Monday, December 13, 2010

முழத்தில் பாதி கிடைச்சாலும் போதும்

வடக்கில் இதுவரை போன கோவில்களில் எல்லாம் யூனிஃபார்ம் போட்ட சாமிகள். அவர்களின் வகைகளும் , அரசு நடத்தும் பள்ளிகளில் எல்லாம் பாடப்புத்தகம் ஒரே மாதிரி இருக்கு பாருங்க அப்படி! ஸ்டேண்டர்ட் டிஸைன். ஒரே சிலபஸ். வேணுகோபாலும் ராதையும், ராம் அண்டு கோ, காளி, சொட்டுச்சொட்டா தலைக்கு நீர் அபிஷேகம் நடத்திக்கும் சிவலிங்கம், சரஸ்வதி, லக்ஷ்மியுடன் நாராயணன். சாமிகளுக்குள் பேதமே இல்லைன்னு குறிப்பால் உணர்த்துவது மாதிரி ஒரே வகைத் துணியில் அனைவருக்கும் உடைகள் தச்சுப் போட்டுருக்காங்க. மேலே சொன்ன சாமிகளுடன் தனித்தனியா ரெண்டு சந்நிதி பிள்ளையாருக்கும் அனுமனுக்கும். இவுங்க ரெண்டு பேருக்கும் உடைகள் கிடையாது. ஏன்? யானைக்குத் தைச்சுக் கட்டுபடியாகாதுன்னா? அனுமனுக்கு செஞ்சாந்துப் பூச்சுதான் எப்பவும்.

எனக்குமே அநேகமா எல்லாக் கோவில்களிலும் இப்படியே பார்த்துப் பார்த்துக் கொஞ்சம் போரடிக்க ஆரம்பிச்சதென்னவோ நிஜம். ஆனாலும் சுற்றுலா வந்ததை பயன்படுத்திக்காமல் இருக்கலாமான்னு தரிசனம் செஞ்சு ஒரு கும்பிடு போட்டுக்கிட்டு வர்றதுதான். சந்நிதிகள்தான் இப்படி.......கோவில் கட்டிடங்கள் வெவ்வேறு வகையாத்தானே இருக்கு!

டெல்லி ஆக்ரா ( நேஷனல் ஹைவே 2 )ரோடில் வந்து விருந்தாவனத்துக்குள் நுழையும் சாலை ப்ரமாதமா இருக்குன்னு சொன்னேன் பாருங்க. அந்த
சாலைக்கு 'பக்தி வேதாந்த ஸ்வாமி மார்க்G' ன்னே பெயர் . முந்தி காலத்துலே மதுராவுக்கும் விருந்தாவனத்துக்கும் வேற சாலை இருந்துருக்கு. இப்போ ஒரு பத்திருவது வருசங்களா ஹைவேக்கும் விருந்தாவனம் ஊருக்கும் இடைப்பட்ட இடத்தில் புது நகரம் உருவாகி அட்டகாசமான சாலையும் இருபக்கங்களிலும் வளைச்சுப்போட்ட இடங்களில் ப்ரமாண்டமான ஆஸ்ரமங்களுமா உருவாக்கிட்டாங்க. ஒவ்வொருய் ஆஸ்ரமத்துக்கும் அவுங்க ஸ்டைலில் ஒரு கோவில். இந்தப் புது நகரத்துக்கு புதுவிருந்தாவனம் என்ற பெயர். இஸ்கான் கோவில் சமீபத்தில் அலங்கார தோரணவாசல் ஒன்னு சாலையில் கட்டி அதுக்கு 'பக்தி வேதாந்த ஸ்வாமி த்வார்(வாசல்)'ன்னே பெயரும் வச்சுருக்காங்க. ஒருவேளை இந்த சாலையே அவுங்க போட்டதாக இருக்கலாம்.
இதில் வரும்போதே கவனிச்சது, ஹரே கிருஷ்ணா கோவிலுக்கு எதிர்வரிசையில் கொஞ்சம் தள்ளி ஒரு கோவிலில் வளாகத்தில் பிள்ளையாரும் ஆஞ்சநேயரும் பக்கத்துக்கொன்னா நிக்கறாங்க. கையோடு அதையும் பார்த்துடலாமேன்னு வளாகத்துக்குள் நுழைஞ்சோம். நாப்பதடி உசரம் இருக்கும் சிலைகள். அனுமனுக்கு Gகதை ன்னால் புள்ளையாருக்கு எலி. ரொம்ப பவ்யமா கையில் ஒரு மாம்பழத்தை ஏந்தி இருக்கும் போஸ். ஏகப்பட்ட குரங்ஸ் நடமாட்டம். அனுமனுக்கு எதிரில் இருக்கும் குடிதண்ணீர் தொட்டியின் குழாயைத் திறந்து தண்ணி குடிச்சுட்டு, ரொம்ப சமர்த்தாக் குழாயை மூடிட்டு போறாங்க குரங்கன்மார்!
நிறையப்படிகள் ஏறி முதல்மாடியில் இருக்கும் கோவிலுப் போகணும். கீழ்தளம் அதையொட்டி இருக்கும் கட்டிடங்கள் எல்லாம் ஆஷ்ரமத்தின் பகுதிகள். ஏற்கெனவே சொன்னதுபோல யூனிஃபார்ம் போட்ட சாமிகள். இங்கே பிங்க். அதுலே ஜிலுஜிலுன்னு செயற்கை ஜரிகைகள். ( இந்த ஜரிகைகள் மட்டும் எல்லா யூனிஃபாரத்துக்கும் பொது)
தரிசனம் முடிச்சு ஹாலைவிட்டு வெளியே வந்ததும் எங்க ரெண்டுபேருக்கும் ஒரு ஐடியா ஒரே நேரத்துலே வந்துச்சு. சும்மாவா சொன்னான் சீயக்காய்ப்பொடி!!!!! (சீ பொடியின் விளக்கம் அ.க.ஆ.ஐ இல் சொல்வேன்)

டீச்சர் வேலை சும்மா இல்லையாக்கும். பாடம் நடத்துமுன் தயாரிப்பு அவசியம். 'நோட்ஸ் ஆஃப் லெஸன்' எழுதி வச்சுக்கணும். வலை டீச்சருக்கு இதெல்லாம் வேணுமான்னா.......வேணும். இந்தப் பயணம் முடிவானதும் இங்கே அக்கம்பக்கம் பார்க்கவேண்டிய வகைகளை வலையில் தேடி குறிச்சு வச்சுக்கிட்டேன். விருந்தாவனத்தில் மட்டும் நாலாயிரம் கோவில்கள் இருக்கு. அவ்வளவும் பார்க்க முடியுமா? முக்கியமானதுன்னு நான் நினைச்சவைகளை தாராளமா எழுதி வச்சேன். இதுவே முழநீளப்பட்டியலா இருக்கு. பத்துக்கு அஞ்சுன்னாலும் பழுதில்லைன்ற கணக்கு. கிடைக்கணும் என்றிருப்பது கிடைக்கட்டும். எதிர்பார்ப்பு ஒன்னும் ரொம்பப் பெருசா இல்லை.

இடம் தெரியாம சந்துசந்தாச் சுற்றி நேரம் பாழாக்காமப் பார்க்கணும். உள்ளூர் ஆட்களுக்குத்தான் வழி நல்லாத்தெரியும் ஆனால் கைடு வேணாம். 'அம்பத்தியொன்னு, அம்பத்தியொன்னு'ன்னுச் சும்மாச்சும்மாக் கொண்டுபோய் பண்டிட் முன் நிறுத்திடறாங்க. பேசாம ஒரு சைக்கிள் ரிக்ஷா பிடிச்சுக்கிட்டு கோவில்களுக்குப் போயிட்டு வந்துடலாம். சந்துலே போக அவுங்களால்தான் சுலபமா முடியுது. ராதே ராதே.......இப்படி ஒரு ஐடியா தோணுச்சே!

டிரைவரிடம் விஷயத்தை சொல்லிட்டு நின்னா ரிக்ஷா வந்து நிக்குது நம் முன்னால். அஞ்சாறு கோவிலுக்குப் போகணும்னு சொன்னதும் ப்ரச்சனை இல்லைன்னார் ராம்(ரிக்ஷாக்காரர் பெயர்) எதெதுன்னு லிஸ்டைப் பார்த்துப் படிச்சேன். அஞ்சு கோவில் காமிக்கிறேன் ஆளுக்கு நூறுன்னார். நூறான்னு கேட்டதும் ஆறு கோவில் காட்டறேன்னார். ரெண்டு மணி நேரம் ஆகுமாம். ஓக்கேன்னு கிளம்பிட்டோம்.

புது விருந்தாவனத்துலே பிரியும் கிளை ரோடுக்குள் நுழைஞ்சாச்சு. அட தேவுடா.....இங்கேயும் ஏகப்பட்ட ஆஸ்ரமங்கள். தெருவைச் சுத்தபடுத்தி, அவுங்க பெயரைத் தெருவுக்கு வச்சுக்கும் ஐடியா இல்லாதவங்க:(

துப்பட்டாவினால் கண்களைத்தவிர மூக்கையும் வாயையும் கட்டிக்கிட்டுப் போறேன். சந்து முடிஞ்சு திரும்பும் தெரு பரவாயில்லாம இருக்கு. மண் ரோடுதான். நாலைஞ்சு ஆஸ்ரமங்கள். மெயின் ரோடுக்குள்ளே நுழைஞ்சதும் பார்த்த முதல் கோவில் 'காஞ்ச் கா மந்திர்'. இது Gக்ளாஸ் டெம்ப்ள்ன்னு வலையில் சொல்லி இருந்தாங்க. நானும் கண்ணாடியால் கட்டி இருக்குமுன்னு நினைச்சேன். ஆனால்......
அலங்கார முகப்பு வாயில் கடந்து வளாகம் போனால் கோவர்தனகிரியைக் குடையாய் பிடித்து நிற்கும் கண்ணன். மழைநீர் ஒழுகும் மலையின் அடியில் எப்படா இந்த மழை நிக்கும்? கொஞ்சம் புல் மேயனுமே'ன்னு ஏக்கமாய் பார்க்கும் பசித்த பசுவின் கண்கள் அப்படியே உணர்ச்சியைக் கொட்டுது..
கோவிலுக்குள்ளே வழக்கமான சாமிகள். ஆனால் உட்புறம் சுவர்கள், தூண்கள் எல்லாத்துக்கும் முகம் பார்க்கும் கண்ணாடித் துண்டுகளை ஒட்டி வச்சுருக்காங்க. ஆக...இது மிர்ரர் டெம்பிள்! முகப்பு வாயிலும் நல்ல அலங்காரமா இருக்கு. இங்கேயும் கட்டிடத்தின் அடியில் பேஸ்மெண்டில் குகை ஒன்னு செஞ்சுருக்காங்க. போதுமுன்னு போகலை.
அழகான மூணு நிலைக்கட்டிடம் வெள்ளையா மின்னுது, இந்த காஞ்ச் கா மந்திர்.


அடுத்த ஸ்டாப், ராஜபுத்திர ராஜா மான்சிங் கட்டுன 'கோவிந்த தேவ் கோவில்'. வருசம் 1590. அக்பர் சக்ரவர்த்தி ஆக்ரா அரண்மனை கட்டக் கொண்டுவந்த சிகப்பு மணற் கற்களில் கொஞ்சம் இந்தக் கோவில் கட்டக் கொடுத்துருக்கார். ஏழடுக்கு கோவில் கட்டி முடிக்க ஏழு வருசமாயிருக்கு. அந்தக் காலத்துலே(யே) ஒரு கோடி ரூபாய் செலவில் ராஜஸ்தான் & மொகலாயர் ஸ்டைலில் கட்டி இருக்காங்க. ஔரங்க ஸேப் காலத்தில் கோவிலை இடிச்சுத்தள்ள ஏற்பாடு செஞ்சார் புண்ணியவான். மூணு மாடியை விட்டுட்டு மேலே நாலுமாடியை இடிச்சார் (ஏதோ மூணு மாடிக்குப் பர்மிட் வாங்கி ஏழு மாடியாக் கட்டுன கட்டிடத்தை, நகரசபை இடிச்சுத் தள்ளுன மாதிரி) எப்படியோ தாத்தா கொடுத்த தானத்தைத் திருப்பி எடுத்துக்கிட்டார்னு வையுங்க.
இங்கே உலவும் ஒரு கதை: நாலு மாடியை இடிச்சு அஞ்சுக்கு வரும்போது பயங்கரமா ஒரு நிலநடுக்கம் வந்ததும் அதுக்கு அஞ்சி அப்படியே விட்டுட்டுப் போயிட்டாங்க (ளாம்) இடிக்கவந்த வீரர்(?)கள்!

உசரமான விதானம். அழகான தாமரை வடிவ கிண்ணம் கவுத்த மாதிரி நடுவில் ஒரு கூரை. தூண்கள் மாடங்கள் எல்லாம் சிற்பவேலைப்பாடும் வளைவும் நெளிவுமா அழகாத்தான் இருக்கு. ஒவ்வொரு சுவரும் பத்தடி கனமாம்!!! மூலவர் கோவிந்தனைத்தவிர வேறு சந்நிதிகள் ஒன்னுமே இல்லை!!!!! ஹரே கிருஷ்ணா கோவிலில் இருக்கும் ஸ்வாமி சைதன்யாவும், ஸ்வாமி நித்யானந்தாவும் கோவிந்தனுக்கு ரெண்டு பக்கமும் இருக்காங்க இங்கே.
இங்கிருக்கும் மூலவர் கூட ஒரிஜனல் இல்லையாம். ஒளரங்கஸேப் கோவிலை அடிச்சு நொறுக்க வர்றாருன்னு சேதி கிடைச்சதும் முதலில் மூலவரை அப்புறப்படுத்திக் காப்பாத்திக் கொண்டு போயிட்டாங்க. அவர் ஜெய்ப்பூர் அரண்மனைக்கு வெளியே இருக்கும் கோவிலில் இப்ப (வும்) இருக்கார்.

தொடரும்..............................:-)

29 comments:

said...

// இங்கிருக்கும் மூலவர் கூட ஒரிஜனல் இல்லையாம்//

நாம மட்டும் ஒரிஜனலா என்ன ? நம்ம கூட ஒரு ஜெராக்ஸ் ஆஃப் அவர் ஓன் ஒரிஜனல் தானே ? அந்த
ஒரிஜனலுக்கு ஒரு நாளைக்கு திடிரென்னு ரெஸ்ட் எடுத்துக்கணும்னு தோணும்போது அவர் எங்கேயோ போய் ஒளிஞ்சுகின்டு அவருடைய நகலை அடுத்த சில அல்லது பல வருஷங்களுக்கு உலகத்துலே உலாவ விடுறாரு !!

சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com

said...

ஏனுங்க, வடக்கத்தி கோயில்களை இப்படிக்கலாய்க்கறீங்களே, அங்கதான இப்படி சாமிய வெளிச்சத்தில வச்சு உங்கள போட்டோ எடுக்கவும் உடறாங்க, இல்லீங்களா? நம்மூரில உள்ள போகறப்பவே கேமரா கொண்டு போகாதீன்னு புடுங்கி வச்சுக்கறாங்க இல்லீங்களா? உள்ள போனாத்தான் இருட்டுல இருக்கற சாமி கண்ணுக்குத் தெரியுதுங்களா? யாரு நல்லவங்க சொல்லுங்க.

said...

"கோவிந்த தேவ் கோவில்'.
பழைய கோயில்கள் தாம் சிற்பவேலைப்பாடுகள் அமோகமாய் இருக்கும்.


கோவர்த்தன கிரியும் அழகாய்தான் இருக்கிறது.

said...

கலக்கல் படங்கள். தலைப்பு - அருமை. பதிவும் அருமை.

said...

அட்டெண்ட்டென்ஸ் மார்க் செஞ்சுக்கோங்க. குறிப்புக்கள் எடுத்தாச்சு

said...

armaiyana padangal, saralamana nadai melliya nagaichuvaiyodu neenga ezudaradu etho nerukku ner pesikkara maari irukku. nandri

said...

//”ராம்” ரிக்‌ஷாகாரரின் பெயர்.//

எனக்கும் கூட இப்படி ரிக்‌ஷா, டாக்சி டிரைவர் பெயர் கேட்பது அவர்களின் குடும்பத்தை பற்றி விசாரிப்பது பிடிக்கும்.

அவர்களுடன் கலந்து பேசும் போது அவர்களுக்கும் எத்தனை சந்தோஷம் என்று அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன். நாடு, மொழி வித்தியாசமில்லாமல் இந்த மனிதர்கள் எளிமையாய் பழகுவது நம் ட்ரிப்பை இன்னும் திருப்திகரமாக்கும்.

DrPKandaswamy,

எனக்கென்னவோ நம் ஊர் கோவில்களில் செய்வது தான் சரி என்று படுகிறது.

எளிமையாய் அமைதியாய் இருக்கும் கோவில்கள் தான் எனக்குப் பிடிக்கும்.

கோவில்களில் கலை நயம் இருக்கலாம் ஆனால் மார்பிள் கிரானைட்-னால் இழைத்து ஆடம்பரமாக இருக்கும் கோவில்கள் எதோ ஷாப்பிங் மால் போன்று தோன்றும்.

said...

போரடிக்க ஆரம்பிச்சதென்னவோ நிஜம்
பல பதிவுகளை பார்க்கும் போது; எப்படித்தான் இப்படி (கோவில் கோவிலாக)பார்கிறார்களோ, போரடிக்களையா? என்று என்னை நானே கேட்டுக்கொண்டது உண்டு அதை இப்பதிவில் நீங்களே கேட்டுட்டீங்க.

said...

ஔரங்கசேப் உடைச்ச கோவிலா.
உடைத்ததுக்க அப்புறம் கூட இவ்வளவு நல்லா இருக்கே. பத்தடி கனம் சுஅர் நான் பார்த்ததே இல்லப்பா. ஓ நம்ம திருமலை நாயக்கர் தூண் இருக்கெ.
இவங்களுகெல்லாம் பயந்து சாமி பலபல இடங்களைச் சுத்திப் பார்த்துட்டார் போல இருக்கு. அனுமனும், பிள்ளையாரும் சூப்பர்.

said...

இங்கிருக்கும் கோவில்களும் இப்படித்தான் இருக்கின்றன டீச்சர், நமக்கு சூடம்,ஊதுபத்தி,பூக்களின் வாசனை இல்லையென்றால் கோவிலுக்கு போனது போல் இல்லை டீச்சர்.

said...

ஒரே மாதிரி வரிசை ஒரே மாதிரி உடை :) அனுமனுக்கு உடை தரதில்ல ந்னு யப்பா..ஆறுவித்தியாசம் அண்ட் வடநாட்டுக்கோயில்கள்ன்னு ஆய்வுக்கட்டுரை ரேஞ்சுக்கு..(வெறொன்னுமில்ல இபத்தான் சங்கத்துல கட்டுரை வாசிப்பெல்லாம் கேட்டுட்டு வந்தேனில்ல)

said...

\\விருந்தாவனத்தில் மட்டும் நாலாயிரம் கோவில்கள் இருக்கு.\\

ஆகா...!

எப்படி தான் மக்கள் எல்லா கோவிலுக்கும் போவங்களோ! ;)

said...

பெண்டிங் வைச்ச எல்லாப் பதிவுகளையும் படித்து விட்டேன். மிக்க மகிழ்வைத் தருகின்றது தங்கள் தொடர்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா. வேவ்வேற உருவத்தில் 'ஆக்டு' கொடுக்கத்தான் வேண்டி இருக்கு. மேக்கப் அப்படியே ஒரிஜனல். க்ளோனிங் இல்லை!

said...

வாங்க டாக்டர்.

உண்மைதான். வடக்கே கோவில்களில் அவ்வளவா கெடுபிடி இல்லை. அதுவும் அனுமதி கேட்டால் உடனே கிடைச்சுருது.

இந்த ஜெகஜெக உடைகள் தான் கொஞ்சம் தமாசா இருக்குதுங்க.

சாமியே நம்மாளுதாங்க. கலாய்ச்சா அவருக்கு(ம்) பிடிக்கும்:-)

ஆனா ஒன்னு.... சாமியைப் படம் எடுத்தால் அவருடைய 'பவர்' போயிருமுன்னு நம்மூர்லே நினைக்கிறாங்க:-))

கெமெராவுக்கு ஒரு கட்டணம் வாங்கிக்கிட்டா கோவிலுக்கும் ஒரு வரும்படி ஆச்சுன்னு நினைக்கணும்.

said...

வாங்க மாதேவி.

ஆளு வச்சு இடிச்சும்கூட அசையாத கட்டிடங்களாக் கட்டி இருக்காங்க.

மாடர்ன் உலகத்துலேதான் கட்டும்போதே இடிஞ்சு விழுந்துருது:(

said...

வாங்க சித்ரா.

முந்தியெல்லாம் தலைப்பு(மட்டும் ) கொஞ்சம் தானாகவே நல்லாவே அமைஞ்சுரும். இப்பெல்லாம்..... திங்கிங் டேங்க் வத்திப்போச்சு:-)))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

எடுத்துவச்ச குறிப்புகள் ஒருவேளை நீங்க போய்ப் பார்க்கும்போது பயனாக இருக்கணும்.

மாறுதல் இருந்தா சொல்லுங்க.

said...

வாங்க குலோ.

நடைகள் பல நடந்துபார்த்து கடைசியில் இதுதான் நமக்குன்னு புரிஞ்சு தெளிஞ்சேன்:-)

said...

வாங்க ரிஷபன்மீனா.

உண்மைதான் ரெண்டு கேள்வி குடும்ப நலத்தைப் பற்றிக்கேட்டால் அப்படியே மனம் நெகிழ்ந்துருவாங்க.

நாம் கொடுக்கும் காசைவிட இது அவுங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

said...

வாங்க குமார்.

நம்மூர்களிலும் குறிப்பிட்ட சந்நிதிகள் எல்லாக் கோவில்களிலும் இருக்கும். ஆனா சுத்தி சுத்தி அங்கே போய் தரிசிப்போம். அது பழகிப்போனதுனாலே சட்னு ஒன்னும் தோணறதில்லை.

இங்கே ஒரே ஹாலில் எல்லாம். அதுதான் ஒற்றைநோட்டத்தில் கண்ணுலே படுது.

said...

வாங்க வல்லி.

இப்படி இடிச்சுப் போட்டு மக்களை தண்டிக்கணுமுன்னு நினைச்சுட்டார்:(

இதனால்தானோ என்னவோ மறுபடி மறுபடின்னு கோவில்களை எழுப்பி இருக்காங்க.

இப்பக் கொஞ்சகாலமா பிரமாண்டமான சிலைகள் வச்சுக்க ஆசை வந்துருக்கு! சின்னதா இருந்தா சாமி கண்ணுலே படமாட்டார்:-)

said...

வாங்க சுமதி.

அதுவும் கண்ட இடத்துலே சூடம் கொளுத்திக் கரிப்புகை படிய வைப்பதில் நம்மை மிஞ்ச ஆளில்லை!

said...

வாங்க கயலு.

சங்கம் பற்றி உங்க பதிவெல்லாம் வாசிச்சுக்கிட்டு இருக்கேன். ஹெவி சப்ஜெக்ட் பாருங்க. இன்னொருக்கா ஆழமா வாசிக்கணும்.

said...

வாங்க கோபி.

எல்லாத்துக்கும் எங்கே போறது? நிறைய இருப்பதால் கூட்டம் பிரிஞ்சு அவுங்களுக்கு எது வசதியோ அங்கே போயிடறாங்க. நமக்கும் நல்லதுதான்.

அத்தனைபேரும் ஒரே கோவிலுக்கு வந்தா..... ஐயோ தள்ளுமுள்ளு ஆகிருமுல்லே?

said...

வாங்க பித்தனின் வாக்கு.

நோ அர்ரியர்ஸ்?????

ஆஹா..... நன்றி நன்றி

said...

Madam,
Your article is fine; photos are fantastic.
Appreciation & Thanks.

said...

Your article & photos are fantastic.

said...

வாங்க ரத்னவேல்.

முதல் வருகைபோல இருக்கே! வணக்கம் நலமா?

உங்க பாராட்டுக்கு நன்றி. மீண்டும் வாங்க.