Friday, November 19, 2010

ஒபாமா வருகையும், ஒரு டும்டும் டும்மும்.

தோழியின் ரெண்டாவது மகருக்குத் திருமணம். முகூர்த்தம் காலை 6 மணிக்கு. மூத்தவருக்கும் போன மார்ச் மாதம் திருமணம் நடந்துச்சு சென்னையில். அதுவும் இப்படிக் காலை 6 மணிக்கு! காலையில் வண்டியை வரச்சொல்லிட்டு ஆறுமணிக்கு ட்ரைவர் வந்து எழுப்புனதும் மணியைப் பார்த்தால் ........ இனி அலறிக் காரியமில்லைன்னு சாயந்திரம் வரவேற்புக்குப் போனோம். இந்த முறை அப்படி ஆகிடக்கூடாதுன்னு ரொம்ப கவனம் எடுத்துக்கிட்டேன்.

அதென்னப்பா எல்லாக் கல்யாணமும் இப்படி விடிஞ்சும் விடியாமலும்? ரெண்டு வீட்டு புரோகிதர்களும் சேர்ந்து பார்த்துக்கொடுத்த முகூர்த்த நேரமாம். நம்ம ட்ரைவருக்கு தில்லி சரியாத் தெரியாதுன்றதால் வேற ஒரு உள்ளூர் வண்டியைக் காலை அஞ்சுமணிக்கு வரச்சொல்லி ஏற்பாடு. காலை நாலு மணிக்கு எழுந்து அரக்கப்பரக்க ரெடியானோம். எழுந்தவுடன் உள்ளூர் கார்க்காரருக்கு செல் அடியுங்கன்னா..... பாவம் அந்தாளு தூங்கட்டும். நாலரைக்கு எழுப்புனால் ஆச்சுன்னார். நாலரை மணிமுதல் நாலைஞ்சுமுறை கூப்பிட்டாலும் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி இருக்காருன்னு சேதி வருது.

அஞ்சு மணியாகியும் ஆள் கிடைக்கலை. மூத்தவர் கல்யாணம் போல தாலிகட்டும் நிகழ்ச்சியை மிஸ் பண்ணப்போறோமுன்னு மெள்ள ஆரம்பிச்சேன். கீழே போய் ஒரு காஃபியைக் குடிச்சுட்டு வரவேற்பில் இருந்தவரிடம் ஒரு டாக்ஸிக்கு சொன்ன மூணாவது நிமிஷம் வண்டி வந்துருச்சு.

கிளம்பி பத்து மீட்டர் போனதும் தடக்னு வண்டி நின்னுபோச்சு. போச்சுடா......டிரைவர் கீழே இறங்கிப்போய் பானெட்டைத் திறந்து கொஞ்சநேரம் தப்லா வாசிச்சார். சின்னக் கனைப்போடு இஞ்சின் ஸ்டார்ட் ஆச்சு. அப்புறம் பத்து மீட்டருக்குப் பத்து மீட்டர் வண்டி நிக்கரதும் தப்லா வாசிப்பு தொடருவதுமா இருக்கு. ஒருவேளை தில்லி கார்ப்பரேஷன் குப்பைவண்டி இப்படி டாக்ஸியா மாறுவேஷம் போட்டு வந்துருக்கோ?

இந்தக் கணக்குலே போனால் அஞ்சாறு வருசம் ஆகிரும் கல்யாணக் கிளப்புக்கு போக! பார்லிமெண்ட் இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவிலே இருக்கும் 'கான்ஸ்டிட்யூஷன் க்ளப் ஆஃப் இண்டியா'வில்தான் கல்யாணம் நடக்குது. இன்னிக்கு ஒபாமா வேற பாராளுமன்றத்தில் பேசப்போறார். அந்தத் தெருப்பக்கமே போகமுடியாமப் போகப்போகுது..........

நாலுமுறை நின்னு தட்டிக்கொடுத்துன்னு ஆனதும் 'குளிர் கூடுதலா இருக்குன்னு இஞ்சின் வேலை செய்யலை'ன்றார் நம்மாள். குளிரா? பதற்றத்தில் எனக்கு வேர்த்துக் கொட்டுது. வண்டிக்கு கேஸ் ப்ராப்லமா? கண்ணில் பட்ட ஒரு பெட்ரோல் பங்குக்குப் போய் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதும் வண்டி ஓட ஆரம்பிச்சது. "அடப்பாவி , சொட்டு எரிபொருள் இல்லாமலா வண்டியைக் கொண்டுவந்தே?"

அதே கூர்காவ் டோல் கடக்கணும். 55 ரூபாய் கட்டணம். நேத்தி ராத்திரி 20தானே கட்டுனோம்? அதுக்குள்ளே விலைவாசி ஏறிப்போச்சா? கூர்'காவ்'க்கு வர்றதுக்கு இருவது. தில்லிப் 'பட்டணம்' போகணுமுன்னா அம்பத்தியஞ்சு. கிராமத்துக்கு நகரத்துக்கும் உள்ள வேறுபாடு இங்கிருந்தே ஆரம்பிக்குது!

இன்னும் பொழுது விடியலை. ட்ராஃபிக் இல்லை. முக்காமணியாப் போய்க்கிட்டே இருக்கோம்..

அடுத்த பிரச்சனை ஆரம்பமாச்சு. பார்லிமெண்ட் தெரு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஏகப்பட்ட போலீஸ் குவிஞ்சுகிடக்கு. ஒபாமா வருகையால் எட்டுமணிக்குப் பிறகு இந்த ஏரியாவில் நுழையத் தடை. அட்ரஸ் சொல்லி வழிகேட்டோம். அதிகாரி காமிச்ச வழியில் போனால் C.P. வருது. போச்சுறா...... கடையெல்லாம் மூடிக்கிடக்கு. இல்லைன்னா கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுருக்கலாம். போலீஸுக்கு ஏரியா விவரம் தெரியலை:( அப்படி ஒரு GK. ஹூம்.....

இன்னொரு தெருவில் காலை வாக் போய்க்கிட்டு இருந்தவரை நிறுத்திக் கேட்டுட்டு, க்ளப்புக்குப் போய்ச் சேர்ந்தோம். ரிஸர்வ்பேங்க் கட்டிடத்துக்கு நேரா முன்னாலே இருக்கு இது. வாசல் விரிச்சோன்னு கிடக்கு. கண்ணாடி வழியா தென்பட்டார் வேஷ்டி கட்டுன ஒருத்தர். யஹி ஹை ரைட் ப்ளேஸ்.
வாசலில் இருந்த செக்யூரிட்டி ஹால் பக்கம் கை நீட்டினார். உள்ளே போனா யாருமில்லை!!! அட நாம்தான் முதல்லே வந்துருக்கோமா? ஆறு பத்தாச்சேன்னும்போது, இன்னொரு கதவைக் காமிச்சு அங்கேதான் சடங்குகள் நடக்குதுன்னு நம்மைக் கூட்டிப்போனார் ஒருத்தர். வெளியே தோட்டத்தில் பந்தல் போட்டு மணவரை அமைச்சுருக்காங்க. ஹவன் புகை வெளியில் போயிரும். கால்மணிதான் மிஸ்ஸிங். மணிரத்தினம் படம் போல ஒரு செட்டிங்ஸ். முக்கால் இருட்டில் படமெடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்கேன். நேரமாக ஆகப் பலபலன்னு பொழுது விடியவும் தில்லிக் குரங்குகள் மணவரை உள்ள பந்தலின் மேல் குதிச்சு விளையாட வந்ததுகள். ஆஞ்சநேயரே கல்யாணத்துக்கு சாட்சி!

சுடச்சுட காஃபி, ஸ்நாக்ஸ்ன்னு சுத்திவந்து விளம்பிக்கிட்டு இருந்தாங்க பணியாட்கள்.

அரக்கு பார்டரில் கீதோபதேசம் படம் நெய்த புடவை கண்ணை அப்படியே இழுத்துச்சு. நேத்துதானே அங்கே போயிட்டு வந்துருக்கேன். 'கீதா?' என்றேன். 'கல்யாணி' ன்னாங்க அவுங்க.! அப்படியே பரிச்சயமாகிப் பேசிக்கிட்டு இருந்தோம். ராஜஸ்தானில் ஒரு பள்ளிக்கூடத்துப் ப்ரின்ஸி.

தாலிகட்டும் வைபவம் எல்லாம் நல்லபடி நடந்து முடிஞ்சதும் முதலில் பார்த்த ஹாலில் போய் உக்கார்ந்தோம். கலை நிகழ்ச்சியாப் பாட்டுப் பாடினாங்க சிலர். வட இந்திய ஸ்டைலில் அந்தாக்ஷரி விளையாடலாமுன்னா எனக்குத் தொண்டை சரி இல்லை:-)))))
கல்யாணக்கூட்டத்தில் அநேகருக்கு என்னைத் தெரிஞ்சுருந்தது! எழுத்து மூலமாவா? ஊஹூம்... ஃபோட்டோ மூலமா!!!!!நம்ம கைவண்ணம் அப்படி!

முதல்மகர் கல்யாணத்தில், ரெண்டு ஆண் சம்பந்திகளும் அசப்பில் ஒன்னுபோல இருக்காங்களேன்னு அவுங்களை ஒன்னா நிக்கவச்சு ஒரு படம் எடுத்து 'ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிங்க'ன்னு தோழிக்கு அனுப்புன படத்தை அவுங்க தன் உற்றார் உறவினர் நட்புகளுக்கு சர்குலேட் செஞ்சுருந்தாங்க என்ற ரகசியம் வெளிவந்துச்சு.

அறிமுகப்படலத்தில்....'இவுங்கதான் துளசி. அந்த ஆறு வித்தியாச......'

'அட! இவுங்கதானா? நல்ல ஜோக் நீங்க அனுப்புனது:-))))'

நம்ம தோழி ஒரு பத்திரிகையாளர். அவுங்களுடன் ஜர்னலிஸம் படிச்சக் கல்லூரித் தோழிகள் பலரும் வந்துருந்தாங்க. பத்திரிகையாளரா ஜமாய்ச்சுக்கிட்டு இருக்காங்க. அந்த வகையில் ஒரு மூத்த எழுத்தாளரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அறுபதுகளில் கணையாழி ஆரம்பிச்சு அதை வளர்த்தெடுத்த முக்கியமானவர்களில் ஒருவர். சாந்தா ராமஸ்வாமி. இந்திரா பார்த்தசாரதி, திஜர, அசோகமித்திரன், சுஜாதா இப்படி அவுங்க வட்டம் ரொம்பப்பெருசு! இப்பெல்லாம் எழுதறதில்லை. வெறும் வாசிப்பு மட்டும்தானாம். நம்ம 'சோ' இவுங்க க்ளாஸ்மேட் என்பது ஒரு கொசுறுத்தகவல்.

வெளியே தோட்டத்தில் பத்துமணிக்கு சாப்பாடு தயார். பஃபே சிஸ்டம். அவ்வளவு சீக்கிரமா சாப்பிட முடியாதுன்னாலும்......... கண்ணால் பலவகைகளை சாப்பிட்டேன். நம்ம தோசை இட்டிலி வடையும் ஓக்கே! எல்லாம் 'ஸப் ஸப்ஜி'ன்னு பாவைக்காய், கத்தரிக்காய், குடமிளகாய், வெண்டைக்காய்ன்னு முழுசுமுழுசா பலவகைக் காய்கறிகளை மசாலாவுடன் சமைச்சு அடுக்கி வச்ச விதம் புதுசா இருந்துச்சு. கிளிக்கோ க்ளிக். தோட்டம் பராமரிப்பு நறுவிசா இருக்கு.

பத்தே முக்காலுக்கெல்லாம் கிளம்பிட்டோம். டாக்சி ஸ்டேண்டில் வந்து ஒரு டாக்ஸி பிடிச்சுப் போகும்போது தில்லியின் ரவுண்ட் அபௌட்களில் எல்லாம் அமெரிக்கக் கொடிகளும் இந்தியக் கொடிகளுமாய் 'ஹம் தோனோ பாய் பாய்'னு படபடன்னு பறந்துக்கிட்டே இருந்தன.
ஷாந்தி பாத், சாணக்யபுரி எல்லாம் துடைச்சு வச்சதுபோல் அப்பழுக்கு இல்லாம பளீர்ன்னு சிரிக்குது. ராஜ்பாத் எல்லாம் சோப் போட்டுக் கழுவியே வச்சுருக்காங்க. இதேமாதிரி நகரம் பூராவும் சுத்தமா இருக்கும் காலமும் வராதா? ஒரு ஏக்கம்தான். மத்தபடி அண்ணன் ஒபாமாவுக்கு ஒரு ஃப்ளெக்ஸ் பேனர் உண்டா? ஒரு தோரண வாயில் உண்டா? விமான நிலையத்தில் இருந்து புது சட்டசபைவரை பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகளால் ஆன தோரணம்.உண்டா? வட்டப்பூவுக்குள் சிரிக்கும் 'தலை' உண்டா? இதுக்குத்தான் சென்னைவழியா வரணுங்கறது. அட்டகாசமான வரவேற்பு எங்கே கிடைக்குமுன்னு கவனிக்கத்தெரியலை, என்ன ஸிஐஏவோ? என்னமோ போங்க......
ஒபாமா பேசி முடிச்சுட்டு நிதானமா வரட்டும். நாம் முன்னால் போகலாமுன்னு கூர்காவ் போய்ச் சேர்ந்தோம். இந்த ஹொட்டேலை இப்ப நிர்வகிப்பது நம் நியூஸித் தோழியின் மகர். அவரையும் சந்திச்சுக் கொஞ்சம் குடும்ப விஷயங்களைப்பேசித் தீர்த்து, அரைமணி நேரத்தில் வேஷம் மாறி தெற்கே பயணப்பட்டோம்.

இந்தக் கல்யாணத்துக்காக நம் சென்னைத் தோழிகள் சிலர் குடும்பத்துடன் வருவதா ஒரு திட்டம் இருந்துச்சு. அவுங்களையெல்லாம் அப்படியே அலாக்கா இங்கே சண்டிகருக்குக் கொண்டுவந்து நாலைஞ்சுநாள் ஆட்டம்போடவச்சு அனுப்பலாமேன்னு நினைச்சு கோபாலைப் பிச்சு எடுத்து ஒரு வாரம் லீவு எடுக்க வச்சேன். கடைசியில் பார்த்தால் எல்லாரும் அப்பீட் ஆகிட்டாங்க. கிடைச்ச லீவை விடவேண்டாமேன்னு சின்னதா ஒரு பயணம்.


நாங்க இந்தியாவில் இருக்கும் சமயத்தில் மகர்களின் கல்யாணம் வச்சுக்கறதா தோழிக்கு ஒரு நேர்த்திக்கடன் இருந்துருக்கு:-)))) அதை நிறைவேற்றுன மகிழ்ச்சி அவுங்க முகத்தில்!!!!

மணமக்கள் நல்லா இருக்கணும். ஆசிகளை அள்ளி வழங்குவோம்!

48 comments:

said...

ஒவ்வொரு வரியும் பல கதை சொல்லுது போங்க.. :)

ஹம்தோனோ பாய் பாய் சூப்பர்..:)
சென்னை வந்திருந்தா ஒபாமாக்கு போட்டி போட்டு எல்லாரும் பேனர் வச்சி அவர மயக்கம்போட வச்சிட்டா வந்த வேலை நடக்காதுன்னு தான் வடநாட்டு வழி..:)

said...

"magar" na enna?

said...

//இதுக்குத்தான் சென்னைவழியா வரணுங்கறது. அட்டகாசமான வரவேற்பு எங்கே கிடைக்குமுன்னு கவனிக்கத்தெரியலை, என்ன ஸிஐஏவோ? என்னமோ போங்க......//

பகுத் அச்சா!

said...

அடடா!! நீங்க தவாபாஜி டேஸ்ட் பண்ணலையா!

மிஸ்பண்ணிட்டீங்களே... நம்ம ஒபாமா பேனர் வரவேற்பை மிஸ் பண்ணமாதிரி :-))))))

said...

நம்ம ஊரில பெட்ரோல் இல்லாம வண்டி கொண்ட வரமாட்டாங்க. ஆட்டோதான் கொண்டுவருவாங்க. சரியா அரசியல் பேசிட்டீங்கப்பா.:) சிரிச்சு சிரிச்சு...சிங்கமே வந்து கேக்குது. ஒரு கல்யாணப் பதிவில சிரிக்க என்ன இருக்குன்னு:)
ஒபாமா அமெரிக்கா போய் ரொம்ப வருத்தப் பட்டாராம். ரெண்டு விஐபி வந்திருக்கோம் ஒருவரை ஒருவரை மீட் செய்யலையேன்னு!!
ஸ்ஸ்ஸ்ஸ். சே நான் கூட அந்தக் கல்யாணத்துக்கு வந்திருக்கலாமே. இப்படி ஒரு நல்ல சாப்பாட மிஸ் செய்துட்டேனே. சோ' பிரண்டையும் மிஸ் பண்ணிட்டேன்:)
ஒரு இடத்துக்கு போகிறது முக்கியம் இல்ல. அதைப் பத்தி இவ்வளவு அழகா இன்னொருத்தருக்குச் சொல்லத் தெரிஞ்சதுக்கு உங்களுக்கு ஒரு பதிவு ஸ்ரீ பட்டம் கொடுக்கணும்பா! சூப்பர் கல்யாணம். மணமக்களுக்கும் உங்க தோழிக்கும் வாழ்த்துகள்.

said...

டும்டும்டும்...கீதா...விருந்து பார்த்தாச்சு.

துளசிகோபால் போட்டோ சூப்பர்.

said...

திருமண சாப்பாடு, கீதோபதேச சேலை, ஒபாமாவின் வரவேற்புகு பேனர் யோசனை எல்லாம் நல்லாருக்கு டீச்சர்:))))

said...

//அண்ணன் ஒபாமாவுக்கு ஒரு ஃப்ளெக்ஸ் பேனர் உண்டா? ஒரு தோரண வாயில் உண்டா? விமான நிலையத்தில் இருந்து புது சட்டசபைவரை பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகளால் ஆன தோரணம்.உண்டா? வட்டப்பூவுக்குள் சிரிக்கும் 'தலை' உண்டா? இதுக்குத்தான் சென்னைவழியா வரணுங்கறது. அட்டகாசமான வரவேற்பு எங்கே கிடைக்குமுன்னு கவனிக்கத்தெரியலை, என்ன ஸிஐஏவோ? //

சரியாச்சொன்னீங்க துளசிம்மா :)

ஒபாமாவுக்குக் கொடுத்துவைக்கலை :)

said...

உங்க பதிவைப் பார்த்ததும் ஒபாமா கொண்டு வந்த ஓமப் பொடின்னு எழுதலாம்னு இருக்கேன்!

said...

நல்ல பதிவு டீச்சர், இது எல்லாம் இங்க சகஜம் டீச்சர்.

said...

இப்படியெல்லாம் பரபரப்புகள், அவசரங்கள், இருந்தால்தான் கல்யாணங்கள் ரசிக்கும்! சுவாரஸ்யமான பதிவு!

said...

படிச்சிட்டேன் டீச்சர் ;)))

said...

நன்றாக ரசிக்க வைத்த பதிவு நன்றிங்க.

said...

உங்க பழய பதிவுகளை எல்லாம் படிச்சாத்தான் புதிய பதிவுகளை புரிந்துகொள்ளும்படியான ஒரு அசத்தல் நடை. சரி, வேறு வழியில்லை, உங்க பதிவுக்காகவும் ஒரு வருடம் ஒதுக்கிட்டேன். அவ்வளவு நாள் ஆகும்னு நினைக்கிறேன் :)-

said...

வாங்க கயலு.

ஏகப்பட்ட கதை நடக்கும்போது கதைசொல்லியின் 'அளப்பு'க்கு எல்லை ஏதுப்பா:-))))))

said...

வாங்க பொற்கொடி.

மகர்!!!!!

தோளுக்குமேலே வளர்ந்த புள்ளைகள் தோழனா இருக்கணும்னு ஒரு பழமொழி இருக்குப்பா.

அந்தக் கணக்குலே நம்ம தோழி ஒருத்தர் தன் பையனை மரியாதையா விளிக்கணுமுன்னு பையர்ன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்ப பொண்ணை என்னன்னு சொல்லிக் குறிப்பிட?

நான் அதுக்குத்தான் யூனிசெக்ஸ் சொல் ஒன்னு உண்டாக்கிக்கிட்டேன். அடல்ட்டான மகன், மகள்களுக்கு 'மகர்'. சரியா வருதா??????

said...

வாங்க அமைதிச்சாரல்.

எனக்கு ரொம்ப காரமாவோ, ஸ்பைஸியாவோ இருந்தால் சாப்பிட முடியாது.

அதுக்குத்தான் கோபால் இருக்காரே. அவர் சாப்பிட்டுப் பார்த்து நல்லா இருக்குன்னார்.

இப்பெல்லாம் எனக்குக் குழம்பே வேணாமுன்னு போச்சு. வெறும் பருப்பு, தயிர் அப்படி ஒன்னும் இல்லைன்னா வெறுஞ்சோறு போதும் எனக்கு.

said...

வாங்க தருமி.

தன்யவாத்.

said...

வாங்க வல்லி.

சோ ஃப்ரெண்ட், அரசாங்கத்துலே மொழி பெயர்ப்பாளரா வேலை செஞ்சு ரிட்டயர் ஆனவங்க. இந்த வயசிலும் கூட சோமு அவர்களின் நாவல் ஒன்னை மொழிபெயர்த்துருக்காங்க.
க்ரேட் லேடி. அடக்கமா இருக்காங்க. நாந்தான் துளசிதளம் படிக்கச்சொல்லி கார்டு கொடுத்துட்டு ஓடி வந்துட்டேன்:-))))

said...

வாங்க மாதேவி.


இன்னும் கொஞ்சநேரம் இருந்துருந்தா நம்ம வாசகர் வட்டத்தைப் பெரிதாக்கிக்க நல்ல ச்சான்ஸ்!

said...

வாங்க சுமதி.

நன்றிப்பா. அப்பப்ப நம்ம ரெண்டு பைசாவை எடுத்து விடாட்டா எப்படி?:-))))

said...

வாங்க சுந்தரா.

//ஒபாமாவுக்குக் கொடுத்துவைக்கலை :)//

அதே அதே! அள்ளப்போனாலும் அதிர்ஷ்டம் வேணும்,இல்லை?

said...

வாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி

ஆஹா.... தலைப்பே சூப்பரா இருக்கு. சீக்கிரம் எழுதுங்க.

பிகு: எனக்கு ஓமப்பொடி பிடிக்கும்:-)

said...

வாங்க பித்தனின் வாக்கு.

இங்கே எதுதான் சகஜமில்லை!!!!

said...

வாங்க மனோ.

உண்மைதான். சப்னு இருந்துருந்தா பதிவே எழுதமுடிஞ்சுருக்காது:-)))))

ஜூஸியா நிறைய நடக்குது நம்மைச்சுற்றி!!!!

said...

வாங்க கோபி.

இது பரிட்சைக்கு வரும் பகுதி:-))))

said...

வாங்க நித்திலம்-சிப்பிக்குள் முத்து.

எப்படிங்க இவ்வளவு கவித்துவமான பெயர் வச்சுக்கிட்டீங்க!!!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க டாக்டர்.

நம்ம சீனா இருக்கார் பாருங்க. அவர் ஒரு சமயம் புதுவருசத் தீர்மானமா 'துளசிதளம்' படித்து முடிக்கப்போறேன்னு சொன்னார். நானும் பொறுமை காத்தேன். ஊஹூம்.....

இப்போதான் மனிதர் பணியில் இருந்து ஓய்வு அடைஞ்சுட்டார் ஒரு பத்துப்பதினைஞ்சு நாள் ஆச்சு.

இப்பவாச்சும் முடிக்கறாரான்னு பார்ப்போமுன்னு இருக்கேன். இப்போ அவருக்குத் துணையா நீங்க வந்துருக்கீங்க!

அதிகம் ஒன்னும் இல்லை. ஒரு 1125தான் தேறும். முக்கால்வாசியும் கொஞ்சம் நீண்ட பதிவுகளா இருப்பதுதான் சங்கடமா இருக்கப்போகுது.

முயற்சி, வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.

said...

2004-லிலிருந்து ..//அதிகம் ஒன்னும் இல்லை. ஒரு 1125தான் தேறும். //

எங்களாலெல்லாம் ஒரு 500 கூட "தேத்த" முடியலையே .. அதான் டீச்சர்!

said...

//
அட்டகாசமான வரவேற்பு எங்கே கிடைக்குமுன்னு கவனிக்கத்தெரியலை, என்ன ஸிஐஏவோ? என்னமோ போங்க..
//
ஆமாங்க............ இதெல்லாம் தெரியாம எதுக்கு அவ்ளோப்பேரு அவர் கூட வந்தாங்க????

//
நாலைஞ்சுநாள் ஆட்டம்போடவச்சு அனுப்பலாமேன்னு நினைச்சு கோபாலைப் பிச்சு எடுத்து ஒரு வாரம் லீவு எடுக்க வச்சேன்.
//
பாவம் அவர்....

said...

//நாங்க இந்தியாவில் இருக்கும் சமயத்தில் மகர்களின் கல்யாணம் வச்சுக்கறதா தோழிக்கு ஒரு நேர்த்திக்கடன் இருந்துருக்கு:-))))//

எங்கூடவும் ஒரு நேர்த்திக்கடன் இருக்கு....கபர்தார்...!

சென்னைக்கு ஓபாமா வந்திருந்தால்...நம்மாளுங்களுக்கு கொடுத்து மாளாதுன்னுதான் நேரா மும்பை போயிட்டார்.

கல்யாணங்களில் கல்ந்து கொள்வதே ஒரு சுவாரஸ்யம். அதைவிட நாங்களும் கலந்து கொண்டாற்போல் ஓர் உணர்வைக் கொடுப்பது அதைவிட சந்தோசம். வல்லி சொன்னாப்போல நீங்க 'பதிவுஸ்ரீ'தான்!!!

மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

said...

சமூத்த எழுத்தாளரை எங்களுக்கும் அறிமுகப்படுத்தியதற்கு இன்றைய எழுத்தாளருக்கு நன்றிகள்.

said...

அம்மா,

இந்தியாவா! டில்லியா! குர்காவா! என்ன சொல்றீங்க்க! (சொக்கா!) எப்ப வந்தீங்க்க? சொல்லவே இல்லீங்களே

said...

ada ramachandra!!!!! i didnt read the entire post that night, and scratching my head last 2 days what/who is magar!!!!!

said...

hello teacher, kitta thata pala classa bunk adichittu eppa thirimbhi admission. But classa edhayum miss pannalai..appa appa vandhu padichitu dhanerukaen.

I was trying to get your contact mail id. ennoda amma appa are in chandigarh for a conference and i was thinking of asking my amma to meet you if that was in anyway possible.


unga padhivugalin thakkathal,i could guide my mom through some places to visit. So,thanks a bunch for that!!

said...

Thamarai,

தனி மடல் உங்க ஜிமெயிலுக்கு அனுப்பி இருக்கேன். பார்க்கவும்.

said...

அது ஒன்னுமில்லைங்க தருமி. ஆரம்பப்பள்ளியில் 'டீச்சர்' ரொம்பப் பேசுவாங்க. கல்லூரியிலே 'பேராசிரியர்' கொஞ்சமாப் பேசுவார்.:-)

said...

வாங்க வழிப்போக்கன்-யோகேஷ்.

பாவம் தான். ஆனா இப்ப யோசிச்சு என்ன பயன்? 36 வருசத்துக்கு முந்தி செஞ்ச ஒரே தப்பு அவரை விரட்டுது:-)))))

said...

வாங்க நானானி.

நேர்த்திக்கடனை சீக்கிரமா நிறைவேத்த முயற்சி பண்ணுங்க.

நேரில் வரும் ச்சான்ஸ் இருக்கு!!!!!

மணமக்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை அனுப்பியாச்சு. அவர்கள் சார்பில் நன்றி.

said...

வாங்க டொக்டர் ஐயா.

எனக்குமே அவுங்களைச் சந்திச்சது மனசுக்கு மகிழ்ச்சியா இருந்தது.

நிறைகுடம் அவுங்க. ததும்பாம நின்னாங்க. அவுங்க பக்கத்துலே குறைகுடமாக் கொஞ்சம் கூத்தாடிட்டு வந்தேன்:-))))

said...

வாங்க சிவமுருகன்.

நீங்க இப்ப எங்கே இருக்கீங்க? தில்லியா?

நான் ஒரு ஆறரை மாசமா சண்டிகரில் இருக்கேன்.

said...

பொற்கொடி,

அதான் உடனே கண்ணையாவது ஓட்டணுங்கறது:-))))))

said...

வாங்க தாமரை.

உங்க அம்மாவுடன் பேசியாச்சு நாலுமுறை:-)))))

மாலையில் வீட்டுக்கு வர்றேன்னு சொல்லி இருக்காங்க.

said...

அன்பின் துளசி, டாக்டர் இப்பத்தானே ஆரம்பிச்சிருக்காரு என்ன ஒரு 1125 தானே - ஊதித்தள்ளிட மாட்டோமா ? ம்ம்ம்ம் செஞ்சிடுவோம்ல - இன்னிக்கு கோட்டா ஆரம்பிச்சாச்சுல்ல

மகர் - அருமையான சொல் - யூனிசெக்ஸ் சொல் - துளசி வாழ்க !

ஒரு டாக்ஸ் வரச் சொல்லிப் போறாதுக்கு7 இவ்ளோ ஆர்ப்பாட்டமா ? பரவால்ல மொதக் கல்யாணத்துக்கு வரவேற்புக்காவது போயிட்டீங்க ... இப்ப குப்ப வண்டி டாக்ஸி - ம்ம்ம்ம்ம் - கோபால கண்ணாலேயே எரிச்சாச்சா .....

200 ரூபா பெட்ரோல் - டோல் 20ஆ 55ஆ - விவாதம் - ஷ்ரூட் போங்க .போலீஸுக்கு ஜீக்கே தெரியணுமா - அது சரி .கா மணி மிஸ் பண்ணி ஹால் கண்டு பிடிச்சி - உள்ளே போய் உக்காந்தாச்சுல்ல - ஆஞ்சநேயர் சாட்சியா அட்டெண்ட் பண்ணீயாச்சுல்ல பலே பலே

சுடசுட காஃபி ஸ்னாக்ஸ் - பத்தாதா - கீதோபதேசம் போட்ட பட்டுப் புடவை வேறயா - கிதா இல்லல்ல கல்யாணி - ஃப்ரெண்ட் பிடிக்கறதுலே மன்னி... கல்யாணத்துல துளசியத் தெரியாதவங்க ஒருத்தர் கூட கிடையாதாமே - எழுத்தா - படமா - ரெண்டுமா இருக்கும் .... அய்யோ ஆறு வித்தியாசத்துளசி - பட்டம் நல்லாருக்கே !

அறுபதில் கணையாழி - எழுத்தாளர் களில் ஜாம்பவார்கள் - துளசியைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தார்களா ? பலே பலே ! ( என் இளைய மகர் கணையாழியில் எழுதி இருக்கிறார் - சில சிறு கதைகள் - இரா.முவின் சிஷ்யை ) - சோ - கொசுறுத்தகவல் - பலே பலே ! பஃஃபே கண்ணுக்கா நாக்குக்கா ?

ஒபாமா மதுர வழியா வந்திருக்கணூம்ங்க - கலக்கி இருப்போம்ல - மணமக்கள் நல்லா இருக்க நல்வாழ்த்துகள்

said...

அன்பின் துளசி, டாக்டர் இப்பத்தானே ஆரம்பிச்சிருக்காரு என்ன ஒரு 1125 தானே - ஊதித்தள்ளிட மாட்டோமா ? ம்ம்ம்ம் செஞ்சிடுவோம்ல - இன்னிக்கு கோட்டா ஆரம்பிச்சாச்சுல்ல

மகர் - அருமையான சொல் - யூனிசெக்ஸ் சொல் - துளசி வாழ்க !

ஒரு டாக்ஸ் வரச் சொல்லிப் போறாதுக்கு7 இவ்ளோ ஆர்ப்பாட்டமா ? பரவால்ல மொதக் கல்யாணத்துக்கு வரவேற்புக்காவது போயிட்டீங்க ... இப்ப குப்ப வண்டி டாக்ஸி - ம்ம்ம்ம்ம் - கோபால கண்ணாலேயே எரிச்சாச்சா .....

200 ரூபா பெட்ரோல் - டோல் 20ஆ 55ஆ - விவாதம் - ஷ்ரூட் போங்க .போலீஸுக்கு ஜீக்கே தெரியணுமா - அது சரி .கா மணி மிஸ் பண்ணி ஹால் கண்டு பிடிச்சி - உள்ளே போய் உக்காந்தாச்சுல்ல - ஆஞ்சநேயர் சாட்சியா அட்டெண்ட் பண்ணீயாச்சுல்ல பலே பலே

கமெண்ட் நீளமா இருக்காம் - பிளாக்கர் ஒத்துக்க மாட்டேங்குது - சோ கேரி ஓவர் டு நெக்ஸ்ட்

ஆமா இந்த ரூலு துளசிக்கு கிடையாதாமா ?

said...

வாங்க சீனா.

உங்கூர்லே ஃப்ளெக்ஸ் போர்டு வைக்க துளி இடம் பாக்கி இல்லையாமே! எல்லா இடத்தையும் அஞ்சா நெஞ்சருக்கு ஒதுக்கிட்டதாக் கேள்வி. அதான் சென்னை வழியா வந்துருக்கலாமுன்னு நினைச்சது. தமிழ்நாடு முழுசும் (மதுரை தவிர)கலக்கி இருக்க மாட்டோமா?

இளைய மகர் கணையாழி எழுத்தாளரா!!!!!

ஆஹா....மூணு எழுத்தாளர்களை வீடு தாங்குமா!!!!!!!!!

இனிய வாழ்த்து(க்)கள்.


ப்ளொக்கர் இப்படித்தான் அப்பப்ப உதார் விடும். அதுக்கும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான் பிடிக்குதோ என்னவோ!

said...

Dear Tulasi Madam,
I have been your Blog follower for a
long time & enjoyed yr. Blogs.
When You Come Next time to Gurgaon
we request you to come & stay with us for sometime.
S.Kannan. / Revathy

said...

வாங்க கண்ணன்.

உங்க செல் நம்பர் இருந்ததால் அந்த பின்னூட்டத்தை அப்படியே வெளியிடலை.

அழைப்புக்கு நன்றி.
நீங்களும் சண்டிகர் பக்கம் வரும்போது தகவல் தெரிவிக்கணும்.

பதிவர் வாசகர் சந்திப்பு நடந்து நாள் ரொம்ப ஆச்சு.