Monday, November 22, 2010

கூகுள் மேப் தரும் டைரக்ஷனையோ இல்லை பயண நேரத்தையோ நம்பாதீங்க.

148 கிலோ மீட்டர் ரெண்டுமணி பதினோரு நிமிசத்தில் போயிடலாமாம். எப்படி? சாலைகள் நல்ல தரத்திலும் போக்குவரத்து நெரிசல் எதுவுமே இல்லாமல் நாம் மட்டுமே அந்தச் சாலையில் பயணிக்கும் பயணிகளா இருந்தால் மட்டுமே! இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா? திடுக் திடுக்குன்னு ரோடுலே தடுப்பு வச்சு வேற வழியாப்போன்னு சொல்லும் போலீஸ் வேற!

நமக்கு நாலுமணி நேரம் ஆச்சு. அஞ்சேகாலுக்கு ஹொட்டேலில் செக்கின்பண்ணிப் பத்து நிமிசத்துலே ஃப்ரெஷப் செஞ்சு வரவேற்பில் ஊர் நிலவரம் தெரிஞ்சுக்கப் போனோம். மதுரா நகர். என் பல வருசக் கனவு. இப்போ குளிர்காலம் என்பதால் சீக்கிரம் இருட்ட ஆரம்பிச்சது. ரொம்பப் பக்கத்துலே இருக்கும் கோவில்கள் எவைன்னு கேட்டதுக்கு, கிருஷ்ணரின் ஜென்மபூமி ரெண்டு கிலோமீட்டரில் இருக்கு. அதைப் பார்த்துட்டு வாங்கன்னார் ஷைலேந்தர். ரொம்ப நல்ல அறையா நமக்குன்னு ஒதுக்கிட்டாராம். 'அறை எண் 108 இல் கோபால்ஸ்'. நம்ம ட்ரைவர் ப்ரதீப்பிடம் போகும் வழியையும் விளக்கினார்.

இந்தப் பக்கம் பழங்காலத்தில் வ்ரஜபூமி ன்னு அழைக்கப்பட்டதாம். விருந்தாவன், கோகுலம், கோவர்தன், மதுரா எல்லாம் சேர்ந்த ஒரு நிலப்பரப்பு. கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட பல இடங்கள் இங்கேதான் இருக்கு.
மதுராவுக்கு வடக்கே அம்பது கிலோமீட்டரில் இருக்கும் ஹொடெல் என்ற ஊரில் ஆரம்பிச்சு தெற்கே ருனாகுடா என்ற ஊர்வரை உள்ள இடம். இந்த ருனாகுடாதான் சூர்தாஸ் அவர்கள் பிறந்த ஊர். 15ஆம் நூற்றாண்டு இவருடைய காலம். கண்ணன்மேல் அளவில்லாத பக்தியோடு நிறைய பாடல்களை இயற்றிப் பாடி இருக்கார். ஒரு லட்சம் பாடல்களில் இப்போ கிடைச்சுருப்பது வெறும் எட்டாயிரம்தானாம். புஷ்டி மார்க்கத்தை போதிச்ச ஸ்ரீ வல்லப் ஆச்சார்யா அவர்களைத் தன்னுடைய பதினெட்டாவது வயசில் யமுனை நதிக்கரையில் சந்திச்சுருக்கார். அவர் சொன்னபடிதான் பகவத் லீலான்னு கிருஷ்ணனின் பால்யகாலத்து லீலைகளைப் பாட ஆரம்பிச்சாராம். இவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர். ஒருவேளை ஞானக்கண்ணால் கண்ணனைப் பார்த்திருக்கலாம்.

லோகத்திலே உள்ள ஏழு முக்தி ஸ்தலங்களில் மதுராவும் ஒன்னு. மற்ற ஆறும் என்ன? அயோத்யா, காசி, மாயாபூர், காஞ்சீபுரம், அவந்திகா & த்வார்க்கா. நமக்கு மூணு டௌன். ஃபோர் டு கோ!

இந்த ஊருக்குப் பெயர்க்காரணம் கதை ஒன்னு இருக்கு. திரேதாயுகத்துலே, அதாங்க ராமர் காலத்துலே இந்தப் பகுதியை ஒரு அரக்கன் ஆண்டுக்கிட்டு இருந்தான். அவன் பெயர் லவணாசுரன். (அப்பெல்லாம் கெட்டவங்களை அரக்கன்ன்னு சொல்லுவாங்க போல. இப்போ அவுங்கெல்லாம், மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரைச் சூட்டிக்கிட்டாங்க) அரக்கனின் குலதர்மம் அனுசரிச்சு நல்லவங்களையும் மகரிஷி, முனிவர்களையும் தொல்லைப் படுத்திக்கிட்டு இருந்தான். எல்லோரும் ராமரிடம் போய் முறையிட்டாங்க. அவர் தன் தம்பி சத்ருகனிடம் ஒரு பாணத்தைக் கொடுத்து அனுப்புனார். அந்த பாணத்தால்தான் மது, கைடபர் என்ற அரக்கர்களை ராமர் அழித்தாராம்.

இந்த லவணாசுரனுடைய தந்தை மது என்றவர். அவர் காலத்துலே நீதிநெறியோடு ஆட்சி செய்து இந்தப் பகுதியை செழிப்பாக்கி நகரங்களை நிர்மாணிச்சு நல்லவரா இருந்துருக்கார். அவருக்கு இப்படி ஒரு அரக்கப் பிள்ளை. சத்ருகன் வந்து அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செஞ்சபிறகு, பாழாகிக்கிடந்த நகரை புனரமைச்சுக் கொடுத்து, லவணனின் தந்தை பெயரையே நகரத்துக்கு வச்சுருக்கார். மதுராபுரி.

அவருடைய ஆட்சிக்குப்பின் பலவருசங்கள் கழிச்சு த்வாபரயுகத்தில் போஜராஜ வம்சம் அங்கே ஆட்சி செஞ்சது.

சாக்கடை பெருகி ஓடும் மதுராவின் முக்கியவீதியான கடைத்தெருவில் போய்க்கிட்டு இருக்கோம். வலது பக்கம் திரும்பினால் ஜன்மஸ்தானுக்கு போகலாம். அதுக்குள்ளே 'ஹேய் வண்டியை நிறுத்து'ன்னு சொல்லிக்கிட்டே ஒரு இளைஞர் தாவிக்குதிச்சு வண்டிமுன்னால் நின்றார். அவரை ஒதுக்கிட்டு வண்டி எடுக்க முடியாமல் கார் கண்ணாடியில் பல்லி மாதிரி அப்படியே ஒட்டிக்கிட்டார். என்னவாம்? தரிசனம் பண்ணி வைப்பாராம். வெறும் அம்பத்தியொரு ரூபாய் கொடுத்தால் போதுமாம். 'அதெல்லாம் வேணாம் நாங்க பார்த்துக்குறோம்' ன்னு சொன்ன கோபாலை கண்ணால் மிரட்டினேன். புது இடம். ஒரு கைடு இருந்தா தேவலைதான். இன்னும் கொஞ்சம் விசாரிச்சப்ப மாணவர்ன்னு தெரிஞ்சது. வண்டிக்குள்ளே ஏத்திக்கிட்டோம். ஜென்மபூமி கோவிலையும் கோகுலத்தையும் காட்டறேன். இந்த ஜென்மபூமி ராத்திரி 9 வரை திறந்துருக்கும். கோகுலம் சீக்கிரம் அடைச்சுருவாங்க.முதலில் அங்கே போகலாமான்னார்.
மதுராவில் இருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தூரம் போகணும். போற போக்கில் பலவிஷயங்கள் கிடைச்சது., இளைஞர் பெயர் ராஜேஷ் ஷர்மா. வயசு 20. விருந்தாவனத்தில் (பக்கத்து ஊர்) படிக்கிறார். பூஜை புனஸ்காரங்கள் செய்யத் தேவையான படிப்பு. காலை 6 முதல் பத்துவரை வேதப் பள்ளிக்கூடம். அதுக்குப்பிறகு ரெகுலர் பள்ளிக்கூடத்தில் ப்ளஸ் 2. சாயங்காலங்களில் இப்படி கைடு வேலை.

'உங்களுக்குக் கண்ணன் கதை தெரியுமா?'ன்னு கேட்டதும்.....நான் 'தெரியவே தெரியாது. நீயே சொல்லுப்பா'ன்னேன். "இந்த மதுரா ஒரு பெரிய நகரம்."

(அழுக்கும்புழுக்குமா நரகமாக் கிடக்கே..... தப்பான ஸ்பெல்லிங் சொல்றாரோ?)

"நாம் போகும் கோகுலம் ஒரு சின்ன கிராமம். யமுனை நதிக்கரையில் இருக்கு. இங்கேதான் நந்தகோபர் வசித்தார்."

"அப்போ நந்த்காவ்(ன்)ன்னு ஒரு ஊர் இருக்கே அது?"

"முதல்லே அங்கேதான் இருந்தார். அப்போ ஒரு சமயம் அவருடைய பசுக்கள் யமுனை ஆற்றுலே தண்ணீர் குடிச்சுட்டு மயங்கிச் செத்து விழ ஆரம்பிச்சது."

"ஏனாம்?"

"அந்த நதியில் ஒரு கொடூர விஷமுள்ள நாகம், காளிங்கன்னு பேரு இருந்துச்சு. அதோட விஷ மூச்சுக் காத்தால் தண்ணீரெல்லாம் விஷமாகிப்போச்சு."

"ஐயய்யோ!!!!"

"அதுக்குப்பிறகு அவர் தன்னுடைய ஊர் மக்களோடும் மாடுகளோடும் கிளம்பி இங்கே கோகுலம் வந்துட்டார்."

"எத்தனை மாடுகள் வச்சுருந்தார்? "

"ஒன்பது லட்சத்துப் பதினைஞ்சாயிரம்"

"அம்மாடியோவ்!!!!!!!!!!!"

"இப்போ நீங்க பார்க்கப்போற கோகுலத்தில் பத்தாயிரம் மாடுகள் இருக்கு. ரெண்டாயிரம் விதவைப்பெண்கள் இருக்காங்க."

கொஞ்சநேரத்துக்கு வண்டிக்குள்ளே நிசப்தம். தாங்கமுடியாமல் 'கிருஷ்ணரின் வேறு கதைகளைச் சொல்லுப்பா'ன்னேன்.

"அதான் இன்னும் சில நிமிசங்களில் நேரில் பார்க்கப்போறீங்களே! நீங்க ரொம்பவே அதிர்ஷ்டம் செஞ்சவங்களா இருக்கணும். கோகுலத்தில் தீபாவளி சமயம் சிலநாட்கள் ஸ்ரீக்ருஷ்ணனைத் தங்கத்தொட்டிலில் போட்டு சீராட்டுவாங்க. இன்னிக்குத்தான் கடைசிநாள். நாளைக்கு வந்துருந்தா அதைப் பார்க்கமுடியாது."

கடைத்தெருவின் நெரிசலையும் பஸ் ஸ்டாண்டின் கூட்டத்தையும் கடந்து போறோம். மீனை வண்டிகளில் வச்சு அப்படியே வறுத்து வித்துக்கிட்டு இருக்காங்க. நல்லவேளை நல்லா இருட்டிப்போச்சு. சாலைக்குப்பைகள் கண்ணில் படலை. கண்டோன்மெண்ட் பகுதி மட்டும் பளிச்ன்னு விளக்குகளோடு வாசலில் ரெண்டு பக்கமும் டாங்க் அலங்காரத்தில் இருக்கு. சட்னு இடதுபக்கம் திரும்பும் சாலையில் ராஜேஷ் போகச்சொன்னதும் கொஞ்சதூரத்தில் பாலத்தைக் கடக்கும் சப்தம். யமுனாவாம். இருட்டில் ஒன்னும் தெரியலை பாலத்தின் கைப்பிடி தவிர.

இதுக்கிடையில் ராஜேஷ் ஷர்மாவுக்கு நாலைஞ்சு 'கால்கள்'. சின்னதாப் பேச்சு.

கொஞ்சதூரத்தில் ஒரு தெரு வளைவில் பொட்டிக்கடை அருகே வண்டியை ஓரங்கட்டச் சொன்னபடி செஞ்சோம். நாம் இறங்கும்போதே இன்னொரு இளைஞர் வண்டியை நோக்கி வந்தார்.

இவர் என்னுடைய சகோதரர். இவர்கூடப் போங்க. தரிசனம் செஞ்சுவைப்பார். ஆனால் காசு எதுவும் அவரிடம் கொடுக்காதீங்க. அந்த அம்பத்தியொன்னை அப்புறம் என்னிடம் கொடுக்கலாம். போயிட்டு தரிசனம் முடிச்சுட்டு வாங்க.

புது இளைஞர் பெயர் திவ்ய ஷர்மா. சின்னச் சந்தில் எங்களைக் கூட்டிக்கிட்டுப் போறார். ரெண்டு பக்கமும் இருக்கும் கடைகளில் இருந்து மெலிசா வெளிச்சம் சந்துலே பரவி இருக்கு. எங்கே பார்த்தாலும் அழுக்கு, ப்ளாஸ்டிக் பை, தண்ணீர் பாட்டில். தின்னுபோட்ட தொன்னை................ அடக்கடவுளே:(


தொடரும்......................... :-))))
18 comments:

said...

அட பல்லியை தூக்கி வண்டிக்குள்ள போட்டுக்கிட்டீங்களா.. நாங்க பயந்து துரத்திருவோம்..:)
கதை தெரியாதமாதிரியே கேட்டீங்களா :)))
திருநெல்வேலிக்கே அல்வா வா..?

said...

வாங்க கயலு.


மெய்ப் பொருளைக் கண்பதுன்னா சும்மாவா?

'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்........' தாடி சொல்லிட்டுப் போனதை நினைச்சுக்குங்க.

said...

அட பல்லியை தூக்கி வண்டிக்குள்ள போட்டுக்கிட்டீங்களா.. நாங்க பயந்து துரத்திருவோம்..:)
//சூப்பர் !முத்து.
பாலத்தைக் கடக்க்கும் போது சத்தம்னு,இருட்டு ன்னு சொன்னா,யமுனையைப் பார்க்கலியா.அநியாயமா இருக்கே துளசி.ஒரு லைட் கூடவா பாலத்துக்குக் கிடையாது!
பாவம் கிருஷ்ணன் இருந்த இடம் செழிப்பா இருக்குக் கூடாதா:(/

said...

ஹை. மதுரா நான் காலேஜ் படிக்கும்போது போனது.

இண்டர்நேஷனல் எலக்ட்ரிகல் எக்ஸிபிஷனுக்குப் போறோம்ன்னு HODகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு டில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், மதுரான்னு ஒரு வாரம் நல்லா சுத்தினோம்:)

அங்க வாங்கின கிருஷ்ணர் படம் இப்பவும் என் சாமி ரூம்ல இருக்கு.

said...

தலைப்பை பார்த்ததும் என்ன பண்ணுவது என்று நினைத்தேன் நல்ல வேளை இந்தியாவில் மட்டும் என்று சொல்லிவிட்டீர்கள், மதுராவின் படங்கள் ஏதும் இல்லையா டீச்சர்:))))

said...

வாங்க வல்லி.

கண்ணன் ரொம்ப எளிமையான இடத்தில் இருந்தான்னு சொல்லத்தான் இருட்டா வச்சுருக்காங்களோ என்னமோ!!!!

அப்புறமா, யமுனையை ஒரு பகலிலும் பார்த்தேன்.

said...

வாங்க வித்யா.

ஜாலி டூர்தான் உங்களுக்கு! அதிலும் படிக்கும் காலத்தில் தோழிகளுடன்...மஜாவா இருந்துருக்குமே!!!!

said...

வாங்க சுமதி.

மதுராவின் முதல் படம்........ யக்!
அதான் இதுலே படம் ஒன்னும் போடலை.

அடுத்தபதிவுகளில் போட்டுடலாம். அழகான படங்கள் இருக்கு.

said...

அன்பின் துளசி - கூகுள் மேப் இந்தியாவிற்காக எழுதப்பட்டதல்ல - அவை அனைத்தும் அயலகத்திற்கே உரியவை.

மதுரா பார்க்கப் போயிட்டு அதப் பத்தின அத்தன செய்திகளையும் சேகரிச்சுட்டு வந்து எழுதித் தள்றதே துளசிக்கு வேலையாப் போச்சு - எப்படித்தான் காது கண்ணு எல்லாவற்றையும் கூர்மையா வச்சிக்கிட்டு அபாரமான நினைவாற்றலைக் கொண்டு எழுதித் தள்றாறு.

பகவ்த் லீலா - ஞானக்கண்ணல் பார்த்து காதுகளை உபயோகப்படுத்திக் கேட்டு கைகளால் எழுதப்பட்ட நூல் போல.

த்ரீ டவுண் - நாலு டு கோ - துளசி டச்

மதுரா பெயர்க்காரணம் அருமை - ஆமா அதென்ன நடுவுல மக்கள் பிரதிநிதி பத்தி - ஆட்டோ வரும் ஜாக்ரத

பல்லி - 51 ரூபா - பாவப்பட்ட பல்லி - படிசிக்கிட்டே வஏலை பார்க்கும் பல்லி - துளசியின் கண்பார்வைக்கு அவ்ளோ சக்தியா

மதுரா பெரிய நகரம் - ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்க்கொ - சூபர் டச்

வழிலே பாத்த வறுத்த மீனு - லைட்டிலாத யமுணா - ஷர்மாவுக்கு நாலு காலு - மாட்டுக்கணக்கு - விதவக் கணக்கு - செல்லாது செல்லாது கதய மாத்துன்னு துளசி -

ஹாண்டட் ஓவர் டு சின்ன ஷர்மா - வெயிட்டீங்க்ஸ் துளசி ........

said...

உங்க கூடவே மதுரா வில் பிரயாணம்
செய்வது போல இருந்தது. ஆமா, என்ன்
திடீர்னு தொடரும் போட்டீங்க?

said...

மதுரா அவ்வளவு அழுக்காச்சா? :-(

said...

நல்ல கட்டுரை, படங்களுடன் மதுராவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேம், கோபால் சாரும், நியுஸில பொண்ணும் நலமா?.

said...

வாங்க சீனா.

ஆஹா........

பிரிச்சு மேயறதுன்னா இப்படித்தான்.

ஒன்னுவிடலையே:-)))))

said...

வாங்க கோமு.

இது தொடர் கட்டுரைதாங்க.

தலைப்புலேயே மதுரா பயணத்தொடர்ன்னு போட்டுருக்கணும்.
ஒரு பயணமுன்னு போனால் ஒரு பதிவோட அடக்க முடியுதா? நானே ஒரு அடங்காப்பிடாரி! எனக்குன்னு இப்படி வாய்க்குது பாருங்க!


கூடவே வாங்க. சுத்தலாம்:-)

said...

வாங்க குமார்.

மதுரா நகரில் நுழைஞ்சவுடன் எடுத்த முதல் படம் போட்டுருந்தேன்னா.....


யக்:(

said...

வாங்க பித்தனின் வாக்கு.

விசாரிப்புக்கு நன்றி.

கோபாலும் மகளும் நலமே!

இன்னும் நாலைஞ்சு பகுதியாவது இந்த ஏரியாவைப் பத்தி வரும். வரணும்.

said...

மதுரா பெயரைக் கேட்டாலே இனிக்குமே.

நேரத்திற்கு வரமுடியவில்லை... தொடர்கிறேன்.

said...

வாங்க மாதேவி..
இனிப்பது பெயர் மட்டுமே!