Wednesday, December 15, 2010

ஆஹா..... என்னமா ஒரு வளைவு, என்னமா ஒரு நெளிவு!!!

ஆறு கோவிலில் ரெண்டு தரிசனம் ஆச்சு. எதெதுக்கு எப்போப் போகணுமுன்னு ரிக்ஷாக்காரர் ராம் முடிவு செஞ்சுக்கட்டுமுன்னு ச்சும்மா இருந்தேன். இப்ப எங்கே போறோமுன்னு அப்பப்ப ஒரு கேள்வி மட்டுமே. பக்கத்துலே கொஞ்ச தூரத்துலேயே இருக்கு கோபிநாத் கோவில் னு சொன்னார்.

மறுபடி சந்துப்பயணம். நாலடிச் சந்துக்குள்ளில் போய் நிறுத்தினார்.
'ராதா கோபிநாத் மந்திர்'. இஸ்கானின் வெள்ளைக்கார பக்தர்கள் நாலுபேர் எங்களோடு கோவிலுக்குள் நுழைஞ்சாங்க. ரொம்பப் பழையகாலக் கட்டிடம். எல்லாம் சிகப்பு மணற்கற்கள். வளாகத்தில் இருந்தா ஒரு கல் இருக்கையில் ஓய்வாப் படுத்துருக்கார் ஒரு பைரவி. சமீபத்தில் குட்டி போட்டுருக்கணும். புள்ளைங்க பிடுங்கி எடுக்குதுன்னு தனியாக் கொஞ்ச நேரம் வந்து படுத்துருக்குபோல. கோவில் பரிக்கிரமான்னு சின்ன வாசல். உள்ளெ எட்டிப் பார்த்தால் புதர்போல் செடிகொடிகள். இருக்கட்டும். இது' நமக்கல்ல'. வலது பக்கம் திரும்பின இஸ்கான் பக்தர்களையே தொடர்ந்தோம்.
போகும் வழியில் வலதுபக்கம் ஒரு சந்நிதி. ராதையும் கண்ணனுமா கருப்புப் பளிங்குச் சிலைகள். வலைக்கம்பிக் கதவு மூலம் பார்க்கறோம். மேல்கூரையெல்லாம் ரொம்பப் பழுதடைஞ்சு கிடக்கு. 'தரையெல்லாம் குண்டும் குழியுமா.....பக்தர்கள்' நால்வரும் தரையில் விழுந்து சாஷ்டாங்கமா நமஸ்கரிச்சு எழுந்தாங்க. நம்மாள் வேடிக்கை பார்த்தார்:-)

இன்னும் கொஞ்சம் உள்ளே போனால் விசாலமான திறந்தவெளி முற்றம். ஒரு செல்வந்தரின் மாளிகையா இருந்துருக்கணும். மாடியில் அறைகளா இருந்து எல்லாம் பாழடைஞ்சு இருக்கு. முற்றத்தின் ஒரு பக்கம் அஞ்சாறு படிகள் ஏறிப்போனால் ஒரு சந்நிதி. குழலூதும் கண்ணன் சிலை. ஒரு பக்கம் ராதை. அடுத்த பக்கம் அனங்கமஞ்சரி. இவுங்க ராதையின் தங்கையாம். கொஞ்சம் சின்னதா இருக்கும் ரெண்டு விக்கிரகங்கள் லலிதாவும் விசாகாவும்.
(சுட்ட படம்)
இதனால் சகலமானவர்களுக்கும்..... தெரிவிப்பது.....:-)

கோவிலில் அழுக்கு இல்லையே தவிர நம்மூர் பெருமாள் கோவிலில் பல்லக்கு வாகனம் எல்லாம் கண்டாமுண்டான்னு போட்டு வச்சுருப்பாங்க பாருங்க ஆண்டாள் சந்நிதியையொட்டி..... அப்படிக் கிடக்கு.
வெராந்தாவில் கொஞ்சம் படங்கள் மாட்டி வச்சுருந்தாங்க. அதுலே பரசுராமர் படம் இதுவரை நான் பார்க்காதது. இன்னொன்னு, ராதையும் கண்ணனும் அட்டகாசமான அழகில்! வெராந்தாவில் பெரிய முரசு. கொஞ்சம் தட்டிப் பார்த்தேன்:-) எதிர்ப்புறம் அலமாரி மாடத்தில் ஆஞ்சநேயர்.

ரெண்டு கல்லுக்கு கண்கள் வச்சு ஒரு மாடத்தில் சாமி!!!! கண்கள் வச்சதும் ஒரு ஜீவன் வந்துருது இல்லே? கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.......ரொம்ப சுமாரான சுத்தம் & பராமரிப்பு. சீக்கிரம் பழுது பார்க்கலைன்னா இன்னும் சில வருசங்கள் தாங்குமான்னு சந்தேகம்தான்.
கோவிலைப்பற்றிக் கொஞ்சம் சேதிகள் சேகரிச்சேன்.
இந்தக் கண்ணனின் சிலையை இங்கே ப்ரதிஷ்டை செஞ்சவர் கண்ணனின் பேரன் வஜ்ரநாபர்தானாம். அஞ்சாயிரம் வருசம் பழசாம். இடையில் என்னென்னமோ ஆகி காணாமல் போன சிலையை ஒரு ஆலமரத்தின் கீழ் கண்டெடுத்தவர் பரமானந்தா கோஸ்வாமி என்ற சாது. சிலையை சைதன்ய மகாப்பிரவுவின் கூடவே சேவை செஞ்சுக்கிட்டு இருந்த மது பண்டிட் என்றவரிடம் கொடுத்தார்.

ராஜ்புத் அரசர் ராய்ஸல் மண்டாவா ( Raisel Mandava) 1559 வது வருசம் இந்தக் கோவிலைக்கட்டிக் கொடுத்துருக்கார். 1670 லே ஔரங்கஸேப் இதையும் இடிக்க வந்ததும் மூலவர் சிலையைக் காப்பாற்றி ஜெய்ப்பூர் கொண்டு போயிட்டாங்க.

இடிச்ச கோவிலை திருப்பிக் கட்ட முடியாமப்போய் அதை அப்படியே விட்டுட்டு புதுசா ஒரு கோவில் கட்டுனாங்க. கம்பி வலைக்குள்ளே நாம் பார்த்த சந்நிதி, இடிக்கப்பட்ட கோவிலின் ஒரு பகுதி.

இப்போ மீண்டும் பழைய கோவிலையும் அதுக்குப்பிறகு கட்டுன புதுக்கோவிலையும் பழுது பார்த்துச் சரியாக்கும் எண்ணம் வந்துருக்கு. பட்ஜெட் 38 லட்சமாம். நிதி வேணுமுன்னு அப்பீல் செஞ்சுருக்காங்க.

த்ரீ டௌன். த்ரீ டு கோன்ற கணக்கில் ஷாஹ்ஜி மந்திர் அடுத்தது. குரங்க்ஸ் இருக்குன்னு எச்சரிக்கை செய்தார் ராம். உசரமா இருந்த சிகப்புக் கல் நுழைவாயிலைக் கடந்தால் நாம் ஒரு இத்தாலிய நாட்டில் இருப்போம்! அடடா..... என்ன ஒரு அழகான பளிங்குக் கட்டிடம்! எல்லாம் இத்தாலியன் மார்பிள்தானாம்.
1860 வது வருசம், ரெண்டு நகை வியாபாரிகள் கட்டுனதாம். அதானே...இல்லாட்டா யார்கிட்டே இவ்வளோ பணம் இருக்கும்?இவுங்கதான் லக்நௌ நகரில் இருந்த ஷா குந்தன் லால். ஷா ஃபுந்தன் லால். கட்டி முடிக்க எட்டு வருசம் ஆச்சு. தண்ணீர் பாயும் ஓடைகளும் பளிங்கு நீரூற்றுகளுமா ரொம்பவே அழகான வெளிமுற்றம். சிங்கச்சிலைகள் வேற! சிங்கம் வாயில் இருந்து தண்ணீர் வரும் அமைப்புடன். ஆனா தண்ணியில்லாமக் காய்ச்சு கிடக்கு:(
நீளமான திண்ணைகளும் படிகளுமா இருக்கும் நீண்ட வெராந்தாவில் வளைஞ்சு நெளிஞ்சு இருக்கும் 12 தூண்கள், 15 அடி உசரத்தில். மார்பிளில் இப்படி வளைசலா எப்படிச் செதுக்கி இருக்காங்கன்னு பிரமிப்புதான்.

அலங்காரச் சரவிளக்குகள் விதவிதமான வர்ணங்களில் இருக்கும் கோவில் ஹாலில் சாமிச்சிலைகள் ஒரு மேடையில். ராதையும் கிருஷ்ணனும்.. ச்சோட்டே ராதா ரமண் மந்திர் ன்னு பெயர் இருந்தாலும் உள்ளூர் வாசிகளுக்கு இது கோணக் கம்பம் கோவில்தான். (தேடே கம்பே வாலா மந்திர்!) பெல்ஜியம் கண்ணாடிகளும் அழகான ஓவியங்களுமா நிறைவா இருக்கு. ஹாலுக்குப் பின்பக்கம் பெரிய மாளிகை. அங்கே போக அனுமதி இல்லை. (சாமி பார்க்க வந்தே...சாமி பார்த்துட்டுப்போ)
அப்போ அங்கே வந்த குஜராத்திப் பெண்மணி ஒருத்தர், கண்ணாடியுடன் சுற்றிப் பார்த்துக்கிட்டு இருந்த என்னிடம் படபடன்னு குஜராத்தியில் பேச ஆரம்பிச்சார்.

"குரங்கு என் கண்ணாடியைப் பறிச்சுக்கிட்டுப்போய் உடைச்சு வீசிருச்சு. நீங்க கவனமா இருங்க" (குஜராத்தியில்)

"நான் கண்ணாடியைக் கழட்டிட்டுத்தான் வந்தேன்.உள்ளே வந்து போட்டுக்கிட்டேன்"

"முதலிலேயே தெரியுமா?" (குஜராத்தியில்)

"உள்ளே நுழையும்போதே ராம்ஸ் சொன்னாரே."

"அடடா.... எனக்குத் தெரியாமப்போச்சே:( " (குஜராத்தியில்)

"இன்னும் என்னென்ன இடங்கள் இருக்கு? என்னென்ன பார்த்தீங்க?"

நான் நம்ம முழநீள லிஸ்டை எடுத்துச் சொல்லச்சொல்ல, ரைட்டா ரைட்டுன்னு பேச்சு போகுது.

குஜராத்தியில் கேள்வியும் ஹிந்தியில் பதிலுமா ..... கடைசியில்தான் கவனிச்சாங்க போல .......'உங்களுக்கு குஜராத்தி பேச வராதா?'

"வராதே!"

"எந்த ஊரு?" (ஹிந்தியில்)

"சென்னை"

விவரம் சேகரிச்சுப்போனதும் நம்மகிட்டே இப்படி படபடன்னு வந்து பேசியதின் காரணம் என்னவா இருக்கும்னு யோசனை. நம்ம கோபால் 'பட்'னு கண்டுபிடிச்சுட்டார். உன் கழுத்துச்சங்கிலி!

அட...ஆமாம் குஜராத் வகை சங்கிலி போட்டுருக்கேன்!!!! ஆஹா'''' நகையை வச்சு நாட்டைக் கண்டுபிடிச்சுடலாமா!!!!

இத பாருங்க. நான் கேட்டுருந்த பதக்கம் வச்ச அட்டிகை ( தங்கம் சீரியலில் சீமா போட்டுருப்பது) வாங்கிக் கொடுத்துருந்தா.... 'சட்'ன்னு நாம் தமிழ்நாடுன்னு கண்டு பிடிச்சுருப்பாங்க இல்லே? இப்படித் தடுமாற்றம், அடுத்தவங்களுக்கு வராமக் காப்பாத்தி இருக்கலாமுல்லெ? பாவம், அந்தம்மா!
வெராந்தாவின் கடைசியில் பஸந்தி கம்ரா. வஸந்தியின் அறை. யாரா இருக்கும் அந்த வஸந்தி????? பஸந் தி கம்ரா வாம். தர்பார் ஹால்! மூடிக்கிடந்தது. உள்ளே போய்ப் பார்க்கலை.
தோட்டத்தைக் கடந்து தோரணவாசலுக்கு வந்தால் ஏகப்பட்ட கடைகள் பூஜை சாமானுக்காக. அப்பப் பார்த்து பிங்க் நிறத்துலே துணியால் அலங்கரிச்ச ஒன்னை ஆட்கள் தூக்கிப்போறாங்க. பின்னால் ஏகப்பட்ட கூட்டம். என்ன சாமின்னு எட்டிப்பார்த்தால்............ ஆசாமி! சவ ஊர்வலமாம். அந்த பாடை அழகா அலங்காரமா இருக்கு! தாரை தப்பட்டை ஒன்னும் இல்லை. மௌனமா சரசரன்னு போறாங்க. இங்கே இறந்துபோனா நேரா சொர்கம்தானாம். இப்படி ஒரு நம்பிக்கை இருக்கு. போற ஆத்மா சொர்கத்துக்கே போகட்டுமுன்னு நினைச்சுக்கிட்டே அடுத்த இடத்துக்கு போனோம்.

தொடரும்..........................:-)

19 comments:

said...

நல்லா விரிவான சுத்துப்பயணமா இருக்கு.. நிறைய இடங்கள்..
அதுவும் இத்தாலியன் டிசைன்.. வளைஞ்ச தூணு .. அருமையா இருக்கு பாக்கவே..

உங்களுக்கு யாதும் ஊரே.. :)

said...

இதனால் சகலமானவர்களுக்கும்..... தெரிவிப்பது.....:-)//

நீங்கதான் தலைவின்னு முடிவு பண்ணிட்டோம்ல...

:)

said...

அந்த தண்டோரா படம் - சான்சே இல்லை. கலக்கல்!

said...

முரசு கொட்டி
"இதனால் சகலமானவர்களுக்கும்..... தெரிவிப்பததை.." பார்த்துப் படித்து பரவசமுற்றேன்.

said...

// கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.//

கல்லைக் கல்லாகக் காணும்பொழுது கல் பெயர்ச்சொல்.
கல். வினைச்சொல்லானால்,

கற்ற பின் தெரிவது உள். உனது உள்.
அது கடவுள்.

வாலி சொன்னதை எப்பவோ கேட்டது.

அதனாலோ என்னவோ,

கா வா வா என்பது
கல்லாக அமர்ந்துள்ளே கந்தனே
என் உள்ளத்துள்
வா வா வா.

சுப்பு ரத்தினம்.

சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com

said...

கல்லுக்கு கண்கள் வைத்து சாமியாக வைத்திருப்பது,முரசு கொட்டுவது எல்லாம் நல்லருக்கு டீச்சர்.

said...

வளைவு நெளிவு தூண் பார்க்க நன்றாக இருந்தாலும் சிறு அசைவு வந்தால் “பணால்” தான்.

said...

பரசுராமரும் ,ராதாகிருஷ்ணனும் சூப்பர். பர்சுவின் உத்வேகம் தெரிகிறது.

பளிங்கு மாளிகையின் அழகும் எங்கயோ ரோம் போயிட்ட வந்த எஃபெக்ட் கொடுக்கிறது.
ஆனாலும் ஏகப்பட்ட பொறுமை. இவ்வளவு இடங்களையும் அழூக்குப் பார்க்காமல் சுற்றி வந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் பா. மார்கழிக்கு நல்ல கோவில் தரிசனம் ஆச்சு.

said...

"இதனால் சகலமானவர்களுக்கும்..... தெரிவிப்பது.....:-)//

வருட இறுதிப் பரீட்சையா ரீச்சர்...:)

அந்தப்பளிங்குக் கட்டிட மேடையில் காத்தாட இருந்து படிக்கலாம் போல இருக்கு :)

said...

வாங்க கயலு.


கொஞ்சம் பார்த்தாலும் விரிவா எழுதிட்டேனோ?

நான் என்னப்பா செய்யறது.......எல்லாம் தாமாய் தாமாய்ன்னு அதுவாவே வருதேப்பா.....:-)))))

said...

வாங்க சாந்தி.

ஐயோ.... 'தலைவி' பதவி எல்லாம் வேணாம்ப்பா.

தாங்க முடியாது. இப்படியே முரசறைந்து 'கண்டதை'ச் சொன்னால் போதும்:-))))

said...

வாங்க சித்ரா.

ரெண்டு சின்னக் கோல் கூட இருந்துச்சுப்பா. மெதுவா தட்டுனாலே தம் தம்ன்னு சத்தம். அதான் பயந்துக்கிட்டுகி கையால் 'வாசி'ச்சேன்:-))))))

said...

வாங்க டொக்டர் ஐயா.

நன்றி நன்றின்னு முரசறைந்து சொல்லிக்கறேன்:-))))

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

கா...வா வா..........

நினைவூட்டுனதுக்கு நன்றி.


கடந்து, உள்ளே அவரை அனுப்பும் முயற்சிதான்!

said...

வாங்க சுமதி.

'அனைவருக்கும் என் அன்பு' என்று கொட்டு முரசே!!!!!!

said...

வாங்க குமார்.

அந்தக் கால வேலைப்பாடு நல்லாவே இருக்கு. ஆச்சே 150 வருசம்!

'தூணைத் தொடாதே'ன்னு அரிவிப்பு மட்டும் வச்சுருந்தாங்கன்னா....... இந்நேரம் 'பணால்' ஆகி இருக்கும்.

நம்ம மக்கள்ஸ்............

said...

oops.......அறிவிப்பை 'அரி'ஞ்சு போட்டுட்டேனே:(

said...

வாங்க வல்லி.

பரசு வேஷத்தில் யாரும் நடிக்கலை போல!

இல்லேன்னா அந்த நடிகர் முகம்தான் மனசுலே வந்துருக்கும்,நம்ம என் டி ஆரைப்போல!

தலயாத்திரைன்னா முழு மனசோட போகணும். என்னப்போல ரெண்டுங்கெட்டானா இருந்தா....

அதென்னவோப்பா.... சட்னு உடம்புக்கு வந்துருது. அதனால் ரொம்ப கவனம் எடுத்துக்கிட்டுச் சுத்திப் பார்க்கணும்.

அப்படி இருந்தும்கூட......ப்ச்:(

said...

வாங்க மாதேவி.

தண்ணீர் ஓடையிலும் நீர் ஊற்றிலும் தண்ணீர் பொங்கி வந்தால் பார்க்க இன்னும் நல்லா இருந்துருக்கும்.

திண்ணைகளும் சூப்பர்.