நேத்து நடந்த சம்பவத்தினால் எனக்கு மனசே ஆறலை. எல்லாம் அந்தக் கைடுகள் விஷயம்தான். யார் எங்கே எப்படின்னு ஒரே குழப்பம். இவர்கிட்டே சொன்னால்..... வேற யாராவது கைடு வேணுமுன்னு வந்துருப்பாங்க. அவுங்களொடு போயிருப்பாங்கன்றார். நெருங்கிய தோழிகளில் ஒருத்தருக்குச் சம்பவத்தை எழுதி அனுப்பிட்டுத்தான் தூங்கப் போனேன். மறுநாள் காலை எட்டேமுக்காலுக்குக் கிளம்பி மதுரா நகருக்குள் போறோம். எங்கியாவது கண்ணில் படமாட்டாரா இந்த ராஜேஷ்ன்னு கண் தேடுனதென்னவோ நிஜம்.
பார்க்கிங் னு போட்ட குறுகலான வாசலில் நுழைஞ்சால்.....சின்னதா ஒரு இடம். நாலைஞ்சு கார்களை நிறுத்தலாம். ப்ரைவேட் பார்க்கிங். நாலைஞ்சு மரமும் கற்குவியலுமா இருக்கு. கற்குவியல்மேல் வச்ச ஒரு சாமியை அணில் கும்பிட்டுக்கிட்டு இருந்துச்சு. நெச அணில்தான்! வண்டியை விட்டுட்டுக் கோவிலை நோக்கிப் போனோம்.
நடுவில் கம்பி கிராதி வச்ச தெரு. வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. ரெண்டு பக்கமும் கடைகள் ரொம்பி வழியுது. சாமி சமாச்சாரம், பால், இனிப்பு வகைகள், அலங்காரப்பொருட்கள், வளையல்கள் இப்படி....
மாடுகளுக்குத்தான் முதல் உரிமை
கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம். அலங்கார நுழைவு வாசலில் இருபுறமும் ஈட்டி பிடிச்சு நிற்கும் காவலர் இருவரின் ரெண்டாளுயரச் சிலை. என்னென்ன கொண்டு வரக்கூடாதுன்னு விஸ்தாரமான அறிவிப்புகள். 'ஸாமான் கர்' ன்னு க்ளோக்ரூம்கள் ரெண்டு மூணு இடத்துலே இருக்கு. கோவிலையொட்டியே இருக்கும் பெரிய கட்டிட வளாகத்தில் பக்தர்கள் கூட்டம். ஈரப் புடவைகளை ஒரு பக்கம் கம்பித்தடுப்பில் கட்டிவிட்டு மறுமுனையைப் பிடிச்சுக்கிட்டுக் காயவைக்கும் பலர், தரையில் கூட்டமா உக்கார்ந்து குடும்பத்தோடு கதை பேசும் பலர்ன்னு அந்த இடமே ரொம்பக் கலர்ஃபுல்லா இருக்கு.
செல்ஃபோன்கள், கேமெரா எல்லாத்தையும் ஒரு பையில் போட்டுக் கொடுத்துட்டு அடுத்த ஸ்டாலில் செருப்புகளை ஒப்படைச்சுட்டுக் கோவில் வாசலுக்குப் போனால் செக்யூரிட்டி பலமா இருக்கு. ஆண்கள் பெண்கள்ன்னு தனித்தனியா எலெக்ட்ரானிக் கேட். பெண்கள் மட்டும் பக்கத்துலே ஒரு அறை போல கட்டியிருக்கும் பகுதிக்குள் போய் வரணும். தொட்டுத்தடவுதலை விஸ்தாரமாச் செய்யறாங்க. தடவுதல் என்பது தழுவுதலா ஆகி இருக்கு. யக்.....அருவருப்பா உணர்ந்தேன்:(
காவல் பெண்டிர் லெஸ்பியனா இருப்பாங்களோன்னு சம்சயம். மற்றவர் படும் அவஸ்தையை அனுபவிப்பதுபோல் அவுங்க முகம் இருந்துச்சு. கோவிலுக்கு வந்துட்டு இப்படியெல்லாம் சொல்லக்கூடாதுதான்....ஆனா..... சொல்ல வைக்கறாங்களே:(
கோவில் பாதுகாப்புன்னு சொன்னாலும் இப்படி ஒரு வன்முறைகளால் நல்லா இருந்த சமூகத்தைக் கெடுத்துவச்ச அந்த ஆரம்ப கர்த்தாக்களை (அவுங்க யாரா இருந்தாலும்)மனம் சபிச்சதென்னவோ உண்மை.
முன்வாசல் கடந்துவளாகத்துக்குள்ளே போனால் இவர் மட்டும் நிக்கறார். ப்ரதீபைக் காணோம். அஞ்சு நிமிசம் ஆச்சு அவர் வந்து சேர்ந்துக்க. வண்டி சாவி அவர் பையில் இருந்துச்சாம். அதைக்கூடக் கொண்டுபோகக் கூடாதுன்னுட்டாங்களாம். அதை நம்ம செல்ஃபோன் பையிலே வச்சுட்டு வந்தாராம். சின்ன பர்ஸ் மட்டும் காசோடு உள்ளே கொண்டு போகலாம்.
நல்ல பெரிய வளாகம். கொஞ்சதூரத்துலே இடதுபக்கத்துலே ஒரு செயற்கைக் குன்று. ஆடுமாடுகள் மேய்ஞ்சுக்கிட்டு இருக்குதுங்க. குன்றுக்குள்ளே போய்ப் பார்க்கலாம். அதுக்கு தனி டிக்கெட்டு. (இப்பப் புரிஞ்சுருக்கும் பர்சை மட்டும் கொண்டுபோக அனுமதிச்ச காரணம்!)
அப்புறமா இங்கே வரலாமுன்னு முதலில் கண்ணன் பிறந்த இடத்தை நோக்கிப் போனோம். போகும் வழியிலே வெட்டவெளியான ஒரு முற்றத்தில் துளசிச்செடிகளும் யாகம் செய்ய யாககுண்டமுமான ஒரு அமைப்பு.
படிகள் ஏறிப்போனால் பக்கச்சுவர்களில் டெர்ரகோட்டா புடைப்புச் சிற்பமா சில. பெரிய ரதம் நிக்குது. தேவகியும் வசுதேவரும் பயந்த முகங்களோடு ஒரு பக்கம். கையில் வீசிப்பிடிச்ச வாளொடு கோபாவேசமா நிக்கும் கம்ஸன் ஒரு பக்கம். இன்னொன்னில் வசுதேவரும் தேவகியும் கைகளில் பூட்டிய விலங்கோடு உக்கார்ந்துருக்காங்க. இன்னொன்னில் ஆண் குழந்தையொன்னை தலைகீழா ஒரு காலைப்பிடிச்சுத் தூக்கிக்கிட்டு நிற்கும் கம்ஸன். அடுத்த கையில் ஓங்கிய வாள். கட்ரா கேஷவ்தேவ் ன்னு பெயராம் இந்தப் பகுதிக்கு.
தங்கையின் எட்டாவது குழந்தையால் மரணம் ன்னு அசரீரி கேட்டதும், புதுமணத் தம்பதிகளை அப்படியே சிறையில் அடைச்சு வச்சுட்டான் கம்ஸன். நான் மட்டும் கம்ஸனா இருந்தால் தனித்தனி அறைகளில் அடைச்சு வச்சுருப்பேன். ஒவ்வொரு குழந்தையாப் பிறக்கப்பிறக்க அதைக் கொலை செஞ்சுக்கிட்டே இருக்கான். எட்டாவது குழந்தை பிறந்ததும் தாய்தகப்பனுக்கு நெஞ்சம் பதறுது. பிறந்தவன் விஷ்ணு. பயப்படாதீங்க. எனக்கு ஒன்னும் ஆகாது. என்னைக்கொண்டுபோய் கோகுலத்தில் யஷோதாவிடம் விட்டுட்டு அங்கே இப்போதான் பிறந்த குழந்தையை இங்கே தூக்கிவந்துருங்கன்னு குழந்தையை மாற்றச் சொல்லி ஐடியா கொடுக்கறார். இந்தச்சிறையில் இருந்து எப்படி அங்கே போவதுன்னு கேட்ட தந்தையிடம் எல்லோரையும் மயங்கிக்கிடக்கச் செஞ்சுட்டேன். சிறைக்கதவு எல்லாம் திறந்து வச்சாச்சு. சீக்கிரம் கிளம்புங்க'ன்னார். பொறந்தவுடன் என்னாப் பேச்சு பேசுது பாருங்களேன்???
வசுதேவர், குழந்தையைக் கூடையில் வச்சுத் தலையில் தாங்கிக் கொண்டு போறார். ஜெயில் கதவுகள் கோட்டைக்கதவுகள் எல்லாம் பாம் ன்னு திறந்துகிடக்கு. ஆனால் மழையான மழை. பேய்மழையில் குழந்தை நனையாமல் வருது. எப்படி? ஆதிசேஷன் குடை பிடிச்சுக்கிட்டு வர்றார் கூடவே. யமுனை நதிக்கரைக்கு வந்துட்டாங்க. வெள்ளம் அடிச்சுக்கிட்டு போகுது. தயங்குன வசுதேவருக்கு யமுனை ரெண்டாகப்பிரிஞ்சு வழிவிடுது.
மறுகரையில் கோகுலம். அங்கே போனால் நந்தகோபர் வீட்டுலேயும் எல்லோரும் மயங்கிக் கிடக்கறாங்க. யஷோதாவின் அருகில் அப்போதான் பிறந்த பெண் குழந்தை ஒன்னு. சட்னு இந்தக் குழந்தையை அங்கே வச்சுட்டு அந்தக் குழந்தையைத் தூக்கிக் கூடையில் வச்சுக்கிட்டுப் போனவழியே திரும்பிடறார் வசுதேவர்.
திரும்ப சிறைக்கு வந்து சேர்ந்ததும் கதவுகள் எல்லாம் முன்னைப் போலவே அடைபட்டது. மயக்கம் தெளிஞ்சு எல்லோரும் விழித்தெழுந்தாங்க. தேவகி வசுதேவர் இருந்த அறையில் குழந்தை அழும் சத்தம். ஆஹா....குழந்தை பிறந்துருச்சுன்னு ஓடிப்போய் ராஜா கம்ஸனிடம் சொன்னாங்க. ஓடோடி வந்தான் குழந்தையைக் கொல்ல.
இங்கே வந்து பார்த்தால் பொண் குழந்தை பிறந்துருக்கு. பையனால்தானே உன் உயிருக்கு ஆபத்து.. இதுதான் பொண்ணாச்சே. விட்டுருன்னு தேவகி கெஞ்சறாள். யாரு கண்டா இதுவே என்னைக் கொன்னாலும் கொன்னுருமுன்னு குழந்தையைத் தூக்கி மேலே வீசி அது கீழே விழும்போது சாவட்டுமுன்னு கத்தியை அதுக்கு நேரே பிடிச்சுக்கிட்டு நிக்கறான் மாமன்.
அதிசயத்திலும் அதிசயமா மேலே போன குழந்தை கீழே வராம, இன்னும் மேலேமேலே போய்க்கிட்டு இருக்கு. எப்படி? இது காளியின் சொரூபம். டேய் முட்டாள். நான் மகாகாளி. உன்னைக் கொல்லப்பிறந்தவன் வேற இடத்தில் இருக்கான்னு சொல்லிட்டு மறைஞ்சு போச்சு அந்தக் குழந்தை. அதுதான் யோகமாயா.
நடுங்கிப்போன கம்ஸன் அந்த ஏரியாவில் இருக்கும் 'புதுக் குழந்தைகளை'யெல்லாம் பிடிச்சுக் கொன்னு இன்னும் தன் பாவத்தை கூடுதலா ஆக்கிக்கிட்டான். இப்படிப்போகுது கதை.......
நேரா ஒரு சந்நிதி, யோகமாயாவுக்கு. வலப்பக்கம் இருந்த சின்ன சந்துபோல ஒரு ஆள் மட்டுமே போகமுடியும் என்ற அளவில் இருந்த வாசலில் நுழைஞ்சால் பெரிய பெரிய கற்களால் கட்டுன கோட்டைப்பகுதி மாதிரி இருக்கு. நமக்கு வலப்பக்கம் பெரிய கதவுகளோடு ஒரு அறை. உள்ளே போனால் நமக்கு நேராக இதே போல் ஒரு வாசல். வலப்பக்கம் ஒரு மேடை. இந்த மேடைதான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இடம். மேடைக்கு நேரெதிரே ஒரு வாசல் இருந்து இப்போ அதை அடைச்சு வச்சுருக்காங்க. சிறைச்சாலைன்னு தமிழ்சினிமா சரித்திரப்படங்களில் பார்த்ததுபோல் பெரியபெரிய ப்ளாக் கற்கள். ஒவ்வொரு கல்லுக்கும் நடுவில் ஒரு வட்டம் இப்படி டிஸைன் இருக்கு. காராக்ரஹம்தான். மேற்கூரை நல்ல உசரமா இருக்கு. மேடையின் மேல் ஒரு சின்ன விக்கிரஹம். கொஞ்சம் பூ. மேடைக்குப்பின் சுவரில் சில படங்கள்.அவ்ளோதான். மேடைக்குப் பக்கத்தில் ஸ்டூல் போட்டு ஒரு பண்டிட் உக்கார்ந்துருக்கார் இந்த இடத்தில்தான் 'யஹிபர் ஸ்ரீகிஷன்கா ஜனம் ஹுவா'ன்னார்.
இதுதான் கருவறை( வெளியே கிடைச்ச படம்)
ஒரு அஞ்சு நிமிசம் மேடைக்கு எதிரா உக்கார்ந்துட்டு வந்தேன். தியானம் செய்ய மனசு ஒருங்கலை. மக்கள் இந்தக் கதவுலே நுழைஞ்சு மேடையைப் பார்த்துட்டுத் தொட்டு வணங்கிட்டு எதிர்க்கதவுலே கடந்து போய்க்கிட்டே இருக்காங்க.
அசப்புலே பார்த்தால் சீக்கியர்கள் கோவிலைப்போல வெங்காயக்கூம்பு, மொத்தம் மூணு கூம்பு. நடுவில் இருக்கும் பெரிய வெங்காயம்தான் கிருஷ்ணருக்கு.(படம் போன பதிவில் இருக்கு)
சரியாச் சொன்னா இந்த வெங்காயக் கூம்புன்றது மசூதிகளுக்கு மட்டுமே. இந்துக் கோவில்களுக்கும் சீக்கிய கோவில்களான குருத்வாராக்களுக்கும் பூண்டு கூம்புன்னு சொல்லணும். பூசணிக்காய் கீற்றுப்போல வரிவரியாய் அசல் பூண்டுப்பற்கள் போல இருக்குன்றதைக் கவனிச்சேன்.
கும்பிட்டு வெளியே வந்து இந்தக் கட்டிடத்தின் கூடவே ஒட்டி வளர்ந்துருக்கும் கட்டிடத்தின் படிகளில் ஏறி இன்னும் மேலே போனால்...... பிரமாண்டமான ஒரு பெரிய ஹால். ஏகப்பட்ட தூண்கள். சதுரவடிவான தூண்கள் எல்லாமே. ஒவ்வொரு தூணிலும் ராமாயண, மகாபாரதக் காட்சிகள். ஒரு புறமா இருக்கும் சந்நிதிமேடையில் பளிங்குச்சிலைகளா கடவுளர்கள். ரொம்ப அழகான முகங்கள். பார்க்கப்பார்க்கக் கண் நிறைஞ்சு போகுது. விஷ்ணுவின் தசாவதாரங்களைக் கோட்டுச்சித்திரமா வரைஞ்சு (எல்லாமே பெரிய சைஸ்) சந்நிதிக்கு வெளிப்புறப் பகுதியில் சுற்றிவர மாட்டி இருக்காங்க. எல்லா ஓவியங்களும் கண்ணாடிக்குப் பின்புறம். நல்லவேலை/வேளை!!!! . நம்மாட்கள் தொட்டுத்தொட்டே சீக்கிரம் பாழ் பண்ணி இருப்பாங்க.!
அங்கங்கே சில சந்நிதிகள். ஆஞ்சநேயர் ஒருத்தர் கம்பீரமா நிக்கறார்.
உட்புறக்கூரை நல்ல உயரம். சர்ச்சுலே இருப்பதுபோல் இருக்கு. விதானங்களில் வண்ணச்சித்திரங்கள். முக்காலும் கண்ணனின் ராசலீலைகளே!
ஹாலின் கடைசியில் இந்தக் கோவில் கட்டியக் கைங்கரியத்தைச் செய்த மூவர் சிலைகள். பிர்லா, டால்மியா, இன்னொரு சாமியார்.
சுற்றிவர இருக்கும் மொட்டைமாடிகள், மாடங்கள், மூலைகள் பூராவும் ஆயுதமேந்திய ராணுவம். கம்ஸன்கூட காவலுக்கு இத்தனை பேரை வச்சுருந்துருப்பானான்றது சந்தேகம். இந்தக் கோவிலைப்பொறுத்தவரை வயசையே நிர்ணயிக்க முடியாது. பலமுறை செத்துச் செத்து மறுஜென்மம் எடுத்துருக்கே. இப்போதைய வயசு இருபத்தியெட்டு.
படி இறங்கிக்கீழே வந்தால் கோவிலுக்குள்ளேயே ஏகப்பட்டக் கோவில்கடைகள். பத்து ரூபாய்க்கெல்லாம் ஒரிஜனல் (?) சாளக்ராம் முட்டைவடிவில் கிடைக்குது. நர்மதை நதியில் எடுத்தவையாம். ரெண்டு கட்டைவிரல் நகங்களுக்கிடையில் வச்சு அது சுத்துவதைக் காமிச்சு இது ஒரிஜனல்ன்னு சாதிக்கிறார் கடைக்காரர். கோவிலைவிட்டு வெளிவருமுன் பத்துரூபாய் டிக்கெட் எடுத்து குன்றினடியில் போய்ப் பார்த்தோம். சின்னச்சின்ன மாடங்களில் சாமிச் சிலைகளும், ஆதிசேஷனுமா இருந்தாங்க.
கோவிலைச்சுத்தி வெளிப்புறம் பரிக்கிரமா போயிருந்தால் தீர்த்தக்குளங்களைப் பார்த்திருக்கலாம். போகலை:(
இந்தக்கோவில் அந்த நூற்றியெட்டில் ஒன்னு.
தொடரும்..................:-)
Monday, November 29, 2010
ஜென்மபூமியில் ஜென்மஸ்தான்.
Posted by துளசி கோபால் at 11/29/2010 05:13:00 PM
Labels: அனுபவம் Mathura
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
கோவில் பாதுகாப்புன்னு சொன்னாலும் இப்படி ஒரு வன்முறைகளால் நல்லா இருந்த சமூகத்தைக் கெடுத்துவச்ச அந்த ஆரம்ப கர்த்தாக்களை (அவுங்க யாரா இருந்தாலும்)மனம் சபிச்சதென்னவோ உண்மை.//
சில நேரம் சங்கடம் தான்..
நல்ல வரலாற்றுக்கதைகள் மா..
வாங்க சாந்தி.
சில நேரமா? பலநேரங்களில் ரொம்பவே சங்கடம்ப்பா:(
வருகைக்கு நன்றி.
ஜன்ம பூமி எல்லாமே இப்படி சர்ச்சை பூமி ஆகிப் போச்சே. இடிக்க இடிக்க விடாக் கண்டனா கட்டிகிட்டே தான் இருந்திருக்காங்க நம்ம மக்கள்ஸும்
\\நான் மட்டும் கம்ஸனா இருந்தால் தனித்தனி அறைகளில் அடைச்சு வச்சுருப்பேன். \\
ரைட்டுண்ணேன் ;))
கண்ணனின் பிறந்த இடமும்,கதையும் நல்லா இருக்கு டீச்சர்.
வெங்காயக்கூம்பு , பூண்டு கூம்பு :) நல்லாவே கவனிச்சிருக்கீங்க..
வாங்க விருட்சம்.
அன்னியப் படையெடுப்பு, நாடு பிடிக்கும் ஆவேசம், அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படும் மக்கள் இப்படித்தான் சரித்திரம் முழுசும் இருக்கு.
போதும் என்ற மனம் இல்லாத பேராசைதானே எல்லாம் :(
வாங்க கோபி.
இல்லையா பின்னே?
வம்பே இருந்துருக்காது. பாவமூட்டை சுமக்காம இருந்துருக்கலாம்,இல்லே?
வாங்க சுமதி.
கண்ணன் கதை கற்பனைன்னே வச்சுக்கிட்டாலும் அது ஒரு அற்புதம்தான்ப்பா!
வாங்க கயலு.
இதெல்லாம் தினம் சமைக்க எடுக்கும் விஷயம்தானே:-)))))
ஜென்மபூமி புதிய பூமியாகிவிட்டது :)
ங்கையின் எட்டாவது குழந்தையால் மரணம் ன்னு அசரீரி கேட்டதும், புதுமணத் தம்பதிகளை அப்படியே சிறையில் அடைச்சு வச்சுட்டான் கம்ஸன். நான் மட்டும் கம்ஸனா இருந்தால் தனித்தனி அறைகளில் அடைச்சு வச்சுருப்பேன். ஒவ்வொரு குழந்தையாப் பிறக்கப்பிறக்க அதைக் கொலை செஞ்சுக்கிட்டே இருக்கான். எட்டாவது குழந்தை பிறந்ததும் தாய்தகப்பனுக்கு நெஞ்சம் பதறுது. பிறந்தவன் விஷ்ணு. பயப்படாதீங்க. எனக்கு ஒன்னும் ஆகாது. என்னைக்கொண்டுபோய் கோகுலத்தில் தேவகியிடம் விட்டுட்டு அங்கே இப்போதான் பிறந்த குழந்தையை இங்கே தூக்கிவந்துருங்கன்னு குழந்தையை மாற்றச் சொல்லி ஐடியா கொடுக்கறார். இந்தச்சிறையில் இருந்து எப்படி அங்கே போவதுன்னு கேட்ட தந்தையிடம் எல்லோரையும் மயங்கிக்கிடக்கச் செஞ்சுட்டேன். சிறைக்கதவு எல்லாம் திறந்து வச்சாச்சு. சீக்கிரம் கிளம்புங்க'ன்னார். பொறந்தவுடன் என்னாப் பேச்சு பேசுது பாருங்களேன்???//:))))
துளசி. சிரிச்சு சிரிச்சு தாளலைப்பா.!!
வெங்காயக் கூம்பாம் ,பூண்டுக் கூம்பாம்.!!
வாங்க மாதேவி.
புதிய பூமி மட்டும் போதாது. அங்கே போக புதிய சாலைகளும் வேணும்!
வாங்க வல்லி.
பூண்டுக்குப் 'பல்' இருக்கேப்பா:-)))))))
Thulasi Mami
Nandagopan's wife is Yashodha isnt it? You mentioned as Devaki.
Only Vasudeva's wife is Devaki.
வாங்க ஸ்ரீநிவாஸ் கோபாலன்.
தட்டச்சும்போது கன்ஃப்யூஷன் ஆகி மனசுலே யஷோதான்னு இருந்தது கையிலே தேவகி ஆகிப்போச்சு:(
இத்தனைபேர் வாசிச்சும் சட்னு யாரும் கண்டு பிடிக்கலை பாருங்க!!!!!
உங்க கூர்ந்த கவனத்துக்கு பாராட்டுகள்.
என் நன்றிகள்.
மாத்திட்டேன் இப்போ.
மீண்டும் நன்றி.
Post a Comment