அஞ்சு நிமிச நடையில் இருக்கே..... மெள்ளப் போய்வரலாம்தானேன்னு சிறுநடையில் ஏத்தமும் இறக்கமுமா இருக்கும் 'சந்துத்தெரு'வில் போறோம். அழகழகான ஓவியங்கள் விற்கும் கடைகள் அடுத்தடுத்து இருக்கு. சந்தில் போய் கீழிறங்குமிடத்தில் பெரிய பிரமாண்டமான இரும்பு வாணலிகள் அடுக்கடுக்காய் கட்டிப்போட்டுக் கிடக்குது. சந்து முடிவில் இடதுகைப்பக்கம் திரும்புனா கோவில். ஜக்தீஷ் மந்திர்! ( எல்லாம் மதியம் ஹவேலியைத் தேடி நாம் வந்த வழிதான்)
பளிங்குப்படிகள் முப்பத்தி ரெண்டு ஏறணும். மேல் படியில் ரெண்டு பக்கமும் சங்கிலி போட்டுக் கட்டிவச்ச ரெண்டு பெரிய பளிங்கு யானைகள், பக்கத்துக்கொன்னா துதிக்கையைத் தூக்கி வா வா''ன்னு கூப்புடுது.
நேரா பெரிய சுவர் தெரியும் முன் கதவுக்குள்ளே நுழையறோம். இது என்னடா குறுக்கில் ஒரு நந்தி ..... ன்னு சுவரைக் கடந்தால்...இந்த சுவர், கருடரின் சந்நிதியின் பின்பக்கச் சுவர்! பத்துப் படிகள் ஏறிப்போகும் உசரத்தில் மனுஷ்ய ரூபத்தில் முழிச்சுப் பார்க்கும் கண்களும் கூரான வளைஞ்ச கருடன் மூக்குமா பெரிய திருவடி இதோ ரெடி என்னும் நிலையில் சட்னு எழுந்துவரத் தோதா இருக்கார். பெரிய அளவு பித்தளைச் சிலை. இந்த கருடாழ்வார் மண்டபமே வேலைப்பாடுகளுடன் ரொம்ப அழகா இருக்கு!
ஜெய்ப்பூரில் ஹவா மஹலுக்கு அக்ராஸ் ஒரு லக்ஷ்மிநாராயணன் கோவில் பார்த்தோம் பாருங்க.... அதே டிஸைனில் இந்தக் கோவிலும் இருக்கு. இங்கேயும் கருடாழ்வார் சந்நிதிக்கு நேரெதிரா பத்துப்படிகள் ஏறி மூலவரை தரிசனம் செஞ்சுக்கணும். பெரிய திருவடியும் பெருமாளும் கண்ணோடு கண் நோக்க ஏதுவா ஒரே ' ஐ லெவலில்' இருக்காங்க.
நல்ல கறுப்புப் பளிங்குச்சிலையில் நாராயணனும் லக்ஷ்மியியும் ஒரு ஜொலிப்புடன் மின்ன கோவில் மணி ஓசை அந்தப் பகுதி முழுக்க ஓங்கி ஒலிக்க ஆரத்தி நடக்குது. பனிரெண்டு வெங்கலமணிகளை ஒரு கட்டையில் கோர்த்து மாட்டி உசரத்துலே பிடிப்பிச்சு இருக்காங்க. அதன் ஒரு பக்கம் இருக்கும் கயிற்றைப்பிடிச்சு ஆட்டும்போது பனிரெண்டும் குலுங்கிச் சிரிக்குது!!! ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரேன்னு வடக்கே பாடும் வழக்கமான ஆரத்திப் பாட்டு. நல்ல கூட்டம். தீர்த்தம் கிடைச்சது.
ஆரத்தி முடிஞ்சதும் பக்தர்கள் கூட்டம் அப்படியே கீழே அமர்ந்து பஜனை பாட ஆரம்பிச்சாங்க. நாங்களும் முன்மண்டபப் படிகளில் வந்து உட்கார்ந்துக்கிட்டோம். கீழே உட்கார என் முழங்கால் முட்டிக்கு பயம். தலையைத் திருப்பிப் பெரிய திருவடியையும் பெரும் ஆளையும் மாறி மாறிப் பார்க்க இதுதான் வசதி.
தரிசனம் முடிஞ்சு திரும்பி வரும் பக்தர்கள் மூலவருக்கு முதுகைக் காமிக்காமல் பின்னாலேயே நடந்து முதல் படி வந்ததும் அதில் முன்நெற்றி தொட தலை வச்சுப் படுத்துட்டு அப்படியே ஒவ்வொரு படியா பின்னாலேயே கால் வச்சு ஒவ்வொரு படிக்கும் முன் நெற்றியைத் தொடக் கொடுத்து இறங்கிப் போறாங்க. கடைசிப்படி வந்தவுடன் திரும்பி கருடாழ்வாருக்கு ஒரு பெரிய கும்பிடு. அப்புறம் படிகளின் இடப்பக்கம் ஒரு சின்ன மேடையில் இருக்கும் விஷ்ணு பாதங்களுக்கு குனிஞ்சு இன்னொரு தலை முட்டல். கூடுதல் செழிப்பான உடல்களும் கூட குனிஞ்சு கும்பிடும் நேர்த்தியைப் பார்த்தப்ப....... 'எனக்கு' பக்தியே இல்லைன்னு தோணுச்சு:(
மூலவருக்கு முதுகுப் பக்கம்!
கோவிலை வலம் வந்தோம். ஜெய்ப்பூர் கோவிலுக்கும் இதுக்கும் உள்ள வித்தியாசம் கண்ணில் பட்டது. நாலு பக்கச் சுவரிலும் வரிசை வரிசையா அடுக்கடுக்காச் செதுக்குச் சிற்பங்கள். யானைகளும் குதிரைகளும், பசுக்களும் கன்றுகளும் பறவைகளும் பூக்களும் மனிதர்களும் தேவர்களுமா எதைச் சொல்ல, எதைவிட?
முதலை (வாய்) தண்ணீர்! கருவறையில் அபிஷேகம் ஆனதும் வெளிவரும் தீர்த்தத்துக்கு வாய்பிளந்து காத்திருக்கு:-)
அண்ணாந்து உச்சிக் கோபுரத்தைப் பார்க்கும்போது மூச்சு நின்னதும் உண்மை. மூணடுக்கு மாடியும் உச்சியில் நெடுநெடுன்னு போகும் கோபுரமும் சட்னு த்வார்கா கோவிலை நினைவுக்குக் கொண்டுவந்துச்சு. ஆமாம்.... அச்சு அசல் த்வார்க்கா தீஷ் கோவிலின் வடிவம்தான். அங்கே ஏழடுக்கு. இங்கே மினியேச்சர் போல மூணடுக்கு.
இந்தக் கோவிலுக்கு வயசு 350! மஹாராணா ஜெகத்சிங் 1651 இல் கட்டி இருக்கார், உச்சிக்கோபுரத்தின் உயரம் எழுபத்தி ஒன்பது அடி! அதில் படபடவென கொடி பறந்துக்கிட்டு இருக்கு! என்ன அழகான தூண்கள்! அந்தக் காலத்துலே இந்தக் கோவிலைக்கட்ட பதினைஞ்சு லட்சம் ரூபாய் செலவு. ரூபாய்க்குப் பத்து பவுன் இருந்துருக்குமோ என்னவோ? எனக்குத் தெரிஞ்சே எங்க பாட்டி சொல்லக் கேட்டுருக்கேன் ஒரு நூறு வருசம் முந்தி 1900 களில் பவுனு பத்து ரூபாய்ன்னு.
மூலவர் சந்நிதி இருக்கும் தனிக் கோவிலுக்கு வெளியில் நாம் வலம் வரும்போது மூலைக்கு ஒன்னா அளவான சின்னக் கூம்பு கோபுரத்துடன் நாலு தனிச் சந்நிதிகள். முதலில் புள்ளையார், அவருக்கு நேர் எதிரா அந்தப் பக்கம் சூரியபகவான் ( இந்த மஹாராணாக்கள் சூர்ய வம்சத்தினர்) அடுத்த பக்கம் துர்கையும் நேர் எதிரா சிவனுமா இருக்காங்க.
நாலு மூலைக்கோவிலில் இது சிவன் சந்நிதி.
தரிசனம் முடிஞ்சதுன்னு மெதுநடையில் ஹவேலிக்குப் போய்ச் சேர்ந்தோம். ராச்சாப்பாட்டுக்கு மாடிக்குப் போனால் அங்கே யாருமே இல்லை. நாம்தான் லேட்டா சாப்பிட வந்தோமோ, இல்லைன்னா ஊருக்கு முந்தி சாப்பிட வந்துட்டோமோன்னு ......மணி எட்டரை ஆச்சு. சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்துட்டு ஜன்னல் வழியாத் தெரிஞ்ச ஏரியையும் மின்னும் விளக்குகளையும் பார்த்துக்கிட்டு இருந்தோம். மறுநாள் நமக்காக ஒரு கைடுக்கு ஏற்பாடு செஞ்சுருக்கார் ஓனர் ஹரிஷ். முடிஞ்சவரையில் சுத்திப் பார்த்துறணும்.
அப்போ ஒரு அம்மாவும் பொண்ணுமா வந்து நம்ம பக்கத்து டேபிளில் உக்கார்ந்தாங்க. ஒரு புன்னகையை அள்ளி வீசி 'ஹை' சொன்னேன். கொஞ்ச நேரத்தில் அந்தம்மா நீங்க சென்னையான்னு ஹிந்தியில் கேட்டாங்க. அட! தெரிஞ்சு போச்சா!!!! எப்படி?
வேலூர் சி எம் சியில் சிகிச்சைக்காக ஆறு மாசம் இருந்தாங்களாம்! சொந்த ஊர் குஜராத்தில் இருக்கு. த்டீர்னு கண்ணு தெரியாமப் போயிருச்சு.
பல மருத்துவமனைகளிலும் காமிச்சுருக்காங்க. என்னென்னவோ மருந்துகள். ஒன்னும் சரியாகலை. அப்புறம் யாரோ சொன்னாங்கன்னு.... வேலூர் போயிருக்காங்க. கண் பக்கத்துலே இருக்கும் நரம்பு ஒன்னு பாதிக்கப்பட்டி இருக்குன்னு அங்கே சிகிச்சை செஞ்சாங்களாம். பூரண குணமாகும்வரை ஆறுமாசம் தங்கி இருந்துருக்காங்க. இப்போ கண் நல்லாத் தெரியுது. பிரச்சனையே இல்லைன்னாங்க. படபடன்னு மகள் நம்ரதா சொன்ன விவரங்கள்:-)
கேக்க சந்தோஷமாவும் கொஞ்சம் பெருமையாவும்கூட இருந்துச்சு. நம்ம பக்கத்து ஆஸ்பத்திரிகளையும் கோவில்களையும் நல்லாவே தெரிஞ்சுவச்சுருக்காங்க வடக்கர்கள் பலர். இப்படித்தான் பாருங்க சண்டிகரில் நமக்குப் பல் வைத்தியம் செய்யும் டாக்டர் ஒருநாள் திடீர்னு கர்ப்ப ரக்ஷகாம்பாள் கோவில் சென்னையில் இருந்து எவ்ளோ தூரமுன்னு கேட்டாங்க. சரியாத் தெரியலை. கும்பகோணத்துக்குப் பக்கம் இருக்குன்னு நினைக்கிறேன். பார்த்துச் சொல்றேன்னேன். அவுங்களுக்கு கன்ஸீவ் பண்ணுவதில் எதோ பிரச்சனை இருந்து, யாரோ சொன்னாங்கன்னு வேண்டிக்கிட்டாங்களாம். இப்போ ரெண்டரை வயசு Bபவ்யா வீட்டை அதகளம் பண்ணிக்கிட்டு இருக்காள்:-)
நம்ரதா என்ற பெயரில் ஒரு நடிகைகூட இருக்காங்களேன்னேன். இந்த நம்ரதா டூரிஸம் படிக்கும் மாணவி. கடைசி வருசம். ஒரு அஸைன்மெண்டுக்காக உதய்பூர் வந்துருக்காங்க ரெண்டு மூணு நாளைக்கு. பண்டிகை வருதேன்னு அம்மாவும் கூட வந்தாங்களாம். நம்ம ஹவேலியில்தான் அறை எடுத்துருக்காங்க.
நாளைக்கு இந்நேரம் கால் வைக்க இடம் இருக்காது இந்தப் படித்துறையில்' சொல்லி லால்காட்டைக் கைநீட்டிக் காமிச்சாங்க.. என்ன பண்டிகை? வஸந்த நவராத்ரியா? அதுவும்தான். ஆனா இது வேற திருவிழா. கங்கோர் ஃபெஸ்டிவல். அது இங்கே இந்த Gகாட்டில்தான் நடக்கும். மாலை நாலுமணிக்கே இந்தப் பக்கம் போக்குவரத்தை எல்லாம் நிறுத்திடுவாங்க!
ஆஹா.... நமக்குத் தெரியாமல் போச்சேன்னதுக்கு கைப்பையில் வச்சுருந்த ஒரு நோட்டீஸை எடுத்துக் கொடுத்தாங்க. அட! பாருங்களேன்..... நாம் பாட்டுக்கு தேமேன்னு இருந்தாலும் எப்படி விவரங்கள் வந்து விழுதுன்னு!!!!
திடீர்னு அந்தம்மா.... நாங்கள் ப்ராமின்ஸ்ன்னாங்க. ஓஹோ... அப்படியான்னு தலையை ஆட்டுனோம். பதிலுக்கு நாம் யாருன்னு சொல்வோமுன்னு எதிர்பார்த்தாங்கன்னு முகத்தில் தெரிஞ்சது:-) வேலூர்லே இதையே சொல்லி இருப்பாங்களோ? அப்போ என்ன ரியாக்ஷன் கிடைச்சிருக்குமுன்னு எனக்கு யோசனை. என்னவோ போங்க....
தொடரும்.....................:-)
Friday, June 24, 2011
ஓம், ஜெய் ஜகதீஷ் ஹரே....((ராஜஸ்தான் பயணத்தொடர் 24)
Posted by துளசி கோபால் at 6/24/2011 01:55:00 AM
Labels: அனுபவம் ஜக்தீஷ் மந்திர் Jagdeesh Mandir Udaipur Rajastham
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
படிக்க படிக்க
திகட்டாத
ஆன்மீக அனுபவ
நிகழ்வுகள்
இடையிடையே மெல்லிதாய்
இழையோடும் நகைச்சுவை
உங்களின் எழுத்து
கிரீடத்தில் பதிக்கப் பட்ட
மரகதம்
அற்புதமாய் நகர்கிறது
நாங்களும் உங்களின் வார்த்தைகளின் வழியே
பயணிக்கிறோம்
தெவிட்டாத இன்பம் - காணக்கண்கோடி வேண்டும் என்பது போல சிற்ப வேலைகள் இந்த கோவிலின் கோபுரங்களில்...
நல்ல பகிர்வு.
350 வருஷப் பழைய கோவிலா!!!!
குறிப்புக்கள் சூப்பர்.
பவுனு 3000த்துக்கும் வெள்ளி 1 கிராம் 3 ரூபாய்க்கும் வித்திருக்குன்னு பசங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். டைம்மிஷினும் கொஞ்சம் பணமும் ஏற்பாடு செய்யலாம்னு ரெண்டு ப்ளான் போடுதுங்க!! :)) இந்த 100ருவாய் மேட்டரைச் சொன்னா எப்படி இருக்கும்!!!!!!!!!!!
கோயில்களின் அழகை முழுசும் ரசிக்க ஒரு ஜென்மம் போதாது போலிருக்கு..
கோலிலின் சிற்பக்கலை பிரமாதம். பகிர்வுக்கு நன்றி.
அருமையான பதிவு. அருமையான படங்கள். சிற்பங்கள் பேசுகின்றன.
உங்கள் மூலம் எல்லா ஸ்தலங்களையும் பார்க்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்.
நன்றி அம்மா.
சிற்ப வேலைப்பாடுகள் மயக்க வைக்குது.
"ஒவ்வொரு படியா பின்னாலேயே கால் வச்சு ஒவ்வொரு படிக்கும் முன் நெற்றியைத் தொடக் கொடுத்து இறங்கிப் போறாங்க....."
அம்மாடியோ... வேறொரு எக்ஸசைசும் உடம்புக்குத் தேவையில்லை.
வாங்க ஏ ஆர் ஆர்.
கூடவே வருவதற்கு என் நன்றிகள்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
நம் தமிழகக்கோவில்களில் தூண்களில் சிற்பங்கள் அழகழகா இருந்தாலும் இந்தப் பக்கங்களில் இப்படி சுவர் முழுதும் சிற்பங்கள் என்பது ........ஆச்சரியமாத்தான் இருக்கு!
வாங்க புதுகைத் தென்றல்.
உண்மையாவே எங்க கல்யாண சமயத்தில் பவுன் 100 ரூபாய்தான். ஆனாலும் அதை வாங்கிக்க நமக்கு ஐவேஜ் நஹி:(
100 என்பது அப்போ ரொம்பப் பெரிய காசு!!!!
அப்போ அரசுவேலைக்கே பஞ்சப்படி உள்ப்பட 130 வந்தாலே அதிகம்!
வாங்க அமைதிச்சாரல்.
ஒருவேளை இவைகளை அனுபவிக்கணுமுன்னே நமக்கு ஏழேழ்பிறவி கொடுத்துருக்கானோ என்னவோ?
அப்படியும் 49க்குள் பார்த்துருவோமா?
வாங்க கோவை2தில்லி.
உங்க ஊர் அக்ஷர்தாம் போயிருப்பீங்கதானே? சமீபகாலத்துக் கோவிலில் கூட சுவர் முழுதும் சிற்பங்களா, என்ன அழகு பார்த்தீங்களா!!!!!!
வாங்க ரத்னவேல்.
எல்லாம் அவன் அருள்!
வாங்க மாதேவி.
அப்படியும் உடம்பு இளைக்கலையேப்பா பலருக்கு!!!!
திடீர்னு அந்தம்மா.... நாங்கள் ப்ராமின்ஸ்ன்னாங்க. ஓஹோ... அப்படியான்னு தலையை ஆட்டுனோம். பதிலுக்கு நாம் யாருன்னு சொல்வோமுன்னு எதிர்பார்த்தாங்கன்னு முகத்தில் தெரிஞ்சது:-) HAIYO THULASI:)
PICTURES TELL THEIR OWN TALES. BEAUTIFUL THULASIMAA.
"யாம் பெற்ற இன்பம் பெறுக அனைவரும்" என்ற மூதுரைக்கு ஏற்ப காணக்கிடைக்காத சிற்பங்களை வெளியிடும் தங்களுக்கு என் பணிவான நன்றி!---பத்மாசூரி.
வாங்க வல்லி.
நம்ம கொளுகை அந்தம்மாவுக்குத் தெரிஞ்சு இருக்காதேப்பா:-)))))
இது அப்போ.....படம் பார்த்துக் கதை சொல்:-))))
வாங்க பத்மாசூரி.
உங்க ரசிப்புக்கு என் நன்றி.
அழகெல்லாம் கொட்டிக்கிடக்குது அங்கே!!!!!!
Post a Comment