம் காமிக்க வெங்கடேசனுக்குச் சின்னதா ஒரு பிரபை/திருவாச்சி போட்டுவச்சுருக்கு:-) எங்கே இவரை விட்டுருவோமோன்னு போர்டு வச்சுருப்பது நல்லதாப் போச்சு.
கருவறையைச் சுற்றி இருக்கும் முதல் பிரகாரம் இது. பெரிய பெரிய உண்டியல்கள் திரைமறைவில் தலை நீட்டுது. காசு போடப்போன கோபாலை தடுத்து நிறுத்திக் கொஞ்சமா பாவம் சம்பாதிச்சுக் கிட்டேன். அடுத்தவன் கல்யாணத்துக்குக் கடன் வாங்குனா அதை நாமா கட்டணும்? அதுவும் வெறும் வட்டி மட்டுமேவாம். கடன் பட்டார் நெஞ்சம் இவனுக்கு இல்லை போல! தூக்கம் வருமா? (அய்ய....தூங்க விட்டாலும்............... ராத்திரி ஒன்னரைக்கே எழுப்பிடறாங்க:( பெரும் ஆளின் புலம்பல்)
மண்டபங்களின் வெளிப்புறச் சுவரில் மேலே கோவிலின் தலவரலாறு சுதைச்சிற்பங்களா இருக்கு. நின்னு பார்க்க முடியாமல் ஜனக்கூட்டம் இடிச்சுக்கிட்டுப் போறாங்க. கண்ணாடி தடுப்பில் உண்டியலில் காசு எண்ணும் இடம், என்னதான் ஃப்ராஸ்டட் க்ளாஸ் என்றாலும் ரூபாய் நோட்டுக் குவியல்கள் லேசுபாசாத் தெரியுது. கண்ணுக்குப் பழக்கப்பட்ட பொருள் பாருங்க:-)
பாஷ்யகார் சந்நிதின்னு ராமானுஜர் மற்ற சில ஆழ்வார்கள்(?) சிலைகளும் கம்பிக்கதவுக்குப் பின்னே! அன்னமாச்சார்யார் திரு உருவம் பார்த்த நினைவு. இந்தப் பக்கம் வரதராஜன், அந்தப் பக்கம் யோக நரசிம்மர். இவரைச்சுற்றி வந்தால் ஒரு பெரிய வட்டக் கல். பரிமளக்கல்லாம். அதுலே பெண்கள் கூட்டம் ஒன்னு விரலால் என்னமோ வட்டவட்டமா எழுதிக்கிட்டே இருக்காங்க. ஜிலேபி ஜிலேபியா விரல் நகருது. ஓஹோ....தெலுங்கு எழுத்து! என்ன ஏதுன்னு தெரியலை நானும் விரலால் துளசி கோபால்ன்னு இங்க்லீஷில் எழுதிட்டேன். தமிழில் எழுதி இருக்கலாம்................இந்த தமிழ் துரோகி:(
அப்புறம் மக்கள்ஸ் என்னதான் எழுதுறாங்கன்னு விசாரிச்சேன். கோரிக்கைகளாம்! வெறும் விரலாம் எழுதுனா கண்ணுக்குப் புலப்படவாப் போகுது? சாமிக்கு மட்டும் தெரியுமோ என்னவோ?
பிரஸாதம் விநியோகம் நடந்துக்கிட்டே இருக்கு மடைப்பள்ளிக்குப் பக்கம். தொன்னையில் சூடா ததியோன்னம் (தயிர்சாதம்) 'நீர்மோர்' விட்டுப் பிசைஞ்சு இருந்தாங்க. (வெந்நீர் பழையது நினைவு வந்து தொலைக்குதே..... ஆனாலும் உனக்கு நாக்கு ரொம்ப நீளம்தாண்டியம்மா )
பங்காரு வாகிலிக்கு மேலே உள்ள தங்கக் கோபுரத்தைக் கும்பிட்டுக்கிட்டு வெளியே வரும் இடத்தில் கிருஷ்ணதேவராயர் மனைவிகளுடன் சுவரில் நிற்கிறார். 'நீர் கொடுத்த நகையெல்லாம் அபேஸ்' ன்னு சேதி சொல்லிட்டு கிழக்கு கோபுர வாசலைக் கடந்து இடது பக்கமாப் போனோம். எல்லாம் லட்டு வாங்கிக்கத்தான். அம்புக்குறிகளை ஃபாலோ பண்ணனும். இப்பெல்லாம் மெஷீந்தான் லட்டு பிடிக்குதாம். அதுக்குன்னு ஒரு பெரிய கட்டிடம் கோவில் மதிலுக்குத் தெற்குப்புறம் இருக்கு. உள்ளே போகலாமான்னு தெரியலை..... கடந்து நேரா நடந்தால் புஷ்கரிணி. கோவில் குளம். வலது பக்கம் இருக்கும் இன்னொரு கட்டிடத்துக்குப் போனால் நம்ம கையில் இருக்கும் சீட்டுக்கு மாடியில் போய் லட்டு வாங்கிக்கணும். அங்கே போனால் ஒருத்தர் கோவில் படம் போட்ட பையுடன் (பாலித்லீன் பைதான்) லட்டு எடுத்துக்கிட்டு நகர்கிறார். பை இல்லாதவர்களுக்குக் கையிலே லட்டுகள். பை எங்கேன்னால்..... கீழ் தளத்தில் விக்கறாங்களாம். ஏன்....மாடியிலேயே ஒரு கவுண்ட்டர் வைக்கக்கூடாதா? கீழே போய் ஒரு பை ரெண்டு ரூபான்னு ரெண்டு வாங்கினோம். திரும்ப மாடிக்கு வந்தால் ஆளுக்கு ரெவ்வெண்டு பெரிய லட்டுகள். இது ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் வாங்குனதுக்கு இலவசம்!
வந்தவழியாவே திரும்பிப்போனால் கூடுதல் லட்டுகள் காசு கொடுத்து வாங்கிக்க இன்னொரு கட்டிடத்தில் வரிசை ஒன்னு பிதுங்கி வழியுது. நாலு லட்டுகள் நூறே ரூபாய். அததுக்கு இடம் ஒதுக்கறோமுன்னு இப்படி அலைய விடறாங்களேப்பா:(
தன் கண்முன்னேயும் கோவிலுக்கு வெளியேயும் நடப்பவைகளைப் பார்த்து ஸ்ரீவைகுண்டத்தில் ஜாலியா உக்கார்ந்துக்கிட்டு, He must be laughing his head off
முடி கொடுத்துட்டுக் கிளம்பலாமுன்னு கல்யாணகட்டாவை நோக்கிப் போனோம். உச்சி வெய்யிலில் பெருமாளுக்குத் தீ மிதிச்சோம். அங்கேயும் பெரிய வரிசை காத்து நிக்குது. நாமும் அதில் கலந்தோம். ஒரு பத்துநிமிசக் காத்திருப்புக்குப்பின் உள்ளே இருந்து திரும்பும் வரிசை கொண்டு வந்த சேதி.......நாலுமணிக்குத்தான் வேலையை ஆரம்பிப்பாங்களாம். இப்போ லஞ்சு டைம். சுமார் மூணு மணி நேரம் காத்திருக்கணும்! நடக்கற காரியமா?
தப்பு அவன்மேல்தான். நான் கொடுக்க(வே) வந்தேன். ஆனால் நீ கொடுக்க வந்ததை சட்னு வாங்கிக்காமல் மூணு மணிநேரம் கழிச்சு வான்னா என்ன அர்த்தம்? சரி...... பழைய பாக்கியைக் கொண்டு வந்துருக்கோம். அதையாவது வரவு வச்சுக்குவியா? மாட்டேயா?
ஒரு நபரை நமக்காக அனுப்பி வச்சுட்டான்ப்பா. அவர் உள்ளே கல்யாணகட்டா உண்டியலில் போட்டுடறேன்னு சொன்னார். பொதியை அவரிடம் தந்துட்டு சீனு நம்மை இறக்கிவிட்ட வைகுண்டம் காம்ப்ளெக்ஸ் வாசலுக்குத் தீ மிதிச்சுக்கிட்டேப் போய்ச் சேர்ந்தோம்.
ட்ரைவருக்கு ஃபோன் போட ஏதுவா அங்கே ஒரு ஃபோன் சர்வீஸ் இருக்கு, ரெண்டே ரூபாய். வண்டி வந்துருச்சு. நேராக் கீழ்த் திருப்பதி. நடந்துவரும் பக்தர்களுக்காக மேற்கூரை போட்ட பாதை ஒன்னு புதுசா முளைச்சுருக்கு! நல்ல ஏற்பாடு. மழை வெய்யில் பாதிப்பு இருக்காது.
ஊர் இன்னும் பெருசா வளர்ந்துக்கிட்டே போகுது !
அடிவாரத்தில் கைகூப்பி நிற்கும் சிறிய திருவடிக்கு பெரிய வணக்கம் போட்டுக் கிளிக்கியாச்சு. ஹொட்டேல் பீமாவில் சாப்பாடு. முடிச்சுட்டுக் கோவிந்தராஜனைத் தேடிப்போனோம். இங்கேயும் கெமெரா செல்ஃபோன் ஒன்னும் கூடாது.
கோவில் நுழைவு வாசலிலே அட்டகாசமான வேலைப்பாடு!
கீழ் திருப்பதி ஆலயகோபுரம்
கேமெரா செல்கள் எல்லாத்தையும் கொடுத்து வாங்க சோம்பல் பட்டுக்கிட்டு முதல்லே நீ போய் பார்த்துட்டு வாம்மா. நான் அப்புறம் போறேன்னு சொல்லிட்டார்.(அதானே....... ஒன்னாப் போய்ப் பார்த்துட்டு எப்படி இருந்தான்னு பிச்சுப்பிடுங்கிடுவேனோன்னு பயமா(வும்) இருக்கலாம்) அவர் நீட்டிய இருபது ரூபாயை வேணாமுன்னுட்டு ஒரு பத்து ரூபாயை மட்டும் கையிலே பிடிச்சுக்கிட்டுக் கோவிலுக்குள் போனேன்.
கோவிந்த் கோவில் முகப்பு
சீக்ர தரிசனம் ரூ20ன்னு போர்டு! அட ராமா............ தாயார் சந்நிதியில் பெரிய வரிசை. ரெண்டு பேரையும் மனசில் நினைச்சு வணங்கிட்டு வெளியே வந்துட்டேன். கோபாலை உள்ளே போய் தரிசனம் பண்ணச் சொன்னால்...... நான் 'பார்த்ததே' போதுமாம்!
கிருமிகண்ட சோழன், கோவிந்தராஜரைக் கடலில் போட்டபிறகு சில வைஷ்ணவபக்தர்கள் சிதம்பரம் கோவிலில் இருந்த உற்சவரை இங்கே ஒளிச்சுக் கொண்டுவந்துட்டாங்க. அதை வச்சு ஸ்ரீராமானுஜர் பிற்காலத்தில் தன்னுடைய சீடனும், மன்னனுமான யாதவராஜாவின் உதவியுடன் கோவிலை எழுப்பினார், விவரம் கோவிலில் வைத்திருக்கும் தகவல் பலகையில் இருக்கு. (தசாவதாரம் சினிமாவை நினைச்சுக்குங்கோ)
கோவில்கடைகள் கலகலன்னு இருக்கு, அழகான பெருமாள் படம் ஒன்னு கண்ணைப் பறிச்சது. ஆனால் அளவு பெருசு என்பதால் ஆசைக்குத் தடா:(
கோவிந்தராஜர் கோவிலிலும் கூட்டம்தான்
அலர்மேல் மங்கையைக் காண திருச்சானூர் போய்ச்சேர்ந்தோம். ஒரு ஏழெட்டு கிலோமீட்டர் தூரம் இருக்கலாம். வாசலில் இறங்கியதும் ரெண்டு தாமரை மலர்கள் வெள்ளையில் ஒன்னு சிகப்பில் ஒன்னுன்னு என் கையில் திணிக்கப்பட்டன. அட! நல்ல வரவேற்பா இருக்கே!
தாயாருக்குச் சார்த்தவாம். விலை பத்தே ரூ. கோவில் தரிசனத்துக்கு மூணுவகையான பிரிவு. தரிசனம், ஸ்பெஷல் தரிசனம். சீக்ர தரிசனம். இந்த சீக்ர தரிசனம் இப்போ பரவலா எல்லாக் கோவில்களுக்கும் வந்துருக்கு போல! சூப்பர் ஃபாஸ்ட்! கட்டணங்கள் இந்த மூணுக்கும் முறையே இலவசம், பத்து ரூபாய், நூறு ரூபாய்.
நூறு ரூபாய் வாங்கினதால் சட்னு கருவறைக்கு அருகில் போகவும் வலம் வரவும் அனுமதிக்கிறாங்க. . வலம்வந்து கருவறைப்படிக்குப் பக்கத்துலே இருந்தக் கம்பித்தடுப்புலே பிடிச்சுக்கிட்டு நிக்கவும் இடம் கிடைச்சது. குங்கும அர்ச்சனை நடத்தி பிரஸாதம் கொடுத்தாங்க. பத்து நிமிசம் போல நின்னு தரிச்சிச்சோம். 'அங்கே' மலை 'அப்பன்' இருக்குமிடத்தில் நடக்கும் அட்டகாசங்களைத் தடுக்க வேணுமுன்னு சொல்லித் தாயாரிடம் விண்ணப்பிச்சேன். அநியாயத்துக்கு டிமாண்ட் க்ரியேட் பண்ணி வச்சால் நல்லாவா இருக்கு?
ஒரு மனிதர் போகும் வரிசையா நாலு இல்லை ஆறு தடுப்பு போட்டால் கிடைக்கும் ஒரு விநாடியில் மனமார தரிசிக்கலாம்தானே? முந்தியெல்லாம் குலசேகரன் படி தாண்டி பெருமாள் கிட்டக்கப்போய் ஸேவிச்ச காலம் எல்லாம் (ஏழு)மலையேறிப் போச்சே:(
கோவில் சுற்றி வரும்போது அழகர் சந்நிதிக்குள் நுழைஞ்சால்............. அதே ஸ்ரீநிவாஸன்!! தேவியரோடு அட்டகாசமா நிக்கறான். 'போதும் உன் புலம்பல்'ன்னு உதட்டில் ஒரு சிரிப்பு வேற! ஏகாந்த ஸேவை. பட்டர் பெயர்களைக் கேட்டு அர்ச்சனை செஞ்சு தீபாராதனை காட்டினார். நிம்மதியான தரிசனம். கோபாலின் கையில் ஒரு மஞ்சள் கயிறும் ( கொடுத்தார். அதை உடனே கோபாலின் கையில் கட்டிவிட்டேன். ரொம்பச் சின்னது. கழுத்துக்கு நீளம் போதாது:-)
கைக்கட்டு
அப்புறம்?
கிளம்பி போனவழியாவே சிங்காரச்சென்னைக்கு வந்து சேர்ந்தோம். போரூர் சந்திப்பில் முக்கால் மணி நேரக் கிடப்பு. அறைக்கு வந்தபோது மணி இரவு ஒன்பது. 2080 வரை ஜீவிச்சு இருந்தால் பெருமாளைக் கிட்டக்க ஏகாந்தமா 20 நொடிகள் பார்க்கலாமாம்! திமலா மனசில் வந்து போச்சு.
கோவிலுக்குள் கேமெரா அனுமதி இல்லைன்னு வண்டியிலே விட்டுட்டுப் போனதால் கோவில் படங்களைச் சுட்டுப்போட்டேன். மற்றபடி பதிவில் இருக்கும் பெருமாள் படங்கள் நம்ம வீட்டுப் பூஜை அறையில் எடுத்தவை. பாக்கி எல்லாம் பயணத்தில் வண்டியில் போகும்போது க்ளிக்கியவை.
வீட்டுப்பெருமாளிடம் நடந்தவைகளைச் சொன்னால் சிரிக்கிறான்!
PIN குறிப்பு : இவ்வளவு பட்டயே..... இனியும் போவியான்னு கேட்டால்............. போகணும். பெருமாள் தரிசனம் ரெண்டாம் பட்சமுன்னு வச்சுக்கிட்டு முதலில் கோவிலுக்குள்ளில் இருக்கும் சந்நிதிகளைச் சுற்றிப் பார்க்கணும் நிதானமாய். அப்படியே திருமலையில் இருக்கும் தீர்த்தங்கள் மற்ற இடங்களையெல்லாம் ஒரு நடை போய்ப் பார்த்துட்டுப் புஷ்கரணிப் படிகளில் ஒரு அரைமணி நேரமாவது உக்கார்ந்துட்டு வரணும். இதுக்குன்னே முழுசா ஒரு ரெண்டு நாள் ஒதுக்கணும்.
பெருமாளே.....இன்னும் நிறைய விவரங்கள்'அனுபவித்து' எழுத வேண்டி இருக்கு. சீக்கிரம் கூப்பிடும். சரியா?
எங்க கோபாலகிருஷ்ணனுக்கும் பெருமாளைப் பிடிக்கும்!
ஏடு கொண்டலவாடா....... வெங்கடரமணா............
கோவிந்தா கோவிந்தா..................
முற்றும்............ :-)
Saturday, June 18, 2011
நாலும் விட்டால்தான் நாராயணன்! திருமலைப் பயணம் மினித் தொடர் பகுதி 3 )
Posted by துளசி கோபால் at 6/18/2011 12:32:00 AM
Labels: Tirumala, அனுபவம் Thirupati திருப்பதி
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
ஏடுகொண்டலவாடா வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா….
திருப்பதி வேங்கடவனை கஷ்டப்படாமல் தரிசிக்கத் தந்தமைக்கு ஒரு நன்றியை முதலில் போட்டுடுவோம்.
இதுபோன்ற கோவில்களில், மக்கள் சௌகரியங்கள் அவ்வளவாக செய்யப்படாதது ஒரு குறையே. ஸ்ரீரங்கம் செல்லும்போதும் நான் பெருமாளை நினைத்துக் கொண்டு மற்ற பிரகாரங்களில் உள்ள ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டு வருவது வழக்கம். அதுவும் மக்களே இல்லாத இடமாய் பார்த்து “அவன்” எதிரே உட்கார்ந்து ஏகாந்தமாய் பேசிக் கொண்டு இருந்தால் என்ன சுகம்….
எந்தை கோயிலில் உங்களுக்கு நிகழ்ந்த தள்ளு முள்ளுகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் டீச்சர்!
அவன் தரிசன இன்பத்தை மட்டுமே கணக்கில் கொண்டால், இது போன்ற உபாதைகளின் வலி சட்டுன்னு மறைஞ்சி, அந்த ஆசை முகம் மட்டுமே நினைவில் தங்கி விடும்!
ஆலயங்களில் கூட்ட மேலாண்மை-க்கு இன்னும் நிறைய செய்யணும்! இதெல்லாம் professionals கிட்ட குடுத்தால், அழகாக மாற்றித் தருவார்கள்! அரசியல் தடுக்கிறது!:(
//கிருஷ்ணதேவராயர் மனைவிகளுடன் சுவரில் நிற்கிறார். 'நீர் கொடுத்த நகையெல்லாம் அபேஸ்' ன்னு சேதி சொல்லிட்டு கிழக்கு கோபுர வாசலைக் கடந்து இடது பக்கமாப் போனோம்//
சிரித்து விட்டேன்! ராகவன் கிட்டேயும் சொல்லிச் சிரிச்சிக்கிட்டே இருக்கேன்! இதான் டீச்சர்! நாக்கும் நீளம், வாக்கும் நீளம்:)
இப்போதைய கோயில் அமைப்பு 9ஆம் நூற்றாண்டு, பல்லவ அரசி சாமவை கட்டியது என்றாலும்...
அதற்கு முன்பே, தொல்காப்பிய காலத்திலேயே வேங்கடம் உள்ளது! அவனும் உள்ளான்! இது போன்ற மதில் சூழ்ந்த ஆலயம் தான் இல்லை! கிபி 2ஆம் நூற்றாண்டிலேயே ஆலயம் இருந்துள்ளது!
இளங்கோ அடிகளும் வேங்கடவனைச் சங்கு சக்கரங்களோடு படம் பிடித்துக் காட்டுகிறார்!
பின்னாளில் சில அரசியல் காரணமாக, வேங்கடத்தில் இருப்பது என் ஆசை முருகனோ, அவனோ-இவனோ என்று சிலர் கிளப்பி விட்டாலும்...
கிபி 2ஆம் நூற்றாண்டிலேயே...இளங்கோ அடிகள் அழகாகக் காட்டி விடுகிறார்!
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மாமலை உச்சி மீமிசை
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்-பூ-ஆடையில் பொலியத் தோன்றிய
செங்கண் மால் நெடியோன் நின்ற வண்ணமும்
கேரள நாட்டுக் குலசேகராழ்வார் மட்டுமில்லை...
பன்னிரு ஆழ்வார்களில் பத்து பேர் பாடிய தலம் = திருமலை! திருவரங்கத்துக்கு அடுத்தபடியாக மொத்தம் 202 பாசுரங்கள்!
தொண்டரடிப்பொடி அரங்கனைத் தவிர மறந்தும் புறம் தொழாதவர்; அதனால் அவர் பாடவில்லை!
மதுரகவி, நம்மாழ்வாரைத் தவிர இறைவனைக் கூடப் பாடவில்லை!
=So 10/12 :)
//இப்ப மட்டும் அவர் வந்துருந்தாருன்னா..... அவருக்கும் நமக்குக் கிடைச்ச ட்ரீட்மெண்ட்தான் கிடைச்சுருக்கும்//
முற்றிலும் உண்மை! :)
ஏமி ஆள்வாருலு? டிக்கெட் உந்தியா? ஜருகு நாயனா, ஜருகு-ன்னு சொல்லிடுவாய்ங்க...
ஆனா முதற்கண், ஆழ்வார் அப்படி influence/quota use பண்ணிப் போகவும் மாட்டாரு அல்லவா! அவருக்குத் தான் மனவேங்கடம் இருக்கே!:))
மனவேங்கடமே மன வேங்கடம்!:)
//காசு போடப்போன கோபாலை தடுத்து நிறுத்திக் கொஞ்சமா பாவம் சம்பாதிச்சுக் கிட்டேன்//
ஹிஹி! பாவமா? புண்ணியம்-ன்னு சொல்லுங்க!
கோயில் உண்டியலில் காசு எந்த ஆழ்வாரும் போடலை! இப்போ நீங்களும் போடலை! :)
அதுக்கு ஆகுற காசை, செக்கா எழுதி, குழந்தைக் காப்பகங்களுக்குக் குடுத்தா, வேங்கடவன் முகத்தில் புன்னகை கூடும்!
தங்கம் வேய்ஞ்சி வராத புன்னகை, தரித்திர ஏழ்மைக் குடும்பம் படிச்சி வரும்!
//பாஷ்யகார் சந்நிதின்னு ராமானுஜர் மற்ற சில ஆழ்வார்கள்(?)//
அது ஆழ்வார்கள் இல்லை! கருடன், அனந்தன், சேனை முதலியார் போன்ற படைத் தலைவர்கள்! ஆழ்வார்களுக்கு ஆலயத்தின் உள்ளே சிலை கிடையாது! எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் மனிதர் மனிதரே! 'சுவாமிஜி' ஆகி விட முடியாது என்பதைக் காட்ட ஆழ்வார்கள், மன்னர்கள் என்று அனைவருக்கும் திருச்சுற்றுக்கு வெளியே தான்!
உடையவர் ஒருவரே exception! அவர் திருமலைக்கு கையால் செய்த தொண்டுக்காக!
//அன்னமாச்சார்யார் திரு உருவம் பார்த்த நினைவு//
அது அன்னமாச்சார்யர் எழுதிய கீர்த்தனைச் சுவடிகள் வைக்கப்பட்ட அறை!
//இவரைச்சுற்றி வந்தால் ஒரு பெரிய வட்டக் கல். பரிமளக்கல்லாம்//
:)
அதெல்லாம் ஒன்னும் இல்ல! சந்தனம் அரைக்கும் கல்லு! அவ்ளோ தான்! மக்களா கிளப்பி விட்டுக்கறது:)
அந்தக் கல்லை ஒட்டிய சிறு அறை (யோக நரசிம்மருக்கு பக்கமாக)! அதுக்குப் பேரு யமுனைத் துறை! அங்கே தான் பூக்கட்டி, இங்கு சந்தனம் அரைப்பது வழக்கம்!
//உள்ளே இருந்து திரும்பும் வரிசை கொண்டு வந்த சேதி.......நாலுமணிக்குத்தான் வேலையை ஆரம்பிப்பாங்களாம். இப்போ லஞ்சு டைம். சுமார் மூணு மணி நேரம் காத்திருக்கணும்! நடக்கற காரியமா//
:)
கல்யாண கட்டாவில் கெடுபிடிகள் அதிகம்!
கோயிலை ஒட்டிய Ram Bagicha Guest Houseகளில் தனியாக இருவர் வந்து முடியெடுப்பர்! எந்நேரமும் இருப்பர்! அடுத்தமுறை பயன்படுத்திக் கொள்ளவும்!
//வைகுண்டம் காம்ப்ளெக்ஸ் வாசலுக்குத் தீ மிதிச்சுக்கிட்டேப் போய்ச் சேர்ந்தோம்//
Next time you can try socks! keep it in the hand bag! பாட்டியை இப்படித் தான் அழைத்துச் சென்றேன், வெயில் படாமல்:)
//அதை உடனே கோபாலின் கையில் கட்டிவிட்டேன். ரொம்பச் சின்னது. கழுத்துக்கு நீளம் போதாது:-)//
கோபால் சாருக்கு கை-மாங்கல்யமா?
//: இவ்வளவு பட்டயே..... இனியும் போவியான்னு கேட்டால்............. போகணும்//
:)
ஐ லைக் இட்!
//பெருமாள் தரிசனம் ரெண்டாம் பட்சமுன்னு வச்சுக்கிட்டு முதலில் கோவிலுக்குள்ளில் இருக்கும் சந்நிதிகளைச் சுற்றிப் பார்க்கணும் நிதானமாய். அப்படியே திருமலையில் இருக்கும் தீர்த்தங்கள் மற்ற இடங்களையெல்லாம் ஒரு நடை போய்ப் பார்த்துட்டுப் புஷ்கரணிப் படிகளில் ஒரு அரைமணி நேரமாவது உக்கார்ந்துட்டு வரணும்//
திருமலையில் ஆகாசகங்கை, பாபவிநாசம், குமாரதாரை போன்ற நீர்நிலைகள் இருந்தாலும், அதற்கும் மேலே...அதிசயக் கல் வளைவு, இயற்கை மலை முகடு, எம்பெருமானின் பூந்தோட்டப் பள்ளத்தாக்கு-ன்னு நிறைய இடம் இருக்கு!
திருமலைநம்பி, ஹதிராம்ஜி போன்றவர்களின் இடங்களும், அருங்காட்சியகம், பாடசாலை, வராக சுவாமி ஆலயம், படித்துறை-ன்னு பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய! அதுவும் இயற்கை இடங்கள் இன்னும் நிறைய!
//தொன்னையில் சூடா ததியோன்னம் (தயிர்சாதம்) 'நீர்மோர்' விட்டுப் பிசைஞ்சு இருந்தாங்க. (வெந்நீர் பழையது நினைவு வந்து தொலைக்குதே..... ஆனாலும் உனக்கு நாக்கு ரொம்ப நீளம்தாண்டியம்மா )//
ஹிஹி
வெறும் தயிர்ச் சோறு தான் கிடைச்சுதா?
திருமலையில் எம்பெருமானுக்கு மண் சட்டியில் தயிர்ச் சோறும், மிளகு வடையும் மட்டுமே நிவேதனம்! லட்டு எல்லாம் சும்மா juz for fun:)
ஆனாலும் எனக்கு fun தானே வேணும்? இதோ பிரசாத லிஸ்ட்:)
சின்ன லட்டு
கொழுகொழு கல்யாண லட்டு
சுறுசுறு மிளகு வடை
நாவுக்கு காரமான நாசூக்கு புளிஹோரா (புளியோதரை)
சித்ரான்னம்
சக்கரே பொங்கலி (சர்க்கரைப் பொங்கல்)
வெண் பொங்கல்
கனமான அப்பம்
வாசனை தோசை
ஜீராலு
பாயசாலு
சாற்றமுது (ரசம் சோறு)
இன்னும் சில பல நொறுக்குகள்..சுகியம் முதலியன :))
பின்னூட்ட மூச்சு வாங்குது! நான் இதையெல்லாம் சாப்பிட்டு பைய வாரேன்! :)
ஒக்க இஸ்மாயில் ரிக்வெஷ்ட்டு
//பதிவர் கண்ணபிரான் ரவிஷங்கர் ஆழ்வார்' தன்னுடைய மாதவிப் பந்தலில் நன்னாவே விஸ்தரிச்சு//
அது ரவி'ச'ங்கர் or KRS:)
ஆல்சோ, அவன் பொடியன்! அவனைப் போயி ஆழ்வார்-ன்னுகிட்டு! எடுத்துறங்களேன்!
தரிசனத்துக்குக் குவியும் மக்கள் இவுங்களைப் பொறுத்தவரை காசு கொண்டு வந்து போடும் ஆடுமாடுகள். கள்ளப்பணத்தை கோடியா கோடியாக் கொண்டுவந்து கொட்டிக்கொடுக்கும் மக்களுக்கு இருக்கும் மரியாதை, கால்வயிறு கஞ்சிக்கும் வழி இல்லாம கிடைச்சதில் பைஸா பைஸாவாச் சேர்த்து உண்மையான உள்ளன்போடு கொண்டுவந்து உண்டியலில் போடும் ஏழைக்கு இல்லவே இல்லை
மிகவும் நல்ல கருத்து
ஆனாலும் ஒவ்வொரு முறையும் தரிசித்து விட்டு வரும் போது இருக்கும் கோபம் அவன் மலை விட்டு இறங்கும் முன்னமே இறங்கிவிடுகிறதே , என்ன செய்ய
நல்ல பதிவு அம்மா
நாராயணன் தர்சனமே.
துளசி,
திருமலை தரிசனத்திற்கு ரொம்ப நன்றி.
எப்பொழுதும்
வருடத்திற்கு இரண்டு தடவை போவது வழக்கம். அனுபவம் அப்படியே தங்கி இருக்கும்.
இனிமையாக.
இரண்டு மூன்று தடவைகளாகப் பட்ட கசப்பு அனுபவங்கள் அதுவும் பணத்தை ஆயிரக்கணக்கில்
கட்டியும் அவனைப் பார்க்க முடிந்தது அதே இரண்டு செகண்டுகள் தான்.
அதுவும் வல்லரக்கிகள் போல அவர்கள் தள்ளும் விதம்....ஜன்மத்துக்குப் போதும்.
என்டா இந்த வருஷம் ஆரம்பிச்சிடுச்சி இன்னும் கணக்கு ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன்...டீச்சர் புண்ணியத்துல ஆரம்பிச்சாச்சி ;))
மூன்றாவது படம் அருமையாக இருக்கு.
வாங்க வெங்கட் நாகராஜ்.
ஆமாம். அவனோடு பேசும் சுகமே தனி!!!
என்ன ஒன்னு........ தூரக்கே இருந்து என்னைப் பாக்கறவங்க 'மறை கழண்ட கேஸ்'ன்னு நினைச்சுப் பயப்படுவாங்க:-)))))
வாங்க கே ஆர் எஸ்.
மனிதத் தள்ளுமுள்ளுக்கு நீங்க ஏன் பதறுகிறீர்கள்?
தரிசன இன்பம் கிடைக்கவே இல்லையேப்பா:( அதானே இந்தப் பொறுமலே!
அவன் ஆதியில் இருந்தே இருக்காந்தான். கோவிலாக் கட்டியதுதான் ஒன்பதாம் நூற்றாண்டு இல்லையோ?
ஏழையின் சிரிப்பில் இறைவனைப் பார்க்கணும் என்பதுதான் நமக்கு முக்கியம். நம்மால் ஆன பொருள் உதவிகளை ஒரு தரும ஸ்தாபனத்துக்குச் செய்வதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவேது?
அங்கியே பரிமளக்கல்லுன்னு ஒரு போர்டு போட்டு வச்சுருக்கு!
ஒருக்கா அங்கே புளியோதரை கிடைச்சது. அப்போ சாப்பிட பயம். இப்போ ரெண்டு வருசமா வயிறு கொஞ்சம் பழகிருச்சு. ஆனால் உங்க லிஸ்ட் ஐட்டம் எதையுமே அவன் கண்ணுலே காட்டலை:(
தன் முகமே காட்டாதவன், சக்கரைப்பொங்களைத் தூக்கித் தரப்போறானாக்கும்.... )மோவாயைத் தோளிலே இடிச்சுண்டு....)க்கும்.....
அல்லிக்கேணியில் ஆழ்வார்கள் கருவறை முன் மண்டபத்தில் இருக்காங்களே!!!!! பார்க்கலையா?
எதையும் தூக்க எனக்கு ஆக்ஞை இல்லையாக்கும் கேட்டோ......
பெருமாள் வந்து சொல்லட்டும் பார்க்கலாம். எய்தவன் அவனாக்கும்......
(இவ ஒருத்தி..... எதுக்கெடுத்தாலும் ஆக்கம் ஆக்கம்னுட்டு)
வாங்க ஏ ஆர் ஆர்.
உண்மைதான். இன்னொருக்கக் கூப்புட்டாத் துள்ளிக்கிட்டுக் கிளம்புவேன்தான். என் மனக்குறை எல்லாம் கோவில் ஆட்களிடம்தான். வல்லரக்கிகள்ன்னு வல்லியம்மா சொல்லிட்டாங்க:-)))))
வாங்க மாதேவி.
பின்னூட்டம் எப்படி களைகட்டி நிக்குதுன்னு பாருங்க. எல்லாம் 'அவன்' செயல்:-)
வாங்க வல்லி.
வல்லரக்கிகள்..... ஆஹா...... தூய தமிழ்ச் சொல்! ஐ லைக் இட் :-)
வாங்க கோபி.
பாடல் பெற்ற இடுகையை வாசிச்ச புண்ணியம் உமக்கு!
அடுத்த வகுப்புலே ராஜஸ்தான். அர்ரியர்ஸ் எல்லாம் முடிக்கணும் கேட்டோ:-)
வாங்க குமார்.
ஒரு நிமிசம் வண்டியை நிறுத்தி எடுத்திருக்கலாமோன்னு இப்போ தோணுது.
எப்படிம்மா.... அதே பதினெட்டாம் தேதி நேத்து... நானும் இதையே எழுதியிருக்கேன்...நீங்களும்....
ஆச்சர்யம்தான் போங்க!
//அல்லிக்கேணியில் ஆழ்வார்கள் கருவறை முன் மண்டபத்தில் இருக்காங்களே!!!!! பார்க்கலையா?//
Oops! Didnt express properly!
திருமலையில் மட்டுமே ஆழ்வார் சன்னிதி கிடையாது! உட்-பிரகாரத்தில் இறைவன், பரிவார தேவதைகள் மற்றும் உடையவர் மட்டுமே! ஆழ்வார்கள் தங்கள் பாதம் ஆதிசேடனான மலை மேல் படவும் அஞ்சியதால்...
மற்ற பெரும்பாலான திவ்யதேசங்களிலும் ஆழ்வார் சன்னிதி உண்டு! அல்லிக்கேணி உட்பட:)
வாங்க கிரி ராமசுப்ரமணியன்.
வேங்கடவனா கொக்கா!!!!! எல்லோரையும் எழுத வச்சுட்டானே!!!!
கே ஆர் எஸ்.
யானைக்கும் (இப்படி) அடி சறுக்குமோ!!!!!
nice description.
உங்க புண்ணியத்தில் நல்ல தரிசனம் கிடைத்தது. நன்றிங்க.
வாங்கோ தக்குடு.
ஸேவிச்சாச்சா?
சித்தப் பொறுப்பா. எல்லாம் ரெடியாகிண்டு வருதுன்னு சொன்னாரா?
சீக்கிரம் நல்லவளா அமையட்டும் என்று ஆசி வழங்குகிறோம்!!
வாங்க கோவை2தில்லி.
'எல்லாம் அவன் அருள்' இல்லியோ!!!!
Thulasi Mami
This is Srinivas Gopalan not Thakkudu :)) of course we have the same first name.
ஸ்ரீநிவாஸ் கோபாலன்,
அப்படியா!!!! அட நாராயணா........
ஆளை மாத்திட்டேனா?????????
அந்த உம்மாச்சித்தான் காப்பாத்தணும், கேட்டோ:-)))))
நல்ல விளக்கமான பதிவு . கோவிலுக்கே போயிட்டு வந்த மாதிரி இருந்தது .
எவ்வளவு நெரிசல் இருந்தாலும் , ஒரு முறை மூச்சு திணறும் அளவு ஆனப்பவும்
திரும்ப போகணும் என்ற எண்ணம் ,ஆசை எப்பவும் வந்துட்டு தான் இருக்கு
வாங்க சசி கலா.
ஆசைதான். ஆனால் ஆசையே (நம்) துன்பத்திற்குக் காரணம் என்று கூட சொல்லி வச்சுருக்காங்களே!!!!
ஆசை அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும்..... ஆசை அறுமின் !!!!
நானும் 'வேண்டுதலை' அங்கே போய்தான் நிறைவேத்தினேன். அதுக்கு முன்னாடி மகளோடது, என்னோடதுன்னு சேகரிச்சு வெச்சதையெல்லாம் உண்டியல்ல போட்டேன். இன்னும் கூட எனக்கு ஒரு 'வேண்டுதல்' இருக்கு. பார்ப்போம்..
வாங்க அமைதிச்சாரல்.
தரிசனம் கிடைச்சதோ????
//தரிசனம் கிடைச்சதோ???//
ஆஹா.. திவ்யமாக் கிடைச்சது.
Post a Comment