அது என்ன இவ்வளோ உரிமையோட நம்ம கம்பெனி'ன்னு சொல்றேன்? இதை ஆரம்பிக்கத்தானே இந்தியாவிலிருந்து கிளம்பி வந்தோம்:-) போன பகுதியில் குறிப்பிட்டிருந்த தீபக் (அண்ணன்) பைய்யாதான் பூனாவில் நம்ம வீட்டுக்கே வந்து கோபாலை இண்ட்டர்வியூ செஞ்சவர். அப்ப, அவர் இங்கே தலைநகரில் சிட்டிக் கவுன்ஸிலில் சீஃப் எஞ்சிநீயரா இருந்தார். இப்ப ஒரு பத்து வருசமாச்சாம் ஓய்வு வாங்கி. ஆனால் இப்பத்தான் இவர் ரொம்ப பிஸின்னு அண்ணி சொன்னாங்க. ஃபிஜியின் தலைநகரான சுவா(Suva City)வில் இருக்கும் இவர்கள் சமூக சங்கத்துக்கு கடந்த மூணு வருசங்களாத் தலைவர் பதவியில் இருக்கார். இவர்கள் சங்கம் அங்கே மட்டும் 4 பள்ளிக்கூடம் நடத்தறாங்க. எல்லாமே இலவசப் பாடசாலைகள்தான். (கல்வியில் பணம் கறக்க இன்னும் கத்துக்கலை) அரசாங்க உதவியும், இவர்கள் சமூகத்தினர் கொடுக்கும் நன்கொடைகளும் போதுமானதாக இருக்காம். பள்ளிக்கூடத்துக்கான கட்டிடங்கள் கட்டுவது, சங்க வேலைகள்னு வாழ்க்கை ஓடுதாம்.
காரை எடுத்துக்கிட்டு நா(ன்)டி வரை போய் வரலாமுன்னு கிளம்பிட்டோம். அங்கேதான் ஸ்ரீ சிவ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் இருக்கு. ரோடு இருக்கும் அழகில் நமக்கு அங்கே போய்ச் சேர எப்படியும் 105 நிமிஷம் ஆகும். அதுவரை தலப்புராணம்' சொல்றேன். ' இது பரிட்சைக்கு வரும் பகுதி:-)
ராமசாமிப் பிள்ளை. வயசு 38. மனைவியுடன் வந்துருக்கார். வருசம் 1906, ஏப்ரல் 28. சேலம் ராசிபுரம் பக்கத்தில் சிங்கராந்தபுரம் ஆளு. ( இந்த ஊர்ப்பெயர் சரியான்னு தெரியலை. இவர் சொன்னதைப் புரிஞ்சு வெள்ளைக்காரர் யாரோ எழுதிவச்ச ரெக்கார்ட்.) இதைத்தவிர வேற குறிப்பு ஒன்னும் இல்லை பதிவேடுகளில். வெள்ளைக்காரன் செஞ்ச அக்கிரமமுன்னு சொல்லணுமுன்னா இப்படி, எங்கே எவ்வளோ தூரமுன்னு ஒன்னும் சொல்லாம ஆட்களைப் பிfடிச்சுக் கொண்டுவந்து இங்கே கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய விட்டதுதான். ( இதை பற்றி விரிவா
கரும்புத்தோட்டத்திலே என்னும் தொடரில் சில வருசங்களுக்கு முன் எழுதி இருக்கேன்)
இப்ப நாமெல்லாமும்தான் வெளிநாட்டில் வேலைக்குன்னு போறோம். இது நம்முடைய சொந்த விருப்பம். போற இடத்தில் நமக்கு எதாவது உதவின்னா நம்ம அரசாங்கத்து ஹை கமிஷன் இருக்கு. அப்ப அந்தக் காலத்தில் இதெல்லாம் ஏது?
அங்கே போனபிறகு அவங்களைக் கூட்டி வச்சு அஞ்சுவருசம் வேலை செஞ்சுட்டா விட்டுருவோமுன்னு அக்ரிமெண்ட் போட்டுருவாங்களாம். மாட்டேன்னு சொல்ல முடியாது. வேணாமுன்னாலும் எப்படித் திரும்பி வரமுடியும்? 8000 மைல்கள் நீந்தியா?
பிள்ளைக்கும் அஞ்சு வருச ஒப்பந்தம், நடந்து முடிஞ்சது. அதுக்குப்பிறகு திரும்பி இந்தியா வர பயணத்துக்கு ஏற்பாடு ஒன்னுமே இல்லையே. ஒப்பந்தக் கூலியா இல்லாம சின்னச் சின்ன வேலைகளைச் செஞ்சுக்கிட்டு அங்கே இருந்தார். ஊர் நினைவுகள் கொசுவத்தியாச் சுத்திக்கிட்டு இருந்துருக்கு. ரொம்ப தெய்வபக்தி உள்ள மனுசர் என்றதால் கோயில்னு ஒன்னு இங்கே இல்லையேன்னு கவலைப்பட்டுருக்கார். கையில் இருந்தக் கொஞ்சம் காசை வச்சு, நதிக்கரையில் இருக்கும் ஒரு ஏக்கருக்குக் கொஞ்சம் கூடுதலா இருந்த ஒரு இடத்தை லீஸ் (15 ஷில்லிங் வருசத்துக்குன்னு) எடுத்துருக்கார். இங்கே எல்லா நிலங்களும் ஃபிஜியன்களுக்குச் சொந்தம். அதுவும் தனிப்பட்ட ஃபிஜியன் இல்லை. அந்தந்த கிராமக் குழுக்களுக்குச் சொந்தம். 99 வருச ஒப்பந்தம் போட்டுக்கலாம். இதைப் பத்தி அப்புறமாச் சொல்றேன். (1987 புரட்சி நடந்த பிறகு ஒரு சில இடத்தை மட்டும், முக்கியமா கம்யூனிட்டிக்கு பயனா இருக்கும் இடங்களைப் போனாப்போகுதுன்னு ஃப்ரீ ஹோல்டா ஆக்குனாங்களாம். அதுலே புதுக் கோவில் இருக்கும் இடம் ஒன்னு.)
மேற்கே பார்த்த ஒரு குடிசைதான் கோவில். அதுக்குள்ளே எந்த மாதிரி சாமி சிலை இருந்துச்சு என்றதுக்கெல்லாம் குறிப்புகள் ஏதும் கிடைக்கலை. ஃபிஜித்தீவுகளில் வருசாவருசம் புயல் திருவிழா வந்துரும். இந்த கூரைக்குடிசை என்னன்னு தாங்கும்?
அங்கே இருக்கும் இன்னும் சில தென்னிந்தியர்கள்கிட்டே பேசுனப்ப எல்லாருமா சின்னச்சின்னதா காசு உதவி இருக்காங்க. குறிப்பா ஏன் தென்னிந்தியர்ன்னு சொல்றேன்னா....... அங்கே வேலைக்காகக் கொண்டுவரப்பட்ட இந்திய மக்களில் முதன்முதலா வந்தவங்க(1879 வருசம்) உத்திரப் பிரதேசம், போஜ்புரி, பீஹார், ஒரிஸ்ஸான்னு வடக்கத்து மக்கள். (அதான் ஹிந்தி அங்கே அங்கீகரிச்ச அரசு மொழியா இடம் வாங்கிருச்சு). அவுங்களுக்கு தென்னிந்திய மக்கள்ன்னா கொஞ்சம் மதிப்புக் குறைவுதான். யேத் தோ மந்த்ராஜி (மதராஸி)ஹை.............
இந்த மாதிரி இந்தியாவிலே இருந்து ஆள் புடிச்சுக்கிட்டு வந்த கொடுமை 1916 வருசம் நின்னுபோச்சு. ஆனா இந்த 37 வருசங்களில் சுமார் 61 ஆயிரம் பேரைக் கொண்டுவந்துட்டாங்க.
பாவம் நம்ம ஜனங்க பொறுமையா இருந்துருக்காங்க. வேற என்ன செய்ய முடியும் சொல்லுங்க. போக்குவரத்துக்கு ஒன்னும் இல்லாத காலம். எல்லாருமே ஏழைகள். வச்சுக்கிட்டா வஞ்சனை? அந்தக் காசை வாங்கவே பத்து நடை நடக்கணுமாம்.
சிலபேர் சேர்ந்துக் கோயிலைக் கட்டச் செங்கல் செய்யலாமுன்னு தீர்மானிச்சு களிமண்ணுலே செங்கல் செஞ்சு 'சூளை' மாதிரி ஒன்னு தயாராக்கிச் சுட்டு எடுத்து ஒரு வழியா சின்ன அறைபோல ஒன்னு கட்டிட்டாங்க. முன் மண்டபமா ஒரு வராந்தாவில் மேற்கூரையா தகரம் போட்டுக் கோயில் வந்துருச்சு. இது நடந்த காலக்கட்டம் 1914/1915 ஆக இருக்கலாமுன்னு கோவில் குறிப்புகள் சொல்லுது.
படம்: நாங்கள் அங்கிருந்தப்ப (1982)கோயில் இப்படி இருந்துச்சு.
கோவிலுக்குக் கொடிமரம் வேணுமுன்னு வேற ஒரு இடத்துலே இருந்து 40 அடி நீள மரத்தைக் கொண்டுவந்தாங்க. எப்படி? அதான் கரும்பு ஆலைக்கு கரும்பு ஏத்திவரும் ரயில் வருதே. வேற எந்த விதமான போக்குவரத்து வாகனமும் இல்லாததால் வெள்ளைக்காரங்க போட்டுக் கொடுத்த ரயில் வண்டி காலியாப் போகும்போது அதுலே ஓசியாத் தொத்திக்கிட்டுப் போறதுதான். இது எந்த மாதிரி ரயில்?
நம்மூர் குழந்தைகள் பூங்காவிலே புள்ளைகளுக்காக ஓடும் பொம்மை ரயில்தான். ரெண்டு தண்டவாளத்துக்கும் இடையில் ரெண்டடிதான் இருக்கும். பயங்கர வேகத்தில்(!) போகும். எப்ப வேணுமுன்னாலும் ஏறலாம் இறங்கலாம்.
ரோடுகளில் குறுக்கும் நெடுக்குமா போய்க்கிட்டு இருக்கும். கரும்பில்லாமக் காலியா இருந்தா இந்தப் பக்கம் ஏறி அந்தப் பக்கம் இறங்கிக்கலாம். இதுக்குப்பெயர் ஷுகர் கேன் எக்ஸ்ப்ரெஸ் (Sugarcane Express).குதிரைகள் இழுத்துக்கிட்டுப் போகுமாம்.
படம்: இப்ப டீஸலில் ஓடும் ரயில்.
இந்த ரயிலில் மூணு பெட்டிகளைக் கெஞ்சிக்கேட்டு அதுலே மரத்தை நீட்டிவச்சுக் கொண்டு வந்தாங்க. ஒரு வளைவில் ரயில் திரும்பும்போது மரம் உருண்டு விழுந்து ரெண்டா உடைஞ்சுருச்சு(-: அதே மரத்தை, ரெண்டு துண்டுகளையும் சேர்த்துக் கொஞ்சம் ரிப்பேர் செஞ்சு கொடிமரமும் நட்டாச்சு. இது நடந்தது 1917ல்.
அப்பு நாயர் என்றவர் முருகனுக்குக் காவடி எடுத்து 60 மைல்தூரம் நடந்துவந்து வழிபாடு செஞ்சாராம் 1920இல். இதுதான் முதல் காவடி வழிபாடு அங்கே.
சில வருசங்களுக்குப் பிறகு தென்காசிக்காரர் ஒருத்தர்( எம் என் நாயுடு) அங்கே எதாவது வியாபாரம் செய்யலாமுன்னு வந்துருக்கார். இருக்கற நாட்டையெல்லாம் விட்டுட்டு அங்கே ஏன் வந்தாருன்னு அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அவர் 1924 லே ஊருக்கு வந்து போகத் திட்டம் போட்டப்ப, கோயிலுக்கு சாமி சிலை ஒன்னு ஏற்பாடு செய்ய முடியுமான்னு கேட்டுருக்கார் பிள்ளை.
மூலவரும் சாமித் தாத்தாவும்(1984) பழைய கோவிலில்( இவரைப்பற்றி அடுத்த பகுதியில்)
நாயுடு தென்காசியில் ஒரு தண்டாயுதபாணி சிலைக்கு ஏற்பாடு செஞ்சுட்டார். கற்சிலை தயாராகி நாயுடுவின் உறவினர்கள் மூலமா கப்பலில் பயணப் பட்டுருக்கு. சிலை வந்து சேர்ந்தது 1926. பயணம் முருகனுக்கு ஆகலை. சாமிக்கு வலது காலில் பாதத்துக்கு மேல் விரிசல் விட்டுருந்துச்சு. கையில் பிடிச்சிருந்த தண்டம் உடைஞ்சு போய் இருந்துச்சு. என்ன செய்யறதுன்னு குழப்பமா இருந்தாலும் வேற சிலை இனி எப்படி எங்கே எப்போ வாங்குவதுன்னு தெரியாததால் அந்தச் சிலையையே பிரதிஷ்டை செஞ்சாங்க. இதெல்லாம் ஆகம விதிகளின்படி சரியில்லை என்ற விவரமெல்லாம் (அப்போது) யாரு கண்டா?
கால் உடைஞ்ச மூலவருக்கும், இடுப்பு உடைஞ்ச கொடிமரத்துக்கும் ஒரே மாதிரிக் கணக்கு சரி ஆச்சு. இதே வருசம் 1926 இல்
சாது குப்புசாமி என்றவர் (அவரைப்பத்தி முந்தி எழுதுனது இங்கே இருக்கு) தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ( TISIS)
இவர் ஒரு போலீஸ்காரரா மெட்ராஸ் ராஜதானியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தவர் அதை விட்டுட்டு இங்கே ஃப்ரான்ஸிஸ் என்ற வெள்ளைக்காரரின்
உதவியாளரா 1912 லே ஃபிஜி வந்து சேர்ந்துருக்கார். இந்த சங்கம் நம்ம பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் எல்லாம் கட்டுனாங்க. மொழி இல்லாமப்போனா பிள்ளைகளுக்கு நம்ம பாரம்பரியம், கலை கலாச்சாரம் தெரியாமப் போயிருமேன்னு இந்தப் பள்ளிக்கூடங்களில் தமிழும் தெலுங்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சது அப்போதான். (இப்போ 21 ஆரம்பப் பள்ளிக்கூடங்களும் 5 உயர்நிலைப்பள்ளிகளும் இருக்கு. இங்கே எல்லாருக்கும் ஃபிஜியன் மொழிகூடச் சொல்லித் தர்றாங்க. ஆனா.... தமிழ்?)
இதுலே பெண்களையும் இளைஞர்களையும் சேர்த்துப் பொது சேவை செய்யத் திட்டம் போட்டு ஒரு மாதர் சங்கமும், வாலிபர் சங்கமும் உருவாக்கினாங்க.
இன்னும் ஒரு 5 வருசம் கழிச்சு 1931 லே உற்சவ மூர்த்திகள் ஐம்பொன் சிலைகளா வந்து சேர்ந்தாங்க. குமாரசாமி, சின்னய்யா, குப்புசாமி, வேலாயுதன் கவுண்டர்களும், வெங்கட், கிருஷ்ணா, கோபால் ரெட்டிகளுமாச் சேர்ந்துக் காசைப்போட்டு, அந்தக் காலக்கட்டத்தில் ஊருக்குப்போன ஏகம்பர ரெட்டி மூலமா வரழைச்சாங்களாம். சிலை வந்த நாள் இங்கே திருக்கல்யாண உற்சவம் நடத்துனாங்களாம்.
எல்லாரும் இங்கே தங்கள் சாதிகளைச் 'சர் நேம்' ஆக வச்சுக்கிட்டாலும் ஒன்னுமண்ணாத்தான் இருக்காங்க. ஜாதிச் சண்டைகள் ஒன்னும் இதுவரை இல்லை. கலியாணம் காட்சின்னு எல்லாரும் எல்லாச் சாதிகளிலும் பொண்ணு எடுத்துக்கறாங்க. உசத்தி, மட்டமுன்னு ஒன்னும் கிடையாது. ஆனா தென்னிந்தியா, வட இந்தியான்னு பிரிவுகள் சம்பந்தம் வச்சுக்கறதில்லை. அதிலும் காதல் கல்யாணங்கள் சில நடந்துருது. 'வோ (த்) தோ ஹிந்துஸ்தானி. மகர் ஹம் மந்த்ராஜி' னு பொண்ணுங்க சொல்றதைக் கேட்டுருக்கேன்:-)
பிள்ளைக்கு ஊரோடு போய்ச் சேரணுமுன்னு மனசுலே எண்ணம் வந்துச்சு. ( நாமும் இப்படித்தானே பல சமயங்களில் நினைக்கிறோம். பேசாம மூட்டையைக் கட்டலாமான்னு) கோயில் இருந்த இடத்தை பக்கத்து நிலத்தை ஒப்பந்தம் செஞ்சுருந்த ' ஜஹூர் கான்' என்றவர், தானே இந்த இடத்தையும் வாங்கிக்கறேன்னு சொல்லி இருக்கார். கோயிலும் போயிருமேன்ற பயத்துலே அய்யாக்கண்ணு என்பவர் நான் வாங்கி நடத்தறேன்னதும், சில பல பக்தர்கள் ஒன்னு சேர்ந்து விவாதிச்சு, கோவில் ஒருத்தரின் தனிப்பட்ட இடமா இருந்தா பிற்காலத்துலே கஷ்டம். பேசாம எல்லாருமாச் சேர்ந்து வாங்கிறலாமுன்னு முடிவாச்சு. ஆசை இருக்கு. ஆனால் காசு? போலா மகாஜன் என்ற வட இந்தியர் (ஹிந்துஸ்த்தானி) காசு கடன் கொடுக்கறேன்னு சொன்னதும் அப்படியே வாங்கினாங்க. காசு வாங்குனதால் அவரையே கோவிலுக்கு ட்ரஸ்டியா ஆக்கினாங்க. இவர்தான் முதல் ட்ரஸ்டி.
சங்கத்தில் இருந்த மாரப்ப கவுண்டர், சுப்பா நாயுடு, மாதவன் நாயர், எம்.என் நாயுடுன்னு வியாபாரிகள் சிலர் ஆளாளுக்குக் கைக்காசு போட்டு போலா மகாஜன் கிட்டே வாங்குன 150$ கடனை அடைச்சுட்டுக் கோவிலை சங்கத்துச் சொத்தா ஆக்கிட்டாங்க. இதெல்லாம் நடந்தது 1934 வது வருசம்.
ரெண்டு வருசம் கழிச்சு(1936) மெட்ராஸ்லே இருந்து இங்கே வந்துருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷினைச்சேர்ந்த ஸ்ரீ அவிநாஷ் ஆனந்தாஜி என்ற சாமியார்
சங்கத்துக்கு மூணு விதிமுறைகளையும் உண்டாக்கிக் கொடுத்தார்.
1. பிடி அரிசித் திட்டம்
2. சங்கத்துக்கு உறுப்பினரா ஆகணுமுன்னா நாலணா கட்டணும்.
3. எல்லாக் கல்யாணங்களையும் கோவிலில் வச்சு நடத்தணும்.
பள்ளிக்கூடத்துலே படிக்கறதுக்காக அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து வந்து இங்கேயே தங்கிப் படிக்கும் பசங்களுக்கு இந்த பிடி அரிசித் திட்டத்தில் கிடைச்சதை வச்சு இலவசமா சோறு போட்டாங்க. வாரம் ஒரு நாள் ஒரு ஏரியான்னு கணக்கு வச்சு மாதர் சங்கம் பெண்கள் வீடுவீடாப்போய் அரிசியை சேகரிச்சுக்கிட்டு வருவாங்களாம்.
இதுவரை இந்தக் கோவிலுக்குப் பிள்ளையார் இல்லாம இருந்தார். சாமியார் வருகையைக் கொண்டாடும் விதமா சம்பூர்ணம்மாள் என்ற பக்தை ஒரு பிள்ளையார் சந்நிதியைக் கட்டிக்கொடுத்தார். இதுக்குப் பிள்ளையார் சிலை வேணுமுல்லே? கொடிமரத்துக்கு மரம் எடுத்த அதே டாங்கி டாங்கி(Tagi Tagi) என்ற கிராமத்துலே ( அங்கேயும் இதுக்குள்ளே ஒரு கோயில் வந்துருச்சு)கிடைச்சக் கருங்கல்லுலே செதுக்கித் தர்றோமுன்னு ஒருத்தர் சொல்லி இருந்தார். சிலை வடிவு அருமையா அமைஞ்சதுலே அங்கே இருக்கும் ஜனங்களுக்கு இதை நாமே வச்சுக்கணுமுன்னு தோணிப்போயிருக்கு.
புள்ளையாரை ஒளிச்சு வச்சுட்டாங்க.
அப்புறம்?
அடடே ((புதுக்) கோவிலுக்கு வந்து சேர்ந்துட்டோம். 12 மணிக்குக் கோவிலை அடைச்சுருவாங்க. இப்பவே 11.45 ஆயிருச்சு. சாமி கும்பிட்டுட்டு வந்து மீதியைச் சொல்றேன்.
கல்யாண வீட்டு விஷயங்கள்:
இரண்டாம் நாள்.
காலை நிகழ்ச்சிகள் என்ன நடந்ததுன்னு தெரியாது. நாம்தான் நா(ன்)டி கோயிலுக்குப் போயிட்டோமே.
இவுங்க குஜராத்தைச் சேர்ந்தவர்கள். கத்ரி ( Khatri) சமூகத்தினர். க்ஷத்ரியர்கள் என்பதுதான் மருவி கத்ரின்னு ஆகி இருக்கு. குஜராத்தில் இருக்கும் நௌஸாரி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். யாரைக்கேட்டாலும் சொந்த ஊர்னு இதைத்தான் சொல்றாங்க. ஒரே ஊர்க்காரங்களா மொத்தமா வந்துட்டாங்க போல இருக்கு.
வந்த புதுசுலே ரொம்பக் கஷ்டப்பட்டுதான் இருக்காங்க. யாரும் கரும்புத் தோட்ட வேலைக்கு வரலை. வியாபாரம், துணிக்கடை, தையல்கடைன்னு சின்ன அளவில் ஆரம்பிச்சதுதான். முக்கியமான ஒவ்வொரு டவுனிலும் இவுங்கதான் இப்பவும் கடைகள் நிறைய வச்சுருக்காங்க. ஹார்ட்வேர், சூப்பர் மார்கெட், மருந்துக்கடை, எலெக்ட்ரிக் & எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஜவுளிக்கடைன்னு எக்கச் சக்கம். எல்லாம் ஜப்பானில் இருந்து நேரடி இறக்குமதி. தரமான பொருட்கள். அழகழகான புடவைகள் ஜப்பான்காரன் செஞ்சு அனுப்பறான். இது இல்லாமல் நிறைய தொழிற்சாலைகள் ஆரம்பிச்சதும் வளமான வாழ்க்கை இவுங்களுக்கு மட்டுமில்லாம மற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைச்சு நாடும் நல்லா ஆகி இருக்கு.
அதிலும் தீவின் மேற்கில் இருக்கும் இந்த ஊர் MBA பா தான் நாட்டின் பொருளாதரத்தின் முதுகெலும்பு. அழகான பிரமாண்டமான வீடுகள் இங்கேதான் அதிகம்.

எல்லா முக்கிய டவுன்களிலும் கத்ரி ஹால் கட்டிவச்சுருக்காங்க. ஊர் முழுசுக்கும் சமைக்கப் பாத்திரங்கள், சாப்பாடு பரிமாறும் பாத்திரங்கள்,
பந்தி போட நீண்ட மேசை, இருக்கைகள்ன்னு அவுங்களுக்குள்ளேயே வசூல் செஞ்சு அமர்க்களமா வச்சுருக்காங்க. இவுங்க சமூகத்தின் பயனுக்குப்போக மற்றவர்களுக்கு வாடகைக்கும் விட்டு, அதுலே வரும் வருமானத்தில் ஹால் பராமரிப்பு. தன்னிறைவான சமூகமுன்னா இந்தக் கத்ரிகளைத்தான் சொல்லணும். ஊர் ஊருக்கு ராதாகிருஷ்ணா கோயிலும் (மார்பிள் சிலை) கட்டிவச்சுருக்கறதும் இவுங்கதான். (அம்பானிகளும் இந்த சமூகத்தினர் என்பது ஒரு கூடுதல் தகவல்)
மாலையில் வீட்டில் ஒரு பார்ட்டி. முன்புறம் விசாலமான பந்தல் போட்டு கலர் லைட்ஸ் எல்லாம் பளிச் பளிச்ன்னு ஜொலிச்சுக்கிட்டு இருக்கு. ஆண்கள் எல்லாரும் பாரில். வெளியே ஒரு 'சில்லர்' வச்சு தீர்த்தங்கள், ஜில்லுன்னு பரிமாறிக்கிட்டு இருக்காங்க. பெண்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே ஹாலில், நொறுக்ஸும் ஜூஸுமா அமர்க்களப்படுது.
அப்புறம் சாப்பாட்டு பந்தி. கல்யாணவீட்டுச் சாப்பாடு எல்லாம் தினம் ஒரு வகையான மீன் ஐட்டங்கள். வெஜிடேரியன்களுக்கு ரெண்டு வகைக் கறிகள். ருமால் ரோட்லி, சோறு, கொஞ்சமா இனிப்புச் சேர்த்த (பருப்பு)தால்.
ஒரு நூத்தம்பது பேருக்கு ரெண்டு வேளையும் மெல்லிசா ருமாலி ரொட்டி செய்யணுமுன்னா.................
தொடரும்............:-)))))