Friday, December 10, 2010

ஹரே ராமா...ஹரே கிருஷ்ணா

தொன்னை, இலை ஒன்னும் வேணாம் இப்படியே தரையில் போடுங்க. சாப்பிடலாமுன்னு சொல்லும் அளவுக்கு சுத்தமுன்னா சுத்தம் அப்படி ஒரு சுத்தம். ஒரு மண்டபத்துலே என்னமோ எடுத்து தொன்னையில் வைக்கறதைப் பார்த்ததும் இப்படித்தான் சொல்லத் தோணுச்சு. சாம்பார் சாதப் பிரசாதம்.

கோவிலுக்குப் போகும் வழியெல்லாம் பூச்செடிகளும், புல்வெளிகளுமா அடடாடா....... அழகான மணி மேடை. பூஜை சமயத்தில் ஒலிக்கும் போல!

மூங்கில் பட்டைகள் வச்சுப் புல்மேய்ஞ்சு பர்ணசாலை போல இருக்கேன்னா.... ரொம்பச்சரி. யாகசாலையாம். அலங்கார முகப்பைக் கடந்து மாடிக்குப் போகணும்.
சந்நிதிக்குப்போக ரெண்டு பக்கமும் படிகள். வட்டவடிவமான அறை. அந்த டூமுக்கு நேரா கீழே ஒருக்கு. இயற்கை வெளிச்சமும் செயற்கை வெளிச்சமுமா இருக்குமிடத்தில் தகதகன்னு ஜொலிக்கும் ஸ்ரீவேணுகோபாலனும் ராதையும். யாருமே இல்லை. ரொம்ப மெலிசான சப்தத்தில்

ஹரே ராமா ஹரே ராமா
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ணா ஹரே க்ருஷ்ணா
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

இஸ்கானின் மஹாமந்த்ரம் இடைவிடாமல் ஜபிக்கிறது.

எவ்வளோ நாளாச்சு இப்படி பட்டர்கூட இல்லாமல் தனிமையில் பகவானை சேவிச்சு...............

நாங்களும் பளிங்குத்தரையில் உக்கார்ந்து மனசடங்கி தியானம் செய்ய முடிஞ்சது. மாடிப்படி ஏறும் இடத்தில் சந்நிதியில் படம் எடுக்க வேண்டாம் என்ற வேண்டுகோளைக் கவனிச்சேன்.
அக்ஷ்ய பாத்ரா (நம்ம அட்சய பாத்திரம் தான்) ஃபவுண்டேஷன் ஏற்று நடத்தும் கோவில். இப்போ ஒரு பத்து வருசமாச்சு இது தொடங்கி. பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு சத்து நிறைஞ்ச உணவு வழங்கும் திட்டம். நாட்டின் பல பாகங்களிலும் கிளைகள் விரிச்சுப் படர்ந்திருக்கு. இவுங்களைப் பற்றிய தகவல் இங்கே இருக்கு பாருங்க. 1500 பிள்ளைகளுக்கு தினசரி சாப்பாடு. (ஓ அதானா சாம்பார் சாதம் வழங்குமிடத்தில் பள்ளிக்கூட சீருடையுடன் ரெண்டு மாணவர்கள் வெளியே பெஞ்சில் இருந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க)
வளாகத்தில் செடிகளால் ஆன சுவர்கள் அழகா டிஸைனா வெட்டி இருக்காங்க. நடுவில் ஒரு ஆம்ஃபி தியேட்டர் கூட இருக்கு. மேடைக்கு ரெண்டு பக்கமும் சவுண்டு சிஸ்டம் வச்சுக்க ஒரு அறை. இந்தப்பக்கம் இன்னொரு அறை (ஒப்பனைக்காக இருக்கலாம்) . நீளமா வளைஞ்சு போகும் செயற்கை குளம் ஒன்னு. இஸ்கான் ஸ்டேண்டர்டா வச்சுருக்கும் ரதம் ஒன்னு செய்யும் வேலை நடக்குது.
இவ்வளவு சுத்தம் பார்த்து பிரமிச்சுப் போனதென்னவோ நிஜம். அப்ப.... மக்கள் 'நினைச்சால்' சுத்தமாக வச்சுக்க முடியும்!!!!!

அதே ஃபீலிங்ஸோடு அடுத்துப் போனது இஸ்கான் கோவில். வாசலில் பூ விற்பனை, சாலைக்கு எதிர்ப்பக்கம் வரிசையா இருக்கும் சாமிப்பொருட்கள், காவி ஆடைகள் கடை. இப்போ புதுசா வந்துருக்கும் 3D சாமிப் படங்களைக் கொத்தாகப் பிடிச்சு நமக்கு விற்க முயலும் விற்பனையாளர்கள், பழக்கடை, தீனிக்கடைன்னு இந்த கேட்டில் மட்டும் ஒரே ஆரவாரம். தள்ளுவண்டி நிறைய பச்சையா ஒரு காய்! சிங்காடாவாம். நான் முழிச்ச முழியைப் பார்த்துட்டு அங்கே இருந்த பெரியவர் அதை உரிச்சு இப்படித் திங்கணுமுன்னு டெமோ கொடுத்துக்கிட்டே ஏழெட்டை உள்ளெ தள்ளிக்கிட்டார். விற்பனையாளர்..... இப்போ அவர் பங்குக்கு முழிச்சார்:-)

இது ஒருவகையான இந்தியன் செஸ்ட்நட்டுன்னு கூகுள் சொல்லுது.

எலெக்ட்ரானிக் கேட்டைக் கடந்து வளாகத்துக்குள்ளே போகணும். அருமையா கட்டிடம், அத்தனையும் பளிங்கு! முகப்பு தோரணவாயிலையொட்டி இடது வலது ரெண்டு பக்கமும் பெரிய அறைகள்.
இடதுலே ஸ்ரீப்ரபுபாதாவின் சமாதி. இருக்கு. அதன் மேல் தங்கச்சிலை வச்சுருக்காங்க. எல்லா இஸ்கான் கோவில்களிலும் சந்நிதியைப் பார்த்தபடி இவர் சிலை இருக்குன்றதை கவனிச்சுருப்பீங்கதானே? இவர்தான் இந்த இஸ்கானை நிறுவியவர். அது ஆச்சு 44 வருசங்கள். சுருக்கமா அவரைபற்றிப் பார்க்கலாம் இப்போ.

1896 வது வருசம் செப்டம்பர் மாசம் ஒன்னாம்தேதி கல்கத்தாவில் ஒரு வைணவக் குடும்பத்தில் பிறந்தவர். ஆங்கிலப்பள்ளியில் படிச்சவர். கூடவே சமஸ்கிரதமும் படிச்சுருக்கார். கல்லூரிப் படிப்பெல்லாம் முடிச்சுக் கலியாணம் கட்டி, ஒரு மருந்து தயாரிக்கும் தொழிலில் இருந்தார். அந்த மருந்து போதாதுன்னு இவர் கண்டு பிடிச்ச மஹா மருந்துதான் இந்த இஸ்கான் இயக்கம். சாமி கும்பிடுவதை சிம்ப்ளிஃபை பண்ணதால் இன்னிக்கு உலகம் பூராவும் இது விரிவடைஞ்சுருக்கு.

தன்னுடைய 26 வது வயசில் சந்திச்ச ஆன்மீக போதனையாளர் பக்திசித்தாந்த சரஸ்வதி ஸ்வாமியைத் தன் குருவாக ஏத்துக்கிட்டார். சைதன்ய மஹாப்ரபுவைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதுன்னு குரு சொன்னதைக் கேட்டு எழுததொடங்கினார். (அப்ப இவர் நம்ம எழுத்தாளர் கூட்டம்தாம்.)

வேத ஞானங்கள், பகவத் கீதை, பாகவதம், மற்ற இதிகாசங்கள் இப்படி இவர் எழுதியது ஏராளம் ஆங்கிலத்துலே இருந்ததால் சுலபமா மற்ற நாடுகளில் இவை வாசிக்கப்பட்டு ஆன்மீக ஈர்ப்புகளால் நம்முடைய கடவுளை பலர் நம்ப ஆரம்பிச்சாங்க.

இவருக்கு 4 குழந்தைகள். மனைவி பெயர் ராதாராணி. ( இவுங்க படம் ஒன்னு வலையில் தேடுனப்பக் கிடைச்சது.. ) இடது பக்கம் நிக்கறாங்க. கணவர் உக்கார்ந்துருக்கார் தன் முதல் குழந்தையை மடியில் வச்சுக்கிட்டு

இந்தப் படத்துலே இடது பக்கம் ப்ரபுபாதா. தரையில் அவருடைய குழந்தைகள் மூவர். வலதுபக்கம் நாற்காலியில் அவருடைய சகோதரர். .

54 வது வயசில் சம்சாரத்துலே இருந்து வனப்ரஸ்த வாழ்க்கையா ஒன்பது வருசம் இருந்து 63 வயசில் சந்நியாச வாழ்க்கையில் நுழைஞ்சார். 1965 லே அமெரிக்கப்பயணம். அடுத்த வருசமே இஸ்கான் ஆரம்பிச்சார். வெளிநாட்டு பக்தர்கள் மட்டுமில்லாம இப்போ உள்நாட்டு பக்தர்களும் ஏராளமா இந்த இயக்கத்துலே சேர்ந்துருக்காங்க.

உலகத்தில் பலநாடுகளில் இஸ்கான் கோவில்கள் இருக்கு. எங்கூரில் (கிறைஸ்ட்சர்ச் மாநகரில்) இந்துக் கோவில்கள் வேற ஒன்னுமே இல்லை இதைத் தவிர. நாமும் அட்லீஸ்ட் இந்தக் கோவிலாவது இருக்கேன்னு அங்கே போகத்தொடங்கி ஆச்சு 23 வருசம். நீண்டகால நட்பு அந்தக் கிருஷ்ணனுக்கும் எனக்கும். அதனால் ஹரே கிருஷ்ணா கோவிலை வேற எங்கே பார்த்தாலும் சட்னு உள்ளே போயிருவேன். ரொம்பப்பிடிச்சது என்னன்னா இந்த இயக்கத்துலே பெண்களுக்கு சம உரிமை. 50% !!!

தன்னுடைய 81 வது வயசுலே (1977) இங்கே வ்ருந்தாவனில் சாமிகிட்டே போய்ச் சேர்ந்துட்டார். அவருடைய சமாதியில்தான் இப்போ நிக்கறோம்.
படிகள் நாலு இறங்கி ப்ரகாரத்துக்குள்ளெ போனால் இன்னொரு கட்டிடத்தின் நுழைவு வாசல். அலங்கார வளைவுகளோடு தாழ்வாரம் நாலு பக்கம் ஓட நடுவில், விசாலமான பெரிய முற்றம் வானம் பார்த்து இருக்கு. வெராந்தா முழுசும் அழகழகான பெரிய ஓவியங்கள். எல்லாம் க்ருஷ்ணனின் லீலைகளே!

நேரெதிரா ஒருபக்கம், பக்கம் பக்கமா மூணு சந்நிதிகள். கௌரவ் நிதாய், கிருஷ்ணா பலராம், கிருஷ்ணா ராதா. வ;லப்பக்கம் தனிச் சந்நிதியில் 'மேய்ன் நஹி மாக்கனு காயா....'.(நான் வெண்ணையைத் திருடவே இல்லை)ன்னு தாயிடம் சொல்லும் கண்ணன். பக்தர்கள் கூட்டம் நெரியுது. படம் எடுக்க ஒரு தடையும் இல்லை!
சந்நிதிகளில் பூக்கள் அலங்காரமும், சிலைகளுக்கு ஆடை அலங்காரமும் பிரமாதம். ஒரே ஜொலிப்புதான் போங்க. எந்த ஹரே கிருஷ்ணா கோவிலிலும் உண்மையான அர்ப்பணிப்புடன்தான் உலகெங்கும் மூலவருக்கு அலங்காரம் செய்யறாங்க. இவ்வளவு பக்தி எனக்கில்லைன்னுதான் சொல்லணும்.
கிருஷ்ணா, பலராம் சந்நிதிக்கு நேரா முற்றத்தையொட்டி குழுவா பஜனை நடக்குது. முற்றத்தில் யாகம் செய்யப்போறாங்க போல...... களிமண் பிசைவதும், செங்கற்களை அடுக்கி யாக குண்டம் கட்டுவதுமா வேலை ஒரு பக்கம் சுறுசுறுப்பா நடக்குது.
வெளிநாட்டு கோபிகைகள் அழகான கோபிகா உடைகளில் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்ஞ்சுக்கிட்டு இருக்காங்க. சாணகம் நோ ப்ராப்ளம்! பிரசாத ஸ்டால் ஒன்னும் இருக்கு. பால் இனிப்புகள். ஒரு தொன்னையில் கேசரி வாங்கிக்கிட்டேன்.
முற்றம் விட்டு இடதுபுற வாசலில் வெளியே போனால் அழகான பூந்தோட்டம் அதுலே பார்க் பெஞ்சு போல ஆசனங்கள். நிம்மதியா உக்கார்ந்து புத்தகம் வாசிக்க, ஜெபம் செய்ய, ஓய்வெடுக்கன்னு வசதி!

சமாதி மந்திருக்கு எதிர்ப்புறம் உள்ள அறையில் இவுங்க பிரசுரங்களும் ஆடியோ, வீடியோ சிடிகளும் விற்பனைக்கு இருக்கு. ஆங்கிலம் மட்டுமில்லாம உலகின் வேறு சில மொழிகளிலும் வச்சுருக்காங்க.. கட்டிடத்தின் மாடியில் இயக்கம் சேர்ந்த ப்ரம்மச்சாரிகளும் ப்ரம்மச்சாரிணிகளும் தங்கும் அறைகள்.

இவ்வளவு கூட்டம் இருந்தாலும் அப்பழுக்கு இல்லாம எல்லாமே படு சுத்தமா இருக்கு!!!
ரொம்ப அழகான கட்டிடம். பார்க்கவே அருமையா இருக்கு. ரசனையோடு கட்டி இருக்காங்க. நானும் ரசிச்சுட்டு வெளியே வந்தேன்

தொடரும்.......................:-)


28 comments:

said...

ரசனையான - அழகு மிளிரும் - படங்கள்!

said...

படங்களெல்லாம் அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம் போலிருக்கு..

said...

படங்களும் குறிப்புக்களும் அருமை

said...

இஸ்கான் கோவில்கள் எல்லாமே அழகு.

எனக்கும் பயணம் போய்க் கொண்டே இருக்க ஆசை தான். ஆனால் டெபிளை விட்டே ஆசைய முடியாத துறையில் செட்டில் ஆனதால் ஆண்டுக்கு ஒரு முறை தான் எங்கேனும் செல்லவே முடிகிறது.

said...

romba arumaya irukku inda idam. oru murai kudumbathodu sendru vara vendum. katturaikku nandri.

said...

அப்பாடா அழுக்கு இல்லாம ஆக்ராவில ஒரு கோவிலைக் இகிருஷ்ணனுக்காகக் கட்டின அந்தப் பிடபுபாதரை எத்தனை தடவை வேணும்னாலும் சேவிக்கலா. நளினம், மென்மை ,உறுதி,பக்தி பளிச் பளிச் னு தெரியுது. நன்றி துளசிமா.

said...

எனக்கு இஸ்கான் கொஞ்சம் commercial என்று
தோன்றும். ஆனா நீங்க சொல்லறதைப் பார்த்தா நன் நினைத்தது தவறு. நான் ஒரு தரம் தான் போயிருக்கேன். உங்க அனுபவம் முன்னாடி அது தூசு.
இங்கே இருந்தே நானும் ஒரு ரவுண்டு பார்த்துடறேன். அடுத்து எங்க கூட்டிட்டுப் போகப் போறீங்க

said...

//இது ஒருவகையான இந்தியன் செஸ்ட்நட்டுன்னு கூகுள் சொல்லுது.//

water chestnutன்னு பேரு போட்டு பொதிஞ்சுவெச்சிருக்காங்க hypercity-ல்.

முன்னொருதடவை ஹைதை தொடரின்போதுகூட படம்போட்டு எங்ககிட்ட பேரு கேட்ட ஞாபகம் :-))))

said...

நினைச்சால் / எஸ் நினைச்சால் நினைக்கவைத்தால் ..ன்னு சொல்லனும்.. அதாவது முதல்ல ஒரு இடம் க்ளீனா இருந்தா தொடர்ந்து க்ளீனா வச்சிப்பாங்க.. சின்னதா ஒரு பான் துப்பலோ .. சின்ன குப்பையோ கிடந்தா.. அடுத்த நாய் முகர்ந்து பார்த்து சுசூ போறமாதிரி தொட்ரந்து எல்லாரும் குப்பைய போடரதும் துப்பரதும் அதே செவத்துல செய்வாங்களாக்கும் :))

said...

மணி மேடை, பர்ணசாலை,செடிகளால் ஆன சுவர் அனைத்தும் பார்க்க அழகு டீச்சர். நானும் இங்கே இஸ்கான் கோவில் சென்றுள்ளேன் அங்கு இங்கிருக்கும் பெண் பக்தை நம் நாட்டு நடனம் ஆடியது மிகவும் அருமையாக இருந்த்தது டீச்சர்.

said...

பர்ணசாலை ,குட்டிக்கிருஷ்ணா அனைத்தும் மிகவும் அழகு.

said...

மும்பையிலும்,பெங்களூருவிலும்கூட இஸ்கான் டெம்பிள் பாத்திருக்கேன்.இதுபோலவே சுத்தம், மென்மையான வழிபாடுகள்.பஜனையப்போவும் சரணாகதிதத்துவத்தின்படி கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி அனைவருமே ஆடுகிரார்கள். ஒரு ஜபமாலை வைத்துக்கொண்டு தினசரி குறைந்தது 108 ஹ்ரேகிருஷ்ணா, ஹரே ராமா ஜபம் செய்கிரார்கள். இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் காபி, டீ எதுவும் அருந்துவதே இல்லை. எவ்வளவு நல்ல விஷயம் இல்லியா.?

said...

வாங்க சித்ரா.

ஏற்கெனவே அங்கிருக்கும் அழகுதான் படங்களிலும்:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

இப்படியெல்லாம் சொன்னால்..... தலைக்கனம் கூடிப்போகும். ஆமா:-))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க ரிஷபன்.

எனக்கும்தான் நியூஸியில் பயணம் அதிகமாப்போகச் சான்ஸ் இல்லை.

இப்போ ஒரு பெரும் பயணமா இந்தியாவில் இருப்பதால் அக்கம்பக்கம் உள்ள இடங்களுக்குக் கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுது.

இங்கிருந்து மீண்டும் கிளம்புமுன் இன்னும் சில இடங்களைப் பார்த்துக்கணும்.

said...

வாங்க குலோ.

வாழ்க்கையில் ஒருமுறை கட்டாயம் போய் வரவேண்டிய புண்ணியத் தலங்கள்தான் இவை.

said...

வாங்க வல்லி.

ஆக்ரா இல்லைப்பா....ம...து....ரா.

said...

வாங்க விருட்சம்.

நீங்க பெங்களூரு இஸ்கான் போனீங்களா?
எனக்குத் தெரிஞ்சு அங்கேதான் பாதுகாப்பு அது இதுன்னு ஏகப்பட்ட கெடுபிடி.

ஒரு நிலையில் கோவில்கடைகள் தீனின்னு அமர்க்களம் வேற.

நானும் ரெண்டு முறை அங்கே போனேன். மனசு ஒட்டலை.

இங்கே சண்டிகர் இஸ்கான் கோவிலிலும் ஆளாளுக்கு கட்டளைகள் போட்டுக்கிட்டு இருக்காங்க. ஒரு நாள் இதைப்பற்றி எழுதணும்.

இந்தியர்கள் இன்சார்ஜா இருக்கும் இந்திய இஸ்கான்களில் நாட்டாமை ஜாஸ்தி. தட்டுலே காசு போடச் சொல்லலையே தவிர அர்ச்சகர்களின் அட்டகாசத்துக்கு
ஒரு குறைவும் இல்லை.

அடியார்க்கு அடியார் எல்லாம் இல்லையாக்கும் கேட்டோ!

வெளிநாட்டுலே (ஆசியாக் கண்டம் தவிர) இருக்கும் இஸ்கான் கோவில்களில் எல்லாமே அருமையா வச்சுருக்காங்க. நல்ல அர்ப்பணிப்பு.

நாமெல்லாம் இந்தியர் என்பதால் க்ருஷ்ணா நம்ம சாமின்னும் நமக்கு ரொம்பவே சாமி விவரங்கள், யோகா தியானம் எல்லாம் தெரியுமுன்னு அவுங்களுக்கு ஓர் நம்பிக்கை!!!!

said...

ஆமாங்க அமைதிச்சாரல்.

ஹைதையில் கருப்பும் வயலெட்டுமாச் சேர்ந்த ஒரு நிறம். இங்கே பச்சை.

உங்க நினைவுக்கு ஒரு பரீட்சை வைக்கப்போறேன், தனி மடலில்:-)

said...

வாங்க கயலு.

முன்னேறு போன வழியில் பின்னேறு!!!!

said...

வாங்க சுமதி.

அதான்ப்பா...... உண்மையான அர்ப்பணிப்புடன் சேவை செய்யறாங்க.
அதைப் பாராட்டத்தான் வேணும்.

said...

வாங்க மாதேவி.

நீங்க கூடவே வர்றது எனக்குத் தெம்பா இருக்குப்பா.

said...

வாங்க லக்ஷ்மி.

அவுங்க கொள்கைகள் கூட எளிதில் கடைப் பிடிக்கக்கூடியவைதான்.


தயை, சுத்தம், தவம், உண்மை இது கடைப்பிடிக்க வேண்டிய நாலு தர்மம்.

சைவ உணவு,
காஃபி டீ, மற்ற ஆல்கஹால் உள்ள குடிவகைகள்

முறையற்ற பாலியல் தொடர்புகள்

சூதாட்டம்

இந்த நான்கும் அறவே கூடாது.

எல்லாம் சரி.ஆனால் நாக்கு சொன்ன சொல் கேக்குதா? காஃபிக்கு அலையுதே:(

said...

ரொம்ப சரியா கண்டு பிடிச்சிட்டீங்க . பெங்களூரு இஸ்கானே தான்.

said...

விருட்சம்,,

ரெண்டு முறை அங்கே போயிருக்கேன்.

வியாபாரமாப் போச்சுன்னு ஒரு பக்கம் திட்டிக்கிட்டே கிறிஸ்டல் ஜெபமாலை வாங்குனேன் ரெண்டு முறையும்.

பொழுதன்னிக்கும் என்னோட மாலையைக் கேக்குறாருன்னு தனியா ஒன்னு வாங்கிக் கொடுக்கவேண்டியதாப் போயிருச்சு:-)))))))

said...

இஸ்கான் கோவிலை டி.வி. நிகழ்ச்சிக்காக படம் பிடிக்க வந்த நான் நெட்டில் ேதடிய போது அருமையான தகவல்கள் கிடைத்தன! நன்றி!

said...

வாங்க மணி பாரதி.

முதல் வருகை போல இருக்கே!

பயணங்களில் எங்கே போனாலும் அங்கே இஸ்கான் கோவில் இருந்தால் கட்டாயம் போய் ஒரு கும்பிடு போட்டுட்டு வருவேன்.
சண்டிகர், சென்னை, ப்ரிஸ்பேன் (அஸ்ட்ராலியா) கிறைஸ்ட்சர்ச் (நியூஸிலாந்து) என்று சிலபல பதிவுகள் துளசிதளத்தில் இருக்கு.

நேரம் இருந்தால் இதையும் ஒரு எட்டு பாருங்க. சாம்பிள்ஸ்:-)
http://thulasidhalam.blogspot.co.nz/2012/04/blog-post_

http://thulasidhalam.blogspot.co.nz/2012/11/blog-post_28.html

நன்றி.