Wednesday, December 22, 2010

காவியமா......... நெஞ்சில் ஓவியமா..........இங்கே பாடினால் தப்பாங்க?

நல்ல பனி மூட்டம். சாலை மசமசன்னு இருக்கு. நெடுஞ்சாலை என்றதால் கொஞ்சம் அகலம். வழியில் பார்த்த சில ட்ரக்குகளின் வாசகங்களைப் படிச்சுக்கிட்டே வந்தோம். 'Bபூரி நஜர் வாலே தேரா மூ(ஹ்) காலா'. சில வண்டிகளில் கூடுதல் வசவுக்காக ஒரு செருப்புப் படம்!

ரெண்டு தலைமுறையை இந்திப் படிக்கவிடாமல் புண்ணியம் கட்டிக்கிட்டவங்களைச் சொல்லணும்.எத்தனை ஃபன்களை மிஸ் செய்யறாங்க பாருங்களேன்:-)
மதுரா ரிஃபைனரீஸ் கடக்கும்போது எக்கச்சக்க டேங்கர் லாரிகள் வரிசைகட்டி நின்னு எண்ணெய் வாங்கிக்கிட்டுப் போகுதுங்க. இந்தப் புகையால்தான் தாஜ் கறுப்பாகிக்கிட்டே வருது. பளீரென்ற வெண்மைக்கும் சிகப்பழகுகளுக்கும் தொலைக்காட்சியில் காமிக்கும் ஏராளமான வகைகளில் உள்ள அழகு சோப்புகள் போட்டுக் குளிப்பாட்டக்கூடாதா?


ஆக்ராவுக்கு ஒரு எட்டு கிலோமீட்டர் முன்னாலேயே சிக்கந்த்ரா வந்துருது. என்ன விசேஷம்? எல்லாம் நம்ம அக்பர் சக்ரவர்த்தியின் கல்லறை இருக்கும் இடம்தான். எல்லா மதமும் சம்மதமுன்னு காட்ட எல்லா மதத்துலேயும் பொண்ணு கட்டிக்கிட்டார். அஃபிஸியலா 36. அதுலே ரொம்ப முக்கியமானவங்க மூணுபேர். இஸ்லாமிய, கிறிஸ்துவ, இந்து மதங்களைச் சேர்ந்தவங்க. இவருடைய கல்லறையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துலே பிரியும் சாலைக்குள்ளே போனால் மிரியம் என்ற மனைவியின் கல்லறை இருக்கு.(நாம் அங்கே போகலை)

நம்ம தசரதனுக்கு ( அதாங்க ராமரின் அப்பா) அறுபதினாயிரம் மனைவிகள்ன்னு மிகைப்படுத்திச் சொல்றதுபோல நம்ம அக்பருக்கு மூவாயிரம் மனைவிகள்ன்னு சொல்றாங்க. என்னதான் சக்கரவர்த்தின்னாலும் கட்டுப்படியாகி இருக்குமா சொல்லுங்க!

அக்பர் சமாதி இருக்குமிடம்தான். சிக்கந்த்ரா தேசிய நெடுஞ்சாலை 2 லேயே இருக்கு. ரொம்ப அழகான வேலைப்பாடுகளுடன் இருக்கும் சிகப்பு மணல்கற்கள் கட்டிடம். எனகென்னமோ தாஜ்மகலைவிட இதுதான் ரொம்பவே அழகுன்னு படுது. ஒரு 16 வருசத்துக்கு முன்னே முதல்முறையா இங்கே வந்தது நினைவுக்கு வந்துச்சு. மாற்றங்கள் ஒன்னும் இல்லாம அப்படிக்கப்படியே இருக்கு.

கட்டிடக்கலையில் ரொம்ப ஆர்வம் காட்டிய அக்பர் தன்னாட்சி காலத்துலே ஏகப்பட்ட கோட்டைகளையும் அரண்மனைகளையும் கட்டி இருக்கார். தன்னுடைய கல்லறைக்கான இடத்தையும் தேர்வு செஞ்சு கட்டிடத்தையும் டிஸைன் செஞ்சு அதைக் கட்டவும் ஆரம்பிச்சார். ஆனா வேலை முடியுமுன்னேயே (வருசம் 1605) அவருக்குப் போய்ச்சேரும்படியா ஆச்சு. அவரது மகன் ஜஹாங்கீர்தான் 1612 வது ஆண்டு இந்தக் கல்லறைக் கட்டிடத்தைப் பூர்த்தி செஞ்சார்.
தோரணவாசல்
முன்வாசல் 75 அடி உசரம். தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கு இந்த சமாதி. வெளிநாட்டு சுற்றுலாக் குழுவினர் நடமாடிக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் போனமுறை தில்லி சுற்றுலா குழுவில்தான் வந்தோம். வசதி என்னன்னா நம்மகூடவே ஒரு கைடும் வருவார். காலையில் கிளம்பி சிக்கந்தரா, ஆக்ரா, ஆக்ரா கோட்டை காமிச்சுட்டு ராத்திரி 9 மணிக்கு தில்லியில் கொண்டு விட்டுருவாங்க.நாங்க போன பயணத்தில் பேருந்து பழுதாகி அத்துவானக்காட்டில் நின்னு ஆள் வந்து சரிசெஞ்சு ராத்திரி 12 மணிக்குப்போய்ச் சேர்ந்தோம்.


பத்து ரூபாய் நுழைவுக் கட்டணம். வீடியோ எடுக்கணுமுன்னா கூடுதல் 25 ரூ. மற்றபடி கேமெராவுக்கு கட்டணம் ஒன்னும் இல்லை. பேருக்கு சில செக்யூரிட்டி. பெண் செக்யூரிட்டி ஒருத்தர் இருக்கார். ரொம்ப வயசானவர், தலையைத் தூக்கக்கூட முடியலை. சுவரில் சாஞ்சு உக்காந்துக்கிட்டு நம்மைப் பார்த்து ஒரு தலை அசைப்பு. அவ்ளோதான்.
சுற்றுச்சுவர்களில் கூட கல்லால் ஆன ஜன்னல்கள் அழகை அள்ளிக்கிட்டுப் போகுது. என்ன ஒரு வேலைப்பாடுன்னு அதிசயிக்கத்தான் முடியுது!
சுத்திவர பெரிய தோட்டத்தின் நடுவே அட்டகாசமான கட்டிடம். நுழைவு வாசலுக்கும் சமாதிக் கட்டிடத்துக்கும் இடையில் தண்ணீர் ஓடைகள். செயற்கை நீரூற்றுகள், கூடுதல் தண்ணீர் வழிஞ்சு ஓடும் அமைப்புகள் இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்சுருக்காங்க.
சமாதிக் கட்டிடத்தின் நடு வாசலுக்கு ரெண்டு புறமும் அறை அறைகளா இருக்கு. எல்லாத்துக்குள்ளும் ரெண்டு மூணு கல்லறைகள். யார் என்ன என்ற விவரம் ஒன்னும் இல்லை. சின்னதா இருப்பது சின்னப்பிள்ளைகளோடதுன்னு நினைச்சுக்கிட்டேன்.

மெயின் வாசலில் நுழைஞ்சால் உசரமான விதானங்களில் அழகான ஓவியங்கள். காலத்தால் கொஞ்சம் மங்கல். கொஞ்சம் சரிவான ரேம்ப் போல் இருக்கும் சின்ன வழி நம்மை அக்பர் பாதுஷாவின் சமாதிக்குக் கொண்டு போகுது. நல்ல சதுரமான பெரிய ஹால். ரொம்பவே உசரமான மேற்கூரை. நட்ட நடுவில் சதுரமான ஒரு பெரிய பளிங்கு மேடையின் சமாதி. மெல்லிய ஒளியோடு அலங்கார விளக்கு ஒன்னு சமாதிக்கு மேலே தொங்குது. சுவர்களில் சித்திரங்களோ, இல்லை வேலைப்பாடுகளோ இல்லாமல் ரொம்பவே சிம்பிள். காற்றுக்காக உசரத்தில் குட்டியா ஜன்னல்கள். முகலாய சாம்ராஜ்யத்தின் பெருமைக்குக் காரணமாயிருந்த பேரரசரின் சமாதி இவ்வளோ எளியதா இருக்கேன்னு வியப்புதான்.
சமாதி அறைக்கு வழி
அக்பர் சமாதி


ராஜஸ்தான் கட்டிடக்கலையும் முகலாயக் கட்டிடக்கலையும் சேர்ந்த அழகு மனசுலே பதிஞ்சு போகுது. நாலு புறமும் ஒரே மாதிரி சதுரமான வெளிஅமைப்பு. நீண்டு கிடக்கும் கூடங்கள் காவியமா நெஞ்சின் ஓவியமா பாடத்தான் வேணும். பாடினேன். அங்கே தாஜில் பாடமாட்டியான்னார். உண்மையில் முகலாய சாம்ராஜ்ய தீபம் அக்பர்தான். அதான் இங்கேயே (தொண்டை சரி இல்லாத நிலையிலும்) பாடறேன். கூட்டமே இல்லாத காலிக்கூடங்கள் இங்கேதானே இருக்கு!!!!!

நல்ல பராமரிப்புடன் இருக்கும் சுத்தமான புல்வெளியில் மான்கள் எல்லாம் ப்ளாக்பக் வகை.

பக்கத்துலே இருக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போகும் பிஞ்சுகள்.
சிக்கந்த்ராவின் ஸப்ஜி மண்டி (கொத்தவால் சாவடி) சாலையை ஒட்டியே இருக்கு. முள்ளங்கி மலைகள், கீரைக்குன்றுகள்ன்னு பச்சைப்பசேல்! யமுனையை ஒட்டியே போகும் சாலை, அக்கரைக்குப் போகும் பாலம் எல்லாம் கடந்து ஆக்ரா ஊருக்குள் நுழைஞ்சோம். போக்குவரத்து போலீஸ் நம்ம வண்டியை ஓரங்கட்டச் சொல்லி கைச்செலவுக்கு அம்பது ரூபாய் வாங்கிக்கிட்டார். எல்லா பேப்பர்ஸும் இருக்கா? இருக்கு. இது ரொம்பத் தப்பு.. ஒழுங்கா எல்லாம் வச்சுருந்தால் சட்டப்படிக் குற்றம்!!!!

ஆக்ராக் கோட்டையைச் சுத்திப்போகும் சாலையின் மறு கோடியில் நாம் தங்கவேண்டிய ஹொட்டேல் இருக்கு. போகும் வழியில் தாஜ்மஹல். பார்த்துட்டே போயிடலாமுன்னு கோபால் சொன்னதை நல்லவேளையாக் கேட்டேன். என்னுடைய ஒரிஜனல் ப்ளான் படி அது மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை வரவேண்டியது.

இந்த முறை(யும்) ஆக்ரா கோட்டைக்குள் போகும் எண்ணம் எனக்கில்லை. போனமுறை நல்ல கோடையில் வந்துட்டு (52 டிகிரி செல்ஸியஸ்) மகள் துவண்டு போனதால் கோட்டை முகப்பில் தோரணவாசல் காவல்காரருடன் பேசிக்கிட்டே இருந்துட்டோம் நானும் மகளும். கோபால்தான் வீடியோ கேமெராவில் கோட்டை முழுசும் படம் புடிச்சுக்கிட்டு வந்தார்.

ஆக்ரா கோட்டை


கார் பார்க்கிங் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வச்சுருக்காங்க. நினைவுப்பொருட்கள் விற்கும் கடைகள், தாஜ்மஹல்வரை நம்மைக்கொண்டுபோக ஒட்டகவண்டிகள் எல்லாம் எக்கச்சக்கமாக் குவிஞ்சுருக்கு இந்த கார்பார்க்கில். இதெல்லாம் கூட போனமுறை வந்தப்ப இல்லை. சமீபத்தில் வந்ததா இருக்கும். அப்போ நேரா முகப்புக்குப் பக்கத்தில் பஸ் போய் நின்னது.
ஒட்டக வண்டியில் இதுவரை போகலையேன்னு பத்தே ரூபாய்க்குக்கொண்டு விடறேன்னு சொன்ன வண்டியில் ஏறின அடுத்த வினாடி....வண்டி ஓட்டி, குண்டு போட்டார்! 'இங்கே கலைப்பொருட்கள் எம்போரியத்தில் பத்து நிமிசம் பார்த்துட்டுப்போகலாம்'னு.

பாங்காக் மாதிரி இங்கேயுமா....................... 'ருக்கோ ருக்கோ'ன்னு அலறிக்கிட்டே வண்டியில் இருந்து குதிச்சோம். சைக்கிள் ரிக்ஷா ஒன்னு கிடைச்சது. மேற்கு வாசலில் கொண்டு இறக்கிவிட்டார். நுழைவுச்சீட்டு இப்போ 20 ரூபாய். வெள்ளிக்கிழமை சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு.. தப்பிச்சோம்.

மக்களை வரிசையில் வைக்க புல்தரையெல்லாம் இரும்புக்கம்பிகள் நட்டு பாழாக்கி வச்சுருக்காங்க:( செக்யூரிட்டி செக் முடிஞ்சு முகப்பைக் கடந்து உள்ளே போனோம்.

தொடரும்............:-)

22 comments:

said...

தப்பே இல்லை. சிச்சுவேசனுக்கும் இட்த்துக்கும் தகுந்த பாட்டு. :)

said...

ப்ளாக்பக்.... சல்மானை மாட்டிவிட்ட மான் :-))

ஒட்டகக்காரங்க பாங்காக்ல போயி பயிற்சி எடுத்துட்டு வந்துருப்பாங்களோ.. ஒட்டகப்பால்ல டீயும், தயிரும் நல்லாருக்குமாமே... சாப்பிட்டீங்களா :-))

said...

மானை desktop வால்பேப்பருக்காக அழைத்து கொண்டேன்.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஆஹா.... சொன்னீங்களே ஆதரவா ஒரு சொல்!!!!

நன்றிப்பா.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வெளியே போனால் கண்ணைத்தவிர எல்லாத்தையும் இறுக்கிக் கட்டிருவேன்லெ:-)

ஒட்டகப்பால் டீ இருக்குன்னு வடிவேலுகிட்டே சொல்லிடணும்.

said...

வாங்க தமிழ் உதயம்.

மான்மேல் அவ்வளோ ஆசையா!!!!!

கொஞ்சம் விவரம் இந்தச் சுட்டியில் இருக்கு பாருங்களேன் நேரம் இருந்தால்....


http://thulasidhalam.blogspot.com/2010/02/27.html

said...

//மான்மேல் அவ்வளோ ஆசையா!!!!!//

அந்த சீதைக்கே ஆசையா இருந்தது தானே அத்தனையும் ஆச்சு !!

நல்ல வேளை !!!
எனக்கு அந்த மான் வேணும்னு நீங்க சொல்ல, அத புடிச்சுக்கிட்டு வர்றேன் அப்படின்னு
கோபால் வில்லும் கையுமா அதுக்குப்பின்னாடி ஓட ...

சே ! எப்படியெல்லாம் கற்பனை ஓடுது !!

அப்படியெல்லாம் நடக்காம் வெறும் ஃபோட்டோவை மட்டும் பிடிச்சுகின்னு வந்தாரே கோபால்
அவருக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லுங்க.

மீனாட்சி பாட்டி
http://vazhvuneri.blogspot.com
Seasons'Greetings
Happy New Year

said...

இந்தி படிக்க முடியாததற்கு நானும் வருந்துவது உண்டு இங்கிருக்கும் நம் பக்கத்து மாநிலத்தவர்கள்(ஆந்திரா,கர்நாடக) அனைவரும் இந்தி தெரிந்தவர்கள்.புல்வெளி,மான் அனைத்தும் அழகு டீச்சர்.

said...

ஆகா சூப்பர் இடம் டீச்சர்..அடுத்த இடத்துக்கு என்ன பாட்டு!? ;))

said...

//பளீரென்ற வெண்மைக்கும் சிகப்பழகுகளுக்கும் தொலைக்காட்சியில் காமிக்கும் ஏராளமான வகைகளில் உள்ள அழகு சோப்புகள் போட்டுக் குளிப்பாட்டக்கூடாதா?//

சிகப்பழகு க்ரீம்களை விட்டுட்டீங்களே :-)))

நம்மாட்கள் கமிஷன் அடிக்க வசதியா,தினமும் ஃபேர் அண்ட் லவ்லி தடவிவிடுறதுக்கு டெண்டர் விடுமா அரசாங்கம்? :-))

said...

படிச்சுட்டேன் துளசிமா. பின்னூட்டமிட தாமதம்.
வண்டியோட்டி, கடை எல்லாம் உங்களை விடாமல் துறத்துகிறார்களே.:)
அருமையான படங்கள். எங்கியோ சரித்திர காலத்துக்குப் போன அனுபவம்.

said...

வாங்க மீனாட்சி அக்கா.

அந்த மான் 'பொன்' மானாச்சேக்கா. ஒரு அம்பதுகிலோவாவது தேறாது?

//அப்படியெல்லாம் நடக்காம் வெறும் ஃபோட்டோவை மட்டும் பிடிச்சுகின்னு வந்தாரே கோபால்
அவருக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லுங்க.//

யக்கா....தங்கச்சிமேல் நம்பிக்கை வைக்கணும்க்கா.

மானைப் பிடிச்சவளும் நானே:-)))))

said...

வாங்க சுமதி.

இன்றையக் காலக்கட்டத்தில் பலமொழிகள் தேவையா இருக்கேப்பா.

குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டமுடியுமா?

said...

வாங்க கோபி.

அடுத்தபாட்டை எழுத கவியரசர் இல்லையே:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

புதுத் திட்டம், புது சட்டம்னு வந்ததும் ஊழல் எப்படி இயல்பா உள்ளே நுழைஞ்சுருது பாருங்க!!!!!

said...

வாங்க வல்லி.

காலத்துக்குபின்னால் போனாலே சரித்திரம்தானேப்பா:-))))

said...

'இங்கே கலைப்பொருட்கள் எம்போரியத்தில் பத்து நிமிசம் பார்த்துட்டுப்போகலாம்'னு//

அனுபவம் :))) அது என்ன உங்களை சரியா பிடிக்கிறாங்க ?

said...

சமாதி...எளிமையோ எளிமை.


எல்லோரும் அந்தமான் க்கு போயிட்டாங்கள்.:)

said...

புகைப்படங்கள், உங்கள் வர்ண்னை, சிச்சுவேஷனல் ஸாங், எல்லாமே அருமை. சுத்திப்பாத்த திருப்தி...பதிவை படிக்கும் போது. நல்லாயிருக்குங்க.

said...

வாங்க கயலு.

'ஏமாளி'ன்னு நெத்தியில் பச்சை குத்திக்கலை. ஆனாலும் எப்படியோ கண்டு பிடிச்சுடறாங்களேப்பா:-)))))

said...

வாங்க மாதேவி.

எளிமையா இருந்தார். உண்மையிலேயே பெரிய மனசு படைச்ச பெரியவர்தான்!

said...

வாங்க அம்பிகா.

நம்ம தளத்துக்கு முதல் வருகை போல இருக்கே!!!!!

வணக்கம். நலமா?

ஆதரவான சொற்களுக்கு நன்றிப்பா.

மீண்டும் வருக.